விக்னேஸ்வரனுக்கு தமிழ் அரசுக் கட்சித் தலைமை படித்துக் கொடுத்திருக்கும் பாடம்! – நக்கீரன்
தமிழ்மக்கள் விக்னேஸ்வரனுக்கு உணர்த்தியிருக்கும் பொறுப்பு – நிலாந்தன்
June 25, 2017
மக்களிடம் செல்லுங்கள்.
மக்களுடன் வாழுங்கள்.
மக்களிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள்.
மக்களை அன்பு செய்யுங்கள்.
அவர்களுக்கு தெரிந்தவற்றிலிருந்து ஆரம்பியுங்கள்.
அவர்களிடம் இருப்பவற்றிலிருந்து கட்டி எழுப்புங்கள்.
ஆனால் சிறந்த தலைவர்களோடு சேர்ந்து திட்டமிடப்பட்ட
வேலை முடிந்ததும், இலக்கு எட்டப்பட்டதும்
மக்கள், ‘நாம் இவற்றை செய்தோம்’ என்று கூறுவார்கள்.
-சீன தத்துவவியலாளர் லாஓ ற்சூ
(1) இரண்டு தரப்பிற்கும் நோகாமல் வடமாகாண சபை விவகாரம் தீர்க்கப்பட்டிருக்கிறது. விக்னேஸ்வரன் தனது நீதியையும், பதவியையும் தக்கவைத்துக் கொண்டார். சம்பந்தர் தமிழரசுக்கட்சியை பாதுகாத்துக் கொண்டார்.
பதில்: விக்னேஸ்வரன் தனது நீதியையும், பதவியையும் தக்கவைத்துக் கொண்டார் என்பது சரி. “மக்களாகிய உங்களது ஆதரவுடன் நான் ஆட்சி செய்வேன்” என மேடையில் வீர வசனம் பேசிய விக்னேஸ்வரன் மாகாண சபையில் மக்கள் அல்ல மக்களது பிரதிநிதிகள்தான் வாக்களிப்பார்கள் என்பதை வசதியாக மறந்துவிட்டார். அப்படி வாக்களிக்கும் போது தனது பதவி பறிபோகும் என்ற ஞானம் விக்னேஸ்வரனுக்கு காலம் கடந்து வந்துள்ளது. அதனால் தனது பதவியைக் காப்பாற்ற முருங்க மரத்தில் இருந்து இறங்கி வந்தார் என்பதுதான் யதார்த்தம். சம்பந்தர் தமிழரசுக்கட்சியை பாதுகாத்துக் கொண்டார் என எந்த அடிப்படையில் சொல்லப்படுகிறது? எதைவைத்துச் சொல்லப்படுகிறது? தமிழரசுக் கட்சி கொண்டு வந்த தீர்மானம் நிறைவேறாது என்ற அடிப்படையிலா?
(2) பதவி கவிழ்க்கப்பட்டால் அடுத்தது என்ன என்பது தொடர்பில் விக்னேஸ்வரனிடம் துணிகரமான தரிசனம் எதுவும் இருந்ததோ இல்லையோ தெரியவில்லை. தன்னை சந்தித்த மதகுருக்கள் சிலரிடம் தான் யாழ்ப்பாணத்தில் நிற்கத் துணிந்து விட்டதாக கூறியுள்ளார். இந்த மக்களை விட்டு போகப் போவதில்லை என்ற தொனிப்படவும் கதைத்திருக்கிறார். ஆனால் அவர் ஒரு நிறுவன உருவாக்கி அல்ல. வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு வீதியில் இறங்கி ஒரு கட்சியைக் கட்டியெழுப்பத் தேவையான வாழ்க்கை ஒழுக்கம் அவரிடம் இல்லை. எனினும் தமிழரசுக்கட்சி ஏற்படுத்திய நிர்பந்தம் அவரை மாற்று அணியை நோக்கி தள்ளிவிடக் கூடாது என்று சம்பந்தர் சிந்தித்திருக்க முடியும்.
