மருத்துவம் நலமா? – நிஜமும் நிழலும் – 21 – குடி நோய்க்கு எது மருந்து?
டாக்டர் வெ.ஜீவானந்தம்
வேட்டையாடச் சென்ற மனிதன் இரண்டு நாள்கள் கழித்துத் திரும்பி, பழைய கஞ்சியைக் குடித்தபோது, ஒரு வகையான போதையும் மகிழ்ச்சியும் அடைந்து பரவசப்பட்டான். இப்படி உருவானதுதான் மது. தென்னை, பனையின் பாளையில் இருந்து சொட்டிய நீரில் போதை கண்டான். ‘ரிஷிகள் சோம பானத்தில் இறைநிலை பெற்று மிதந்தனர்’ என்கின்றது வேதம். மது என்பது மனதை லேசாக்குவதுடன், மகிழ்ச்சித் தேடலின் ஒரு பகுதியாகவும் இருந்துள்ளது.
மித மிஞ்சிய குடியால் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு அழிய, அத்துடன் முடிந்தது கிருஷ்ணரின் யாதவ குலம். புளிக்காத திராட்சை ரசத்தைத் தன் ரத்தம் என்று தேவகுமாரன் அருளியதாகக் கூறும் விவிலியம், மதுவின் கேட்டை எச்சரிக்கிறது. பண்டை அரபுக் கவிதைகள் திராட்சை ரசத்தின் போதையைக் கொண்டாடிப் பாடியபோதும், நபிகள் நாயகம் ‘மது அருந்துவது பாவம்’ என எச்சரிக்கிறார். இப்படி ஒருபுறம் மகிழ்ச்சியின் வழியாக மனிதகுலம் கொண்டாடிய மதுவை, மறுபக்கம் நல்லோர்கள் ‘கேடு’ எனச் சாடியுள்ளனர். எனினும், மனிதனின் தற்காலிக மகிழ்ச்சி நாடலை எதுவும் தடுத்து நிறுத்திவிட முடியவில்லை.
மதுவை ஒழிக்கும் முயற்சிகளை ஒவ்வொரு நாடும் மேற்கொண்டு, பிறகு ஒரு கட்டத்தில் கை விட்டுள்ள முன்மாதிரிகளை அமெரிக்காவில் துவங்கி கேரளம் வரை காண்கிறோம். மது பற்றிய மூட நம்பிக்கைகள் பல. மகிழ்ச்சி வருமெனக் குடிக்கத் துவங்கியவர்கள் பலரின் வாழ்வு துக்கத்தில் முடிந்துள்ளது. பசி வருமெனக் குடித்தோர், பசியிழந்து ஒரு கவளம் சோறுகூட விழுங்க முடியாமல் தவித்துள்ளனர். நல்ல தூக்கம் வருமென எண்ணிக் குடித்தோர், ஊரே உறங்கும்போதும் உறக்கமின்றிப் பைத்தியம் போல அலைந்துள்ளனர். உடலுறவு இச்சை பெருகுமெனக் குடித்தோர், செயலற்ற மலடர்கள் ஆகியுள்ளனர். இவ்விதமாக மது என்பது மாயக் கானல் நீரைக் காட்டி, மனிதகுலத்தை ஏய்த்துக்கொண்டே உள்ளது. ஏமாளிகள், கானல் நீரைத் தேடிப் பாலையிலேயே ஓடி முடிக்கிறார்கள்.
ஐரோப்பியர்கள், தாம் காலடி எடுத்துவைத்த ஒவ்வொரு நாட்டின் மன்னரையும் மதுவாலேயே வீழ்த்தினர். ‘இந்திய மிளகுக்கும், ஏலத்துக்கும், கிராம்புக்கும், வைரங்களுக்கும் மாற்றாக மது ஜாடிகளையே தந்தனர்’ என்கின்றன வரலாற்று ஆவணங்கள். சீனாவை அடிமைப்படுத்தவே இந்தியாவையும் ஆப்கானிஸ்தானையும் அபினி உற்பத்தி மண்ணாக்கினர் பிரிட்டிஷார். அதன் எச்சமாகவே இப்போது இந்தியாவில் வடித்த சாராயத்தை ‘அன்னிய நாட்டு மது’ என்று பெருமையுடன் குடித்துச் சாகிறோம்.
‘மது குடலை எரிக்கும், நரம்பைத் தளர்த்தும், மூளையைக் குழப்பும், ஆண்மையைப் பறிக்கும், பசியைப் போக்கும், ஈரலைக் கெடுக்கும், குடும்பத்தை அழிக்கும், உயிரைக் குடிக்கும்’ என்றெல்லாம் அச்சடித்து ஒட்டிக்கொண்டே சாராயக் காசில் ஓடுகிறது அரசு. குடும்பத்துக்கு இலவச அரிசி தந்து தகப்பனுக்கு வாய்க்கரிசி போடுகிறது அரசு.
அறப் போதனைகள், அரசின் சட்டங்கள், குடும்பத்தின் கண்ணீர்… அனைத்தையும் பயனற்றதாக்குகிறது மது. குடிப்பவன் என்பவன் வெறுமனே குடிகாரன் இல்லை. ‘குடி ஒரு நோய், அளவின்றிக் குடிப்பவன் ஒரு குடி நோயாளி’ என்கிறது உலக சுகாதார நிறுவனம். யார் ஒருவர், தான் குடிக்கும் மதுவின் அளவு, தரம், குடிக்கும் சூழல், நேரம், இடம், விளைவுகள் பற்றிய அக்கறை இன்றிக் குடிக்கிறாரோ, அவரை ‘குடிநோயாளி’ என்கிறோம். ‘களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க் குளித்தானைத் தீத்துரீஇ அற்று’ என்கிறார் வள்ளுவர். ‘குடிப்பவனை மீட்க நினைப்பது, நீரில் மூழ்கியவனைத் தீவட்டி கொண்டுத் தேடிச் செல்வது போன்ற செயல்’ என்பது பொருள்.
ஆனால், வள்ளுவரின் வாக்கைப் பொய்யாக்குகிறது போதை நீக்க மருத்துவம் (De-addiction). கட்டுப்பாடற்ற குடிநோயாளியைக் குடியின் தீய விளைவுகளிலிருந்து மீட்கும் அறிவியல் ரீதியிலான இந்த மருத்துவம், குடிநோயாளிக்குப் புது வாழ்வு தருகிறது. இதில் பலநிலை சிகிச்சைகள் உள்ளன. முதலாவதாக, மதுவினால் உண்டான உடற்பாதிப்புகளைச் சரி செய்யும் மருத்துவம், வயிற்றுப் புண்ணைச் சரிசெய்து நன்கு சாப்பிட வைப்பது, கை நடுக்கத்தை நிறுத்தி நரம்புகளைப் பலப்படுத்துவது, உறக்கமின்மையைப் போக்கி நல்ல தூக்கத்தைப் பெறச் செய்வது, மனக்குழப்பங்களையும் கெட்ட கனவுகளையும் போக்கி மனத் தெளிவை உண்டாக்குவது, ஈரல் பாதிப்பால் உண்டான மஞ்சள் காமாலையைப் போக்குவது… இவைதான் முதல்கட்ட சிகிச்சை.
இவற்றைத் தொடர்ந்து மனக்குழப்பம், பயம், பிரமை, மன அழுத்தம், குற்ற உணர்வு, தற்கொலை உணர்வு போன்ற மனப் பாதிப்புகளைச் சரிசெய்யும் மருந்துகளும் ஆலோசனைகளும் வழங்கும் மனநல மருத்துவம் தருவார்கள்.
மூன்றாவதாக, குடியால் பாதிக்கப்பட்ட குடும்ப உறவுகளைச் சரிசெய்ய, குடும்ப உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கிச் சீர்செய்வார்கள். இழந்த பாசம், பிரிந்த குடும்ப உறவுகளைத் தகுந்த ஆலோசனைகள் மூலம் படிப்படியாகச் சரிசெய்து குடும்பத்தில் நல்லுறவை மீட்பார்கள்.
நான்காவதாக, குடியால் பாதிக்கப்பட்டு நொறுங்கிப் போன சமூக உறவுகளைச் சீர்படுத்தி, சமூக கௌரவத்தை மீட்டு, சுயமரியாதையும் சமூகப் பொறுப்பும் உள்ள சமூக மனிதராக மாற்றுவது. இவற்றின் இறுதியாக மதுவுக்கு வெறுப்பையும் ஒவ்வாமையையும் வளமாக்கி, மீறிக் குடித்தால் வாந்தி எடுக்கச் செய்யும் டைசல்ப்யூரம் மாத்திரை தொடர்ந்து ஓராண்டு காலம் தரப்படுகிறது. இவையெல்லாம் வெற்றிகரமாக நிகழ்ந்தால், அந்தக் குடிநோயாளி புதுமனிதனாக மறுஜென்மம் எடுப்பார்.
இதற்குப் பெரிதும் துணை நிற்பது, ‘ஆல்கஹாலிக் அனானிமஸ்’ எனும் குடியை நிறுத்தியோர் சங்க உறவே. 120 ஆண்டுகளுக்கு முன்பு, குடியினால் பாதிக்கப்பட்ட பாப், பில் எனும் இருவர் தமக்குள் தமது உணர்வுகளையும் துயரங்களையும் பகிர்ந்து கொண்டு, குடியற்ற வாழ்வுக்கான மனநிலையைப் பெற்றனர். இதன் விளைவாக இந்த அமைப்பு உருவானது. இன்று உலகம் முழுவதும், குடியை நிறுத்தி நலவாழ்வு மேற்கொள்வோர்க்கு உதவும் தொண்டு நிறுவனமாகச் செயல்படுகிறது. இதற்குத் தலைவர் இல்லை, நிர்வாகக் குழு இல்லை, விதிமுறைகள் இல்லை, தேர்தல் இல்லை, கட்டணமில்லை, சொத்துகள் இல்லை. எனினும் உலகம் முழுவதும் வருடத்தின் அனைத்து நாட்களிலும் செயல்பட்டு வருகிறது. சாதி, மதம், பணம், படிப்பு, பதவி என எந்த வேறுபாடுமற்ற சமரச சமத்துவ சன்மார்க்க சபை இது. ‘நான் குடியற்ற வாழ்க்கையை விரும்புகிறேன். குடியைவிட்டு விலக விரும்பும் நண்பர்களுக்கு உதவுவேன்’ என்பதே இதில் பங்கேற்கும் ஒவ்வொருவரின் லட்சியம்.
மது, குடிப்பவரை மட்டுமின்றி அவரது குடும்பம், அவர் சார்ந்த சமூகம் என அனைத்தையும் பாதிப்பதாக உள்ளது. இதயநோய், விபத்து, புற்றுநோய்க்கு அடுத்து அதிகமாக உயிர்களை அற்ப ஆயுளில் பலிகொள்ளும் மோசமான நோயாக உள்ளது. எனினும், மருத்துவப் படிப்பில் இதுபற்றிய விரிவான பாடமும் கவனமும் இல்லாமல் உள்ளது. இப்போதைய மருத்துவ நூலில்கூட மிகச்சில பக்கங்களில் மட்டுமே இதுபற்றிப் பேசப்பட்டுள்ளது. மருத்துவர்களில் பலர் இது ஒரு நோய் என்றோ, இதற்கு முறையான மருத்துவம் தேவையென்றோ, மதுவை முற்றாக நிறுத்துவதைத் தவிர மாற்று வழி ஏதுமில்லை என்பதையோ அறியாதவர்களாகவே உள்ளனர். ‘படிப்படியாக நிறுத்து’ என்று தவறாக வழிகாட்டும் மருத்துவர்களும் உள்ளனர்.
சர்க்கரைக் கசடைச் சாராயமாக்கி, பல நூறு கோடி ரூபாய் வருமானம் பெறும் அரசு, அதில் ஒரு பகுதியை மதுவால் பாதிக்கப்பட்டோரை மீட்டெடுக்கும் மறு வாழ்வு இல்லங்களைத் தொடங்கச் செலவிடலாம். முதலமைச்சர் மருத்துவ உதவித் திட்டத்தில், மதுபோதையிலிருந்து மீட்கும் மருத்துவத்தையும் இணைத்து நிதி வழங்கலாம். மருத்துவக் கல்வியில் இதன் சமூக முக்கியத்துவத்தை உணர்த்த, விரிவாக சிறப்புப் பயிற்சியை வழங்கலாம். அரசு மருத்துவமனைகளில், மது போதை மறுவாழ்வு மருத்துவத்துக்காக சிறப்பு வார்டுகளைத் தொடங்குவது மிகவும் பயனளிப்பதாக இருக்கும். முள் மரத்தை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும் என்பது போலப் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மது மற்றும் போதைப் பழக்கங்களின் கேடு பற்றிய விழிப்பு உணர்வூட்டும் கல்வி தரப்பட வேண்டும்.
மது ஒரு சமூக நோய். இதை ஒழிக்க மருத்துவர்களின் பங்கு மட்டும் போதாது. மொத்த சமூகமும் இக்கேட்டை ஒழிக்கும் உணர்வு பெற்றதாக மாற்றப்படுவது அவசியம்.
படம்: எல்.ராஜேந்திரன்
(நலம் அறிவோம்)
http://www.vikatan.com/article.php?track=prnxt&mid=module&aid=132077
Leave a Reply
You must be logged in to post a comment.