இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி 74 – 75  

தமிழர்கள் விரதம் இருக்கக்கூடாது

விரதம் என்றால் என்ன ? விரதம் பற்றிய உண்மைகள் மலையேறி விட்டன.

சூத்ரச்சிகளாகவே கருதப்படும் அனைத்துப் பெண்களும், சூத்ரர்களும் விரதம் இருக்கக்கூடாது…

விரதம் என்றால் என்ன ? இவைகளெல்லாம் எப்படி வந்தன? லெளகீக வாழ்க்கையில் இருக்கிறவர்கள் தான் அது வேண்டும். இது வேண்டும் என விரதம் இருக்கிறார்கள் என்றால்… எல்லாவற்றையுமே துறந்த சாமியார்களுக்கு எதற்கு விரதம்?


பகுதி – 74

தர்மபாலரின் ஜடம் பற்றிய ஸ்லோகத்தை பார்த்தோம். ஐந்து தகுதிகள் சொல்லியிருந்தார் அல்லவா?அதில் ஒன்றை கொஞ்சம் விஸ்தாரமாக பார்ப்போமே.

கடவுள் நமக்கு அருளவேண்டும் என்பதற்காக நம் உடம்பை நாமே வருத்திக்கொண்டு நம்மை நாமேகஷ்டப்படுத்திக் கொள்வது என்று பார்த்தோமல்லவா அதில் ஒன்று விரதம்.

விரதம் என்றால் என்ன ?  ‘கடவுளே உன்னை எண்ணி நான் இன்று சாப்பிடாமலே இருக்கிறேன் என் உறுதிப்பாட்டை மெச்சி எனக்கு நீ அருள்செய்’ என கடவுளிடம் ஒரு Demand வைத்து செயல்படுவது தான் விரதம்.

இன்றைய காலங்களில் நிறையபேர் விரதம் இருக்கிறார்கள். விரதங்களும் பலவகைப் பட்டதாக ஆகிவிட்டன.

கன்னிப் பெண்கள் தங்களது எதிர்காலக் கணவன் நன்றாக இருக்கவேண்டும். நல்ல கணவனாக வாய்க்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு வரலட்சுமி விரதம் இருக்கிறார்கள். அதாவது அன்று முழுவதும் வயிற்றுக்கு சாப்பாடு போடாமல், எதிர்கால வாழ்க்கைக்கு நல்ல சாப்பாடு கிடைக்க வேண்டும் என வேண்டுகிறார்கள்.

கல்யாணம் ஆன குடும்பப் பெண்கள்… தீர்க்கசுமங்கலியாக தன் தாலி குங்குமம் நிலைத்து நிற்க வேண்டும் என்பதற்காக வரலட்சுமி விரதம் இருந்து தன்னைப் போல குடும்பப் பெண்களுக்கு ரவிக்கை துணிகளையும் லஞ்சமாக கொடுக்கிறார்கள். இது வரலட்சுமி விரதம் என்றால் விரதங்களில் முக்கியமான விரதம் ஏகாதசி.

ஏகாதசி அன்று சாப்பிடாமல் விழித்திருந்தால் நேரடியாக மோட்சத்துக்குப் போகலாம் என ஒரு கருத்தை நம்பிக் கொண்டு பலரும் ஏகாதசி விரதம் இருக்கிறார்கள். ஏகாதசி அன்று ஒருவாய் தண்ணீர்கூட குடிக்கக்கூடாது. சாதம் சாப்பிடக்கூடாது என்றெல்லாம் கட்டுப்பாடுகள்.

இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால்…
ஏகாதசி அன்று பெருமாளை வேண்டி உண்ணாவிரதம் இருக்கிறோம். ஆனால், அந்த நாளில் பெருமாளுக்கும் சாப்பாடு போடக் கூடாது என்கின்றன. நமது வாழ்த்துகள்.