பதில்: மாற்று அணியை நோக்கி விக்னேஸ்வரன் எப்போதோ தள்ளப்பட்டுவிட்டார். 2015 ஓகஸ்ட் மாதம் நடந்த தேர்தலில் அவர் மறைமுகமாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியை ஆதரித்தார். கொழும்பில் இருந்து கொண்டு ஒன்றுக்கு இரண்டு அறிக்கைகளையும் விட்டார். தனக்கு நெருக்கமானவர்களிடம் “அதற்கென்ன ததேமமு இல் இருந்து இரண்டு மூன்று பேர் நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டால் என்ன நட்டம்” என்ற தோரணையில் தனக்கு நெருக்கமானவர்களிடம் பேசினார். ஆனால் மக்கள் தீர்ப்பு வேறுவிதமாக இருந்தது. கஜேந்திரகுமாரின் தமிழ்க் காங்கிரஸ் கட்சி தேர்தலில் கட்டுக் காசை இழந்தது. யானைக் கட்சி கூட சைக்கிளை மிதித்து விட்டது. அதன் பின்னர்தான் தனது முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்தன் போல விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் பேரவையைத் தொடங்கினார். அதன் கதை, வசனத்தை புலம்பெயர் வன்னியின் மிச்சங்கள் எழுதிக் கொடுத்தார்கள்.
(3) நம்பிக்கை இல்லாத் தீர்மானம் விக்னேஸ்வரனை கதாநாயகராக்கிவிட்டது. அவர் கவிழ்க்கப்பட்டால் ஒரு தியாகியாக்கப்பட்டிருப்பார். அது அவருக்குள்ள ஜனவசியத்தை மேலும் கூட்டியிருந்திருக்கும். சாதாரண தமிழ் மனோநிலைக்கூடாக பார்த்தால் விக்னேஸ்வரன் தியாகி என்றால் அவரை கவிழ்க்க முயன்ற தமிழரசுக்கட்சி துரோகி என்றுதானே பொருள்? எனவே தனது கட்சியின் பெயர் கெடுவதை தவிர்ப்பதற்கும் அல்லது தமிழரசுக்கட்சி உடைவதை தடுப்பதற்கும் அதே சமயம் விக்னேஸ்வரன் தியாகியாக்கப்படுவதை தடுப்பதற்கும் சம்பந்தருக்கிருந்த ஒரே வழி ஏதோ ஒரு புள்ளியில் இணக்கத்தை காண்பதுதான்.
கொழும்பில் உள்ள சக்திமிக்க நாடுகளின் தூதுவர்கள் விக்கினேஸ்வரனை அகற்றுவதற்கு இது பொருத்தமான நேரமல்ல என்றும் அதற்குக் கூறப்படும் காரணமும் பொருத்தமானதல்ல என்றும் கருதியதாக தெரிகிறது. விக்னேஸ்வரனை அரங்கில் இருந்து அகற்றுவது மேற்படி நாடுகளுக்கும் விருப்பம்தான். ஆனால் அவரை தியாகியாக்கும் விதத்தில் கவிழ்ப்பது சில சமயம் அவரைப் பலப்படுத்திவிடக் கூடும் என்று அவர்கள் சிந்தித்திருக்கலாம். இரண்டு சக்தி மிக்க நாடுகளின் தூதுவர்கள் கூட்டமைப்பின் தலைவரோடு தொடர்பு கொண்டதாக ஒரு தகவல் உண்டு. இத்தகைய ஓர் பின்னணிக்குள் தான் சம்பந்தர் விக்னேஸ்வரனோடு ஓர் இணக்கத்திற்கு வர எத்தனித்தார்.
பதில்: இது முட்டாள்த்தனமான வாதம். விக்னேஸ்வரன் இப்போது கதாநாயகனாக இல்லை வில்லனாகப் பார்க்கப்படுகிறார். அநீதிக்குத் துணைபோன நீதவானாகப் பார்க்கப்படுகிறார். ஊழலை மறைக்கப் பார்த்து முடியாத கட்டத்தில்தான் விக்னேஸ்வரன் மே 19 இல் கிடைத்த அறிக்கையை சபையில் யூன் 14 இல் தான் படித்தார். விக்னேஸ்வரனை பதவியில் இருந்து இறக்கினால் எப்படி தமிழ் அரசுக் கட்சி உடையும்? தமிழரசுக் கட்சிக்குள் யாராவது (பேராசிரியர் சிற்றம்பலத்தை விட்டு விடுவோம். தனக்கு நியமன எம்பி பதவி கிடைக்கவில்லை என்ற கோபத்தில் சேராத கூட்டத்தோடு சேர்ந்திருக்கிறார்) விக்னேஸ்வரனை ஆதரித்து குரல் கொடுத்தார்களா? நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிகரமான நிறைவேற்றப்பட்டு விக்னேஸ்வரன் பதவி