சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள் (1-15)

 

வைதீக சமயத்துக்கும் சாதிக்கும் எதிராகப் போர்க்கொடி தூக்கிய சித்தர்கள்

முன்னுரை

கடவுள் என்றொருவர் இருக்கிறாரா? இல்லையா? என்ற சொல்லாடல் மனிதன் நாகரிகம் அடைந்த காலத்தில் இருந்து கேட்கப்பட்டு வருகிறது. கடவுள் இருக்கிறார் என்று சொல்பவர்கள் பலர் இருப்பதால்தான் கடவுள் இல்லை என்று சிலர் எழுதவும் பேசவும் செய்தார்கள்.

சங்க காலத் தமிழர்களுக்கு நிறுவன சமயம் இருக்கவில்லை என்பது ஆய்வாளர்கள் ஏற்றுக் கொண்டுள்ள முடிபு. நிலத்தை அடிப்படையாகக் கொண்ட இயற்கை வழிபாடே மிகுந்திருந்தது. அதுவே நாளடைவில் இயற்கையை ஒட்டிய தெய்வங்களாக வளர்ச்சி பெற்றன!

இன்று தமிழில் கிடைக்கக் கூடிய மிகத் தொன்மையான நூல் தொல்காப்பியம்.
அது 2,500 ஆண்டுகளுக்கு முன்னர் காணப்பட்ட மிகப் பழமையான தமிழ்ச் சமுதாயத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறது. இதில் மாற்றுக் கருத்தே இல்லை!

தொல்காப்பியத்தில் சமயம் அல்லது மதம் என்ற சொல் இல்லை. எல்லாம் வல்ல, எல்லாம் தெரிந்த, எங்கும் நிறைந்த முழுமுதற் கடவுள் அல்லது பரம்பொருள் என்ற வரைவிலக்கணத்துக்கு அமைய ஒரு முழுமுதற் கடவுள் குறிப்பிடப்படவில்லை. கடவுள் என்ற சொல் மிக அருமையாகப் பயன்படுத்தும் இடங்களில் அது தேவர்களைக் குறிக்கவே கையாளப்பட்டுள்ளது.

எடுத்துக் காட்டாகச் சொல்ல வேண்டுமென்றால் பொருளதிகாரம், புறத்திணையியல் (27) –

“கொடிநிலை, கந்தழி, வள்ளி என்ற
வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும்
கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே.”

கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே என்பதன் பொருள் ஞாயிறு, திங்கள், தீ மூன்றையும் வாழ்த்துவதும் அமரர் வாழ்த்துப் பாடுவது போலவே பொருந்தி வரும் என்பதாகும்.

கொடிநிலை என்றால் கீழ்த்திசைக் கடவுள். கந்தளி – பற்றுக் கோடற்ற தெய்வம். வள்ளி – வள்ளல் தன்மை என உரை கூறுவாரும் உளர்.

“காமப் பகுதி கடவுளும் வரையார்
ஏனோர் பாங்கினும் என்மனார் புலவர்.” (தொல்.பொருள்-புறத்திணையியல் -சூத்திரம் 23)

“இன்பப் பகுதிகளைக் கடவுளிடமிருந்தும் நீக்கமாட்டார்கள். மக்களிடமிருந்தும் நீக்க மாட்டார்கள் என்று புலவர் கூறுவர்” என்பதே இதன் பொருள். அது கடவுள் மாட்டுக் கடவுட் பெண்டிர் நயப்பனவும் அவர் மாட்டு மானிடப் பெண்டிர் நயப்பனவும் கடவுள் மானிடப் பெண்டிரை நயப்பனவும் பிறவும் ஆம்” என்பது நச்சினார்க்கினியர் உரை.

தமிழரின் பண்டைய பண்பாடு இன்று தலைமாறிவிட்டது. பிற பண்பாட்டுப் படையெடுப்பினால் தமிழர் வாழ்க்கையில் ஆரியப் பண்பாடு பெருமளவும் ஆங்கிலப் பண்பாடு ஓரளவும் கலந்து விட்டன. சமணம், பவுத்தம் எப்படித் தமிழர்களுக்குப் புறச்சமயமோ அது போலவே இந்து அல்லது சைவ சமயம் தமிழர்களுக்குச் புறச்சமயமே.

நடுகல் வணக்கம் பற்றிய செய்திகளைத்; தொல்காப்பியர் தந்திருக்கிறார்! நடுகல் நட்ட இடத்தில் வழிபாடும் ஆட்டங்களும் நடைபெற்றதாக அறிகிறோம்! வேலன் வெறியாட்டம், குரவைக் கூத்து போன்ற ஆட்டங்கள் பற்றிய இலக்கியக் குறிப்புகளும் உள்ளன!
தொடக்கத்தில் ஆனிரை மீட்ட கரந்தை வீரனுக்கு மட்டுமே நடுகல் நிறுவும் மரபு தோன்றியிருத்தல் வேண்டும். பின்னர் வீரமரணம் அடைந்த மறவர் யாவர்க்கும் நடுகல் நிறுவும் வழக்கம் தோன்;;;;;;;றியது. காலப்போக்கில் போர்க்களத்தில் துஞ்சிய மன்னர்கள், வேளிர்கள், வள்ளல்கள் ஆகியோருக்கும் நடுகல் எழுப்பப்பட்டது.

கரந்தை என்றால் “மீட்கும்தொழில்” என்று அரும்பத உரையாசிரியர் கூறுகிறார்.

வெட்சிமலர் அணிந்த வெட்சி வீரர்கள் கவர்ந்த ஆனிரைகளை கரந்தைமலர் சூடிய கரந்தை வீரர்கள் மீட்டுச் செல்ல, அவர்களை மடக்கி அலறும்படி தாக்கி அவற்றை மீட்டுவருவர்.

பாம்பின் வாயில் நின்றும் திங்களை மீட்பது போன்று மறவர் கையிலிருந்தும் ஆனிரைகளை மீட்டிய வீரனுக்கு எழுப்பிய நடுகல் சிறப்பினை வடமோதங்கிழார் பாடியுள்ளார்.

நாகு முலையன்ன நறும்பூங் கரந்தை
விரகறி யாளர் மறைவிற் சூட்ட
நிரையிவண் தந்து நடுகல் லாகிய
வெண்வேல் விடலை ( புறம் 261)

நடுகல்லைத் தெய்வமாக மதித்துப் போற்றிய வீர வழிபாட்டினை சங்க இலக்கியங்கள் சிறப்பித்துக் கூறும். நடுகல்லைத் தவிர வேறு பரவுவதற்குரிய கடவுள் இல்லை என்ற மிகத் தொன்மையான வீரவணக்கத்தை மாங்குடிக்கிழார் குறிப்பிட்டுள்ளார். (புறம் 335)

ஆனிரை மீட்கும் போது விழுப்புண்பட்டு மடியும் வீரர்கள் நினைவாக ஊர்ப்புறத்தே நடுகல் நட்டு வழிபாடு செய்வது பெரு வழக்காக இருந்ததை புறப்பாடல் 265 தெரிவிக்கிறது.

நடுகல் பின்னர் கோயிலாக வளர்ச்சி பெற்று பிரதிட்டை செய்யப்பட்டிருக்க வேண்டும். பள்ளிப்படை வீடுகள் பிற்காலச் சோழர் காலத்தில் எழுந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
காட்சி, கால்கோள், நீர்ப்படை, நடுகல்,
சீர்த்தரு சிறப்பின் பெரும்படை வாழ்த்தல்.. (தொ.பொ. 1006)
என தொல்காப்பியர் நடுகல் பற்றி விபரித்துச் சொல்கிறார்.
தொல்காப்பியர் சுட்டிய காட்சி, கல்கோள், நீர்ப்படை, நடுதல், பெரும்படை, வாழ்த்து என்ற துறைகள் சிலப்பதிகாரம் வஞ்சிக் காண்டத்தில் அவ்வண்ணமே இளங்கோ அடிகளால் காதைத் தலைப்புக்களாகக் கையாண்டுள்ளார். அத்தோடு வரந்தருதல் என்ற புதிய துறை அமைப்பும் வழங்கி நிறைவு செய்தார்.
காட்சி –கல்லைக் காணல்
கால்கோள் – பொருத்தமான கல்லைத் தெரிந்தெடுத்தல்
நீர்ப்படை – அதனை குளிர்ந்த நீரில் நீராட்டுதல்
நடுதல் – நாட்டுதல்
பெரும்படை – நாட்டிய கல்லுக்குக் கோட்டம் அமைத்தல்
வாழ்த்து – அதனை தெய்வமாகப் போற்றுதல்
நடுகல்லுக்கு தெளிந்த கள்ளினை வைத்துப் படைக்கும் வழக்கம் இருந்திருக்கிறது. (புறம் 232)
புடவையால் செய்யப்பட்ட பந்தர்க்கீழ் இக்கற்கள் நாட்டப் பெற்றன. (புறம் 260)
விடியற்காலையில் நடுகற்களுக்கு நன்னீராட்டி, நாட்பலி கொடுத்து, அறும்புகை எடுத்து வழிபடுதல் சிறப்பாகச் சுட்டிக் காட்டப்பட்டது. (புறம் 329)

வஞ்சிக்காண்டம் நீர்ப்படை காதையில் சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்கு நடுகல் எடுத்ததை இளங்கோ அடிகள் விரிவாக விளக்குகிறார்.

வடபேர் இமையத்து வான்தரு சிறப்பிற்
கடவுட் பத்தினிக் கற்கால் கொண்டபின்
சினவேல் முன்பிற் செருவெங் கோலத்துக்
கனக விசயர் – தங் கதிர்முடி ஏற்றிச் …….
நடுகல் வணக்கமே நாளடைவில் சிறு தெய்வ வணக்கமாகவும், பெருந்தெய்வ வணக்கமாகவும் வளர்ச்சி அடைந்தது. எடுத்துக்காட்டாக சிலம்பின் செல்வி கண்ணகி, கண்ணகியம்மன் – பத்தினித் தெய்வம் – என இன்றும் போற்றி வழிபடப்படுகிறாள். (வளரும்)


வைதீக சமயத்துக்கும் சாதிக்கும் எதிராகப் போர்க்கொடி தூக்கிய சித்தர்கள்

தொல்காப்பியர் காலத்தில் சமயம் இருக்கவில்லை
(2)

தொல்காப்பியர் காலத்தில் எந்தவொரு பெயராலும் சமயம் இருக்கவில்லை. எல்லாம் வல்ல, எல்லாம் தெரிந்த, எங்கும் நிறைந்த முழுமுதற் கடவுள் அல்லது பரம்பொருள் என்ற வரைவிலக்கணத்துக்கு அமைய ஒரு முழுமுதற் கடவுள் குறிப்பிடப்படவில்லை. கடவுள் என்ற சொல் மிக அருமையாகப் பயன்படுத்தும் இடங்களில் அது தேவர்களைக் குறிக்கவே கையாளப்பட்டுள்ளது. எல்லா உயிர்களையும் படைத்து, காத்து, அழிக்கும் “எல்லாம் வல்ல, எல்லாம் தெரிந்த, எங்கும் நிறைந்த” ஒருவரைக் குறிப்பிடவில்லை. நடுகல் வழிபாடே பேரளவு இருந்தது.

தொல்காப்பியர் நால்வகை நிலத்தைக் குறிப்பிடுகிறார். அந்த நால்வகை நிலத்துக்குரிய தெய்வங்களையும் குறிப்பிடுகிறார். தொல்காப்பியர் காலத்தில் நிலம்பற்றியே தெய்வம், மக்கள் வாழ்வு, ஒழுக்கம் கூறப்படுகிறது.

மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தலெனச்
சொல்லிய முறையால் சொல்லவும் படுமே (தொ.பொ.அகத்திணை 5)

மாயவன் மேவிய காடு உறை உலகமும் முருகவேள் மேவிய மைவரை உலகமும் இந்திரன் மேவிய தீம்புனல் உலகமும் வருணன் மேவிய பெருமணல் உலகமும் முறையே முல்லை, குறிஞ்சி. மருதம், நெய்தல் எனச் சொல்லப்படும். மேய என்றால் விரும்பிய என்று பொருள. சேயோன் சிவந்தவன். (தொ. இளம்பூரணம் உரை)

குறிஞ்சியும் முல்லையும் பருவமழை பொய்த்து வறண்ட போது அது பாலை என அழைக்கப்பட்டது. பாலை நிலக்கடவுள் கொற்கை ஆகும்.

முல்லை நிலத்துத் தெய்வமான மாயோன் வணக்கத்தில் இருந்து திருமால் மதமும் (வைணவமும்) குறிஞ்சி நிலத்துத் தெய்வமான சேயோன் வணக்கத்தில் இருந்து சிவமதமும் தோன்றியிருக்க வேண்டும். முருகன் இளைஞன் (குமரன்) ஆகக்கொள்ளப்படுவதால் அவன் தமிழரால் சிவனின் மகனாக்கப்பட்டான். பாலைநிலத் தெய்வமான கொற்கை முருகனது தாயாகக் கொள்ளப்பட்டாள். சிவனது தேவியாக கொற்கை (பின்னாளில் காளி) கொள்ளப்பட்டாள். இவை சிவமதத்தின் படிமுறை விரிவாக்கத்தையும் வளர்ச்சியையும் காட்டுகிறது.

முன்னர் பாண்டிய மன்னனையே வேந்தனாகப் பழங்காலத்தில் கொள்ளப்பட்டிருக்க வேண்டும் என்பது மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் கருத்து ஆகும். அதற்கு அவர் கூறும் காரணம் கோயில் என்பது கோ – அரசன், இல் – மனை, கோ ூ இல் ஸ்ரீ கோயில். ஆனால் தொல்காப்பியர் காலத்தில் கோட்டம் இருந்தது. கோயில் இருக்கவில்லை. இருந்திருந்தால் அதனை அவர் குறிப்பிட்டிருப்பார்.

மேற்சொன்ன தொல்காப்பிய நூற்பாவில் சிவன் குறிக்கப்படாதது கவனிக்கத்தக்கது. எனவேதான் முருகன் மட்டும் தமிழ்க் கடவுள் என்று அழைக்கப்படுகிறான். சிவன் அப்படி அழைக்கப்படுவதில்லை.

தொல்காப்பியர் காலத்திலும் அதற்குப் பிந்திய சங்க காலத்திலும் வேலன் வெறியாட்டு என்ற வணக்கமுறை இருந்தது. கொல்லும் தன்மை கொண்ட கூர்மையான வேலைத்தாங்கிய வேலன் தெய்வத்தின் கோபத்தை அறிந்து அதைத் திருப்தி செய்யும் சிறப்புள்ளவன். அவன் காந்தள் மலர் மாலையை அணிந்து ஆவேசம் கொண்டு ஆடுவான். இப்படி ஆவேசம் கொண்டு ஆடும் ஆட்டத்துக்கு காந்தள் என்று பெயர்.

வெறிஅறி சிறப்பின் வௌ;வாய் வேலன்
வெறியாட்டு அயர்ந்த காந்தளும் (தொ.பொ.புறத்திணை 5)

அரசனை திருமாலுக்கு ஒப்பிட்டு வாழ்த்தும் வழக்கம் தொல்காப்பியர் காலத்தில் இருந்தது. இதனைப் பூவை நிலை என்பர்.

மாயோன் மேய மன்பெரும் சிறப்பின்
தாவா விழுப்புகழ்ப் பூவை நிலையும் (தொ.பொ. புறத்திணை 5)

“மாயோனாகிய திருமாலுக்குரிய நிலைத்த பெருமையையும் அழியாத புகழையும் மன்னனோடு இணைத்துப் பாராட்டும் பூவை நிலையும்” என்பது இதன் பொருள் ஆகும்.

போரிலே வாகை சூடிய பின்னர் போர் வீரர்கள் கொற்றவைக்குப் பலியிட்டு வணங்குவார்கள். போரில் வெற்றி ஈட்டுவதற்குத் துணைசெய்யும் தெய்வம் கொற்றவை. பிற்காலத்தில் கொற்றவையைக் காளி என மக்கள் அழைத்தனர். கொற்றவைக்குப் பலியிட்டு வணங்குவதைக் “கொற்றவை நிலை” என்ற குறிக்கின்றது தொல்காப்பியம்.

மறம்கடைக் கூட்டிய துடிநிலை, சிறந்த
கொற்றவை நிலையும் அத்திணைப் புறனே (தொ.பொ.புறத்திணை 4)

“வீரத்தினால் பெற்ற வெற்றியைக் கொண்டாடும் துடிநிலையும் அவ்வெற்றிக்குத் துணை செய்யத சிறந்த கொற்றவை என்றும் தெய்வத்தைப் புகழ்ந்து வாழ்த்தி வணங்கும் கொற்றவை நிலையும் வெட்சித் திணையை ஒட்டியதாகும்” என்பது இதன் பொருள்.

மேலே சொல்லப்பட்ட காந்தள் நிலை, பூவை நிலை, கொற்றவை நிலை முறையே முருகனையும் திருமாலையும் காளியையும் குறிப்பிடுகின்றன.

தொல்காப்பியம் மக்கள் வாழ்க்கை அகவாழ்வு புறவாழ்வு என இருவகையாகப் பகுத்திருக்கிறார். அவரது காலத்துக்கு முந்தியும் அவர் காலத்திலும் அவரது காலத்துக்குப் பிந்தியும் தமிழ்நூல்கள் இந்தப் பகுப்பு முறையையே பின்பற்றின. அகவாழ்வு அகத்திணை அல்லது அகப் பொருள் என்றும் புறவாழ்வு புறத்திணை அல்லது புறப்பொருள் என்றும் அழைக்கப்பட்டன. எட்டுத்தொகை நூல்கள் இந்த அடிப்படையிலேயே தொகுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

தொல்காப்பியர் காலத்துக்கு முந்தியே ஆரியர் தமிழ்நாட்டில் குடியேறிவிட்டார்கள். அவர்களோடு வடமொழியும் தமிழ்நாட்டில் புகுந்து கொண்டது.

கயிலையில் சிவனுடைய திருமணத்தைக் காணச் சென்ற தேவர்கள், முனிவர்கள் முதலியோரது பாரத்தைத் தாங்கமாட்டாது வடதிசை தாழ்ந்து தென்திசை உயர அதைச்சமன் செய்யுமாறு அகத்திய முனிவரை அழைத்து தென் திசைக்கு ஏகும்படிச் சிவன் கட்டளையிட, அவ்வாணையின்படி பொதிய மலை சென்று அகத்தியருக்கு கையிலையிலிருந்து தம்முடைய திருமணக் கோலக் காட்சி கொடுத்தருளினார் என்ற புராணம் ஆரியர்கள் தமிழ்நாட்டில் குடியேறியதை உருவகப்படுததும் கதை ஆகும்.

தமிழில் உள்ள நால்வகை சொற்களும் செய்யுளில் கலந்து வரலாம் என்கிறார் தொல்காப்பியர்.

இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடகொல் என்று
அனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே (தொ.சொ.எச்ச.1)

வடசொற்களை எவ்வாறு தமிழ் ஒலிப்படுத்தி எழுத வேண்டும் என்பதற்கு தொல்காப்பியர் சூத்திரம் வகுத்துள்ளார்.

வடசொல் கிளவி வட எழுத்து ஒரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல் ஆகும்மே. (தொ.சொ.எச்ச.5)

வடசொல் என்பது வட எழுத்தை (ஒலியை) முற்றும் நீக்கித் தமிழில் எழுதும்போது தமிழ் எழுத்துகளால் அமைந்த சொற்கள் வடசொல்லாகும். எடுத்துக்காட்டு கமலம், நிலகம், அரி, அருள், பங்கயம், குங்குமம்.

சிதைந்தன வரினும் இயைந்தன வரையார். (தொ.சொ.எச்ச.6)

கிரந்த எழுத்துக்களால் ஆன சொற்களை நீக்காமல் அவற்றை தமிழ் ஒலிக்கு ஏற்ப எழுத வேண்டும். எடுத்துக்காட்டு நஷ்டம் – நட்டம், கஷ்டம் – கயிட்டம், ரிஷி – இருடி சிதைந்து வந்துள்ளன. இதனால் கிரந்த எழுத்துக்களை தமிழில் பயன்படுத்துவதைத் தொல்காப்பியர் தடுத்திருக்கிறார் என்ற உண்மை தெரிகிறது. இருந்தும் தொல்காப்பிய விதியை மீறி இன்று கிரந்த எழுத்துக்கள் பயன்படுதப்படுகிறது. (வளரும்)


வைதீக சமயத்துக்கும் சாதிக்கும் எதிராகப் போர்க்கொடி தூக்கிய சித்தர்கள்

சங்க காலத்தில் காலூன்றிய வைதீகம்

(3)

தமிழ்நாட்டில் 10 ஆம் நூற்றாண்டு தொடங்கி 19 ஆம் நூற்றாண்டுவரை வாழ்ந்த சித்தர்கள் மருத்துவம், மந்திரம், யோகம், ஞானம் பற்றிப் பாடல் எழுதியுள்ளார்கள். மக்கள் உடல்நலத்தோடு வாழ மருத்துவக் கலையை வளர்த்ததோடு உளநலத்தோடு வாழ அறிவுக்கலையையும் வளர்த்தார்கள். மக்கள் சமுதாயம் ஒன்று என்ற கருத்தை வலியுறுத்தினார்கள்.

சித்தர்கள் தமிழ்ச் சமூகத்தைச் சீரழிக்கும் சாதி, சமயம், சாத்திரம், சடங்கு, புராணங்கள், தேர், தீர்த்தம், உருவ வணக்கம் ஆகியவற்றைக் கடுமையாகச் சாடினார்கள். நாதன் உள்ளிருக்கையில் கல்லையும் செம்பையும் சுற்றிவந்து சொல்லும் மந்திரத்தினால் பயனில்லை என்றார்கள்.

சித்தர்களின் சீர்திருத்தப் பணியை வரலாற்றுப் பின்னணியில் பார்த்தாலே அவர்களது சிறப்புத் தெரியும் என்பதாலேயே சமயம, சாதி பற்றிய வரலாற்றுப் பங்கங்களை முதலில் புரட்டிப் பார்ப்பது பொருத்தம் என நினைக்கிறோம்.

தொல்காப்பியர் நான்மறை பற்றிக் குறிப்பிடுகிறார். இது அவரது வடமொழிப் பயிற்சியைக் காட்டுகிறது. எழுத்துக்களின் ஒலியைப் பற்றியும் அவற்றை உச்சரிக்கும் முறைகளைப் பற்றியும் எழுத்ததிகாரத்தில் உள்ள பிறப்பியலில் குறிப்பிட்டுள்ளார். “எழுத்துக்களின் உச்சரிப்பை கூட்டியும் குறைத்தும் குற்றமற்ற உச்சரிக்கும் முறைகள் அந்தணர்கள் ஓதும் வேதத்தில் விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது என்று கூறுகிறார்.

“அளபிற கோடல் அந்தணர் மறைக்தே
அஃ,து இவண் நுவலாது எழுந்து புறத்து இசைக்கும்
மெய்தெரி வளியிசை அளபு நுவன்றிசினே (தொ. எழு. பிறப்பியல்)

திருமணமுறை பற்றிக் கூறும் தொல்காப்பியர் “தமிழர்களது எழுவகைத் திருமணத்தில் ஒன்றான களவு மணம் வேதத்திலே ஓரிடத்தில் கூறப்படும் எண்வகை மணங்களிலே யாழ்வாசிக்கும் திறமையுடைய கந்தருவர்களின் வழக்கத்தைப் போன்றதாகும்” எனக்; குறிப்பிடுகிறார்.

தொல்காப்பியர் வேதத்தை மறை எனக் குறிப்பிடுகிறார். அவர் குறிப்பிடும் வேதம் இன்றுள்ள இருக்கு, எசுர், சாமம், அதர்வணம் என்ற நான்கு வேதங்களா? அல்லது வேறா?

தொல்காப்பியத்திற்கு உரையெழுதிய நச்சினார்க்கினியர் தொல்காப்பியர் குறிப்பிடும்; நான்மறையை இருக்கு, எசுர், சாமம், அதர்வணம் எனக் கொள்வது பொருந்தாது என்கிறார். தொல்காப்பியச் சிறப்புப் பாயிரத்தில் காணப்படும் நான்மறை என்னும் சொல்லுக்கு நச்சினார்க்கினியர் எழுதியிருக்கும் உரை பின்வருமாறு.

“நான்கு கூறுமாய் மறைந்த பொருளும் உடையையால் நான்மறை யென்றார். அவை தைத்திரியமும் பௌடிகமும் தலவுகாரமும் சாம வேதமுமாம். இனி இருக்கும் எசுவும் சாமமும் அதரர்வணமும் என்பாரும் உளர். அது பொருந்தாது. இவர் இந்நூல்செய்த பின்னர், வேதவியாசர் சின்னாட் பல்பிணிச் சிற்றறிவினோர் உணர்வதற்கு நான்கு கூறாக இவற்றைச் செய்தாராதலின்.”

நச்சினார்க்கினியர் பார்ப்பன குலத்தில் பிறந்தவர். வடமொழி – தென்மொழி இரண்டிலும் புலமை படைத்தவர். இருந்தும் “மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள்” என்று தொல்காப்பியர் குறிப்பிடுவது ஆரியது நால்வேதங்களில் சொல்லப்பட்ட எட்டுவகைத் திருமணங்கள்தான் என்று பொருள் கொள்வதே பொருத்தமாக இருக்கும்.

சித்தர்கள் உருவ அல்லது விக்கிரக வணக்கத்தை எதிர்த்தவர்கள் என்று சொன்னோம். நடுகல் வணக்கமே பிற்காலத்தில் விக்கிரக வணக்கமாக வளர்ச்சி பெற்றது எனலாம். ஒரு நடுகல்லுக்குரிய வீரனின் ஆவி அந்த நடுகல்லில் குடிகொண்டிருப்பதாக மக்கள் நம்பினார்கள். அதனால் அக்கற்களுக்குப் படையல் இட்டு வழிபாடு செய்தார்கள். நடுகல் வீரர்களுக்கு மட்டும் அல்லாது இறந்தவர்களுக்கும் படையில் இட்டு வழிபாடு செய்யும் வழக்கம் இன்றும் தமிழரிடை இருக்கிறது. இறந்தவர் உயிரோடு வாழ்ந்தபோது எதையெதை விரும்பி உண்டாரோ அவற்றை அவர் இறந்த ஏழாம் நாள் அன்று அவருக்குப் படைத்தார்கள்.

வெறும் கல்லினை வழிபட்ட தமிழர்கள் அதனை கலை அழகோடு கூடிய சிற்பமாகப் பின்னாளில் வடித்தார்கள். அதனால் சிற்பக்கலை வளர்ந்;துது. பிற்கால பல்லவர், சோழர் காலத்தில் சிற்பக்கலை உச்ச கட்ட வளர்ச்சியைப் பெற்றது.

சங்க காலத்தில் வைதீகம், பவுத்தம், சமணம் ஆகிய புற சமயங்கள் தமிழகத்தில் ஊடுருவதைப் பார்க்கிறோம். குறிப்பாக நாட்டை ஆண்ட மன்னர்கள் வைதீகநெறிப்படி பார்ப்பனர்களைக் கொண்டு வேள்விகள் செய்வித்து பொன்னும் பொருளும் தானமாகக் கொடுத்தார்கள்.
சங்க காலத்தில் கால்கொண்ட சமணம், பவுத்தம் ஆரியரின் நால்வேத சனாதன தர்மம் சங்க கால இறுதியில் தமிழ்நாட்டின் நகரப் புறங்களில் நன்கு வேரூன்றி விட்டன.
ஆரியர் தம் வெள்ளை நிறத்தையும் வடமொழியின் வெடிப்பொலியையும் பயன்படுத்தி தாம் நிலத் தேவர் என்றும் தமது மொழி தேவமொழி என்றும் கூறி தமிழ் வேந்தர்களை ஏமாற்றினர்.
உலகம் தெய்வத்துக்கு அடக்கம், தெய்வம் மந்திரத்துக்கு அடக்கம், மந்திரம் பிராமணருக்கு அடக்கம் எனவே பிராமணரே நம் தெய்வம் என்று சொன்னதை தமிழ் அரசர்கள் ஏற்றுக் கொண்டனர். பின்னர் மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி என அவர்களும் நாளடைவில் மாறினர்.
சங்க காலத்தில் சமணப் பள்ளிகள், நால்வர்ணப் பாகுபாடு, வேள்வி வழிபாடு, பாரத, இராமயண புராணக் கதைகள் சங்கத் தமிழரிடையே நன்கு பரவியிருந்தன. பார்ப்பனர்களுக்கு தனிக் குடியிருப்புக்கள் இருந்தன. மூவேந்தர்கள் ஆரிய வேள்விகளை செய்வித்தார்கள். பார்ப்பார்க்கு மன்னர்களின் அரண்மனை வாயில் என்றும் அகலத் திறந்திருக்கும் என்று சிறுபாணாற்றுப்படை பாடல் (203-205) கூறுகிறது. இது பார்ப்பனர்களது செல்வாக்கு உயர்ந்திருந்ததைக் காட்டுகிறது.
வேள்விகளில் குதிரை, ஆடு, மாடு, உடும்பு போன்ற உயிர்கள் தீயில் பலியிடப்பட்டுப் பின்னர் உணவாக உண்ணப்பட்டன. மனிதர்களை காவு கொடுக்கும் வழக்கமும் இருந்தது. அந்த வேள்விக்கு நரமேதம் எனப் பெயர். அசுவமேத யாகம் போன்றவை மிகவும் அருவருப்பானது.
சிறு தெய்வங்களான காளி, காட்டேறி, துர்க்காதேவி, பேய்கள், பூதங்கள் போன்றவற்றுக்கு கல்லா மக்கள் ஆடு, கோழி போன்றவற்றைப் பலியிட்டார்கள். அதன் எச்சங்கள் இன்றும் ஊர்ப்புறங்களில் காணப்படுகிறது.
சங்கப் பாடல்களில் பார்ப்பனர் அந்தணர் என்று குறிக்கப்பட்டு அவர்களது வாழ்க்கைமுறை, தீ வளர்த்தல், வேதவேள்விகள் செய்தல், வேம் ஓதுதல் பற்றிய குறிப்புகள் மிகுந்து காணப்படுகிறது.

கபிலர் தன்னை அந்தணன் என்று பெருமையாகச் சொல்லி கொள்கிறார்.

கரிகாலன் பெரும் பொருட்செலவில் வேள்விகள் செய்து பார்ப்பனர்களுக்கு பொன்னும் மணியும் கொடுத்து மேன்மைப் படுத்தியிருக்கிறார்கள். பல்யானைச் செல்கெழுகுட்டுவன் பாலைக் கவுதமனாரைக் கொண்டு பத்து பெருவேள்வி செய்தான்.

பாண்டியன் தலையானங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் வைதீக ஒழுக்கத்தில் சிறந்திருந்தான்.

சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி என்ற பெயர் இவன் பல வேள்விகள் செய்தான் என்பதைக் காட்டுகிறது. (புறம் 16)

பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி வேள்விகள் பல செய்தான். அதனைக் கண்டு நெட்டிமையார் என்ற புலவர் அவன் வேள்விகள் பல செய்து முடித்து அவ் வேள்விச் சாலைகளில் நட்ட யூபங்களும் பல, வசையற்றவர் தொகையோ? யூபங்களின் தொகையோ, இவற்றுள் மிக தொகையாது என்று கேட்கின்றார். ( புறம் 6, 9, 12, 15, 64)

இவை யாவும் வைதீக நெறி தமிழரிடையே முதலில் கால்கொண்டு பின்னர் நன்கு வேர் கொண்டதற்கு வலுவான சான்றுகள் ஆகும். (தமிழர் நாகரிகமும் பண்பாடும் பக்கம் 266) (வளரும்)


வைதீக சமயத்துக்கும் சாதிக்கும் எதிராகப் போர்க்கொடி தூக்கிய சித்தர்கள்

சங்க காலத்தில் பாhப்பனர்கள்

(4)

சங்க இலக்கியங்களில் வேதநெறியை மறுத்து உலகாயத கோட்பாட்டை வலியுறுத்தம் பாடல்களும் இடம் பெற்றுள்ளன.
சங்க காலத்தில் பொருள் முதல் (னயைடநஉவiஉயட அயவநசயைடளைஅ) கருத்து முதல் (ளிசைவைரயடளைஅ) கூறுகள் பரவலாகக் காணப்படுகிறது.
‘தேய்தல் உண்மையும் பெருகல் உண்மையும்
மாய்தல் உண்மையும் பிறத்தல் உண்மையும்’
என்ற புறநானூற்று (27) வரிகள் என்ற பொருள் முதல் வாதம், புற உலகு உண்மையன்று என்ற கருத்து முதல் வாதத்தை மறுக்கிறது. உலகமும் அதன் இயக்கமும் உண்மை எனச் சொல்கிறர்.
உயிர் உடம்பு இரண்டும் தனித்தனி என்ற கருத்து முதல் கோட்பாட்டை ஏற்றுக் கொள்ளாதவர்களும் சங்க காலத்தில் வாழ்ந்திருக்கிறார்கள். ‘உடம்பொடு இன்னுயிர் விரும்பும் கிழமை’ (உடம்போடு வாழ இன்னுயிர் பெற்றுள்ள உரிமை) என்ற புலவர் பொத்தியாரின் பாடல் வரிகள் (223) பொருள் முதல்வாத சார்புடையது.
முரஞ்சியூர் முடிநாகராயர் என்ற புலவர் பாடிய புறநானூற்றுப் பாடல்; (புறம் 2) பூதவியல் கருத்தை முன்வைக்கிறது.

‘மண் திணிந்த நிலனும்
நிலன் ஏந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும்
வளித் தலைஇய தீயும்
தீமுரணிய நீரும், என்hறாங்கு
ஐம்பெரும் பூதத்து இயற்கைபோல.’

மறுபிறப்பு இருக்கலாம் அல்லது இருக்காமலும் இருக்கலாம் என்ற இரண்டு கருத்தும் சங்க காலத்தில் இருந்துள்ளது. போப்பெருஞ் சோழனின் பாடிய புறப்பாடல் (214) மறுபிறப்புக் கோட்பாட்டை மறுப்பவர்களும் இருந்திருக்கிறார்கள் என்பதை தெளிவு படுத்துகிறது.

கடவுள் உண்டு என்ற கருத்துமுதல் வாதம் பிறந்தபோதே கடவுள் இல்லை என்ற பொருள்முதல் வாதமும் பிறந்து விட்டது. வடமொழி நூல்களில் பொருள்முதல் வாதம் ‘உலகாய்தம்’ என அழைக்கப்பட்டது.

கிறித்து பிறப்பதற்குச் சில நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஆரியப் பார்ப்பனர்கள் தொடர்ச்சியாக சிற்றலைகளைப் போலக் குடும்பம் குடும்பமாக வடக்கிலிருந்து வந்து தமிழக மய்யப் பகுதிகளில் குடியேறத் தொடங்கினார்கள். புகார், மதுரை, காஞ்சி, வஞ்சி முதலிய நகரங்களிலும் ஆற்றோரங்களிலும் நெல் விளைச்சல் மிகுந்த வயல் சூழ்ந்த ஊர்களிலும், இவர்கள் தங்களுடைய தனித்த அடையாளங்களோடும், பண்பாட்டு அம்சங்களோடும் வாழ்ந்தார்கள். ஏனைய தமிழகமக்களிடமிருந்து தங்களுடைய நடை, உடை, பாவனை, பழக்க வழக்கங்கள், சுபாவங்கள், தொழில், நித்திய கர்மங்கள் முதலியவற்றில் பார்த்தவுடனே அடையாளம் கண்டுகொள்ளும் விதத்தில் வேறுபடுத்திக் காட்டி வாழ்ந்தார்கள். இவற்றால் தான் தங்களுக்குப் பெரும் மரியாதை இருக்கிறதாக நம்ப வைத்தார்கள்.

தலையில் குடுமி வைத்தார்கள் (அய்ங்குறுநூறு. 202). (ஏனைய தமிழர்கள் கூந்தல் வளர்த்தார்கள்)

காவிக்கல்லால் தோய்த்துக் காவி யூட்டப்பட்ட ஆடையை அணிந்து (முல்லைப் பாட்டு), கையில் குடை பிடித்து, பிடரியில் உறியும், கரகமும், முக்கோலும் அசைந்தாடப் பார்ப்பனப் புரோகிதர்கள் பயணம் செய்தார்கள் (கலித் தொகை 9).

உலகிலுள்ள மக்களைவிடத் தாங்களே ‘புலன் அழுக்கு’ இல்லாதவர்கள் என்ற கட்டுக்கதையைப் பரப்பினார்கள் (புறநானூறு 126). இந்தச் சுத்தக் கொள்கையைத் தங்களது உயரிய கொள்கையாக நிலை நாட்டினார்கள்.

பிறர் நீராடிய ஆற்றில் குளிப்பதையும், சடங்கு செய்வதையும் தவிர்த்தார்கள். புதுவெள்ளத்தில் தமிழ்மக்கள் புதுப்புனலாட்டம் என்ற விழாவைக் கொண்டாடியபோது, அந்த வெள்ளத்தில் அவர்கள் கலந்த நறுமணப் பொருள்களாலும், கள்ளாலும் கலங்களாக ஆனதால் அதில் நீராடவும் இல்லை; வாயைக்கூடக் கொப்பளிக்கவில்லை (பரிபாடல் 6, பரிபாடல் திரட்டு 2).

மருத நிலங்களிலும், முல்லை நிலங்களிலும் தங்களுக்கென்று தனிக் குடியேற்றங்களை உண்டாக்கினார்கள் (நற்றிணை 321).

வயல் வளமிக்க ஆமூர் என்ற ஊர் பார்ப்பனர்களின் ஊராகக் குறிப்பிடப்பட்டது (சிறுபாணாற்றுப் படை). இவர்களுடைய வீட்டை ‘வளமனை’ (குறிஞ்சிப் பாட்டு) என்று புலவர் போற்றினர்.

கன்று கட்டிய பந்தலும், சாணத்தால் (‘பைஞ்சேறு’) மெழுகிய ஆசாரமிக்க நல்ல வீடும் பார்ப்பனரின் வீடு.
இங்கே, நாய், கோழி ஆகிய வற்றைக் காண முடியாது. இவற்றுக்குப் பதிலாகக் கிளிகளை வளர்த்தார்கள். இவைகூட இவர்களுடைய வேதத்தை ஓதினவாம். (பெரும்பா ணாற்றுப் படை)
பிராணிகள் வளர்ப்பதிலேகூட வரு;ணபேதம் இருந்தது. நாய், கோழி, பன்றி வளர்க்க ‘கீழ்சாதி’; பசு, கிளி வளர்க்க மேல்சாதி).

வேதத்தைப் பார்ப்பனர் ஓதுவது நாட்டுக்கு நல்லது என்றாயிற்று. வைதீக மய்யங்களில் சிறப்பிடம் பெற்றிருந்த மதுரை நகரத்தில் தமிழ் மக்கள், விடியற்காலையில் சேவல் கூவிக் கண் விழிப்பதில்லையாம். பார்ப்பனர் ஓதிய வேதத்தைக் கேட்டுத்தான் கண் விழிப்பார்களாம்! (பரிபாடல் திரட்டு).

‘நான்மறை முதல்வர்’, ‘அறிவுடை அந்தணர்’, ‘மறை காப்பாளர்’, ‘கேள்வி அந்தணர்’, ‘ஆன்ற கேள்வி அடங்கிய கொள்கையபளர்’, ‘பல் வேள்வித்துறை போகிய தொல்லாணை நல்லாசிரியர்’ (பட்டினப்பாலை, மதுரைக் காஞ்சி) என்றெல்லாம், பார்ப்ப னர்களைப் புலவர்கள் அறிவு முதல்வர்களாகப் போற்றினார்கள்.
பிற தமிழர்கள் இவர்களைத் தொழுதார்கள் (அய்ங்குறுநூறு 387)

இரந்து அறிவுரை கேட்டார்கள்                        (அய்ங்குறுநூறு 384).

‘உயர்ந்தோர்’ என்ற ஒரே சொல்லால், வானத்துத் தேவர்களும், இந்தப் பார்ப்பனர்களும் குறிக்கப்பட்டார்கள் (குறுந் தொகை 233).
இரண்டே பிறப்பும், இரு பெயரும், ஈரமான நெஞ்சமும் கொண்ட பார்ப்பனரின் வைதீக தருமத்தில் புராணக் கடவுள்கள் தங்கியிருப்பதாகக் கூறினார்கள் (பரிபாடல் 14), (புறநானூறு 367)

தமிழ் அரசர்கள், பார்ப்பனரைத் தவிர மற்ற எவருக்கும் தலைபணிய மாட்டார்கள் என்று பாராட்டப் படுவது ஒரு மரபாக ஆயிற்று. பார்ப்பனரைப் பணிந்து, அவர்கள் சொற்படி நடப்பது அரசரின் உயர்ந்த பண்பாகக் கூறப்பட்டது (பதிற்றுப்பத்து 63).

பார்ப்பனர்கள் தூர திருஷ்டி (‘மாசறு காட்சி’) உள்ளவர்களாக மதிக்கப்பட்டார்கள். ‘நெட்டிமையார்’ என்று இது தமிழில் கூறப்பட்டது.

ஆறு தொழில் புரியும் பார்ப்பனரின் வழிமொழிந்து அரசாண்டால், அந்த அரசனை இந்த உலகமே வழிமொழியும் என்றார்கள் (பதிற்றுப் பத்து 24).

பார்ப்பனர்கள் பசுப்போன்ற சாதுக்கள் (புறநானூறு 9) என்று நோக்கப்பட்டார்கள்.

அரசர்களுக்கு இடையில் போர் நடந்தபோது பசுக்கள், பெண்களோடு சேர்ந்து பார்ப்ப னர்களும் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டார்களாம் (புறநானூறு 9).
பசுவின் காம்பை அறுத்தவர், பெண்ணின் கருவைக் கலைத்தவர், பார்ப்பனர்களுக்குக் கெடுதல் செய்தவர் ஆகியவர்களுக்குப் பரிகாரம் கிடையாதென்றான் ஒரு புலவன் (‘புறநானூறு 34). பசு, கரு (சிசு) முதலான மெல்லிய, போற்றத்தக்க, பாதுகாக்கத்தக்க, அரவணைப்புக்குரியவற்றோடு பார்ப்பனரும் இணைக்கப் பட்டனர். (வளரும்)


சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள் (8)

பாரதம் ஒழுக்கக் கேடர்களின் ஆபாசக் கதை!

நக்கீரன்

போரில் இறந்த போன சந்தனு மச்சகந்தி இருவருக்கும் பிறந்த சித்திராங்கதன் விசித்திர வீரியன் ஆகிய இரண்டு மகன்களுக்கும் பிள்ளைகள் இல்லை. இதனால் குருகுல அரச வம்சம் சந்ததி இல்லாமல் அழியும் அபாயம் தோன்றியது. மீனவப் பெண்ணான மச்சகந்தி சந்ததி தழைக்க ஒரு உயாயம் செய்தாள்.

பீஷ்மரை அழைத்து சித்திராங்கதன் விசித்திர வீரியன் ஆகிய தம்பிமாரின் மனைவிகளான அம்பிகை அம்பாலிகை (மச்சகந்தியின் மருமக்கள்) இருவருக்கும் பிளை;ளவரம் கொடுக்குப்படி கேட்டுக் கொண்டாள். அதாவது அவர்களைப் புணருமாறு கேட்டாள்.

பீஷ்மன் தான் தந்தைக்குக் கொடுத்த வாக்கை மீறமாட்டேன் என்று உறிதியாகக் கூறிவிட்டான்.

மச்சகந்தி முயற்சியைக் கைவிடவில்லை. சந்தனுவை மணப்பதற்கு முன்னர் பராசரமகரிஷியோடு கூடிப் பிறந்து காட்டில் திரிந்து கொண்டிருந்த தனது மகனை அழைத்து தனது மருமக்களுக்கு பிள்ளைவரம் கொடுக்கும்படி கேட்டுக் கொண்டாள். இவன்தான் இந்து மதம் கொண்டாடும் வியாசன். நால் வேதங்களைத் தொகுத்தவன். ஐந்தாவது வேதம் எனப் போற்றப்படும் பாரதத்தை எழுதியவன். அதில் காணப்படும் பகவத் கீதையை எழுதியவன்.

விபசாரத்தில் பிறந்த வியாசன் பாரதத்தையும் பகவத் கீதையையும் எழுத முடியும் என்றால் கவியர் கண்ணதாசன் ஏன் அர்த்தமுள்ள இந்து மதம் எழுதக் கூடாது? ஆன காரணத்தால்தான் அர்த்தமுள்ள இந்து மதம் எழுதுவதற்கு குடியும் கூத்தியுமாக வாழந்த கண்ணதாசனுக்கு எல்லாத் தகுதியும் உண்டென்று கூறினேன்.

சரி கதையைத் தொடருகிறேன். வியாசன் மச்சகந்தியின் வேண்டுகோளை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டு அம்பிகை அம்பாலிகை என்ற இரண்டு பெண்களோடு சேருகிறான்.

இதில் மூத்தவள் அம்பிகை வியாசன் தன்னைப் புணரும்போது பயத்தால் கண்ணை மூடிக் கொண்டாள். அதனால் அவளுக்குப் பிறந்த பிள்ளை குருடாகப் பிறந்தது.

இளையவளான அம்பாலிகையுடன் வியாசன் சேரும் போது அவனது தாடி சடாமுடி இவற்றைக் கண்டு அச்சத்தோடு இருந்தாள். அதனால் அவளுக்குப் பிறந்த பிள்ளை நோயாளியாகப் பிறந்தது.

இன்றைய திரைப்படங்களில் வரும் வில்லன் கதாநாயகியின் கற்பைப் பறிக்கும் போது இயக்குநர் கதாநாயகியின் வேதனையை, வெட்கத்தை, அருவருப்பை, இயலாமையை கை கால், முக மாறுதல்களை அண்மைக் காட்சியில் காட்டுவார்.

இந்தக் கதாநாயகி போலவே அம்பிகை, அம்பாலிகை அந்த இரண்டு பெண்களும் வியாசன் கற்பழித்தபோது அதே வேதனை, வெட்கம், இயலாமை இவற்றால் துடித்திருப்பார்கள். துவண்டு போய் இருப்பார்கள்!

முதல் இரண்டு பிள்ளைகளும் சொட்டையாகப் பிறந்து விட்டன. அரசாள ஒரு ஒழுங்கான பிள்ளை வேண்டும். மச்சகந்தி ஆழ்ந்த யோசனையில் மூழ்கினாள்.

மச்சகந்தி ‘முயற்சி திருவினையாக்கும்’ என்பதில் நம்பிக்கை கொண்டவள். அவள் காட்டில் வாழ்ந்த வியாசனை மீண்டும் அழைத்து தனது இளைய மருமகள் அம்பாலிகையோடு புணர்ந்து ஒரு ஒழுங்கான பிள்ளையைப் கொடுக்குமாறு கேட்கிறாள்.

வியாசனோடு இன்னொரு முறை கூட வேண்டும் என்பதைக் கேட்ட அம்பாலிகை அருவருப்புக் காரணமாக அச்சம் கொள்கிறாள். தந்திரமாக தனது வேலைக்காரியை வியாசனோடு புணருமாறு அனுப்பி வைக்கிறாள்!

வேலைக்காரி அரசகுமாரி அல்லவே. அவள் மகிழ்ச்சியோடு வியாசனோடு கூடினாள். அவளுக்குப் பிறந்த குழந்தை எந்தக் குறையும் இல்லாது பிறந்தது.

இப்போது உங்களுக்கு மிகுதிக் கதை விளங்கி இருக்கும்.

வியாசனோடு மூத்த மருமகள் கூடிப்பிறந்த குருட்டுப் பிள்ளைதான் திருதராட்டிரன். வியாசனோடு இரண்டாவது மருமகள் கூடிப் பிறந்த நோயாளிக் குழந்தைதான் பாண்டு.

வியாசனுக்கும் வேலைக்காரிக்கும் பிறந்த பிள்ளைதான் விதுரன்.

குருட்டுப் பிள்ளை அரசாளக் கூடாது என்பதால் திருதராட்டிரன் ஒதுக்கப்படுகிறான்.

விதுரன் குறைவற்றுப் பிறந்தாலும் வேலைக்காரிக்குப் பிறந்ததால் ஆட்சி செய்யும் தகுதியை இழக்கிறான்.

எஞ்சிய பாண்டு நோயாளியாக இருந்தாலும் அரச கட்டில் ஏறுகிறான். வேத சாத்திரங்கள் அதனை அனுமதிக்கிறது.

வேத சாத்திரங்கள் விசித்திரமானவை. அவை நாகரிகம் அடையாத அன்றைய மனிதனது வாழ்க்கை முறையை ஒளித்தெறிக்கின்றன.

மச்சகந்தி சூத்திர குலம். அவளுக்கும் காட்டில் தவம்செய்து கொண்டிருந்த பராசரமகரிஷிக்கும் பிறந்த வியாசன் சூத்திர குலம். ஆனால் வியாசனுக்கும், சந்தனு-மச்சகந்தி இருவரது மகன்களின் (சித்திராங்கதன், விசித்திரவீரியன்) மனைவியருக்கும் பிறந்த திருதராட்டிரன் சத்திரிய குலம் எனக் கருதப்படுகிறான். குருடன் என்பதால் மட்டும் அவனுக்கு அரசுரிமை மறுக்கப்படுகிறது.

அதே போல் விதுரன் அரண்மனை வேலைக்காரிக்குப் பிறந்த பிள்ளை என்பதால் சூத்திர குலம். அதனால் அவனுக்கு அரசுரிமை மறுக்கப்படுகிறது. ஆனால் திரிதராட்டிரன் போலவே நோயாளியாகப் பிறந்த பாண்டுவுக்கு அரசுரிமை அளிக்கப்படுகிறது.

நோயாளி பாண்டு குந்தியை மணக்கிறான். ஆனால் அவன் குந்தியைக் கூடினால் இறந்து விடுவான் என்பதற்காக அவளும் இன்னொரு மனைவி மாத்திரியும் இந்திரன், வாயு, அக்னி போன்ற தேவர்களோடு கூடி அய்ந்து பிள்ளைகளைப் பெறுகிறார்கள். அவர்கள்தான் பஞ்ச பாண்டவர்கள். பாரதக் கதையின் கதாநாயகர்கள். குந்தி ஆறாவதாக சூரியனைக் காதலித்துப் பெற்ற பிள்ளைதான் கர்ணன்.

பெண்ணுடன் கூடினால் இறக்க நேரிடும் என்று தெரிந்தும் பாண்டு அரண்மனைத தாதி ஒருத்தியுடன் கூடி இறந்து போகிறான்.

பாண்டு இறந்து போனபின் அவனது (?) மக்களில் மூத்தவனான தருமன் பட்டம் ஏற்கிறான்.

தருமன் பட்டம் சூடுவதை திரிதராட்டிரனின் மூத்த மகன் துரியோதனன் எதிர்க்கிறான். ஆட்சி உரிமை தனக்கே என்று வாதிடுகிறான்.

திரிதராட்டிரன் குருடாக இல்லாதிருந்தால் அவன்தான் ஆட்சிக் கட்டில் ஏறியிருப்பான், எனவே அவனுக்குப் பின் முறைப்படி ஆட்சியுரிமை தனக்கே உரித்து என்று துரியோதனன் வாதிட்டான்.

கவுரவர் – பாண்டவர் அரசுரிமைச் சண்டையில் பீஷ்மர் தலையிட்டு துரியோதனர்கள் அஸ்தினாபுரத்திலும் பாண்டவர்கள் இந்திரப்பிரஸ்தத்திலும் தனித்தனி அரசு ஆள அமர்த்தப் படுகிறார்கள்.

பாண்டவர் ஆட்சியை போர் செய்தேனும் கைப்பற்ற துரியோதனன் துடிக்கிறான். அவனது மாமன் சகுனி ஆட்சியைப் பிடிக்க குறுக்கு வழி சொல்லிக் கொடுக்கிறான்.

வாளின்றி வேலின்றி அரசைப் பிடிக்க வழி இருக்கும் போது வீணாக ஏன் இரத்தம் சிந்துவான்? ஏன் உயிர்கள் போர்க்களத்தில் பலியாக வேண்டும்?

தருமன் சூதில் மோகம் கொண்டவன். சகுனியோ சூதாட்டக் கலையில் வல்லவன்.

தருமன் சூதாடித் தோற்கிறான். அரசை மட்டுமல்ல, தன்னை, தனது மனைவியை, உடன் பிறந்த சகோதரர்களை வைத்து ஆடி இழக்கிறான்.

தோற்றவர்கள் ஆட்சியை துரியோதனிடம் ஒப்படைத்துவிட்டு வெளியேறுகிறார்கள்.

பதின்மூன்று ஆண்டுகள் காட்டிலே தலைமறைவாகத் திரிந்தபின் மீண்டும் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைக்குமாறு பாண்டவர்கள் கேட்கிறார்கள். துரியோதனன் மறுக்கிறான்.

நாடு பிளவுபடுகிறது. கவுரவர் ஒருபுறம். பாண்டவர் மறுபுறம். குருசேத்திர பூமியில் சகோதர யுத்தம் தொடங்குகிறது.

அப்போதுதான் அருச்சுனன் தனது அண்ணன், தம்பி, மாமன், மச்சான், பெரியப்பா சித்தப்பா ஆகியோருக்கு எதிராக சண்டை செய்ய மறுக்கிறான்.

அருச்சுனனது எண்ணத்தை மாற்றி அவனை சண்டைக்கு ஆயத்தம் செய்ய கண்ணன் அவனுக்கு குளையடிக்கிறான். அப்படி கொலை செய்யத் தூண்டும் கருத்துரைகள்தான் பகவத் கீதை. அதனை வியாசன் எழுதி;யதாகச் சொல்லப்பட்டாலும் உண்மையில் பிற்காலத்தில் யாரோ எழுதி பாரதக் கதையோடு சேர்த்திருக்க வேண்டும்.

ஒழுக்கக் கேட்டுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இந்த மகாபாரதம் விளங்குகிறது. ஆரியர்களுடைய பண்பாட்டுக்கு அது ‘அற்புத நூலாக’ இருக்கலாம். “புண்ணிய நூலாக” இருக்கலாம் ‘எண்ணற்ற முத்துக்களும், ரத்தினங்களும் கிடைக்கும் மகாசமுத்திரத்தைப் போன்றதாக’ இருக்கலாம் (இராசாசி எழுதிய மகாபாரதம் – பக்கம் 4). ஆனால் அது தமிழ்ப் பண்பாட்டுக்கு முற்றிலும் முரணான ஆபாசக் கதை. அதனைத்தான் கோயிலில் தமிழ்ச் சைவர்கள் படிக்கிறார்கள். படித்து முடித்த பின்னர் கஞ்சி காய்ச்சி ஊற்றுகிறார்கள்.

தமிழர்களுடைய மூளை பிற பண்பாட்டர்களால் விலங்கிடப்பட்டதற்கு இந்தப் பாரதப் படிப்பு நல்ல எடுத்துக் காட்டு.

பாரதக் கதையை படித்தாலும், அருகிருந்து படிக்கக் கேட்டாலும் மோட்சம் கிடைக்கும் என்கிறார்கள். மோட்சம் கிடைக்கிறதோ இல்லையோ நிச்சயமாக ஒழுக்கம் கெடுகிறது.

பாரதத்தை படித்து விட்டு ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் தன்னை வியாசன் என்று நினைத்திருந்தால் அதில் வியப்பில்லை.

இளைய மடாதிபதி விஜேய்ந்திரருக்கு காஞ்சி சங்கர மடத்துக்கு அருகில் இருந்த வீடியோ கடையில் இருந்து நீலப் படங்கள் பூக்கூடைக்குள் மறைத்து அனுப்பப் பட்டதாம். அவர் என்ன செய்வார். கம்பரசத்திலும், கந்தரசத்திலும் வடித்துக் கொடுத்திருந்ததை ஒளி ஒலியில் பார்க்கவும் கேட்கவும் ஆசைப்பட்டிருப்பார்!

கீதா உபதேசங்கள், வேதங்கள், ஆகமங்கள், புராணங்கள், இதிகாசங்கள் கடவுள் பக்தி என்ற பெயரால் மனித குலத்தை குருடாக்கி தவறான பாதைக்கு இழுத்துச் செல்கின்றன.

பணம் கொடுத்தால், விரதம் இருந்தால், அர்ச்சனை ஆராதனை செய்தால், தேர்த் திருவிழா செய்தால் அவர்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டு சொர்க்கத்துக்கான வாசல் திறக்கப்படும் என்று கூறப்படுவதால் பாவம் செய்தவர்கள் மீண்டும் பாவம் செய்கிறார்கள். ஏனைய மதத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இது பொருந்தும்.

இதையிட்டு படித்த தமிழர்கள் சிந்தித்துப் பார்ப்பதில்லை. படியாத பாமரத் தமிழர்களுக்கு சிந்திக்கத் தெரிவதில்லை!

சந்நியாசம் வாங்கிய ஜெயேந்திரர், காவி கட்டிய சதுர்வேதி, தாடி வளர்த்த பிரேமாநந்தா போன்ற போலிச் சாமியார்கள் பகலில் இழித்தவாயர்களுக்கு உபதேசம் செய்து விட்டு இரவில் தங்கள் மடங்களை காமக் களியாட்டக் கூடங்களாக மாற்றுகிறார்கள்! இந்து மதத்தின் பெயரால் இந்த காமலீலைகள் அரங்கேறுகின்;றன!

‘நான் கண்ணன்! நீ ராதை! உன்னை ஆட்கொள்ளப் போகிறேன்’ என்று சொல்லி பருவ மங்கையர்களை மட்டுமல்ல குடும்பப் பெண்களையும் சதுர்வேதி சாhமியார் கெடுத்திருக்கிறார்!

இதனால்தான் திரைப்படங்களிலும் சின்னத்திரையிலும் வில்லனாக ஒருவனைச் சித்தரிக்க வேண்டும் என்றால் நெற்றியில் விபூதிப் பட்டையும் கழுத்தில் உருத்திராட்சக் கொட்டையும் கட்டி பக்திமானாகக் காட்டுகிறார்கள்! (வளரும்)


சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள் (9)

அருவருப்பான புராணக் கதைகள்!

நக்கீரன்

இந்த ஒழுக்கக் கேடு இன்று நேற்றல்ல. அடிநாள் தொட்டு வந்து கொண்டிருகிறது.

பாரதம் ஐந்தாம் வேதம். கோயில்களில் படிக்கப்படும் புனித நூல். அதன் கதாநாயகர்களான பஞ்ச பாண்டவர்கள் மணவினைக்கு புறத்தே பிறந்தவர்கள். குந்தியும் பாண்டுவின் இன்னொரு மனைவியான மாத்திரியும் தேவர்களோடு கூடி அவர்களைப் பெற்றெடுத்தார்கள். குந்தி மணவினைக்கு முன்னர் சூரியனோடு கூடி கர்ணனனைப் பெற்றெடுத்தாள்.

பாஞ்சாலியைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. ஐவருக்கும் ஏக பத்தினி. இது போதாதென்று கர்ணனையும் காதலித்தவள்! அதனால் என்ன? அது ஆரியரது பண்பாட்டில் பெரிய தகுதியாகக் கருதப்பட்டது. அதனால் அவள் ‘அம்மன்’ ஆனாள்! புத்தி இல்லாத தமிழன் இந்த அம்மனை விழுந்து கும்பிட்டான்! இப்போதும் கும்பிடுகிறான்!

பரதன் என்ற பெயரில் இருந்துதான் பாரதம் என்ற சொல் பிறந்ததாம். இந்தப் பரதன் யார்? சகுந்தலைக்கும் துஷ்யந்தனுக்கும் மணவினைக்கு புறத்தே பிறந்தவன். அதற்கு இன்னொரு பெயர் கந்தர்வ விவாகம்!

இந்த சகுந்தலை எப்படிப் பிறந்தவள்? விசுவாமித்திரனுக்கும் இந்திரலோக மேனகைக்கும் மணவினைக்கு புறத்தே பிறந்தவள்!

இந்திரலோகம் என்றவுடன் இந்திரன் நினைவு வருகிறது. முப்பத்து முக்கோடி தேவர்களின் அரசன் இவன். கவுதமமுனிவரின் பத்தினி அகலிகையை ஏமாற்றிக் கற்பளித்தவன். அதனால் அவன் ஆணுறுப்பு அறவும் அவன் உடம்பு முழுதும் ஆயிரம் யோனி தோன்றவும் கவுதம முனிவரால் சபிக்கப்பட்ட சண்டாளன்!

இராமாயணம் எழுதிய வால்மீகி ஒரு வழிப்பறிக் கொள்ளைக்காரன்.

திருமங்கை ஆழ்வார் வழிப்பறி கொள்ளை நடத்தி ஸ்ரீரங்கநாதருக்கு திருப்பணி செய்தவர். இவரே நாகபட்டினம் பவுத்த விகாரையில் இருந்த புத்தரின் தங்கச் சிலையைத் திருடி விற்று அந்தப் பணத்தில் ஸ்ரீரங்கநாதருக்கு விமான திருப்பணி செய்தவர்.

திருவாசகம் பாடிய மாணிக்கவாசகர் அரிமர்த்தன பாண்டியனது அமைச்சர். குதிரைகள் வாங்க அரசன் கொடுத்த பணத்தை கோயில் கட்டச் செலவழித்தார்.

அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான இயற்பகை நாயனார் சோழநாட்டிலே காவிரிப்பூம் பட்டினத்தில் பிறந்தவர். அடியவர் எவராயினும் எதனை விரும்பிக் கேட்டாலும் கொடுத்துவிடுவார். சிவனடியார் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டிய மனைவியை அவர் பின் அனுப்பி வைத்தார்!

எதிர்த்த ஊர் மக்களை வாள் கொண்டு வெட்டிச் சாய்த்தார்! இயற்பகை என்பது நல்ல பொருத்தமான பெயர்! நம்பியாண்டார் நம்பி இயற்றிய திருத்தொண்டர் திருவந்தாதி இந்த மூட பக்தரை இப்படிப் புகழ்கிறது.

செய்தவர் வேண்டியதி யாதுங் கொடுப்பர் சிவன்தவனாய்க்
கைத்தவம் பேசிநின் காதலி யைத்தரு கென்றலுமே
மைதிகழ் கண்ணியை ஈந்தவன் வாய்த்த பெரும்புகழ்வந்
தெய்திய காவிரிப் பூம்பட் டினத்துள் இயற்பகையே.

இன்னொரு நாயனார். பெயர் விசாரதருமர். மாடு மேய்ப்பவர். மண்ணியாற்றின் கரையில் மணலில் சிவலிங்கம் செய்து மேய்த்த மாடுகளில் இருந்து பாலைக் கறந்து அதற்கு நீராட்டினார். இப்படி பால் வீணாகப் போவதை கண்டு விசாரதருமரின் தந்தை எச்சதத்தன் பிள்ளையைத் தண்டித்தான். அரனார் வழிபாட்டிற்கு பங்கம் விளைவித்த தந்தையை விசாரதருமர் மழுகொண்டு இரண்டு கால்களையும் வெட்டி வீழ்த்தினார்.

உடனே சிவபெருமான் ‘எனக்காக நீ உன்னைப் பெற்ற தந்தையின் கால்களை வெட்டிக் கொன்றாய். யாமே உனக்கு இனித் தந்தையாக இருப்போம்’ என்று திருவாய் மலர்ந்தருளி மறைந்தார். பக்தியின் பெயரில் தந்தையை வெட்டிக் கொல்வது பாபம் அல்ல இறைகைங்கரியம் என இக்கதை கூறுகிறது!

கருவூரில் உள்ள ஆனிலை என்ற ஊரில் திருக்கோயில் ஒன்று இருந்தது. திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள சிவபெருமானை வழிபடும் சிவனடியார்களுக்கு தீங்கு இழைப்பவர்களை எதிர்த்து வீழ்த்த மழுப்படை தாங்கிய ஒருவர் இருந்தார். அவர் பெயர் எறிபக்த நாயனார்.

ஒரு நாள் ஒரு சிவனடியார் பூக்குடலையோடு திருக்கோயிலுக்கு வழிபாடு செய்ய போய்க் கொண்டிருந்தார். வழியில் சோழ மன்னனின் பட்டத்து யானையை காவிரியில் குளிப்பாட்டிவிட்டு அந்த வழியாக பாகர்கள் நடத்தி வந்து கொண்டிருந்தார்கள். யானை சிவனடியாரின் பூக்கூடையைப் பிடுங்கி பூக்களை வீதியில் சிதறியது.

அந்தச் சமயத்தில் எறிபக்த நாயனார் அந்தப் பக்கம் வந்தார். நடந்ததை அறிந்து காற்றென விரைந்து சென்று தனது மழுவால் யானையின் தும்பிக்கையை வெட்டி விழுத்தினார். அடுத்து குத்துக் கோற்காரர் மூவரையும் பாகர்கள் இருவரையும் கொன்றார்.

வழக்கம் போல சிவபெருமான் தோன்றி இறந்தவர்களை எழுப்புகிறார். எறிபக்த நாயனார் சிறிது காலம் வாழ்ந்து திருக்கயிலையில் சிவகணங்களுக்கு தலைவரானார். கொஞ்சப் பூக்கள் கொட்டப்பட்டதாற்காக ஆறு உயிர்களை கொன்றவர் நாயனார் என்று அழைக்கப்படுகிறார். பக்தர் என்று போற்றப்படுகிறார். சிவகணங்களுக்கு தலைவர் ஆக்கப்படுகிறார்.

சிறுத்தொண்டர் என்ற நாயனார். அவரது இயற்பெயர் பரஞ்சோதி. சோழ மன்னன் அவையில் அமைச்சராக இருந்தவர். பின்னர் சிவத்தொண்டில் ஈடுபடுகிறார். அவரது மனைவி பெயர் திருவெண்காட்டு சந்தன நங்கை. இவர்களுக்கு பிறந்த பிள்ளைக்கு சீராளதேவர் என்ற பெயர் சூட்டப்பட்டது.

ஒரு நாள் ஒரு சிவனடியார் சிறுத்தொண்டர் வீட்டுக்கு வருகிறார். ‘நான் வடதேசத்தை சேர்ந்தவன். நாம் ஆறு மாதத்துக்கு ஒருமுறைதான் உணவு கொள்ளும் இயல்பினோம். அன்று பசுவைக் கொன்று சமைத்து உண்பது நமது வழக்கம். இஃது உமக்கு அருமையன்றோ?’ எனக் கேட்கிறார்.

‘சிக்கல் இல்லை. என்னிடம் பசுக்கள் இருக்கின்றன. அதில் ஒன்றை வெட்டி கறி சமைக்கலாம்’ என விடை பகர்கிறார் சிறுத்தொண்டர்.

சிவனடியார் தாம் பசு என்று குறிப்பிட்டது நரபசு. அந்த ‘மெனு’ எப்படி தயார் செய்ய வேண்டும் என்று விளக்கம் கொடுக்கிறார்.

‘சமையலுக்கு வெட்டப்படும் அந்தச் சிறுவன் ஒரு குடிக்கு ஒருவனாய் இருத்தல் வேண்டும். அவனைத் தாய் உவந்து பிடிக்க தாதையும் உவந்தே அரிதல் வேண்டும். இவ்வாறு சமையல் செய்தால் நாம் உண்போம்’ என்றார்.

உணவு தயார் ஆகிறது. தலை சமையலுக்கு உதவாது என்பதால் அது விலக்கப்படுகிறது. மற்ற உறுப்புக்கள் எல்லாம் சமைக்கப்பட்டன. சோறும் ஆக்கப்பட்டது.

‘நம்முடன் உணவு கொள்வதற்கு பிள்ளை இல்லையோ? அவன் இல்லாமல் நாம் உண்ணோம். அவனைத் தேடி அழைத்து வாரும்” எனக் கட்டளை இடுகிறார் சிவனடியார்.

சிறுத் தொண்டர் செய்வதறியாது திகைத்து பின்னர் ‘சீராளா ஓடி வா!’ எனக் கூவி அழைக்கிறார். பள்ளியில் இருந்து ஓடி வருபவனைப் போல் சீராளன் ஓடி வந்தான்.

வழக்கம் போல சிவனடியாராக வந்த சிவபெருமான் மறைந்தருளினார். கதை முடிகிறது.

இந்த அருவருக்கத்தக்க, குப்பைக் கதையெல்லாம் வன்தொண்டர் எழுதிய திருத்தொண்டர் தொகை, நம்பியாண்டார் நம்பி எழுதிய திருவந்தாதி, சேக்கிழார் எழுதிய பெரிய புராணத்தில் இவற்றில் இருந்து எடுக்கப்பட்டவை. இந்த வகைக் கதைகள் இன்னும் ஏராளம் இருக்கின்றன.

கடவுளர்களது மகத்துவத்தை கூற பாடப்பட்டவைதான் புராணங்கள். ஆனால் கடவுள் மகத்துவத்தை நாகரிகமான முறையில், நாலுபேர் மனம் கூசாமல் படிக்குமாறு எடுத்துச் சொல்லக் கூடாதா?

தெய்வீகம், பக்தி என்ற போர்வையில் தேவையற்ற, நாகரிக்கத்துக்கு புறம்பான செயல்களை நல்ல செயல்களாகக் காட்ட இப்படியான புராணக் கதைகளை எழுதுவது சரியா?

கடவுள் தனது பக்தனை சோதிப்பதை எடுத்துக்காட்ட பிள்ளைக் கறி சேட்கும் கதை மூலம் சொல்லப்பட வேண்டுமா? வேறு வழி இல்லையா? பிள்ளைக் கறி கேட்கும் கடவுளைப் பற்றி இந்தக் காலத்து இளைஞர்கள் என்ன நினைப்பார்கள்?

பெற்ற பிள்ளையை நேர்த்தியாக அரிந்து கறி சமைக்கும் சிறுத்தொண்டரது குருட்டு பக்தி பற்றியும் அவரது மனைவியின் பதிபக்தி பற்றியும் ஒழுக்கம் ஒழுக்கக்கேடு, நற்செயல் தீச்செயல் ஆகியவற்றைப் பிரித்துப் பார்க்கும் வல்லமை படைத்தவர்கள் என்ன நினைப்பார்கள்?

வீட்டைச் தூய்மையாக வைத்திருக்க ஒவ்வொரு நாளும் பெருக்குகிறோம். பெருக்குகிற குப்பையை வெளியில் தள்ளுகிறோம். ஒவ்வொரு நாளும் குளித்து உடலில் படிந்துள்ள அழுக்கை சோப் போட்டு அகற்றுகிறோம்.

ஆனால் இப்படி இழிவான, காலத்துக்கு ஒவ்வாத குப்பைக் கதைகளை மட்டும் ஏன் வீச மறுக்கிறோம்?

இந்தப் புராணக் கதைகள் தவறானவை, பொருளற்றவை என்று கண்டிக்காமல் அவற்றுக்கு அசட்டுச் சமாதானங்களையும் அர்த்தமற்ற தத்துவப் பேச்சுக்களையும் முரட்டு வியாக்கியானங்களையும், முரண்பட்ட பேச்சுக்களையும் மதவாதிகள் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.

நாயன்மார்கள் பற்றிச் சொன்னேன். இதோ ஒரு வைணவ ஆழ்வார் பற்றிய கதை.

இன்றைய தஞ்சை, திருச்சி இணைந்த சோழவள நாட்டில் உள்ள திருமண்டங்குடி என்ற சிற்றூரில் அவதரித்தவர் தொண்டரடி பொடியாழ்வார். இவருக்கு பெற்றோர் ‘’விப்பிரநாராயணர்’ எனப் பெயரிட்டனர். இந்தப் பெயரில் ஒரு திரைப்படம் கூட வெளிவந்தது.

திருமணத்தில் விருப்பமில்லாத இவர், ஸ்ரீரங்கம் இரங்கநாதப் பெருமானையும், இரங்கநாயகி தாயாரையும் நாளும் வழிபடும் பொருட்டு அத்தக் கோயிலிலேயே தங்கி விட்டார். நந்தவனம் அமைத்து, அன்று மலர்ந்த மலர்களால் மாலை தொடுத்து, பெருமாளுக்கு நாளும் சாத்தி இறைபணி செய்து வந்தார்.

ஸ்ரீரங்கம் அருகிலுள்ளது உத்தமர்கோவில். திருமால், பிரம்மா, சிவன் இணைந்திருக்கும் தலம.; இங்கே தேவதாசி குலத்தில் பிறந்த தேவதேவி என்பவள் தன் மூத்த உடன்பிறப்புடன் வாழ்ந்து வந்தாள். அவள் ஒருமுறை ஸ்ரீரங்கம் வந்த போது, விப்பிரநாராயணரின் நந்தவனத்தைப் பார்த்து அதன் அழகில் சொக்கிப் போனாள்.

இந்த நந்தவனமே இப்படி அழகு என்றால், நந்தவனத்து சொந்தக்காரன் எவ்வளவு அழகாயிருப்பான் என எண்ணிப் பார்த்தாள். அவள் நினைத்தது போலவே விப்பிரநாராயணரும் மிக அழகாக இருந்தார். அந்த இளைஞனை எப்படியும் அடைந்தே தீருவேன் என்று அவள் முடிவு செய்தாள்.

®இறைவனுக்கு சேவை செய்யும் ஒருவரை நம் போன்ற தாசிகள் தீண்டுதல் தகாது…’ என்று அறிவுரை நல்கினாள் மூத்தவள். தேவதேவி அதைப் பொருட்படுத்தாமல் விப்பிரநாராயணரின் நந்தவனத்தின் நடுவேயிருந்த குடிலுக்கு காவி உடையுடன் பக்தை போல் சென்றாள். அந்த மலர் தோட்டத்தை பராமரிக்கும் பணி செய்ய அனுமதி வேண்டினாள்.

அவளது தோற்றம் கண்டு ஐயம் கொள்ளாத அப்பாவியான விப்பிரநாராயணரும் நந்தவனத்தில் தனியிடத்தில் தங்க அனுமதித்தார். அவள் செடிகளுக்கு ஒவ்வொரு நாளும் தண்ணீர் ஊற்றுதல், மலர் பறிப்பதில் உதவுதல் என விப்பிரரின் நம்பிக்கையைப் பெற்றாள். சில மாதங்கள் கடந்து விட்டன.

ஒருநாள் கடும் மழை மழையில் நனைந்தபடியே நந்தவனத்துக்குள் வந்தார் விப்பிரநாராயணர். தொப்பல், தொப்பலாக நனைந்திருந்த அவரது தலையைத் துவட்டுவது போல் நடித்து, தன்னழகால் மயக்கி வீழ்த்தினாள் தேவதேவி.

இரங்கநாதர் மீது இருந்த விப்பிரநாராயணர் காதல் தேவ தேவி மீதான காமம் ஆக மாறியது. அதன்பின் அவளே கதியெனக் கிடந்தார். அவரிடமிருந்த பொருளைக் கவரும் வரை அங்கிருந்த தேவதேவி, காரியம் முடிந்ததும் உத்தமர் கோவிலுக்குப் போய்விட்டாள்.

விப்பிர நாராயணருக்கு அவளது பிரிவைத் தாங்க முடியவில்லை உத்தமர் கோயிலுக்கு அவளைத் தேடி வந்தார்

ஆனால், பொருளின்றி அங்கு வர வேண்டாம் என அடித்துச் சொல்லி விட்டாள் தேவதேவி. (வளரும்)


சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள் (10)

சாதி மத பேதங்களை எதிர்ப்பது நாத்திகம் அல்ல!

நக்கீரன்

தன் அடியவனை மேலும் சோதிக்க விரும்பிய இரங்கநாதர் கோவிலில் உள்ள ஒரு தங்கப் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு தேவதேவியின் இல்லத்திற்கு ஒரு பணியாளன் வேடத்தில் சென்றார். தன் பெயர் அழகிய மணவாளன் என்றும், அதை விப்பிரநாராயணர் கொடுத்தனுப்பியதாகவும், அன்றிரவு அவர் அங்கு வருவதாகவும் கூறினார். விப்பிரரும் வழக்கம் போல் அங்கு செல்ல அவரை வரவேற்று உபசரித்தாள் தேவதேவி. அன்றிரவு அங்கே தங்க அனுமதித்தாள்.

மறுநாள் கோவிலில் தங்கப் பாத்திரம் காணாமல் போன தகவல் அர்ச்சகர்கள் மூலம் அரசனுக்கு சென்றது. ஏவலர்கள் வீடுகளைச் சோதனையிட்டனர். தேவதேவி வீட்டில் பாத்திரம் சிக்கியது. விசாரணையில் அதை அவளுக்கு விப்பிரநாராயணர் கொடுத்த தகவல் தெரிந்தது.

திருட்டுப் பாத்திரத்தை வாங்கிய குற்றத்துக்காக தேவதேவிக்கு வெறும் அபராதம் மட்டுமே விதிக்கப்பட்டது. ஆனால், திருட்டு வழக்கில் சந்தேகக் கைதியான விப்பிரநாராயணரை சிறையில் அடைத்தான் மன்னன்.

இரங்காநாதர் மன்னனின் கனவில் தோன்றி, நடந்த விபரங்களை எடுத்துரைத்தார். விப்பிரநாராயணரை விடுதலை செய்தான் மன்னன்.

அவர் மனம் திருந்தி, அடியவர்களின் பாதங்களைக் கழுவி, அத்தீர்த்தத்தைப் பருகி, இறைவனின் அருளை மீண்டும் பெற்றார். பக்தர்களுக்காக சிறிய பணிகளையும் சிரமேற்கொண்டு செய்தார். இதனால் ‘தொண்டரடிப் பொடியாழ்வார்’ எனப் பெயர் பெற்று பல்லாண்டு வாழ்ந்து இறைவனோடு கலந்தார்.

இந்தக் கதை கற்பிக்கும் பாடம் என்ன? பக்தனின் தாசி மோகத்தை தீர்த்து வைக்க இரங்கநாதரே பணியாள் போல் வேடம் பூண்டு தங்கப் பாத்திரத்தை விப்பிரநாராயணர் கொடுத்ததாகக் தேவதேவியிடம் கொடுக்கிறார். காவி கட்டிய சந்நியாசி தாசி வீடே கதியெனக் கிடந்து உலைந்தாலும் பருவாயில்லை, அப்படிப்பட்ட ஒருவர் இரங்கநாதரிடம் பக்தி வைத்தால் போதும். அவருக்கு இந்த உலகில் சிற்றின்பமும் அடுத்த உலகில் பேரின்பமும் கிடைக்கும்.

பக்திக் கதைகளை மக்கள் படித்தால் அவர்களிடையே இறையுணர்வு பெருகும், அருள் கிடைக்கும், அன்பு மலரும், ஆணவம் ஒழியும், வீடுபேறு எளிதில் கிடைக்கும் என்கிறார்கள்.

ஆனால் எனக்கு இந்தக் கதைகளைப் படிக்க வயிற்றைக் குமட்டிக் கொண்டு வருகிறது! கடவுள் பக்தியை விளக்க வேறு கதைகள் கிடைக்கவில்லையா? நரமாமிசம் கேட்கும் கடவுள் அதனைச் சமையல் செய்து கொடுக்கும் பக்தர்; இவர்கள்தான் கிடைத்தார்களா?

இன்றைய தலைமுறையினருக்கு பக்தியின் பெயரால் இந்தக் கதைகளைச் சொல்லிக் கொடுத்தால் இந்து சமயம் காட்டுமிராண்டிகளின் சமயம் என நினைப்பார்கள். அப்படி நினைத்தால் அது அவர்கள் குற்றமல்ல.
இப்படி நான் எழுதினால் கைவிரல் விட்டு எண்ணக்கூடிய இந்து மதவாதிகள் புத்தியைத் தீட்டுவதற்குப் பதில் கத்தியைத் தீட்டுகிறார்கள். காஞ்சி சங்கராச்சாரியார் சங்கரராமனைத் தீர்த்துக் கட்டியது போல தீர்த்துக் கட்டிவிடுவோம் என மிரட்டுகிறார்கள்.
முழக்கம் நாத்திக ஏடு. நக்கீரன் நாத்திகன் என நாலாவது தமிழில் திட்டுகிறார்கள்.
எமது அக்கறை எல்லாம் எமது இனம், எமது மொழி, எமது பண்பாடு பற்றியது. எமது இனத்தை தாழ்த்த நினைப்பவர்கள், எமது மொழியை பழிப்பவர்கள், பண்பாட்டைப் இழித்துரைப்பவர்கள் எமது எதிரிகள்.
இப்படியான புராணக் கதைகள் மிகைப்படுத்தி புராணிகர்களால் எழுதப்பட்டவை. அவற்றை பெரிதுபடுத்த வேண்டியதில்லை என்று சிலர் சொல்லலாம். அது சரியாகவும் இருக்கலாம்.

‘நன்று புராணங்கள் செய்தார் – அதில்
நல்ல கவிதை பலப்பல தந்தார்
கவிதை மிகநல்ல தேனும் – அக்
கவிதைகள் பொய்யென்று தெளிவுறக் கண்டோம்
புவிதனில் வாழ்நெறி காட்டி – நன்மை
போதிக்கும் கட்டுக் கதைகள் அவைதாம்’
எனப் பாரதியார் புராணக் கதைகள் பொய்யென்று தெளிவாகச் சொல்கிறார்.
“கலையுரைத்த கற்பனையே நிலையெனக் கொண்டாடும்
கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப் போக’

என்று இராமலிங்க அடிகள் பாடுகிறார்.

புராணக் கதைகள் கட்டுக்கதைகளே. அல்லது சிறிய அளவிலான உண்மை வரலாற்று நிகழ்ச்சிள் பல மடங்கு மிகைப் படுத்திக் கூறப்பட்டவை ஆகும். குருட்டு நம்பிக்கைகளை மூடக் கொள்கைகளை பக்தி என்ற போர்வையில் நியாயப்படுத்துவதற்கு புனையப் பட்டவை.

எடுத்துக்காட்டாக ஆரியர்களது நளாயினி கதையைக் கூறலாம். நளாயினி தனது தொழுநோய் பிடித்த கணவனை ஒரு கூடையில் வைத்து தாசி வீட்டுக்குச் சுமந்து செல்கிறாள். இது அவள் ஒரு கற்புக்கரசி என சித்தரிப்பதற்காக கட்டப்பட்ட கதை.

இராமன் மனைவி இராவணனால் கவர்ந்து செல்லப்பட்டு பல ஆண்டுகள் அசோகவனத்தில் சிறை வைக்கப்பட்டவள். இராவணனைக் கொன்று சீதையை சிறை மீட்ட இராமன் அவளை படம் விரித்த ஒரு பாம்பு போலச் சீறி எழுந்து கோபத்தோடு பார்க்கிறான்.

ஊண்திறம் உவந்தனை, ஒழுக்கம் பாழ்பட
மாண்டிலை, முறைதிறப்(பு) அரக்கன் மாநகர்
ஆண்டுறைந்(து) அடங்கினை, அச்சம் தீர்ந்(து) இவண்
மீண்ட(து) என் நினை(வு) எனை விரும்பும்! என்பதோ?

(கம்பராமாயணம்-யுத்தகாண்டம் 966)

இராவணனை அழித்ததெல்லாம் உன்னை மீட்கும் பொருட்டு அன்று. எனக்கு நேர்ந்த பழியைத் நீக்கிக் கொள்ளும் பொருட்டே ஆகும். நீ இறந்து படு. இன்றேல் எங்கேயாவது போய்விடு என்றெல்லாம் இராமன் பித்துப் பிடித்தவன் போல் பேசுகிறான். இராமன் இறந்து படு என்று சொன்னதால் சீதை தீக்குளித்து தன் கற்பை எண்பிக்கிறாள்.

ஆனால் இன்று கற்பைப் பற்றிய மதிப்பீடு மாறிவிட்டது. கற்பென்று சொல்ல வந்தால் அது ஆண் பெண் இருவருக்கும் பொதுவில் வைக்க வேண்டும் என்ற கருத்து வேரூறின்றி விட்டது.

இன்று சீதை உயிரோடு இருந்தால் இராமனுக்கு இன்னொரு குழி வெட்டுமாறு இலக்குவனிடம் சொல்லி அதில் இராமனைத் தீக் குளித்து அவனது கற்பை எண்பிக்குமாறு கேட்டிருப்பாள்!
இன்று அருந்ததி இருந்தால் பரத்தமைக்கு எதிரான சட்டம் அவள் மீது பாயும். இன்று சீதை இருந்தால் தற்கொலை செய்ய முயற்சித்த குற்றத்துக்காக கைது செய்யப் பட்டிருப்பாள். தற்கொலை செய்ய தூண்டிய குற்றத்தில் இராமனும் கைது செய்யப்பட்டிருப்பான்.

வேறு விதத்தில் சொன்னால் காலம் மாறும் போது கருத்தும் மாறுகிறது. பழையன கழிந்து புதியன புகுகிறது. அது வழுவல்ல. இன்று பெண் அடிமைத்தனம் முழுமையாக இல்லாவிட்டாலும் பெருமளவு ஒழிக்கப்பட்டு விட்டது. உடன்கட்டை ஏறல், இளம்பெண் திருமணம் சட்டப்படி தடை செய்யப்பட்டுவிட்டன.

இந்து மதம் கொடிய பாபங்கள் என்று சொல்லும் கள், களவு, புலால் உண்ணல் போன்றவற்றை விலக்கும் இந்துக்கள் குறைவு. பெரிய புராணத்தை படிக்கும் அல்லது படித்த இந்துக்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அதில் சொல்லப்பட்ட கதைகள் அவர்களுக்கு முழுமையாகத் தெரியாது.

ஆனால் பிள்ளைக் கறி சமைத்துக் கொடுத்த சிறுத்தொண்டரையும் கட்டிய மனைவியை சிவனடியாரோடு அனுப்பி வைத்த இயற்பகையையும் கோயிலில் வைத்து வழிபடுகிறார்கள்.

இரணியன் பிரகலாதன் கதை எல்லோருக்கும் தெரியும். கதையைப் படியாவிட்டாலும் அதுபற்றிக் கேள்விப்பட்டிருப்பார்கள். இதுவும் திரைப்படமாக பல ஆண்டுகளுக்கு முன் வெளிவந்தது.

இந்தப் புராணக் கதை ஆரிய வேதமத சாத்திரங்களையும், யாகம் வளர்த்து அதில் ஆடு மாடு போன்ற உயிர்கள் பலியிடப்படுவதையும் எதிர்த்த திராவிடர்களை நாத்திகர்கள் என்று காட்டுவதற்காக எழுதப்பட்டது.

பிறப்பில் வேற்றுமைகள். ஏற்றத் தாழ்வுகள். புரோகிதம் செய்ய உயர் சாதியினருக்கே உரிமை,

இன்ன சாதியினர்தான் கடவுளை பூசிக்கலாம், சோறு படைக்கலாம், குளிப்பாட்டலாம்,

சமஸ்கிருதம் தேவ மொழி! தமிழ் நீச மொழி! தமிழ் பைஸாச மொழி, தமிழில் வழிபாடு கூடாது, காரணம் கடவுளுக்குத் தமிழ் புரியாது, தெரியாது.

சூத்திரத் .தமிழன் கோயில் பூசை செய்யக்கூடாது, அவனுக்கு புசை செய்யும் அருகதை இல்லை.

தமிழன் கட்டிய கோயிலுக்குள்ளே அவன் நுளையக் கூடாது. அந்தத் தீட்டைப் போக்க குடமுழுக்கு (கும்பாபிசேகம் ) செய்ய வேண்டும். ஆனால் தமிழில் குடமுழுக்குச் செய்யக் கூடாது, அதனை ஆகமம் அனுமதிக்காது.

இவ்வாறெல்லாம் சாத்திரங்கள் சொல்லுமேயானால் மகாகவி பாரதியார் பாடியிருப்பதைப் போல் அவை சாத்திரங்கள் அல்ல தமிழினத்துக்கு எதிரான சதியென்று சொல்வேன்.

காஞ்சி காமகோடி பீட ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் தமிழ்நாட்டில் இருந்து கொண்டு, தமிழ்க் காற்றை சுவாசித்துக் கொண்டு, காவிரித் தண்ணீரைக் குடித்துக் கொண்டு தமிழ் நீச பாஷை எனப் பகிரங்கமாக மேடைகளில் பேசுகிறார். இந்துக் கடவுளர்க்கு தமிழ் தெரியாது என்று இறுமாப்போடு சொல்கிறார்.
சந்திரமவுலீஸ்வரருக்கு பூசை செய்யும் நேரம்வரை நீச பாஷையான தமிழில் பேச மாட்டார். தமிழில் பேசுவதைத் தவிர்ப்பதற்காக மவுன விரதம் இருக்கிறார்!
தலித்துகளைக் கோயிலில் அனுமதிக்கக் கூடாது என்று சொல்கிற ஜெகத் குருவும் இந்த சங்கராச்சியார்தான்.

அறுபத்து மூன்று நாயன்மார்களை சாதிவாரியாக, அந்தந்த சாதியார் அந்தந்த நாயன்மாரை வழிபட வேண்டும் என்று கூறி வருணதர்மத்தின் வேருக்கு தண்ணீர் ஊற்றுகிறவரும் இவர்தான். அதற்கு சாமரம் வீசுபவரும் இவர்தான். சாதி பேதத்திற்கு புத்துயிர் ஊட்டுபவரும் இவர்தான்.

ஏனைய மதங்கள் மக்களை அணைத்து ஒன்றுபடுத்துகிறது. இந்து மதம் ஆயிரம் சாதிகளாக மக்களைக் கூறு போடுகிறது! தீண்டாமை பாராட்டுகிறது!
மேலே குறிப்பிட்ட சங்கராச்சாரியார் வேறு யாருமல்ல. காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமனைக் கொலை செய்தது, கொலை செய்ய சதி செய்தது போன்ற குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்டு இரண்டு மாதம் வேலூர் சிறையில் கம்பி எண்ணிய பின்னர் பிணையில் வெளிவந்துள்ள அதே காஞ்சி காமகோடி பீட ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சியார்தான்.

‘இறைவன் ஒரு மொழிக்கே உரியவன் என்பது இறைவனுடைய குறைவிலா நிறைவுத் தன்மைக்கு (எல்லாம் தெரிந்தவர்) குறை கற்பிப்பதாகும். இறைவனுக்கு விருப்பமான மொழி என்றும் விருப்பம் இல்லாத மொழி என்றும் ஒன்றும் இல்லை.

‘நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும்’ தமிழ் ஞானசம்பந்தர், ‘தமிழோடு இசை பாடல் மறந்தறியாத’ அப்பர், ‘நீர் தமிழோடிசை கேட்கும் இச்சையால் காசு நித்தல் நல்கினீர்’ என்று பாடிய சுந்தரர் இவர்களைவிட காஞ்சி சங்கராச்சாரியார் பக்தியில் உயர்ந்தவரா? அருளில் சிறந்தவரா? அறிவில் பெரியவரா? ஒழுக்கத்தில் சிறந்தவரா?
இந்து மதத்தில் காணப்படும் மூடபக்தி, சாதி, தீண்டாமை, பிராமணிய ஆதிக்கம், சமஸ்கிருத மேலாண்மை, காலத்துக்கு ஒவ்வாத சாத்திரங்கள், கோத்திரங்கள், சம்பிரதாயங்கள் ஆகியவற்றை எதிர்ப்பது நாத்திகம் என்றால் வள்ளுவர், சம்பந்தர், அப்பர், சுந்தரர், திருமூலர், தாயுமானவர், இராமலிங்க அடிகள், பாரதியார், சிவவாக்கியார் மற்றும் சித்தர்கள் எல்லோருமே நாத்திகர்கள்தான். அடுத்த கிழமை அவர்களைச் சந்திப்போம். (வளரும்)


சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள் (11)

தமிழகத்தில் கால் பதித்த மதங்கள்

நக்கீரன்
திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் தமிழர் பண்பாட்டுக்கு வேலி கட்டிய நூல். ஆரிய தர்மத்தையும் மனு தர்மத்தையும் அடியோடு கண்டித்தும் மறுத்தும் எழுதப்பட்ட ஒழுக்க நூல். நீதி நூல். சிந்திக்கச் சொல்லும் நூல். பகுத்தறிவு புகட்டும் நூல். பொது மறை. திருக்குறளை காய்தல் உவத்தல் இன்றி ஊன்றிப் படிப்பவர்கள் இந்த உண்மைகளை புரிந்து கொள்வார்கள்.

தொல்காப்பியத்தில் கடவுள் என்ற சொல் இரண்டோர் முறைதான் சொல்லப்பட்டிருக்கிறது. அப்படிப் சொல்லப்படும் போதும் அது தெய்வம் என்ற பொருளில்தான் சொல்லப்பட்டிருக்கிறது. இன்றைய எல்லாம் தெரிந்தவன், எல்லாம் வல்லவன், எங்கும் நிறைந்தவன், தோற்றமும் அழிவும் இன்றி என்றும் உள்ளவன் என்ற பொருளில் அது கூறப்படவில்லை.
கடவுளுக்கு கற்பிக்கப்படும் எண் குணங்களான –

1) தன் விருப்பம்போல் எதையும் செய்வோன்
2) ஒரே நேரத்தில் முக்காலத்தையும் அறிபவன்,
3) எல்லா அறிவையும் இயல்பாய் உடையோன்
4) அளவிலா ஆற்றல் பெற்றோன்
5) வரம்பிலா இன்பம் உடையவன்
6) பேரருளாளன்
7) பாசங்கள் சாராதவன்
8) தூயவன்
பிற்காலத்தில் எழுந்தவையாகும்.
சங்க காலத்தின் முற்பகுதியில் மதம் இருக்கவில்லை. போரில் விழுப்புண் பட்டு வீரச் சாவு எய்திய படை வீரர்களுக்கு ஊர்ப்புறத்தில் நடுகல் நாட்டி படையல் படைத்து வழிபடும் வழக்கம் பரவலாக இருந்து வந்தது. சிறு தெய்வ வணக்கம் இருந்திருக்கிறது.

சங்க காலப் பிற்பகுதியிலும் ஒரு நிறுவன மதம் (ழசபயnணைநன) இருக்கவில்லை. ஆனால் ஆரியரரது சமயமான வைதீக நெறியும் ஆரியக் கடவுளரும் தமிழ் நாட்டில் மெல்ல மெல்ல கால் பதிக்கத் தொடங்கின. முதலில் நாடாளும் மன்னர்களே வேத நெறியைத் தழுவினார்கள்.

சிலப்பதிகாரம் (இரண்டாம் நூற்றாண்டு) இந்திர விழா எடுத்த காதையில் பிறவா யாக்கை பெரியோன் கோயில், ஆறுமுகத்தையுடைய செவ்வேள் கோயில், பலதேவன் கோயில், நீலமேனி நெடியோன் கோயில், இந்திரன் கோயில், நால்வகைத் தேவர் மூவாறு கணங்கள், பவுத்த பள்ளிகள், சமணப் பள்ளிகள், வேள்விச் சாலைகள் மற்றும் வேறு வேறு கடவுளர் பல்கிப் பெருகி இருந்ததைக் காண முடிகிறது.

எட்டுத்தொகை பத்துப்பாட்டு நூல்களுக்கு கடவுள் வாழ்த்துப் பாடப்படவில்லை. பிற்காலத்தில்தான் பாரதம் பாடிய பெருந்தேவனார் அவற்றுக்கு கடவுள் வாழ்த்துப் பாடினார்.

சிலப்பதிகாரத்துக்கு முந்திய திருவள்ளுவருடைய காலத்தில் சமணம், பவுத்தம், வைதீக மதமான ஆரிய தர்மமும் தமிழகத்தில் ஊடுருவிட்டன.
சமண, பவுத்த மதங்களே தமிழர்களிடையே துறவறத்தை முதன் முதலில் அறிமுகப்படுத்தின.

திருக்குறளில் சமண, பவுத்த கோட்பாட்டை ஒட்டிய கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன. கொல்;லாமை, புலால் மறுத்தல், கள் உண்ணாமை, நிலையாமை, பிறன் இல்விளையாமை, துறவு, வாய்மை, அழுக்காறாமை, வெஃகாமை, அவா அறுத்தல் இந்த இரு மதங்களது கோட்பாடுகளுக்கு இசைவானதாகும்.

சங்க காலத் தமிழரிடையே நிலவி வந்த புலால் உண்ணல், கள் உண்ணல், பரத்தையர் உறவு திருக்குறளில் மிகவும் கண்டிக்கப்படுகிறது.

திருவள்ளுவர் மனுதர்ம கொள்கையை மறுத்து உரைக்கிறார். மனுதர்மம் பிறவியினாலே பார்ப்பான் உயர்ந்த சாதி என்கிறது. திருக்குறள் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற குறள் மூலம் மனித குலம் ஒன்று அதில் உயர்வு தாழ்வு இல்லை என ஆணித்தரமாக நிலை நாட்டுகிறார்.

மனுதர்மம் ஆரியன் (பார்ப்பான்) தொழிலைச் செய்கிற அனாரியன் (தமிழன்) ஆரியன் ஆக மாட்டான், அனாரியன் தொழிலைச் செய்கிற ஆரியன் அனாரியனுமாக மாட்டான் என்கிறது.

‘ஏகமேவது சூத்ரஸ்ய ப்ரபு: கர்மஸமாதிசத்?
எதேஸாமேவ வர்ணானாம் கஸ்ரூஷா மனஸ_யயா‘ (மனுதர்மம்)
திருக்குறள் பிறப்பின் அடிப்படையில் அல்லாது ஒழுக்கத்தின் அடிப்படையில் மட்டும் பார்ப்பனன் தன்னை உயர்ந்தவன் என்று சொல்லிக் கொள்ளலாம். ஒழுக்கமற்றவன் பார்ப்பானாயினும் கெட்டவன்தான் என்கிறது.

மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும். (குறள் -134)

பார்ப்பான் கற்ற மறைகளை மறந்தாலும் மீண்டும் அவற்றைக் கற்றுக் கொள்ளலாம். ஆனால் மக்கட் பிறப்புக்குரிய ஒழுக்கத்தில் இருந்து குறைந்து விடுவானேயானால் அவனுடை குடிப்பிறப்பு கெட்டுவிடும்.

தமிழர்கள் தங்கள் பண்பாடு, நாகரிகம் பற்றி பெருமைப்பட வைக்கும் ஒரே நூல் திருக்குறள்தான்;! தமிழர்கள் உலகுக்குத் தந்த அரிய கொடை திருக்குறள்தான்;! திருக்குறள் உலகப் பொதுமறை என்பது உண்மைதான்!

அதனால்தான் மகாகவி பாரதியார் ‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு’ எனப் போற்றினார்.

மக்கள் அனைவரும் ஒரே குலம் என்பதை இன, மொழி, தத்துவம், சமயம் இவற்றுக்கு அப்பால் நின்று உலக மக்கள் அனைவருக்கும் பொதுவான விழுமியங்களை இந்த நூல் மூலம் அறிவியல் தளத்தில் இருந்து திருவள்ளுவர் அறிவுறுத்துகிறார்.

அடுத்த உலகில் அல்ல இந்த உலகில் வாழ்வாங்கு வாழ வழி காட்டுகிறார். அவரிடம் தெய்வன்தன்மையோ அருளோ இல்லை.
வாழ்க்கை என்ற ஓடத்தை செலுத்த வழியை மட்டும் காட்டுகிறார். அவர் காட்டிய வழியில் செல்ல வேண்டிய பொறுப்பு மனிதர்களைச் சார்ந்தது.
பிற்காலத்தில் வாழ்ந்த புலவர்கள் திருவள்ளுவரை புலவர்க்கு அரசன் எனப் போற்றியும் திருக்குறளை வேதம் என ஏற்றியும் பாராட்டியுள்ளனர்.
தண்ணிய தமிழில் பாடிய திருவள்ளுவ மாலை என்ற நூலில் கீழ் வரும் பாடல் இடம் பெற்றுள்ளது. பாடலைப் பாடியவர் கல்லாடனார் என்ற புலவர்-

ஒன்றே பொருள் எனின்வேறு என்ப, வேறு எனின்
அன்று என்ப ஆறு சமயத்தார்- நன்றென
எப்பலா லவரும் இயையவே, வள்ளுவனார்
முப்பால் மொழிந்த மொழி.’                     (திருவள்ளுவ மாலை 9)

அறுவகை சமயத்தோரும் ஒரு சமயத்தோர் தமது நூலிலே உலகமும் உயிரும் கடவுளுமாகிய பொருள்கள் ஒன்றே என்று நாட்டுவார்கள்.
மற்றொரு சமயத்தார் தம் நூலிலே அதனை மறுத்து அவை வேறாம் என்று நாட்டுவர்.

அப்படி வேறென்று நாட்டின், பின்னொரு மதத்தார் அதனை அன்றென்று மறுப்பர்.

இவ்வாறு சமய நூல்கள் எல்லாம் முரண்படுகின்றன.

திருவள்ளுவராலே முப்பாலாகச் சொல்லப்பட்ட குறளை நன்றென்று கொள்ளுதற்கு எவ்வகைப் பட்டோரும் உடன்படுவர்.
ஒவ்வொரு சமயத்திலும் அந்த சமயத்துக்குரிய நூல் அல்லது நூல்கள் மனிதர்களால் தங்கள் புத்திக்கெட்டியபடி எழுதப் பட்டவையே. அதனாலேயே அவற்றில் முரண்பாடுகள் காணப்படுகின்றன.

சமணமும் பவுத்தமும் வைதீக நெறிகளையும், வேள்விச் சடங்குகளையும், கடவுட் கொள்கைகளையும் மறுத்துக் கூறின. எதிர்த்து வாதிட்டன.
துவைத வேதாந்தக் கோட்பாட்டை அத்வைத வேதாந்திகள் ஒத்துக் கொள்வதில்லை. இரண்டும் நேர் எதிரானவை.
இறைவனே உயிர் என்பது வேதாந்தக் கொள்கை. பொருட் தன்மையில் உயிர் வேறு இறைவன் வேறு. உயிர் இறைவனல்ல என்பதை சித்தாந்திகள் ஒத்துக் கொள்வதில்லை.

சங்கரரின் (கிபி 788-820) அத்வைதத்தை (ஆன்மாவே இறைவன்) இராமனுசர் ( கிபி 1012-1137) ஏற்க மறுத்து விசிட்டாத்துவைத கோட்பாட்டை உருவாக்கினார்.
பிரமம் நிர்க்குணமா? அல்லது சகுணமா? என்ற கேள்விக்கு பிரம்மம் சகுணம் என்ற கொள்கையை இராமனுசர் கொண்டிருந்தார்.

சிவனை முழுமுதற் கடவுளாகக் கொண்ட சைவம் திருமாலை முழுமுதற் கடவுளாகக் கொண்ட வைணவமும் நீண்ட காலமாக சண்டையிட்டு வந்திருக்கின்றன.
இந்த வைதீக, வேத, சைவ கோட்பாடுகளை கிறித்துவ, இஸ்லாமிய சமயக் கணக்கர்கள் ஒத்துக் கொள்வதில்லை!

கிறித்துவ மதக் கோட்பாட்டை முற்றாக இஸ்லாம் ஏற்றுக் கொள்வதில்லை. யேசு கடவுளின் மகன் என்பதை இஸ்லாம் ஏற்றுக் கொள்வதில்லை.
இடைக் காலத்தில் வைணவமும் சைவமும் ஒன்றோடு ஒன்று போரிட்டு வந்திருக்கின்றன.

மேலே கூறியது போல் மனிதர்கள் தங்கள் தங்கள் அறிவுக்கு எட்டியபடி, தங்கள் தங்கள் பட்டறிவுக்கு எட்டியபடி கோட்பாடுகளை உருவாக்கியதால் அவை ஒன்றுக்கு ஒன்று முரண் பட்டன.

மதக் கோட்பாடுகள் போலவே சமயக் கடவுளரும் மனிதர்களால் உண்டாக்கப்பட்டவையே. ஒவ்வொரு சமயமும் தங்கள் கடவுளே மெய்யான கடவுள் என்றும் ஏனைய மதக் கடவுளர் பொய்யான கடவுளர் என்றும் சண்டை பிடிக்கின்றன.

திருக்குறளின் பெருமைக்கு பல காரணம் இருக்கலாம். ஆயினும் இரண்டு காரணங்கள் அதன் அத்தனை மாண்புக்கும் அடிப்படையாக இருக்கின்றன. ஒன்று திருக்குறள் மட்டும் –

சமயக் கணக்கர் மதிவழி கூறாது
உலகியல் கூறிப். பொருள் இது என்ற வள்ளுவன்’ (கல்லாடம்-172)

இன்றுள்ள கல்லாடம் என்ற நூல் சிவனுடைய பெருமையைப் பற்றியும், திருவிளையாடல்கள் பற்றியும் போற்றிப் பேசும் நூல்.
சுமய நூல்களில் இதுவொன்றே திருவள்ளுவரை இவ்வண்ணம் போற்றுகிறது. சுமயங்கள் உறுதிப் பொருள் நான்கில் வீடு பேற்றையே வற்புறுத்துகின்றன. திருக்குறள் அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று உறுதிப் பொருள்களைப் பற்றி மட்டும் பேசுகிறது. தமிழ்ப் பண்பாட்டுக்கு பிறிதான விடு விடப்பட்டு விட்டது.
மேலே கல்லாடனார் என்ற புலவர் திருவள்ளுவ மாலையில் சொல்லியிருக்கும் அதே கருத்தை சமய நூலான கல்லாடம் தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது. (வளரும்)


சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள் (12)

திருவள்ளுவர் கடவுள் வாழ்த்துப் பாடினாரா?

நக்கீரன்
திருக்குறள் சமயவாதிகள் கூறும் கடவுள், இந்து, பிரார்த்தனை, தியானம், அர்ச்சனை, அபிசேகம், தீர்த்தம், யாத்திரை, பக்தி, பாவம், புண்ணியம், மோட்சம், பிராமணன், சூத்திரன், சாதி, இவைபற்றி எதுவுமே சொல்லவில்லை! இந்தச் சொற்களே திருக்குறளில் இல்லை!
திருவள்ளுவர் சமயவாதிகளைப் பின்பற்றி அறநெறிகளைக் கூறவில்லை. நாம் வாழும் இந்த உலகத்தோடு ஒட்டி வாழ்வாங்கு வாழ்வதற்குரிய அறநெறிகள் பற்றியும், பொருள் பற்றியும், இன்பம் பற்றியும் மட்டுமே அறிவுரை சொல்கிறார்.
திருக்குறளில் உள்ள பொருட்பால் இன்று பொருளியல் (Economics) வணிகவியல் (Commerce) முகாமைத்துவம் (Managament) ஆளுமையியல் (Administration) அரசியல் ( Politics) ஆட்சியியல் (Political Science) ஆகிய சமுதாயக் கலைகளை உள்ளடக்கி உள்ளது. அதாவது அன்று பொருள் என்ற ஒரே சொல்லில் சொல்லப்பட்ட இயலில் இருந்து இவ்வியல்கள், கலைகள் பிரிந்தன.

கிரேக்கத்திலும் பல இயல்கள் தத்துவம் என்ற ஒரே சொல்லில் அடக்கப்பட்டன. அவற்றை எடுத்துச் சொன்ன அறிஞர்கள் தத்துவவாதிகள் என்ற ஒரே சொல்லால் குறிக்கப்பட்டனர்.

திருவள்ளுவர் அறிவியலுக்கே முதன்மை இடம் கொடுக்கிறார். ‘எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும், அப்பொருள் மெய்ப் பொருள் காண்பது அறிவு” என்றும் ‘எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு” எனத் தமிழில் பகுத்தறிவுக்கு இலக்கணம் சொல்லிய முதல் புலவர் அவர்தான்.

அதற்கு முன்னர் கவுதம புத்தர் (கிமு 563-483) அவ்வாறான கருத்தை வெளியிட்டுள்ளார். ‘மற்ற ஆதாரங்கள் பழக்கவழக்கங்கள் என்பவைகள் எப்படியிருந்தாலும் உன் அறிவைப் பயன்படுத்திக் கொள்! எந்தச் செயலையும் பட்டறிவின்படி ஆராய்ந்து பார்! முன்னாள் பழக்க வழக்கங்கள், பெரியவர்கள் மனிதத் தன்மைக்கு மேற்பட்டவர்கள் சொன்னது, நீண்ட நாளாக இருந்துவருவது என்பதற்காக எதையும் எடுத்துக் கொள்ளாதே” எனப் புத்தர் தனது சீடர்களுக்கு அறிவுறுத்தினார்.

கிரேக்க தத்துவவாதியான சோக்கிரடீஸ் (கிமு 469-399) ‘எதனையும் கேள்விகளை எழுப்பி நுணுக்கமாக ஆராய்ந்து சான்றுகளின் அடிப்படையில் உண்மையை அறிந்து கொள். அதிகாரத்தைக் கையில் வைத்துக் கொண்டு உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள் சொல்கிறார்களே என்பதற்காக எதையும் உண்மை என்று எடுத்துக் கொள்ள வேண்டாம். காரணம் அப்படிப்பட்டவர்கள் குழப்பவாதிகளாகவும் பகுத்தறிவு அற்றவர்களாகவும் இருக்கக்கூடும்” என்றார்.

கடவுள் பற்றிய ஆராய்ச்சியில் இறங்காத தத்துவவாதிகள் புத்தர், மகாவீரர் (கிமு 540-468) ஆகிய இருவரே! ஏனையோர் ஆராய்ச்சி செய்வதன் மூலம் நித்தியப் பொருளை அறிந்து எண்பிக்க முயன்றனர்.

ஆராய்ச்சி எதுவுமின்றி நம்பிக்கையின் அடிப்படையில் மட்டும் பரம்பொருளை உணர்ந்தவர்கள் பக்தி நெறியை மேற்கொண்டனர். பக்திநெறி பாமரமக்களுக்காக உருவாக்கப்பட்ட நெறியாகும்.

புத்தர், மகாவீரர் இருவரது கோட்பாடுகள் திருவள்ளுவர் மீது செல்வாக்குச் செலுத்தி இருக்கும் என எண்ணுவதில் தவறில்லை.

புத்தரின் கருத்தையொட்டி ‘எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும், அப்பொருள் மெய்ப் பொருள் காண்பது அறிவு” என மெய்யுணர்த்தல் (36) என்ற அதிகாரத்தில் வரும் குறள் (355) மூலம் திருவள்ளுவர் கூறியிருயிக்கிறார்.

எந்தப் பொருள் எத்தன்மை உடையதாகத் தோன்றினாலும் அத்தோற்றத்தின் படியே கண்டறியாமல் அப்பொருளினுள் நின்று உண்மையாகிய பொருளைக் காண்பதே அறிவாகும்.

மேலும், அறிவுடமை (43) என்ற அதிகாரத்தில் ‘எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு” என்ற குறள் (423) மூலம் சொல்கிறார்.

எந்த ஒரு பொருளைப் பற்றியும் யார் யார் சொல்லக் கேட்டாலும் அப்பொருளினுடைய உண்மையைக் காண்பதே அறிவாகும்.

‘அறிவுடையார் எல்லாம் உடையார், அறிவிலார் என்னுடைய ரேனும் இலர்” என்ற குறளும் (430) அறிவுடமை என்ற அதிகாரத்தில்தான்; ( 43) வருகிறது. அறிவுடமை என்றால் கல்வி கேள்வி இரண்டாலும் வருகிற அறிவோடு உண்மை அறிவைத் தெரிந்து கொள்ளல். இந்த உண்மை அறிவை எல்லோரும், குறிப்பாக இளைய தலைமுறையினர் தேடவேண்டும். உண்மை அறிவு கைகூடினால் எதையும் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.

திருவள்ளுவர் பகுத்தறிவை வற்புறுத்தியதன் விளைவாகவே திருக்குறள் வேத சமயத்தவர்களால் இருட்டடிப்புச் செய்யப்பட்டு வந்துள்ளது. வேத சமய சேற்றில் புதைந்து போன சேரர், சோழர், பாண்டியர், பல்லவர், ஆரியச் சக்கரவர்த்திகள் அதனைப் போற்றாது விட்டார்கள்.

நாம் பெருமை பேசும் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் சதுர்வேதி மங்கலங்கள், எண்ணாயிரம், திருபுவனை போன்ற ஊர்களை இறையிலி நிலங்களாக நிவந்தம் செய்தும் வேதம் படிக்க வேத பாடசாலைகள் நிறுவியும் அந்தணர்கள் தாள் பணிந்து ஆண்டனரே தவிர அவர்கள் தமிழ்ப் பள்ளிகள் நிறுவி திருக்குறள் சொல்லிக் கொடுத்தார்கள் என்று வரலாறு இல்லை.

அவர்களது அரசாட்சியில் மனு, மிடாக்சாரம், ஹேமாத்ரி, ஜுமுக வாதனா எழுதிய தயாபாக (தர்மரத்னா என்ற நீதி நூலின் ஒரு பகுதி) ஆகிய நான்கு சாத்திரங்களின்மேல் சோழர்களுடைய நீதி நிருவாகத்தின் அடித்தளம் அமைக்கப்பட்டது.

அர்த்த சாத்திரம் அரசியல் நூல் என்ற அளவில் ஸ்மிருதிகளின் நீதியினின்று ஒரு சிறிது மாறுபட்டுக் காணப்பட்டது.

“இவ்வாறாக அரசியல் தத்துவத்திற்கு அர்த்தசாத்திரமும், நீதித்தத்துவத்திற்கு மேற்சொன்ன நான்கு சாத்திரங்களும் சோழர் காலத்து அந்தணர்களால் ஊர் நீதிமன்றங்களிலும் அரச நீதி வழங்கு மன்றங்களிலும் எடுத்து ஓதப்பட்டு விளக்கவுரை சொல்லப்பட்டன” என்று சோழர்களின் அரசியல், கலாச்சார வரலாறு – பாகம் 2 -பக்கம் 95) எனும் நூலில் வரலாற்றாசிரியர் திரு.மா. பாலசுப்பிரமணியன் குறித்துள்ளார்.

ஆபாச நூல்களான பாரதம், இராமாயணம், கந்தபுராணம், பெரியபுராணம், பகவத் கீதை போன்ற நூல்களுக்குக் கொடுக்கப்பட்ட பெருமையில் நூற்றில் ஒரு பங்கு கூட அரசர்கள் மற்றம் சமயவாதிகளால் திருக்குறளுக்குக் கொடுக்கப்படவில்லை. இது ஓர் கசப்பான உண்மை.

ஒரு குலத்துக்கு ஒரு நீதி சொல்லும் பகவத் கீதையை திருக்குறளோடு ஒப்பிட்டால் முன்னது உறை போடக்கூடக் காணாது.

ஆகவேதான் பெரியார், அறிஞர் அண்ணா தலைமையில் திராவிடர் இயக்கத்தவர் தமிழர்களை இழிவு செய்து ஆரியக் கருத்துக்களை பரப்பும் இராமாயணத்தையும் பெரியபுராணத்தையும் தீயிட்டு கொளுத்த வேண்டும் என்று கூறினார்கள். (மேலும் இது பற்றி அறிய விரும்புவர்கள் அண்ணாவின் தீ பரவட்டும் ஆரியமாயை மற்றும் கம்பரசம் ஆகிய நூல்களை வாங்கிப் படிக்கவும்.)

திருவள்ளுவர் ஆதி என்ற புலைச்சிக்கும் பகவன் என்ற பார்ப்பனனுக்கும் பிறந்தவர் என்று கதை எழுதி வைத்திருக்கிறார்கள். இந்தக் கதை வள்ளுவரை இழிவு படுத்த இட்டுக்கட்டி எழுதப்பட்ட புனைந்துரை. வரலாறு என்ற பெயரில் எழுதப்பட்ட கற்பனைக் கதை.

அப்படிக் கதை புனைந்ததின் நோக்கம் கல்வி பார்ப்பனனுக்கு மட்டும் சொந்தமானது. பார்ப்பனன் மட்டுமே அறிவாளி, பறைச்சி வயிற்றில் அறிவாளியான பிள்ளை பிறந்திருக்க முடியாது. பிறந்திருந்தால் பார்ப்பன விந்து சம்பந்தம் ஏதாவது இருந்திருக்க வேண்டும் என்பதை நிலை நாட்டவே தங்களை உயர் சாதியினர், பூதேவர்கள் என்று சொல்லிக்கொண்டவர்கள் அந்தக் காலத்தில் அப்படி எழுதி வைத்துள்ளார்கள்.

திருவள்ளுவர் ஏனைய புலவர்களைப் போல கடவுள் வாழ்த்துப் பாடியிருக்கிறாரே என்று சிலர் கேட்கலாம்.

கடவுள் என்ற சொல் திருக்குறளின் முதல் அதிகாரத்திற்கு கொடுக்கப்பட்ட தலைப்பில் மட்டுமே காணப்படுகிறது.

திருக்குறள் அதிகாரங்களுக்கு அந்த அதிகாரத்தில் காணப்படும் சொற்களைக் கொண்டே தலைப்புக் குறிக்கப்படுவது பெருவழக்காகக் காணப்படுகிறது.

திருக்குறள் 5வது அதிகாரத் தலைப்பு புதல்வரைப் பெறுதல் என்பது தவறானதாகும். மக்கள் பற்றிய ஆரியர்களது கருத்தினை வலிந்து புகுத்தவே பிற்காலத்தவர் அவ்வாறு தலைப்பிட்டுள்ளார்கள். புதல்வரைப் பெறுதல் என்ற சொல் அந்த அதிகாரத்தில் வரும் 10 குறள் ஒன்றிலேனும் இடம் பெறவில்லை. மக்கட் பேறு என்று இருப்பதே பொருத்தமானது. அதுவே வள்ளுவரது உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தி நிற்கும் சொற்களாகும். இந்த அதிகாரத்தில் வரும் முதற் குறளிலேயே வள்ளுவர் ‘பெறுமவற்றுள் யாமறிவது இல்லை, அறிவிறிந்த மக்கட்பேறு அல்ல பிற’ எனத் தெளிவாகக் குறிப்பிடுகிறார். பேறு என்றால் செல்வம் என்று பொருள்.

தற்கால உரை ஆசிரியர்கள் புதல்வரைப் பெறுதல் என்பதற்குப் பதில் மக்கட் பேறு என்றே தலைப்பிட்டுள்ளார்கள்.

எனவே கடவுள் வாழ்த்து என்ற அதிகாரத் தலைப்பு இடைச் செருக்கலாக இருக்கவேண்டும். இன்னும் சொல்லப் போனால் வ. உ. .சிதம்பரனார் போன்ற தமிழ் அறிஞர்; திருக்குறளில் உள்ள முதல் மூன்று அதிகாரங்களும் இடைச் செருக்கல் என வாதிடுகிறார்.

திருக்குறளில் 133 அதிகாரங்கள் உள்ளன. அதில் இந்த 3 அதிகாரங்களையும் நீக்கி விட்டு 130 அதிகாரங்களை வைத்துக் கொண்டால் போதுமானது என்கிறார். வ.உ.சி. தம் கோள் நிறுவப் பல தருக்க நெறிப்பட்ட கருத்துக்களை முன்வைக்கிறார்.

1) துறவறவியலில் மெய்யுணர்தல் வருகிறது. அப்படியாயின் பாயிரத்தில் வரும் நீத்தார் பெருமை தேவையா? மிகை எனக் கொள்ள வேண்டும்.
2) வான் சிறப்பு வழிபாட்டு நோக்கமுடையதன்று.

3) மூன்று அதிகாரத்துள்ளும் ஏனையவை போலச் சொற்சுவை பொருட்சுவை உடையன அல்ல. அவை வெள்ளைப் பாக்கள்.

4) கடவுள் வாழ்த்துக் கூறுவது பிற்கால வழக்கு. கடவுள் வாழ்த்தில் கடவுள் பற்றிய இலக்கணத்திற்கும் மெய்யுணர்தலில் வரும் இறை இலக்கணத்திற்கும் கருத்துப் பொருத்தம் இல்லை. பரிமேலழகர் தனது கற்பனைத் திறத்தாலேயே பொருத்தம் கண்டுள்ளார்.

5) கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் வரும் முதல் குறளில் இடம்பெற்றுள்ள ஆதி பகவன் இரண்டும் வடமொழிச் சொற்கள். ஒப்புயர்வற்றதொரு நூலைத் தமிழ் மொழியில் சொல்லப் புகுந்த தமிழ்ப் புலவனான தமிழ்மகன் ஒருவன் தன் நூலில் முதற்பாவின் கண்ணே ஆரியச் சொற்கள் இரண்டைப் புகுத்தானென்றல் சைவ சமயத்தைப் போதிக்கப் புகுந்த சைவ ஒழுக்கமுடைய சைவ மகனொருவன் புலால் உண்டான் என்றலையொக்கும்.

6) ஆதி பகவன் என்று ஏற்றுக்கொண்டால், புலைச்சி அந்தணன் என்ற பொய்க்கதை மெய்க்கதை எனக் கொள்ளும் புல்லறிவாளர்க்கே சாலும்.

7) இப் பா இரண்டு ஆரியச் சொற்களைக் கொண்டிருத்தல் ஒன்றே இப்பா மேற்கூறிய பொய்க் கதையை மெய்யெனக் கொண்ட பிற்காலத்துப் புலவன் ஒருவனால் பாடப்பட்டதென்பதற்கு போதிய சான்றாகும்.

8) அகரத்தை முதல் எழுத்தாகக் கொள்ளாத மொழிகளும் உண்டு.
9) உலகு என்னும் சொல்லையும் தனித்தமிழ்ச் சொல்லென்று சொல்வதற்கும் இடமில்லை. பிறப்பு என்றும் வாய்ப்பாட்டுச் சொல் ஒன்றில்லாமல் வெண்பாவின் இறுதிச் சீராக முடிந்து வருவது வழக்காயினும் அவ்வாறு அச் சீரில் வெண்பா முடிவது அவ்வளவு சிறப்பன்று.

10) இறுதியில் சொல், பொருள் இழுக்குகளை வைத்து அப்பாவினைப் பார்க்கையிலே நம் திருவள்ளுவர் இயற்றினார் என்றல் அவரது புலமையையும் பெருமையையும் பழித்தேயாக அப்பழிப்பினை செய்யத் துணிந்தாரே இப்பா அவருடையதென்பர். ஏனையோர் இப்பாவை அவருடையதென்னார்! (டாக்டர் தி.லீலாவதி எழுதிய தமிழ் தந்த வ.உ.சி. பக்கம் 98-99)

வ.உ.சி. இன உணர்ச்சி, நாட்டு உணர்ச்சி இவற்றுக்கு அடிப்படையான மொழி உணர்ச்சி மிக்கவர். அவர் மகாகவி பாரதியாரின் சம காலத்தவர். அவரால் பாடப்பெற்ற பெருமை பெற்றவர்.

மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும்
நூலோர்கள் செக்கடியில் நோவதுவுங் காண்கிலையோ?
என்ற பாரதியாரின் பாடல் வரிகள் ( பாரதியார் கவிதைகள் -சுதந்திரப் பயிர்) செக்கிழுத்த வ.உ.சி. யையே சுட்டுகிறது.

கடவுள் வாழ்த்துப் பற்றிய வாக்குவாதத்துக்குள் ஆழமாக நுளைய நான் விரும்பவில்லை. இருந்தும் கடவுள் வாழ்த்துப் பற்றி ஈ.வே.ரா. பெரியார் சொல்லியிருக்கும் கருத்தினை கீழே தருகிறேன்.

1) முதலாவதாக கடவுள் என்ற தத்துவத்தைப்பற்றி குறளாசிரியருடைய கருத்து என்ன?
2) கடவுளை ஒரு பொருளாகக் கொண்டிருந்தாரா? ஒரு பண்பாகக் குணமாகக் கொண்டிருந்தாரா?
3) அந்தப் பண்புக்கு ஆசிரியர் கடவுள் என்ற பெயர் கொண்டு இருந்தாரா?
குறளில் முதலாவது அதிகாரத்துக்குக் கடவுள் வாழ்த்து என்ற பெயர் தலைப்புப் கொடுத்திருப்பது குறள் ஆசிரியரால் கொடுக்கப்பட்டதா? அல்லது வேறு யாராலாவது கொடுக்கப்பட்டதா என்பது ஒருபுறமிருந்தாலும், அந்த அதிகாரத்துக்கு அப்பெயர் பொருத்தமற்றதாகும் என்பது என் கருத்தாகும். (வளரும்)


சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள் (14)

திராவிடர் நாகரிகம் வேறு ஆரியர் நாகரிகம் வேறு!

நக்கீரன்

திருக்குறள் ஆரியத்தை, ஆரிய தர்மத்தை மறுத்து எழுதப்பட்ட நூல். கடவுள் வாழ்த்தில் கூட வள்ளுவர் ஒழுக்கத்தையும் பற்றற்ற தன்மையையும் அறிவையும் தான் ‘கடவுள’; மேல் ஏற்றிக் கூறியுள்ளார். கடவுளை அவர் ஒழுக்கம் கெட்டவனாகவோ, காமுகனாகவோ, வஞ்சகனாகவோ படைக்கவில்லை.

திருக்குறள் ஆரிய நாகரிகம், பண்பாடு, சலாச்சாரத்தை மறுத்து தமிழர் நாகரிகத்தை, பண்பாட்டை, கலாச்சாரத்தை எடுத்து இயம்பும் அறிவு நூலாகும்.

கீதை போற்றும் கண்ணன் ஒழுக்கம் கெட்டவனாக படைக்கப்பட்டுள்ளான். பல்லாயிரக்கணக்கான பெண்களுக்கு காமுகனாய் காதலனாய் படைக்கப்பட்டுள்ளான். பிறந்தது முதற் கொண்டு இறக்கும் வரை கண்ணன் ஒழுக்கம் உடையவனாகக் காட்டப்படவில்லை. ஒழுக்கக் கேடனாகவே காட்டப்பட்டுள்ளான். அவனது ஒழுக்கக் கேடுகளுக்கு புராணிகர்கள் ‘லீலைகள்’ என தெய்வீக முலாம் பூசியுள்ளனர்!

குழந்தைப் பருவத்தில் பூதன் சகடாசூரன் திருணாவர்த்தன் ஆகியோரைக் கொன்றான்!
கன்றுருவத்துடன் வந்த வற்சாசுரனை விளாமரத்தில் மோதிக் கொன்றான்!
கொக்கு உருவத்துடன் வந்த பகாசுரன் வாயைப் பிளந்து கொன்றான்!
மலைப்பாம்பு உருவில் வந்த அகாசுரனின் வாயில் புகுந்து கொன்றான்!
மாட்டுருக் கொண்டு வந்த அரிஷ்டனின் கொம்பைப் பிடுங்கிக்; கொன்றான்!
குதிரை உருக்கொண்டு வந்த கேசியைக் கொன்றான்!
வியாமுரசுரனின் கழுத்தை நெரித்துக் கொன்றான்!
கம்சன் வீட்டு வண்ணானைக் கொன்றான்!
கம்சனின் பட்டத்து யானையின் கொம்பை முறித்துக் கொன்று அதன் பாகனையும் கொன்றான்!
மற்போருக்கு வந்த சானூரனைக் கொன்றான்!
சுபலன் கோசன் ஆகிய இருவரையும் காலால் மோதிக் கொன்றான்!
தன் மாமனாகிய கம்சனைப் படுக்கையிலிருந்து இழுத்துத் தள்ளிக் கொன்றான்!
பஞ்சகன் என்பவனை கடலில் சென்று கொன்றான்!
சராசந்தனின் சேனைகளையெல்லாம் கொன்றான்!
முராசுரனையும் அவனது குமாரர்களையும் கொன்றான்!
நரகாசுரனைக் கொன்றான்!
இரணியனைக் கொன்றான்!
வாசுதேவனுக்குத் துணையாக வந்த பவுண்டரகனையும் சுதட்சணனையும் கொன்றான்!
சாளுவனைக் கொன றான்!
சிசுபாலனைக் கொன்றான்!
துரியோதனனின் சிங்காதனத்தின் கீழிருந்த அரக்கர்களைக் கொன்றான்!

இவ்வளவுதான் இவனது படுகொலைகள் என்று எண்ண வேண்டாம்! இன்னும் பலவுண்டு! இங்கு எழுத இடமில்லை
‘இன்னா செய்தாரை ஒறுத்தல் அவன் நாண நன்னயஞ் செய்து விடல்’ என்ற உயர் கருத்து பரவியிருந்த தமிழகத்தில் கொலைகாரக் கிருஷ்ணன் கதையை தமிழகத்தை ஊடுருவிய ஆரியர் புகுத்தி விட்டார்கள். நரகாசுசூரனைக் கொன்ற விஷ்ணுவை தீபாவளி எனக் கொண்டாடும் அளவிற்கு தமிழர்கள் மதி இழந்து விட்டனர்.

கிருஷ்ணன் கொலைகாரன் மட்டுமல்ல ஒழுக்கம் கெட்டவன் கூட. ஆற்றில் நீராடிக் கொண்டிருந்த பெண்களுடைய சேலைகளையும் சட்டைகளையும் களவாடிக் கொண்டு மரதின்மேல் ஏறிக் கொண்டு அம்மணமாகத் தண்ணீரில் நின்ற அப்பெண்கள் தங்கள் இரு கைகளையும் தலைக்கு மேலே தூக்கிக் கும்பிட்டால்தான் தருவேன் என்று கூறி அவ்விதமே செய்ய வைத்து கண் குளிரப் பார்த்தவன்!

இராதை, உருக்மணி, சத்தியபாமை, சாம்பவதி, காளிந்தி, மித்திரவிந்தை, சத்தியவதி பத்திரை, இலட்சுமணை, நப்பின்னை, சோபை, பிரமை, சாந்தி ஆகிய பெண்களை மணந்து கொண்டான்.

மேலும் நரகாசூரன் பட்டணத்திலிருந்து கொண்டுவந்த 16,000 பெண்களையும் மணந்து கொண்டான்.

இவர்களும் போதாமல் பகதத்தனின் நகரத்திற்குச் சென்று அங்கு சிறையிலிருந்த 1160 இராசக் கன்னிகைகளையும் மணந்து கொண்டான்.

இவர்களைத்தவிர பல்லாயிரக்கணக்கான கோபிகா பெண்களுடன் லீலைகள் புரிந்தான்.
கொலையும் விபசாரமும் மட்டுமல்ல! கொலை செய்யவும் தூண்டினான் கீதையின் மூலமாக!

கொலை செய்யப்பட்டவர்கள் எல்லாம் அசுரர்கள் (திராவிடர்கள்) என்று கூறலாம். அப்படியானால் ஆரியர்கள் மட்டுந்தானே இவனைப் புகழ வேண்டும்? மற்றவர்கள் புகழலாமா? கொண்டாடலாமா? கும்பிடலாமா?

இவை கற்பனைக் கதைகள்தான். ஆனால் அவை கடவுள் தன்மைக்குப் பொருந்துமா? தன்மானம் உள்ளவர்கள் இப்பேர்ப்பட்ட ஆபாசக் கற்பனைக் கதையை ஏற்றுக் கொள்ளலாமா?

இராமாயணம் போற்றும் இராமனும் யாருக்கோ பிறந்தவனாகத்தான் காட்டப்பட்டுள்ளான். அவன் அறுபதினாயிரம் மனைவியரை மணந்து கொண்ட தசரதனுக்குப் பிறந்ததாகக் கூறப்படவில்லை. இராமனது நாமத்தை இடையறாது நாதோபாசகம் செய்தால் எல்லாம் சரிவந்து விடும் எனச் சொல்லும் கம்பதாசர்கள் இராமனின் குறைபாடுகளைக் கண்டு கொள்ளாது இருந்து விடுகிறார்கள்.

விருத்திராசூரன் மனைவி விருதையின் கற்பை விஷ்ணு கெடுத்த சாபத்தினால் இராமாயணம் உருவாயிற்றென்றும் விஷ்ணுவும் இலெட்சுமியும் வைகுண்டத்தில் தங்கள் மாளிகைப் படுக்கை அறையில் தனிமையில் இருக்கும் போது அதனுள் செல்ல நினைத்த ஜனகாதி ரிஷிகளை விஜயன் ஜெயன் என்ற அரண்மனைக் காவற்காரர்கள் தடுத்ததனால் பிராமண உத்தமர்களான முனிவர்களால் கொடுக்கப்பட்ட சாபத்தினால் இராமாயணம் உருவாயிற்று என்று சைவ வைணவ புராணங்கள் கூறுகின்றன.

இராமாயணம் தேவர்கள் என்பவர்களுக்கும் அசுரர்கள் என்பவர்களுக்கும் நடந்த போராட் டமாகும். அதாவது ஆரியர்களுக்கும் திராவிடர்களுக்கும் இடையில் நடந்த மோதலை அடிப்படையாக வைத்து கற்பிக்கப்பட்ட இதிகாசமாகும்.

இராமாயணம் தேவர்கள் என்பவர்களை உயர்த்தியும் அசுரர்கள், இராக்கதர்கள் என்பவர்களைத் தாழ்த்தியும் இழித்தும் எழுதப்பட்டதாகும்.

இராமாயணம் பற்றிச் சொன்னது கந்தபுராணத்துக்கும் பொருந்தும். இரண்டுக்கும் பல ஒற்றுமை காணப்படுகின்றன. கந்தபுராணம் சைவர்களால் வைணவ இதிகாசமான இராமாயணத்துக்குப் போட்டியாக எழுதப்பட்டது.

இராமாயாணத்தின் கதாநாயகன் இராமனை எடுத்துக் கொண்டால் அவன்-

(1) இராவணனை அழித்ததெல்லாம் உன்னை மீட்கும் பொருட்டு அன்று. எனக்கு நேர்ந்த பழியைத் நீக்கிக் கொள்ளும் பொருட்டே ஆகும். நீ இறந்து படு. இன்றேல் எங்கேயாவது போய்விடு என்று சொன்னதால் சீதை தீக்குளித்து தன் கற்பை எண்பிக்கிறாள். கட்டிய மனைவி மீது அய்யப்பட்டதால் தீக்குளித்து வா என்று சொன்னவனை அவதாரம் என்று சொல்ல முடியுமா?

(2) இராமன் விசுவாமித்திரன் நடத்தும் யாகத்தை கலைத்த சம்புகனை ( திராவிடனை) எந்த முகாந்திரமும் இன்றி அம்பு எய்திக் கொல்கிறான். இது “சத்திரிய தர்மமா”?
3) வாலியைப் பேடி போல மாமரத்தின் பின் மறைந்திருந்து கெரில்லா பாணியில் அம்பு எய்திக் கொல்கிறான். அவதாரம் (அன்றைய) யுத்த தர்மத்தை மீறலாமா?

(4) அயோத்திக்கு சீதையுடன் திரும்பிய இராமன் மீண்டும் ஒரு சலவைத் தொழிலாளியின் பேச்சைக் கேட்டு அவள் மீது அய்யம் கொண்டு காட்டுக்கு அனுப்புகிறான். அதுவும் சீதை கர்ப்பமாக இருக்கும் போது! ஒரு சராசரி மனிதனே அப்படிச் செய்ய மாட்டான் என்னும் போது ஒரு அவதாரம் செய்யலாமா?

(4) சீதையிடம் இராமன் ‘இந்த லவனும் குசனும் எனக்குப் பிறந்தவர்கள்தான் என்பதற்கு என்ன சான்று’ என்று கேட்கிறான். சீதை மனம் நொந்து கதற, “பூமா தேவி” பிளந்து சீதையை இழுத்துக் கொள்கிறாள். இப்படித்தான் வால்மீகி எழுதியிருக்கிறார்.

இப்படி இராமனைப் போன்ற ஒரு அயோக்கியனைத் தொழுதால் அல்லது அவனது பெயரை இடையறாது “நாதோபாசகம்” செய்தால் பாவம் வருமா அல்லது தொலையுமா? அமைதி வருமா? அல்லது போகுமா?

ஆரிய மதத்தை தமிழர்கள் தழுவியதாலேயே பண்பாட்டுச் சிதைவு ஏற்பட்டது. தொல்காப்பியரின் காலத்துக்கு முன்னரே ஆரியரது அரசியல் பண்பாட்டுப் படையெடுப்பு தொடங்கி விட்டது. அது முற்சங்க காலத்தில் மேலும் சிறிது ஊடுவி பிற்சங்க காலத்தில் வேரூற்றி வளர்ந்தது. சங்க இலக்கியங்களில் இராமாயண பாரதக் கதைகள் பற்றிய சில குறிப்புக்கள் இருக்கின்றன.

சங்கம் மருவிய காலத்தில் எழுதப்பட்ட சிலப்பதிகாரம் நான்மறை அந்தணர் செல்வாக்கையும் வேத மதத்தின் வளர்ச்சியையும் காட்டுகிறது. திருமால், பெரியோன், காமன், இந்திரன், பலராமன் ஆகியோருக்கு கோட்டங்கள் இருந்ததையும், இந்திர விழா கொண்டாடியதையும், கடற்கரைச் சோலையில் சோமகுண்டம் சூரிய குண்டம் என்ற இரண்டு புண்ணிய தடாகங்கள் இருந்ததையும் எடுத்துக் காட்டுகிறது. சமணக் கடவுளான அருகதேவனுக்கு பள்ளிகளும் பவுத்தர் வழிபடும் புத்தருக்கு விகாரைகளும் இருந்ததையும் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.

திருவள்ளுவர் எழுதியுள்ள குறள்களுக்குப் பொருள் காணும் போது அவர் ஆளுமை பற்றியும் அவர் வாழ்ந்த காலத்து சமூகம், பண்பாடு, கலாச்சாரம் பற்றி முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் அவரது கண்கள் ஊடாக குறளின் பொருளை உள்ளவாறு நன்கு உணர்ந்து கொள்ள முடியும்.
திருவள்ளுவர் காலத்திற்கும் நமது காலத்திற்கும் இடைவெளி பெரியது. அவர் வாழ்ந்த காலத்தின் சூழ்நிலைக்கு ஏற்பவே அவர் தனது கருத்துக்களை ஆராய்ந்து கூறியிருக்க முடியும். அவரது காலத்து அரசியல் அமைப்பு ‘மன்னன் உயிர்த்தே மலர் தலை உலகம்’ எனக் கருதிய காலம். குலவிச்சை கல்லாமல் பாகம் படும் என்பது அவரது காலத்து சமூக அமைப்பு. அதாவது குலத் தொழில் கற்காமல் தானாக வந்து சேரும் என்பதாகும்.

இன்று அரசியல் அமைப்பு, சமூக அமைப்பு மாறிவிட்டன. தலைகீழான மாற்றங்களை ஏற்படுத்திவிட்ட அறிவியல் உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ‘அணுவைத் துளைத்து எழு கடலைப் புகுத்தி’ என்று அவ்வையாரால் பாடவே முடிந்தது. ஆனால் இன்று அணுவை உண்மையாகப் பிளந்து அதன் ஆற்றலை அழிவுக்கும் ஆக்கத்திற்கும் பயன் படுத்துகிறோம்.

மன்னர் ஆட்சி மறைந்து மக்கள் ஆட்சி மலர்ந்து விட்டது. மன்னர்கள் தேவாம்சம் பொருந்தியவர்கள் என்ற கருத்து மறைந்துவிட்டது.
புலவர்கள் நிலாவினை பெண்களின் முகத்துக்கு உவமை கூறிய காலத்தில் வள்ளுவர் வாழ்ந்தார். இன்று நாம் மனிதன் நிலாவில் இறங்கி நடந்த காலத்தில் வாழ்கிறோம். அடுத்து செவ்வாயில் மனிதனை தரையிறக்க முயற்சிகள் நடக்கின்றன.

வள்ளுவர் காலத்தில் உழவுத் தொழில்தான் சிறந்ததாக எண்ணப்பட்டது. ஏனைய தொழில் செய்தவர்கள் தொழுதுண்டு பின் செல்பவர்கள் என வள்ளுவர் கூறுகிறார்.
இன்று இயந்திரத் தொழில் வளர்ச்சியும் மின்னணு வளர்ச்சியும் (electronics) இயற்பியல் வளர்ச்சியும் வானியல் வளர்ச்சியும் அசுர வேகத்தில் வளர்ந்து விட்டன. உடல் வலிமையை விட மூளை வலிமை பெரிதாகப் போற்றப்படுகிறது. வானூதி போக்கு வரத்தால் உலகம் சுருங்கி விட்டது. உலகம் ஒரு ஊர் (global village) என்ற புது மொழி பிறந்து விட்டது.

எனவே வள்ளுவர் காலத்தையும் இன்றைய காலத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால் ஒற்றுமைகளையும் காணலாம் வேற்றுமைகளையும் பார்க்கலாம்.
இருந்தும் வள்ளுவர் செய் திருக்குறள் எக்காலத்துக்கும் பொருந்தும் எனச் சொல்கிறோமே? அது சரியா?

உலக இலக்கியங்கள் மனிதன் வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து இன்புற்று இருப்பதற்கு உரிய அறிவுரைகளை, கருத்துக்களை, நெறிகளைச் சொல்கின்றன. இந்த விழுமியங்கள் கால ஓட்டத்தில் பேரளவு மாறுவதில்லை. சிறிதளவே மாறுகின்றன. இன்றுள்ள சிக்கல்களை, குறைபாடுகளைத் தீர்ப்பதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த வள்ளுவர் நூற்றுக்கு நூறு விழுக்காடு வழிகாட்டியாக இருப்பார் என்று எண்ணுவது தவறாகும். குறிப்பாக அவர் காலத்தில் அவர் பெண்களைப் பற்றிச் சொன்ன கருத்துக்கள் புரட்சிகரமானவையாக இருந்திருக்கலாம். ஆனால் இன்று பெண்களைப் பற்றி வள்ளுவர் கூறிய கருத்துக்கள் சில ஏற்றுக் கொள்ள முடியாதவை.
இந்தக் கோலை வைத்துக் கொண்டுதான் நாம் வள்ளுவரை அளக்க வேண்டும். அப்போதுதான் உண்மையை அறிய முடியும். (வளரும்)


சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள் (15)

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்

நக்கீரன்
திருவள்ளுவர் பற்றிய வாழ்க்கை வரலாறு இன்றும் ஒரு இருண்ட இரவாகவே இருக்கிறது. அவர் காலத்தவரோ அவருக்குப் பின்னர் வந்தவர்களோ அவரைப் பற்றி எந்தக் குறிப்பும் எழுதி வைக்கவில்லை. இதற்கு முக்கிய காரணம் தமிழர்களுக்கு வரலாற்று உணர்வு இருக்கவில்லை என்பதே. மீறி எழுதி வைத்த கர்ண பரம்பரைக் கதைகள் அவருக்கு மாசு கற்பிப்பதாகவே உள்ளன.

திருக்குறளைப் படிக்கும் போது தனி ஒரு மனிதருக்கு இத்தனை பொருள்கள் பற்றி இவ்வளவு ஆழமான அறிவு இருந்திக்கிறதா என்ற மலைப்புத் தோன்றும். அதனால் சில மேலை நாட்டு அறிஞர்கள் திருக்குறளை தனி ஒருவர் மட்டும் எழுதியிருக்க முடியாது என நினைக்கிறார்கள்.

வள்ளுவர் ஏனைய சங்க காலப் புலவர்களைப் போலவே இலக்கிய இலக்கணங்களை துறையறக் கற்றவர். வேத மதம், சமணம், பவுத்தம் போன்ற அறு சமயங்களை நன்கு உரைத்துப் பார்த்தவர். இவற்றோடு உலகத்தை நன்கு ஆராய்ந்து பார்த்த பட்டறிவு அவரது பரந்து பட்ட அறிவுக்குத் துணை நின்றிருக்கிறது.

திருக்குறளுக்கு பின்னர் எழுதப்பட்ட நூல்களில் வள்ளுவர் கருத்துக்களோ, சொற்களோ, சொற்றொடர்களோ ஏறாத இனிய நூல்கள் இல்லை என்றே கூறலாம். எல்லாச் சிறந்த நூல்களிலும் வள்ளுவத்தின் தாக்கத்தைக் காணலாம். குறிப்பாக தமிழில் எழுந்த நீதி நூல்கள் திருக்குறளைப் பின்பற்றியே நீதிகளைக் கூறிச் செல்கின்றன.

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுவாளைத்
செய்வம் தொழும் தகைமை திண்ணிதால்………..

என சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோ அடிகள் திருக்குறளை மேற்கோள் காட்டியுள்ளார்.

தெய்வம் தொழஅள் கொழுநன் தொழுது எழுவாள்
பெய்யெனப் பெய்யும் பெருமழை என்ற
அப்பொய்யில் புலவன் பொருள் உரை தேறாய்…………

என ஆசிரியர் சாத்தனார் தனது மணிமேகலை காப்பியத்தில் திருக்குறளை மேற்கோள் காட்டி வள்ளுவரை ‘பொய்யில் புலவன்’ எனப் போற்றியுள்ளார்.
இளங்கோ அடிகள் மற்றும் சாத்தனார் மேற்கோள் காட்டிய குறள்,

தெய்வம் தொழஅள் கொழுநன் தொழுது எழுவாள்
‘பெய்’ எனப் பெய்யும் மழை.        (55)

என்ற குறளாகும். இந்தக் குறள் (55) வாழ்க்கைத்துணை நலம் என்ற அதிகாரத்தில் (6) இடம்பெற்றுள்ளது.

சிலப்பதிகாரம் மணிமேகலை இந்த இரண்டு காப்பியங்களும் சங்கம் மருவிய காலத்தவை ( கிபி 2 ஆம் நூற்றாண்டு) எனக் கொள்ளப்படுகிறது.
எனவே வள்ளுவர் மணிமேகலை சிலப்பதிகாரம் இரண்டுக்கும் முந்திய காலத்தவர் என்பது தெளிவாகிறது.

சங்க இலக்கியங்களில் திருவள்ளுவர் பற்றிய குறிப்பே இல்லை. மொத்தம் 500 கும் மேற்பட்ட சங்கப் புலவர்கள் பாடிய பாடல்கள் இடம்பெற்றுள்ள சங்க இலக்கியங்களான எட்டுத் தொகை பத்துப் பாட்டு நூல்களில் வள்ளுவர் பாடிய பாடல் ஒன்றேனும் இடம் பெறவில்லை.

ஆனால் திருக்குறளில் காணப்படும் கருத்துக்கள் சில சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன.

முந்தை யிருந்து நட்டோர் கொடுப்பினும்
நஞ்சும் உண்பர் நனிநாகரிகர்
என நற்றிணையில் (355) ஒரு பாடல் வருகிறது. ‘பழைமையான நட்புள்ளவர்கள் நஞ்சைக் கொடுப்பாராயினும் கண்ணோட்டம் உள்ளவர்கள் அதை உண்பார்கள்’ என்பது இந்தப் பாடல் வரிகளின் பொருளாகும். இந்த நற்றிணைப் பாடல் கருத்தை திருவள்ளுவர் குறள் ஒன்றில் கையாண்டுள்ளார்.

பெயக்கண்டும் நஞ்சு உண்டு அமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்.                                                      ( அதிகாரம் கண்ணோட்டம் – குறள் 580)

கண்ணோட்டம் என்றால் நாகரிகம். அஃதாவது தன்னோடு பயின்றாரைக் கண்டால் அவர் கூறியன மறுக்கமாட்டாமை.

இவ்வாறே ‘பகுத்தூண் தொகுத்த ஆண்மைப் பிறர்க்கென வாழ்தி நீ ஆகன் மாறே’ என்ற பதிற்றுப்பத்து பாடல் வரிக் கருத்து (38) வள்ளுவரால் கையாளப்பட்டுள்ளது.

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல், நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.                                         ( அதிகாரம் கொல்லாமை – குறள் 322)

சங்க இலக்கியங்களை எட்டுத் தொகை பத்துப் பாட்டு பதிணெண் கீழ்க் கணக்கு என்ற வரிசையில் சொல்லப்படுவதுதான் மரபு. திருக்குறள் பதிணெண் கீழ்க் கணக்கை சேர்ந்த நூல். இதுவும் திருவள்ளுவர் சங்க காலத்துக்குப் பிந்தியவர் என்பதற்கு சான்றாகும். மேலும் சங்க காலத்தில் தமிழர் பண்பாட்டின் கூறுகளாக இருந்த கள்குடித்தல், புலால் உண்ணல், பரத்தையர் உறவு திருக்குறளில் கடுமையாகக் கண்டிக்கப்பட்டுள்ளன. இவையும் திருவள்ளுவர் சங்க காலத்துக்குப் பிற்காலத்தவர் என்பதை பேரளவு உறுதிப்படுத்துகிறது.

திருக்குறளுக்குப் பலர் உரை எழுதியிருக்கிறார்கள். இதில் இடைக் காலத்தில் வாழ்ந்த பரிமேலழகர் செய்த உரையே சிறந்தது என அண்மைக் காலம்வரை கொண்டாடப்பட்டு வந்துள்ளது.

ஆனால் இது உண்மையன்று. பரிமேலழகர் திருவள்ளுவரின் கருத்துக்களை தனது காலத்துக்கும் சமய நம்பிக்கைக்கும் ஒப்ப திரித்துவிட்டார் என்பதே சரியாகும்.
அறத்துக்கு இலக்கணம் கூற வந்த பரிமேலழகர் தனது உரைப் பாயிரத்தில் ‘அவற்றுள் அறமாவது, மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும், விலக்கியது ஒழித்தலும் ஆம். அஃது ஒழுக்கம், வழக்கு, தண்டம் என மூவகைப்படும்.

அவற்றுள், ஒழுக்கமாவது அந்தணர் முதலிய வருணத்தார், தத்தமக்கு விதிக்கப்பட்ட பிரமசரியம் முதலிய நிலைகளில் நின்ற, அவற்றிற்கு ஓதிய அறங்களில் வழுவாது ஒழுகுதல்.’

வேத மதத்தின் 18 ஸ்மிருகள் அல்லது தர்ம சாத்திரங்களை எழுதியவர்களில் மனு மிகவும் உயர்வாகப் போற்றப்படுகிறார். பெரிய சட்டவாதியாகப் (டுயற பiஎநச) புகழப்படுகிறார்.

பிற்கால சேர சோழ பாண்டியர் மனு, மிடாக்சாரி, ஹேமாத்ரி, ஜுமுக வாதனர் எழுதிய தயாபாக (தர்மரத்னா என்ற நீதி நூலின் ஒரு பகுதி) ஆகிய நான்கு சாத்திரங்களின்மேல் சோழர்களுடைய நீதி நிருவாகத்தின் அடித்தளம் அமைக்கப்பட்டது என்பதை ஏற்கனவே (அத்தியாயம் 3) கூறியிருக்கிறேன்.
மனுவின் பெருமையை பறைசாற்ற ‘மனு நீதி கண்ட சோழன்’ என்ற கதை புனையப்பட்டது. இந்தப் புனைகதையைப் பற்றிய குறிப்பு சிலப்பதிகாரத்தில் இடம் பெற்றுள்ளது.

தமிழர்களது மூளை பலமாக சலவை செய்யப் பட்டதையே இந்தக் கதை காட்டுகிறது.

வரலாற்றில் மனு நீதியைக் கண்டித்து அதற்கு எதிராகக் குரல் கொடுத்த பெருமை மனோன்மணியம் பெ. சுந்தரம்பிள்ளை ( கிபி 1855-1897) அவர்களுக்கு உரியது. அவர் சங்க இலக்கியங்களை எழுத்தெண்ணிப் படித்தவர். தமிழ், ஆங்கிலம், மலையாள மொழிகளில் புலமை வாய்ந்த இவர் திருவனந்தபுரம் கல்லூரியில் பேராசிரியராகவும் முதல்வராகவும் இருந்தவர்.

மனோன்மணியம் என்ற நாடக நூலை 1891 ஆம் ஆண்டு எழுதி வெளியிட்டார். லிட்டன் பிரபு எழுதிய ‘வுhந டுழளவ வுயடந ழக ஆநைவரள’ என்ற நூலைத் தழுவி மனோன்மணியம் எழுதப்பட்டது. அதில் ‘நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் சீராரும் வதனமெனத் திகழ் பரத கண்டமிதில் … ‘ எனத் தொடங்கும் தமிழ்த்தெய்வ வணக்கப் பாடலில்-

வள்ளுவர் செய் திருக்குறளை மறுவறநன் குணர்ந்தோர்கள்
உள்ளுவரோ மனுவாதி ஒருகுலத்துக் கொருநீதி?

என மனுவைக் காட்டமாகக் கண்டிக்கிறார். ‘ஒரு குலத்துக்கு ஒரு நீதி’ இதுதான் மனுதர்மத்தின் தர்மம்!
திருவள்ளுவர் இந்த அநீதிக்கு எதிராகக் குரல் எழுப்புகிறார். தமிழினத்தை அரித்து அழித்துக் கொண்டிருக்கும் சாதி நோயை நாகரிகமான முறையில் மறுத்துரைக்கிறார்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.                                            (அதிகாரம் 98 பெருமை – குறள் 972)

திருவள்ளுவர் காலத்து பார்ப்பனர்கள் தங்கள் பிறப்பின் அடிப்படையில் தாங்கள் உயர்ந்தவர்கள் என சொல்லித் திரிந்தனர். அதை வள்ளுவர் மறுத்துரைக்கிறார். மக்களிடையே பிறப்பினால் வேற்றுமை இல்லை. பிறப்பு ஒரு தன்மையானது. ஆனால் அவரவர் செய்யும் தொழில்களின் வேறுபாட்டால் ஏற்படும் நிலைமைகள் ஒரே நிகரானவை அல்ல என்கிறார்.

இந்தக் குறளுக்கு மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் கொடுத்திருக்கும் தொழில் வேறுபாடுகளுக்கான விளக்கம் வள்ளுவரின் உள்ளக் கிடக்கையை நன்கு வெளிப்படுத்துகிறது.

தொழில் வேறுபாடுகள்: அதிகாரமுள்ளது அதிகாரம் இல்லாதது. வருமானம் மிக்கது வருமானம் குறைந்தது. தற்சார்பானது மற்சார்பானது. நிழலில் செய்வது வெய்யிலில் செய்வது. மனவுழைப்புள்ளது உடலுழப்புள்ளது. துப்பரவானது துப்பரவற்றது. ஒழுக்கக் கேட்டிற்கு இடமுள்ளது ஒழுக்கக் கேட்டிற்கு இடம் இல்லாதது. இன்றியமையாதது இன்றியமையாத தல்லாதது. பிறரை இன்புறுத்துவது பிறரை இன்புறுத்தாதது. நல்லது தீயது என்பன.

இவற்றுள் ஒவ்வோர் இணைக்கும் இடைப்பட்ட நிலைமையும் உண்டு. தொழில் வேறுபாட்டால் ஏற்படும் சிறப்பு நிலைமைகள் உயர்வு, தாழ்வு, இடைநிகர்வு, மிகவுயர்வு, மிகத்தாழ்வு என்பன. (திருக்குறள் மரபுரை – பக்கம் 336)

பரிமேலழகர் ஒரு பார்ப்பனர் என்பதால் இந்தக் குறளுக்கு வலிந்து பொருள் கொள்கிறார்.

‘வினை வயத்தாற் பஞ்சபூத பரிணாமமாகிய யாக்கையைப் பொருந்தி நின்று அதின் பயனனுபவித்தல் எல்லா வருணத்தார்க்கும் ஒத்தலிற் பிறப்பொக்கு மென்றும், பெருமை சிறுகைகட்குக் கட்டளைக் கல்லாகிய தொழிற் பாகுபாடுகள் வருணந்தோதும் யாக்கை தோறும் வேறுபடுதலில் ‘சிறப்பொவ்வா’ வென்றும் (வள்ளுவர்) கூறினார் என்பது பரிமேலழகரின் ஆரியச் சார்புடைய உரையாகும்.

இந்த ஒரு குறள் மூலம் மட்டும் அல்லாது பெருமை அதிகாரத்தில் வரும் ஏனைய குறள்கள் வாயிலாகவும் மக்கள் அடிப்படையில் சமமானவர்கள் அவர்களிடையே மனு கற்பிக்கும் பிறப்பால் உயர்வு தாழ்வு இல்லை என்பதை தெளிவாக வள்ளுவர் எடுத்துரைக்கிறார்.

மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர், கீழிருந்தும்
கீழல்லார் கீழல் லவர்.                                                                  (குறள் 973)
பிறப்பொடு தொடர்புள்ள ஆரியக் குலப் பிரிவினையால் ஏற்பட்ட குமுதாய படிமுறை ஒழுங்கில் பிராமணர் என்னும் ஆரியப் பார்ப்பனர் உச்சியில் இருந்தும் ஒழுக்கம் கெட்டவர்களாயின் உயர்ந்தோர் அல்லர். உண்மையாகத் தாழ்ந்தவர் அல்லாத தென்னாட்டுத் தொல்குடித் தமிழர் பிராமணரால் தாழ்த்தப்பட்டிருப்பினும் தாழ்ந்தவர் அல்லர்.                                               ( மேற்படி மரபுரை – பக்கம் 337)

மறப்பினும் ஒத்துக் கொளலாகும், பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்.                                  (அதிகாரம் ஒழுக்கம் உடைமை – குறள் 134)

என்ற குறளிலும் ஒருவனது பிறப்பல்ல ஒழுக்கமே அவனை உயர்ந்த குடிப்பிறப்பு உள்ளவனா அல்லவனா என்பதை நிறுவுகிறது என வள்ளுவர் கூறுகிறார். ஒழுக்கம் குன்றினால் ஒருவனது குடிப் பிறப்புக் கெடும்.

இக்குறள்கள் மூலம் பிறப்பால் சிறப்பில்லை என்பதை வள்ளுவர் வலியுறுத்திக் கூறியுள்ளார். (தொடரும்)


சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள் (16)

வேள்வி செய்து வெறுமையுற்ற தமிழ் வேந்தர்கள்!

நக்கீரன்

திருக்குறள் ஒரு அற நூல். சமயக்கணக்கர் வழிசெல்லாது அதற்குப் புறத்தே இருந்து திருவள்ளுவர் திருக்குறளை யாத்திருக்கிறார். இதன் காரணமாகவே ஒவ்வொரு சமயத்தவரும் திருவள்ளுவர் தங்கள் சமயத்தைச் சார்ந்தவர் என நிறுவ முயற்சிக்கிறார்கள். இந்திய நாட்டில் தோன்றிய வைதீகம் சமணம் பவுத்தம், புகுந்த கிறித்தவம் இஸ்லாம் திருக்குறளில் தம் தம் சமயக் கொள்கைகள் உண்டெனச் சொல்கின்றன. இதிலிருந்து ஒரு உண்மை புலப்படுகிறது. ஒவ்வொரு சமயமும் சொல்லும் நெறிகள் திருக்குறளில் முழுமையாகக் காணப்படுகிறது.

உலக விழுமியங்கள் (values) பொதுவானவை. அது எந்தக் காலத்துக்கும் பொருந்தி வருபவை. ஒழுக்கம் விழுப்பம் தரும் ஆதலால் அது உயிரினும் ஓம்பப்படும் என்பது அவ்வாறான ஒரு விழுமியம்,

பொய் சொல்லக் கூடாது, எப்போதும் உண்மையே பேச வேண்டும் என வற்புறுத்தாத சமயம் உலகத்திலேயே இல்லை.

பொருளை நேர் வழியில் திரட்ட வேண்டும் பிறர் பொருளை கவரக் கூடாது. எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்த வேண்டும், உயிர்களுக்கு உறுகண் செய்தல் கூடாது, அழுக்காறு (பொறாமை) அவா (ஆசை) வெகுளி (கோபம்) இன்னாச்சொல் (கடும்சொல்) இவை நான்கினையும் கடிந்து (தவிர்த்து) வாழ்வதே அறம். மற்றும் புறஞ்சொல்லல் கூடாது என்ற பொது விழுமியங்களை திருவள்ளுவர் வலியுறுத்துகிறார்.

சமய நூல்கள் உலக நிலையாமை, இளமை நிலையாமை, யாக்கை நிலையாமை, செல்வ நிலையாமை முதலிய கருத்துக்களை அளவுக்கு அதிகமாக வற்புறுத்துகின்றன. சமணம் கலைவெறுப்பைபும் பெண்வெறுப்பையும் கொண்டது. இல்லறத்தை விட துறவறம் சிறந்தது எனச் சொல்கிறது. பவுத்தம் நிலையாமை தத்துவதை வற்புறுத்துகிறது. வைதீக மதம் உலகம் மாயை என்கிறது. சிற்றின்பத்தைவிட பேரின்பம் உயர்ந்தது என்கிறது.

ஆனால் திருவள்ளுவர் மனிதன் இந்த உலகத்திலேயே வாழ்வாங்கு வாழவேண்டும் என்கிறார். அப்படி வாழ்பவன் இந்தப் பூவுலகத்தில் இருக்கும் போதே வானுறையும் தெய்வத்தின் நிலையை அடைந்து விடுகிறான் என்கிறார். அத் தெய்வத்தோடு ஒப்ப வைக்கப்படுவான் என்கிறார்.

ஒருவன் இல்லற வாழ்க்கையை அறத்தின் வழியே செலுத்துவானாயின் அவன் துறவறத்தில் போய்ப் பெறும் பயன் என்ன? பயன் எதுவும் இல்லை என திருவள்ளுவர் பதில் இறுக்கிறார். அறத்தாறு என்பது பழி அஞ்சிப் பகுத்து உண்டலும், அன்புடைமையும் என்கிறார்.

மனைவியை வாழ்க்கைத் துணை நலம் என அழைக்கிறார். துணைநலம் என்ற சொல்லாட்சி திருவள்ளுவரே புதிதாகக் கண்டுபிடித்த கலைச் சொல்லாகும்.
சமய நூல்கள் கூறுவது போல் சிற்றின்பத்தை திருவள்ளுவர் இழித்துரைக்கவில்லை. தலைவனும் தலைவியும் அதாவது ஆணும் பெண்ணும் கூடிக் களிக்கும் இன்பத்தை திருவள்ளுவர் காமத்துப் பாலில் 25 அதிகாரங்களில் கூறியுள்ளார். காமத்துப் பாலில் கம்பரசத்தையோ கந்தரசத்தையோ காண முடியாது. காமத்தை திருவள்ளுவர் மிக நளினமாகக் கையாண்டுள்ளார்.

பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை என்றும் ஒரு பொருளாக மதிக்கப்படாதவரையும் மதிக்கச் செய்ய வல்ல பொருளே அன்றி, ஒருவனுக்கு வேறு சிறந்த பொருள் கிடையாது என்றும் திருவள்ளுவர் சொல்கிறார்.

இவ்வாறெல்லாம் வள்ளுவர் அறவழி நின்று மனிதன் உலக இன்பங்கள் அனைத்தையும் வெறுத்தொதுக்காது அவற்றைத் துய்க்க வேண்டும் என விரும்புகிறார்.
அறத்துப் பாலில் ஊழின் வலிமை பற்றி சொல்லும் வள்ளுவர் பொருட்பாலில் ஆள்வினை உடைமை என்ற அதிகாரத்தில் முயற்சி திருவினையாக்கும், இடைவிடாது முயற்சி செய்தால் ஊழையும் வெற்றி கொள்ளலாம் என்கிறார்.

எனவே திருவள்ளுவரது உண்மையான உள்ளக்கிடக்கையை அறிய திருக்குறளை முழுவதாகப் பார்க்க வேண்டும். திருக்குறள் அறம் பொருள் இன்பம் என்ற மூவகைப் பால், இல்லற இயல், துறவற இயல், ஊழ் இயல், அரசியல், அங்க இயல், ஒழிபு இயல், களவியல், கற்பியல் என்ற எட்டு இயல், 133 அதிகாரங்கள் கொண்டது தெரிந்ததே.
நூற்று முப்பத்து மூன்று அதிகாரங்களைக் கொண்ட திருக்குறளில் உலக வாழ்க்கை பற்றிப் பேசும் பொருட்பாலுக்கு 70 அதிகாரங்களையும் உலக இன்பத்தைப் பற்றிப் பேசும் காமத்துப் பாலுக்கு 25 அதிகாரங்களையும், இல்லறத்துக்கு 20 அதிகாரங்களையும் ஒதுக்கிய வள்ளுவர் துறவறத்துக்கு 14 அதிகாரங்களை மட்டுமே ஒதுக்கியுள்ளார். மேலும் முதலில் இல்லறத்தின் சிறப்பைக் கூறிப் பின்னரே துறவறம் பற்றிக் கூறுகிறார்.

ஒவ்வொரு இயலில் சொல்லப்பட்டவை அந்த இயலுக்கு சிறப்பாகவும் ஏனையவற்றுக்கு பொதுவாகவும் கூறப்பட்டவையாகும். எடுத்துக் காட்டாக துறவறத்தில் துறவோர்க்கு சிறப்பாகச் சொல்லப்பட்ட கள்ளாமை, வாய்மை, வெகுளாமை, மெய் உணர்தல், அவா அறுத்தல் இல்லறத்தாருக்கும் பொருந்தி வரும்.

திருக்குறளில் சில முரண்பாடுகள் இருப்பது போல் தோன்றும். எடுத்துக் காட்டாக அறத்துப் பால் இல்லற இயல் புகழ் அதிகாரத்தில் ‘ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு’ என்று சொல்லிவிட்டு ‘ஆவிற்கு நீர் என்று இரப்பினும், நாவிற்கு இரவின் இளிவந்தது இல்’ என பொருட்பால் ஒழிபு இயல் இரவு அச்சம் அதிகாரத்தில் சொல்வது மேலெழுந்து பார்ப்பவர்களுக்கு முரண்பாடு போல் தெரியும்.

ஆனால் ஈதல் இல்லறத்தாருக்குச் சொன்னது, இரவச்சம் இரப்போர்க்குச் சொன்னது என்று கருத்தில் கொண்டால் முரண்பாடு என்ற பேச்சுக்கே இடம் இல்லாது போய்விடும்.

தமிழ் மகள் அவ்வை தாம் அருளிய ஆத்திசூடியில் ஈவது விலக்கேல் என்று சொல்லி விட்டு அடுத்து ஏற்பது இகழ்ச்சி என்கிறார். முன்னது பிச்சைக்காரனுக்குச் சொல்லியது பின்னது பொருளுடைய செல்வந்தர்களுக்குச் சொன்னது. எனவே அவ்வை வாக்கில் முரண்பாடு இல்லை.

திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் ஒவ்வொரு தமிழனது வீட்டிலும் இருக்க வேண்டும். உடல் நலத்துக்கும் மன நலத்துக்கும் வேண்டிய அறிவுரைகளை திருவள்ளுவர் வாரி வழங்குகிறார்.

மனத்தின்கண் மாசில்லாமையே அனைத்து அறம் என்கிறார் வள்ளுவர். மேலுலகம் ஒன்று இருக்கும் பட்சத்தில் இறக்கும் பொழுது துணையாக வரக் கூடியது அறம் மட்டுமே என்கிறார். புற வேடங்களும் வெறும் ஆரவார ஆசாரங்களாலும் பயன் இல்லை என்பது அவர் கருத்தாகும்.

வள்ளுவர் வாழ்ந்த காலத்தில் பல சமயங்கள் இருந்தன. அவற்றுக்கிடையே வேறுபாடு இருந்தன. பூசல்கள் இருந்தன. மணிமேகலை ஆறு வகை சமயத்துக்கும் இடையில் நிலவிய போட்டியையும் பூசல்களையும் எடுத்துக் காட்டுகிறது.
இப்படியான சூழலில்தான் திருவள்ளுவர் திருக்குறளை எழுதியிருக்க வேண்டும். திருக்குறள் சங்கத்தில் அரங்கேறிய போது அதற்கு எதிர்ப்பு இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்திய சிந்தனை வரலாற்றிலும் தமிழ்நாட்டுச் சிந்தனைப் போக்கிலும் பல புதுமைகளைப் புகுத்தி சிந்தனைப் புரட்சி செய்தவர் வள்ளுவர். திருக்குறள் மறைக்கப்பட்டதற்கும் மன்னர்களால் போற்றப்படாது போனதற்கும் இதுவே காரணியாகும்.
திருவள்ளுவர் காலத்தில் பார்ப்பனர்கள் பலவிதமான வேள்விகள் (யாகம்) செய்தார்கள். அவற்றில் விலங்குகள் பலியிடப்பட்டன. இந்த வேள்விகளில் அசுவமேத யாகம் புருசமேத யாகம் முக்கியமானவை. பார்ப்பனர்களது நிறத்துக்கும் மந்திர ஒலிக்கும் மயக்கும் பேச்சுக்கும் பலியான தமிழ் அரசர்கள் வேள்விகள் செய்து நாட்டின் கருவூலத்தை வெறுமை ஆக்கினார்கள்.

பண்டைய கால ஆரிய மன்னர்கள் அசுவமேத யாகம் செய்வதை பெருமையாகக் கருதினர். மன்னர்கள் மத்தியில் தம்மை மாமன்னர்களாக (சக்கரவர்த்தி) காட்டிக் கொள்ள விரும்பிய மன்னர்கள் பெரிய பொருட் செலவில் அசுவமேத யாகத்தை நடத்தினார்கள்.

ஒரு குதிரையை அலங்கரித்து அது இன்ன மன்னனுடையது என அடையாளம் தெரியும் வகையில் அவனது கொடி, சின்னம் போன்றவற்றை வைத்து அண்டைய நாடுகளில் திரிய விடுவார்கள். நட்பு நாடாக இருந்தாலு சரி பகை நாடாக இருந்தாலு சரி குதிரை திரியும். அதன் நடமாட்டத்தைக் கண்காணிக்க ஒற்றர்கள் பின் தொடருவார்கள். மன்னனின் குதிரை என்பதால் மன்னனுக்குரிய மரியாதை அதற்கும் கிடைக்கும். ஆனால் எந்த நாட்டிலாவது அந்தக் குதிரையைப் பிடித்துக் கட்டி விட்டால் ஒற்றர்கள் மூலம் செய்தி அறிந்த மன்னன் அசுவமேதக் குதிரையைக் கட்டிய நாட்டின் மீது படையெடுப்பான். அந்த அரசனைப் போரில் வென்று நாட்டை அடிமை கொள்வான்.

பின்னர் தன் வெற்றியைக் கொண்டாட பார்ப்பனர்களுக்கு பொன்னும் பொருளும் அள்ளிக் கொடுத்து யாகம் செய்வான். அந்த யாகத்துக்கு அசுவமேத யாகம் என்று பெயர். இந்த யாகத்தில் குதிரையை வெட்டி அக்கினிக்குப் பலி கொடுத்து பின் அதன் மாமிசத்தைத் தேவர்களும் முனிவர்களும் பார்ப்பனர்களும் அரசபிரதானிகளும் உண்டு மகிழ்வார்கள். (சப்தபத பிராமணம்)

குதிரை வெட்டப்பட்ட பின்னர் மன்னனின் பட்டத்தரசி உட்பட மன்னனின் நான்கு மனைவியர், நானூறு பணிப் பெண்கள் குதிரையின் கால்களை தண்ணீர் கொண்டு கழுவுவார்கள். பின்னர் பட்டத்தரசி குதிரையின் பக்கத்தில் படுத்துக் கொள்ள பணிப் பெண்கள் ஒரு துணியால் மூடுவார்கள். அடுத்து குதிரையின் குறியை எடுத்து பட்டத்தரசியின் மறைவிடத்தில் வைப்பார்கள். மறு பக்கம் விடிய விடிய புரோகிதர்கள் மந்திரங்களைச் செபிப்பார்கள்.

புருசமேதயாகம் இது போன்றதே. குதிரைக்குப் பதில் மனிதனை அலங்கரித்து ஓர் ஆண்டு காலம் அண்டை நாடுகள் முழுதும் சுற்றித் திரிய வைப்பார்கள். பின்னர் குதிரையை வெட்டுவது போன்று அந்த மனிதனும் வெட்டப்படுவான். குதிரையின் உடலுக்குப் பதில் மனிதனது உடலோடு பட்டத்தரசி படுத்திருப்பாள். இப்படியான ஒரு யாகத்தின் மூலமாகத்தான் தசரதராமன் பிறந்தான்!

சங்க காலத்தில் தென்னாடு புகுந்த ஆரியப் பார்ப்பனர் இந்த காட்டுமிராண்டித்தனத்தை புத்தியில்லாத தமிழ் மன்னர்களிடமும் விற்றனர்.

பார்ப்பனர்களின் சூழ்ச்சியைப் புரிந்து கொள்ளாத தமிழ்மன்னர்கள் வேள்வி (யாகம்) செய்வதைப் பெருமையாகக் கருதிப் பொன்னையும் பொருளையும் மானத்தையும் இழந்தார்கள்.

முதுகுடுமிப் பெருவழுதி (கிமு 250-225) என்ற சங்க காலப் பாண்டிய அரசன் கொலைவேள்வி பல நடத்தியதால் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என அழைக்கப்பட்டான். பெருவழுதிக்கு எதிராக அணி திரண்டு வந்து பொருதி வசையுற்ற அரசர்கள் பலர். நால்வேதத்தில் கூறியவாறு வேள்வி பல செய்து முடித்து அவ் வேள்விச் சாலைகளில் நட்ட தூண்களும் (யூபங்களும்) பல. இதனால் உன்னோடு பொருது வசையுற்ற வேந்தர்கள் தொகை பெரிதோ? அல்லது வேள்விச்சாலையில் நட்ட தூண்களின் தொகை பெரிதோ? இவற்றுள் மிக்க தொகை எது? என வியந்து கேட்கிறார் நெட்டிமையார் என்ற புலவர். (புறம் – 15)

நான்மறை முனிவர் கைவித்து வாழ்த்துங்கால் நின் முடி (சென்னி) தாழ்க என முதுடுமிப் பெருவழுதிக்கு அறிவுரை கூறுகிறார் காரிகிழார் என்ற புலவர். (புறம் -6)

சங்கப் புலவர் மாங்குடி மருதனார் பல்யாகசாலை முதுடுமிப் பெருவழுதியைப் பின்பற்றுமாறு தலையானங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனை கேட்டுக் கொண்டார். (புறம் -26)

இராசசூயம் என்ற வேள்வி இயற்றியதால் சோழன் பெருநற்கிளி இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி என்று அழைக்கப்பட்டான். (புறம் -16)

கரிகால் பெருவளத்தான், பெருநற்கிள்ளி போன்ற சோழ மன்னர்களும் பல்யானைச் செல்கெழு குட்டுவன், சேரன் செங்குட்டுவன் முதலிய சேர வேந்தர்களும் முதுகுடுமி போன்றே வேள்விகள் பல இயற்றி அரச கருவூலத்தை வெறுமையாக்கினர்.

கவுணியன் பிண்ணந்தாயன் என்பவன் சோணாட்டுப் பூஞ்சாறூர்ப் பார்ப்பான். கவுண்டின்னிய கோத்திரத்துப் பார்ப்பனர் கவுணியர் எனப்படுகின்றனர். சீர்காழி திருஞான சம்பந்தரும் கவுணியராவர். கவுணியர் வேள்வி பல செய்தனர். திருஞானசம்பந்தரும் தாம் பாடிய பதிகங்களில் வேள்வி செய்தலை வற்புறுத்துகிறார்.

கவுணியன் விண்ணந்தாயன் ஒருக்கால் வேள்வி வாயிலாகப் பெரு விருந்து செய்தான். வேள்வியில் நெய் நீரைப்போல இறைக்கப்பட்டது. இந்த வேள்விக்கு ஆசிரியர் ஆவூர் மூலங்கிழார் என்ற சங்கப் புலவர் போயிருந்தார். கவுணியன் பிண்ணந்தாயன் அவருக்கு விருந்தும் கொடுத்து பரிசில்களும் அளித்தான். பரிசைப் பெற்றுக் கொண்ட புலவர் இருபத்தொரு வேள்விகளைச் செய்த நீ மூங்கில் வளரும் இமயமலை போல உலகில் நிலைபெறுவாயாக! என வாழ்த்தினார். ( புறம் -166)

சங்க காலத்தில் கவுணியன் விண்ணந்தாயன் போன்ற வேள்விப் பார்ப்பனர்கள் செல்வச் செருக்கோடு வாழ்ந்ததையும் அவர்களிடம் ஆவூர் மூலங்கிளார் போன்ற தமிழ்ப் புலவர்கள் பாடி பரிசில் பெற்று வாழ்ந்த இழிநிலையையும் இந்தப் புறநானூற்றுப் பாடல் மூலம் அறியக்கிடக்கிறது.

பாண்டியனும் சோழனும் தன்னை இகழ்ந்தாரென்று செங்குட்டுவன் வெகுண்டபோது மாடல வேதியன் அவனைப் புகழ்ந்து சினந் தணிவித்து வேள்வி இயற்றியது சங்கம் மருவிய காலத்திலும் தமிழ் மன்னர்கள் வேள்வி செய்ததைக் காட்டுகின்றது. (தொடரும்)


About editor 3016 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply