பெண்களுக்கு எட்டு வயதுக்குள் திருமணம் செய்து விடு – வேதம்.
பெண்களுக்கு 8 வயதுக்குள் கல்யாணம் பண்ண வேண்டும். இல்லை யென்றால்… அதாவது ருதுவானபின் கல்யாணம் செய்தால்… அவளுடைய ‘பஹிஷ்டை’யில் (மாதவிலக்கில்) வெளிப்படுவதை அவளுடைய அப்பனே சாப்பிட வேண்டும்.
“குழந்தைகளுக்குக் கல்யாணம் செய்து வைக்கக்கூடாது.” – உத்தரவிட்ட இந்தியாவின் ஆங்கிலேய அரசாங்கம்.
இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி 97
இப்போது இன்னொரு விஷயம். நம் நாட்டுக்கு சுயராஜ்யம் (சுதந்திரம்) கொடுக்கலாம் என ஆலோசித்தபோது… தஞ்சாவூர் ஜில்லா ஆடுதுறைப் பக்கமுள்ள ஒரு சின்ன கிராமத்தில்…ஒரு ரகஸ்ய கூட்டம் எப்போதென்றால் ராத்திரி 10 மணிக்கும்மேல்.
அர்த்தஜாமத்தை நோக்கி அடியெடுத்து வைத்துக் கொண்டிருந்தாள் ராத்திரி தேவதை.
இந்தக் காலத்திலேயே கிராமங்கள் ராத்திரியில் அடர்த்தியான அமைதியில் கிடக்கும். சுமார் 60 வருடங்களுக்கு முன்?காடா விளக்குகள்… தீப்பந்தங்கள் ஏற்றப்பட்ட அந்த மீட்டிங்கிற்கு தலைமை வகித்தவர் மகாப் பெரியவர். ஏன்? எதற்கு?
ஆடுதுறை பக்கமுள்ள அந்த கிராமத்தில் ராத்திரி நேரத்தில் மகா பெரியவர் சங்கராச்சாரியார் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்திருந்தார் என்பதாக சொன்னேனல்லவா?
அவர்கள் என்ன விவாதிக்கப் போகிறார்கள் என்று எனக்குத் தெரியும். அதனால் நான் உள்ளே செல்லவில்லை.
எனக்குத் தெரிந்த விஷயம் உங்களுக்கு தெரிய வேண்டாமா?… ‘ஹிந்து’ என்ற பெயர் வந்த காரணம் பற்றி விளக்கினேன் இல்லையா?… அந்த சனாதன தர்மத்தை… வர்ணாஸ்ரம மநு தர்மத்தை… காப்பாற்றியாக வேண்டும் என்பதற்காகத்தான் அந்தக் கூட்டம்.
ஏன் அப்படி என்ன ஆபத்து வந்தது?….அதாவது… பெண்களுக்கு 8 வயதுக்குள் கல்யாணம் பண்ண வேண்டும். இல்லை யென்றால்… அதாவது ருதுவானபின் கல்யாணம் செய்தால்… அவளுடைய ‘பஹிஷ்டை’யில் வெளிப்படுவதை அவளுடைய அப்பனே சாப்பிட வேண்டும் என்ற அருவருக்கத்தக்க கட்டளையை மநு போட்டிருப்பதை சுட்டியை சொடுக்கி படிக்கவும்
45,46ஆவது அத்தியாயங்களில் விளக்கமாகப் பார்த்தோம்
‘அஷ்டா வருஷா பலேத் கன்யா…’ 8 வயதுக்குள் பெண்ணுக்கு கல்யாணம் நடத்த வேண்டும்… என்ற இந்த ஸ்மிருதி விதி, இந்த நூற்றாண்டின் நடுப்பகுதிவரை நம் தேசத்தில் ரொம்ப சிரத்தையாக நடைமுறைப்படுத்தப் பட்டு வந்தது. அதாவது என்னுடைய இளம்பிராயங்களில் நான் இப்படிப்பட்ட பால்ய விவாஹங்களை நிறைய பார்த்திருக்கிறேன்.
இப்போதெல்லாம் கல்யாண மஹால்களில் பார்த்தால்… சின்னக் குழந்தைகள் ஓடியாடி விளையாடிக் கொண்டிருப்பார்கள். அந்தக் காலத்திலும் குழந்தைகள் விளையாடிக் கொண்டுதான் இருப்பார்கள். என்ன?… ஒரே ஒரு வித்தியாசம்.
அந்த குழந்தைகளைப் போலவே உள்ள இரண்டு குழந்தைகள் தான் மண மேடையிலும் உட்கார்ந்திருப்பார்கள். இதுபோல எக்கச்சக்க பால்ய விவாஹங்கள் நடந்து கொண்டிருந்தன.அப்போது தான்… இந்த பால்ய விவாஹத்தையெல்லாம் எதிர்த்து நிறைய போராட்டங்கள் கிளம்பின.
நம் தேசத்தைச் சேர்ந்த சீர்திருத்தவாதிகளே… இந்த பால்ய விவாஹ முறையை கடுமையாக எதிர்த்தனர். ஏனென்றால்… பால்யத்திலேயே விவாஹம் செய்து வைத்து… சிலநேரம் அந்தப் பையன் மரணித்து விட்டால்… வாழ்க்கை முழுதும் அந்த சிறுமி விதவையாகவே வாழ வேண்டிய நிர்பந்தத்தை மநு ஸ்மிருதி ஏற்பாடு செய்து வைத்திருந்தது.
இந்தக் கொடுமையையும்… இதன் கொடுமையான விளைவுகளையும் புரிந்து கொண்ட பிரிட்டிஷ்காரர்கள் 1929-ல் சட்டம் கொண்டு வந்தார்கள். அதாவது… குழந்தைகளுக்குக் கல்யாணம் செய்து வைக்கக்கூடாது. அப்படி செய்து வைத்தால்… தண்டனைதான், ஜெயில் தண்டனைதான்.
இப்போது மகாபெரியவரின் மீட்டிங்குக்கு வருவோம். இப்படியாக ஏற்கெனவே பிரிட்டிஷ் ஆட்சியில் மநு, வர்ணாஸ்ரம தர்மங்களை சற்று தலை தட்டி வைப்பது போன்ற சட்டங்கள் போடப்பட்டிருந்தன.
நம் தேசம் ஸ்வராஜ்யம் (சுதந்திரம்) அடைய இருந்த நேரத்தில்… பிரிட்டிஷ் நாட்டிலிருந்து Parliamentary deligation ஒன்று நமது தேசத்துக்கு வந்தது.
அதாவது… நமது தேஸத்துக்கு சுதந்திரம் வழங்குவதற்கு முன்பு அது பற்றிய விவாதங்கள் நடத்துவதற்காக… எப்படி கொடுக்கலாம் என்று முடிவு பண்ணுவதற்காக… பிரிட்டிஷ் பார்லிமெண்ட் உறுப்பினர்கள் அடங்கிய குழு ஒன்று இங்கே வந்தது. அதுதான் Parliamentary deligation இந்த குழு வந்த காலகட்டத்தில்தான் அந்த ஆடுதுறை கூட்டம்.
“ஏற்கெனவே பால்ய விவாஹத்துக்கு தடை பண்ணிட்டா… இன்னும் என்னெல்லாம் நம்ம சம்ப்ரதாயத்து மேல அட்டாக் பண்ணப் போறாளோ… அதனால… இப்ப வந்திருக்குற அந்த டெலிகேஷன்கிட்ட… சனாதன வர்ணாஸ்ரம தர்மத்துக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாதுன்னு நாம சொல்லியாகணும்… என்ன சொல்றேள்?….”-என மகாபெரியவர் கேட்க…
சிஷ்யாளோ… ‘ஸ்வாமி… இப்படியெல்லாம் அவாளை கேட்கறது எங்களுக்கு என்னமோ உசிதமா படல. அவா செய்தா செய்யட்டும்… சில விஷயங்களை மாத்தறது நல்லதுதானே…’ என்றனர்.
ஆனால்… சங்கராச்சாரியார் இதனை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் வெளியே வந்தார். உட்கார்ந்திருந்த என்னிடம்… `தாத்தாச்சாரீ… நீரும் நானும் தான் மிச்சம்’ என்றார்.என்ன ஸ்வாமீ?… என்றேன்.
“நான் சொன்னதை யாரும் ஏத்துக்கல. ஆனா இதை விடக்கூடாது. நம் சம்ப்ரதாயத்தை காப்பாத்தணும். இதுக்காக அந்த பிரிட்டிஷ் டெலிகேஷனுக்கு மெமோரண்டம் கொடுக்கப் போறோம். அதுக்காக உம்மைதான் செலக்ட் பண்ணியிருக்கேன்…” என்றார்.
எனக்கு ஒன்றுமே புரியவில்லை… `நீர் இதுக்காக டெல்லிவரை போக வேண்டியிருக்கும்…’ அதுக்கு முன்னால… டெலிகேஷனுக்கு நம் அபிப்பிராயத்தை தந்தி அடிக்கணும். அந்த ராத்திரி 11 மணிப்பொழுதில் தந்தி வாசகங்களை தயார் பண்ணினோம். ஒன்றா… இரண்டா?…- அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் ( தொடரும் )
சுட்டியை சொடுக்கி படிக்கவும்
==> பகுதி 98. மடாதிபதிகள் ராஜபோகம் அனுபவிக்கிறார்கள். மடாதிபதிகளை திருத்த முடியாது.
Leave a Reply
You must be logged in to post a comment.