நீக்கம் செய்யப்பட்டிருந்தால் அவர் தப்பினேன் பிழைத்தேன் என்று கொழும்புக்கு ஓடியிருப்பார். அவரிடம் ஒரு அரசியல் கட்சியை நடத்தக் கூடிய இராஜதந்திரம், உழைப்பு, விடாமுயற்சி கடுகளவும் கிடையாது. மகாணசபையில் எழுந்துள்ள குழப்பத்துக்கு விக்னேஸ்வரனே முழுப் பொறுப்பு என்று சம்பந்தர் அவரை சாடியிருந்தார். குற்றவாளிகள் அல்லர் என விசாரணைக் குழு தீர்ப்பளித்த அமைச்சர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை விக்னேஸ்வரன் நீக்காவிட்டால் சிக்கலுக்கு தீர்வு இல்லை என சம்பந்தர் மிகத் தெளிவாக சுட்டிக் காட்டியிருந்தார். காரணம் இந்தச் சிக்கலுக்கு விக்னேஸ்வரனே காரணகர்த்தாவாக இருந்ததுதான். சம்பந்தர் இந்தச் சிக்கலைத் தீர்த்து வைத்தற்குக் காரணம் புதிய யாப்பு உருவாக்கம்தான். சம்பந்தரின் கவனம் முழுதும் இந்தப் புதிய யாப்பை உருவாக்குவதில்தான் இருக்கிறது. தமிழர் தரப்பு இந்தத் தரணத்தில் தனது கவனத்தை சிதறடிக்கக் கூடாது என்பதில் சம்பந்தர் உறுதியாக இருக்கிறார். வெளிநாட்டு இராஜதந்திரிகளும் தமிழர் தரப்பு பிழவு படுவதை விரும்பவில்லை. ஆனால் கட்சிக்குள் சம்பந்தர் விக்னேஸ்வரனை தொடர்ந்து காப்பாற்றி வருகிறார் என்ற ஆதங்கம் இருக்கிறது.
(4) விக்னேஸ்வரனுக்கு எதிரான அணி சம்பந்தரைச் சந்தித்த பொழுது அவர் தனது அதிருப்தியை வெளிக்காட்டியிருக்கிறார். ‘சபை குழப்பிகளாக’ இருக்கக் கூடாது என்று சுட்டிக்காட்டியுள்ளார். நாங்களே கொண்டுவந்த ஒருவரை நீக்கச் சொல்லி ஏன் போய் ஆளுனரிடம் கேட்டீர்கள்? என்ற தொனிப்பட கேட்டிருக்கின்றார். விக்னேஸ்வரனைப் பற்றிய முறைப்பாட்டுக்களை கேட்டுவிட்டு அவற்றை மாகாண சபைக்குள்ளேயே தீர்த்திருக்க வேண்டும் என்ற தொனிப்படக் கதைத்திருக்கிறார். இப்படி பார்த்தால் சம்பந்தருக்கு தெரியாமலேயே அல்லது அவருடைய பூரண சம்மதம் இன்றியே ஓர் உள்ளோட்டம் ஓடியிருக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாமா?
பதில்: இது கட்டுரையாளரின் கற்பனை. இப்படிக் குருவி சாத்திரம் சொல்வதில் அவர் வல்லவர் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டியுள்ளது. இது தொடர்பா கடந்த வாரம் கட்டுரையாளர் எழுதிய ஒரு கட்டுரையின் தலைப்பு “ஆப்பிழுத்த தமிழரசுக் கட்சி” என்பதாகும். உண்மையில் ஆப்பிழுத்தது யார்? இந்தச் சிக்கலை உருவாக்கியவர் யார்? மூக்குடைபட்டது யார்? இப்போது விக்னேஸ்வரன் ஏன் படியிறங்கி வந்தார்? இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் ஏன் தமிழரசுக் கட்சித் தலைவரை கட்சி அலுவலகத்தில் சந்தித்து கதைத்தார்? தொடக்கத்தில் விக்னேஸ்வரன் தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராசாவோடு பேசித் தீர்க்குமாறுதான் சம்பந்தர் கேட்டுக் கொண்டார். காரணம் தான் தற்போது கட்சியின் ஒரு மூத்த உறுப்பினர், முன்னாள் தலைவர் மட்டுமே என்று தெரிவித்தார்.
(5) சம்பந்தருக்கு முழுமையாக தெரியாமல்தான் நம்பிக்கையில்லாத் தீர்மானம் முன்னகர்த்தப்பட்டது என்று கூறப்படுவது குறித்தும் விக்கினேஸ்வரனுக்கு மாவை.சோனாதிராசாவின் தொலைபேசி எண் தெரியாது என்று கூறப்படுவது குறித்தும் இக்கட்டுரைக்குச் சந்தேகங்கள் உண்டு. கடந்த சில வாரங்களுக்குள் கூறப்பட்ட நம்பக்கடினமான இரண்டு கூற்றுக்கள் இவை.
பதில்: இராமனுக்கே சீதைமீது சந்தேகம் வந்தபோது நிலாந்தனுக்கும் அப்படியான சந்தேகம் வந்ததில் வியப்பில்லை. நம்பிக்கைகயில்லாத் தீர்மானம் மாகாணசபையில் விக்னேஸ்வரன் எஞ்சிய இரண்டு அமைச்சர்கள் மீது மீள் விசாரணை நடைபெறும் என்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் ஒரு மாத கால விடுப்பில் போகவேண்டும் என்றும் ஒரு சர்வாதிகாரி போல் நடந்ததை அடுத்து அதே நாள், அதே இரவு நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. சம்பந்தர் அதனை அறிந்திருக்கவில்லை என்பது சரியே.
(6) எதுவாயினும் ஒரு சமரசத்திற்கு வரவேண்டிய தேவை இரண்டு தரப்பிற்குமே ஏற்பட்டது. யார் இறங்கி வருவது என்பதில் பரஸ்பரம் தயக்கம் காணப்பட்டது. எனவே மதப்பெரியார்கள் தலையிட்ட பொழுது இரண்டு தரப்புமே அதை இறுகப் பற்றிப் பிடித்துக்கொண்டனர்.
பதில்: தமிழ் அரசுக் கட்சியை விட விக்னேஸ்வரனுக்கே அந்த நிர்ப்பதந்தம் பலமாக இருந்தது. குற்றவாளிகள் அல்லர் என விசாரணைக் குழு அளித்த தீர்ப்பை மீறி இரண்டு அமைச்சர்களள் மீது தண்டனை விதித்ததே விக்னேஸ்வரன் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கான ஒரே காரணமாகும். அந்தத் தண்டனையை விலக்காவிட்டால் சிக்கலுக்குத் தீர்வு இல்லை என சம்பந்தர் மிகத் தெளிவாக விக்னேஸ்வரனுக்கு எழுத்து மூலம் அறிவித்திருந்தார். தமிழரசுக் கட்சி இறங்கி வரவேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை.
(7) எனினும் அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மாகாண நிர்வாகத்தைக் கொண்டிழுப்பதில் விக்கினேஸ்வரன் மேலும் பல தத்துக்களைக் கடக்க வேண்டியிருக்கும். புதிய அமைச்சர்கள் நிர்வாகத்தை கொண்டிழுப்பதில் நடைமுறை சவால்கள் சிலவற்றை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று ஒரு முன்னாள் அமைச்சர் சொன்னார். ஊழல் தொடர்பாகவும் முறைகேடுகள் தொடர்பாகவும் தங்கள் மீது குற்றச்சாட்டுக்கள் வந்துவிடக்கூடாது எனும் எச்சரிக்கையுணர்வுடன் அமைச்சர்கள் செயற்பட வேண்டியிருக்கும். இது அவர்களை எப்போதும் தற்காப்பு நிலையிலேயே வைத்திருக்கும் என்றும் அவர் சொன்னார். அவர்கள் தங்களுக்கு கீழ் வேலை செய்யும் அதிகாரிகளுக்கும் பயப்படவேண்டியிருக்கும். இப்படி பயந்து பயந்து அமைச்சை நடாத்த முடியாது. எனவே ஒன்றரை வருடத்தை எப்படியாவது ஓடிக் கடந்து விடுவோம் என்றே அவர்கள் சிந்திப்பார்கள் என்று ஒரு மூத்த அதிகாரி சொன்னார்.
பதில்: நமோ என அமைச்சர் ஐங்கரநேசன் மீது சாட்டப்பட்ட ஊழல் தொடர்பாக விசாரணை வேண்டும் எனக் கேட்டவர்கள் தமிழரசுக் கட்சியினர்தான். விக்னேஸ்வரன் தனது விசுவாசியான ஐங்கரநேசன் மீது நடவடிக்கை எடுக்காமல் இழுத்தடித்த காரணத்தாலேயே சபை ஒரு தீர்மானத்தை ஒரு மனதாக நிறைவேற்ற வேண்டி வந்தது. உண்மையில் விக்னேஸ்வரனது இலக்கு நல்வாழ்வு அமைச்சர் மருத்துவர் சத்தியலிங்கம் மீது குவிந்திருந்தது. அமைச்சர் ஐங்கரநேசனை காப்பாற்ற விக்னேஸ்வரன் மெத்தப் பாடுபட்டார். அவரை வைத்துக் கொண்டு, அவரைப் பார்த்து “பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது” என்று விக்னேஸ்வரன் பேசியது அவரது உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்திவிட்டது.
(8) விக்கினேஸ்வரனால் ஆயுதப் போராட்ட அமைப்புக்கள் என்று முன்பு வர்ணிக்கப்பட்ட கட்சிகளைச் சேர்ந்த பதின்மூன்று உறுப்பினர்கள் தான் அவரோடு பக்க பலமாக நின்றார்கள். தூய மிதவாதிகள் என்று தங்களைப் பெருமையாகக் கூறிக்கொண்ட கட்சியைச் சேர்ந்தவர்கள் அவருக்கு எதிராக நின்றார்கள். சமரச முயற்சிகளின் போதும் மூன்று முன்னாள் ஆயுதப் போராட்ட அமைப்புக்களே முன்னின்று உழைத்தன. மாகாணசபை இப்பொழுது இரண்டாகப் பிளவுண்டு காணப்படுகிறது. தீர்க்கப்படாத கோபம், அவமானம் வெப்பியாரம் என்பன உள்னே கனன்றுகொண்டேயிருக்கின்றன. மாகாண சபை அது இழந்த கூட்டுணர்வை இனிமேலும் திரும்பப் பெறுமா என்பது சந்தேகமே. ஓர் ஆன்மிகவாதியாகவும், நீதிபதியாகவும் விக்னேஸ்வரன் எந்தளவிற்கு விட்டுக் கொடுத்து மன்னித்து நடப்பார், பழிவாங்காமல் அரவணைத்து நடப்பார் என்பவற்றில்தான் எஞ்சியிருக்கும் ஒன்றரை ஆண்டு காலம் தங்கியுள்ளது. எனினும் பதவி விலகாத இரண்டு அமைச்சர்கள் மீதான விசாரணை முடிவுகள் மற்றொரு நெருக்கடியை கொடுக்கக்கூடும். அப்பொழுதும் அவர் ஒரு நீதிபதியாக செயற்படுவாரா? இல்லையா?
பதில்: இப்போதல்ல இந்த மூன்று முன்னாள் ஆயுதக் குழுக்களும் எப்போதும் தமிழ் அரசுக் கட்சிக்கு எதிரானவைதான். குறிப்பாக இபிஎல்ஆர்எவ்வை சொல்ல வேண்டும். சென்ற தேர்தலில் சம்பந்தனையும் சுமந்திரனையும் ஓரங்கட்ட வேண்டும் என்றும் அதனைச் செய்து முடிப்பதற்கு வேண்டிய தேர்தல் நிதியைத் தனது புலம்பெயர் நண்பர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் மின்னஞ்சல் மூலம் கேட்டிருந்தார். எதிரிக்கு எதிரி நண்பன் என்ற முறையில் விக்னேஸ்வரனை இந்த மூன்று முன்னாள் ஆயுதக் குழுக்களும் ஆதரித்தது என்பதுதான் உண்மை. இதில் தமிழரசுக் கட்சியின் தூண்களில் ஒருவராக இருந்த அமரர் தர்மலிங்கம் அவர்களின் படத்தைக் காட்டி வாக்குச் சேகரித்த சித்தார்த்தனும் சேர்ந்து கொண்டதுதான் கொஞ்சம் வியப்பு. போரில் வி.புலிகள் தோற்கடிக்கப்பட்டதில் கணிசமான பங்கு புளட் அமைப்புக்கு உண்டு என்று மார்தட்டியவர் சித்தார்த்தன் என்பதையும் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.
(9) அவர் ஒரு நீதிபதியாகவோ ஆன்மீகவாதியாகவோ மட்டும் செயற்பட்டால் போதாது. அதற்குமப்பால் அவர் ஓர் உறுதியான தலைவராகவும் செயற்பட வேண்டியிருக்கிறது என்பதைத்தான் கடந்த சில வாரகால நிகழ்வுகள் நிரூபித்திருக்கின்றன.மாகாண நிர்வாகத்துக்கு மட்டுமல்ல,தமிழ் மக்களின் எதிர்காலத்திற்கும் அது அவசியம். அவர் கவிழ்க்கப்படப் போகிறார் என்று கேள்விப்பட்டதுமே மக்கள் அவரை நோக்கிக் குவிந்தார்கள். சமூக வலைத்தளங்களில் விடுக்கப்பட்ட அறிவிப்பை அடுத்து சில மணி நேரங்களில் 300க்கும் குறையாதோர் கைதடியில் கூடினார்கள். அவர்களின் பெரும்பாலானவர்கள் நல்ல பொறுப்பிலுள்ள அரச ஊழியர்கள் என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.
பதில்: விக்னேஸ்வரன் ஆன்மீகவாதியா? யார் சொன்னது? ஒரு கொலை மற்றும் பதின்மூன்று இளவயது மொட்டுக்களை கசக்கிப் பிழிந்த பாலியல் குற்றத்துக்காக இரட்டை ஆயுள்தண்டனை பெற்ற பிரேமானந்தாவின் சீடன் ஆன்மீகவாதியா? அந்த பாலியல் ஆசாமிக்கு மாங்குளத்தில் கோயில் கட்டி கும்பிடுகிறவர் ஆன்மீகவாதியா? விக்னேஸ்வரனின் இந்த இருண்ட பக்கத்தைப் ஏன் கட்டுரையாளர் பார்ப்பதில்லை?
(10) அடுத்த நாள் கர்த்தால் என்று அறிவிக்கப்பட்டது. அதே சமயம் ஓர் எதிர்ப்பு பேரணி நல்லூரில் இருந்து புறப்பட்டு விக்கினேஸ்வரனுடைய வசிப்பிடத்தைச் சென்றடையும் என்று அறிவிக்கப்பட்டது. யாழில் தற்போது வெளிவரும் பிரதான பத்திரிகைகளில் இரண்டு அவருக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து செய்திகளையும், கருத்துக்களையும் பிரசுரித்துக்கொண்டிருந்த ஒரு பின்னணியில், கடையடைப்பின் காரணமாய் தனியார் போக்குவரத்து முற்றாக ஸ்தம்பித்திருந்த ஒரு பின்னணிக்குள் 1000க்கும் குறையாத பொதுமக்கள் நல்லூரடியில் திரண்டார்கள். இவர்களில் பெரும்பாலானோர் படித்த அரசியல் விளக்கமுள்ள நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுள் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மாணவர்கள், செயற்பாட்டாளர்கள், மதகுருக்கள், கருத்துருவாக்கிகள் ஊடகவியலாளர்கள் என்று பலதரப்பட்டோரையும் காண முடிந்தது.
அன்றைய தினமும் அதற்கு அடுத்தடுத்த நாட்களிலும் யாழ். கோவில் வீதியில் அமைந்திருந்த விக்கினேஸ்வரனின் வாசஸ்தலத்திற்கு முன்னால் வாகனங்களையும், ஊடகவியலாளரையும் தொடர்ச்சியாக காண முடிந்தது. சமய பெரியார்களும், புத்திஜீவிகளும் பாதிக்கப்பட்ட மக்களின் அமைப்புக்களைச் சேர்ந்தோரும் அவரை தொடர்ச்சியாக சந்தித்தனர். நாங்கள் உங்களோடு நிற்போம் எனும் செய்தி விக்கினேஸ்வரனுக்கு அழுத்தமாகவும், உணர்ச்சிகரமாகவும் தெரிவிக்கப்பட்டது. இவ்வாறான சந்திப்பு ஒன்றின் பொழுது தான் கவிழ்க்கப்பட்டாலும் வடக்கை விட்டு போகப்போவதில்லை என்பதை விக்கினேஸ்வரன் தன்னைச் சந்தித்த சமய பெரியார் சிலரிடம் கூறியிருக்கிறார்.
அதே சமயம் இதற்கு முற்றிலும் முரணான ஒரு காட்சியை தான் யாழ். மாட்டின் வீதியிலுள்ள தமிழரசுக்கட்சியின் தலைமையகத்தில் காண முடிந்தது. அங்கே பெருமளவிற்கு அரசியல்வாதிகளையும், கட்சி உறுப்பினர்களையும்தான் காண முடிந்தது. பொது அமைப்புக்களைச் சேர்ந்தவர்களையும், மத அமைப்புகளைச் சேர்ந்தவரையும் அங்கே பெரும்பாலும் காண முடியவில்லை. இந்த காட்சி முரணை இன்றைய காலகட்டத்தின் அரசியல் குறிகாட்டி எனலாம். கோவில் வீதியில் கூடியவர்கள் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு தமது அனுதாபத்தையும், ஆதரவையும், சகோதரத்துவத்தையும் தெரிவிப்பவராய் காணப்பட்டார்கள். அதே நேரம் மாட்டின் வீதியில் கூடியோர் ஏதோ ஒரு அரசியல் வியூகத்தை வகுக்க எத்தனிப்பவர் போல் காணப்பட்டார்கள். இவ்வாறு கோவில் வீதியில் கூடிய உணர்ச்சிவசப்பட்ட ஆதரவாளர்களில் ஒரு தொகுதியினர் மாட்டின் வீதியை முற்றுகையிடப் போவதாக ஒரு வதந்தியும் கிளப்பப்பட்டது. ஆனால் அப்படியேதும் நடக்கவில்லை.
எனவே நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்கொள்வதற்கு வேண்டிய பலத்தை விக்கினேஸ்வரனுக்கு குறிப்பாக மூன்று தரப்புக்கள் வழங்கின. முதலாவது அவரை நோக்கிக் குவிந்த மக்கள். இரண்டாவது அவரை ஆதரித்த முன்னாள் ஆயுதப் போராட்ட அமைப்புக்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும். மூன்றாவது தமிழ் மக்கள் பேரவையும் ஏனைய சிவில் மற்றும் மத அமைப்புக்களும் ஊடகங்களும்;. இவை தவிர மற்றொரு தரப்பும் உண்டு. அது தமிழரசுக்கட்சிக்குள் காணப்பட்ட முதலமைச்சரின் ஆதரவாளர்கள். இவர்களிற் பலர் அக்கட்சியின் பாரம்பரிய ஆதரவாளர்கள். ஒரு கட்சியாகச் சிந்திக்கும் பொழுது அவர்கள் விக்கினேஸ்வரனை வெளிப்படையாக ஆதரிக்கவில்லை. ஆனால் ஊழலுக்கெதிரான நீதியை நிலைநாட்டிய காரணத்திற்காக அவர் கவிழ்க்கப்படுவதை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. சில சமயம் முதலமைச்சர் கவிழ்க்கப்பட்டிருந்தால் தமிழரசுக் கட்சிக்குள் இருந்தும் ஓரணி அவரை வெளிப்படையாக ஆதரித்துக் கொண்டு அவர் பக்கம் வந்திருக்கும். இப்படிப் பார்த்தால் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தையொட்டி ஒரு புதிய அணித்திரட்சிக்கான சூழ்நிலை கனியத் தொடங்கியது. அதற்குப் பின்பலமாக பொதுசன அபிப்பிராயமும் உணர்ச்சிகரமாக திரளத் தொடங்கியது. விக்கினேஸ்வரன் அதற்குத் தலைமைத் தாங்கத் தயாராக இருந்திருந்தால் ஒரு மாற்று அணிக்குரிய ஒப்பீட்டளவில் பலமான ஒரு அடித்தளம் போடப்பட்டிருந்திருக்கும்.
ஆயின் நம்பிக்கையில்;லாத் தீர்மானத்தை பின்னெடுத்ததன் மூலம் ஒரு மாற்று அணியை நோக்கிய வேகத்திரட்சி வெற்றிகரமாகத் தடுக்கப்பட்டிருக்கிறது என்று எடுத்துக்கொள்ளலாமா? அப்படியொரு மாற்று அணி உருவாகுவதை தமிழரசுக் கட்சி மட்டுமல்ல அரசாங்கமும் வெளித்தரப்புக்களும் விரும்பவில்லை. யாப்புருவாக்க முயற்சிகள் மெது மெதுவாக அவற்றின் அடுத்த கட்டங்களை நோக்கி போகக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் ஓர் அரசியல் சூழலுக்குள் விக்கினேஸ்வரனை எப்படிப் பலவீனப்படுத்தலாம் என்றே மேற்படித் தரப்புக்கள் சிந்தித்திருக்கலாம்.
பதில்: தமிழரசுக் கட்சிக்கு மாற்று அணியை உருவாக்க வேண்டும் என்பதுதான் இந்தக் கட்டுரையாளரின் ஆசை. அது நிறைவேறவில்லை என்றவுடன் புலம்பத் தொடங்கியுள்ளார். மூன்று முன்னாள் ஆயுதக் குழுக்கள் மட்டும் அல்ல தமிழ்மக்கள் பேரவையின் உருவாக்கத்தின் பின்னால் இருக்கும் வன்னிக் கட்டமைப்பின் மிச்சங்கள் என எல்லோரது ஆசையும்
தமிழரசுக் கட்சியை தோற்கடிக்க வேண்டும் என்பதுதான். கஜேந்திரகுமார் என்ற நெண்டிக் குதிரையை நம்பிப் பயனில்லை என்ற முடிவுக்கு வந்த நிலாந்தன் போன்றோர் இப்போது விக்னேஸ்வரனை பஞ்ச கல்யாணிக் குதிரை என நினைத்து அதில் ஏறிச் சவாரி செய்ய நினைக்கிறார்கள். இதுதான் இன்றைய அரசியல் யதார்த்தம். இந்தக் கட்டுரையாளர் சென்ற நாடாளுமன்றத் தேர்தல் காலத்திலும் இந்தத் தோரணையில்தான் எழுதினார். தமிழரசுக் கட்சி தேர்தலை மையப்படுத்தி அரசியல் செய்யவில்லை. எமது மக்களின் உரிமைகளை இராஜதந்திர வழிகளில் உலக நாடுகளின் ஆதரவோடு வென்றெடுக்க தமிழரசுக் கட்சித் தலைமை பாடுபடுகிறது. பெரும்பான்மை மக்களுக்கு அது விளங்கும். எதற்கும் தேர்தல் வரட்டும். எமது மக்கள் அதீத புத்திசாலிகள் என்பது அப்போது புரியும்.
(11) இத்தகையதோர் பின்னணிக்குள் தனது மெய்யான நண்பர்கள் யார்? தனக்கு உண்மையான ஆலோசகர்கள் யார்? தன்னோடு நிலைத்து நிற்கும் அமைப்புக்கள் எவை? சாதாரண சனங்களின் அன்பு எப்படி இனிக்கும்? எப்படிக் கண்ணீரை வரவழைக்கும்? என்பவற்றை கண்டுபிடிக்கத் தேவையான ஓர் அனுபவத்தை விக்கினேஸ்வரன் கடந்த இரண்டு வாரங்களில் பெற்றிருப்பார் என்று நம்பலாம். வடமாகாண ஆளுநர் குரே எள்ளலாகக் கூறியது போல நடந்த குழப்பங்கள் ஒரு கிரிக்கெட் போட்டியைப் போன்றவையல்ல. அவை தெளிவான இரண்டு அரசியல் செயல் வழிகளுக்கு இடையிலான மோதல்களே.
மாகாணசபைத் தேர்தலின் போது தமிழ் மக்கள் விக்கினேஸ்வரனுக்கு ஒரு தெளிவான ஆணையை வழங்கினார்கள். கடந்த இரு வாரங்களின் போதும் தமிழ்மக்கள் அவருக்கு மற்றொரு ஆணையை வழங்கியிருக்கிறார்கள். தமிழ் மக்கள் தனக்கு வழங்கிய ஆணைகளுக்கு அவர் பொறுப்புக் கூற வேண்டும். தன்னை நம்பித் தெருவில் இறங்கிய மக்களுக்கு அவர் பொறுப்புக் கூற வேண்டும். பொறுத்த நேரத்தில் தன்னைப் பாதுகாத்த இயக்கங்களுக்கும், அமைப்புக்களுக்கும் ஊடகங்களுக்கும் தனி நபர்களுக்கும் அவர் பொறுப்புக் கூற வேண்டும்.அல்லது அவருடைய கொள்ளளவை விடக் கூடுதலாக அவரிடம் எதிர்பார்த்து ஏமாந்து விடக்கூடாது என்பதையாவது அவர் தமிழ் மக்களுக்குத் தெளிவாகக் கூறிவிட வேண்டும்.
பதில்: இப்படி எழுதுவதால் கட்டுரையாளருக்கு அற்ப மகிழ்ச்சி ஏற்படுமாயின் அதனை நான் கெடுக்க விரும்பவில்லை. சென்ற தேர்தலில் மக்கள் ததேகூ, முக்கியமாக தமிழ் அரசுக் கட்சிக்குத்தான் ஆணை வழங்கினார்கள். தனிமனிதன் விக்னேஸ்வரனுக்கு அல்ல என்பது அரசியலில் பாலபாடம் படித்தவர்களுக்கு விளங்கும். தமிழ் அரசுக் கட்சிச் செயலாளர் நாயகம் விக்னேஸ்வரது பெயரை முதலமைச்சர் பதவிக்கு ஆளுநருக்கு பரிந்துரை செய்த காரணத்தாலேயே அவர் முதலமைச்சராக நியமிக்கப்பட்டார். இப்போது அதே செயலார் நாயகம் ஆளுநருக்கு கடிதம் எழுதி அவரை அவரது பதவியில் இருந்து விலக்குமாறு கேட்பதற்கும் சட்டத்தில் இடம் உண்டு என்பதை மறந்துவிடக் கூடாது.
Leave a Reply
You must be logged in to post a comment.