ஆமாம்… ஏகாதசி அன்று மட்டும் பெருமாளுக்கு சாதம் நிவேதனம் செய்யாமல் உப்புமாவை நைவேத்யம் செய்கிறார்கள்.

இதேபோல் நம்மை விட்டுப் பிரிந்த பித்ருக்கள் நமது முன்னோர்கள் நம்மை ஆசிர்வதிக்க வேண்டும் என்பதற்காக அமாவாசையில் விரதம் இருப்பார்கள். குழந்தை பாக்யம் பெறவேண்டி வைணவர்கள் திருவோணத்திலும், சைவர்கள் முருகனுக்காக சஷ்டியிலும் விரதம் இருக்கிறார்கள்.

இன்னொரு புகழ்பெற்ற விரதம் பிரதோஷம் என்றால் என்ன என்பது தெரியாமலேயே பலர் சிவனைவேண்டி விரதம் இருந்து வருகிறார்கள்.

பிரதோஷம் என்றால் ராத்திரியின் முன்வேளை அதாவது ஆரம்ப ராத்திரி. இந்த வேளை சிவனுக்குஉகந்தது. இந்த நேரத்தில் சிவனை வழிபட்டு பலன் காண்பதுதான் பிரதோஷ வழிபாடு. சரி… இத்தனை விரதங்கள் பார்த்தோம்.

இவைகளெல்லாம் எப்படி வந்தன? அந்தக் காலத்தில் வேதத்தின் கர்மாக்கள், கட்டளைகள்படி யாகங்கள் போன்ற பெரும் செலவிலான வழிபாட்டு முறைகள் இருந்த நிலையில்…பூஜை, புனஸ்காரம் எதுவும் இல்லாமல் ஆடம்பரம், ஏற்பாடுகள் என எதுவும் இல்லாமல் நமக்கும் கடவுளுக்குமான தனிப்பட்ட காரியம் தான் இந்த விரதம்.

அதாவது புஸ்தகத்தில் இல்லை. பண்ணிவைக்க வாத்தியார் வேண்டாம். ஹோமம் வேண்டாம்.

விரதம் என்பது “Unpriscribed by the vedas and uncommitted to the veda tradition”… விரத வழிபாடு முறை என்பது வேதத்தால் வரையறுக்கப்படாதது… அதாவது வேத நாகரிகம் ஒத்துக்கொள்ளாதது. வேதம் சொல்வதை நீ கேட்கிறாய் என்றால் ‘சாதம் வேண்டாம்’ என விரதம் இருக்கக்கூடாது எப்படி?

தஸ்மாது ஆஹராமனுஷ்யா அசனமிச்சந்தேப்ராயதஸ்ச சாயஞ்ச்ச…என்று போகும் இந்த வேதவரிகள் விரதம் பற்றி சொல்லாமல் சொல்கின்றன.

ஒரு மனிதனுக்கு சாப்பாடு தான் முக்கியம். நீ தினமும் முறைப்படி ஒழுங்காக சாப்பிட்டால் தான் மனிதனாக வாழமுடியும். மிருகங்கள் எப்போது வேண்டுமானாலும் தின்னும். ஆனால், மனிதனாகிய நீ காலை இரவு என முறை வைத்து முறையாக சாப்பிடவேண்டும்.

நித்யப்படி இதைப் பின்பற்று என தினந்தோறும் நன்றாக சாப்பிடச் சொல்கிறது வேதம்.

இன்னொரு மந்த்ரம்…”அஸ்னாதி சப்ரானஏவ ஆதிதோ பவதீ…”டேய்… உனக்கு உயிர் தருவதே சோறு தான். நீ மிகப்பெரிய யாகங்களை செய்தாக வேண்டும். அதற்கு உனக்கு பலம் வேண்டும். அதனால் நீ நன்றாக சாப்பிடு. சாப்பிடாமல் இருந்துவிடாதே..என யதார்த்தமாக சொல்கிறது வேதம்.

