என்றுமுள்ள செந்தமிழ் (11-20)


என்றுமுள்ள செந்தமிழ்!

தில்லையில் கறையானுக்கு இரையான தேவார திருவாசகங்கள்!
(11)

சிவராத்தியன்று காசிக்குச் சென்றிருந்த சிவனடியார் ஆறுமுகசாமி அங்கேயுள்ள திருப்பனந்தாள் மடத்தில் தங்கச் சென்றபோது “சமஸ்கிருத விரோதிக்கு மடத்தில் இடமில்லை’ என்று விரட்டி அடித்திருக்கிறார்கள் அந்தத் “தமிழ்” மடத்தின் நிருவாகிகள். கோயிலை இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு எதிராக தீட்சிதர்கள் பெற்றிருக்கும் நீதிமன்றத் தடையாணையை உடைப்பதற்கும் தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தில்லைப் பார்ப்பன தீட்சதகர்கள் மட்டுமல்ல தருமபுரம் “சூத்திர” ஆதீனம் வரை தமிழுக்குப் பகையாகவே இருக்கிறார்கள். சைவத்தையும் தமிழையும் சொல்லிச் சொத்துச் சேர்த்து பெருநிதிக் கிழவர்கள் ஆகிவிட்ட ஆதீனங்கள் ஆறுமுகசாமியைத் தம் பக்கம் அண்டவிடுவதே இல்லை.

தமது பதவி, நிலம், சொத்து ஆகியவற்றைப் பாதுகாத்துக் கொள்வதில் ஆதீனங்களும் தீட்சிதர்களும் கைகோர்த்து ஒரே அணியில் நிற்கிறார்கள். இன்று தீட்சிதர்களுக்கு நடந்தது நாளை தமக்கு நேரக்கூடும் என்பதுதான் பல்லாயிரம் கோடி சொத்துக்களை ஆண்டு அனுபவித்துக் கொண்டிருக்கும் பார்ப்பனரல்லாத “சூத்திர’ ஆதீனங்களின் கவலை ஆகும். ஆகையால், இந்தப் பார்ப்பனச் – சூத்திரக் கூட்டணி மிகவும் இயற்கையானது.

தமிழுக்கு எதிராக இத்தனை கொடுமையான தீர்ப்புகள் வழங்கப்பட்டிருந்த போதிலும் இவற்றைக் கண்டிக்கவோ, எதிர்க்கவோ யாரும் முன்வரவில்லை. சிவனடியார் ஆறுமுகசாமி மட்டும் தன்னந்தனியாக நின்று தமிழுக்காகப் போராடினார். காரணம் இழப்பதற்கு அவரிடம் ஒரு மஞ்சள் பையும் சோற்றுப் பாத்திரமும் தவிர வேறொன்றும் இல்லை!

நாளும் இன்னிசையால் தமிழ்வளர்த்த தமிழ்ஞானசம்பந்தரின் பெயரையே பிராமணர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு வைக்க மறுக்கிறார்கள். ஞானசம்பந்தரது பெயர் மட்டுமல்ல எஞ்சிய திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோரது பெயர்களும் புறந்தள்ளப்பட்டன. அவர்கள் பாடிய பாடல்கள் அடங்கிய ஏடுகள் தில்லைக் கோயிலில் பூட்டி வைக்கப்பட்டு கறையானுக்கு இரையாக்கப்பட்டன.

பத்தாம் நூற்றாண்டில் இராசராச சோழனின் ஆட்சியின்போது தில்லைக் கோயிலிலே கவனிப்பாரற்றுக் கிடந்த தேவாரங்களையும் வேறுபல சமய இலக்கியங்களையும் எடுத்து பூச்சிகளால் அரிக்கப்பட்டு அழிந்தவை போக எஞ்சியவற்றை நம்பியாண்டார் நம்பி என்பவர் பன்னிரண்டு திருமுறைகளாகத் தொகுத்தார்.

தேவாரம், திருவாசம் கரையானுக்கு இரையாக்கப்பட்ட செய்தி தீட்சிதர்களுக்குத் தேவாரம் திருவாசம் மீது இருந்து வரும் காழ்ப்புணர்ச்சியைக் காட்டுகிறது.

அப்படித் தில்லைக் கோயிலில் பூட்டி வைத்து கரையானுக்கு இரையாகிப் போன தேவாரம் திருவாசகம் ஆகியவற்றைச் சோழப் பேரரசின் புகழ்மிக்க மன்னனாக விளங்கிய முதலாம் இராசராசன் (இயற்பெயர் அருண்மொழித்தேவன்) (கிபி 985-1014) “சூழ்ச்சி” செய்து மீட்டான் என ஒரு கதை கூட வழக்கத்தில் உள்ளது.

இந்த இடத்தில் தமிழகத்தை ஆண்ட மூவேந்தர்களில் ஒருவரான சோழர் வரலாற்றைப் பற்றிச் சுருக்கமாகக் குறிப்பிடலாம் என நினைக்கிறேன்.

கிறித்துவுக்கு முந்தைய நூற்றாண்டுகளிலேயே சோழர் குலம் பெருமையுற்று விளங்கியது. ஆயினும் கிபி 2 ஆம் ; நூற்றாண்டுக்குப் பின்னர் சிற்றரசர் நிலைக்குத் தாழ்ந்து போயினர். பழைய சோழமண்டலப் பகுதிகளிலே உறையூர், பழையாறு போன்ற இடங்களில் அவர்களது சிற்றரசுகள் நிலவின. கிபி 9 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தமிழ் நாட்டில் சோழர்கள் மீண்டும் வலிமை பெறத்தொடங்கினர். பத்தாம், 11 ஆம் நூற்றாண்டுகள் சோழர் குல ஆட்சியின் பொற்காலமாக விளங்கியது. கிபி 13 ஆம் நூற்றாண்டு வரை சோழரது ஆட்சி தமிழகத்தில் கொடி கட்டிப் பறந்தது.

கிபி 2 ஆம் நூற்றாண்டையும் அதற்கு முந்திய காலப் பகுதியையும் சேர்ந்த சோழர் முற்காலச் சோழர் என வரலாற்று ஆய்வாளர்கள் அழைக்கின்றனர்.

முற்காலச் சோழர்களில் காவிரி ஆற்றுக்குக் கல்லணை கட்டிய கரிகால் சோழன் புகழ் பெற்று விளங்கினான். ஒன்பதாதம் நூற்றாண்டுக்குப் பின் வலிமை பெற்று விளங்கிய சோழ மன்னர்கள் பிற்காலச் சோழர் எனப்படுகின்றனர். இவர்களில் முதலாம் இராசராச சோழனும் அவனது மகனான முதலாம் இராசேந்திர சோழனும் தமிழக வரலாற்றில் மட்டுமின்றி இந்திய வரலாற்றிலும் புகழ்படைத்த மன்னர்கள் ஆவர்.

பிபிசி தயாரித்த இந்தியாவின் காதை (ளுவழசல ழக ஐனெயை) என்ற குறும் படத்தில் முதலாம் இராசராசனை இந்தியாவின் மிகச் சிறந்த மன்னன் (வுhந புசநயவநளவ முiபெ ழக ஐனெயை) என சித்திரிக்கப்பட்டுள்ளான்.

தஞ்சைப் பெருவுடையார் கோயிலைக் கட்டியவன் இராசராச சோழன் என்பது தெரிந்ததே. கிபி 1010 இல் இக் கோயில் இராசராச சோழனின் நேரடிக் கண்காணிப்பில் கட்டி முடிக்கப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டது. இந்தியாவில் உள்ள மிக உயர்ந்த கட்டிடம் இதுவேயாகும்.

கிபி 10 ஆம், 11 ஆம், 12 ஆம் நூற்றாண்டுகளில் சோழர் வலிமை மிக உச்சத்தில் இருந்தது. அக்காலத்தில் அந்நாட்டை ஆண்ட மன்னர்களில் முதலாம் இராசராசனும் முதலாம் இராசேந்திரனும் முதன்மையானவர்கள். அவர்கள் காலத்தில் சோழநாடு படை பலத்திலும் பொருளாதார வளத்திலும் பண்பாட்டிலும் வலிமை பொருந்திய பேரரசாக ஆசியா முழுவதிலும் செல்வாக்குச் செலுத்தியது.

சோழநாட்டின் எல்லை வடக்கே ஒரிசா வரையிலும் கிழக்கில் சாவகம், சுமத்ரா, மலேசியா வரையும் தெற்கே மாலைதீவுகள் வரையிலும் விரிந்து இருந்தது. வலிமைமிக்க கடற்படையைப் கொண்டிருந்த இராசராசன் தென்னிந்தியா முழுவதையும் வெற்றி கொண்டதுடன் தெற்கே இலங்கையையும் மாலைதீவையும் கூடக் கைப்பற்றியிருந்தான். இராசராசன், தெற்கில் ஈழத்தின்மீது மட்டுமன்றி, இந்தியாவின் மேற்குக் கரைக்கு அப்பால், அரபிக்கடலிலுள்ள இலட்சத்தீவு மீதும், கிழக்குப் பகுதியில் தென்கிழக்கு ஆசியப் பகுதியிலுள்ள அந்தமான் தீவு, கடாரத்தின் மீதும் படையெடுத்ததாக அவனது செப்பேடுகளும் மெய்கீர்த்திகளும் தெரிவிக்கின்றன.

சோழர்களின் இலச்சினையான புலிச் சின்னம் சோழர்களின் கொடியிலும் பொறிக்கப்பட்டது. புலிக்கொடி பறந்த கப்பல்கள் இந்துப் பெருங்கடலில் வலம் வந்தன. இப்புலிச் சின்னத்தைப்பற்றி இலக்கியங்கள் பரவலாகக் குறிப்பிட்டாலும் அதன் தோற்றம் பற்றி ஒன்றையும் அறியமுடியவில்லை. சோழர்கள் சூடிய மலர் ஆத்தி ஆகும்.

இராசராசனின் மறைவுக்குப்பின் 1012 ஆம் ஆண்டில் அவனது மகனான இராசேந்திரன் சோழநாட்டின் மன்னனானான். ஏற்கெனவே தந்தையோடு, போர் நடவடிக்கைகளிலும் நிருவாகத்திலும் ஈடுபட்டு பட்டறிவும் வினைத்திறனும் பெற்றிருந்த இராசேந்திரன் ஆளுமை கொண்ட அரசனாக விளங்கினான்.

இராசேந்திரன் ஆட்சியில் (கிபி 1012 -1044) சோழநாடு மேலும் விரிவடைந்தது. ஏற்கெனவே பெற்றிருந்த வெற்றிகளைத் தக்கவைத்துக் கொள்வதிலும், அவன் போர்களில் ஈடுபடவேண்டி ஏற்பட்டது. சேர நாட்டின் மீது படையெடுத்து அதன் அரசனான பாஸ்கர இரவிவர்மனை அகற்றிவிட்டு, அந்நாட்டைச் சோழரின் நேரடி ஆட்சியின் கீழ் கொண்டுவந்தான்.

முதலாம் இராசேந்திரன் காலத்தில் சோழர் படை வட இந்தியாவிலுள்ள கங்கைக் கரை வரை சென்று பாடலிபுத்திரத்தின் மன்னனான மகிபாலனைத் தோற்கடித்தது. அத்துடன் சோழரின் கடற்படை மலாய் தீபகற்பத்திலுள்ள கடாரம் போன்ற சில நாடுகளையும் தாக்கித் தோற்கடித்ததாகவும் தெரிய வருகிறது. இந்திய அரசர்களுள் கடல் தாண்டி கடற்படை மூலம் வெற்றி கொண்டவர்கள் சோழர்களே ஆவர்.

ஈழநாட்டின் மீதும் படையெடுத்து முழு நாட்டையும் கைப்பற்றியதுடன், தப்பி ஓடிய பாண்டியன் இலங்கையில் மறைத்து வைத்திருந்த பாண்டி நாட்டு மணிமுடியையும், செங்கோலையும் மீட்டு வந்தான்.

ஈழமண்டலம் முழுவதையும் சோழர்களின் ஆட்சியில் இருந்ததை கீழ்க்காணும் செப்பேடு உறுதிப் படுத்துகிறது.

“பொருகட லீழத் தாசர்தம் முடியும்
ஆங்கவர் தேவியர் ஓங்கெழில் முடியும்
முன்னவர் பக்கல் தென்னவர் வைத்த
சுந்தர முடியும், இந்திரன் ஆரமும்
தெண்டரை ஈழ மண்டல முழுதும்…”

வடக்கு எல்லையிலும் சாளுக்கியர்களை மீண்டும் அடக்கிவைக்கவேண்டி ஏற்பட்டது. அப்பகுதியில் சாளுக்கியர்கள் கலிங்கர்கள், ஒட்ட விசயர்கள் ஆகியோர்; சேர்ந்துகொண்டு சோழரை எதிர்த்தனர். இதனால் சோழர் படைகள் வடநாடு நோக்கிச் சென்றன. சாளுக்கியர், கலிங்கர், ஒட்ட விசயர் ஆகியவர்களையும், பல சிற்றரசர்களையும் வென்று வங்காள நாட்டையும் சோழர்படை போரில் தோற்கடித்தது.

சோழர் கைப்பற்றியிருந்த இடங்களில் அடிக்கடி கிளர்ச்சிகள் ஏற்பட்டதாலும் வடக்கு எல்லையில் சாளுக்கியரின் தொல்லைகள் தொடர்ந்து வந்ததாலும் இராசேந்திரனின் ஆட்சிக்காலம் முழுவதும் அமைதியற்ற காலப்பகுதியாகவே கழிந்தது.

இக்காலத்தில் பாதுகாப்பு நோக்கங்களுக்காக நாட்டின் தலை நகரம் தஞ்சையிலிருந்து கங்கைகொண்ட சோழபுரத்துக்கு மாற்றப்பட்டது. (வளரும்)


என்றுமுள்ள செந்தமிழ்!

சோழப் பேரரசின் எழுச்சியும் வீழ்ச்சியும்!
(12)

முதலாவது இராசேந்திர சோழனின்; கடற்படை மலாய் தீபகற்பத்திலுள்ள கடாரத்தைத் தாக்கி வெற்றி கொண்டது என்பதைப் பார்த்தோம். இப்போது முநனயா என்று அழைக்கப்
படும் மாநிலமும் இன்னும் சில நிலப்பரப்பும் அடங்கிய பகுதியே கடாரம் என அழைக்கப்பட்டது. இராசேந்திர சோழன் கடாரத்தை வென்று திறை அறவிட்டான் என்ற செய்தி மட்டுமே உண்டு. அதனை நிரந்தரமாகக் கட்டி ஆண்டான் என்பதற்குச் சான்றுகள் இல்லை.

இராசராசனின்; 14 ஆவது ஆட்சி ஆண்டுக் கல்வெட்டுகளில் முதல் முறையாகக் கடல் கடந்து கடாரம் கொண்ட செய்தி காணப்படுகிறது. இதைத் தெரிவிக்கும் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் கடலைக் கடந்து வலிமையான படையுடன் இராசேந்திரன் சென்று கெடா என்னும் பகுதியைக் கைப்பற்றினான் என்று சுருக்கமாக ஒரு செய்யுளில் சில வரிகளில் கூறிமுடிக்கிறது. இருந்தும் இந்தச் சாதனையை இவனுடைய தமிழ் மெய்க்கீர்த்தி மிக விரிவாகச் சொல்கிறது.

“அலை நிறைந்த கடலின் நடுவே பல கப்பல்களை இராசேந்திரன் அனுப்பினான்;. கடாரத்தை ஆண்ட சங்கிராம விஜயோத்துங்கவர்மனையும், புகழ் படைத்த அவனுடைய படையில் இருந்த யானைகளையும் பிடித்துக் கொண்டான். நியாயமான வழியில் அந்த அரசன் சேமித்து வைத்திருந்த எண்ணற்ற செல்வங்களை எல்லாம் இவன் எடுத்துக் கொண்டான.;; பரந்து விரிந்திருந்த இந்த நகரத்தின் “போர் – வாயில்” அருகேயுள்ள வித்தியாதரதோரணம் என்ற வளைவை வெற்றி முழக்கத்துடன் கைப்பற்றினான். “நகைகள் n பதித்த சிறுவாயிலை” உடைய ஸ்ரீPவிஜயன் “பெரிய நகைகள் கொண்ட வாயிலை”யும் அழகுபடுத்தி அலங்கரித்துக் கொண்டான். பண்ணையில் தீர்த்தக் கட்டங்களில் நீர் நிறைந்திருந்தது. பழமையான மலையூர், வலிமையான மலைக்கோட்டையும் திகழ்ந்தது. மாயிருடிங்கம், ஆழ்கடலால் சூழப்பட்டு பாதுகாக்கப்பட்டிருந்தது………………. ” (பேராசிரியர் கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி எழுதிய சோழர்கள் – பக்கம் 286)-

இந்தப் படையெடுப்பு கிபி 1025 இல் இடம்பெற்றது. சோழர்கள் மீண்டும் சங்கிராம விஜயதுங்கவர்மனுக்கு முடிசூட்டினார்கள். குறிப்பிட்ட கால அளவில் திறையாக இவ்வளவு செலுத்த வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாக சோழர்களின் கல்வெட்டுக்கள் மூலம் தெரியவருகிறது.

தாய்லாந்து மற்றும் கம்போடிய மன்னர்களின் முடிசூட்டு விழாக்களில் திருவாசகம் படிக்கப்பட்டது. அதந் வழக்கும் இன்றும் தொடர்கிறது. தமின் (தமிழ்) என்ற சொல் ஒரு இனத்தைக் குறிப்பிடுவதோடு வன்முறையையும் குறிப்பிடுகிறது.

இராசராச சோழனின் படையில் இராசேந்திரன் பட்டத்து இளவரசனாக கிபி 1012 இல் முடிசூட்டிக் கொண்ட காலம் தொடங்கி இறக்கும் வரை இன்றைய தமிழகம், கேரளம், ஆந்திரம், கலிங்கம், ஈழம் உட்பட்ட சோழப் பேரரசை இந்து அரசர்கள் ஆண்ட நாடுகளிலேயே தலைசிறந்த ஒன்றாகவும் மலேயா தீபகற்பத்தையும் கீழைக் கடற்கரைப் பகுதிகளையும் உள்ளிட்ட மிகப் பரந்த நாடாகவும் மாற்றி அமைத்தான். ஈழம் சோழநாட்டின் மண்டலங்களில் ஒன்பதாவது மண்டலமாக (மும்முடிச் சோழ மண்டலம்) ஆளப்பட்டது. ஆட்சியின் முற்பகுதிகளில், இராசேந்திரன் மேற்கொண்ட எண்ணற்ற போர்கள் பற்றியும் கைப்பற்றிய நாடுகள் பற்றியும் தன் தந்தை போன்றே வெட்டிய எண்ணற்ற கல்வெட்டுக்களால் அறிய முடிகிறது. இராசேந்திரன் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பெற்ற வெற்றிகள் பற்றித் திருவாலங்காடு, கரந்தை (தஞ்சை)ச் செப்பேடுகள் சான்றுகளுடன் தெரிவிக்கிறது. திருவாலங்காடு செப்பேடு சமற்கிருதத்திலும் தமிழிலும் எழுதப்பட்டுள்ளது.

இராசேந்திரன் வெற்றிவாகை சூடிய முக்கியமான போர்க்களங்களிலில் மிகவும் முக்கியமானவை இராஷ்ட்டிரகூடர்களுக்கு எதிரான போரும் மற்றும் சாளுக்கிய அரசன் சத்யாச்சிரயனுக்கு எதிரான போரும் ஆகும். இதில் சாளுக்கிய அரசனுக்கு எதிரான போரில் இராசேந்திரன் துங்கபத்திரா ஆற்றைக் கடந்து சாளுக்கிய நாட்டின் தலைநகர் வரை படையெடுத்துச் சென்று வெற்றி பெற்றான்.

முன்னர் குறிப்பிட்டவாறு முதலாம் இராசராச சோழன் (கிபி 985 – 1014) தொடக்கி வைத்த ஈழத்தின் மீதான படையெடுப்பை நிறைவு செய்யும்; விதமாகவும், மதுரை கொண்ட முதலாம் பராந்தக சோழன் (கிபி 907 – 990) காலத்திலேயே கைப்பற்ற நினைத்து முடியாது போன பாண்டிய அரசர்களால் ஈழத்து அரசர்களிடம் அடைக்கலம் கொடுத்த சுந்தர முடியும் இந்திரன் ஆரமும் இரத்தினக் கற்கள் பதித்த வாளையும் மீட்குமுகமாக ஈழத்தின் மீது கிபி 1018 இல் படையெடுப்பு நடத்தப்பட்டது. படையெடுப்பின் போது அவற்றைக் கைப்பற்றியதோடு உரோகணத்தில் அஞ்சி ஓடி ஒளிந்த அய்ந்தாம் மகிந்தன், அரசி, இளவரசி ஆகியோரைச் சிறைப்படுத்தி இராசேந்திரன் சோழநாடு திரும்பினான். இலங்கை அரசன் மகிந்தன் 12 ஆண்டு சிறையிலேயே கழித்து இறந்து போனான்.

அடுத்த 70 ஆண்டுகள் இலங்கை சோழரது ஆட்சியின் கீழ் இருந்தது. இதனை தர்மகீர்த்தி என்ற பவுத்த தேரர் எழுதிய சூளவம்சம் உறுதி செய்கிறது. சோழர்கள் மீது சிங்களவர்களுக்கு இருந்த அச்சத்தை “இலங்கையைச் சூறையாடல்” (‘வுhந Pடைடயபந ழக டுயமெய’) என்ற அதிகாரத்தில் விபரித்துள்ளார். புனித சின்னங்கள் வைக்கப்பட்டிருந்த அறைகளை உடைத்து பவுத்த இதிகாசமான மகாவம்சமும் 15 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இராஜவாலிய என்ற நூலும் இதே தோரணையில் சோழர்களை விபரித்துள்ளன.

முதலாம் இராசேந்திர சோழனுக்குப் (கிபி 1012 – 1044) பின் கீழ்க்கண்ட சோழ அரசர்கள் நாட்டை ஆண்டார்கள்.

முதலாம் இராசாதிராச சோழன் (கிபி 1018 – 1054)
இரண்டாம் இராசேந்திர சோழன் (கிபி 1051 – 1063)
வீரராசேந்திர சோழன் (கிபி 1063 – 1070)
அதிராசேந்திர சோழன் (கிபி 1067 – 1070)

சாளுக்கிய சோழர்கள்

முதலாம்; குலோத்துங்க சோழன் (கிபி 1070 – 1120)
விக்கிரம சோழன் (கிபி 1118 – 1135)
இரண்டாம் குலோத்துங்க சோழன் (கிபி 1133 – 1150)
இரண்டாம் இராசராச சோழன் (கிபி 1146 – 1163)
இரண்டாம் இராசாதிராச சோழன் (கிபி 1163 – 1178)
மூன்றாம் குலோத்துங்க சோழன் (கிபி 1178 – 1218)
மூன்றாம் இராசராச சோழன் (கிபி 1216 – 1256)
மூன்றாம் இராசேந்திர சோழன் (கிபி 1246 – 1279)

முதலாம் இராதிராசன்; காலத்தில் சோழப் பேரரசின் தென் பகுதிகளான ஈழம், பாண்டிநாடு, சேரநாடு ஆகிய பகுதி;களில் கிளர்ச்சிகள் தீவிரம் அடையத் தொடங்கின. எனினும் அவற்றை முதலாம் இராசாதிராசன அடக்கினான். சாளுக்கியர்களின் தொல்லைகளை அடக்குவதற்காக அங்கேயும் சென்று போர் புரிந்தான். சோழர்கள் இறுதி வெற்றியைப் பெற்றனராயினும் கொப்பம் என்னுமிடத்தில் நடைபெற்ற சண்டையொன்றில் இராசாதிராசன் கொல்லப்பட்டான்.

இவனைத் தொடர்ந்து அவன் தம்பி; இராசேந்திரன் என்னும் அரியணைப் பெயருடன் முடி சூட்டிக்கொண்டான். இவன் இரண்டாம் இராசேந்திரன் எனப்படுகின்றான். இவனுக்குப் பின்னர் இவன் தம்பி வீரராசேந்திரனும் பின்னர் அவன் மகனான அதிராசேந்திரனும் வரிசையாகப் பதவிக்கு வந்தனர். அதிராசேந்திரன் அரசனான (கிபி 1070) சிலமாதங்களிலேயே எதிரிகளால் கொல்லப்பட்டான். சந்ததி இல்லாமலேயே அதிராசேந்திரன் இறந்து போனதால் முதலாம் இராசேந்திரனுடைய மகள் வயிற்றுப் பேரனும், கீழைச் சாளுக்கிய மன்னன் இராசராசனுடய மகனுமான இராசேந்திரன் (விஷ்ணுவர்த்தன்) கங்கைகொண்ட சோழபுரத்திற்கு தனது பெரும்படையுடன் வந்து முதலாம் குலோத்துங்கன் என்ற அரியணைப் பெயரோடு முடிசூட்டிக் கொண்டான். ஆட்சிக்கு வந்தான். இவன் தனது இளமைப் பருவத்தை தஞ்சையில் கழித்தவன். முதலாம் குலோதுங்கன் பிற்காலச் சோழர் மரபுவழியை நிறுவிய விசயாலய சோழனின் நேரடி சந்ததிகளின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

முதலாம் குலோத்துங்க சோழன் காலத்துச் சோழ நாடு கி.பி 1120 முதலாம் குலோத்துங்கனுடைய காலமும் பெரும் கிளர்ச்சிகளைக் கொண்ட காலப்பகுதியாகவே அமைந்தது. பாண்டிய நாட்டிலும் சேர நாட்டிலும் படை நடத்திக் கிளர்ச்சிகளை அடக்கவேண்டியிருந்தது. வட பகுதிகளிலும் போர் ஓய்ந்தபாடில்லை. எனினும் ஈழநாட்டில் விசயபாகு என்பவன் சோழருடன் போரிட்டு ஈழத்திலிருந்து சோழர் ஆட்சியை அகற்றினான். ஈழத்தில் ஏறத்தாழ 70 ஆண்டுகள் நிலவிய சோழராட்சி அங்கிருந்து அகற்றப்பட்டது. சோழநாட்டின் பிற பகுதிகளில் நிலவிய நிலைமைகளைக் கருத்திற்கொண்டு குலோத்துங்கன் ஈழநாட்டை மீட்கப் படைகளை அனுப்பவில்லை என்று கருதப்படுகின்றது. குலோத்துங்கனின் இறுதிக் காலத்தில் தெற்கிலிருந்தும் வடக்கிலிருந்தும் சிக்கல்கள் உருவாயின. சோழப் பேரரசு ஆட்டம் காணும் நிலை ஏற்பட்டது. வடக்கிலிருந்து வந்த படையெடுப்புகள் சோழநாட்டைப் பலவீனப்படுத்தின.

முதலாம் குலோத்துங்கனுக்குப் பின்னர் இரண்டாம் குலோத்துங்கன் இரண்டாம் இராசராசன் இரண்டாம் இராசாதிராசன் மூன்றாம் குலோத்துங்கன் ஆகியோர் வரிசையாகச் சோழ நாட்டை ஆண்டனர். இக்காலத்தில் சோழர் தொடர்ந்தும் வலிமையிழந்து வந்தனர். நாட்டின் வடக்கில் புதிய அரசுகள் வலிமை பெறலாயின. தெற்கே பாண்டியர்கள் வலிமை பெறலாயினர்.

1246 இல் ஆட்சிக்கு வந்த மூன்றாம் இராசராசன் காலத்தில் பாண்டியர்கள் கங்கைகொண்ட சோழபுரத்தின் மீது படையெடுத்து அதனைக் கைப்பற்றிக் கொண்டனர். எனினும் சோழர்களுக்கு ஆதரவாகப் போசள மன்னனான இரண்டாம் நரசிம்மன் சோழநாட்டில் புகுந்து பாண்டியர்களைத் தோற்கடித்து மன்னனைக் காப்பாற்றினான். மூன்றாம் இராசராசனுக்குப் பின்னர் கி.பி 1246 இல் மூன்றாம் இராசேந்திரன் பட்டத்துக்கு வந்தான். இவன் காலத்தில் வலிமை பெற்ற பாண்டியர்கள் சோழர்களை வென்று அவர்களைச் சிற்றரசர்கள் நிலைக்குத் தாழ்த்தினர். மூன்றாம் இராசராசனுடன் பிற்காலச் சோழரின் பெருமை மங்கிப்போயிற்று. 1279 இல் சுந்தரபாண்டியன் சோழ நாட்டின் மீது படையெடுத்து மூன்றாம் இராசராசனைச் தோற்கடித்து சோழ நாட்டைக் கைப்பற்றிக் கொண்டான்.

தொண்ணுற்றாறு புண்களை மார்பிலே கொண்டவன் என்ற பெயர் எடுத்த விசயாலய சோழன் (கிபி 848 – 871) நிறுவிய சோழப் பேரரசு – எண்ணி 431 ஆண்டுகள் நிலைத்து நின்று ஈழம், சாவகம், புட்பகம் ஆகிய தீவுகளைத் தாக்கிப் புலிக்கொடி நாட்டிய சோழப் பேரரசு – மூன்றாம் இராசேந்திர சோழன் (கிபி 1246 – 1279) காலத்தில் பொலிவிளந்து சந்ததி இல்லாது முடிவுற்றது. சோழ மன்னர்கள் கட்டிய வானுயர்ந்த கோயில்கள், வெட்டிய குளங்கள், கொட்டிக் கொடுத்த நிவந்தங்கள், செய்த பூசைகள் எதுவும் சோழப் பேரரசைக் காப்பாற்ற முடியவில்லை. மாறாக கருவூலத்தை வெறுமையாக்கவே உதவியன!

அடுத்த முறை சோழப் பேரரசின் பொற்காலத்தின் மறு பக்கத்தைப் பார்ப்போம். (வளரும்)


என்றுமுள்ள செந்தமிழ்!

சோழர் காலத்தில் வருணாச்சிரமதருமம் வலிவடைந்தது

(13)

இந்திய அரசுகளை அடிபணிய வைத்து தென்கிழக்கு ஆசியா முழுதும் கடல் மேலாண்மை செலுத்திய ஒரு பேரரசாக சோழப் பேரரசு விளங்கியதைப் பார்த்தோம். பிற்காலச் சோழர் பேரரசு சோழப் பெருவேந்தன் விசயாலச் சோழன் காலம் (கிபி 846 – 881) தொட்டு மூன்றாலம் இராசேந்திர சோழன் காலம் (கிபி 1246 – 1279) வரை 534 ஆண்டுகள் நீடித்தது.

சோழப் பேரரசின் வீழ்ச்சிக்கு வரலாற்று ஆசிரியர்கள் முக்கியமாகக் குறிப்பிடும் காரணிகள் பின்வருமாறு.

1) குறுநில மன்னர்கள்.

hணர்கள், கொடும்பாளுரை ஆட்சிபுரிந்த பளுவேட்டரையர், மிலாடுடையர், காடவராயர். கொங்குச் சோழர், தெலுங்குச் சோழர், சம்புவராயர், மலையமான், யாதவராயர் போன்றோர் முக்கியமான குறுநில மன்னர்கள். இவர்கள் ஆட்சியை உருவாக்கவும் அது வீழ்ச்சியுறவும் காரணமாக இருந்தனர். மூன்றாம் குலோதுங்கன், மூன்றாம் இராசராசன் காலத்தில் பல கலவரங்கள் இடம்பெற்றன.;. மகதநாட்டு குறுநில மன்னன் வாணதேவரையன், சேதிராயன், சம்புவராயன் போன்றோர் சோழர்களுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கி கலகம் செய்தனர். குறுநில மன்னர்கள் தயவில் சோழர்கள் வாழும் நிலை ஏற்பட்டதால் படிப்படியாகச் சோழப் பேரரசு நலிவுற்றது.

2) உள்நாட்டுக் கலகங்கள்

மூன்றாம் இராசராசனின் ஆட்சிக் காலத்தில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள தலைச்செங்காடு, திருவேள்விக்கு, உடையாளுர் ஆகிய இடங்களில் ஏற்பட்ட கலகங்கள் குறிப்பிடத்தக்கவை. உள்றாட்டுக் கலகங்கள் சோழரின் பலத்தையும் புகழையும் கெடுத்தன.

3) சமயப் பூசல்கள்

சோழர் ஆட்சியில் சைவத்துக்கே முதலிடம் கொடுக்கப்பட்டது. வைணவத்தை சில மன்னர்கள் ஆதரித்தாலும் வைணவப் பெரியார் இராமனுசர் நாடு கடத்தப்பட்டதும் தில்லை கோவிந்தரது சிலை கடலில் தூக்கி எறியப்பட்டதும் வைணவ சமயத்தினரிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தின. நந்திவர்ம பல்லவனால் புதுப்பிக்கப்; பட்ட விஷ்ணுவின் கோயில் இரண்டாம் குலோத்துங்கனால் கடலில் வீசப்பட்டது. குலோத்துங்கனுக்குப் பின்னர் வந்த பிற்காலப் பாண்டியர் காலத்திலும் – கிட்டத் தட்ட 15 ஆம் நூற்றாண்டு வரை – விஷ்ணு கோயில் முக்கியத்துவம் பெறவில்லை எனத் தெரிகிறது. அரசர்களின் மான்யங்கள் அனைத்தும் நடராசருக்கே அளிக்கப் பட்டு வந்திருக்கிறது. சிவ – விஷ்ணு பேதம் பார்க்காத பாண்டியர் காலத்தில் மட்டுமில்லாமல் பின்னர் வந்த கிருஷ்ணதேவ ராயரும் நடராசருக்கே மானியங்கள் அளித்து வந்திருக்கிறார். சோழர் ஆட்சியில் சைவர் பயன்படுத்திய குளங்களையும் சாலைகளையும் வைணவர்கள் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டது. மேலும் கம்பன் தன் காவியத்தைச் சோழ மன்னன் அவையிலே அரங்கேற்றாமல் திருவரங்கத்தில் அரங்கேற்றியதற்கு மதப் பூசலே காரணம் எனக் கூறப்படுகிறது. பொதுவாக கம்பருக்கும் சோழ அரசனுக்கும் கவிச்சக்கரவர்த்திக்கும் இடையில் உரசல் இருந்தது கம்பர் பாடியதாகச் சொல்லப்படும் ஒரு தனிப்பாடல் வாயிலாக அறிய முடிகிறது. சோழன் தனது நாட்டை விட்டுப் போவெனறபோது பாடிய பாடல் இது.

மன்னவனும் நீயோ? வளநாடும் உனதோ?
உன்னை அறிந்தோ தமிழை ஓதினேன்? – என்னை
விரைந்தேற்றுக் கொள்ளாத வேந்துண்டோ? உண்டோ
குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு?

4) கோயில்கள்

படையெடுப்பில் கொள்ளை அடிக்கப்பட்ட பொன்னையும் ;பொருளையும் கோயில்கள் கட்டுவதிலும் திருவிழாக்கள் செய்வதிலும் வீண் விரயம் செய்தார்கள். மூவாயிரத்துக்கும் அதிகமான கோயில்கள் கட்டப்பட்டன.

5) பாண்டியர் படையெடுப்பு

1919 இல் சுந்தர பாண்டியன் சோழநாட்டின் மீது படையெடுத்து மூன்றாம் இராசராசனைத் தோற்கடித்து சோழ நாட்டை கைப்பற்றிக்கொண்டான். அத்துடன் தஞ்சை, உறையூர் போன்ற நகரங்களின் கட்டிடங்களை இடித்துக் தீக்கிரையாக்கினான். நீர் நிலைகளையும் நாசப்படுத்தினான். சோழனை கப்பம் கட்டுமாறு செய்வித்தான். இவற்றால் இராசராசன் புகழ் சீர்குலையவும் வீரம் மங்கிப்போகவும் நேர்ந்தது. மூன்றாம் இராசராசனின் மகன் மூன்றாம் இராசேந்திரன் பெரும் வீரனாகவும் அரசியல் தந்திரியாக விளங்கிய போதும் முதலாம் சடையவர் சுந்தரபாண்டிணன் படையெடுத்து சோழனை தோற்கடித்தான். சோழநாடு பாண்டிய நாட்டோடு இணைந்தது.

சோழர் காலத்தில் வடக்கில் இருந்து பிராமணர் ஆயிரக்கணக்கில் கூட்டி வரப்பட்டு தமிழ்நாட்டில் குடியேற்றப்பட்டனர். Nசுhழர் காலம் சைவத்தின் பொற்காலம் எனப்பட்டது. ஆனால் சைவம் தளைத்தபோது சாதிப் பிரிவினையும் ஆழ வேரூன்றியது. வருணாசிரதருமம் வலிவடைந்தது. சமுதாயம் சாதி அடிப்படையில் அமைந்திருந்தது. குடிமக்களிடையே உயர்வு தாழ்வும், வேற்றுமையும் பாராட்டப்பட்டன. மேல்சாதியினர் தமக்கென கொடி, குடை, தாரை, தப்பட்டை வைத்துக் கொண்டனர். சாதிக்குள் சாதி என உட்பிரிவுகள் பெருகின. சாதிகள் வலங்கை இடங்கை என்று பிரிக்கப்பட்டன. ஒவ்வொன்றிலும் 98 சாதிகள் இருந்தன! இவர்களிடையே ஓயாத சண்டைகள் இடம்பெற்றன. இதனால் தமிழ்ச் சமூகம் நலிந்தது.

பக்தி இயக்க காலத்தில் சாதி பற்றிக் காணப்பட்ட நெகிழ்ச்சிப் போக்கு – ‘ஆவுரித்துத் தின்றுலையும் புலையரேனும் கங்கைவார் சடைசங்கரர்க்கு அன்பராகில் அவர் கண்டீர் நாம் வணங்கும் தெய்வமாமே’ – பிற்காலச் சோழர் காலத்தில் காணப்படவில்லை.

முதலாம் இராசேந்திரனின் கங்கைப் படையெடுப்பை அடுத்து வங்காளத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட பிராமணர்கள் காஞ்சியிலும் சோழமண்டலத்திலும் குடியமர்த்தப்பட்டனர். அதனால் கோயில் வழிபாட்டு முறையில் மாற்றங்கள் ஏற்பட்டன. ஆச்சாரியர்கள் சீரையூர், நாகப்பட்டினம், மேலச்சேரி, திருவாரூர், திருக்கடையூர் போன்ற ஊர்களில் இருந்த சைவ மடங்களுக்குப் பொறுப்பாக இருந்தனர். பவுத்த, சமண மடங்களும் இருந்தன.;

பிராமணர்கள் எல்லா நிலையிலும் உயர்ந்தவர்களாகக் கருதப்பட்டனர். அரசர்கள் அவர்களுக்கு தனி ஊர்களை இறையிலி நிலங்களாகக் கொடுத்து தனியே குடியமர்த்தினர். இவை சதுர்வேதி மங்கலங்கள், அகரங்கள், அக்கிரகாரங்கள் எனப்பட்டன. பிராமணர்கள் கோயில்களிலும், மடங்களிலும், வேதப் பாடசாலைகளிலும் தனித்துவமான கொடுப்பனவுக்கு உரியவர்களாக விளங்கினர். கல்வியும் கோயில் பணியும் அவர்களது நிலையை உயர்த்தின. இலவச உண்டியும் உறையுளும் வேதவிருத்தி, பட்டவிருத்தி, புராணவிருத்தி போன்ற பட்டங்களும் தானங்களும், வேள்விகளும் அவர்களது வசதிகளை மேலும் பெருக்கின.

சோழ மன்னர்கள் பிராமணர்களை தங்களது அரண்மனை இராசகுருவாக நியமித்தார்கள். முதலாம் இராசராசனின் இராசகுருவாக ஈசானச் சிவபண்டிதரும் முதலாம் இராசேந்திரனின் இராசகுருவாக சர்வசிவ பண்டிதரும் முதலாம் இராசாதிராசனக்கு குருதேவரும் விக்கிரமசோழனுக்கு சுவாமி தேவரும் மூன்றாம் குலோத்துங்கனுக்கு சோமேசுவரரும் இராசகுருவாக இருந்தனர். சாதிக்கு ஒரு நீதி பேசும் மனு சாத்திரத்திரத்தின்படியே சோழ மன்னர்கள் நாட்டை ஆண்டார்கள்.

பிராமணர்களுக்கு எதிராக சிலசமயங்களில் கலவரங்களும் இடம்பெற்றன. முதலாம் குலோத்துங்கன் காலத்தில் நடைபெற்ற கலகத்தில் இராமமகேந்திர சதுர்வேதிமங்கலம் எரியூட்டப்பட்டது. நீண்ட கால அடக்குமுறைகளும் சுரண்டல்களும் இந்தக் கலகங்களுக்குக் காரணமாக இருந்தன.

சோழர் காலத்தில் அடிமை முறை வழக்கத்தில் இருந்தது. போரில் பிடிபட்டவர்கள் அடிமைகளாக விற்கப்பட்டனர். பிடிபட்ட ஊர்மக்களது மூக்குகளை அரியும் கொடிய வழக்கவும் இருந்தது. சிறைபிடிக்கப்பட்ட பெண்கள் கோயிலுக்கு விற்கப்பட்டனர். இவர்கள் தேவரடியார்கள் என அழைக்கப்பட்டார்கள். கோயில்களில் திருவிளக்கு இடுவது, திருமெழுகு இடுவது போன்ற பணிகளோடு திருமேனி ஊர்வலங்களின் போது வீதியில் நடனம் ஆடினர். பஞ்சம் ஏற்பட்ட காலத்திலும் அடிமைகள் விற்கப்பட்டனர். இவர்கள் மேட்டுக்குடியினருக்கு ஊழியம் செய்து வாழ்ந்தனர். அடுத்த முறை சோழர்கால கல்வி நிலையைப் பார்ப்போம். (வளரும்)


என்றுமுள்ள செந்தமிழ்

கற்கை நன்றே கற்கை நன்றே!
(14)

நக்கீரன்
தமிழர்கள் அன்றும் சரி இன்றும் சரி முன்னுரிமை கொடுத்து வந்துள்ளார்கள். கல்வி கற்பதை வலியுறுத்தும் பாடல்கள் தமிழ் இலக்கியத்தில் நிறைய உண்டு.
கல்வியின் மாட்சியுணர்ந்த பாண்டிய வேந்தன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் பாடிய பாடலொன்று புறநானூற்றில் உள்ளது. அந்தப் பாடல் இது:
உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே
பிறப்பு ஓர் அன்ன உடன் வயிற்று உள்ளும்
சிறப்பின் பாலால் தாயும்மனம் திரியும்
ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்
மூத்தோன் வருக என்னாது அவருள்
அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்
வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேற்பால் ஒருவனும் அவன்கட் படுமே (புறம் 183)
நெடுஞ்செழியன் என்ற பெயரோடு பல மன்னர்கள் இருந்ததால் இவனை அடையாளம் காட்ட ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் எனப் புலவர்கள் அழைத்தனர். நாடு எத்தனை வளமுடையதாக இருந்தாலும் கல்வி வளம் இல்லாதாயின் அநத நாடு நலிவுறும் என்று இந்த மன்னன் உணர்ந்திருந்தான் என்பது தெரிகிறது.

கல்வி வளங்கும் ஆசிரியனுக்கு ஒரு ஊறுபாடு உற்றவிடத்து அதனைத் தீர்த்தற்கு உவந்து உதவ வேணடும். வேண்டுமளவிற்கு மிகவே ஆசிரியனுக்குப் பொருள் வழங்குதல் வேண்டும். மிக்க பொருள் கொடுத்த வழியும் ஆசிரியனை வழிபடுதற்கு, வெறுப்படைதல் ஆகாது. இவ்வாறெல்லாம் செய்து கல்வி கற்பது நன்று எனத் தொடங்கி, இப்பாட்டின் கண், கல்வியில்லாற்குத் தான் பிறந்த குடும்பத்திலே தன்னைப் பெற்ற தாயாலும் சிறப்பளிக்கப்பட மாட்டாது என்றும் அவன் நாட்டு அரசு முறையும் கல்வி அறிவுடையோனையே துணையாகக் கொள்ளுமே தவிரக் கல்லாதானை ஏற்காதென்றும், கற்றோன், கீழ் நிலையிற் பிறந்தானாயினும் அவற்குத் தலைமையுண்டாகும். மேல் நிலையிற் பிறந்தோனும் அக் கீழ்ப்பிறந்தான் தலைமையிற்றான், அக் கல்வி குறித்து வழிபட்டொழுக வேண்டுமென்றும் இவ்வாற்றால் குடும்பமும் சமுதாயமும் அரசியலும் யாவையும் கல்வி நலத்தால் சிறப்படைதலால் கற்றல் நன்று என்று ஆணையிடுகிறான்.
“வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும் கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேற்பால் ஒருவனும் அவன்கட் படுமே” என்று சொன்னதன் மூலம் கடைக் கழகத்தின் இறுதிக காலத்தில் பிராமண, சத்திரிய, வைசிக, சூத்திரர் என்ற மனுசாத்திர நால்வருண வேறுபாடு தமிழகத்தில்; புகுந்து விட்டதைக் காட்டுகிறது. மனுசாத்திரம் ஓதல், ஓதுவித்தல் பிராமணர்களுக்குரிய தொழிலாக வரையறை செய்து ஏனையோர்க்கு ஓதல், ஓதுவித்தலை மறுத்துவிடுகிறது.

ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் பாடிய பாடலை அதிவீரராம பாண்டியர் தாம் பாடிய வெற்றி வேற்கை என்ற நூலில் அப்படியே எடுத்தாண்டுள்ளார். இவர் பாண்டிய நாட்டு கொற்கையை 450 ஆண்டுகளுக்கு முன் ஆண்ட சிற்றரசனன் ஆவார். வரதுங்கபாண்டியர்க்கு இளவல். நைடதம், கூர்ம புராணம், இலிங்க புராணம், காசி காண்டம், வாயு சங்கிதை, திருக்கருவை அந்தாதி முதலிய பிற நூற்களையும் இயற்றியுள்ளார்.

“கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே
கல்லா ஒருவன் குணநலம் பேசுதல்
நெல்லினுள் பிறந்த பதரா கும்மே.
நாற்பால் குலத்தின் மேற்பா லொருவன்
கற்றில னாயின் கீழிருப் பவனே
எக்குடிப் பிறப்பினும் யாவரே யாயினும்
அக்குடியில் கற்றோரை மேல்வருக என்பர்
அற்வுடை ஒருவனை அரசனும் விரும்பும்.

பிச்சை புகினும் கற்கை நன்றே என்றால் பிச்சை எடுத்து அந்தப் பணத்தில் படிக்க வேண்டும் என்பது இதன் பொருளல்ல. கல்வி கற்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தவே இப்படிச் சொல்லியுள்ளார். கல்வியை நல்லாசிரியரிடம் சென்று கெஞ்சிக் கூத்தாடியாவது படிக்க வேண்டும் என்பதே இதன் உண்மையான பொருள்.

ஆண்பெண் இருபாலரும் கல்வி கற்க வேண்டியதன் அவசியத்தை நாலடி நானூறு விளக்குகிறது.

குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்ச ளழகும் அழகல்ல – நெஞ்சகத்து
நல்லம்யா மென்னும் நடுவு நிலைமையாற்
கல்வி யழகே யழகு.

பூதஞ்சேந்தனார் என்பவர் இயற்றிய நூல் இனியவை நாற்பது. இதன் பெயரினால் குறிக்கப்படுவதுபோல இது நாற்பது வெண்பாக்களினால் ஆனது. பண்டைக்காலத் தமிழ் நூல் தொகுப்புக்களில் ஒன்றான பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் இதுவும் ஒன்று. உலகில் நல்ல அல்லது இனிமையான விடயங்களை எடுத்துக்கூறுவது மூலம் மக்களுக்கு நீதி புகட்டுவதே இந்நூலின் நோக்கம். ஒவ்வொரு பாடலும் மூன்று நல்ல கருத்துக்களை எடுத்துக் கூறுகின்றது.

சுற்றியிருப்பவர்களுக்குக் கல்வி கற்பித்தல் மிகவும் நல்லது, கற்றறிந்த பெரியோர்களைத் துணை கொண்டு வாழ்தலும் மிக நன்று, சிறிய அளவிலாயினும் தேவைப்படுபவர்களுக்குக் கேட்காமலேயே கொடுப்பது எப்பொழுதுமே நல்லது என்னும் பொருள்படும் பாடல் இது.

சுற்றார்முன் கல்வி உரைத்தல் மிகஇனிதே
மிக்காரைச் சேர்தல் மிகமாண முன்இனிதே
எள்துணை யானும் இரவாது தான்ஈதல்
எத்துணையும் ஆற்ற இனிது.

பிச்சைபுக் காயினுங் கற்றல் மிகஇனிதே
நற்சலையில் கைக்கொடுத்தல் சாலவும் முன்னினிதே
முத்தேர் முறுவலார் சொல்லினி தாங்கினிதே
தெற்றவும் மேலாயார்ச் சேர்வு.

இனியவை நாற்பது போல இன்னா நாற்பது பதிணெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று. இதனை இயற்றியவர் கபில தேவர். ஒவ்வொரு பாடலிலும் நான்கு கருத்துக்களைக் கொண்டு ஒவ்வொன்றையும் ‘இன்னா’ என எடுத்துக் கூறுதலின் ‘இன்னா நாற்பது” எனப் பெயர் பெற்றது.

குலத்துப் பிறந்தவன் கல்லாமை இன்னா
நிலத்து இட்ட நல் வித்து நாறாமை இன்னா
நலத்தகையார் நாணாமை இன்னா ஆங்கு இன்னா,
கலத்தல் குலம் இல் வழி.

நீதிநெறி விளக்கம் என்ற நூலை இயற்றியவர் குமரகுருபரர். இதில் கல்வியின் பயனை ஒரு பாடலில் கூறியிருக்கிறார்.

அறம்பொருள் இன்பம் வீடும் பயக்கும்
புறங்கடை நல்லிசையும் நாட்டும் – உறுங்கலொன்று
உற்றுழியும் கைகொடுக்கும் கல்வியின் ஊங்கில்லை
சிற்றுயிர்க் குற்ற துணை.

கற்றலின் மூலம் அறிவின் திறமுயர்ந்து அதனால் விளையும் பயன்பாட்டுநிலையை குறிப்பதாகவே எண்ண வேண்டியிருக்கிறது. எனவே அறிவின் ஊற்று நூல்களில் இருக்கிறது என்பது சொல்லாமலே விளங்கும்.

கலிவியின் அருமை பெருமை பற்றி ஏனைய புலவர்களைவிட திருவள்ளுவர் மின அழுத்தவமாக அறிவுறுத்தியிருக்கிறார். வள்ளுவர் எந்தக் பள்ளியில், கல்லூரியில், பல்கலைக் கழகத்தில் படித்தார் என்பது தெரியவில்லை.

கி.பி. 470ஆம் ஆண்டு, தமிழகம் வந்த சீனப் பயணியான யுவான் சுவாங், தன் பயணக் குறிப்பில், சென்னையில் உள்ள திருவொற்றியூர், காஞ்சிபுரம், புதுவைக்கு அருகில் உள்ள பாகூர் ஆகிய மூன்று ஊர்களில் உள்ள வேதப் பாடசாலைகளில் மட்டுமே ஏறத்தாழ 5000 பிராமண மாணவர்கள், சமஸ்கிருதம் படித்துக் கொண்டிருந்த செய்தியை எழுதி வைத்திருக்கிறார்.

பிற்காலப் பாண்டியர், சோழர் ஆட்சியிலும் இந்நிலை தொடர்ந்தது. குறிப்பாக, இராசராசசோழன் காலத்தில், சமஸ்கிருதம் அறிந்தவர்கள் மட்டுமே அரசனின் மதிப்பைப் பெற்றனர். கல்வி என்பது ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கு மட்டுமே உரிய உரிமையாக ஆக்கப்பட்டது.

தமிழ் அரசர்கள் யாராவது பள்ளிகள் கட்டினார்கள் என்றோ அங்கே தமிழ்ப் புலவர்கள் தமிழ் மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தார்கள் என்றோ எந்த வரலாற்றுக் குறிப்பு மருந்துக்கும் இல்லை. பின் எப்படி நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் படைத்த இளங்கோ, வான்புகழ் வள்ளுவர், கல்வியில் பெரிய கம்பன் தோன்றினார்கள் என்பது வியப்பாக இருக்கிறது! (வளரும்)


என்றுமுள்ள செந்தமிழ்

சாதி, மத, பேதமற்ற சங்க காலம்

(16)
நக்கீரன்

தமிழர் வரலாற்றில் சங்க காலமே அவர்களது பொற்காலம் என ஆணித்தரமாகச் சொல்லி வருகிறோம். அது பெறும் புகழ்ச்சி அல்ல. காரணம் சங்க காலத்தில் தமிழ்மக்களை தமிழ்மன்னர்களே ஆண்டார்கள். சாதி பேதம் இருக்கவில்லை. மத வேற்றுமை பாராட்டப்படவில்லை. பால் அடிப்படையிலும் வேற்றுமை இருக்கவில்லை.

கல்வி ஆண், பெண் இருபாலாருக்கும் வாய்த்திருந்தன. பல்வேறு துறையில் புலமை வாய்ந்த புலவர்கள் இருந்தார்கள். இதனை சங்க காலப் புலவர்களின் வரலாற்றில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

சங்கப் பாடல்கள் உயர்ந்த இலக்கியத் தகமை வாய்ந்தவை அவை அன்றைய தமிழ்மக்களின் உயர்ந்த கல்வி அறிவை, பண்பாட்டை விளக்கியன. அவற்றைப் பாடியவர்கள் வரிசையில் அரசாளும் மன்னர்கள் இருந்தார்கள். அந்தணரும் வணிகரும் வேளாண்மக்களும், கணித விற்பன்களும் இருந்தார்கள்.

பிற்காலத்தில் சமூகப் படிக்கட்டில் மிகவும் கீழே தள்ளப்பட்ட குயவர் குலத்தில் புலவர்கள் அதுவும் பெண்பாற் புலவர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதைப் பார்க்கும்போது மிகவும் வியப்பாக இருக்கிறது.

சங்கப் புலவர்களில் பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன், காவல்காரன் காலம் தாழ்த்திக் கொடுத்த நீரை மானம் காரணமாகக் குடியாது வடக்கிருந்து உயிர் நீத்த சேரமான் கணைக்கால் இரும்பொறை, ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன், பாண்டியன், பாண்டியன் நெடுஞ்செழியன், சோழன் நற்கிள்ளி, சோழன் குளமுற்றத்துக்துஞ்சிய கிள்ளிவளவன், பெருங்கடுங்கோ, பாண்டியன் அறிவுடை நம்பி, இளம்பெருவழுதி ஆதிமந்தியார் பெருங்கோப்பெண்டு, பாரிமகளிர் போன்றோர் அரச குலத்தவர் ஆவர்.

உறையூர் ஏணிச்சேரி முடமோசியார், கடியலூர் உருத்திரங்க் கண்ணனார், கபிலர் போன்றோர் அந்தணர்கள் ஆவர்.

மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார், மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் போன்றோர் வணிகப் பெருமக்கள் ஆவர்.

அரிசில்கிழார், ஆவூர்கிழார் போன்றோர் வேளாண் மக்களாவர்.

அவ்வையார் மற்றும் இளவெயினி குறவர் குடியில் பிறந்தவர். வெண்ணிக்குயத்தியார் குயவர் குடியில் பிறந்தவர்.

எட்டுத்தொகைப் பாடல்களின் மொத்த எண்ணிக்கை 2426 ஆகும். அவற்றைப் பாடிய புலவர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 473 ஆகும். இவர்களில் 50 க்கும் மேற்பட்டவர்கள் பெண்பால் புலவர்கள் ஆவர். பத்துப்பாட்டின் அடி அளவு 3552 ஆகும். ஒன்பது புலவர்கள் அவற்றைப் பாடியுள்ளார்கள். சில புலவர்களது இயற்பெயர் தெரியவில்லை. அவர்கள், அவர்கள் பாடிய பாடலின் சொல்லாட்சியைக் கொண்டு சுட்டப்படுகிறார்கள்.

எடுத்துக்காட்டாகக் குறுந்தொகை (40) பாடலைப் பாடிய புலவர் பெயர் தெரியாததால் குறுந்தொகையைத் தொகுத்தவர்கள் அந்தப் பாடலில் காணப்படும் சொல்லாட்சியைக் கொண்டு செம்புலப்பெயநீரார் என அழைக்கப்பட்டார். அந்தப் பொருள் பொதிந்த அழகான பாடல் இது.

யாயும் ஞாயும் யாரோ கியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்!
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே.

எட்டுத்தொகை நூல்களான அகநானூறு, புறநானூறுப் பாடல்களை 210 புலவர்கள் பாடியுள்ளார்கள்.

குறுந்தொகை பாடிய புலவர்கள் 203;, நற்றிணை பாடிய புலவர்கள் 158, புறநானூறு பாடிய புலவர்கள் 157 ஆவர்.

பத்துப்பாட்டுப் பாடல்களை பாடிய புலவர்களின் எண்ணிக்கை ஒன்பது ஆகும். திருமுருகாற்றுப்படை மற்றும் நெடுநல்வாடை இரண்டையும் நக்கீரரே பாடியிருக்கிறார். பொருநராற்றுப்படை பாடியவர் முடத்தாமக் கண்ணியார் என்ற பெண் புலவர். பாடல்களின் அடியளவு 3548 ஆகும். வரியளவு 8552 ஆகும்.
மலையில் வாழ்ந்த குறமகள் இளவெயினியும் மட்பாண்டம் செய்யும் குயமகள் வெண்ணிக்குயத்தியும் பாண்டியன் தமிழ்க் கழகத்தில் புறநானூறு பாடிய புலவர்களாக வீற்றிருக்க முடிந்தது என்றால் அது கல்லூரிக் கல்வியாலா அல்லது திண்ணைப் பள்ளிக் கூட மேம்போக்கு எழுத்தறிவாலா என்று எண்ண வேண்டியுள்ளது. முதலில் தாம் பிறந்த ஊரில் உள்ள புலவரிடம் கல்வி கற்று பின்னர் மதுரை சென்று அங்குள்ள சிறந்த புலவர்களில் ஒருவரிடம் பாடம் கற்றார்கள் எனத் தெரிகிறது.

தொல்காப்பியம் தலைவன் தலைவியைப் பிரிதற்கான காரணங்களைக் கூறுகிறது.

கல்வி கற்பதற்காகப் பிரிதல், தூது செல்வதற்காகப் பிரிதல், பகையின் காரணமாகப் பிரிதல், பொருள் ஈட்டுவதற்காகப் பிரிதல் என்பதே நால்வகைப் பிரிவாகும்.

“ஓதல், பகையே, தூது இவை பிரிவே”

(தொல்காப்பியம் ஃ பொருளதிகாரம் – பிரிவு வகை – எண் 973)

“கல்வி கற்பதற்காகப் பிரிதல், பகை காரணமாகப் பிரிதல், தூது செல்லுதற்காகப் பிரிதல் ஆகிய இவை பிரிவின் வகைகளாகும்”

“பொருள் வயின் பிரிதலும் அவர்வயின் உரித்தே”

(தொல்காப்பியம் ஃ பொருளதிகாரம் – பிரிவு வகை – எண் 981)

“பொருள் ஈட்டுவதற்காகப் பிரியும் பிரிவு எல்லா மக்களுக்கும் உரியது”
நினைத்துப் பார்க்கவேண்டும். பாரத திராமாயணக் காலங்களில் கல்வியறிவு பொது மக்களுக்குத் தடை செய்யப் பட்டது.
பெண்பால் புலவர்களின் பெயர்கள் சில கீழே கொடுககப்பட்டுள்ளன.

1. அள்ளூர் நன்முல்லை
2. அவ்வையார்
3. நல்வெள்ளியார்
4. போந்தை பசலையார்
5. வெள்ளிவீதியார்
6. காக்கைபாடினியார் நச்சௌ;ளையார்
7. ஓக்கூர் மாசாத்தியார்
8. குற மகள் இளவெயினியார்
9. காவற்பெண்டு
10. பூதபாண்டியன் மனைவி கோப்பெரும்பெண்டு
11 தாயங்க்ண்ணியார்
12 பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார்
13. நெட்டிமையார்
14. வெண்ணிக்குயத்தியார்
15. வெறிபாடிய காமக்கண்ணியார்
16. மாறோக்கத்து நப்பசலையார்
17. மாற்பித்தியார்
18 கழார் கீரன் எயிற்றியார்
19. குமுழி ஞாழல் நப்பசைலயார்
20 .பேயனார்
21. முள்ளியூர் பூதியார்
22. அச்சியத்தை மகள் நாகையார்
23. பாரிமகளிர்
24. குட புலவியனார்
25. பூங்கண் உத்திரையார்
26, பேரெயின் முறுவலார்
27. கள்ளில் ஆத்திரையனார்
28. கூகைக்கோழியார்
29, பொன்முடியார்
30, பொத்தியார்
பிற்காலத்தில் சங்க காலத்தில் வழக்கத்தில் இருந்த தூய தமிழ்ப்பெயர்கள் சமற்கிருதப்பட்டன. இப்போது என்ன மொழி என்றே புரியாதவாறு பெற்றோர்கள் தங்கள் செல்லப் பிள்ளைகளுக்கு ஆசா, கோசா, யுரேனியா, டில்ஷன், டில்ஷி, கஜானி, கரிசன், அச்சே, அனுஷன், அனுஷி, விதுஷன், விதுஷி, நிரோஜன், நிரோஜி எனத் தாறுமாறாகப் பெயர் சூட்டுகிறார்கள். தமிழ்மொழிப் பற்றின்மையும் தமிழின உணர்வின்மையுமே இந்த ஜ,ஷ போன்ற கிரந்த எழுத்துக்கள் மீதான மோகமாகும். (வளரும்)


என்றுமுள்ள செந்தமிழ்

ஒரு சின்ன தமிழ்ப் பள்ளியேனும் சோழ பாண்டியர்கள் கட்டவில்லை

(17)

நக்கீரன்
கி.பி. 470 ஆம் ஆண்டு, தமிழகம் வந்த சீனப் பயணியான யுவான் சுவாங் தன் பயணக் குறிப்பில் சென்னையில் உள்ள திருவொற்றியூர், காஞ்சிபுரம், புதுவைக்கு அருகில் உள்ள பாகூர் ஆகிய மூன்று ஊர்களில் உள்ள வேதப் பாடசாலைகளில் மட்டுமே ஏறத்தாழ 5000 பிராமண மாணவர்கள், சமற்கிருதம் படித்துக் கொண்டிருந்தார்கள்.
“பிற்காலப் பாண்டியர், சோழர் ஆட்சியிலும் இந்நிலை தொடர்ந்தது. குறிப்பாக, இராசராசசோழன் காலத்தில், சமஸ்கிருதம் அறிந்தவர்கள் மட்டுமே அரசனின் மதிப்பைப் பெற்றனர். கல்வி என்பது ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கு மட்டுமே உரிய உரிமையாக ஆக்கப்பட்டது. தமிழ் அரசர்கள் யாராவது பள்ளிகள் கட்டினார்கள் என்றோ அங்கே தமிழ்ப் புலவர்கள் தமிழ் மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தார்கள் என்றோ எந்த வரலாற்றுக் குறிப்பு மருந்துக்கும் இல்லை. பின் எப்படி நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் படைத்த இளங்கோ, வான்புகழ் வள்ளுவர், கல்வியில் பெரிய கம்பன் தோன்றினார்கள் என்பது வியப்பாக இருக்கிறது!” என்றும் குறிப்பிட்டிருந்தேன்.
மொழிக்கு சிறப்புக் கொடுக்கப்படாவிட்டால் அந்த மொழி பேசுவோருக்கும் மேன்மை இருக்காது. சோழர்களின் கல்வெட்டுக்களும் பட்டயங்களும் பல தமிழில் இருந்தாலும் அவர்களின் மெய்கீர்த்திகளில் சமற்கிருத ஆட்சியே மேலோங்கி நின்றது.

தமிழ்க் கல்வியைப் பொறுத்தளவில் சோழர் காலம் இருண்ட காலமாகவே கருதப்பட வேண்டும்.

சோழர் காலம் தமிழர் வரலாற்றில் ஒரு பொற்காலம் எனக் கருதப்பட்டாலும் தமிழ் உயர் கல்விகூடங்களில் ஊக்கிவிக்கப்படவில்லை. அதனால் கல்வியைப் பொறுத்தளவில் சோழர் காலம் இருண்ட காலமாகவே கருதப்பட வேண்டும். பல்லவர் காலத்தில் காணப்பட்ட சமற்கிருத மேலாண்மை சோழர் காலத்தில் மேலும் வலுவடைந்தது.

சங்க காலத்திலும் சங்கம் மருவிய காலத்திலும் தமிழர்களுக்கு இருந்த கல்வி வாய்ப்பு, கல்வி அறிவு அடுத்து வந்த களப்பி;ரர், பல்லவர், சோழர் காலத்தில் தொடரவில்லை. இக் காலத்தில் சமண முனிவர்கள் தாங்கள் தங்கியிருந்த இடங்களில் பள்ளிகள் நடத்தினார்கள். ஆனால் அது பெரும்பாலும் சமண சமயம் பற்றிய கல்வியாகவே இருந்தது.

கிபி 3 ஆம் நூற்றாண்டு தொடக்கம் வடவரின் மேலாண்மை தமிழகத்தில் பெருகிவிட்டது. இதனால் தமிழ்மொழிக் கல்வி பின் தள்ளப்பட்டது. சமற்கிருத மொழிக் கல்வி மேலோங்கியது. சமற்கிருத கல்வி மேம்பாட்டுக்கு அரசர்கள் பெரியளவில் மானியங்கள் அளித்தார்கள். சேர, கோழ, பாண்டியர்களது வரலாற்றைப் படிப்போர் இந்த உண்மையை உணர்ந்து கொள்ளலாம். கதம்ப அரசர் மரபைத் தோற்றுவித்த மயூரசன் (கிபி 348 – 370) காஞ்சியில் புகழ்பெற்றிருந்த இருந்த வடமொழிக் கல்லூரியில் கல்வி கற்றான். இதே கல்லூரியில் பேராசிரியராக இருந்த தருமபாலர் என்ற பவுத்த தேரரே பின்னர் புகழ்பெற்ற நாலந்தா பல்கலைக் கழகத்தின் பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.

இக்காலத்தில் காஞ்சி கல்வியில் கரையிலா காஞ்சி என வருணிக்கப்பட்டது.

நிருபதுங்கவருமன் ஆட்சிக்காலத்தில் (கிபி 680) பாகூர் என்ற ஊரில் மிகப் பெரிய சமற்கிருதக் கல்லூரி ஒன்று இருந்தது. இங்கு சமற்கிருத வேதவிற்பன்னர்களால் பிராமணப் பிள்ளைகளுக்கு பதினெட்டு வகை வித்தைகள் கற்றுக் கொடுக்கப்பட்டது.

சோழர் காலத்தில் எண்ணாயிரம் என்ற ஊர் பிராமணர்க்கு இறையிலி நிலமாக வழங்கப்பட்டது. அங்கு உருவாக்கப்பட்ட வடமொழிக் கல்லூரியில் 340 மாணவர்கள் கல்வி கற்றனர். 75 மாணாக்கர்கள் இருக்கு வேதமும் 75 மாணவர்கள் யசுர் வேதமும் 20 மாணாக்கர் ரூபாவதார இலக்கணமும் 20 மாணாக்கர் அதர்வண வேதமும் 20 மூத்த மாணாக்கர் சாந்தோக சாமனும் 20 மாணாக்கர் தலவகார சாமனும் பயின்றனர். இவர்களது ஆசிரியர்களாக வேதம் கற்ற 14 பிராமணர் அமர்த்தப்பட்டு இருந்தனர்.

மாணாக்கர்களுக்கு கல்வி, உணவு, உறைவிடம், உடை ஆகியன இலவசமாக வழங்கப்பட்டன. ஆசிரியர்களுக்கு சோழ அரசு ஊதியம் வழங்கியது. இந்தக் கல்லூரிக்கு 300 ஏக்கர் நிலம் நிவந்தமாக விடப்பட்டது.

திருவொற்றியூரில் முதல் இராசேந்திர சோழன் ஆட்சிக் காலத்தில் 340 மாணாக்கர் சமற்கிருதம் கற்க ஒரு கல்லூரியும் 190 மாணாக்கர் பயில ஒரு கல்லூரியும் வியாகரணதான மண்டபம் என்னும் பாணினீய இலக்கணக் கல்லூரியும் அரச மானியத்தில் நடத்தப்பட்டன.

இவ்வாறே வேப்பத்தூரிலும் திருமுக்கூடலிலும் திரிபுவனியிலும் தஞ்சையிலும் சமற்கிருதக் கல்லூரிகள் நிறுவப்பட்டன.

முன்னர் குறிப்பிட்டவாறு தமிழ்மொழி கற்பிக்க ஒரு சிறிய பள்ளியேனும் இருந்ததாகவோ அதற்கு சமற்கிருத கல்லூரிக்குக் கொடுக்கப்பட்டது போல் மானியம் எதுவும் கொடுக்கப்பட்டதாகவோ கல்வெட்டுச் சான்று ஒன்றேனும் இல்லை.

தமிழ்மொழிக் கல்லூரி தமிழ் ஆசிரியர்களது திண்ணையோடு நின்றுவிட்டது. அங்கு புராணங்கள,; நிகண்டு, கணக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்டது. வசதிபடைத்த மாணவர்கள் அயலூரில் உள்ள புலவரிடம் குருகுல முறையில் கல்வி கற்றார்கள்.

சோழருக்குப் பின் பாண்டியரும் பாண்டியருக்குப் பின்னர் நாயக்கர்களும் தமிழ்நாட்டைப் பிடித்து ஆண்டார்கள். அவர்கள் ஆட்சிக் காலத்திலும் தமிழ்மொழிக் கல்வி பயிற்றுவிக்கப்படவில்லை. நாயக்கர்கள் தெலுங்கர்களாக இருந்தது இந்த ஆர்வமின்மைக்கு முக்கிய காரணமாகும்.

மதராஸ் மாகாணத்தில் 1901 இல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் ஆண்களில் எழுதப்படிக்கத் தெரிந்தவர் விழுக்காடு 1.5 ஆகவும பெண்கள் அதில் பாதியாகவும் காணப்பட்டனர்.

அய்புன் பட்தூதா தமிழ்நாட்டுக்கு வருகை (கிபி 1333-45) தந்தபோது ஊர்ப் பள்ளிக்கூடங்களில் வெள்ளை மணல் பரப்பப்பட்டிருந்ததாகவும் அதில் மாணவர்கள் எழுதிப் பழகினார்கள் என்றும் குறிப்பிடுகிறார். தான் சென்ற ஊரில் 13 பள்ளிகளில் மாணாக்கர்களுக்கும் 15 பள்ளிகளில் மாணவிகளுக்கும் கல்வி பயின்றதாகக் குறிப்பிடுகிறார்.

அய்புன் பட்தூதா மொறக்கோ நாட்டில் பிறந்தவர். இருபத்தொரு அகவையில் தனது பிறந்த ஊரை விட்டுப் புறப்பட்ட இவர் தனது வாழ்நாளில் கிழக்கு ஆபிரிக்கா, பைசன்தியம் (Byzantium ) இராக், தென் உருசியா, இந்தியா, இலங்கை, சீனா என பலநாடுகளுக்குப் பயணம் செய்தார். வடக்கே வொல்கா தொடங்கி கிழக்கே சீனா, தெற்கே தென் தன்சானியா வரை 120,000 கிமீ தொலைவு பயணம் செய்தார். இந்தியாவில் எட்டு ஆண்டும் சீனாவில் 29 ஆண்டும் செலவிட்டார். இவர் யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட மார்த்தாண்ட சிங்கையாரியச் சக்கரவர்த்தியை புத்தளத்தில் சந்தித்து அவனது விருந்தாளியாக இருந்தார். சிவனொளிபாத மலையைச் சென்று தரிசிக்க மார்த்தாண்டன் அவரைப் பல்லக்கில் அனுப்பி வைத்தான்.

சோழர் காலக் கல்வெட்டுக்களில் பல இலக்கியங்கள் குறிப்பிடப் பட்டுள்ளனவாயினும் அவற்றுட் பல தற்காலம் வரை நிலைத்திருக்கவில்லை. இந்து சமய மறுமலர்ச்சியும் ஏராளமான கோயில்களின் உருவாக்கமும் இந்து சமய நூல்களைத் தொகுப்பதற்கும் புதியவற்றை ஆக்குவதற்கும் உந்துதலாக இருந்தன. தேவாரம் முதலிய நூல்கள் திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டன. சமண, பவுத்த நூல்களும் இயற்றப்பட்டன ஆயினும் அவை சோழருக்கு முற்பட்ட காலத்தை விடக் குறைவாகவே இருந்தன. திருத்தக்க தேவர் என்பவரால் இயற்றப்பட்ட சீவகசிந்தாமணியும் தோலமொழித் தேவரால் இயற்றப்பட்ட சூளாமணியும் இந்து சமயம் சாராத முக்கியமான சோழர்கால இலக்கியங்களாகும்.

மூன்றாம்குலோத்துங்க சோழன் காலத்தில் வாழ்ந்த கம்பர் தமிழில் மிகச் சிறந்த இலக்கியமாகக் கருதப்படும் கம்பராமாயணத்தை எழுதினார். வால்மீகியின் இராமாயணத்தைத் தழுவி இது எழுதப்பட்டதாக இருந்தாலும் கம்பர் இதைத் தமிழ் நாட்டுப் பண்பாட்டுக்கு ஏற்ப ஆக்கியுள்ளார். ஜெயங்கொண்டாரின் கலிங்கத்துப்பரணியும் இன்னொரு சிறந்த இலக்கியம் ஆகும். முதலாம் குலோத்துங்க சோழனுடைய கலிங்கத்துப் போரை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்டது இந்த நூல். இதே அரசனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு ஒட்டக்கூத்தர் என்னும் புலவர் குலோத்துங்க சோழன் உலா என்னும் நூலை இயற்றியுள்ளார். (வளரும்)


என்றுமுள்ள செந்தமிழ்

இரண்டாம் பாண்டியப் பேரரசின் எழுச்சி

(18)

சோழப் பேரரசு மூன்றாம் இராசேந்திர சோழன் (1246 – 1279) ஆட்சிக் காலத்தில் முடிவுற்றது. பாண்டியரின் எழுச்சிக்கும் தந்திரத்துக்கும் பலியாகி சோழப் பேரரசு வீழ்ச்சியுள்ளது.

சோழப் பேரரசு தஞ்சையில் நிறுவப்பட்டதும் வடக்கே பல்லவரும் தெற்கே பாண்டியரும் நிலைகுலைந்து போயினர். கிபி 925 முதல் சோழரே பாண்டிய நாட்டை ஆண்டுவந்தனர். கிபி 12 ஆம் நூற்றாண்டில் பாண்டிநாடு பெரும் உள்நாட்டுப் போருக்கு இலக்காகியது. இருந்தும் இரண்டாம் பாண்டிய பேரரசு வலிமைகொண்டு ஆட்சி புரியலாயிற்று.

விக்கிரம பாண்டியனின் மகனான சடையவர்மன் குலசேகர பாண்டியன் (1190 – 1216) மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய நிலப்பரப்பை ஆண்டு வந்தான். இவனது மெய்கீர்த்தி ‘பூவின் கிழத்தி’ என்று தொடங்கும். இந்த மெய்கீர்த்திகள் அவனது புகழைக் கூறுகின்றனவே அன்றி அவன் வரலாற்றை விளக்குவதாக இல்லை. இவன் காலத்தில் பாண்டிய நாட்டில் உள்நாட்டுக் கலகங்கள் வெடித்தன.

முதலாம் சடையவர்மன் குலசேகரபாண்டியன் பாண்டி நாட்டை ஆண்டு கொண்டிருந்தபோது சோழநாட்டை மூன்றாம் குலோத்துங்கன் ஆண்டு வந்தான். இவன் கருவூரைக் கைப்பற்றி அங்குச் சோழ கேரளன் என்ற பெயருடன் வீராபிடேகம் சூட்டிக் கொண்டான். அவ்வாறே மதுரை மாநகரில் வீராபிடேகம் செய்துகொள்ள வேண்டும் என்று விரும்பினான். மூன்றாம் குலோத்துங்கனே பாண்டி நாட்டில் நிலவிய குழப்பத்தை ஒழித்து அமைதியை நிலைநாட்டி முதலாம் சடையவர்மன் குலசேகர பாண்டியனது தந்தையான விக்கிரம பாண்டியனுக்கு நாடும் அரசும் அளித்தவன் ஆவான். ஆனால் அதனை மறந்த சடையவர்மன் குலசேகர பாண்டியன் மூன்றாம் குலோத்துங்கன் மதுரையில் வீராபிடேகம் செய்துகொள்வதை விரும்பவில்லை. இதனால் இரு அரசுகளுக்கும் இடையில் போர் மூண்டது. போரில் பாண்டியர் படை பெரும் அழிவைச் சந்தித்ததால் குலசேகர பாண்டியன் புறங்காட்டி மதுரையைவிட்டு சுற்றத்தாருடன் ஓடி ஒளிந்து கொண்டான்.

மூன்றாம் குலோத்துங்க சோழன் படைகள் மதுரையில் புகுந்து அரண்மனையை இடித்தும் மண்டபங்களை அழித்தும் பெரும் நாசத்தை ஏற்படுத்தின. பின்னர் அவன் நினைத்தவாறே மதுரை நகரில் ‘சோழபாண்டியன்’ ‘திரிபுவன வீரதேவன்’ என்னும் பட்டங்களுடன் வீராபிடேகம் செய்து கொண்டான். இது நடந்தது 1202 இல் ஆக இருக்கலாம். பின்னர் பாண்டிய அரசை மீண்டும் சடையவர்மன் குலசேகரபாண்டியனுக்கே கொடுத்துவிட்டான் என்று தெரிகிறது. இவன் தனது ஆட்சிக் காலத்தில் சில ஊர்களை ஒன்றாகச் சேர்த்து இராசகம்பீரச் சதுர்வேதி மங்கலம் என்று பெயரிட்டு 1030 பார்ப்பனர்களுக்குப் பிரமதேயமாகக் கொடுத்தான்.

சடையவர்மன் குலசேகரனை அடுத்து முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (1216 – 1238) ஆட்சிக்கு வந்தான். இவனது காலத்தில் சோழநாட்டை ஆண்டவன் மூன்றாம் குலோத்துங்கனின் மகன் மூன்றாம் இராச இராச சோழன் ஆவான்.

முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் சோழர் ஆட்சிக்கு முடிவு கட்ட எண்ணினான். சோழநாட்டின் மீது படை எடுத்து வெற்றி கண்டான். சோழ நாட்டின் முக்கிய நகரங்களான தஞ்சை, உறந்தை போன்றவற்றை பாண்;டியப் படை தீ வைத்துக் கொளுத்தியது. இந்த நகரங்களில் உள்ள அரண்மனைகள், கோபுரங்கள் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன. நீர்நிலைகளும் விளைநிலங்களும் அழிக்கப்பட்டன. சங்க காலத்தில் சோழன் கரிகாலன் தன்மேல் கடியலூர் உருத்த்திரக்கண்ணனார் பாடிய பட்டினப் பாலை என்று நூலுக்குப் பரிசாக வழங்கிய பதினாறுகால் மண்டபம் ஒன்றுதான் பாண்டியப் படைகளிடம் இருந்து தப்பித்தது. இதன் மூலம் சோழமன்னன் மூன்றாம் குலோதுங்கன் படையெடுத்து வந்து தனது முன்னோர்களது மதுரை நகரை அழித்ததற்கு முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் பழிக்குப் பழி வாங்கிக் கொண்டான். .

இவனது மெய்கீர்த்திகள் ‘பூமருவிய திருமடந்தையும் பூமடந்தையும் புயத்திருப்ப’ எனத் தொடங்குகிறது. அது இனிய செந்தமிழ் நடையில் அமைந்த நீண்ட மெய்கீர்த்தியாகும்.

பாண்டிய படைகளுக்கு அஞ்சி ஓடி மறைந்திருந்த இராச இராசன் தன் மனைவியுடன் சுந்தர பாண்டியனை வணங்கி தனது மகளை அவனுக்கு மணம் முடித்து வைத்தான். இதனை அடுத்து சுந்தர பாண்டியன் சோழப் பேரரசை மீண்டும் இராச இராசனுக்குக் கொடுத்தான்.

சில ஆண்டுகள் கழித்துப் மூன்றாம் இராச இராசராசன் பாண்டியனுக்குக் கொடுக்க வேண்டிய திறையை கொடுக்க மறுத்தான். எனவே சுந்தரபாண்டியன் மீண்டும் (1231) சோழநாட்டின் மீது படையெடுத்து இராச இராசனைத் தோற்கடித்து வடபுலம் நோக்கி விரட்டிவிட்டான். தோல்வி அடைந்த சோழமன்னன் கோசள நாட்டின் மன்னன் வீரநரசிம்மனின் உதவியை நாடினான். வீரநரசிம்மன் கோசள நாட்டிலிருந்து பெரிய படையுடன் வந்து பாண்டியனைத் தோற்கடித்;து சோழநாட்டின் இழந்த பகுதிகளையும் மீட்டு இராச இராசனுக்கு அளித்தான்.

இந்த செய்திகளை முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் வெட்டிய கல்வெட்டுக்கள் ‘சோணாடு கொண்டருளிய சுந்தரபாண்டியதேவர்’ எனவும் ‘சோணாடு வழங்கியருளிய சுந்தரபாண்டியதேவர்’ எனவும் குறித்துள்ளான்.

சுந்தரபாண்டியன் பற்றி எழுதிவைக்கப்பட்ட மெய்கீர்த்தி சோழ நகர்கள் அழிக்கப்பட்டதை விரித்துக் கூறுகிறது.

பனிமலர்த் தாமரை திசைமுகன் படைத்த
மனுநெறி தழைப்ப மணிமுடி சூடிப்
பொன்னி சூழ் நாட்டிற் கயலாணை கைவளர
வெஞ்சின விவுளியும் வேழமும் பரப்பித்
தஞ்சையும் உறந்தையும் செந்தழல் கொளுத்திக்
காவியு நீலமும் நின்று கவினிழப்ப
வாவியு மாறு மணிநீர் நலனழித்துக்
கூடமு மாதிலுங் கோபரமும் மாடரங்கும்
மாடமு மாளிகையும் மண்டபமும் பலவிடித்துத்
தொழுதுவந் தடையா நிருபர்தந் தோகையர்
அழுத கண்ணீராறு பரப்பிக்
கழுதைகொண் டுழுது கவடி வித்திச்
செம்பியனைச் சினமிரியப் பொருதுசுரம் புகவோட்டிப்
பைம் பொன் முடிபறித்துப் பாணருக்குக் கொடுத்தருளிய
பாடருஞ் சிறப்பிற் பகுதி வான்றோய்
ஆடகப் புரிசை ஆயிரத் தளியிற்
சோழ வளவன் அபிஷேக மண்டபத்து
வீராபி ஷேகம் செய்து புகழ் விரித்து
நாளும் பரராசர் நாமத் …………………………………..
…………………………………………….………………….

முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனை அடுத்து இரண்டாம மாறவர்மன் சுந்தரபாண்டியன் (1238 – 1251) ஆட்சிக்கு வந்தான். இவனது ஆட்சிக் காலத்தில் மூன்றாம் இராசேந்திரன் மதுரை மீது படையெடுத்து பாண்டியனை திறை செலுத்துமாறு செய்தான்.

அடுத்து முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் (1268 – 1271) ஆட்சிக் கட்டில் ஏறினான். சம காலத்தில் சடையவர்மன் வீரபாண்டியன் (1253 – 1274) முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியனோடு சேர்ந்து பாண்டி நாட்டை ஆட்சி செய்தான்.

முதலாம் சடையவர்மன் சுந்தர பாண்டியனது ஆட்சிக் காலத்தில் பாண்டியர் செல்வாக்கு பல திக்கிலும் பரந்து விரிந்தது. மூன்றாம் இராசேந்திர சோழனை போரில் வென்று சோழப் பேரரசை முடிவுறச் செய்தான். ஆந்திராவில் உள்ள நெல்லூர், கடம்பூர் மற்றும் மலைநாடு, கொங்குநாடு ஆகியவற்றை வெற்றி கொண்டான். அதனால் எம்மண்டலமும் வெற்றிகொண்டருளிய சுந்தரபாண்டியத் தேவர் எனச் சிறப்பிக்கப்படுகிறான். சேரனைத் தோற்கடித்ததால் ‘சேரவம்சநிர்மூலன்’ எனப் போற்றப்பட்டான். (வளரும்)



About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply