23.07.2017
ஊடக அறிக்கை
நீதிபதி இளஞ்செழியன் மீதான கொலை முயற்சி நீதித்துறை மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாகவே பார்க்கப்படவேண்டும் – வட மாகாண சபைத் தலைவர்
நல்லூர் கந்தசுவாமி ஆலய தென்மேற்கு வீதியில் வைத்து நேற்று (22.07.2017) சனிக்கிழமை மாலை யாழ்;ப்பாண மாவட்ட மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் அவர்களை இலக்குவைத்து நடத் தப்பட்ட தாக்குல் முயற்சியை வடக்கு மாகாண சபை வன்மையாகக் கண்டிக்கின்றது. மேலும் நீதிபதி இளஞ்செழியனை காப்பாற்ற முயன்ற அவரது மெய்ப்பாதுகாவலர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் அநியாயமாக உயிரிழந்துள்ளார். மற்றையவர் காயமடைந்துள்ளார். இந்தச் சம்பவத்துக்கு வடக்கு மாகாண சபை சார்பில் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
நீண்டகாலமாக நீதிபதி இளஞ்செழியன் அவர்களது மெய்ப்பாதுகாவலராக இருந்து அவரை காப்பாற்றும் பணியிலேயே தமது உயிரை ஆகுதியாக்கிய அந்த பொலிஸ் அதிகாரிக்கும் எமது அஞ்சலியைத் தெரிவிப்பதுடன் அன்னாரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
நீதிபதி இளஞ்செழியன் மீது மேற்கொள்ளப்பட்ட இந்த கொலை முயற்சியானது எமது நாட்டினதும் யாழ்ப்பாண மாவட்டத்தினதும் நீதித்துறை மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாகவே பார்க்கப்படவேண்டும்.
எமது பிரதேசத்திலே சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவதில் மிக அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் நீதுpபதி ஒருவரை கொலை செய்து ஏனைய நீதித்துறை சார்ந்தவர்களையும் அச்சுறுத்தி அராஜகத்தை இந்த மண்ணிலே நிலை நிறுத்துவதே இந்தக் கொலை முயற்சியின் நோக்கமாக இருக்கலாம் அதிலும் நல்லூர் கந்தசுவாமி கோயில் வருடாந்த உற்சவம் ஆரம்பிக்க ஒருவாரமே உள்ள நேரத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றமை இங்கு நிலவும் அமைதியான சூழலை குழப்பும் நோக்கம் கொண்டதாகவே பார்க்கப்படவேண்டும்.
இந்தக் கொலைமுயற்சி மற்றும் கொலைச் சம்பவத்துடன் சம்பந்தப்பட்டவர்களை கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்துவது மட்டுமன்றி இந்தச் செயற்பாட்டின் பின்னணியில் உள்ள சூத்திரதாரிகள் யாவரும் இனங்காணப்பட்டு சட்டத்தின் முன்நிறுத்தப்படவேண்டும் என்றும் நாம் கோருகின்றோம்.
சீ.வீ.கே.சிவஞானம்
அவைத் தலைவர்,
வடக்கு மாகாண சபை.
Leave a Reply
You must be logged in to post a comment.