வேதம் மறுத்தலித்த விரதத்தை மநுஸ்மிருதி என்ன செய்கிறது தெரியுமா? விரதத்துக்கும் ஒருவிரதத்தை வைக்கிறது.

‘நா°தி ஸ்தீரீனாம்பரத் யக்ஞயஹாநவ வ்ரதம்நாப உபோஷனம்’
விரதம் இருக்கலாம் ஆனால்… சூத்ரச்சிகளாகவே கருதப்படும் அனைத்துப் பெண்களும், சூத்ரர்களும் விரதம் இருக்கக்கூடாது… என தனது ஆணையை நிறுவுகிறார் மநு.

லெளகீக வாழ்க்கையில் இருக்கிறவர்கள் தான் அது வேண்டும். இது வேண்டும் என விரதம் இருக்கிறார்கள் என்றால்… எல்லாவற்றையுமே துறந்த சாமியார்களுக்கு எதற்கு விரதம்?

ஒரு சாமியார் தன் ஆசிரமத்தில் உட்கார்ந்து நிஷ்டையில் இருந்தார். வெளியே மழை…என்னவென்று விசாரித்தால் சாமியார் சாதுர்மாஸ்ய விரதம் இருக்கிறார் என்றார் சிஷ்யர். எள்ளுதான் காய்கிறது என்றால் எலிப் புழுக்கை ஏன் காய்கிறது?


பகுதி – 75

எள் இருக்கிறதே… அது எண்ணெய் ஆகவேண்டும் என்பதற்காக காயும் அதோடு சேர்ந்து எலிப் புழுக்கையும் காயும். ஆனால், எலிப்புழுக்கை காய்வதால் என்ன உபயோகம்?

அதுபோலத்தான்… உலகியல் வாழ்க்கையில் நாட்டம் உடையவர்கள், இது வேண்டும், இன்னது நடக்க வேண்டும் என்ற சுயநல, பொதுநல, கோரிக்கைகளோடு விரதம் இருக்கிறார்கள்.

ஆனால், சாமியார்கள், சந்நியாசிகள், துறவிகள், யதிகள் என அத்தனைபேரும் உலக வாழ்க்கையை, சுகதுக்கங்களை துறந்தவர்கள். அவர்களைப் பொறுத்தவரை, தேவைகள் எல்லாம் செத்துப் போய்விட்டன. இதை ஆங்கிலத்தில் ‘Civil death’ என்று சொல்வார்கள்.

இப்படிப் பட்டவர்கள் ஏன் விரதம் மேற்கொள்ள வேண்டும்? அவர்கள் இந்த சாதுர்மாஸ்ய விரதம் இருப்பதன் பின்னணி என்ன? இன்னும் சில சந்நியாசிகள் நாங்கள் சாதுர்மாஸ்ய விரதம் இருக்கிறோம் என்று கோர்ட்டுக்கு வராமலேயே… இருக்கிறார்களே? அப்படியென்றால் ரொம்ப முக்கியமானதோ அந்த சாதுர்மாஸ்ய விரதம்?

இந்தக் கேள்விகளுக்கு விடைகாண… நாம் சந்நியாசிகளின் சில பக்கங்களை புரட்டிப் பார்க்கவேண்டும். அதற்கு முன் கீதையிலிருந்து பகவான் கிருஷ்ணர் அருளிய ஒரு ஸ்லோகத்தைப் பார்ப்போம்.

ஸ்யதஹ ப்ரவர்த்தினிபூதானாம் ஏனசர்வம்இதம்ததம் சொகர்மனாஹாதம்அப்யர்ச்ச சித்திம் விந்ததீ மானவஹா…

அதாவது உனக்கு மோட்சம் கிடைக்க வேண்டுமென்றால் நீ கண்களை மூடிக்கொண்டு தியானித்துக் கொண்டு இருக்காதே. ஓடு… இயங்கு இயங்கிக்கொண்டே இரு. run in the society. சமூகத்துக்குள் ஓடு…As you the part of the society, discharge your duty and contribute to the society.அதாவது உன்னால் முடிந்ததை சமூகத்துக்கு செய்துகொண்டே இரு. உன் கடமையை நிறைவேற்றுவதுதான் மோட்சத்துக்கு இட்டுச் செல்லும்.

இது கீதையில் கிருஷ்ணன் சொன்னது எல்லாருக்காகவும் சொன்னது. இதில் சில அம்சங்கள் சந்நியாசிகளுக்கும் பொருந்தலாம்.அதில் ஒன்றுதான்… ஓடு… ஓடு… ஓடிக்கொண்டே இரு…

அதாவது சந்நியாசிகள் பிச்சையெடுத்து சாப்பிடக் கூடியவர்கள். அவர்கள் இன்று ஒரு கிராமத்தில் தங்கி பிச்சையெடுத்து சாப்பிட்டார்கள் என்றால்… மறுநாள் அதே கிராமத்தில் பிச்சையெடுக்கக் கூடாது.

கதிரவன் கிழக்கில் தோன்றுகிறான். கதிர்கள் மெல்லப் பாய்கின்றன. அந்தக் கிராமத்தில் தங்கியிருந்த சாமியார் தனது தண்டம், துணிகளை சுருட்டிக் கொண்டு அவசர அவசரமாக கிளம்புகிறார். இது பழைய காலத்தில் நடந்த சம்பவம்.

ஏனென்றால்… ஒரு சந்நியாசி ஒரு கிராமத்தில் ஒரு ராத்திரிக்குமேல் தங்கக்கூடாது ஓடிவிடவேண்டும். அதாவது தினந்தோறும் சுற்றிக்கொண்டே இருக்கவேண்டும்.அதுவும் எப்படித் தெரியுமா

‘வாகனஸ்தம் பதிந் திருஷ்ட்வா சசேர ஸ்நானமாஸ்யே…’… எதிரே மாட்டுவண்டி, குதிரை வண்டி, அரச பல்லக்கு, தேர் முதலிய வாகனங்கள் ஏதேனும் வந்தால்… உடனே தலைமுழுகி அந்த ‘வாகனத்தை பார்த்த பாவம்’ போக்கிவிட்டு நடக்க ஆரம்பிக்கவேண்டும்.ஆக அர்த்தம் என்ன? நடந்தே சுற்றவேண்டும்.

அதுவும் ஒரு ராத்திரிக்குமேல் எந்த கிராமத்திலும் தங்காமல் சுற்றவேண்டும். இப்படிப்பட்ட ‘ஒரு ராத்திரி ஒரு கிராமம்’ என்ற கட்டுப்பாட்டுடைய சந்நியாசிகளை பரமஹம்ஸ பரிவ்ராசகர் என்று அழைப்பார்கள்.

அதாவது… சந்நியாசிகளால் 4 நிலைகள்…குட்டீஸன், பஹுதஹன், ஹம்ஸன், பரமஹம்சன், முதல்நிலை, இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை என்ன வகைப்படுத்தப்பட்டு இந்நிலைகளில் கடைசி நிலையான உயர்ந்த நிலை உடையவர்கள் பரமஹம்ஸர்கள் தான்.சரி… இந்த வகைப்பாடுகள் இருக்கட்டும்.

சாதுர்மாஸ்ய விரதம் பற்றி பேசினோமே அது என்ன ஆனது?

சுற்றிக்கொண்டே இருக்கும் சந்நியாசிகள் வருடம் முழுவதும் சுற்றிக்கொண்டே இருக்க முடியுமோ? வெயில் காலத்தில் நிழல்களில் இளைப்பாறிவிட்டு நடக்கலாம். பல கிராமங்களை கடக்கலாம். ஆனால்… மழைக்காலங்களில்…?

இப்போது உள்ள மழைக்காலம் என்பது வேறு… அப்போதைய மழைக்காலம் வேறு. அப்போதெல்லாம் மழை பெய்யும், பெய்யும் பெய்துகொண்டே இருக்கும். இன்றைய மக்கள்தொகை போல அன்றைய மரங்கள் தொகை, இன்றைய மரங்கள் தொகை போல மக்கள் தொகை கேட்க வேண்டாமா? தூய்மையான பூமி… வள்ளலான வானம்.

மழைக்காலத்தில் வெளியே தலைநீட்ட முடியாது. பார்த்தார்கள் சந்நியாசிகள். இந்த மழையில் நடந்துபோய் சுற்றி பிச்சையெடுப்பது நடக்கிற காரியமல்ல, போடு டேராவை. மழை மாதங்களான 4 மாதமும் ஒரே பகுதியில் தங்கினார்கள். இதற்காகவே ‘மழைக்கால 4 மாசமும் ஒரே இடத்தில் தான் தங்கவேண்டும்’ என்ற பழக்கத்தை ஏற்படுத்தினார்கள். சாதுர்மாஸ்யம் என்றால் நான்குமாசம் என்று பொருள். இதையே பின்னாளில் சாதுர்மாஸ்ய விரதம் என ஆக்கிவிட்டார்கள்

அதாவது நாலுமாச விரதமாம். மழைக்காலத்தில் வெளியே போனால்… நடந்தே நாறிவிடுவார்கள். அதனால் 4 மாசம் வெளியே போகக்கூடாது என்று தங்களுக்குள் விதித்த கட்டுப்பாட்டை விரதம் ஆக்கிவிட்டார்கள்.
இன்றுகூட தஞ்சாவூர் ஜில்லாவில் ஆண்டிக்காடு என்ற கிராமம் உள்ளது.

இங்குதான் மழைக்காலத்தில் ஆண்டிகள், சந்நியாசிகள் எல்லாம் தங்கியிருப்பார்கள். மழைக்குப் பயந்து 4 மாசம் உட்கார்ந்திருப்பது தான் சாதுர்மாஸ்யம்.

மழை அதிகம் இல்லாத இந்தக் காலத்திலும் கோர்ட்டுக்குப் பயந்து சாதுர்மாஸ்ய விரதம் என்கிறார்கள்.சரி… விரதம் பற்றிய உண்மைகள் மலையேறி விட்டன. அடுத்து மலையேறப் போகும் உண்மைகள்… — அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் (தொடரும்)


கட்டுரை தொடர்ந்து வளர வளர நீங்கள் அறியாத மறைக்கப்பட்ட தகவல்கள் உங்களை அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கும். தொடர்ந்து வாருங்கள்.

பகுதி – 73. தமிழா! ஜடமாகி போனாயா? `ஜாதி’ களை உத்தரவாக்கி, பல கூடாதுகளை பின்பற்றுகிறவன், கடவுள் பெயரைச் சொல்லி உடல் ரீதியாக தன்னைத்தானே வருத்திக் கொள்பவ‌ன் மனிதனே அல்ல ஒன்றுக்கும் உதவாத ஜடம்தான்.. புனித நீராடல், தீர்த்தவாரி என்றும் பெயர் கொடுத்து தண்ணீருக்கே மதச் சாயம் பூசி விட்டார்கள்

>பகுதி 76 to 82-1. திருப்பதியில் உள்ளது காளி சிலையா? திருப்பதியில் நடப்பதென்ன? ஆண் ஆகிய‌ திருப்பதி பெருமாளுக்கு தலையை சீவி சிங்காரித்து அழகான பின்னல் ஏன்? பிராமணர்களால் காளியை சிவனாக்கி பின் திருப்பதி பெருமாளாக எவ்வெவ்வாறு மாற்றப்பட்டது? திருப்பதியில் உங்களை மொட்டை போடச் செய்து பிராமணர்களால் “மொட்டை” அடிக்கப் படுபவர்களே!. சிந்தியுங்கள்.

About editor 3017 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply