நல்வாழ்வு அமைச்சருக்கு எதிர்க்கட்சித் தலைவர் தவராசா பாராட்டு!
நல்வாழ்வு அமைச்சர் ஒருவர்தான் நல்வாழ்வுத் துறை மேம்பாட்டிற்கான ஒரு திட்டமிடலை வரைந்திருக்கின்றார் என வட மாகாண சபையின் கடந்த கால செயற்பாடுகள் தொடர்பான மீளாய்வு அமர்வில் எதிர்க்கட்சித் தலைவர் பாராட்டினார்ப். அவர் பேசியதாவது,
நியதிச் சட்டங்கள் மட்டுமல்ல, மாகாண சபை செய்திருக்க வேண்டிய இன்னுமோர் முக்கியமான விடயம் வட மாகாண அபிவிருத்திக்கான துறை சார் ஒன்றிணைந்த அபிவிருத்தித் திட்டங்களை (Integrated Master Development Plan) வகுத்திருக்க வேண்டும். உதாரணத்திற்கு இன்று கல்வியில் எங்கள் மாகாணம் இலங்கையில் கீழ் நிலையில் உள்ளது. இதனை முன்னேற்றுவதற்கு இது வரை என்ன திட்டங்கள் முன்வைத்திருக்கின்றீர்கள்? பின்னடைவுக்கான வியாக்கியானங்கள் தேடிக் கொண்டிருக்கின்றீர்களே தவிர முன்னே கொண்டு செல்வதற்கான திட்ட முன்மொழிவுகள் ஏதாவது முன்வைத்துள்ளீர்களா? இதே போன்றுதான் ஒவ்வொரு துறையிலும்.
இவ்விடயத்தில் சுகாதார அமைச்சர் ஒருவர்தான் சுகாதாரத் துறை மேம்பாட்டிற்கான ஓர் திட்டமிடலைச் செய்திருக்கின்றார். இணைந்த வடக்கு கிழக்கில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மாகாண சபை 01 வருடங்கள் 04 மாதங்கள் மாத்திரந்தான் இயங்கியது. ஆனால் அக் குறுகிய காலத்திற்குள் ஒவ்வொரு துறையின் மேம்பாட்டிலும் ஓர் மாஸ்டர் பிளான் போட்டிருந்தனர். அவர்கள் 16 மாதத்தில் செய்து காட்டியதனை உங்களால் 45 மாதங்களாக செய்யமுடியாமலிருக்கின்றது.
ஒவ்வொரு துறைக்கும் ஒரு மாஸ்டர் பிளானைச் செய்து விட்டுத்தான் அதனை நடைமுறைப்படுத்துவதற்கான நிதிகளை முன்னுரிமை அடிப்படையில் எவ்வாறு பெற வேண்டுமென்ற முயற்சிகளில் ஈடுபடல் வேண்டும். இதுதான் ஓர் திறனுள்ள நிர்வாகத்தின் செயற்பாடாக அமைய முடியும். இவ்விடயத்தில் மீண்டும் நான் சுகாதார அமைச்சரிற்குப் பாராட்டுத் தெரிவிக்க விரும்புகின்றேன். அவர் சுகாதாரத் துறையின் அபிவிருத்திக்கான ஓர் திட்டமிடலை வகுத்தது மட்டுமல்லாது அதன் ஓர் பகுதியை நடைமுறைப் படுத்துவதற்கு ரூ.14,000/- மில்லியன் நிதியைக் கூடப் பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளார். இது எமது மாகாண சபைக்கு வருடாந்தம் கிடைக்கும் மொத்த மூலதன நிதியின் இரு மடங்கை விட மேலானது.
Leave a Reply
You must be logged in to post a comment.