உண்மையும் நீதியும் அழிந்து பொய்களும் அநீதிகளும் நிலைக்க முடியுமா?

உண்மையும் நீதியும் அழிந்து பொய்களும் அநீதிகளும் நிலைக்க முடியுமா?

ஏற்கெனவே நலிந்துபோயிருக்கும் ஈழத்தமிழ் மக்கள் அண்மைக்காலமாக உண்மை பொய் அறியாமல் சரிபிழை தெரியாமல் குழம்பிப்போய் இருக்கிறார்கள். சில அரசியல் வாதிகளும் ஊடகங்களும் தமது நலன் சார்ந்த, ஆதிக்கம் சார்ந்த, வர்த்தக நோக்கத்தால் எரியும் நெருப்பில் இன்னுமின்னும் எண்ணெய் ஊற்றிக்கொண்டே இருக்கிறார்கள். தமிழ்த் தலைவர்கள் என்றிருக்கும் அனைவரையும் வறுத்தெடுக்கின்றார்கள்.  தமிழரசுக் கட்சித் தலைவர்கள் சம்பந்தர், சுமந்திரன் மற்றும் மாவை சேனாதிராசா போன்றோரை ஒருபக்கத்திலும் விக்னேஸ்வரன் தலைமையில் கஜேந்திரகுமார், சுரேஷ்  பிறேமச்சந்திரன் போன்றோரை மறுபக்கத்திலும் வைத்துக் கொண்டு பந்து விளையாடுகின்றார்கள். யார் தமது நண்பர், யார் மக்களுக்காகச் செயற்படுகின்றார்கள், யார் தமது சுயநலனுக்காகச் செயற்படுகின்றார்கள் என்று தெரியாமல் மக்களும் வாய்க்கு வந்தபடி தலைமைகளைத் திட்டிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையான பிரச்சனை மறைக்கப்பட்டு வேண்டுமென்றே மக்கள் தவறாக வழிநடத்தப் படுகின்றார்கள்.

உண்மையான பிரச்சனை என்ன?

உலகில் ஒரு நாடு இன்னொரு நாட்டினால், ஒரு இனம் இன்னொரு இனத்தால், தமிழ் இனம் சிங்கள இனத்தால், அடக்கப் படுவதை அல்லது ஆளப்படுவதை விரும்புவதில்லை. பெரும்பான்மை சிறுபான்மையை அடக்கி ஆளாமல், இரு தரப்பாரும் சமமாக  ஒத்த உரிமையோடு வாழும் வகையில் ஆட்சி அமைவதையே விரும்புவார்கள். இது இயற்கை. இல்லாவிட்டால் மோதல்கள்,    சண்டைகள் ஏற்படும். ஈழத்தமிழர் 400 வருடங்கள் தூர தேச அந்நியராலும் பின்னர் அயலில் வாழும் சிங்களவராலும் ஆளப்படுகின்றார்கள். அந்நியரிடமிருந்து சுதந்திரம் பெறும் போது சிங்களவரும் தமிழரும் சம உரிமையுள்ள சம பங்காளிகளாக அனைவரும் இலங்கையர் என்ற அடிப்படையில் வாழலாம் என்று தமிழர்கள்  நம்பினார்கள். பெரும்பான்மை இனம் சிறுபான்மை    இனங்களை அடக்கி ஆளும் என்ற பயம் இருக்கத் தேவையில்லை என்ற உத்தரவாதம் சிங்களத் தலைவரான டி.எஸ்.  சேனநாயக்கா அவர்களால் சட்டசபையில் வழங்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. அதற்கான ஒரே காரணம் பல்லின மக்கள் வாழும்  இலங்கைக்குப் பொருத்தமற்ற இலங்கை அரசியல் அமைப்புத்தான். புதிய பொருத்தமான அரசியல் அமைப்பொன்றை உருவாக்குவது மட்டும்தான் ஒரு தீர்வைத் தரமுடியும்.

தமிழர் இலங்கையின் பெரும்பான்மைச் சிங்களவர்களால் ஆளப்படுவதை வெறுக்கிறார்கள், எதிர்க்கின்றார்கள்,   போராடுகின்றார்கள். 30 வருட ஜனநாயக சாத்வீகப் போராட்டத்தின் பின் 30 வருட ஆயுதப் போராட்டம் நடந்தது. அப்போது தமக்கான ஒரு நிழல் அரசை அவர்கள் நடத்தினார்கள். நிலத்தில் இருந்த தலைமையால் உருவாக்கப்பட்ட புலம்பெயர் தலைமை ஊடாக புலம்பெயர் தமிழ் மக்கள் அந்த அரசைத் தாங்கிக்கொண்டார்கள். 2009 மே மாதம் நிலத்தில் இருந்த தலைமை மறைந்த பின் அங்கு மிகப்பெரிய ஒரு அரசியல் வெற்றிடம் ஏற்பட்டது. தமிழினம் வெற்றிகொள்ளப்பட்ட அடிமைகள் போல் நடத்தப்பட்டார்கள். மூன்று  இலட்சம் பேர்  வருடக்கணக்காக முட்கம்பி வேலிக்குள் அடைக்கப்பட்டார்கள். ஈழத்தில் வாழும் தமிழ் மக்கள் மீண்டும் தமக்கான வலுவான ஒரு அரசியற் தலைமையை ஏற்படுத்துவதற்கு புலம்பெயர் தமிழ் மக்கள் உதவ வேண்டிய ஒரு நிலை உருவானது. அப்போதுதான் அந்த விபரீதம் ஆரம்பித்தது.

அதுவரை அன்றய சூழ்நிலையில் த. தே. கூ. தேசியத் தலைமைக்குக் கட்டுப்பட்டதாகவே இருந்தது. அதன்பின்னர் தேசியத் தலைமைக்குப் பதிலாக அங்கே தமிழ் மக்கள் தமக்கான ஒரு சுயாதீனமான அரசியற் தலைமையை உருவாக்க உதவுவதற்குப் பதிலாக தேசியத் தலைமையால் உருவாக்கப்பட்ட புலம்பெயர் தலைமையின் ஒருபகுதி; தேசியத் தலைமைக்குப் பதிலாக தாமே ஈழத்தமிழரின் தலைமைச் சக்தியாகத் தொடர விரும்பினார்கள். தாயகத்தில்  இருக்கும் தலைமை தமக்குக் கட்டுப்பட்ட, தம்மால் வழிநடத்தப் படுகின்ற, தங்கள் சொற்படி நடக்கக் கூடிய தலைமையாக  இருக்க வேண்டும் என்று  பேராசைப்  பட்டார்கள். அதன்படி 2010ம் ஆண்டுப் பாராளுமன்றத் தேர்தலின் போது மிதவாத அரசியல்வாதிகள் என்று அவர்களால் கணிக்கப்பட்ட

தமிழ்த் தலைமையை மாற்ற கடுமையான முயற்சியை மேற்கொண்டார்கள். ததேகூ இன்  தலைமை கூறியது இதுதான். ” எமது குறிக்கோள் ஒன்றாக இருந்தாலும் போராட்ட வடிவம் மாறிவிட்டது. இனி நாம் சர்வதேச நாடுகளின் ஆதரவோடு ஒரு இராஜதந்திர அரசியற் போராட்டத்தையே செய்ய வேண்டும். அது மட்டுமன்றி 21 நாடுகள் சேர்ந்து ஆயுதப் போராட்டத்தை அழித்தார்கள். ஆயுதப் போராட்டக் குழுவோடு  அல்லது அவர்களைச்  சேர்ந்தவர்களோடு அந்தச் சர்வதேச நாடுகள் பேசத் தயாரில்லை. இருந்தும் தாயகத் தமிழர்களுக்கு புலம்பெயர் தமிழரின் பேராதரவும் உதவியும் அத்தியாவசியமானது. உங்கள் உதவிகளையும் ஆலோசனைகளையும் நாம் பெற்றுக்கொள்வோம். ஆனால் எமது சர்வதேச அரசியற் போராட்டத்தை சுதந்திரமாக நாமே முன்னெடுக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டனர்.

அதை ஏற்றுக்கொள்ளாத புலம்பெயர் தலைமை தமக்குக் கட்டுப்பட்ட ஒரு அரசியற் தலைமையை தாயகத்தில் உருவாக்கும் தமது முயற்சியை அன்றிலிருந்து இன்றுவரை முழுமூச்சாக மிக மூர்க்கத்தனமாக தொடர்கின்றார்கள். மாற்றத்தின் குரல், மாற்றுத் தலைமை, புதிய தலைமை, தலைமை மாற்றம் என்று பேசப்படுவதெல்லாம் அதனுடைய தொடர்ச்சிதான். இதுதான் உண்மையான பிரச்சனை.

ஈழத்தமிழரின் நல்வாழ்வுக்காக புலம்பெயர் தமிழரால் அதுவரை வாரி வழங்கப்பட்ட நிதிபலம், கட்டமைக்கப்பட்டிருந்த  ஆட்பலம் மற்றும் உருவாக்கப்பட்டிருந்த ஊடக பலம்  அவர்களிடம் இருக்கின்றபடியால் அவர்களது செயற்பாட்டை முடங்கச் செய்வது இலகுவான காரியமாக இல்லை. முதலில்2010ல் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் சிலரைத் தமிழ்த் தேசியக்  கூட்டமைப்பில் இருந்து உடைத்தெடுத்து தமது கட்டுப்பாட்டில் உள்ள தலைமையாக  தேர்தலில் நிறுத்தி படுதோல்வி கண்டார்கள். பின்னர் சுரேசை பிரித்தெடுத்து கட்சிக்குள்ளிருந்தே குடைச்சல் கொடுக்க வைத்தார்கள். பின்னர் வடமாகாண சபையை தம் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக அனந்தியையும்  சிவாஜிலிங்கத்தையும் உடைத்தெடுத்தார்கள். முதல்வரின் தனிச் செயலாளர் மூலம் முதலமைச்சரையும் தம் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். இவர்களை எல்லாம் ஒன்றிணைத்துப் போட்டியிட்ட தமிழ்தேசிய மக்கள் முன்னணி (ததேமமு) 2015 ஓகஸ்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் படுதோல்வி அடைந்தது. இதன் பின்னர்  ததேகூ க்குள் இருந்த அதிருப்தியாளர்கள், ததேமமு, சிவில் சமூகம் என சிலர் எல்லோரையும் ஒன்றிணைத்து தமிழ்மக்கள் பேரவை என்ற பெயரில் டிசெம்பர் 20, 2015 ஆம் ஆண்டு ஒரு அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. அதன் இணைத் தலைவர்களில் ஒருவராக தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்டு வென்ற முதலமைச்சர்தான் இருக்கிறார்.

இந்த அமைப்பு தமிழரசுக் கட்சியின் தலைமையை குறிவைத்துத் தாக்கி வருகிறது. குறிப்பாக ததேகூ இன் பேச்சாளர் சுமந்திரன் மற்றும்  மாகாணசபை அமைச்சர்  ப.சத்தியலிங்கம் போன்றோர் தாக்கப்படுகிறார்கள். காரணம் எதிர்காலத்தில் தமக்குக் கட்டுப்படாத சுமந்திரன் தமிழரசுக் கட்சியின் தலைவராகவும் அமைச்சர்  சத்தியலிங்கம் வடமாகாண சபை முதல்வராகவும் வரக்கூடும் என இவர்கள் நினைக்கிறார்கள். வேறு எந்தக் காரணமும் கிடையாது. தமது ஊடக பலத்தால்  மக்களிடையே குழப்பங்களை ஏற்படுத்தி அவர்களை தமிழரசுக் கட்சிக்கு எதிராக தூண்டிவிடுகிறார்கள். தமக்கு வேண்டியவருக்கு ஆதரவாகவும் வேண்டாதவருக்கு எதிராகவும் செய்திகளை புனைந்து அல்லது திரித்து வெளியிடுகின்றார்கள். தாயகத்தில் தமக்குக் கட்டுப்பட்ட  ஒரு தமிழரின் தலைமையை உருவாக்கும் வரை அவர்கள் ஓயமாடடார்கள் போல் தெரிகிறது. நாம்  ஒன்றை உணர வேண்டும். இப்போது வெளிநாடுகளில் இருக்கின்ற இவர்கள் தாயக அரசியலில் காட்டும் அக்கறை,  இவர்களின் அடுத்த தலைமுறையினர் நிட்சயம் காட்டப் போவதில்லை. தாயக மண்ணில்  பிறவாத, அங்கு வாழாத, அந்த மண்ணின் வாசனை தெரியாத புலம்பெயர் தமிழ் மக்களின் வாரிசுகளால்  தாயக  மக்களின் அரசியல்,  பொருளதார,

சமூகப் பிரச்சனையை  விளங்கிக்கொள்ளவோ அக்கறை கொள்ளவோ வழிநடத்தவோ வாய்ப்பே இல்லை.

தாயகத்தில்  வாழும் தமிழர் எடுக்க வேண்டிய முடிவு இதுதான்

தாயகத்தமிழரோடு கூடவே வாழுகின்ற, அவர்களது உண்மை நிலையை அறிந்த, சுயமாகச் சிந்திக்கும் ஆற்றல்கொண்ட,  யதார்த்தமாக நிலைமைகளை அணுகி ராஜதந்திரமாக காய்களை நகர்த்தி சர்வதேச உதவியோடு மிகப் பெரும்பான்மையாக உள்ள சிங்கள மக்களின் தலைவர்களை, சிங்கள அமைப்புகளை தமது தர்க்கரீதியான யதார்த்தபூர்வமான அவர்களின் மனதை மாற்றக்கூடிய வாதத்திறமையால் சம்மதிக்க வைத்து, தமிழர்களுக்கான நல்வாழ்வை அமைத்துக் கொடுக்கக்கூடிய தலைமை வேண்டுமா?அல்லது வெளிநாட்டில் வாழும் சிலரது கைப்பொம்மைகளாகச் செயற்படும் தலைமை வேண்டுமா?. முடிவெடுக்க வேண்டியவர்கள்  தாயகத்தில்  வாழும் தமிழ் மக்களே. ஆனாலும் உண்மையாக அந்த மக்களின் நல்வாழ்வில் அக்கறையுள்ள அதிகார ஆசையில்லாத புலம்பெயர் தமிழரின் உதவிகள் நிட்சயம் இப்போதுபோல் எப்போதும் தொடரவே செய்யும். அவர்களது இனவுணர்வு, மனித நேயம் செத்துப் போகாது.

முப்பது  வருடப் போரினால் ஏற்பட்ட  பிரச்சனைகள் தமிழ் மக்களுக்கு பாரிய அளவில் இருக்கத்தான் செய்யும். பல   ஆண்டுகளாக ஏற்படுத்தப்பட்ட அநீதிகளை ஓரிரு வருடங்களில் தீர்த்து விட முடியாது. அதற்காக அதையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இயலாமை என்று காட்டி தமது தலைமைக்கு எதிராக தாமே போர்க்கொடி தூக்கி போராடினால், அவர்களின் ஒற்றுமையைச் சிதறடித்து பலவீனப் படுத்தினால் அது எமது உண்மையான பொது எதிரிக்கு  சாதகமாக அமைந்துவிடும்.

23 வீதமாக இருந்த தமிழ் இனம் இப்போது 15 வீதமாகக் குறைந்து விட்டது. தற்காலிகமாக இணைக்கப்பட்ட  வடக்கு கிழக்கு மாகாணங்கள் மீண்டும் பிரிக்கப்பட்டுவிட்டன. தமிழர் செறிந்து வாழும் பூமியாக வடக்கு கிழக்கு மாகாணங்களாக இருந்தது பின்னர் வடக்கு மாகாணமாகி அதுவும் யாழ்ப்பாணமாகி அதிலும் பலாலி, நாவற்குழிகள் பறிபோய்விட்ட நிலையில் கிணற்றுத் தவளைகள் போல வெளிநாட்டில் இருந்துகொண்டு வெறும் வெற்றுக் கூச்சல்களை மட்டும் இன்னும் எழுப்பிக் கொண்டு  வாய்வீரம் பேசிக்கொண்டு மிச்சமாக இருப்பவர்களையும் புதைகுழிக்குள் அனுப்ப வேண்டுமா?.  தலைமை மாற்றம், தலைமை மாற்றம் என்கிறார்களே அது  அடுத்த தேர்தலுக்கு முன் எப்படிச் சாத்தியமாகும்.?. சாத்தியமே இல்லை என்பதை உணராதவர் இருக்க முடியாது. அப்படியாயின் இப்போது இருக்கும் தலைமையை இப்போதே சிதறடித்து பலவீனப் படுத்துவதால் யார் நன்மை பெற விழைகிறார்கள்? தனிநாட்டுத் தேசியத்தின் சொந்தக்காரர் தாமே என்று கூக்குரலிடுபவர்கள் , சிங்களவர்களோடு, சிங்கள அரசோடு பேசுவதையே துரோகமாகச் சித்தரிக்கிறார்கள். எமது உரிமைகளைப் பறித்து வைத்திருப்பவர் யார்? அதைப் பறித்துத் தம்மிடம் வைத்திருக்கும் அவர்களிடம் பேசி அதை அவர்களிடமிருந்து பெறாமல் வேறு யாரிடமிருந்து பெறுவது? பேச்சுவார்த்தையாலன்றி இன்னொரு  ஆயுதப் போராட்டம்  சாத்தியமா? அமெரிக்காவையும் இந்தியாவையும் வறுத்தெடுப்போர் சர்வதேசத்தை நம்பக்கூடாதென்போர் வேறு யார் பலத்தால்  தமிழர்களது உரிமைகளை வென்றெடுப்பது?

வின். மகாலிங்கம்

vinmahalingam@gmail.com

About editor 2999 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply