என்றுமுள்ள செந்தமிழ் (61-80)

என்றுமுள்ள செந்தமிழ்

எம்  தோழி பரிசேலோர் எம் பாவாய்!
61

மாணிக்கவாசகர் பாடிய பாடல்கள் 8 ஆம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளது எனப் பார்த்தோம்.   அவரால் எழுதப்பட்ட பெரும் நூல்கள் இரண்டு திருவாசகம் மற்றும்  திருக்கோவையார். இவற்றுள் திருவாசகம் என்பது ஒரு பெரிய தொகுப்பு நூல். இதில் மொத்தம் 51 பாடல்நூல்கள் உள்ளன. அவற்றுள் பத்துப்பத்துப் பாடல்களாகப் பாடிய பதிகநூல்களே அதிகம். நீண்ட பாடல்களாக விளங்குபவை சிவபுராணம், கீர்த்தித் திருவகவல், திருவண்டப்பகுதி, போற்றித் திருவகவல், திருச்சதகம் ஆகியவை. இவற்றில் பல பாடல்கள் புகழ்பெற்றவையாய் விளங்கிடினும் மிக அதிகமாக வழங்கப்படுபவை, சிவபுராணமும் திருவெம்பாவையும் திருப்பள்ளியெழுச்சியும் தான்.

திருவெம்பாவை,  900 ஆயிரம் ஆண்டுகளாக சைவக்கோயில்களில் ஓதப்படும் பெருமையுடையது. “தமிழ் மந்திரம்” என்ற பெயரில் அந்தக்காலத்தில் அது கடல் கடந்து சயாம் நாட்டிற்குச் சென்றிருக்கிறது. அரசனுக்கு முடிசூட்டும் காலத்திலும் சில திருவிழாக் காலத்திலும் சயாமியர் திருவெம்பாவையை ஓதுகின்றனர். ஒவ்வொரு திருவெம்பாவைப்பாடலின் முடிவிலும் “ஏலோர் எம்பாவாய்!” என்ற சொற்றொடர் காணப்படும். அது மருவி இப்போது சயாமியரால் ” லோரி பாவாய்” என்று  பாடப்படுகிறது.

சென்ற நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்த வள்ளலார் உள்ளத்தை மாணிக்கவாசகரின் திருவாசகம் கொள்ளை கொண்டிருக்கிறது.

வான்கலந்த மாணிக்கவாசக! நின் வாசகத்தை
நான்கலந்து பாடுங்கால், நற்கருப்பஞ்சாற்றினிலே
தேன்கலந்து, பால்கலந்து, செழுங்கனித் தீஞ்சுவை கலந்து,என்
ஊன்கலந்து, உயிர்கலந்து, உவட்டாமல் இனிப்பதுவே!

வாட்டமிலா மாணிக்க வாசக நின் வாசகத்தை
கேட்டபொழு தங்கிருந்த கீழ்ப்பறவை சாதிகளும்
வேட்டமுறும் பொல்லா விலங்குகளும் மெய்ஞ்ஞான
நாட்டமுறும் என்னிலிங்கு நானடைதல் வியப்பன்றே!  

என வள்ளலார்  புகழாரம் சூட்டி மகிழ்கிறார். “திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்” என்ற பொன் மொழியும் உண்டு.

மாணிக்கவாசகர் திருவாதவூரில் பிறந்தவர்.  இவரது இயற்பெயர் திருவாதவூரர். இவரது காலம் பற்றிய பல கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. இவர் 63 நாயன்மார்களுள் ஒருவராக இல்லை. மேலும் சுந்தரரின் திருத்தொண்டர் தொகையில் இவர் இடம் பெறவில்லை. எனவே இவர் சுந்தரர் காலத்திற்கு பிற் பட்டவராக இருக்க வேண்டும்.  ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்பது பொதுவான முடிவு. அமாத்ய பிராமணர் வகுப்பில் பிறந்த இவர் இளம் வயதிலேயே அனைத்துக் கலைகள், மொழியில் புலமை  பெற்றுத் திகழ்ந்தார். அமாத்யர் என்பது அமைச்சர் என்பதன் வடமொழிச் சொல்லாகும். இந்தக் குலத்தில் பிறந்தவர்கள் அமைச்சர்களாக இருந்து வந்தார்கள். அதை ஒட்டி இவரும் அரிமர்த்தன பாண்டியனின் அவையில் முதல் அமைச்சராக இருந்தார். இளமையில் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கியதால் பாண்டிய மன்னன் அரிகேசரி அல்லது அரிமர்த்தன பாண்டியன் தென்னவன் பிரமராயர் என்னும் உயரிய விருதை அளித்துப் பெருமை படுத்தினான்.   அரசனுக்கு அமைச்சராக இருந்தும் அவர் ஆன்மீக நாட்டம் உடையவராகவே இருந்தார்.

சிவனே குருவாக வந்து மாணிக்கவாசகரை தடுத்தாட் கொண்டார் என்பது கதை. மார்கழி மாதத்தில் அவர் சிவனைக்  குறித்துத்  தீந்தமிழில் பாடிய  திருவெம்பாவையும் திருப்பள்ளியெழுச்சியும் ஓதப்படுகின்றன.

திருவண்ணாமலையில் இவர் பாடிய பாடல்களே திருவெம்பாவை எனப்படுகின்றன. இப்பாடல்களில் தன்னை ஒரு பெண்ணாகப் பாவனை செய்து  மார்கழி மாதக் காலையில் சிவனைக் குறித்துப் பாடுவது போல் பாடியுள்ளார்.

திருவெம்பாவை என்ற சொல்லில் திரு – தெய்வத் தன்மையைக் குறிக்கின்றது. எம் – என்பது உயிர்த் தன்மையை உணர்த்துகின்றது. பாவை – வழிபாட்டிற்கு உகந்த உருவம். ஆகவே திருவெம்பாவையின் திரண்ட பொருள், தெய்வத்தன்மை வாய்ந்த திருவருள் எங்களோடு இணைந்து இயங்குகின்றது. எங்களுக்குத் துணையாய் நிற்கின்றது. நாங்கள் செய்யும் நோன்பினைப் பாவைத் திருவுருவில் நின்று ஏற்கின்றது.  ஏற்றுப் பயனளிக்கிறது என்பதாகும். இப்பாடல்களில் பாவை சிறப்பிடம் பெற்றதால்  ஒவ்வொரு பாடலின் முடிவிலும் ‘எம் பாவாய்’ என்று அமைந்துள்ளது.  ஏலோரெம்பாவாய்  என்பதில் ஏலும் ஓரும் அசைகள்; பாவாய் – விளித்தல். பாவை நோன்பு நோற்கும் பெண்கள் ‘பாவாய்’ என அழைக்கப்படுகின்றனர்.

மாணிக்கவாசகரின் திருவெம்பாவை,  ஆண்டாளின் திருப்பாவை இரண்டின் பாடுபொருள் ஒன்றுதான், பாடப்படும் கடவுள்தான் வேறு. மாணிக்கவாசகர் காண்பிக்கும் பெண்கள்,சிவனைப் போற்றி  நோன்பு நோற்கிறார்கள். கோதை நாச்சியாராகிய ஆண்டாளும் அவளது தோழியரும் கண்ணனை எண்ணிப் பாவை நோன்பு இருக்கிறார்கள். இந்த இரண்டும் ஏட்டிக்குப் போட்டியாய் பாடப்பட்டனவாக தோற்றம் அளிக்கின்றன.

இந்தப் பெண்கள் எல்லாரும் இளம் வயதினர். குறும்பும் வேடிக்கையுமாகப் பேசிச் சிரிக்கிற விளையாட்டுத் தோழிகள். ஆனால் கடவுள் பணி என்று வந்துவிட்டால், அனைவரும் தீவிரமாகி விடுகிறார்கள், ‘‘நாளைக்குக் காலையில சீக்கிரமா எழுந்து குளிச்சுக் கோயிலுக்குப் போகணும்’’ என்று திட்டமிடுகிறார்கள். பாவை நோன்புக்காகச் செய்ய வேண்டியவை என்னென்ன என்று பட்டியல் போட்டுத் தயாராகிறார்கள்.

மறுநாள் காலை, சில பெண்கள் சொன்னபடி சீக்கிரம் எழுந்துவிட்டார்கள். மற்றவர்கள் இன்னும் தூங்கிக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அவர்களை எழுப்பிப் பாவை நோன்புக்காக அழைத்துச் செல்வதுதான் திருவெம்பாவையின் முதல் பகுதி.

திருவெம்பாவையில் 20 பாடல்கள் உள்ளன. முதல் பாட்டு:

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன்வார்கழல்கள் வாழ்த்தியவாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னேஎன்னே
ஈதே எம்தோழி பரிசேலோ ரெம்பாவாய். 

ஒளி பொருந்திய நீண்ட கண்களை உடைய பெண்ணே! முதலும் முடிவும் இல்லாத அரும் பெருஞ்சோதியை யுடைய இறைவனை நாங்கள் பாடுவதைக் கேட்டும்,உறங்குகின்றனையோ? உன் காது ஓசை புகாத வலிய காதோ? மகாதேவனுடைய நெடிய சிலம்பணிந்த திருவடிகளை நாங்கள் புகழ்ந்து பாடிய வாழ்த்துப் பாடல்களின் ஒலி சென்று, தெருவின் கண் கேட்ட அளவிலேயே, எங்கள் தோழி ஒருத்தி பொருமி அழுது, உடம்பை மறந்து மலர் நிறைந்த படுக்கையின் மீதிருந்து புரண்டு விழுந்து இந் நிலத்தே, ஒன்றுக்கும் ஆகாதவள் போல மூர்ச்சித்துக் கிடந்தாள். இஃது அவள் தன்மை என்ன வியப்பு!

அடுத்த பாடல்

 பாசம் பரஞ்சோதிக் கென்பாய் இராப்பகல்நாம்
 பேசும்போ தெப்போதிப் போதா ரமளிக்கே
 நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
 சீசி யிவையுஞ் சிலவோ விளையாடி
 ஏசு மிடமீதோ விண்ணோர்க ளேத்துதற்குக்
 கூசு மலர்ப்பாதந் தந்தருள வந்தருளுந்
 தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள்
 ஈசனார்க் கன்பார்யாம் ஆரேலோ ரெம்பாவாய்! 

சிறந்த அணிகளை அணிந்தவளே! இரவும் பகலும் நாம் பேசும் பொழுது எப்பொழுதும் என் அன்பு, மேலான ஒளிப் பிழம்பான இறைவனுக்கு என்று கூறுவாய். இப்பொழுதுஅருமையாகிய படுக்கைக்கே, அன்பு வைத்தனையோ? பெண்களே! சீச்சி நீங்கள் பேசும் நகை மொழிகளில் இவையும் சிலவாகுமோ! என்னோடு விளையாடிப் பழித்தற்குரிய சமயம்இதுதானோ? தேவர்களும் வழிபடுதற்கு நாணுகின்ற தாமரை மலர் போன்ற திருவடியை அன்பருக்குக் கொடுத்தருள எழுந்தருளும் ஒளி உருவன்; தில்லைச் சிற்றம்பலத்துஇறைவனுக்கு, அன்பு பொருந்திய நாம் உனக்கு யார்? (வளரும்)


என்றுமுள்ள செந்தமிழ்

போற்றியாம் மார்கழிநீ ராடேலோ ரெம்பாவாய்               

62

மாணிக்கவாசகரது இயற்பெயர் வாதவூரர்.  மாணிக்கவாசகர் வாழ்ந்தது கொஞ்சக் காலம்தான். அவர் மறைந்தபோது அவருக்கு அகவை முப்பத்திரண்டு மட்டுமே.   அரிமர்த்தன பாண்டியன் அவையில்  அமைச்சராக இருந்தவர்.

ஒருநாள் அரசவை கூடியிருக்கும் போது திருப்பெருந்துறையில் மேலைநாடுகளில் இருந்து  வணிகர்கள் நல்ல உயர்ந்த சாதிக் குதிரைகளோடு  தரையிறங்கி இருப்பதாக அரிமர்த்தன பாண்டியனிடம் தூதுவர்கள் வந்து சொன்னார்கள்.

குதிரைப் படைகளுக்கு மேலதிகமாகக் குதிரைகள் தேவைப்பட்டது.  திருப்பெருந்துறையில் வந்திறங்கிய குதிரைகளில் நல்ல குதிரைகளாகப் பார்த்து அவற்றைக் குறைந்த விலையில் வாங்கி வருமாறு அரிமர்த்தன பாண்டியன் மாணிக்கவாசகரைப் பணித்தான். அதற்குத் தேவையான பொருளை கருவூலத்தில் இருந்து எடுத்து அரண்மனை மெய்ப் பாதுகாப்பாளர்களுடன் செல்லுமாறு சொன்னான்.

திருப்பெருந்துறையை அடைந்த மாணிக்கவாசகர் அங்குள்ள சிவன் கோயில் சிதலம் அடைந்து இருப்தைக் கண்டு மனம் நொந்தார்.   மன்னன் அளித்த பணத்தைக் கொண்டு அக் கோவிலைப் புதுப்பித்தார்.  குதிரை வாங்கப் போனவர் குதிரை வாங்கவில்லை. மாதங்கள் பல சென்றன.  மாணிக்கவாசகர் மதுரை திரும்பவில்லை. இதனை அறிந்த அரிமர்த்தன பாண்டியன் சினம் கொண்டு  மதுரை திரும்புமாறு மாணிக்கவாசகருக்கு ஓலை அனுப்பினான்.

ஓலையைப் படித்த பின்னர்தான்   சிவன் பற்றிய சிந்தனையில் இருந்து விடுபட்டு இயல்பு நிலைக்கு மாணிக்கவாசகர் திரும்பினார்.  மன்னனுக்கு வாக்களித்தபடி குதிரை வாங்கவில்லை. கொண்டு வந்த பொருள் எல்லாம் கோயில் திருப்பணிக்கு செலவு செய்தாகிவிட்டது. மன்ன்ன் கோபித்துக் கொள்ளப் போகிறான்.

திருப்பெருந்துறையில் குருந்த மரத்தின் கீழ் மாணிக்கவாசகரது குருநாதர் இருந்தார்.  மன்னனுக்குக் குதிரைகள் எப்படியாவது வாங்கிக் கொண்டு போக வேண்டுமே அதற்கு என்ன செய்வது என்று வருந்தினார்.

“மாணிக்கவாசக! கவலை கொள்ளற்க. வருகிற ஆவணிமூல நாளன்று உயர்ந்த சாதிக் குதிரைகள் மதுரை வந்து சேரம் எனச் சொல். நீ செலவிட்ட பொருள் ஒருபோதும் வீண்போகாது. அதற்காக வருந்த வேண்டாம்” என்று குரு ஆறுதல் கூறி அனுப்பி வைத்தார்.

அரசவை கூடியது. விசாரணை தொடங்கியது. இன்னும் பத்தே நாட்களில் குதிரைகள் வந்து சேரும் என மாணிக்கவாசகர் உறுதிபடக் கூறினார்.  இதற்குள் இன்னொரு அமைச்சர் மாணிக்கவாசகர் கூறவது  பொய். திருப்பெருந்துறையில் ஒரு குதிரை கூடக் காணப்படவில்லை. திருப்பெருந்துறையில் இருந்து குதிரைககள் இங்கு வந்து சேர்வதற்குக் குறைந்தது ஒரு வாரமாவது செல்லும். இன்னும் இரண்டே நாட்களில்  எப்படிக் குதிரைகள் வந்து சேரும்?” எனக் கேட்டார்.  மன்னர் மாணிக்கவாசகரை அழைத்து வைகைக் கரையில் சுடுமணிலில் நிறுத்தி வைத்துத் தண்டித்தான்.

இதன் பின் நடந்த கதை எல்லோருக்கும் தெரியும்.  சிவன் நரிகளைக் குதிரைகளாக்கிக் கொண்டுவந்து மன்னனிடம் காட்டினார். ஆனால் அன்று இரவே பரிகள் மீண்டும் நரிகளாக மாறிவிட்டன. இப்படி நரி பரியாகி மீண்டும் நரியாகிய கதை சிவனின் 64  திருவிளையாடல்களில் ஒன்றாகக் கூறப்படுகிறது.

இன்றும் திருப்பெருந்துறையில் உள்ள ஆத்மநாதர் கோயிலுக்குள் மாணிக்கவாசகருக்குச் சிறப்பு இடம் கொடுக்கப்பட்டுள்ளது. அவரது பெரிய திருவுருவம் அங்கு இருக்கிறது. ஆதி சைவர்கள் ஆகமவிதிப்படி பூசை  செய்து வருகிறார்கள்.  ஆனால் ஏனைய கடவுளருக்கு வைதீகப் பிராமணர்களால் வைதீக நெறிப்படி பூசை நடைபெறுகிறது.

காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக் 
கோதை குழலாட வண்டின் குழாம் ஆடச் 
சீதப் புனல்ஆடிச் சிற்றம் பலம்பாடி 
வேதப் பொருள்பாடி அப்பொருள் ஆமா பாடி 
சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார் பாடி 
ஆதி திறம்பாடி அந்தம் ஆமா பாடிப் 
பேதித்து நம்மை வளர்த்துஎடுத்த பெய்வளை தன் 
பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்.                       14

காதில் அணிந்துள்ள குழைகள் ஆட, பொன் அணிகலன்கள் ஆட, பூமாலையணிந்த கூந்தல் ஆட, (அதைச் சுற்றும்) வண்டுக் கூட்டம் ஆட, குளிர்ந்த நீராடிச் திருச்சிற்றம்பலத்தைப் பாடி, வேதத்தின் பொருளைப்  பாடி, இறைவன் அந்த வேதத்தின் பொருள் ஆகும் திறத்தினைப் பாடி, அவனுடைய சோதி வடிவின் பெருமையைப் பாடி, கவன் அணிந்துள்ள கொன்றைக் கொத்தினைப் பாடி, எல்லாவற்றிற்கும் முதல்வனாக இருக்கின்ற வல்லமையைப் பாடி, அவனே எல்லாவற்றிற்கும் இறுதியும் ஆவதைப் பாடி, (மும்மலம் ஆகிய) பிறவற்றை நீக்கி நம்மை வளர்த்தெடுத்த இறையருட் சத்தியின் பாதத் தத்துவத்தையும் பாடி நீராடுங்கள்!

பைம்பூண் – பொன்னாபரணம், கோதை – பூமாலை, குழாம் – கூட்டம்,  சீதம் – குளுமை, தார் – மாலை.

மாணிக்கவாசகரின் திருவெம்பாவை, ஆண்டாளின் திருப்பாவை ஆகியவற்றைக் கண்டு அதைப் போன்றே சமணரான அவிரோதி நாதரால் இன்னொரு திருவெம்பாவை அதே சந்தத்தில் இயற்றப்பட்டிருக்கிறது.  இந்தத்  திருவெம்பாவையில் அருகனைப் பற்றிய குறிப்புகள் இடம்பெறுகின்றன.  இந்த நூலில்  சமணர்களது  வழி காட்டிகளாகிய தீர்த்தங்கரர்களைப்  போற்றிப் புகழப்பட்டுள்ளது.   இருபது  பாடல்கள் மயிலைநாதர் மேல் பாடப்பட்டுள்ளன. மயிலைநாதர் என்பது மயிலாப்பூரில் எழுந்தருளியுள்ள நேமிநாதரைக் குறிக்கிறது.  சான்றாக ஒரு பாடலைக் பார்ப்போம்.

கரக் குழலாட மாணிக்கப் பூணாடச் 
சிகரக் குழலாட செறிவண் டிசைபாட 
முகரப் புனலாடி முக்குடையான் தாள்பாடி 
விகலக் கவிபாடி வேதப் பொருள்பாடிச் 
சகல சிநத் திறைவன் தன்னனைய தாள்பாடிப் 
புகலாம் பதியருகன் பொற்றா மரைபாடி 
இகலார்ந் தெனையளித்த வெற்கையான் தாள்பாடி 
பகரும் பிறப்பறவே பாடேலோ ரெம்பாவாய்                             (14)

(சிநன் = ஜினன், முகரம் = சங்கு, விகலக் கவி = குறையற்ற கவி, வெற்கையான் = வெற்றியுடைவன்

திருவெம்பாவையின்  கடைசிப் பாடல் (20)  போற்றி, போற்றி என ஒவ்வொரு அடியும் தொடங்குகிறது.

போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுகநின் அந்தமாஞ் செந்தளிர்கள்
போற்றிஎல் லாவுயிர்க்குந் தோற்றமாம் பொற்பாதம்
போற்றிஎல் லாவுயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றிஎல் லாவுயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றிமால் நான்முகனுங் காணாத புண்டரிகம்
போற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழிநீ ராடேலோ ரெம்பாவாய்.                 (20)

எப்பொருளுக்கும் முதலாயுள்ள உன் திருவடி மலருக்கு வணக்கம். எவற்றுக்கும் முடிவாயுள்ள, செந்தளிர் போலும் திருவடிகளுக்கு வணக்கம், எல்லாவுயிர்களுக்கும் தோன்றுதற்குக் காரணமாகிய பொன்போன்ற திருவடிகளுக்கு வணக்கம், எல்லாவுயிர்களுக்கும் நிலைபெறுதற்குரிய பாதுகாப்பாகிய அழகிய கழலணிந்த திருவடிகளுக்கு வணக்கம். எல்லாவுயிர்களுக்கும் முடிவு எய்துதற்குக் காரணமாகிய திருவடிகள் இரண்டிற்கும் வணக்கம். திருமாலும், பிரமனும், காணமுடியாத திருவடித் தாமரை மலருக்கு வணக்கம். நாம் உய்யும்படி ஆட்கொண்டருளுகின்ற தாமரை மலர்போலும் திருவடிகளுக்கு வணக்கம். இங்ஙனம் கூறிப் போற்றி இறைவனை வணங்கி, நாம் மூழ்குவதற்குரிய மார்கழி நீரில் ஆடுவோமாக.

திருவெம்பாவை, திருப்பாவை,   அவிரோத நாதர் பாடிய திருவெம்பாவை ஆகிய பாடல்களில் நெஞ்சைக் கொள்ளை கொள்ளும் தமிழின் இனிமையையும் ஓசைச் சிறப்பையும் பொருள் நயத்தையும் பரக்கக் காணலாம்.  இந்த பக்தி இலக்கியங்கள் தமிழ்மொழிக்குக் கிடைத்த கொடை ஆகும்.  (தொடரும்)


என்றுமுள்ள செந்தமிழ்

முன்னைப் பழம் பொருட்கு முன்னைப் பழம் பொருளே! 

63

மாணிக்கவாசகர் பல கோயில்களுக்குச் சென்று வழிபட்டு திருவண்ணாமலை வந்து  சேர்ந்தார். அது மார்கழி மாதம். திருவாதிரைக்கு இன்னும் பத்து நாட்கள்தான் எஞ்சி இருந்தன. அந்த ஊரில் இளமங்கையர்கள் விடியற் கருக்கலில்  எழுந்து வீட்டைப் பெருக்கித் தண்ணீர் தெளித்து கோலமிட்டுக் குளத்துக்கு நீராடச் செல்கிறார்கள். அந்த அழகான காட்சியை மாணிக்கவாசகர் பார்க்கிறார். உள்ளத்தில் உவகை பெருக்கெடுத்து ஓடியது. அந்த உவகை திரு எம்பாவைப் பாடல்களாக வடிவெடுத்தன.

முதல் எட்டுப் பாடல்களும் பெண்கள் ஒருவரை ஒருவர் எழுப்பி ஒன்றாகச் சேர்ந்து குளிக்கச் செல்லும் காட்சி வருணிக்கப்படுகிறது. அடுத்து எல்லோரும் கூடி இறையருளைப் பாடுவதாக அமைந்துள்ளது.

திருவெம்பாவை ஆன்மா தன்னைப் பீடித்துள்ள மாயையிலிருந்து விடுபட்டு இறைவனையடைய முயற்சிப்பதை விளக்குகின்றது என்பது தத்துவக் கருத்து ஆகும்.

முன்னைப் பழம் பொருட்கு முன்னைப் பழம் பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே
உன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோம்
உன்னடியார் தாள் பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எங்கணவராவார் அவருகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்
இன்ன வகையே எமக்கெங்கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோம் ஏலோரம்பாவாய்.                   (9)

எனக்கூறித் தமக்கு வேண்டியவற்றைக் கேட்கின்றார்கள். பக்தி என்னும் தண்ணீரில் பாவங்கள் கழுவப்படுகிறதாம்.  இதை மாணிக்கவாசகர் இலக்கிய நயத்தோடு “ஆர்த்த பிறவித் துயர்கெட நாம் ஆர்த்தாடும் தீர்த்தன்” என்று வருணிக்கிறார். கடவுள் நம்பிக்கை, பக்தி,  நோன்புகள் போன்ற மிகப்பெரிய சங்கதிகளை மிக இலகுவாக மக்களிடையே மாணிக்கவாசகர் புகுத்தி  விடுகிறார். முக்கியமாக இளம் வயதினரிடம் பக்தியைக் காண்பது கடினம். அவர்களுடைய பல அய்யங்களுக்குப் பதில்சொல்ல முடியாது. ஆனால் மாணிவாசகரோ இளநெஞ்சங்களின் போக்கிலே சென்று மணிமணியான வாசகங்களின் மூலம் தன்கருத்தைச் சொல்லுகிறார்.

எல்லாம் தோன்றுதற்கு முன்னும் எல்லாம் அழிந்த பின்னும் இருப்பவன் இறைவன். இறைவா நீ! பழமைக்குப் பழமையானவன். பிற்காலத்தில் தோன்றிய புதுமையான பொருட்கள் அனைத்திற்கும் புதுமையானவன். எம்பெருமானே! நாங்கள் உன் தொண்டர்கள் உன்னுடைய அடியார்களின் பாதங்களை வணங்குகிறோம். அவர்களுடன் இணைந்து தொண்டு செய்வோம். அவர்களே எங்களின் கணவர்கள் ஆவார்கள். அவர்கள் விரும்பிக் கூறுவதை ஏற்று பணி செய்வோம். இப்படிப்பட்ட நல்ல நிலையை தந்தால் எங்களுக்கு குறை ஒன்றும் இருக்காது. அடியார்க்கும் அடியாளர்களைப் பணிவது இறைவனைப் பணிவதாகும். அந்தப் பணியே அனைத்திலும் சிறந்த இனிய பணியாகும் என்பது தத்துவக் கருத்து.

மாணிக்கவாசகருக்கு தமிழ் அன்னை கேட்டதெல்லாம் கொடுக்கிறார் போல் தெரிகிறது. அவருக்கு சொற்பஞ்சம் பொருட் பஞ்சம் இப்பதாகத் தெரியவில்லை.  ஒரு நாமம் ஓர் உருவம் ஒன்றும் இல்லார்க்கு ஆயிரம் திருநாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ எனப் பாடிய மாணிக்கவாசகர் இறைவனை ஏகன், அனேகன், பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன், தேனார் அமுது, ஆரியன், போக்கும் வரவும் இல்லா புண்ணியன், சொல்லற்கரியான், பெம்மான், பெண் சுமந்த பாகத்தன், ஒப்பிலாமணி, அன்பினில் விளைந்த ஆரமுது, காண்பரிய பேரொளி, நுண்ணர்வு, ஆற்றின்ப வெள்ளமே, சுடரொளி, மெய்யன், விடைப் பாகன், அய்யன், பெருங்கருணைப் பேராறு, காவலன், தில்லைக் கூத்தன், தென் பாண்டி நாட்டான் போன்ற பல திருநாமங்களால் குறிக்கிறார்.

இறைவன் கருணைக் கடலா?  என்ற கேள்விக்கு மாணிக்கவாசகர் தித்திக்கும் சொற்றமிழில் விடை பகர்கிறார்.

கல்லைப் பிசைந்து கனி ஆக்கி, தன் கருணை வெள்ளத்து
அழுத்தி வினை கடிந்த வேதியன்!

பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் 
பரிந்து  நீ பாவியேனுடைய 
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்தமாய
தேனினைச் சொரிந்து புறம்புறந் திரிந்த
செல்வமே சிவ பெருமானே!

மேலும் ஒரு திருவெம்பா பாடலைப் பார்ப்போம்.

உன் கையில்  பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று
அங்கப் பழஞ்சொல் புதுக்கும் எம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன்று  உரைப்போம் கேள்
எம் கொங்கை  நின் அன்பர்  அல்லார்  தோள்  சேரற்க
எம் கை உனக்கு அல்லாது எப்பணியுஞ் செய்யற்க
கங்குல் பகல் எம் கண் மற்ற ஒன்றும் காணற்க
இங்கு இப் பரிசே எமக்கு எம் கோன் நல்குதியேல்
எங்கு  எழில் என் ஞாயிறு  எமக்கு ஏலோர்  எம்பாவாய்!                                (19)

உன் கையில்  பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று அங்கப் பழஞ்சொல்   புதுக்கும் எம் அச்சத்தால் -‘உன்   கைப் பிள்ளை உனக்கே அடைக்கலம்’ என்ற பழமொழியை திரும்பவும் கூறுவது தேவை இல்லாதது   என்ற அச்சத்தால்,

எங்கள் பெருமான்                  – எங்கள்   தலைவனே!

உனக்கொன்று  உரைப்போம் கேள் – உன்னிடம்   ஒன்று உரைப்போம், தயை கூர்ந்து கேள்,

எம் கொங்கை  நின் அன்பர்    அல்லார்  தோள்  சேரற்க – உன் அடியார்களை மட்டுமே திருமணம் செய்து கொள்வோம்,   உன் அடியவர் தவிர வேறு யாருக்கும் எங்கள் தோள் உரிமை ஆகாதிருக்கட்டும்,

எம் கை  உனக்கு அல்லாது எப்பணியுஞ் செய்யற்க    – எம் கை,   உனக்கான திருப்பணி அல்லாது,  வேறு எந்த   விதப் பணிகளும் (வேறு எவருக்கும் தொண்டு) செய்யாது இருக்கட்டும்,

கங்குல்   பகல் எம் கண் மற்ற ஒன்றும் காணற்க      – இரவும்,   பகலும், எங்கள் கண்கள்   உன்னைத் தவிர    வேறு எதையும் எவரையும் காணாதிருக்கட்டும்,

எம் கோன்                                               – எங்கள்   தலைவனே!

இங்கு இப்   பரிசே எமக்கு நல்குதியேல்                – இவ்வாறான   நிலையை எங்களுக்கு வழங்குவாய் எனில்,

எங்கு    எழில் எமக்கு ஏலோர்  எம்பாவாய்             – ஞாயிறு   எந்தத் திசையில் எழுந்தாலும் எங்களுக்கு ஒரு கவலை இல்லை.

இறைவனது அடியார்களுக்குத் தொண்டு செய்வதும் அவனது தாள் வணங்கியும் இரவும் பகலும் எப்போதும் அவன் நினைவாகவும்  பார்க்கும் பொருளில் எல்லாம் அவன் தன்மையைப் பார்க்கும் நிலையையும் அடைவதுதான் பிறவியின் பயன் ஆகும் என்பதை இப்பாடல் வழியாக உணர்த்துகிறார் மாணிக்கவாசகர்.

வள்ளலார் சொன்னது போல மாணிக்கவாசகர் பாடிய பாடல்கள், நற்கருப்பஞ்சற்றினிலே தேன்கலந்து, பால்கலந்து, செழுங்கனித் தீஞ்சுவை கலந்து, ஊன்கலந்து, உயிர்கலந்து, உவட்டாமல் இனிக்கின்றன!

அடுத்த முறை மாணிக்கவாசகர் பாடிய திருப்பள்ளி எழுச்சி பாடல்களில் வடியும் தேன் தமிழின் சுவையைப் பார்ப்போம். (வளரும்)


என்றுமுள்ள செந்தமிழ்
கூவின பூங்குயில், கூவின கோழி குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்!

64

திருப்பெருந்துறையில் உள்ள குருந்த மரத்தடியில் மாணிக்கவாசகருக்கு இறைவன் காட்சி கொடுத்து மறைந்துவிட்டான். இறைவனைக் கண்டு அனுபவித்த மாணிக்கவாசகருக்கு இறைவன் காட்சி கொடுத்து மறைந்த்து அவரை பிரிவுத் துன்பத்தில் ஆழ்த்தியது. அதில் பிறந்ததுதான் திருவாசகம். மாணிக்கவாசகர் தாம் பெற்ற இறை அனுபவத்தை திருப்பள்ளி எழுச்சிப்பாடல்களில் பாடியிருக்கிறார். இதற்குப் புறச் சான்றாக இருக்கும் ஞான ஆலயந்தான் திருப்பெருந்துறை. இப்போது அது ஆவுடையார் கோயில் என்று பெயரில் அழைக்கப்படுகிறது. இங்கேதான் மாணிக்கவாசகர் சிவதீட்சை பெற்றார்.  திருப்பள்ளி எழுச்சிப் பாடல்களில் திருப்பெருந்துறையில் தாம் சிவதீட்சை பெற்ற அனுபவத்தை மிக அழகாக மாணிக்கவாசகர்  சொல்லி இருக்கிறார்.

ஒருவரிடம் இருக்கும் ஆணவத்தைப் போக்குவதுதான் தீட்சை. இதை மலபரிபாகன் என்பார்கள். திருப்பெருந்துறையில் மாணிக்கவாசகருக்கு சிவன் தீட்சை அளித்தார். இதன் மூலமாக மாணிக்கவாசகரின் ஆணவத்தை சிவபெருமான் நீக்கி அருளினார்.

மாணிக்கவாசகர் அரிமர்த்தன பாண்டியனின் முதலமைச்சர்.  இறைவனால் தீட்சை பெற்றதும் தான் அமைச்சர் என்ற ஆணவம் அவரை விட்டு ஒழிந்தது.  நண்பரையும் பகைவரையும் ஒன்றாகப் பார்க்கும் உயர்ந்த மனப் பக்குவத்தைப் பெற்றார்.

இறைவனின் தெய்வீகக் காட்சி நினைப்பும் மறப்பும் இல்லாமல் தொடர்ந்து இருக்கும் சுத்த நிலையில் தம்மை வைக்கும்படி மாணிக்கவாசகர் வேண்டிக் கொள்கிறார். திருப்பள்ளியில் இருந்து எழுந்து வந்து தமக்கு சுத்த நிலையை அருள் புரியும்படி இறைவனை மாணிக்கவாசகர் வேண்டும் பாடல்களே அவர் பாடிய திருப்பள்ளி எழுச்சிப் பாடல்கள்.

மாணிக்கவாசகர் பெற்ற இறைவனின் அருள் அனுபவத்தைப் பற்றிய திருப்பள்ளி எழுச்சிப் பாடல்கள் இலக்கிய நயம் வாய்ந்தவை. அவர் திருப்பெருந்துறையாகிய ஆவுடையார் கோயிலையும் அதைச் சுற்றியிருக்கும் இயற்கைக் காட்சிகளையும் அந்தக் கோயிலில் காலையில் நடைபெறும் பூசைகளையும் இலக்கிய நயத்துடன் புனைந்து பாடியிருக்கிறார்.

மாணிக்கவாசகர் பாடிய திருப்பள்ளி எழுச்சிப் பாடல்களில் காட்டும் திருப்பெருந்துறையில் புறக் காட்சிகள் எல்லாம் அவர் தூல உடம்புடன் இருந்த போது பெற்ற இறை அனுபவத்தையே உள்ளுறையாகக் கொண்டு விளங்குகின்றன.

இறை ஒளி அவர் அகத்திலும் புறத்திலும் சிதம்பரத்தில் தோன்றியது. அந்த இறை ஒளியில் மாணிக்கவாசகர் தம் தூல தேகத்துடன் மறைந்து போனார். தாம் தூல உடம்புடன் இருந்து அனுபவித்து வந்த இறை அனுபவத்தையும் அப்போதே இழந்து விட்டார்.

“கன்னல் கனிதேர் களிறு என என்னையும் கடைமுறை இருப்பது ஆக்கினன்” என்று மாணிக்கவாசகர் தம் இறை அனுபவத்தைச் சொல்கிறார்.

மாணிக்கவாசகருக்கு முந்தியவரான திருஞானசம்பந்தரும் திருமணத்தின் பின்னர் தமது துணைவியார் தோத்திரப் பூர்ணாம்பிகையையோடு திருக்கோயிலுக்குச் சென்று வழிபட்ட பின்னர் சோதியில் கலந்துவிட்டார் எனச் சொல்லப்படுகிறது.  சோதியில் கலக்கவில்லை நந்தனைப் போல் அவர் தீமூட்டிக் கொல்லப்பட்டார் என்ற கதையும் உளது.

இப்போது மாணிக்கவாசகர் பாடிய திருப்பள்ளி எழுச்சி முதல் பாடலைப் பார்ப்போம்.

போற்றி என் வாழ்முதல் ஆகிய பொருளே
புலர்ந்தது பூங்கழற்கிணைதுணை மலர்கொண்டு
ஏற்றி நின் திருமுகத்து எமக்கருள் மலரும்
எழில்நகை கொண்டு நின் திருவடி தொழுகோம்
சேற்றிதழ்க் கமலங்கள் மலருந்தண் வயல்சூழ்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே
ஏற்றுயர் கொடியுடையாய், எனை உடையாய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!

திருப்பள்ளி எழுச்சி திருப்பெருந்துறையில் பாடியவை. திருப்பெருந்துறை நீர் வளமும், நில வளமும் பொருந்திய ஓர் ஊராகும். அங்குள்ள இறைவனைக்குறித்துப் பாடிய இப்பாடல்கள் மாணிக்கவாசகர் தம் உள்ளத்துள்ளே உறையும் இறைவனை உள்ளத்திலே பள்ளி எழுந்தருளச் செய்து பின் அவனோடு ஒன்றிணைவதற்கு மேற்கொண்ட முயற்சிகள் எனக் கூறுவார்கள்.

வளம் பொருந்திய திருப்பெருந்துறை வயல்களில் செந்தாமரை மலர்ந்து குலுங்குக் கிடப்பது  போல் நம் உள்ளத்தாமரையும் இறைவனின் எல்லை இல்லாப்பெருங்கருணையால் மலர்ந்து கொள்கிறது.

போற்றி என் வாழ்முதல் ஆகிய பொருளே – என் வாழ்க்கையின் அடிப்படையே இறைவனாகிய பரம்பொருளே. அத்தகைய பரம்பொருளே உனக்குப் போற்றி. நின் திருவடித் தாமரையைத் தொழுது கொள்கிறேன்.

புலர்ந்தது பூங்கழற்கிணைதுணை மலர்கொண்டு = அதிலே அருமையான பூங்கழல்களால் அர்ச்சிக்கிறேன். இப்போது இருள் நீங்கிப் பொழுது புலரும் வேளை ஆகிவிட்டது,

ஏற்றி நின் திருமுகத்து எமக்கருள் மலரும் –    என் அய்யயனே, உன் திருமுகதரிசனமும்.

எழில்நகை கொண்டு நின் திருவடி தொழுகோம்= அதில் விளங்கும் குறுமுறுவலும் எமக்குச் செய்யும் அருளை என்னென்று கூறுவது? உன் திருவடி நாதம் பிரணவநாத ஒலியன்றோ? அத்தகைய நாதம் ஒலிக்க வீரக் கழல்களைத் தாங்கி நிற்கும் உன் திருவடித் துணை எங்களுக்கு எப்போதும் வேண்டும். அத்தகைய திருவடியை நாங்கள் தொழுது ஏத்துகிறோம்.

சேற்றிதழ்க் கமலங்கள் மலருந்தண் வயல்சூழ் திருப்பெருந்துறையுறை சிவபெருமானே= தாமரை மலருவது சேற்றிலே ஆனாலும் அது சேற்றை விட்டு மேலே எழும்பி நிற்கும். தனித்துத் தெரியும், சேறு மட்டுமில்லாமல் அந்தக் குளத்து நீரும் அதில் ஒட்டாது. அவ்வாறே இவ்வுலகவாழ்க்கையில் பற்றில்லாமல் இறைவனிடம் கொண்ட பக்தியையே எந்நேரமும் நினைந்து திருப்பெருந்துறையாகிய இந்த ஊரில் குடி கொண்டிருக்கும் இறைவனை  வழிபடுகிறோம்.

இங்கே தாமரை மலர்வது நம்முள்ளே மனத்தாமரை உள்ளே இருக்கும் அருட்பெரும்சோதியைக் கண்டு மலருவதற்கு உவமை சொல்லப்படுகிறது. சேறு என்பது நம் மனதில் தோன்றும் இவ்வுலகத்துப் பற்றுடைய எண்ணங்களைக் குறிக்கும். அத்தகைய சேறு நிறைந்த எண்ணங்களையும் மீறிக்கொண்டு இறைவனிடம் வைத்த பக்தியானது மலர்ந்து தாமரை மலர் போல் முகம் காட்டிச் சிரிக்கிறது.

ஏற்றுயர் கொடியுடையாய், எனை உடையாய் =  எருது பொறுமைக்குப் பெயர் போனது. எவ்வளவு பாரமானாலும் தாங்கிக்கொள்ளும். எவ்வளவு துன்பமானாலும் தாங்கிக்கொள்ளும். அத்தகைய எருதைத் தனக்குக் கொடியாகவும், வாகனமாயும் கொண்டுள்ள இறைவனோ அவன் தன்மையையும் உண்மையையும் சொல்லி முடியுமா? அவன் நம்மையும் ஆட்கொண்டுவிட்டானே.

எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே! = ஆகவே நம்முள்ளே உள்ள ஒளிவடிவான ஈசன் எழுந்தருளத் திருப்பள்ளி எழுச்சி பாடுவோம் ஆக.

இன்னொரு பாடல். திருப்பள்ளி எழுச்சி மூன்றாம் பாடல். மிகவும் அழகான, இனிமையான பாடல். ஒரு விடிகாலைப் பொழுதை பைந்தமிழில் வருணித்துப் பாடிய பாடல்.

நாயகன் திரைப்படத்தில் ‘செவ்வந்தி பூக்களில் செய்த வீடு…’ என்ற பாடல்  தொடங்கு முன் ஒரு ஒற்றைக் குயிலின் பாட்டுச் சத்தமும்… தொடர்ந்து புள்ளினங்களின் சத்தமும்  மாணிக்கவாசகர் பாடிய திருப்பள்ளி எழுச்சிப் பாடல் 3 இன்  முதல் நான்கு வரிகளும் ஒலிக்கும்.   அதைத் தொடர்ந்து ‘செவ்வந்தி பூக்களில் செய்த வீடு,  வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு …’ என்று பல்லவி வரும்.  கேட்க மிக இனிமையாக இருக்கும். பாடலைப் பாடியவர்கள் தீபன் சக்ரவர்த்தி மற்றும் உமா இரமணன். இசை,  இசைஞானி இளையராசா.  பாடலைக் கேட்கும் போது மெய் சிலிர்க்கும்!

‘கூவின பூங்குயில் கூவின கோழி…
குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்..
யாவரும் அறிவறியாய்! எமக்கு எளியாய்!
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே…’

இப்போது முழுப் பாடலையும் பார்ப்போம்.

கூவின பூங்குயில்கூவினகோழி
குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்
ஓவின தாரகை ஒளி ஒளி உதயத்து
ஒருப்படுகின்றது விருப்பொடு நமக்குத்
தேவநல் செறிகழல் தாள் இணை காட்டாய்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே
யாவரும் அறிவு அரியாய் எமக்கு எளியாய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.

கூவின பூங்குயில் கூவின கோழி  =  அதிகாலை நேரம் குயில் கூவித் துயில் எழுப்பும், கோழிகள் கொக்கரக்கோ எனக் கூவும். அப்படித் திருப்பெருந்துறையிலும் குயில்கள் கூவ, கோழிகள் கூவ,
குருகுகள் இயம்பின இயம்பின சங்கம் = மற்றப் பறவைகளும், நாரைகளும் ஒலி எழுப்ப, கோயில்களிலும் வீடுகளிலும் எம்பெருமானின் வழிபாடலுக்கான சங்கங்கள் ஆர்ப்பரித்தன.

ஒருப்படுகின்றது விருப்பொடு நமக்குத் = விண்ணிலே விண்மீன்களின் ஒளி மங்கிக்கொண்டு விடி காலத்து அருணோதயத்தைத் தொடர்ந்து ஞாயிறு ஒளி பரவத் தொடங்குகிறது.

தேவநல் செறிகழல் தாள் இணை காட்டாய் =  உன்னை எங்கள் அய்ம்பொறிகளாலும் அறிவாலும் மனத்தாலும் ஆழ்ந்து அநுபவிக்க முடியாது.  அருள் அநுபவம் பெற்றாலே அநுபவித்து உணர முடியும்.  அத்தகைய அநுபவத்தை எங்களுக்குக் கொடுத்து எங்களை ஆட்கொண்டு அருள் புரிவாய்.

திருப்பெருந்துறையுறை சிவபெருமானே  = திருப்பெருந்துறையில் உறையும் எங்கள் இறைவனே, சிவனே, எங்களின் இந்த பக்தியைக் கண்டு எங்கள் மேல் அன்பு பூண்டு எம்மை ஆட்கொள்ள உன் திருவடித் தாமரைகளை எங்களுக்குக் காட்ட மாட்டாயா?

யாவரும் அறிவு அரியாய் எமக்கு எளியாய் = அனைவராலும் அறிய முடியாதவனே, ஆனால் உன் அடியார்கள் மட்டுமே அறியக் கூடிய தன்மை கொண்டவனே,

எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே! = ஆகவே நம்முள்ளே உள்ள ஒளிவடிவான இறைவன் எழுந்தருளத் திருப்பள்ளி எழுச்சி பாடுவோம் ஆக.

சைவ சமய இலக்கியங்களில் மாணிக்கவாசகர் பாடிய திருவாசகம், திருப்பள்ளி எழுச்சி போன்ற பக்திப் பாடல்களுக்கு தனி இடம் உண்டு. (வளரும்)

என்றுமுள்ள செந்தமிழ்

இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால் இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்!

65

செந்தமிழ்ச் சொற்களாகிய மாணிக்கங்களை பதித்து, அன்பெனும் கயிற்றில் கோர்த்து மாலை சாத்தும் தொண்டனாகிய நீ இன்று முதல் மாணிக்கவாசகன் என்றே அழைக்கப்படுவாய் என இறைவனே பெயரிட்டதாகச் சொல்வர். திருப்பள்ளி எழுச்சி பாடல்களில் கற்பனை வளம் இருக்கிறது.  சொல் இனிமை இருக்கிறது. கருத்துச் செறிவு இருக்கிறது. இயற்கையின் அழகு இருக்கிறது. காலைப் பொழுதின் கோலம் தெரிகிறது. இவையெல்லாம் திருப்பள்ளி எழுச்சி பாடல்களைப் படிப்போரை இன்பத்தில் ஆழ்த்துகின்றன.

திருப்பள்ளி எழுச்சி பாடல்கள் மொத்தம் பத்து மட்டுமே. ஆனால் அவை எல்லாமே சத்தான தமிழில் பாடிய முத்தான பாடல்கள். அவற்றைப் படிக்கும் போது பத்துக்குப் பதில் இன்னொரு பத்துப் பத்துப் பாடியிருந்தால் தமிழ்மொழிக்கு மேலும் பொலிவும் எழிலும் சேர்த்திருக்கும் என்பதில் அய்யமில்லை.

இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
இருக்கொடு தோத்திரம் இயம்பினார் ஒருபால்
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
என்னையும் ஆண்டுகொண் டின்னருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே!                            (பாடல் 4)

திருப்பெருந்துறை உறை சிவபெருமானே – திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்ற சிவனே,

என்னையும்                – அடியேனையும்,

ஆண்டுகொண்டு       – அடிமை கொண்டு,

இன் அருள் புரியும்    – இனிய அருளைச் செய்கின்ற,

எப்பெருமான்             – எம் தலைவனே,

இன் இசை                 – இனிய ஓசையையுடைய,

வீணையர் யாழினர் – வீணையையுடையவரும் யாழினையுடையவரும்,

ஒருபால்                     – ஒரு பக்கத்தில் (உள்ளார்),

இருக்கொடு தோத்திரம் இயம்பினர் – வேதங்களோடு தோத்திரங்களைச் சொல்லுவோர்,

ஒருபால்                                                 – ஒரு பக்கத்தில் (உள்ளார்),

துன்னிய          – நெருங்கிய,

பிணைமலர்    – தொடுக்கப்பட்ட மலர்களாகிய மாலைகளை ஏந்திய,

கையினர்        – கையையுடையவர், ஒருபால் – ஒரு பக்கத்தில் (உள்ளார்),

தொழுகையர் – வணங்குதலையுடையவரும்,

அழுகையர்    – அழுகையையுடையவரும்,

துவள்கையர் – துவளுதலையுடையவரும்,

ஒருபால் – ஒரு பக்கத்தில் (உள்ளார்),

சென்னியில் – தலையின்மீது,

அஞ்சலி கூப்பினர் ஒருபால் – இருகைகளையும் குவித்துக் கும்பிடுபவர் ஒரு பக்கத்தில் (உள்ளார்),

அவர்களுக்கொல்லாம் அருள் புரிய, பள்ளி எழுந்தருளாய் – பள்ளி எழுந்தருள்வாயாக.

இசைவாணர் ஒரு புறம் இசைத்தலோடு, வழிபடுவோர் மற்றொரு புறம் மந்திரமும் தோத்திரமும் ஓதினர் என்பார், ‘இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால் இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்’ என்றார்.

தமிழோடு இசை பாடல் மறந்தறியேன் என திருநாவுக்கரசர் பாடியிருக்கிறார். அவர் காலத்தில் தமிழிசைதான் இருந்தது. தெலுங்கு மொழி இசை இருந்ததில்லை.

‘துன்னிய பிணைமலர்’ என்றது, நெருக்கமாகத் தொடுக்கப்பட்ட மாலை வகை என்றபடியாம். ‘பழக மாமலர் பறித்திண்டை கொண்டிறைஞ்சுவார்பாற் செறிந்த, குழகனார்’ என்ற திருஞானசம்பந்தர் வாக்கினால் இண்டை, கண்ணி முதலிய மாலை வகையினைக் கொண்டு வழிபடுவார் என்று கொள்க.

அன்பர்கள், ‘கையுந் தலைமிசை புனை அஞ்சலியன, கண்ணும் பொழிமழை ஒழியாதே பெய்யுந் தகையன’வாகிய நிலையில் நின்று வழிபடுவார்களாதலின், ‘தொழுகையர் அழுகையர் துவள்கையர்’ என்றார்.

இதனால், அதிகாலையில் அன்பர்கள் இறைவன் திருமுன்பு நிற்கும் நிலை கூறப்பட்டது.

தேவார திருவாசகங்களை தமிழின் இனிமைக்காகவே படிக்கலாம். தமிழால் ஞானம் அடைய முடியும். ஞாலத்தில் உயர்ந்த சிவானுபவத்தைத் தமிழில் பேச முடியும் பாட முடியும் எழுத முடியும். அதற்கு சாட்சியாக இருப்பவர் அருமணிவாசகர் எனப் போற்றப்படும் மாணிக்கவாசகர்.

புவனியிற் போய்ப்பிற வாமையின் நாள்நாம்
போக்குகின் றோம்அவ மேயிந்தப் பூமி
சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித்
திருப்பெருந் துறையுறை வாய்திரு மாலாம்
அவன்விருப் பெய்தவும் மலரவன் ஆசைப்
படவும்நின் அலர்ந்தமெய்க் கருணையும் நீயும்
அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்
ஆரமு தேபள்ளி எழுந்தரு ளாயே!                                       (பாடல் 10)

திருப்பெருந்துறையுறைவாய் – திருப்பெருந்துறையில் வீற்றிருப்பவனே,

திருமால் ஆம் அவன்              – திருமாலாகிய அவன்,

புவனியில்                               – புவியில்,

போய்ப் பிறவாமையின்       – சென்று பிறவாமையினால்,

நாம் – யாம், அவமே             – வீணாகவே,

 நாள் போக்குகின்றோம்     – நாளைக் கழிக்கின்றோம்,

இந்தப் பூமி                           – இந்தப் பூமியானது,

சிவன் உய்யக் கொள்கின்ற ஆறு என்று நோக்கி – சிவபெருமான் நாம் உய்யும்படி அடிமை கொள்ளகின்ற இடமென்று பார்த்து,

விருப்பு எய்தவும் – விருப்பத்தை அடையவும்,

மலரவன் – பிரமன், ஆசைப்படவும் – இச்சிக்கவும்,

நின்                                – உனது,

அலர்ந்த                        – பரந்த,

மெய்க்கருணையும்     – உண்மையான திருவருட்சத்தியும்,

நீயும்                             – நீயுமாக,

அவனியில் புகுந்து      – பூமியில் எழுந்தருளி வந்து,

எமை ஆட்கொள்ள வல்லாய் – எங்களை ஆட்கொள்ள வல்லவனே,

ஆர் அமுதே                             – அருமையான அமுதம் போன்றவனே,

பள்ளி எழுந்தருள்                   – திருப்பள்ளியினின்றும் எழுந்தருள்வாயாக.

இறைவனை வழிபடத்தக்க இடம் இப்புவி என்றும், இங்கு வந்து வழிபடாத நாள் பிறவாத நாள் என்றும் உணர வேண்டும் என்பதாம்.  இதனால், இறைவன் ஆட்கொள்ளும் இடம் இவ்வுலகம் என்பது கூறப்பட்டது.

சுந்தரர் இறைவனை தோழனாக பாவனை செய்து வழிபட்டவர். திருநாவுக்கரசர் தன்னை இறைவனின் தொண்டனாக எண்ணி வழிபட்டவர். மாணிக்கவாசகர் இறைவனைக் குருவாகக் கொண்டு வழிபட்டவர்.

தந்ததுன் றன்னைக் கொண்டதென் றன்னைச்
சங்கரா ஆர்கொலோ சதுரர்
அந்தமொன் றில்லா ஆனந்தம் பெற்றேன்
யாதுநீ பெற்றதொன் றென்பால்
சிந்தையே கோயில் கொண்டஎம் பெருமான்
திருப்பெருந் துறையுறை சிவனே
எந்தையே ஈசா உடலிடங் கொண்டாய்
யான்இதற் கிலன்ஓர்கைம் மாறே!    (திருவாசகம்)

எனது சித்தத்தையே, திருக்கோயிலாகக் கொண்டு எழுந்தருளிய எம் தலைவனே! திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் எம்பெருமானே! எம் தந்தையே! ஈசனே! எனது உடலை இடமாகக் கொண்டவனே! சங்கரனே! எனக்கு நீ கொடுத்தது உன்னை; அதற்கு ஈடாக என்னை நீ ஏற்றுக் கொண்டாய்; யான் முடிவு இல்லாத பேரின்பத்தை அடைந்தேன். ஆயினும் நீ என்பால் பெற்றது என்ன? ஒன்றும் இல்லை. இக்கொள்ளல் கொடுத்தல்களைச் செய்த நம் இருவரில் திறமையுடையவர் யார்? இவ்வுதவிக்கு நான் ஒரு கைம்மாறும் செய்ய முடியாதவனாயினேன்.  (வளரும்)


என்றுமுள்ள செந்தமிழ்

பரந்தாமனுக்கு பூமாலை சூடி பாமாலை பாடிக் கொடுத்த சுடர்க் கொடியாள்66

இளங்கோ அடிகள் பாடிய சிலப்பதிகாரமும் சீத்தலைச் சாத்தனார் இயற்றிய மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் என வருணிக்கப்படுகின்றன. சிலப்பதிகாரம் கண்ணகி, பாண்டிமாதேவி ஆகிய இருவரின் சிலம்பை மையமாகக் கொண்ட காப்பியம்.  மணிமேகலை அதன் கதைத் தலைவியான மணிமேகலையின் பெயரால் அமைந்த காப்பியம்.  கோவலன் தனது குல தெய்வமான மணிமேகலா தெய்வத்தின் பெயரைத் தனது மகளுக்குச் சூட்டினான் என சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்படுகிறது. பொது நிலையில் மணிமேகலை என்பது ஒருவகை அணிகலன் ஆகும். மகளிர் தம் இடையில் அணியும் நகை மேகலை. இது மணியால் (மாணிக்கம்) செய்யப்பட்டதால் மணிமேகலை எனப்படும்.

சிலப்பதிகார காப்பியத்தின் தலைப்பு சிலம்பின் பெயரால் அமைந்துள்ளது போன்றே, மணிமேகலை காப்பியம் மகளிர் அணியாகிய மணிமேகலையின் பெயரால் அமைந்துள்ளது. மணிமேகலை சிலப்பதிகாரக் கதையின்   தொடர்ச்சியாகக் காணப்படுகிறது.

இந்தக் காப்பியங்கள் போலவே மாணிக்கவாசகரின் திருவெம்பாவையும் ஆண்டாளின் திருப்பாவையும் மார்கழி மாதத்தில் விடியற்காலையில் இளம் பெண்கள் ஒருவரை ஒருவர் எழுப்பி, கூட்டமாய் கூடிக் குளத்தில் நீராடி, பாவை வைத்து வழிபாடு நடத்தி  பாவை விரதம் அனுட்டிப்பதைக் கூறுகின்றன.

திருவெம்பாவை நோன்பு என்பது மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்துக்கு ஒன்பது நாள்களுக்கு முன் தொடங்கி சைவ சமயத்தவரால்  கடைப்பிடிக்கப்படும் நோன்பாகும். இந்நோன்பைக் கன்னிப் பெண்களே கூடுதலாகக் கடைப்பிடிப்பர். இக்காலத்தில் கன்னிப் பெண்கள் அதிகாலையில் எழுந்து தம் தோழியரையும் அழைத்துக் கொண்டு நீர் நிலைகளுக்குச் சென்று நீராடி அருகில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்று இறைவனைத் துதித்து வழிபடுவர். திருவெம்பாவை பாடல்களை கோயில்களில் பாடுவது வழக்கம். சிவகாமி உடன் இருக்கும் சிவனைக் கண்டு அங்கு நடைபெறும் வழிபாட்டில் பங்குபற்றுவர்.

திருப்பாவை நோன்பு காலத்தில் கன்னிப் பெண்கள் திருப்பாவை பாசுரத்தில் இரண்டாம் பாடலில் கூறியபடி நெய் மற்றும் பால் உண்ணாமலும், கண்ணுக்கு மையிடுதல், தலையைச் சீவி முடித்து மலர்களைச் சூட்டிக்கொள்ளுதல் முதலிய அலங்காரங்களைச் செய்யாமலும், தகாதனவற்றைச் செய்யாதும், நற்செயல்களில் ஈடுபட்டு எந்நேரமும் இறை சிந்தையுடன் நோன்பை கடைபிடிப்பர்.

பாவை நோன்பு பற்றி சங்க இலக்கியங்கள் பேசுகின்றன. அதனை “மார்கழி நோன்பாகிய தைந்நீராடல்” என பழந்தமிழர் அழைத்தனர். பரிபாடலில் வைகை ஆற்றின் சிறப்புக் கூறும் பாடலிலே ஆசிரியர் நல்லந்துவனார் “தாயருகா நின்று தவத்தைந் நீராடுதல் நீயுரைத்தி வையை நதி”  என்று பாடுகிறார்.

பாவை நோன்பு ஆண்டு தோறும் மார்கழி மாதம் பிறந்ததையொட்டி சைவசமயக்  கன்னிப் பெண்கள் கடைபிடிக்கும் நோன்பாகும்.  ஆற்றங்கரையில் பாவை நோன்பு நோற்று அந்தத் திருமாலையே கணவனாகப் பெறுவோம் வாருங்கள் என்று ஆண்டாள் அழைக்கும் பாடல்கள் திருப்பாவை.   இந்நாள்களில் அதிகாலை எழுந்து நீராடி தூய  ஆடை அணிந்து அவரவருக்கு விருப்பமான கோயிலுக்கு சென்று இறை வழிபாடு செய்வர். இப்பாவை விரதமானது மழை பெய்து நாடு நலம் பெறவும், தமக்கு நல்லபடி திருமணம் நடைபெறவும் பெண்களால் கடைப்பிடிக்கப்படுவது பழங்கால வழக்கம்.

திருவெம்பாவை பாடல் நாயகன் சிவன். திருப்பாவை நாயகன் திருமால்.  திருவெம்பாவை 20 பாடல்களைக் கொண்டது. திருப்பாவை 30 பாடல்களைக் கொண்டது. சிவனது அருமை பெருமையை திருவெம்பாவை எடுத்துக் கூறுகிறது. திருமாலின் அருமை பெருமையை திருப்பாவை  அருளுகிறது.

திருவெம்பாவை, திருப்பாவை இதில் எது முந்தியது எது பிந்தியது என்பது தெரியவில்லை. மாணிக்கவாசகர் – ஆண்டாள் இருவருமே ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள் என்று துணியப்படுகிறது.  திருப்பாவையில் வெள்ளியெழுந்து வியாழன் உறங்கிற்று என்ற ஓர் அடிவருகிறது. அது கிபி 885 என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இரண்டுக்கும் சிறு வேற்றுமை இருக்கிறது.  மாணிக்கவாசகர் ஆண். ஆனால் பெண்களைப்போல கற்பனை செய்து திருவெம்பாவையைப் பாடியிருக்கிறார். ஆண்டாள் பெண். பெண்ணாகிய ஆண்டாள் தானே பிறரை எழுப்புவது போலப் பாடியிருக்கிறார். ஆண் பெண் வேடம் போடுவதைக் காட்டிலும் பெண்ணே பெண்ணாக வருவது இயற்கையாக இருக்கிறது. ஆண்டாளுக்கு சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள்! கோதைப்பிராட்டி, சூடிக்கொடுத்த நாச்சியார், கரும்பார் குழல் கோதை என்ற சிறப்புப் பெயர்களும் உண்டு. 

திருப்பாவையில் அன்றாட வாழ்க்கை நிகழ்ச்சிகள் தெளிவாக எடுத்துக்கூறப்படுகிறது. மாணிக்கவாசகர் – ஆண்டாள் இருவரது நோக்கங்களும் ஒன்றாக இருந்தாலும் திருவெம்பாவையில் பக்தி அதிகமாகவும் திருப்பாவையில் இலக்கிய நயம் அதிகமாகவும் இருப்பதைக் காண்கிறோம்.

பொதுவாக  நாயன்மார்களின் தேவார திருவாசகங்களை விட ஆழ்வார்களின்  நாலாயிர திவ்ய பிரபந்தம் எளிமையாகவும் இனிமையாகவும் அமைந்துள்ளது.

அதிலும் சிறப்பாக  பரந்தாமனுக்கு பூமாலை சூடிக்கொடுத்ததன்றித் பாமாலையும் பாடிக் கொடுத்தவர் ஆண்டாள். திருப்பாவை தித்திக்கும் தேன் தமிழில் ‘பக்திச் சுவை சொட்டச் சொட்ட முத்திப்பதம் கிட்டக் கிட்டப்’ புனையப்பட்டுள்ளது. நறுமணம் வீசும் சொல் மாலை திருப்பாவை. அதில் செந்தமிழின் சுவையை,  பக்தி கரைபுரண்டோடும் காதல் வெள்ளத்தை,  கவிதை இன்பத்தை காணலாம்.

பக்தி இலக்கியங்களில் பெரும்பான்மை  நாயக நாயகி பாவத்தில் அமைந்துள்ளன. ஆண்டவன் இயக்க உலகம் இயங்குவதால் அவனை நாயகனாகவும் தம்மை நாயகிகளாகவும் சித்திரித்து அந்த உறவின் மூலம் பக்தர்கள் பேரின்பத்தைக் கண்டார்கள்.

ஆண்டாள் இறைவனைக் காதலனாகவும் தன்னைக் காதலியாகவும் பாவித்துப் பாடியிருக்கிறார். அவரது பாடல்கள் அகப்பொருள் இலக்கணத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.  நாச்சியார் திருமொழியில் ஆண்டாள் “என்தட முலைகள், மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன் கண்டாய்!”

ஆண்டாள், ஆண்டவனை நாயகனாக எண்ணி உறவாடி மகிழ்ந்தது தெய்வீகக் கற்பனையாகும். இதனை ஆண்டாள் பாடிய திருப்பாவை (30) மற்றும் நாச்சியார் திருமொழி (143) இரண்டிலும் பரக்கக் காணலாம்.

வானிடை வாழுமவ் வானவர்க்கு 
மறையவர் வேள்வியில் வகுத்தஅவி,
கானிடைத் திரிவதோர் நரிபுகுந்து 
கடப்பதும் மோப்பதும் செய்வதொப்ப,
ஊனிடை யாழிசங் குத்தமர்க்கென்று 
உன்னித் தெழுந்தவென் தடமுலைகள்,
மானிட வர்க்கென்று பேச்சுப்படில் 
வாழகில் லேன்கண்டாய் மன்மதனே.     (நாச்சியார் திருமொழி – முதலாம் திருமொழி பாடல் 5)

மன்மதனே! சுவர்க்க உலகில் வாழ்கின்ற தேவர்களுக்கு செய்த வேள்வியில் படைத்த நெய்யையும் இன்ன பிற பண்டங்களையும் காட்டில் திரிகின்ற நரி எப்படி வேள்விக்குண்டத்தின் குறுக்கும் நெடுக்கும் பாய்ந்து, மோப்பம் செய்து, நக்கி உண்டு கெடுப்பது போல் தனது திருமேனியில் சக்கரத்தையும் சங்கையும் அணிந்துள்ள உத்தமர்க்கு என்று ஆதரவுடன் கிளர்ந்த எனது பருத்த தனங்களை அவனைத் தவிர  மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழ்கில்லேன் கண்டாய்! (அவி – தேவர் உணவு)

இதனால் ஏனைய ஆழ்வார்களைவிட ஆண்டாளுக்கு வைணவர்கள் அதிக ஏற்றத்தை கொடுத்திருக்கிறார்கள். (தொடரும்)


என்றுமுள்ள செந்தமிழ்

சங்க காலத்தில் சமயம் முதலிடம் பெறவில்லை

67

நான் கடந்த சில மாதங்களாக  மாணிக்கவாசகர் இயற்றிய சைவ திருவெம்பாவை பற்றியும் ஆண்டாள் பாடிய வைணவ திருப்பாவை பற்றியும் எழுதுவதைப் பார்த்துவிட்டு சிலர் புருவத்தை உயர்த்துகிறார்கள். பகுத்தறிவுவாதி நக்கீரனுக்கும் சமய இலக்கியங்களுக்கும் என்ன தொடர்பு என்று கேட்கிறார்கள்.

இந்தத் தொடர் என்றுமுள்ள செந்தமிழ் பற்றியது. அதில் தமிழில் உள்ள சமய இலக்கியங்களும் அடங்கும்.

உண்மையில் இதன் தலைப்பு கம்பரிடம் இருந்து கடன் பெற்றது. கம்பர்தான்  என்றுமுள்ள தென் தமிழ் என்ற சொற்றொடரைத் தாம் பாடிய இராம சரித்திரத்தில்  கையாண்டுள்ளார். அதை அப்படியே பயன்படுத்தி இருக்கலாம். என்ன நினைத்தேனோ அதனை என்றுமுள்ள செந்தமிழ் என்று என்னை அறியாமலேயே மாற்றிவிட்டேன். என்றுமுள்ள செந்தமிழ் செம்மையையும் என்றுமுள்ள தென்தமிழ் தெற்கேயுள்ள  தமிழையும் குறிக்கும்  அடைகள் ஆகும்.

இவை நீங்கலாக தமிழ்மொழிக்கு   அந்தமிழ், அன்னைத்தமிழ், அருந்தமிழ்,   வண்டமிழ், தண்டமிழ், ஒண்டமிழ்,  இன்றமிழ், மன்றமிழ்,  நற்றமிழ், பொற்றமிழ், முத்தமிழ், தேந்தமிழ், தீந்தமிழ்,  பூந்தமிழ், பழந்தமிழ்,  இளந்தமிழ்,   இருந்தமிழ், இசைத்தமிழ், இயற்றமிழ், இன்பத்தமிழ்,  நறுந்தமிழ், மாத்தமிழ், சீர்த்தமிழ், தாய்த்தமிழ், ஒளிர்த்தமிழ், குளித்தமிழ், உயர்தமிழ், வளர்தமிழ், மறத்தமிழ், அறத்தமிழ், திருத்தமிழ், எழிற்றமிழ், தனித்தமிழ், கனித்தமிழ், பொங்குதமிழ், கொஞ்சுதமிழ், விஞ்சுதமிழ், விளங்குதமிழ், பழகுதமிழ், அழகுதமிழ், தூயதமிழ் , ஆயதமிழ், கன்னற்றமிழ், வண்ணத்தமிழ்,  தெய்வத்தமிழ், வெல்கதமிழ், கன்னித்தமிழ், பசுந்தமிழ், பைந்தமிழ், முத்தமிழ், திருத்தமிழ், தெய்வத்தமிழ்,  அமிழ்தினுமினிய தமிழ் என ஏராளமான அடைகள் இருக்கின்றன.

சம்பந்தர் தன்னை தமிழ் ஞான சம்பந்தன் என்றே குறிக்கிறார். நலங்கொள் தமிழ், சந்தமொடு செந்தமிழ், சங்கத் தமிழ், சங்கமலித் தமிழ், சீரின்மலி செந்தமிழ் என 45 இடங்களில் தமிழைப் போற்றி இருக்கிறார்.

பாரதியார்  தமிழன்னை புகழ் ஏறி என்றும் புவிமிசை இருப்பாள் என்று அறுதியிட்டுக் கூறியிருக்கிறார்.

தேன் என்ற ஒரு சொல் தமிழில் எப்படியெல்லாம் சிலம்பம் ஆடுகிறது?

கொல்லிமலைக் காட்டிலுள்ள ஓர் ஆளிடம் தேன் கொண்டுவரும்படி சொல்லியிருந்தேன். அவன் அன்று வராமல் மறுநாள் வந்து வெறுங்கையோடு நின்றதால் சிறிது கோபித்தேன். அவன் பேசினான்.

“நேற்றே மலைக்கு நடந்தேன், பலவிடங்களில் அலைந்தேன், இறுதியில் பெரும் பாறைத்தேன் கண்டு சிறிது மலைத்தேன், ஒரு கொடியைப் பிடித்தேன்,  ஏறிச் சென்று கலைத்தேன், சட்டியில் பிழிந்தேன், நன்றாக வடித்தேன், அதனைக் கண்டு மகிழ்ந்தேன், அதில் சிறிது குடித்தேன், களித்தேன், அயர்ந்தேன், மறந்தேன், இன்று காலை எழுந்தேன், நினைத்தேன், தேனை அடைத்தேன், எடுத்தேன், விரைந்தேன், நடந்தேன், வந்தேன், சேர்ந்தேன், இப்போதுதான் உங்கள் ஆளிடம் கொடுத்தேன்” என்று.

நானும் இதைக்கேட்டு மகிழ்ந்தேன். அவனுக்கு உரியதையும் தந்தேன். அடடா! எப்படித் தேன்? எவ்வளவு தேன்? ஒவ்வொரு சொல்லிலும் தேன் சொட்டுகிறதே! இதைப் பார்த்தேன், குடித்தேன் என்று கூறாமல் “படித்தேன்’ எனக் கூறுங்கள். அப்பொழுதுதான் ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு படி “தேன்’ என உருசிக்கும்.

மனிதன் கடவுள் நிலையை அடைவதற்கான வழியினைக் காட்டுவதுதான் மதம் அல்லது சமயம். வழிகள் பலவாகினும் இலக்கு ஒன்றுதான். ஆனால் அந்த வழிகள் பிற்காலத்தில் வெவ்வேறு மதங்கள் அல்லது சமயங்களாக உருவெடுத்தன.

வரலாற்றைப் பின்னோக்கிப் பார்த்தால் சங்க காலத்தில் தமிழர்கள் பெரும்பாலும் சமய சார்பற்றவர்களாகவே இருந்திருக்கின்றார்கள். சமயம் முதலிடம் பெறவில்லை. அவர்கள் காலத்தில் நிறுவன சமயம் இருக்கவில்லை. இயற்கை வழிபாட்டையே கொண்டிருந்தனர். இதனால் சங்க கால இலக்கியங்கள் பெரும்பாலும் சமய சார்பற்றதாகவும் சார்வாக  போக்குடையதாகவும் இருந்தன.

சங்ககால இலக்கியங்கள் காதல், வீரம் இரண்டையும் அடிப்படையாகக் கொண்டிருந்தது. காதலை அகம் என்றும் வீரத்தைப் புறம் என்றும் கூறவர்.   சங்க காலத்தில் மக்களின் கொள்கையும் பண்பாடும் காதலும் வீரமுமாக இருந்ததால் அகப்பொருள்,  புறப்பொருள் இலக்கியங்களே அக்காலத்தில் புலவர்களால் எழுதப்பட்டன. நீதியையும் அறத்தையும் ஒழுக்கத்தையும் கூறுகிற இலக்கியங்களும் இருந்தன. ஆனால் அவை காஞ்சி எனப் பெயர் பெற்றுப் புறப்பொருள் இலக்கியத்தில் இடம்பெற்றன.

பரிபாடல், திருமுருகாற்றுப்படை  போன்ற சமய நூல்கள் எழுதப்பட்டன. ஆனால் அவை சங்ககால இறுதியில் எழுதப்பட்டவை ஆகும்.

 மாயோன், சேயோன், வேந்தன் (பின்னால் இந்திரன் என அழைக்கப்பட்டான்) வருணன் ஆகிய நால்வகை நிலங்களுக்குரிய தெய்வங்களைத்  தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.  இதில் மாயோனுக்கு  பூவை நிலை என்னும் துறை!  சேயோனுக்கு  வெறியாடல் என்னும் துறை!
வேந்தன், வருணனுக்கு இப்படியான துறைகள் எதுவும் தொல்காப்பியம் குறிப்பிடவில்லை!

அய்ந்தாவது நிலமான பாலைக்குரிய தெய்வம் குறிப்பிடப்படவில்லை. ஆனால் தொல்காப்பியப் பொருள் இலக்கணத்தில் கொற்றவை நிலை என்னும் ஒரு பிரிவு சொல்லப்படுகிறது. போருக்குச் செல்வோர் கொற்றவையின் பெருமைகளைக் கூறி அத் தெய்வத்தை வழிபட்டுச் செல்லுதலே கொற்றவை நிலை எனப்படுகின்றது.

நால்வகை  நிலத்துக்குரிய கடவுளர்  அந்தந்த நிலத்துக்குரிய மக்களால் வழிபடப்பட்டனர். மாயோன் முல்லை நில மக்களால் வழிபடப்பட்டான்.  சேயோன் குறிஞ்சி நில மக்களால் வழிபடப்பட்டான்.  இதில் யாரும் முழுமுதற் கடவுளாக வழிபடப்படவில்லை. நடுகல் வழிபாடு மட்டும் எல்லா நில மக்களுக்கும் பொதுவாக இருந்தது.

சிவன் என்ற சொல் சங்க இலக்கியங்களில் காணப்படவில்லை. ஆனால் சிவனைக் குறிக்கும் பல பெயர்கள் சங்ககாலச் செய்யுட்களில் தாழ்சடை பொலிந்த அருந்தவத்தோன், முக்கட் செல்வன், கறைமிடற்று அண்ணல்,  ஆலமர் தெய்வம், மழைதலை வைத்தவன் போன்றவை இடம்பெற்றுள்ளன.

பிற்காலத்தில் மாயோன் கருப்பு நிறத்தவன் என்ற முறையில் திருமாலோடு இணைக்கப்பட்டான். சேயோன் சிவந்தவன் என்ற பொருளில் முருகனோடு இணைக்கப்பட்டான். ஆனால்  அன்றைய மாயோன், சேயோன் ஆகியோருக்கும் இன்றைய திருமால், முருகன் ஆகியோருக்கும் ஒற்றுமைகள் சிறிதளவே இருக்கின்றன. சங்க காலத்தில் மாயோன், சேயோன் ஆகியோருக்குப் பலியிடுவது வழக்கமாக இருந்தது. இன்று அப்படிப்பட்ட வழக்கம் இல்லை.

வீரக்கல் அல்லது நடுகல் வழிபாடு சங்க காலத்தில் முக்கியத்துவம் பெற்று விளங்கியது. போர்க்களத்தில் வீரனது ஆற்றலையும் தற்கொடையையும் போற்றும் வகையில்  ஊர்ப்புறத்தே நினைவுக் கல் நடப்பட்டு நீரும் பூவும் சொரிந்து வழிபாடு நடந்தன. சங்க காலத்தில் எந்த அரசனும் சிவனுக்கோ திருமாலுக்கோ, முருகனுக்கோ  கோயில்  கட்டியதாக செய்தி இல்லை.

இருந்தும் சங்க காலத்திலும் அதனை அடுத்தும்  தமிழர்கள் பல்வேறு சமய மரபுகளை அறிந்தும் பின்பற்றியும் வந்துள்ளார்கள். தமிழர்கள் பவுத்தம், சமணம், இந்து (சைவம், வைணவம், சாக்தம், காணாபத்யம், சவுரம், கவுமாரம்), இஸ்லாம், கிறித்தவம் ஆகிய பெரும் சமயங்களைக் காலத்துக்குக் காலம் பின்பற்றி வந்திருக்கிறார்கள்.

சாத்தன், அய்யனார், கண்ணகி அம்மன், முனியப்பர், சுடலைமாடன், மதுரை வீரன், காத்தவராயர்  போன்ற சிறுதெய்வ வழிபாடு அல்லது குலதெய்வ வழிபாடு  தமிழர்களிடம் பரவி இருக்கின்றது.

அதே வேளை, இறைமறுப்பு (நாத்திகம்) உலோகாய்தக் கொள்கை, இயற்கை நம்பிக்கை கொண்ட பல தமிழர்களும் உள்ளார்கள்.

இந்தியாவில் முதல் நாத்திகச் சிந்தனை மரபான சார்வாகம் அல்லது உலோகாய்தம் கிமு  6 ஆம் நூற்றாண்டில் தோன்றியது. தத்துவ இயலின் சார்வாகப் பிரிவானது, இறை மறுப்பு, பருப்பொருள் சார்பு மற்றும் இயற்கை இயைமை ஆகிய நம்பிக்கைகளைக் கொண்டது.

இறந்த  பின்னர் மறு வாழ்வு உண்டென்று சார்வாகம் நம்புவதில்லை. தனிமங்களிலிருந்து கிளர்ந்தெழுந்ததான பருப்பொருள் அழிகிறது. அது அழிந்த பின்னர் ஏதும் நிலைப்பதில்லை. மதம் என்பது மனிதனின் கண்டுபிடிப்பே எனவும் இறைவன் இல்லை, இம்மை, மறுமை, பிறவிச் சுழற்சி, நரகம், சுவர்க்கம்   இல்லை எனவும் சார்வாகம் கருதியது. கடவுள் என்பதும்  மனிதனை விஞ்சிய உயர்சக்தி என்பதும் அழிவற்ற ஆன்மா என்பதும் பொய். நேரடியாக அறிவது மட்டுமே உண்மை என்ற கோட்பாட்டைக்  கொண்டது.

சென்ற நூற்றாண்டில் சார்வாகக்  கோட்பாடுகளைப்  பெரியார் ஏற்றுக்கொண்டு கடவுள் இல்லை, இல்லவே இல்லை என்று பரப்புரை செய்தார். புரோகிதரின் சடங்குகளைச் சாடினார்.  அவை புரட்டுக்கள் என்றார்.

சங்க காலத்தில் சமணம், பவுத்தம் தமிழ்நாட்டில் பரவியது. ஆனால் மக்கள் அவற்றை எளிதில் ஏற்றுக் கொள்ளவில்லை.  சங்க காலத்துத்  தமிழர்களது வாழ்வியல்  குறிக்கோள்களுக்கும் சமண, பவுத்த சமயங்களின் குறிக்கோள்களுக்கும்  முரண்பாடுகள் இருந்தன. (வளரும்)


என்றுமுள்ள செந்தமிழ்

பக்திக்குத் தமிழ்மொழி

68

உலக மொழிகளுள் உயர்தனிச்  செம்மொழியாய் விளங்குவது இனிய தமிழ்மொழியே ஆகும். மொழிகளில் வணிகத்துக்கு  ஆங்கிலம், இசைக்குக்  கிரேக்கம், சட்டத்துக்கு  இலத்தீன், தத்துவத்துக்கு  ஜெர்மன், காதலுக்கு  இத்தாலி, தூதுக்கு பிரஞ்சு எனக் கூறும் பன்மொழி அறிஞர்கள் பக்திக்குத்  தமிழ் எனக் கூறுகிறார்கள்.  தமிழ் மொழி  பக்தியை அடிப்படையாக கொண்டுள்ளது.

தமிழர்கள்  வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு சமயங்களைப் பின்பற்றி வந்திருக்கிறார்கள். அதன் காரணமாக  அனைத்துச் சமயங்களுக்கும் இடமளிக்கும் பண்பு தமிழர்களிடம் காணப்படுகிறது.  தமிழர்களிடம் காணப்படுவது போன்ற  சமயப் பொறுமை வேறு இனத்தவரிடம் காணப்படவில்லை.

இதனால் திருவள்ளுவர் அடிப்படையில் சமணராக இருந்தாலும் அவர் இயற்றிய திருக்குறள் பொது மறையாக அனைவராலும்  ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

கிபி  6 ஆம் நூற்றாண்டில் பக்தி இயக்கத்தினைத் தொடக்கியவர்களாக காரைக்கால் அம்மையாரும் திருமூலரும்  விளங்குகின்றனர். அவர்களைத் தொடர்ந்து 7 ஆம் நூற்றாண்டில் நாயன்மார்களும் பன்னிரு ஆழ்வார்களும் பக்தி இயக்கத்தினை வீறு கொண்டு எழச் செய்தனர். சமணம் மற்றும் பவுத்தம் இரண்டின் வீழ்ச்சிக்கு பக்தி இயக்கமே காரணமாகும்.

உலக மொழிகளோடு ஒப்பிடுகையில், எண்ணிக்கை,  தொன்மை,  யாப்பியல், இசை வடிவங்கள் கொண்ட தமிழ் இலக்கியப் பரப்பே பரந்ததும் விரிந்ததும் ஆகும். தமிழில் கடைச் சங்க காலம் முதற் கொண்டு  20 ஆம் நூற்றாண்டின் இறுதி வரை தோற்றம் கொண்ட பல்வேறு வகையான இலக்கியப் பரப்பில் அறுபது விழுக்காட்டு இலக்கியங்கள் சமயம் குறித்து,சமணம், பவுத்தம்,  சைவம், வைணவம்  குறித்து எழுந்தன.

தனிப்பாடல்களாக எடுத்துக்கொண்டால், எட்டுத் தொகையுள் ஒன்றாகிய பரிபாடலில், இசை வடிவாக முருகன், காடுகிழாள் (காளி) குறித்தெழுந்த இசைப்பாடல்களைக் காணலாம்.  சைவம் தந்த தனிநூலாக, முதல் கொடையாகக் கிடைத்துள்ளது நக்கீரனாரின் திருமுருகாற்றுப் படை ஆகும்.  சிறிய இடைவெளிக்குப் பின் கிபி 3 ஆம்  நூற்றாண்டில் எழுதப்பட்ட இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்தில்,  உமையைப் போற்றிப் பாடும் தனிக் காதையாக வேட்டுவ வரியும், முருகனைப் புகழ்ந்து பாடும் குன்றக் குரவையும் அமைந்துள்ளன.

புகார் நகரத்தில் சிவன்கோயில் இருந்ததாகச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. 276 ஊர்களில் இருந்த சிவன் கோயில்களைக் குறிப்பிடும் தேவாரம் இதனைக் குறிப்பிடவில்லை.  புகார் நகரைக் கடல் கொண்டது காரணமாகும்.

புகார் நகரத்தில் பலராமனுக்கும் கண்ணனுக்கும் தனித்தனிக் கோயில்கள் இருந்ததை அதே  சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. 108 திருப்பதிகளைக் குறிப்பிடும் நாலாயிர திவ்வியப் பிரபந்தம் இந்தக் கோயில் பற்றிக் குறிப்பிடவில்லை.

கிபி 7 ஆம் நூற்றாண்டுக்கு முன்னதாகச் சங்க இலக்கிய அகப்பாட்டு நெறியில், சிவனைப் பாடுபொருளாகக் கொண்டு கல்லாடம்  தோன்றியது. “கல்லாடம் கற்றவனிடம் சொல்லப் படாதே’ என்பது பழமொழி. முதல் கணபதி வாழ்த்து இந்நூலில் இடம் பெற்றது.

தொடர்ந்து காரைக்கால் அம்மையாரின் மூத்த திருப்பதிகங்கள் இரண்டும், அற்புதத் திருவந்தாதியும், திரு இரட்டை மணிமாலையும் தோற்றம் கொண்டன. பதிகம் (10 பாடல்களைக் கொண்டது) அந்தாதி (ஒரு பாடலின் நிறைவை அடுத்த பாடலின் தொடக்கமாகக் கொண்டு 100 பாடல்களில் அமைவது)  இரட்டை மணிமாலை (இரண்டு வகை யாப்புகள் அமைந்த பாடல்களை மாறிமாறி அடுக்கி 20 பாடல்களில் நிறைவிப்பது) என்ற புதிய இலக்கிய வடிவங்கள் காரைக்கால் அம்மையார் தமிழுக்குத் தந்த இலக்கியக் கொடைகளாகும்.

பத்தாம் நூற்றாண்டில்  பேரரசன் இராசராச  சோழனின் ஆட்சிக் காலத்தில் சிதம்பரம் கோயிலில் கவனிப்பாரற்றுக் கிடந்த திருமுறைகள் பூச்சிகளால் அரிக்கப்பட்டு  அழிந்தவை போக எஞ்சியவற்றை அவன் மீட்டான். இதனால் அவன்  திருமுறை கண்ட சோழன் என்று அழைக்கப்படுகிறான்.   இந்தத்  தேவாரங்கள்   நம்பியாண்டார் நம்பி என்பவர்  முதல் 7 திருமுறைகளாகத் தொகுத்தார்.

திருமுறைகள் பழந்தமிழ் இசையையொட்டிய பண்களுடன் பாடப்பட்டு வருகின்றன. கோயில்களிலும் வீடுகளிலும், பள்ளிக்கூடங்களிலும்  திருமுறைகள் இன்றளவும் பாடப்பட்டு வருகின்றன.

தமிழ் இலக்கியங்களில் தேவாரப் பாடல்கள் என்று குறிப்பிடப்படும் இந்த பதிகங்கள் ஒரு தனி இடத்தைப் பெற்றுள்ளன.

பன்னிரு திருமுறைகளில்   17 ஆசிரியர்கள் பாடிய  மொத்தம்    18,266 பாடல்கள் காணப்படுகின்றன.  இதில்  தேவாரம் எனப் போற்றப்படும் ஞானசம்பந்தர் பாடிய பாடல்கள் 4,158, திருநாவுக்கரசர் 3,066, சுந்தரர் 1,026 ஆக மொத்தம் 8,250 ஆகும்.  திருவாசகம் எனக் கொண்டாடப்படும் மாணிக்கவாசகர்  பாடிய பாடல்கள் 1,058 ஆகும். திருமூலர் பாடிய பாடல்கள் 3,000, சேக்கிழார் பாடிய பாடல்கள் 4,286 ஆகும். (பாடல்களின் மொத்த எண்ணிக்கை நூலுக்கு நூல் சிறிது வேறுபடுகின்றன)

தேவாரம் தொகுக்கப்பட்ட முறையைப் பற்றி சைவ ஆச்சாரியர் உமாபதி சிவம் திருமுறை கண்ட புராணத்தில் பேசுகையில் ஞானசம்பந்தர் 15,000 பாடல்களையும் அப்பர்  49,000 பாடல்களையும் சுந்தரமூர்த்தி 31,000 பாடல்களையும்  பாடியதாக பொல்லாப் பிள்ளையார் மூலம் விவரம் அறிந்ததாக குறித்துள்ளார்.

பன்னிரு ஆழ்வார்களால் பாடப்பெற்ற நாலாயிர திவ்ய பிரபந்தம் பெயருக்கு ஏற்ப 4,000 பாடல்களைக் கொண்டது.

“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற முழக்கத்தை அடுத்துத் தமிழ் இனப்பெருமை பேசும், “ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்” என்ற சமய சமரசத்தை முன்வைத்த திருமூலரின் திருமந்திரம் தமிழ் இலக்கியக் கொடைகளுள் சிறப்பாகக் குறிக்கத்தக்கது.

 “என்னை நன்றாக இறைவன் படைத்தனன், தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே’ எனக் கட்டியம் கூறித் தொடங்கும் திருமூலர், சைவத்தைத் தோத்திர நெறியிலிருந்து சாத்திர நெறிக்கு எடுத்துச் சென்றார். மேலும் அவரே  “சைவ சித்தாந்தம்” என்ற பெருநெறி தோன்ற வித்திட்டவர்.

தென்னாட்டு அறிஞர்களால் வடமொழியில் படைக்கப்பட்ட ஆகமங்களை மொழிபெயர்ப்புச் செய்யாமல், தமிழ் ஆகமமாகத் திருமந்திரம் படைக்கப்பட்டது. அறம், யோகம், மருத்துவம், தத்துவம் எனத் தமிழில் எழுந்த ஒரு சைவக் கலைக் களஞ்சியமாகவே திருமந்திரம் நிற்கிறது.

கிபி 2  ஆம் நூற்றாண்டு தொடங்கி 6 ஆம் நூற்றாண்டு காலம் வரை சமணமும் பவுத்தமும்  தமிழ்மொழியை   ஆட்சி செய்தன.

பின்னர் சைவப் பனுவல்களும்  சிற்றிலக்கியங்களும் பெருங்காப்பியங்களும் தோன்றின. பிற்காலச் சோழர்களின் எழுச்சியும்  சமயகுரவர் நால்வர்  வருகையும் சைவம் வழி தமிழ்மொழிக்கு விலைமதிப்பற்ற  இலக்கியங்கள் கிடைத்தன.  “நாளும் இன்னிசை யால் தமிழ் வளர்க்கும் ஞானசம்பந்தன்’, “நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தன் நாவினுக்கு அரையன்’ என்ற சுந்தரர் பதிவுகள் அன்னார் இருவரும் சைவத்தின் பெயரால் தமிழ் வளர்த்த திறம் உரைத்தன. (தொடரும்)


என்றுமுள்ள செந்தமிழ்

திருமுறைகளில் செந்தமிழ் முழக்கம்

69

உலகமொழிகளில் பக்திமொழி என்ற பாராட்டுதலுக்கு  அமைந்த மொழி தமிழே என்பது மொழியறிஞர்களது கருத்தாகும். இந்த பக்தி மொழிக்கு இலக்கணமாக விளங்குவதே பன்னிரு திருமுறை என்ற இலக்கியங்களாகும்.  இறைவனே தமிழ்ப் பாடலைக் கேட்டு இரங்கி அடியார்களின் வழிபாட்டினை ஏற்றருள் புரிகிறான் என்ற கருத்தினைத் திருமுறைப் பாடல்கள் தெளிவுபடுத்துகின்றன. திருமுறை ஆசிரியர்கள் இறையருள் பெற்றவர்கள் தமிழின் செம்மை நலமும் இசைப் பண்புகளும் உணர்ந்து தெளிந்தவர்கள். அதனால்தான் அருளாளர்கள் பலரும் தமிழை அடைகொடுத்துப் போற்றி் பாடியுள்ளனர். இதுபற்றி முன்னர் அவ்வப்போது எடுத்துக் கூறிவந்துள்ளேன்.   எனினும்  திருமுறைகளில் என்றுமுள்ள செந்தமிழ் முழக்கத்தைச் சற்று முழுமையாகப் பார்க்கலாம்.

ஞானசம்பந்தரின் செந்தமிழ்

ஞானசம்பந்தன் தேவாரம் பாடிய மூவருள்ளும் முதன்மையானவர். மறையவர் மரபில் தோன்றி முதல் மூன்று திருமுறைகள் பாடியவர்.   தமிழ்மொழியை ஏற்றிப் போற்றியும் தம்மைத் தமிழ் ஞானசம்பந்தன்  என்று மிகுந்த பெருமிதத்துடன் பல பாடல்களில் குறிப்பிடுகிறார்.   அவர் தாம் பாடிய திருமுறைப் பாடல்கள் “திருநெறிய தமிழ்” என்றும் அது இறைவன் வாக்கென்றும் கூறுகிறார். பாடுவார்க்கும் கேட்பார்க்கும் அவர்க்கும் தமர்க்கும் இம்மைக்கும் மறுமைக்கும் நற்பயன் உண்டென்றும் எல்லியும் பகலும் இடர் இல்லை என்றும் எல்லாப் பேறுகளும் கிட்டுமென்றும் அருளுகிறார்.

நானுரைத்த செந்தமிழ் பத்துமே நலங்கொள் தமிழ் 
எந்தையடி வந்தணுரு சந்தமொடு செந்தமிழ் 
பாரின்மலிகின்ற புகழ்நின்ற தமிழ்ஞான சம்பந்தன்
உரைசெய் சீரின்மலி செந்தமிழ்கள்
முத்தமிழ் விரகனே! 

இவ்வாறு பல இடங்களில் செந்தமிழ்ச் சிறப்புகளை விளக்கியுள்ளார்.

அப்பரின் செந்தமிழ்

தேவார மூவரில் இரண்டாமவர் திருநாவுக்கரசர் நான்காம், அய்ந்தாம் மற்றும் ஆறாம் திருமுறைகளைப் பாடியருளியவர். தமிழில் பரமன் புகழைப் பாடுதலே தன் பணியாகப் பொறித்துள்ளார். உருக்கம் மிக்க ஒண்தமிழ்ப் பாடல்கள் அப்பர் அருளிச் செயல்கள் திருக்கடைக்காப்புப் பாடுதல் இவர் வழக்கமன்று. நமச்சிவாயத் திருப்பதிகத்திற்கு மட்டும் இவர் பயன் கூறியிருப்பினும் தன் பெயரைச் சுட்டவில்லை. ஒரு பாடலில் செந்தமிழ்  என்ற சொல்லாட்சி காணப்படுகிறது.

தமிழோடு இசைபாடல் மறந்தறியேன் 
முத்தமிழும் நான்மறையும் ஆனான் கண்டாய் 
ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்  

எனவரும் திருத்தொண்டகப் படற்பகுதிகள் புலப்படுத்துகின்றன.

சுந்தரர் செந்தமிழ்

திருஞானசம்பந்தருக்கு அடுத்த நிலையில் மிகுதியான பண்களைப் பயின்றவர் சுந்தரர். தமிழிசையின் மாண்பினை உணர்ந்தவர். அவரது  தேவாரப் பாடல்களில் காணப்பெறும் தமிழ் பற்றிய தனிச்சிறப்பினைக் காணலாம்.

பண்ணார் இன் தமிழாய்ப் பரவிய பரஞ்சுடரே 
பண்ணிடைத் தமிழ் ஒப்பாய 
நாளும் இன்னிசையில் தமிழ்பரப்பும் ஞானசம்பந்தனுக்கு
தாளம் ஈந்தவன் 

இப்பாடலில் `தமிழ்’ என்ற சொல் வெறும் மொழியை மட்டும் சுட்டாது. தமிழ்க்கலை, நெறி, பண்பாடு அனைத்தையும் சுட்டுவதாய் அமைந்துள்ளது.

மேலும் நற்றமிழ், தண்தமிழ், அருந்தமிழ், ஒண்தமிழ், செந்தமிழ், வண்தமிழ், இன்தமிழ் முதலிய அமுதச் சொற்களினால் அன்னைத் தமிழின் அருமை பெருமைகளைச் சுந்தரர் கூறுகிறார்.

மாணிக்கவாசகர் திருவாசக செந்தமிழ்

மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் எட்டாம் திருமுறைகளில் ஒன்று.

தண்ணார் தமிழளிக்கும் தண்பாண்டி நாட்டானை பெண்ணாளும் பாகனை
உளங்குளிரச் செய்யும் உயரியல்பால் தண்தமிழ்
உயர்மதிற் கூடலின் ஆய்ந்த ஒண்தீந்தமிழின் துறைவாய் நுழைந்தனையோ

என்ற பாடலில் மணிவாசகர்  சங்கத் தமிழின் மாண்பினை விளக்கியுள்ளார்.

சேந்தனாரின் திருவிசைப்பா செந்தமிழ் 

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோர் அருளிய பக்தி நலங்கனிந்த பதிகங்களைத் தமிழின் மேல்வரம்பாகக் கொண்ட சுந்தரரைப் போலவே திருவிசைப்பா ஆசிரியருள் ஒருவராகிய சேந்தனாரும் கொண்டுள்ளார். பாசுரங்களையும் பழுத்த செந்தமிழ் மலர் என்று தாம் பாடிய திருவீழிமிழலைத் திருவிசைப்பாவில்  போற்றியுள்ளார்.

பூந்துருத்திக் காடன் தமிழ்மாலை பத்தும் 
ஆரா இன்சொல் கண்டராதித்தன் அருந்தமிழ் மாலை 
அமுதவாலி சொன்ன தமிழ்மாலைப் பால்நேர் பாடல்பத்தும்  

திருமூலர்  திருமந்திரத் செந்தமிழ்

திருமூலர் தமிழ், வடமொழி உள்ளிட்ட பதினெட்டு மொழிகளில் புலமை படைத்தவர். இம் மொழிகள் யாவும் நாவல நாடாகிய பாரதத்திலும் ஈழம் தென்கிழக்காசியத் தீவுகள், சீனம் முதலிய நாடுகளிலும் பேசப்படுகின்றன. மொழிப்பொதுமை பேணிய திருமூலர் இம்மொழிகளில் சிறப்பாக வியந்து கூறப்பெறும் தமிழ் வடமொழி ஆகிய இருபெரும் மொழிகளையும் உமையம்மைக்கு ஈசனே புகட்டியதாகத் திருமூலர் சுட்டியுள்ளார்.

ஆரியமும் தமிழும் உடனே சொல்லிக்
காரிகை யார்க்குக் கருணைசெய் தானே 

தமிழ்ச்சொல் வடசொல் எனும் இவ்விரண்டும்
உணர்த்தும் அவனை உணரலும் ஆமே  

செந்தமிழ் ஆதி தெளிந்து வழிபடு  
தமிழ் மண்டலம் அய்ந்தும் தழுவிய ஞானம்  

மெய்ப்பொருள் நூலினைத் தமிழ்ச் சாத்திரம்  என்று திருமூலர் குறித்தனர். திருமந்திரம் முதல் தமிழ் ஆகமம் என  சேக்கிழார் சுட்டுகிறார். இறைவனைத் தமிழால் வழிபடுவதைப் பெரிதும் விரும்பியுள்ளார் திருமூலர். எனவே, ‘என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ்செய்யுமாறே’ என்று பாடினார்.

சேக்கிழார் பெரியபுராணத்  தமிழ்

சேக்கிழார் திருஞானசம்பந்தரைத் தமிழாகரர் என்று போற்றியுள்ளார்.

அருந்தமிழாகரர் சரிதை அடியேனுக்கு அவர்பாதம்
தரும்பரிசால் அறிந்தபடி துதிசெய்தேன்

ஞாலம் அளந்த மேன்மைத் தெய்வத் தமிழாம்

சேக்கிழார் மேலும் பல பாடல்களில் அருந்தமிழ், செந்தமிழ், தீந்தமிழ், இன்தமிழ், நற்றதமிழ், வண்தமிழ் என்றெல்லாம் பாடிப் பரப்புகிறார். குலோத்துங்கச் சோழனின் தலைமை அமைச்சராக விளங்கிய அரசியல் பணிபுரிந்தவரும், பின்னர் அரசியலைத் துறந்து ஆன்மிக நெறியில் ஈடுபாடு கொண்டு தொண்டர் வரலாற்றைப் பக்தி நனிசொட்டச் சொட்டப் பாடித் `தொண்டர்சீர் பரவுவார்’ எனப் போற்றப்பெற்ற சேக்கிழார் செந்தமிழ்ச் சீர்பரவுவார் என்று பாராட்டைப் பெற்றவர். திருமுறையாசிரியர்களின் இறைநெறி சார்ந்த செந்தமிழ்ப் பற்றும் பிறமொழிகளை ஒப்பமதிக்கும் பண்பும் புலனாகிறது.

தொல்காப்பியர் காலம் முதலே நல்ல தமிழைச் செந்தமிழ் என்று சொல்லும் மரபு காணப்படுகிறது. `செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்’ என்ற சொல்லதிகார நூற்பா எண்ணத்தக்கது. தொல்காப்பியப் பாயிரத்தில் `செந்தமிழ் இயற்கைச் சிவணிய நிலத்தொடு, முந்து நூல் கண்டு’ என்று பனம்பாரனார் செவ்விய தமிழின் சிறப்பினைக் குறித்தனர். எனவேதான் பக்திமொழி என்று பாராட்டத்தக்க பாடல்கள் அமைந்த மொழி தமிழே என அறிஞர்கள் ஆராய்ந்து கூறுகின்றனர். இறைவன்  சம்பந்தமான மிகக்கூடிய பாடல்கள் எழுந்த மொழியும் தமிழ்மொழி என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இறைவனே தமிழ்ப் பாடலைக் கேட்டு இரங்கி அடியார்கள் வழிபாட்டினை ஏற்றருள்புரிகிறான் என்ற கருத்தினைத் திருமுறைப் பாடல்கள் தெளிவுபடுத்துகின்றன. இராவணன் சாமவேதத்தைத் தமிழில் பாடியதாக இதிகாசங்கள்  கூறுகின்றன. திருமுறை ஆசிரியர்களான சமயகுரவர்கள் இறையருள் பெற்றவர்கள் தமிழின் செம்மை நலமும், இசைப் பண்புகளும் உணர்ந்து தெளிந்தவர்கள். அதனால்தான் 63 நாயன்மார்களும் தமிழை அடைகொடுத்துப் போற்றிப் பாடியுள்ளனர். (வளரும்)


என்றுமுள்ள செந்தமிழ் 

வைணவம் வளர்த்த தமிழ் இலக்கியங்கள்
70

சைவ சமயத்துக்குப்  பன்னிரு திருமுறைகள் இருப்பது போல் வைணவ சமயத்துக்கு  நாலாயிர திவ்விய பிரபந்தம் இருக்கிறது.

இளங்கோ இயற்றிய சிலப்பதிகாரம், மதுரைக் கூல வாணிகர் சாத்தனார் இயற்றிய மணிமேகலை இரண்டையும்  இரட்டைக் காப்பியங்கள் என அழைப்பர். இவை சங்க காலத்திற்குப் பின் தோன்றியவை.  இவை தமிழில் எழுதப்பட்ட  வளையாபதி, குண்டலகேசி, சீவகசிந்தாமணி ஆகிய காப்பியங்களில்  அய்ம்பெரும் காப்பியங்களில் அடங்கும்.

இளங்கோவும் சாத்தனாரும்  ஒரே காலத்தவர் என்பது ஒருபுறமிருக்க சிலப்பதிகார கதையின் தொடர்ச்சியாகவே மணிமேகலை எழுதப்பட்டுள்ளது. மணிமேகலையின் கதைக்களன், கதை மாந்தர், கதை நடக்கும் காலம் ஆகியவை சிலப்பதிகாரத்தைத் தொடர்வதால்  மணிமேகலையும் சிலப்பதிகாரமும் இரட்டைக் காப்பியங்கள் என்று அழைக்கப்படுகின்றன என முன்னர் பார்த்தோம்.

சிலப்பதிகாரம் சமண சமய கோட்பாடுகளை ஆங்காங்கே எடுத்து இயம்பினாலும் அது சமணசமய காப்பியம் என்று அழைக்கப் படுவதில்லை.   மணிமேகலை அப்படியல்ல. அது முழுக்க பவுத்த மதக் கோட்பாடுகளை விளக்கும் காப்பியமாகும்.  மணிமேகலை காப்பியத்தின் தலைவி   மணிமேகலை சிலப்பதிகாரத்தின் கோவலன் மற்றும் மாதவி என்பவர்களின் மகளாவாள். கோவலனின் துயர மரணத்திற்குப் பிறகு மாதவியும் மணிமேகலையும் பவுத்த மதத்தை மேற்கொண்டு இருவரும் துறவுக் கோலம் பூண்கிறார்கள்.

இந்த இரட்டைக் காப்பியங்கள் போலவே சைவமும் வைணவமும் இரட்டை மதங்களாகும். கிபி 10 ஆம் நூற்றாண்டுவரை சைவமும் வைணவமும் ஒரே மதமாகவே இருந்துள்ளன. அதன் பின்னரே சைவத்துக்கு சிவனும் வைணவத்துக்கு திருமாலும் முழுமுதற் கடவுளாகத் தோற்றம் பெற்றனர்.  சைவ, வைணவ கோயில்களில் பூசை, வழிபாடு ஒரே மாதிரி  இருந்தாலும் சைவக் கோயிலில் திருமாலும் வைணவ கோயிலில் சிவனும் எழுந்தருளி இருந்தாலும்  முழுமுதற் கடவுளர் ஒன்றல்ல.

சைவ சமயத்தவர்க்கு பன்னிரு திருமுறைகளைப் போல் வைணவர்களுக்கு நாலாயிர திவ்விய பிரபந்தம்.  இதனைத் தமிழ்வேதம் என்றும் சிறப்பித்துச் சொல்வார்கள். இருந்தும் திருமுறைகள் சரி,  திவ்வியபிரபந்தம் சரி இரண்டும் ஒரே பொது மூலமான வேதத்தை அடிப்படையாகக் கொண்டு உண்டானவையே. தேவாரத்தையும் பிரபந்தத்தையும் பாடிய நாயன்மார்களும் ஆழ்வார்களும் வேதத்தின் பெருமையையே பேசுகிறார்கள்.

திருநாவுக்கரசர் சிவபிரானையே ஆரியன் என்றும் தமிழன் என்றும் கூறுகிறார். தமிழ் ஆகிய மொழி பேசுவோனை,  மொழிக்குரியவனைக் குறிக்கும்  இனப் பெயராகத் `தமிழன்’ என்ற சொல் காட்டி நிற்கிறது.   இவ்வாறு `மொழி வழி இனம்’ என்ற புது மரபினைத் தோற்றுவித்தவர்  அப்பரடிகளே.  முதன்முதல்  `தமிழன்’ `ஆரியன்’ என்ற பெயர்களை மொழிந்தவரும் அவரே.

“ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்
 அண்ணாமலையுறையெம் மண்ணல் கண்டாய்”

“செந்தமிழோ டாரியனைச் சீரி யானை”

இன்று நாம் தமிழர் எனப் பெருமிதத்துடன் பேசுதற்கு அன்றே வித்திட்ட பெருமை திருநாவுக்கரசர் அவர்களையே சாரும்.

இனி தமிழ்மொழிக்கு வளம் சேர்த்த வைணவ இலக்கியங்கள் பற்றிப் பார்ப்போம். திருமாலை (விஷ்ணுவை) மேலான பரம்பொருளாகக் கொண்ட சமயம் வைணவம் ஆகும்.

கிபி ஏழாம் நூற்றாண்டு முதல் கிபி 9 ஆம் நூற்றாண்டு முடிய வாழ்ந்த ஆழ்வார்கள் திருமாலின் புகழைப் பாடிப் பரப்பினர். திருமாலே முழுமுதற் கடவுள், அமரரும் பொழும் பரம்பொருள் எனப் பாடினர்.

வேதகாலத்தில் இருந்த பல தெய்வக் கோட்பாட்டில் விஷ்ணு ஒரு சிறு தெய்வம். சிவனும் (உருத்திரன்) அவ்வாறே. விஷ்ண பசுக் கூட்டங்களைக் காப்பவன் என்று இருக்கு வேதம் குறிப்பிடுகிறது.

வேதத்தில் உள்ள பாடல்கள் ஆரியர்கள் தங்களுக்கு நல்ல உணவு, நல்ல பானம் (சோமபானம்), நல்ல மழை, தானிய விளைச்சல், தானம் (தட்சனை)அதிக பால் தரும் பசுக்கள், யாகங்கள் செய்திடச் செல்வம், வேகமாகச் செல்லும் குதிரைகள், உறுதியான தேர்கள், நல்ல உடல் நலம், மன உறுதி, வேத மந்திரங்களை நினைவில் வவைத்துக்கொண்டு வேத மந்திரங்களைப் பாட நல்ல வாக்கு மற்றும் தங்களின் வெற்றிக்காகவும்   எதிரிகளின் வீழ்ச்சிக்காகவும் தேவர்களின் உதவி வேண்டி அவர்களைப் போற்றும் நோக்கிலே அமைந்தவை. மேலும் அவர்களது  மன்னர்களின் சில வரலாற்றுக் குறிப்புகளும் ஆங்காங்கே காணப்படுகின்றன. முக்கியமாக ஆரியர்களுக்கும் அவர்களது எதிரிகளான தாசர் எனபடும் அசுர இனத்தாருக்கும் மற்றும் கிராதர்கள் என்ற இனத்தாருக்கும் இடையிலான போர்கள் பற்றிய குறிப்புக்கள் குறிப்பிடத்தக்கவை.

கிமு 1,500 ஆண்டுகளுக்குப் பிற்பட்ட காலத்தில் ஆரியர்கள் இந்தியாவுக்குள் நுழைந்தனர். அப்போது ஆரியர்களுக்கு முற்பட்ட பழமையான  இனத்தவர்களான திராவிட இனத்தவரோடு பகைமை பாராட்டினர். பின்னர் இந்த பகைமை குறைந்து திராவிட இனத்தவரோடு உறவு பூண்டு வாழத் தலைப்பட்டனர்.

இப்போது உள்ள இந்து சமயம் இந்த இருவேறு பண்பாட்டுக் கலப்பினால்  உண்டான மதமாகும். தொல்காப்பியம் திருமாலை முல்லை நிலத் தெய்வமாகக் குறிப்பிடுகிறது.

மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையான் சொல்லவும் படுமே.                                 (பொருளதிகாரம்-அகத்திணை இயல்-பாடல் எண்:5)

‘மாயோன் ஆகிய திருமால் பொருந்திய காட்டு உலகமும் சேயோன் ஆகிய முருகன் பொருந்திய மேகங்களை எல்லையாகக் கொண்ட உலகமும் வேந்தன் ஆகிய இந்திரன் பொருந்திய இனிய புனலை உடைய உலகமும் வருணன் ஆகிய சூரியன் பொருந்திய பெருமணலைக் கொண்ட உலகமும் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்று சொல்லிய முறையால் சொல்லப் படும்.’

காடுறை என்பது தவறு அது கானுறை என்றிருக்க வேண்டும் பெருமணல் என்பது தவறு பெருமதில் என்று வந்திருக்க வேண்டும் எனச்  சொல்லாடல் செய்வாரும் உண்டு.

திராவிடரைப் போன்று விஷ்ணுவின் நிறம் கருமை ஆகும். திருமாலின் அவதாரங்களில் ஒன்றான கண்ணன் கருமை நிறமுடையவன்.  கண்ணன் முல்லை நிலத்தில் வாழும் ஆயர்களின் தலைவன். ஆரியர்கள் அல்லாத அந்தணர்களுக்கு முற்றிலும் எதிரான விருஷ்ணி என்ற இனக் குழுவைச் சார்ந்தவன் கண்ணன் என்று கூறப்படுகிறது.

வேதகாலத்தில் இருந்த கடவுள் நம்பிக்கை அச்சத்தை அடிப்படையாகக் கொண்டது ஆகும். கடவுளை அறிவுபூர்வமாகப் பார்க்கும் முறை உபநிடத ஞான நெறியாகும். கடவுளை உணர்வு  பூர்வமாக அடையும் நெறி பக்தி ஆகும்.  வேதநெறியின்  சாதி அமைப்புக்கு எதிரான இயக்கமே பக்தி இயக்கமாகும்.  பக்தி இயக்கம் ஆரிய – திராவிட பண்பாட்டுக் கூறுகளின் கலப்பால் உருவான புது நெறி என்று கொள்ளலாம்.  இதில் திராவிடப் பண்பாட்டுக் கூறுகள் மிகுதி.

ஆழ்வார்கள் வைணவ நெறியைப் பின்பற்றிப்  பக்தியில் சிறந்து விளங்கியவர்கள் ஆவர்.  கிபி 6 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வைணவம் புத்துயிர் பெறத் தொடங்கியது. தேவார மூவரைப் போல திருமால் அழகிலும் குணத்திலும் ஆழ்ந்து நெஞ்சுருகப் பாடியுள்ளனர். அவர்கள் பாடிய 4000 பாடல்களையும் (பாசுரங்கள்) 11 ஆம் நூற்றாண்டில் நாதமுனி என்பவர் நாலாயிரத்திவ்விய பிரபந்தம் என்னும் பெயரில் நூலாகத் தொகுத்தார். பன்னிரு ஆழ்வார்களின் நூல்களே வைணவப் பக்தி இலக்கியங்களாகும். (வளரும்)


என்றுமுள்ள செந்தமிழ்
வைணவத்தில் தமிழ் முன் செல்ல பெருமாள் பின் தொடருகிறார்!
71

ஆழ்வார்களின் பக்தி இயக்கத்தின் முக்கியக் கூறு தாய் மொழியில் இறைவனை வழிபடுதலாகும். இதை “விதையாக நற்றமிழை வித்தியென் உள்ளத்தை நீ விளைவித்தாய் கற்ற மொழியாகிக் கலந்து” என்ற திருமழிசை ஆழ்வாரின் இனிய பாசுரத்தால் அறியலாம். மெய்யியல் ஞானம் உயர் குலச் சொத்தாக இருந்ததை மாற்றி உயர் வேதத்தை தமிழ் செய்து தமிழ் மறையை எக்குலத்தோர்க்கும் சமம் என்று வைத்தனர் வைணவர்கள். இதையே புரட்சிக் கவி பாரதிதாசன்,

“முத்தியோ சிலரின் சொத்தென இருக்கையில்
இத்தமிழ் நாடுதன் இருந்தவப் பயனாய்
இராமானுசனை ஈன்றதன்றோ?” என்கிறார்.
ஆழ்வார்கள் ஆக்கி வைத்த ஆதி தமிழ் மறுமலர்ச்சியால் இன்றளவும் வைணவத் திருக்கோவில்களில் தமிழ் பாசுரங்களால்தான் தினமும் ஆண்டவனுக்கு அர்ச்சனை ஆகிறது. தமிழ் முன் செல்ல பெருமாள் பின் தொடர அதன் பின் ஆரிய வேதத்தை வைத்த பெருமை தமிழகத்தில் வைணவத்திற்கே சாரும்.
பன்னிரு ஆழ்வார்கள், தேவார மூவர் மற்றும் மாணிக்கவாசகர் போல் திருமாலின் அழகையும் திருக்குணங்களையும் தித்திக்கும் தமிழ்ப் பாடல்களிலே வடித்துக் கொடுத்துள்ளார்கள்.

இத்திவ்வியப் பிரபந்தத்தைத் திராவிட வேதம் என்றும் தமிழ் வேதம் என்றும் கொண்டாடப்படுகிறது. இவர்களால் பாடப் பெற்ற புண்ணிய தலங்கள் மொத்தம் நூற்றெட்டாகும். இந்த நூற்றெட்டு திவ்விய தேசங்களின் பெருமைகளையும், ஆங்காங்கு எழுந்தருளியிருக்கும் எம்பெருமான்களுடைய வைபவங்களையும் இந்நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தால் அறியலாம்.

இத்தகைய திவ்வியப் பிரபந்தம் ஆழ்வார்களுடைய காலத்துக்குப் பின்னே வழக்கிலிருந்தாலும் இடைக்காலத்தில் வழக்காறற்று மறைந்துபோயிற்று. பின்பு, நாதமுனிகள் என்னும் ஆசாரியார் (இவர் வீரநாராயணபுரம் என்னும் காட்டுமன்னார்கோவில் திவ்யதேசத்தில் அவதரித்தவர்) ஒரு சமயம் திருக்குடந்தை என்னும் கும்பகோணத்திற்குச் சென்று பெருமாளை தொழுத பொழுது, அங்கு மேல் திசையினின்றும் வந்திருந்த ஸ்ரீவைஷ்ணவர் சிலர் ‘ஆராவமுதே அடியேனுடலம்’என்னும் திருவாய்மொழியை நல்ல இசையோடு பாடக் கேட்டுப் பரவசமானார். மேலும் அவர்கள் ‘குழலில் மலியச் சொன்ன ஓராயிரத்துளிப்பத்தும்’என்று பாடி முடிப்பதைக் கேட்ட நாதமுனிகள், அவர்களை அணுகி, உங்களுக்கு ஓராயிரமும் தெரியுமோ என்று கேட்க, அவர்கள் நாங்கள் அறியோம்- ஆயினும் நம்மாழ்வார் அவதரித்த திருக்குருகூர் என்னும் ஆழ்வார் திருநகரிக்குச் சென்றால் பெறலாம் என்று விடையிறுத்தனர்.

உடனே நாதமுனிகளும் திருக்குருகூரை அடைந்து அங்குள்ள பெரியவர்களின் சொற்படி, ஸ்ரீ மதுரகவிகளியற்றிய ‘கண்ணி நுண்சிறுத்தாம்பு’என்னும் திவ்வியப் பிரபந்தத்தைப் பன்னீராயிரம் தடவை பாராயணம் பண்ணி பக்தியோடு நின்றவளவில், நம்மாழ்வார் இவர் முன் தோன்றி தாமியற்றிய திருவாய்மொழியையும் மற்றைய ஆழ்வார்களின் பாடல்களாகிய மூவாயிரத்தையும் இவருக்கு உபதேசம் செய்தார். இவரது காலம் 11 ஆம் நூற்றாண்டு ஆகும். இவ்வாறு நாதமுனிகள் நாலாயிரம் பெற்ற விதத்தைப் பற்றி குருபரம்பரை நூல்கள் கூறுகின்றன.

நாலாயிரம் என்பது பாசுரங்களின் எண்ணிக்கையைக் குறிக்கும். ‘திவ்வியம்’ என்பது அடியவர்களுக்கு இன்பம் அளிப்பது என்ற பொருளில் இனிமை என்னும் பொருளைத் தரும். ‘பிரபந்தம்’ என்பது ‘தொகுப்பு’ என்றும் ‘தனி நூல்’ என்றும் பொருள் தரும் என்பர். எனவே, திவ்விய பிரபந்தம் என்பது, தெய்வத்தின் திவ்விய குணங்களைப் போற்றும் பிரபந்தங்களின் தொகுப்பு என்று பொருள் தரும். நாலாயிர திவ்வியப் பிரபந்தம் என்னும் தொகுப்பு நூலில் இடம் பெற்றுள்ள பாடல்களைப் பாடிய ஆழ்வார்கள் 12 பேர் என்பர்.

அவர்களில் பெண் என்பதால் ஆண்டாளையும், நம்மாழ்வாரைப் பாடினார் என்பதால் மதுரகவி ஆழ்வாரையும் விடுத்து ஆழ்வார்கள் 10 பேர் எனக் காட்டுவாரும் உண்டு.

பன்னிரு ஆழ்வார்கள் 6 முதல் 9 நூற்றாண்டுக் கால அளவில் வாழ்ந்தவர்கள்.

1.பொய்கையாழ்வார், 2. பூதத்தாழ்வார், 3. பேயாழ்வார் – ஆறாம் நூற்றாண்டு
4. திருப்பாணாழ்வார், 5. திருமழிசையாழ்வார், 6. தொண்டரடிப் பொடியாழ்வார் – ஏழாம் நூற்றாண்டு
7. குலசேகராழ்வார், 8. பெரியாழ்வார், 9. ஆண்டாள், 10. திருமங்கையாழ்வார் – எட்டாம் நூற்றாண்டு –
11. நம்மாழ்வார், 12. மதுரகவியாழ்வார் – ஒன்பதாம் நூற்றாண்டு.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஆழ்வார்களின் வரிசை பதிப்புக்குப் பதிப்பு மாறுபடுகின்றன.

பெரும்பாலான பாடல்கள் 108 திவ்ய தேசங்களில் பாடப்பட்டுள்ளன. இந்தத் தொகுப்பில், அண்ணளவாக 1100 பாடல்கள் நம்மாழ்வாரால் இயற்றப்பட்டதாகும். இப்பாசுரங்களின் மொத்த எண்ணிக்கை 3892 ஆகும். இராமானுசர் காலத்தில் வாழ்ந்த திருவரங்கத்து அமுதனார் இயற்றிய இராமானுசர் நூற்றந்தாதியையும் (108 பாசுரங்கள் கொண்டது) சேர்த்து நாலாயிரம் என்பர். பன்னிரு ஆழ்வார்கள் பாடிய திவ்விய பிரபந்தங்கள் 24 வகைப்படும். இவற்றுள் பெரும்பாலானவை பண்ணுடன் பாடக்கூடிய இசைப்பாடல்களாகும்.

முதலாயிரம்
பெரியாழ்வார்            – திருப்பல்லாண்டு 12, திருமொழி 461,
ஆண்டாள்                  – திருப்பாவை 30, நாச்சியார் திருமொழி 143,
குலசேகராழ்வார்      – பெருமாள் திருமொழி 105),
திருமழிசையாழ்வார் – திருச்சந்தவிருத்தம் 120,
தொண்டரடிப்பொடியாழ்வார் – திருமாலை 45, திருப்பள்ளி எழுச்சி 10,
திருப்பாணாழ்வார்                    – மலனாதிபிரான் 10,
மதுரகவியாழ்வார்                    – கண்ணிநுண்சிறுத்தாம்பு 11.

இரண்டாவதாயிரம்
திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி 1084, திருக்குறுந்தாண்டகம் 20, திருநெடுந்தாண்டகம் 30.

மூன்றாவதாயிரம்
பொய்கை ஆழ்வார்                   – முதல் திருவந்தாதி 100,
பூதத்தாழ்வார்                            – இரண்டாம் திருவந்தாதி 100,
பேயாழ்வார்                              – மூன்றாம் திருவந்தாதி 100,
திருமழிசை ஆழ்வார்                – நான்முகன் திருவந்தாதி 96,
நம்மாழ்வார்                              – திருவிருத்தம் 100, திருவாசிரியம் 7, பெரிய திருவந்தாதி 87,
திருமங்கை ஆழ்வார்               – திருஎழுகூற்றிருக்கை 1, சிறிய திருமடல் 40, பெரிய திருமடல் 78,
திருவரங்கத்தமுதனார்            – இராமானுச நூற்றந்தாதி 108

நான்காவதாயிரம்

நம்மாழ்வார்                        – திருவாய்மொழி 1102 ஆகிய பாடல்களைக் கொண்டது.
ஆழ்வார்கள் என்ற பெயர் காரணம் மிகவும் சுவையானது. வேதம் என்ற ஆரியச் சொல்லை விட “மறை” என்ற தமிழ்ச் சொல் பொருள் நிறைந்தது. மறைந்து உள்ள பொருளைப் பற்றியது மறை. மறை தேடும் ஞானம் எல்லோருக்கும் வருவதில்லை.

மறைந்து கிடக்கின்ற எல்லாப் பொருள்களையும் ஆழ்ந்து அறியும் தன்மை உடையவர்கள் ஆதலால் ஆழ்வார் எனப்படுவர். பண்டைய உரை ஆசிரியர்கள் ஆழ்வார்களை, “எம்பெருமானுடைய மங்கல குணங்களில் ஆழங்காற்படுபவர்கள்” என்றனர். ஆழங்காற்படும் அறிவாவது, வேதத்தாலும் அளவிட்டறிய முடியாத எம்பெருமானின் எல்லாக் குணங்களையும் அவனருளால் அறிந்து அனுபவிக்கும் ஞானமாகும்.

இத்தகைய ஆழ்ந்த அறிவுடைய ஆழ்வார்கள் செய்வித்ததுதான் தெய்வத் தமிழ் பாசுரங்கள். ஆழ்ந்தறியத்தக்க சொல் நயம், பொருள் நயம் உடைய கவிதைகள் அவை. இவற்றிற்கு பொருள் சொல்ல முற்பட்டதன் விளைவுதான் வைணவ பரம்பரையில் உள்ள சுவை மிகுந்த வியாக்கியானங்கள். வியாக்கியானங்களுக்காக பாசுரங்களா? இல்லை, பாசுரங்களுக்காக வியாக்கியானமா? என்று மயங்கும் அளவில் ஒன்றை ஒன்று சார்ந்து, ஒன்றை ஒன்றும் விஞ்சும் தன்மையாயின. (வளரும்)


என்றுமுள்ள செந்தமிழ்

தமிழ் கவிதை மரபில் சோதனை முயற்சிகளைச் செய்த ஆழ்வார்கள்!

72

ஆழ்வாளர்களில் முதல் மூவர் என்றழைக்கப்படும் பொய்கை, பூதத்தார், பேயார் என்பவர்கள் காலத்தால் முந்தியவர்கள்.  வைதீக மதங்களைப்  புறந்தள்ளிப் பிறந்த சாக்கியம், பவுத்தம்,சமணம் போன்ற மதங்கள் தமிழகத்தில் பரவி இருந்த  காலத்தில் மூன்று தமிழில் இரண்டான இசைத் தமிழும்  மூன்றான நாடகத் தமிழும் ஏனைய அழகியல் கலைகளும்  மறக்கப் பட்டு, அறம் என்பது மட்டும் உயர்த்தி பேசப்பட்டு தமிழர்  வாழ்வு களையிழந்த  வேளையில்  இம்மூவரும் தோன்றுகின்றனர்.

பவுத்தம், சமணம் இந்த இரண்டு மதங்களும் அழகியல் கலைகளை ஒதுக்கியதே அவற்றின் வீழ்ச்சிக்கு மூல காரணமாக இருந்தது.

ஆழ்வார்கள் மானிட வாழ்வு இன்பமானது,  பேரானந்தம் தருவது, கன்னல் போல் இனிப்பது, இறைவன் மனிதர்களின் வாழ்வின் பின்புலமாக இருந்து அருள்பாலிக்கிறான் என்று பாடி சங்க கால அகவாழ்க்கை  மரபை மீட்டனர்.

பன்னிரு ஆழ்வார்களில் மிகுதியான (1296) பாசுரங்களைப் பாடியவர் நம்மாழ்வார் ஆவர்.

ஆழ்வார்களில் தலை சிறந்தவராக நம்மாழ்வார் போற்றப்படுகிறார். இருக்கு, யசுர், அதர்வணம், சாம வேதங்களின் பிழிவாகத் திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி ஆகியவற்றை  நம்மாழ்வார்பாடியிருக்கிறார்.

பிள்ளைத் தமிழ் என்ற தமிழ்க் கவிதை மரபைத் தோற்றிவித்தவர் விட்டுச் சித்தர் என்றும் பட்டர்பிரான் என்றும் போற்றப்படும் பெரியாழ்வார் ஆகும். கண்ணனைத் தன் மகனாகப் பாவித்து இவர் செய்வித்த ஈரப் பாசுரங்கள் பிள்ளைத் தமிழுக்கோர் முன்னோடியாக அமைந்தன.

அடுத்து வருபவர் (1137) திருமங்கை மன்னன்.

கிபி எட்டாம் நூற்றாண்டினரான இரண்டாம் நந்திவர்மன் காலத்தில் சோழ நாட்டின் ஒரு பகுதியான ஆலி நாட்டை ஆண்ட குறுநில மன்னர் திருமங்கை ஆழ்வார். இவர் திருமால் அருள் பெற்று “குலம் தரும் செல்வந்தந்திடும்” என்ற நாராயண மந்திரத்தின் பெருமை பேசும் பாசுரங்களைப் பாடியிருக்கிறார்.

இவர் நாகபட்டினத்துப் பவுத்த விகாரத்தில் இருந்த பொன்னால் வேயப்பட்ட புத்தர் சிலையைக் கவர்ந்து வந்து அதை விற்றுப்  பல கோயில் திருப்பணிகள் செய்தார். பவுத்த சமண சமயங்கள் மீது நாயன்மாரைப் போலவே மிக்க வெறுப்புற்றவர் என்பதை இவரது   பாசுரங்களால்  உணர முடிகிறது.

திருவாய்மொழி  என்றால் தெய்வ மொழி என்று பொருள்.  இராமானுசர் தம் முதன்மைச் சீடரான திருக்குருகைப் பிரான் பிள்ளானை திருவாய்மொழிக்கு ஓர் உரை எழுதுமாறு பணித்தார். இதைத் தொடர்ந்து பல உரைகள் இதற்குத் தோன்றின. நம்பிள்ளை உபதேசித்தவற்றை அடிப்படையாகக் கொண்டு வடக்குத் திருவீதிப் பிள்ளை எழுதியருளிய “ஈடு” (முப்பதாயிரப் படி) மிகவும் கொண்டாடப் படும் உரையாகும். வியாக்கியானச் சக்கிரவர்த்தி என்று புகழ் பெற்ற பெரியவாச்சான் பிள்ளை என்பவர் நாலாயிரம் பாசுரங்களுக்கும் உரை எழுதியுள்ளார்.

ஆனால் அந்த உரைகள்  பெரும்பாலும் ஆரியமும் – தமிழும் கலந்த  அக்காலத்து மணிப்பிரவாள நடையில் அமைந்துள்ளன. திருவாய் மொழிக்கான அத்தகைய உரையை முழுவதும் தமிழ்ப் படுத்திச் சென்னைப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ளது. தனித் தமிழ் ஆர்வலர்களுக்கு அதுவொரு விருந்து.

இராமானுசருக்குப் பின் விசிட்டாத்துவ சிந்தனையாளர்களில் மிகவும் புகழ் பெற்ற வேதாந்த தேசிகன், “வடமொழி, தமிழ் ஆகிய இருமொழி வேதங்களிலும் நன்கு பயிற்சி பெற்றுக் கொள்வது கடினம் என்று ஒரு வைணவர் நினைத்தால் அவர் ஆழ்வார் பாசுரங்களான திராவிட வேதத்தை மட்டும் நன்கு கற்றுத் தோய வேண்டும்” என்று கூறுகிறார்.

தமிழில் உள்ள ஆழ்வார் பிரபந்தங்களின் தத்துவ உண்மைகள் சிலவற்றை  வடமொழியாளர்களும் தெரிந்து  கொள்ள வேண்டும்  என்பதற்காக ஸ்ரீ திராவிடடோப நிஷத்தாத்பர்ய ரத்னாவளி, ஸ்ரீ திராவிடோபநிஷத் சாரம், ஸ்ரீ மதுரகவி ஹிருதயம், முனி வாகன போகம் ஆகிய நூல்கள்  வடமொழியில் எழுதப்பட்டுள்ளன.

திருமங்கை ஆழ்வார் தாம் பாடிய  1137 பாடல்களுள் ஏராளமான சோதனை முயற்சிகளைக் கவிதை வடிவில் செய்திருக்கிறார். அதனால்  அவர்  ஆசுகவி, சித்திரக்கவி, மதுரக்கவி, வித்தாரக்கவி என அழைக்கப்படுகிறார்.  அவருடைய நடையில் எளிமையும் இனிய கவித்துவமும் இருக்கும். அவருடைய சித்திரக்கவிப் புலமையை திருவெழுகூற்றிருக்கை புலப்படுத்தும். அப்பாடல் முழுவதும் ஒரு தேரின் வடிவைப் புலப்படுத்தும்.

தமிழ் கவிதை மரபில் சோதனை முயற்சிகளைச் செய்தோருள் திருமங்கை  ஆழ்வார்  முன்னோடிக் கவிஞர் எனலாம்.

ஆழ்வார்கள் பன்னிருவரில் கோதை நாச்சியார் என்றும் சூடிக் கொடுத்த சுடர்க் கொடி என்றும் போற்றப்படும் ஆண்டாள் ஒரு பெண் கவிஞர். இவர் இயற்றிய பாடல்களில் பெண்மையின் ஏக்கம்  தொனிப்பதைக் காணலாம்.  ஆழ்வார்களின் கடைக்குட்டியான இவர் மற்ற ஆழ்வார்களை நினைவு கூர்ந்தும் பரந்தாமனான கண்ணனைத் துயில் எழுப்பும் வண்ணமும் செய்வித்த “திருப்பாவை” முப்பது பாடல்களும் தமிழ் மரபின் விழுமியச் செழுமைக்கு உச்ச எடுத்துக்காட்டாகத்  திகழ்கின்றன. அதனால்தான்:

பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும்
வேதம் அனைத்துக்கும் வித்தாகும் கோதைதமிழ்
ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை
வையம் சுமப்பதும் வம்பு.

என்று சொல்லிப் போயினர்!

பேயாழ்வார் வேங்கடேசப் பெருமான் மீது பாடும் கீழ்காணும் பாசுரம் சைவ – வைணவ ஒற்றுமையின் குறியீடாகப்  போற்றப்படுகிறது:

தாழ்சடையும் நீள்முடியும்  ஒண்மழுவும் சக்கரமும்,
சூழ்அரவும் பொன்நாணும் தோன்றுமால் – சூழும்
திரண்டுஅருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு
இரண்டுஉருவும் ஒன்றாய் இசைந்து

இவர்கள் காலத்தின் பின் பகுதியில் தோன்றும் திருமழிசை ஆழ்வார்  சித்தர்கள் மரபில் கவிதை யாத்து ஒரு வைணவச் சித்தராகப் பரிமளிக்கிறார்.

தொண்டர் அடிப்பொடியோ கண்ணன் கழல் தொழும் அடியார்களுள் சாதி வித்தியாசம் கிடையாது என்று சூழுரைக்கும் பாசுரங்களை அருளிச் செய்திருக்கிறார்.

அமரவோ ரங்கமாறும்
வேதமோர் நான்கு மோதி
தமர்களில் தலைவராய
சாதியந்தணர்களேலும்
நுமர்களை பழிப்பாராகில்
நொடிப்ப தோரளவில் ஆங்கே
அவர்கள்தாம் புலையர் போலும்
அரங்கமாநகருளானே!

இந்தப்  பாடல்  திருப்பாணாழ்வாரை சுட்டும் முகமாகத் தொண்டர் அடிப்பொடியாழ்வார்  செய்வித்த பாசுரம் என்று கருதப்படுகிறது.

திருப்பாணாழ்வாரின் வரலாறு  தெய்வ பக்திக்குச்  சாதி ஒரு தடையில்லை என்று சொல்கிறது. அந்தணர் அவமதித்த பாணரைத்  தோள் மீது சுமந்து தன் சந்நிதிக்கு வருமாறு ஆணையிட்டதோடல்லாமல், அவரைத் தன்னுள் அய்க்கியப் படுத்தியது திருமாலின் அன்பு அனைவருக்கும் சமம் என்பதைக் காட்டுகிறது. இவர்  இயற்றிய:

கொண்டல் வண்ணனைக் கோவலானாய் வெண்ணெய்
உண்ட வாயன் என்னுள்ளம் கவர்ந்தானை
அண்டர் கோன் அணி அரங்கன் என் அமுதினைக்
கண்ட கண்கள், மற்றொன்றினைக் காணாவே!

குலசேகர ஆழ்வார் சேர மன்னர்.  இவர் வடமொழியில் “முகுந்த மாலா” என்னும் பக்தி நூலைச் செய்தவர். திருவரங்கத்து எம்பெருமானை வணங்குவதற்காக  மணி மகுடம் துறந்தவர். இராமர் மேல் மிகுந்த ஈடுபாடு கொண்ட இவர் செய்வித்திருக்கும் “இராமனின் திருப்பள்ளி எழுச்சி” வெங்கடேச சுப்ரபாதத்திற்கு முன்னோடி ஆகும்.

கம்பமத யானை கழுத்தகத்தின் மேலிருந்து
இன்பமரும் செல்வமு மிவ்வரசும் யான்வேண்டேன்
எம்பெருமா னீச னெழில்வேங் கடமலைமேல்
தம்பகமாய் நிற்கும் தவமுடையே னாவேனே

என்று இவர் பாடிய பாசுரங்கள் பக்தியின் எல்லையைத் தொடுவதாக உள்ளன.

மதுர கவியாழ்வார், குரு சரணம் என்பது இறைவனின் சரணத்திற்கு ஒப்பாகும் என்று உலகிற்குக் காண்பிக்கிறார்.

இன்று தொட்டும் எழுமையும் எம்பிரான்,
நின்று தன்புக ழேத்த வருளினான்,
குன்ற மாடத் திருக்கு கூர்நம்பி,
என்று மென்னை யிகழ்விலன் காண்மினே. (பண் –  யமுனா  கல்யாணி)

என்று இறைவனைப் பாடாது தன் குரு சரணத்தை மட்டும் பாடுகிறார்.  (வளரும்)


என்றுமுள்ள செந்தமிழ்

சைவமும் வைணவமும் தமிழகத்திலே தோன்றிய சமயங்கள் 

(78)

அ) சைவக் கோவில்களின் தலைமையிடம் சிதம்பரம். வைணவக் கோவில்களின் தலைமையிடம் திருவரங்கம். இவை இரண்டுமே தமிழகத்தில் இருக்கின்றன.

ஆ) சைவம் வளர்த்த நாயன்மார்கள் அறுபத்தி மூவரும் தமிழ்நாட்டையே சார்ந்தவர்கள். அவ்வாறே வைணவம் வளர்த்த ஆழ்வார்களும் தமிழ் நாட்டையே சார்ந்தவர்கள்.

இ) ஆகம முறைப்படி தொன்மை இந்தியாவில் கட்டப்பட்ட சிவன் கோயில்கள் ஏறத்தாழ 280 இதில் 235 கோயில்கள் தமிழகத்தில் இருக்கின்றன! ஆகம முறைப்படி தொன்மை இந்தியாவில் கட்டப்பட்ட வைணவக் கோயில்கள் ஏறத்தாழ 108 இல் 96 கோயில்கள் தமிழகத்தில் இருக்கின்றன!  தமிழகத்தின் இலட்சினையில் கோயில் கோபுரம் வானளாவ உயர்ந்து நிற்கிறது.

எனவே சைவம் – வைணவ  சமயங்களின் கோட்டையாகத்  தமிழகமே விளங்கி வருகிறது. இந்த இரண்டு சமயங்களும் மேற்கொண்ட பக்தி இயக்கத்துக்குத் தலைமை தாங்கிய நாயன்மார்கள், ஆழ்வார்கள் பாடிய தேவாரங்கள், திருவாசகங்கள், திவ்யபிரபந்தங்கள் போன்ற அருட்பாக்களே தமிழ்மொழிக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் வாழ்வும்  வளமும் சேர்த்தன.

தமிழ் இலக்கியத்தின் பரப்பை, அதன் ஆழ – நீழத்தை இந்த சமய இலக்கியங்களை நீக்கிவிட்டு அல்லது ஒதுக்கிவிட்டுப் பார்க்க முடியாது.  ஆழ்வார்கள் பாடிய திவ்யபிரபந்தம் பற்றி எழுதுவுதற்கு இதுவே காரணம் ஆகும்.

திருப்பல்லாண்டு பாடல்களை அடுத்து முதலாம் திருமொழி முதல் பத்தில் பெரியாழ்வார் கண்ணனின் திரு அவதாரச் சிறப்பைப் பாடுகிறார். பெரியாழ்வார் திருமொழியின் இந்த முதல் பத்து முழுதும் திருக்கோட்டியூர்  சவுமிய நாராயணப் பெருமாள் மீது பாடப்பட்ட மங்களாசாசனம் ஆகும்.

மங்களசாசனம் என்றால் ஏதேனும் திருத்தலத்தில் இருக்கும் தெய்வத்தைத் தரிசித்து, அந்தத் திருத்தலத்தையும் அங்கு இருக்கும் தெய்வத்தையும் பற்றிப் பாடுவது.

இத்திருக்கோட்டியூர் திருத்தலம் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்திருத்தலம் காரைக்குடியில் இருந்து 25 கிமீ தூரத்திலும் உள்ளது. இத்தலத்தின் அருகாமையிலேயே பிள்ளையார்பட்டி, குன்றக்குடி, அரியக்குடி, தென்திருப்பதி, கோவிலூர் சிவன் தலம், சிற்பக் கலையின் சிறப்பை உணர்த்தும் காளையார்கோயில் என இன்னும்  பல திருக்கோயில்கள் காணப்படுகின்றன.

ஆழ்வார்களின் பாசுர அமைப்பின்படி, 106 திவ்ய தேசங்களில் முதலாவதாகவும், பாண்டிநாட்டு திவ்ய தேசங்கள் 18 இல் ஒன்றாகவும் திகழ்கிறது.

நாராயண மந்திரம் ஓதும் தன் மகன் என்றும் பாராமல், பிரகலாதனைக் கொல்ல முற்படுகிறான்.   “நாராயணா நாராயணா என்று ஒவ்வொரு நொடியும் நீ அன்புடன் அழைக்கும் உன் கடவுள் நாராயணனைக் காட்டு” என  இரணியன், பிரகலாதனிடம் கேட்க,     “எம்பெருமான் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார்” என்று கூறக் கோபம் கொண்ட இரணியன், தூணை எட்டி உதைத்தான். அப்போது நரசிம்ம அவதாரம் எடுத்த நாராயணன் இரணியனைக் கொன்றார் என்ற புராணக் கதை இந்தக் கோயில் வரலாறோடு பேசப்படுகிறது.

இக் கோயிலுக்கு மேலும் ஒரு சிறப்பு உண்டு. ஓம் நமோ நாராயணா என்னும் திருமந்திரத்தினை உலக மக்கள் அனைவருக்கும் தந்தருளிய தலம் இந்தத் திருக்கோட்டியூர் திருத்தலம் ஆகும். இத்   திருமந்திரத்தைத் தெரிந்து கொள்ள ஸ்ரீரங்கத்தில் இருந்து பதினெட்டு முறை நடந்தே திருக்கோட்டியூர் நம்பிகளைக் காண இவ்வூருக்கு வந்து செல்வாராம் இராமனுஜர்.  பதினெட்டாவது முறை சீடனது பொறுமையைக் கண்டு மகிழ்ச்சி அடைந்த குரு, இக்கோயில் நரசிம்மர் சன்னதி முன்பாக, இந்தத் திருமந்திரத்தை, திருக்கோட்டியூர் நம்பிகள், தனது வம்சத்தினருக்கு மட்டுமே சொல்லித்தரப்படும் இதனை உனக்குச் சொல்லி அருளுகிறேன், நீ யாரிடமும் சொல்லக் கூடாது. அவ்வாறு கூறினால் உன் மண்டை வெடித்து, நீ நரகம் செல்வாய் என இராமனுஜரிடம் சத்தியம் வாங்கிக் கொண்டு திருமந்திரத்தை ஓதினார்.

அவ்வாறு ஓம் நமோ நாராயணா என்ற திருமந்திரத்தைத்  தெரிந்து கொண்ட அடுத்த கணமே, இத்திருக்கோயில் கோபுரம் மீது ஏறி நின்று கொண்டு, அந்த ஊர் மக்கள் அனைவரையும் இராமனுஜர் வரவழைத்தார். மக்களே, “ஓம் நமோ நாராயணா” என அனைவரும் மனதாரக் கூறுங்கள். நீங்கள் அனைவரும் சொர்க்கம் செல்லலாம்” எனக் கூறலானார்.

இதனைக் கேள்வியுற்ற திருக்கோட்டியூர் நம்பிகள் இராமனுஜரிடம் வந்து, எனக்குத் தந்த சத்தியத்தை மீறி, நீ இதுபோல செய்யலாமா எனக் கேட்டார். நான் ஒருவன் நரகம் சென்றாலும் பரவாயில்லை. இம்மந்திரம் சொல்லும் மானிடர்கள் அனைவரும் சொர்க்கம் சென்றாலே எனக்கு மகிழ்ச்சி  எனக் கூறியதைக் கேட்டதும் இராமானுஜரைத் கட்டித் தழுவிக் கொண்டு, எங்கள் எல்லோருக்கும் மேலானவர் நீர் எனப் போற்றி, எம்பெருமானார் என வாழ்த்தி அருளினார்.

இறைவன் முன் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டை, மனிதர்களுக்குள் ஏற்றத் தாழ்வு இல்லை என்ற  சமத்துவ  கருத்தை உருவாக்கியவர்  இராமானுஜர். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் அனைவரும் ஒன்றே என்று ஈவெரா பெரியாருக்கு பல நூற்றாண்டு முன்னரே இராமனுஜர் சொல்லியதோடு நில்லாமல் அதனைச் செயலிலும் எண்பித்துக் காட்டிய சமூக சீர்திருத்தக்காரர்.

மேலே கூறியவாறு முதலாம் திருமொழி முதல் பத்தில் பெரியாழ்வார் கண்ணனின் திரு அவதாரச் சிறப்பைப் பாடுகிறார்.

வண்ணமாடங்கள் சூழ் திருக்கோட்டியூர்
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்
எண்ணெய் சுண்ணம் எதிரெதிர் தூவிடக்
கண்ணன் முற்றம் கலந்து அளறாயிற்றே.       (முதலாம் திருமொழி – பாடல் 1)

இப்போது பாட்டின் பொருளைப் பார்ப்போம்.

வண்ணமாடங்கள் சூழ் திருக்கோட்டியூர் – அழகிய நுணுக்கமான வேலைப்பாடுகளமைந்த மாளிகைகள் நிறைந்த திருக்கோட்டியூர், கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில் – கண்ணன், கேசவன், நம்பி பிறந்தினில்; அதாவது, அழகிய ஒளி நிறைந்த கண்களை உடையவனே, கேசி என்னும் குதிரை வடிவில் வந்த அசுரனை வதம் புரிந்தவனே, கேசவா, அண்டக் குலத்துக்கதிபதியானவனே! நீ திருவவதாரம் புரிந்த கோகுலமானது, கண்ணன் – ஒளி நிறைந்த கண்களை உடையவன், கேசவன் – கேசி என்னும் குதிரை வடிவில் இருந்த அசுரனை வதம் புரிந்தவன். கிருஷ்ணாவதாரத்தில், கண்ணனைக் கொல்வதற்காகக் கேசி என்னும் அசுரனை அனுப்பினான். ஆனால், கண்ணன் அந்த அசுரனை வதம் புரிந்து கேசவன் என்னும் பெயர் பெற்றான்.

பிறந்தினில் –  ஈணுதல்,   இல் – இல்லம், மனை, வீடு – கண்ணன் பிறந்த கோகுலத்தை இங்கு குறிக்கிறது.

கண்ணன் பிறந்தது மதுரா நகரின் சிறைச்சாலையில் என்றாலும் அது யசோதாவுக்குத் தெரியாது. அவள் கண்ணன் தனக்குப் பிறந்த குழந்தை என்றே நினைத்திருந்தாள்.

எண்ணெய் சுண்ணம் எதிரெதிர் தூவிட – கோகுலத்தில் கண்ணன் பிறந்த நன்னாளை முன்னிட்டு ஆயர்களனைவரும் நறுமண எண்ணெயையும் வண்ணப் பொடிகளையும் எதிர்படுவோர் அனைவர் மேலும் ஒருவர் மேல் ஒருவர் தூவி மகிழ்ச்சி ஆரவாரம் புரிந்தனர். (வளரும்)


என்றுமுள்ள செந்தமிழ்

பாதக் கமலங்கள் காணீரே பவளவாயீர்வந்து காணீரே!

(79)

இந்தப் புவியில் பிறந்தவர் கோடி, மறைந்தவர்  கோடி ஆனால்  வரலாற்றில் இடம் பிடித்தவர் மிகச்  சிலரே.

பெத்லகேமில் ஒரு மாட்டுத் தொழுவத்தில் ஏழைக் குடும்பத்தில்  பிறந்தவர்  இயேசு.   அவரது வளர்ப்புத் தந்தை ஒரு தச்சுத்தொழிலாளி. அவரும் வளர்ப்புத் தந்தையின் தொழிலான தச்சுத் தொழிலை இளவயதில்  மேற்கொண்டார். யூதர்கள் அவர்  தெய்வ நிந்தனை செய்தார் எனக் குற்றம்சாட்டி அவரை சிலுவையில் அறைந்து கொன்றார்கள். அவர் இறக்கும் போது அகவை 30 மட்டுமே.  ஆனால் இன்று அவரது பிறந்த நாள் உலகம் முழுதும் கொண்டாடப்படுகிறது.

இறைதூதர் மொகமது நபி மெக்காவில் பிறந்தவர். பிறக்கு முன் தந்தையார் இறந்து விட்டார். அவரது ஆறாவது அகவையில் தாயார் அமீனா இறந்து விட்டார். பின்னர் அவரது பாட்டனார் அப்துல் முத்தாலிப் அவர்களால் வளர்க்கப்பட்டார். மொமது நபிக்கு எழுதப் படிக்கத் தெரியாது. இருந்தும் அவரை இறைதூதர் என உலகம் போற்றுகிறது.

சித்தார்த்தன் என்ற பெயரைக் கொண்ட புத்தர் அரச குலத்தில் இன்றைய நேபாளத்திலுள்ள  லும்பினி என்னுமிடத்தில் பிறந்தவர். இவரது தந்தையார் பெயர் சுத்தோதனர். தாயார் மாயா சித்தார்த்தர் பிறந்த ஏழாவது நாளில் இறந்து போனார்.  அவரை சிற்றன்னை எடுத்து வளர்த்தாள். பதினாறு  அகவையில் கோலி நாட்டு மன்னன் மகள் யசோதரையை மணந்தார். இராகுலன் என்ற மகன் பிறந்தார்.

தனது 29 ஆவது அகவையில்  மானிட  வாழ்க்கையில் பிணி, மூப்பு, சாக்காடு  போன்ற துன்பங்களில் இருந்து  மனிதன் விடுபட்டுப்  பேரின்பப் பெருநிலையை எய்துவது எப்படி? இந்தக்  கேள்விக்கு விடை தேடும் பொருட்டு சித்தார்த்தர்  மனைவி, பிள்ளை, அரண்மனை வாழ்வு ஆகியவற்றைத் துறந்து துறவியானார். காடு, மேடு, தவம், விரதம், தியானம் என அலைந்தார். முனிவர்களை நாடினார். சுகபோகத்தில் அழுந்திக் கிடப்பதும் தக்க பலனைத் தராது; கடும் தவம் புரிவதும் தக்க பலனைத் தராது என்ற முடிவுக்கு புத்தர் வந்தார்.

தனது 35 ஆவது அகவையில்,  இந்தியாவின் தற்போதைய பீகார் மாநிலத்தில் உள்ள காயா எனும் இடத்தில் ஒரு அரச மரத்தின் கீழ் உறுதியான மனத்துடன்  “என்னுடைய உடம்பில் உள்ள தோல், சதை, இரத்தம், நரம்பு, எலும்பு முதலியவை உலர்ந்து வற்றிப் போனாலும் நான் புத்த பதவியை அடையாமல் இந்த இடத்தை விட்டு எழுந்திருக்க மாட்டேன்,” என்று உறுதியான எண்ணத்துடன் ஏழு நாட்கள் யோகத்தில் ஆழ்ந்தார். பின்னர்  பெருஞ்ஞான நிலையை அடைந்து புத்தரானார்.

யான் எனது என்னும் செருக்கை அறுத்து, ஆரா இயற்கை ஆவாவை நீக்கி, பேதமை அகற்றி, தீயவை அஞ்சி, எண்ணத்தில் தூய்மை கொண்டு, வினைத் தூய்மையையும் மேற்கொண்டு, மூத்த அறிவுடையார் தொடர்பில் இணைந்து வாழ ஒருவனை ஊக்குவிப்பதே புத்தரின்  போதனையாகும்.  இவரது பிறப்பு, ஞானம் பெற்ற நாள், இறப்பு மூன்றும் வைகாசி பவுர்ணமி நாளில் உலகம் முழுதும் கொண்டாடப்படுகிறது.

இந்தியத் திருநாட்டின் ஒட்டுமொத்த வரலாற்றில், தனிப்பட்ட ஒரு மனிதனோ, அல்லது நிகழ்வோ மிகப்பெரிய ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியிருக்கிறது என்று சொல்லமுடியாது. ஆனால் கோகுலத்தில் கண்ணனுடைய பிறப்பு இந்திய வரலாற்றில், இலக்கியத்தில், பண்பாட்டில், கலாசாரத்தில் என எல்லாவற்றிலும் ஒரு தாக்கத்தை உருவாக்கியுள்ளது. திருமாலின் அவதாரமான கண்ணன்  சமய தளத்தில் ஒரு  முக்கிய  இடத்தை பிடித்துள்ளார்.

பெரியாழ்வாரின் திருமொழி (முதல் பத்து) கண்ணனின் திரு அவதாரச் சிறப்பை  நவில்கிறது.   பெரியாழ்வார் தன்னை யசோதையாகவும் இறைவனைக் குழந்தையாகவும் பாவித்துப் பாடிய பாடல்கள் தான் பெரியாழ்வார் திருமொழி! ஒரு தாயின் மனநிலையை அப்படியே அச்சொட்டாகப்  பாடியுள்ளார்.
முதல் பாடலை சென்றமுறை பார்த்தோம். தொடர்ந்து  தேன்  தமிழில் பாடப்பெற்ற  இரண்டாவது பாடலைப் பார்ப்போம்.

இந்தப்  பாடல், கண்ணன் பிறந்ததால், ஆயர்களும் ஆய்ச்சியரும் எவ்விதம் மகிழ்ச்சி ஆரவாரம் புரிந்தனர் என்ற காட்சியை  நம் கண் முன் காட்டுவதாய் உள்ளது.

ஓடு வார்விழு வார் உகந் தாலிப்பார்
நாடு வார்நம்பி ரான்எங்குற் றானென்பார்
பாடு வார்களும் பல்பறை கொட்டநின்று
ஆடு வார்களும் ஆயிற்று ஆய்ப் பாடியே.                                (திருமொழி 2)

ஓடுவார் – கண்ணன் பிறந்துவிட்டான் என்ற செய்தியைக் கேட்டதும், ஆயர் குல ஆடவரும் பெண்டிரும் நந்தகோபருடைய மாளிகையை நோக்கி விரைந்து ஓடினர்;

விழுவார் – முதல் பாடலில் சொல்லியிருந்த வண்ணம், எண்ணெய் சுண்ணம் கலந்த கண்ணன் முற்றத்தில் இருக்கும் அளற்றில்(சேற்றில்) வழுக்கி விழுந்தனர்;

ஆயினும் அவர்கள் அதைப் பொருட்படுத்தாது, விரைந்தெழுந்து கண்ணனை நோக்கி ஓடினர்.

உகந்தாலிப்பார் – பெரும் மகிழ்ச்சி ஆரவாரக் கூச்சல் போட்டு ஒருவரை ஒருவர் உணர்ச்சிப் பெருக்கோடு தழுவித் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர்.
(உகந்தாலிப்பார் – உகந்து+ஆலிப்பார் – விரும்பி, மகிழ்ச்சியோடு + கூச்சலிடல், ஆரவாரம் செய்தல்)

கோகுலத்திலுள்ள எல்லோரும் தங்கட்குத் தலைவரான நந்தகோபர்க்குப் பிள்ளை பிறந்ததாகக் கேள்விப்பட்டு அளவற்ற  மகிழ்ச்சி அடைந்து  தாம் செய்வது இன்னதென்று தெரியாமல், சிலர் ஓடினார்கள்; சிலர் சேற்றிலே வழுக்கி விழுந்தார்கள்; சிலர் உரக்க  ஒலித்தார்கள்; சிலர் ‘நம் கண்மணி எங்கே?’ என்று குழந்தையைத் தேடினார்கள்; சிலர் பாடினார்கள்; சிலர் பறையடிக்க சிலர் அதற்கு ஏற்பக் கூத்தாடினார்கள்.  ஆயர்பாடியில் இருந்தவர்கள் எல்லோரும் அளவற்ற மகிழ்ச்சியில் மூழ்கியிருந்தார்கள்.

சீதக் கடல்உள் ளமுதன்ன தேவகி
கோதைக் குழலாள் அசோதைக்குப் போத்தந்த
பேதைக் குழவி பிடித்துச் சுவைத்துண்ணும்
பாதக் கமலங்கள் காணீரே பவளவாயீர்வந்து காணீரே!                    (திருமொழி 3)

வேதத்தில் . . . . . . . . (திருமாலின்  சிறந்த திருவடியில் தேன் வெள்ளமுண்டு) என்று சொல்லப்பட்டுள்ளது. இதை அடியொற்றி ஆழ்வார்களும் ‘‘தேனே மலரும் திருப்பாதம்’’ என்கிறார்கள். இப்படிப்பட்ட தனது திருவடியிலுள்ள தேனைப் பருகுவதற்காகவும் தனது திருவயிற்றில் கிடக்கும் உலகங்கட்கெல்லாம்  நன்மை உண்டாகும்படியாகவும் திருமால்  தனது திருவடிகளில் ஒன்றையெடுத்து வாயிலே வைத்துச் சுவை பார்த்துக் கொண்டிருக்க, அதைக் கண்ட யசோதைப் பிராட்டி தான் மிக மகிழ்ந்து, இதைப் பிறகும் கண்டு மகிழவேணும் என்றெண்ணித் தன்னருகிலுள்ளாரைக் கொண்டாடியழைத்து, ‘நீங்கள் இக்குழந்தை சுவைத்துண்ணும் இப்பாதக் கமலங்களைப் பாருங்கள்’ என்று அவர்கட்குக் காட்டுகின்றாள்.

கடலில் இரண்டு அமுதம் பிறந்தன; ஒன்று தேவர்களுக்கு போக்யமான உப்புச்சாறாகிய அம்ருதம்; அது புறவமுதமாம். மற்றொரு அம்ருதம். ‘‘அமுதில் வரும் பெண்ணமுது’’ எனப்பட்ட பிராட்டி: இவளே உள்ளமுதம். ஆகவே இங்கு ‘‘உள்ளமுதன்ன’’ என்றது பிராட்டியைப் போன்ற என்றபடியாயிற்று. ‘‘திருவின் வடிவொக்குந் தேவகி’’ என்று மேலுங் கூறுவர். பிராட்டியைப் போலவே சீலமாகவுள்ள தேவகி என்க.

பெரியாழ்வாரின் திருவாய்மொழிப்  பாடல்கள்  சத்தான  தமிழ்மொழிக்குக் கிடைத்த  ஒளிவிடும் முத்துக்கள். தமிழை அமிழ்து என்று  சிறப்பித்துச் சொன்னதே, பெரியாழ்வார் திருமொழியைப் படிச்சதுக்குப் பிறகுதானோ என  எண்ணத் தோன்றுகிறது.  ஆழ்வார்களின் பாடல்களை வைணவ (மாலியம்)  சமயப்பாடல்கள் என்று  சைவர்கள் ஒதுக்கிவிடாமல் அதன் இலக்கிய நயத்துக்காவது படித்து இன்புற வேண்டும். (வளரும்)


என்றுமுள்ள செந்தமிழ் 

தாமரைக் கண்ணனே தாலேலோ! 

(80) 

திருவாய்மொழி உட்பட, திவ்யப் பிரபந்தத் தொகுப்பில் உள்ள எல்லாப் பாடல்களும் (பாசுரங்களும்)  ”பத்து” என்று சொல்லப் படும் பதிகங்களாக வகைப் படுத்தப் பட்டுள்ளன. எல்லாப் பாடல்களும்  திருமால் பக்தியின் பல பரிமாணங்களைப் பேசுகின்றன. இருந்தும் ஒவ்வொரு “பத்து” க்கும் ஒரு குறிப்பிட்ட கருப்பொருள் (theme) உள்ளது. பத்தில் உள்ள அனைத்துப் பாடல்களும் அந்தக் குறிப்பிட்ட கருப்பொருளைச் சுற்றியே இருக்கும். முழுமையாக அந்தக் கருப்பொருள் தரும் அனுபவத்தில் திளைக்க இது வகை செய்கிறது.

பெரியாழ்வார் திருமொழியின் முதல் பத்தின் மூன்றாம் திருமொழி   ‘மாணிக்கம் கட்டி வயிரம் இடைகட்டி’ என்று தொடங்கும் பத்துப் பாடல்களைக் கொண்டது.
ஒரு குழந்தைக்குத் தாயாக இருப்பது எளிது. தந்தையாக இருப்பது மிகக் கடினம். ஏன் ?

தாய் என்பது இயற்கையாக இருப்பது. ஒரு தாய் தன் பிள்ளையை பத்து மாதம் வயிற்றில் சுமக்கிறாள். பின், தன் (அந்தக் காலத்துத் தாய்)  குருதியைப் பாலாக்கி பிள்ளைக்குத் தருகிறாள். அவளுக்கும் குழந்தைக்கும் உள்ள தொடர்பு உயிர் சார்ந்தது, ஊன் சார்ந்த்து, உடல் சார்ந்தது.

தந்தை அப்படி அல்ல. தந்தைக்கும் பிள்ளைக்கும் ஒரு தொடர்பும் இல்லை. ஒரு தந்தை பிள்ளை மேல் வைக்கும் பாசம் மிகக் கடினமானது. அவன் மிகுந்த முயற்சி செய்ய வேண்டும். தாயின் அன்பைக் காட்டிலும் தந்தையின் அன்பு மிக மிக உயர்வானது.

பெரியாழ்வார்  தன்னை கண்ணனின் தாயாகப் பாவனை செய்து  பாடல்கள் எழுதி இருக்கிறார். அவ்வளவும் இனிமையான பாடல்கள்.

பெரியாழ்வாரின் திருமொழியில் எதைக் கொள்வது எதைத் தள்ளுவது என்பது பெரிய சிக்கலாக இருக்கிறது. எல்லாமே பால், தெளிதேன்,  பாகு,  பருப்பு என இந்த நான்கும் கலந்த பண்டம் போல்  தித்திக்கின்றன.

கண்ணனது திருமேனி அழகு எப்படி இருக்கிறது?

முத்தும் மணியும் வயிரமும் நன்பொன்னும்
தத்திப் பதித்துத் தலைப்பெய்தாற் போல் எங்கும் 
பத்து விரலும் மணிவண்ணன் பாதங்கள் 
ஒத்திட்டு இருந்தவா காணீரே 
ஒண்ணுதலீர் வந்து காணீரே!     ( திருமொழி 3 – பாடல் 24)

முத்தும்              – முத்துக்களையும்
மணியும்            – இரத்நங்களையும்
வயிரமும்           – வஜ்ரங்களையும்
நல்பொன்னும்  – மாற்றுயர்ந்த பொன்னையும்
தத்திப்பதித்து   – மாறிமாறிப்பதித்து
தலைப்பெய்தாற்போல்  – சேர்த்தாற்போலே

எங்கும்                             – திருமேனியெங்கும்
மணிவண்ணன்               – மணிபோன்ற வர்ணத்தை யுடையனான கண்ணனுடைய
பாதங்கள்                         – திருவடிகளிலுள்ள
பத்து விரலும்                  – விரல் பத்தும்
ஒத்திட்டிருந்ஆ                –  ஒன்றோடொன்றெத்து அமைந்திருக்கும்படியை காணீர்!
ஒன் நுதலீர்                    – ஒளிபொருந்திய நெற்றியையுடையீர்கான்! வந்து காணீர்!

இந்தப் பாடலுக்கு மணிப்பிரவாள நடையில்  ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்  விளக்க உரை எழுதியுள்ளார்.

முதலடியில் சில இரத்னங்களைச் சொன்னது நவரத்னங்களுக்கும் உபலக்ஷணம். கோமேதகம், நீலம், பவழம், புட்பராகம், மரகதம், மாணிக்கம், முத்து, வைடூரியம், வைரம் என்பன நவரத்தினங்களாம்.  கால்களுக்கு இடுகின்ற செம்பஞ்சு மருதாணி என்பனபோல ஸ்ரீகிருஷ்ணனுடைய பாதங்களில் ஒன்பது விரல்களுக்கு நவரத்ன வர்ணத்தையும் மற்றொரு விரலுக்குப் பொன்னிறத்தையும் யசோதை இட்டு ‘என் மணிவண்ணனுடைய பாதங்களில் பத்து விரலும் – நவரத்னங்களையும் நல்ல பொன்னையும் ஒளிவிளங்க மாறிமாறிப் பதித்து வைத்தாற்போலச் சேர்ந்தனவாய் லக்ஷணங்களில் குறையொன்றுமில்லாமலிருப்பதை வந்து பாருங்கள் என்கிறாள்.

பொதுவாக எல்லோரும் இறைவனிடம் பொன் வேண்டும் பொருள் வேண்டும் பெண் வேண்டும்  நல்ல  உடல்நலம் வேண்டும்  என்று கேட்பார்கள்.

இரட்டைப் புலவர்கள் போல் சிலர்  இறைவனைத் திட்டவும் செய்வார்கள். உனக்கு எவ்வளவு பூசை செய்கிறேன்  அர்ச்சனை செய்கிறேன், அபிசேகம் செய்கிறேன் எல்லாம் செய்தேன், என்னை ஏன் இப்படி சோதிக்கிறாய், உனக்கு கண் இல்லையா,  காது இல்லையா உன் மனம் என்ன கல்லா என்று வைப்பவர்களும் உண்டு.

இறைவன் உண்டென்பார், இல்லை என்பார் நமக்கில்லை கடவுள் கவலை என்று என்னைப் போல் இருப்பாரும் உண்டு.

இந்தப் பாடல்களைப் படிப்பதால் தமிழின் சுவையை விட வேறு என்ன பயன்?

வானவெளியில் சிறகடித்துப் பறக்கும் சோலைக் கிளி, அழகிய மயில், பாடும் குயில், கடிமலர் வண்டு,  காதோரம் கவிதை பாடும் தென்றல், காலோரம் கதை பேசும் கடல் அலை, பால் போல்  நிலவு,  விரல் பிடிக்கும் பச்சை குழந்தையின் பிஞ்சுக் கைகள், வாசம் வீசும் தாமரை மலர்.. …..இவற்றை எல்லாம் பார்பதால் என்ன பயனோ அதே பயன்தான்.

இறைவனை தொட்டிலில் இட்டு தாலாட்டித் தூங்கப் பண்ணுகிறார் ஆழ்வார்….இறைவனுக்கு தாய் இல்லை என்ற குறையை போக்குகிறார்…இந்தப் பத்துப் பாடல்களில் திருவாய்ப்பாடியில் எம்பெருமான் கண்ணன் பிறந்திருந்த போது அவனை தாலேலோ பாடி யசோதை தாலாட்டியதைக் கூறுகிறார் பெரியாழ்வார்.

மாணிக்கம் கட்டி வயிரம் இடை கட்டி
ஆணிப்பொன்னால் செய்த வண்ணச் சிறுதொட்டில்
பேணியுனக்குப் பிரமன் விடுதந்தான்
மாணிக்குறளனே தாலேலோ!
வையம் அளந்தானே தாலேலோ!                     (3 ஆம் திருமொழி – பாடல் 44)

மாணிக்கங்களை இருபுறமும் கட்டி இடையில் வயிரங்களைக் கட்டி மாற்றில்லாத ஆணிப்பொன்னால் செய்த அழகிய சிறிய தொட்டிலை மிகவும் விருப்பமுடன் பிரமன் உனக்காகத் தந்தான்! உன்னுடைய உடைமைகளை இரந்து பெறுவதற்காக குள்ள மாணவனாக வந்த கண்ணனே தாலேலோ! உன்னுடைமைகளான மூவுலகங்களையும் பெற்ற மகிழ்ச்சியில் திரிவிக்கிரமனாக வளர்ந்து உலகங்களை எல்லாம் அளந்தவனே தாலேலோ!

மேலும் ஒரு தாலாட்டுப் பாட்டு.

என் தம்பிரானார் எழில் திருமார்வர்க்கு 
சந்தம் அழகிய தாமரைத் தாளர்க்கு 
இந்திரன் தானும் எழிலுடைக் கிண்கிணி 
தந்துவனாய் நின்றான் தாலேலோ 
தாமரைக்கண்ணனே தாலேலோ !                                (3 ஆம் திருமொழி – பாடல் 46)

என் தலைவனான அழகிய திருமார்பை உடைய, மணமும் விரிவும் நிறமும் அழகிய தாமரையைப் போல் உள்ள திருவடிகளை உடைய உனக்கு மூவுலகங்களுக்கும் தலைவனான இந்திரனும் அழகினை நிலையாக உடைய கிண்கிணியைத் தந்து உன் பெருமையை எண்ணி விலகி நிற்காமலும் உன் எளிமையை எண்ணி அணுகி நிற்காமலும் தகுந்த தொலைவில் உவனாக நின்றான் தாலேலோ! தாமரைக் கண்ணனே தாலேலோ!

அவன் என்று சுட்டும் படி விலகி நிற்கவில்லை. இவன் என்று சுட்டும் படி அணுகி நிற்கவில்லை. உவன் என்று சுட்டும்படி தனக்குத் தகுந்த தொலைவில் இந்திரன் நின்றான்.

ஆணிப்பொன்  –  மதிப்பில் உயர்ந்த பொன்; தூய பொன்; மாற்றுப்பொன் (பொன்னின் தரத்தை மதிப்பிடப் பயன்படும் ஒப்பீட்டுப் பொன்)
இந்தப் பாடலை பி. உன்னிகிருஷ்னன் நீலாம்புரி  இராகத்தில் பாடியிருக்கிறார். கீழேயுள்ள  முகவரியில் கேட்டு மகிழுங்கள்.

http://punnikrishnan-priya-sisters.blogspot.ca/2012/09/manickam-katti-vayiram-idaikatti.html  (வளரும்)


About editor 3017 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply