வட மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் பதவி விலகக் கூடாது! பதவி விலகல் சிக்கலுக்குத் தீர்வாகாது!
நக்கீரன்
வட மாகாண சபையின் செயல்பாடுகள் மற்றும் அமைச்சரவை நியமனங்களைப் பார்க்கும்போது மாகாண சபை உறுப்பினர் பதவியையே இராஜினாமாச் செய்யும் துர்ப்பாக்கிய முடிவினை எடுக்கும் நிலமைக்கு இட்டுச் செல்வதாக வட மாகாண எதிர்க் கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார்.
மக்களாட்சி முறைமையில் எதிர்க்கட்சி ஒரு அச்சாணி போன்றது. அன்றைய காலத்தில் அரசனை இடித்துப் புத்திமதி சொல்ல நல்ல அமைச்சர்கள் இருந்தார்கள். இன்று மன்னர் ஆட்சியில்லை. மக்கள் ஆட்சி நடைபெறுகிறது. இடித்துச் சொல்ல அமைச்சர்கள் இல்லை. அவர்கள் இடத்தில் எதிர்க்கட்சி இருக்கிறது.
வட மாகாண சபை, குறிப்பாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் வினைத் திறன் அற்றவர் என்று காரணம் காட்டி எதிர்க்கட்சித் தலைவர் தனது பதவியில் இருந்து விலக நினைப்பது சரியான முடிவல்ல. சபையில் இருந்து கொண்டு அங்கு நடைபெறும் குறைபாடுகளை தொடர்ந்து துணிச்சலோடு எடுத்துச் சொல்ல வேண்டும்.
குளத்தோடு கோபித்துக் கொண்டு குண்டி கழுவாமல் விட்டவன் போல முதலமைச்சர் மீதுள்ள அதிருப்தி காரணமாக சபையில் இருந்து வெளியேறுவது புத்திசாலித்தனம் அல்ல.
விக்னேஸ்வரனின் அரசியல் வருகை பிள்ளையார் பிடிக்க குரங்கான கதையாகி விட்டது என்பது உண்மையே. வட மாகாண சபை குரங்கு கை பூமாலை ஆகிவிட்டது.
பதவிக்கு வந்த பின்னர் விக்னேஸ்வரன் கடைந்தெடுத்த பொய்களை சொல்லி வருகிறார். “நான் தமிழரசுக் கட்சியின் ஆதரவில் தேர்தலில் வெல்லவில்லை. எனது சொந்தப் பலத்திலேயே வென்றேன். மக்கள் ஆதரவோடு வென்றேன்” என தேர்தலில் வென்று முதலமைச்சராகிவிட்ட சொற்ப காலத்தில் பகிரங்கமாக அறிவித்தார்.
தேர்தலின் போது நான் ஓய்வூதியம் எடுப்பவன் எனவே செலவழிக்க என்னிடம் பணம் இல்லை என்று பல்லவி பாடியபோது சம்பந்தன் ஐயாதான் பணத்துக்கு ஒழுங்கு செய்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு(கனடா)தான் பல இலட்சங்களை தேர்தல் செலவுக்கு கொடுத்து உதவியது. பின்னர் அந்த அமைப்பு ஒழுங்கு செய்த விருந்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளுமாறு அழைத்த போது “எனக்கு முதுகில் புண். நெடுந்தூரம் விமானப் பயணம் செய்ய முடியாது. பிறிதொரு முறை வருகிறேன்” என்றார். அதன்பின் இரண்டு மாதம் கழித்து அமெரிக்கா, இங்கிலாந்து எனப் பறந்து சென்று பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இது நன்றி கொன்ற செயல் எனச் சுட்டிக்காட்டிய போது நீங்கள் நல்ல தமிழ் எழுதுகிறீர்கள் எனப் பதில் அளித்தார்.
வெள்ளை வேட்டி, உருத்திராட்சக் கரை போட்ட சால்வை, நெற்றியில் பட்டை, குங்கும், வெண்தாடி போன்ற குறியீடுகளைப் பார்த்து முதலமைச்சர் ஒரு யோக்கியவான் என மக்களில் ஒரு சாரார் நினைக்கிறார்கள். தமிழ் அரசுக் கட்சிக்கு குழி தோண்ட நினைப்பவர்கள் தங்களுக்கு ஒரு வெட்டியான் கிடைத்துவிட்டதாக மகிழ்ச்சி அடைகிறார்கள். புலம்பெயர் நாடுகளில் தலைவர் வருவார் என தொடர்ந்து பேசிக் கொண்டு இருப்பவர்கள் விக்னேஸ்வரனை ஏந்தி எடுக்கிறார்கள். தாங்கு தாங்கென்று தாங்குகிறார்கள். தோளில் சுமக்கிறார்கள்.
அண்மையில் மாற்றுத் தலைமை தேவையில்லை என்று விக்னேஸ்வரன் சொன்னார். ஆடிச் சொன்னாரா ஆடாமல் சொன்னாரா என்பது தெரியவில்லை. நேரத்துக்கு நேரம் தனது நிலையை மாற்றிக் கொள்வதில் அவர் வல்லவர். நாளை இதனை மறுக்கலாம். காரணம் அவரது பழைய வரலாறு.
“தமிழ் மக்களுக்கு மாற்றுத் தலைமைக்கு ஒருபோதும் இடமில்லை, ஒற்றுமையே பலம்” என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் கடந்த யூலை 11இல் கனேடியத் தூதுவர் ஷெல்லி வைற்னிங் அம்மையாரைச் சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறினார்.
தமிழ்மக்களுக்கு மாற்றுத் தலைமை அவசியம் என்றும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மாற்றுத்தலைமையை ஏற்க வேண்டும் என்றும் யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட ஒரு கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டதை சுட்டிக்காட்டி முதலமைச்சரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இதற்குப் பதிலளித்த முதலமைச்சர் விக்னேஸ்வரன்,
“அவ்வாறான ஒரு நிலைப்பாட்டுக்கு இடமில்லை. தற்போதைய தலைமைத்துவத்தில் ஒற்றுமையாகச் செயற்படுவதே எமது பலம்.
நாம் முக்கியமானதொரு காலகட்டத்தில் இருக்கிறோம். எமது அரசியல் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்.
இந்தச் சந்தர்ப்பத்தில் எமது முரண்பாடுகள் குரோதங்களை முன்வைத்து பிரிவுகளை ஏற்படுத்துவது எமக்கு நல்லதல்ல. இங்கு எந்தவிதமான பிரிவினைகளுக்கும் இடமில்லை” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
பேச்சுப் பல்லக்கு தம்பி கால்நடை என்பது போல தமிழரசுக் கட்சித் தலைவர்களோடு பேசி இணக்கம் காணப்பட்ட முடிவை மீறி கல்வி அமைச்சர் பதவிக்கு க. சர்வேஸ்வரனை (இவரை சபையைக் குழப்பும் இருவரில் ஒருவராக முதலமைச்சர் சபையில் இனம் காட்டியிருந்தார். மற்றவர் சிவாஜிலிங்கம்) நியமித்தார். கல்வி அமைச்சர் பதவியைத் துறக்கு முன்னர் தமிழ் அரசுக் கட்சி சார்பாக இந்தப் பதவியை த.குருகுலராசா வகித்திருந்தார். அவரது இடத்துக்கு தமிழரசுக் கட்சி இமானுவேல் ஆனோல்டை பரிந்துரை செய்தது. அதனை தலைக்கனம் பிடித்த விக்னேஸ்வரன் புறந்தள்ளி விட்டார். இது போலவே ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உள்ளாகியுள்ள அனந்தி சசிதரனுக்கு அமைச்சர் பதவி கொடுத்துள்ளார்.
நம்பிக்கையில்லாத் தீர்மானம் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருந்த போது டக்லஸ் தேவானந்தாவோடும் பேசினார். ஆனால் அதெல்லாம் சரிவராது என்று தெரிந்த போது மாட்டின் வீதியில் உள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்துக்கு ஓட்டமும் நடையுமாகச் சென்று சரண் அடைந்தார். சமரசம் பேசினார். கட்சியோடு கலந்தாலோசித்துவிட்டுத்தான் புதிய அமைச்சர்கள் நியமனம் என்றார்.
இப்போது நம்பிக்கையில்லாத் தீர்மானம் திருப்பிப் பெறப்பட்டதால் வேதாளம் மீண்டும் முருக்க மரத்தில் ஏறிவிட்டது!
முதலில் அமைச்சர்கள் ஊழல் செய்தார்கள் என்றார். பின்னர் அவர்களது அமைச்சில் ஊழல் இடம்பெறவில்லை, நிருவாக முறைகேடுதான் நடந்தது என்கிறார்.
முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர் நியமித்த ஆணைக்குழு இரண்டு அமைச்சர்களை குற்றமற்றவர்கள் என தீர்ப்பு அளித்தது. ஆனால் முதலமைச்சர் விடவில்லை. மறு விசாரணை வைக்கப் போவதாகச் சொன்னார். குறித்த அமைச்சர்கள் மாகாண சபைக்கு வெளியே அமைக்கப்படும் விசாரணைக் குழுவுக்கு வருகை தரமாட்டோம், ஒரு தெரிவுக் குழுவை அமைத்தால் அதன் முன் தோன்றி சாட்சியம் அளிக்க அணியமாக இருக்கிறோம் என்றார்கள். இதனால் வெகுண்டெழுந்த முதலமைச்சர் பா.டெனீஸ்வரனின் இடத்தை நிரப்ப ரெலோ அமைப்பிடம் ஒருவரை பரிந்துரை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தார். ரெலோ அமைப்பு விந்தன் கனகரத்தினத்தின் பெயரை பரிந்துரை செய்து இருக்கிறது. இதனால் தங்களை புனிதர்களாகக் காட்டிக் கொள்ளும் ரெலோ கட்சிக்குள் மோதல் வெடித்துள்ளது.
விந்தன் கனகரத்தினம் அமைச்சராக நியமிக்கப்பட்டால் மொத்தம் உள்ள 4 அமைச்சர்களில் மூவர் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள்.
வட மாகாண சபை பொருளாதார வளர்ச்சியில் கடைசி இடத்தில் இருக்கிறது. இலங்கை மத்திய வங்கியின் புள்ளிவிபரங்களின்படி (2015) நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP இல்) 40 விழுக்காட்டுக்கும் மேலான பங்கு மேல்மாகாணத்தில் இடம்பெறுகிறது. மிகுதி எட்டு மாகாணங்களில் தென், மத்திய மற்றும் வடமேல் ஆகிய மூன்று மாகாணங்களும் கூட்டாக 30 விழுக்காட்டைப் பெறுகின்றன (தலா 10%) . எஞ்சிய மாகாணங்களில் வடமாகாணம் நாட்டிலேயே ஆகக்குறைந்த மூன்று வீதத்தையும் அதற்கு அடுத்தநிலையில் ஊவா மாகாணம் ஐந்து வீதத்தையும் அடுத்து கிழக்கு மாகாணம் ஆறு வீதத்தையும் பெறுகின்றன. இந்தப் போக்கு நீண்ட காலமாக இடம்பெறுகிறது என்பதைக் குறிப்பிடவேண்டும். இன்றைய சூழலில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் சமூக, பொருளாதாரரீதியில் இலங்கையின் மிகப் பின்தங்கிய மாகாணங்களில் அடங்குகின்றன. இது நீண்ட போரின் விளைவாக ஏற்பட்ட பொருளாதார அழிவுகள் ஒரு காரணமாக இருந்தாலும் அதனை நிவர்த்தி செய்ய முதலமைச்சர் எந்தத் திட்டங்களையும் மேற்கொள்ள வில்லை. மூன்று ஆண்டுகளில் 337 தீர்மானங்களை நிறைவேற்றி இருப்பதே வட மாகாண சபையின் வளர்ச்சி எனலாம்.
வட மாகாணத்தின் அரசியல் மற்றும் நிருவாகக் குழப்பங்கள் நிலவுகிறது. முதலமைச்சர் பெரும்பான்மை (21) உறுப்பினர்களின் நம்பிக்கையை இழந்த நிலையில் அவரால் எதையும் செய்ய முடியாமல் இருக்கிறது.
அவரது ஆட்சியில் வட மாகாணசபையிடம் மக்களின் பங்குபற்றலுடன் உருவாக்கப்பட்ட ஒரு அபிவிருத்தித் திட்டம் இல்லை. அத்தகைய ஒரு திட்டம் உருவாக்கப்பட்டிருக்கவேண்டும். அரசியல் வேறு பொருளாதார அபிவிருந்தி வேறு. அரசியல் பற்றி அரசோடு சண்டை பிடித்துக் கொள்ளலாம். ஆனால் பொருளாதார அபிவிருத்தி அப்படியல்ல. அரசோடு ஒட்டி உறவாடித்தான் காரியத்தை சாதிக்க வேண்டும்.
ஆனால் விக்னேஸ்வரன் சண்டைக் கோழி போல எல்லோருடனும் சண்டை பிடிக்கிறார். நாட்டின் பிரதமரோடு சண்டை. நாட்டின் சனாதிபதியோடு சண்டை, தமிழரசுக் கட்சியோடு சண்டை, அமைச்சர்களோடு சண்டை. நால்வகை உத்திகளில் தண்டத்தை மட்டும் முதலமைச்சர் கையில் வைத்துக் கொண்டு சதிர் ஆடுகிறார்.
அமைச்சர்கள் மத்திய அமைச்சர்களோடு நேரடியாகப் பேசி நிதியுதவி பெறுவதை விக்னேஸ்வரன் விரும்பவில்லை. மருமகள் தாலி அறுந்தாலும் பருவாயில்லை மருமகன் சாக வேண்டும் என நினைக்கும் மாமியார் போல முதலமைச்சர் நடந்து கொள்கிறார்.
முன்னுக்குப் பின் முரணான பேச்சு, கொடுத்த வாக்குறுதியை மீறல் அவரை ஒரு அரசியல் பச்சோந்தியாகக் காட்டுகிறது.
முதலமைச்சர் பிள்ளையானோடு வட மாகாண முதலமைச்சரை ஒப்பிடும் போது பிள்ளையான் நிருவாகம் மெச்சத்தக்கதாக இருந்தது. இவ்வளவிற்கும் பிள்ளையான் ஒரு முன்னாள் போராளி. பள்ளியில் பத்தாம்தரத்தைக் கூட தாண்டவில்லை. இதில் இருந்து ஒரு உண்மை தெரிகிறது. படித்தவர்கள் எல்லோரும் கெட்டிக்காரர்கள் என்று பொருள் கொள்வது பொருந்தாது. முதலமைச்சர் விக்னேஸ்வரனே அதற்குக் சாட்சி.
வட மாகாண சபை ஏனைய மாகாணங்களுக்கு ஒரு எடுத்துக் காட்டாக ஒரு முன்மாதிரியாக இருக்கும் என மக்கள் எதிர்பார்த்தார்கள். அது நடக்கவில்லை.
இந்தச் சூழ்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா தனது பதவியையும் உறுப்புரிமையையும் துறப்பது மக்களுக்கு செய்யும் துரோகமாகும்.
சிக்கல்களைக் கண்டு பயந்து ஓடிவிடாமல் சிக்கல்களுக்கு துணிச்சலோடு முகம் கொடுப்பனே சிறந்த அரசியல்வாதி ஆவான்.
Leave a Reply
You must be logged in to post a comment.