நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமரின் ஒருதலைப்பட்ச அறிக்கைக்கு மறுப்பு!

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமரின் ஒருதலைப்பட்ச அறிக்கைக்கு மறுப்பு!

நக்கீரன்

2017-06-16

முதலமைச்சர் விக்னேஸ்வரனை பதவி நீக்குவது எமது கண்களை நாமே குத்திக் கொள்ளும் செயல்! நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கண்டனம்!!

வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் C.V விக்னேஸ்வரன் அவர்கள் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மான முயற்சி குறித்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தனது கவலையையும் கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, முதலமைச்சருக்கு ஆதரவாகத் தமிழ் அமைப்புகளும் மக்களும் முன்னெடுக்கும் போராட்டங்களுக்கும் தனது தோழமை கலந்த ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது.

தமிழ் மக்களின் அபிமானம் பெற்றவொரு தலைவராகவும் மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும்; ஒருவராகவும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் விளங்குகிறார். அவரை பதவிநீக்கம் செய்ய முயல்வது எமது கண்களை நாமே குத்திக் கொள்ளும் செயலாகவே அமையும்.

பதில்: அது சரியென்றால்  விசாரணைக் குழு  நான்கு அமைச்சர்களில் இரண்டு பேர் குற்றமற்றவர்கள் என்று தீர்ப்பளித்த பின்னரும் மீண்டும்  ஒரு விசாரணைக் குழுவை நியமிப்பது எந்தவகை நியாயம்? நீதி?  விசாரணைக் குழுவை நியமித்தாலும் எதற்காக அந்த இரண்டு அமைச்சர்களும் விடுப்பில் போக வேண்டும் என்றும் அந்த இரண்டு அமைச்சர்களின் பொறுப்பை தானே கையேறபதாகச் சொல்ல வேண்டும். இது  முதலமைச்சர் தானே தனது கண்களை குத்திக்கொள்வது போல்  இல்லையா?  முதலமைச்சருக்கு ஒரு நீதி தமிழரசுக் கட்சிக்கு இன்னொரு நீதியா? எது செய்தாலும்  நாலு அமைச்சர்களையும் அரவணைத்துப் போவதுதான் முதலமைச்சருக்கு அழகு. எந்த முடிவெடுத்தாலும் அமைச்ரவையில் கலந்தாலோசித்து முடிவு எடுக்க வேண்டும். அதுதான் அவரது கடமை. விசாரணை அறிக்கை கிடைத்த பின்னர் அதனை மூடி மறைக்காமல் முதலில் அதுபற்றி அமைச்சரவையில் கலந்துரையாடியிருக்க வேண்டும். அதுதான் மக்களாட்சி முறைமை.  முதலமைச்சர் ஏன் இதைச் செய்யவில்லை? முதலமைச்சர் அறிக்கை பற்றி ததேகூ இல் உள்ள நான்கு கட்சிகளில் மூன்று கட்சிகளோடு கலந்து பேசிய முதலமைச்சர் ஏன் முக்கிய பங்காளிக் கட்சியான தமிழரசுக் கட்சித்  தலைவரோடு பேசவில்லை? அவரது தொலை பேசி இலக்கம் தெரியவில்லை அதனால்தான் பேசவில்லை என்பது எவ்வளவு குழந்தைத்தனமான மறுமொழி? முதலமைச்சர் உட்பட அமைச்ரவையில் உள்ள  அமைச்சர்கள் அனைவரும் ஒரே பெறுமதி யுடையர்கள். முதலமைச்சர் என்பவர் ஒரே பெறுமதியுடைய அமைச்சர்களில் முதல் இடத்தில் (First among  the equal) இருப்பவர். எல்லாமே அவரில்லை. ஆனால் முதலமைச்சர்  விக்னேஸ்வரன் ஒரு சர்வாதிகாரி போல நடந்துள்ளார். இங்கேதான் சிக்கல் இருக்கிறது.   

இவ்வாறு முதலமைச்சர்  விக்னேஸ்வரன் அவர்கள் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மான முயற்சி குறித்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் ருத்ரகுமாரன் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இவ் ஊடக அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

இலங்கைத்தீவின் தேசிய இனப்பிரச்சனைக்குத் தீர்வு எனக்கூறி அறிமுகம் செய்யப்பட்ட மாகாணசபைமுறை எந்தவகையிலும் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சனைக்குத் தீர்வாக அமையமுடியாது என்பதே நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் நிலைப்பாடு என்பதனை நாம் முன்னரே வெளிப்படுத்தியிருக்கிறோம்.

(1)  இருந்தும் இந்த மாகாணசபைமுறையினை சிங்கள பௌத்த பேரினவாதம் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்துவதைத் தடுக்கவும், இச் சபையினை ஓர் அரசியல் மேடையாகப் பயன்படுத்தவும், சபையின் ஊடாக சிறிய அளவிலேனும் செய்யக்கூடிய மேம்பாட்டுச் செயற்பாடுகளை தமிழர் தாயகத்தில் மேற்கொள்ளவும் தந்திரோபாயத்துடன் இச் சபையினைக் கையாள வேண்டிய தேவையினையும் நாம் புரிந்து கொண்டிருந்தோம். இதனால் வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு நாம் மக்களைக் கோரியுமிருந்தோம்.

பதில்: நல்லது. ஆனால் உங்கள் வேண்டுகோளை ஏற்று எத்தனை  பேர் ததேகூ க்கு  வாக்களித்தார்கள்? ஏன் நான் இப்படிக் கேட்கிறேன் என்றால் 2015 இல் நடந்த சனாதிபதி தேர்தலில் மக்கள் வாக்களிப்பதால் பலனில்லை. மகிந்த இராஜபக்சாவுக்கு போட்டாலும் ஒன்றுதான் சிறிசேனாவுக்குப் போட்டாலும் ஒன்றுதான் என்று அறிக்கை விட்டீர்கள். ஆனால் 75 விழுக்காடு மக்கள் சிறிசேனாவுக்குத்தான் வாக்களித்தார்கள்! 

(2)  கடந்த மூன்று வருடங்களாக வடக்கு மாகாண முதலமைச்சர் என்ற பதவிநிலையினைப் பயன்படுத்தி முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் தமிழ் மக்கள் மீதான கட்டமைப்பு ரீதியிலான இனவழிப்பு நடவடிக்கைகளுக்கு (Structural Genocide)) எதிராகக் குரல் கொடுத்து வருகிறார். அனைத்துலக சமூகத்தின் முன் தமிழ் மக்களின் உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்துபவராகவும் முதலமைச்சர் இருக்கிறார். இவ் இரண்டு பணிகளையும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் திறம்பட ஆற்றி வருவதனால் தமிழ் மக்களின் அன்புக்கும் அபிமானத்துக்கும் உரியவராக அவர் இருக்கிறார். இதேவேளை சிங்களப் பேரினவாதிகளாலும் அனைத்துலக சமூகத்தின் ஒரு பகுதியினராலும் அவர்களுக்குச் சேவகம் செய்யும் எம்மவர்களில் ஒரு சிலராலும் அவர் வெறுக்கப்படுபவராக இருக்கிறார்.

 பதில்: ஒப்புதல் வாக்கு மூலம் அளித்ததற்கு நன்றி. அனைத்துலக சமூகத்தின் ஒரு பகுதியினரால் மட்டுமல்ல மொத்த அனைத்துலக சமூகமும் அவருக்கு எதிராகவே இருக்கிறது.  நல்லிணக்கத்துக்கு எதிராக அவர் செயல்படுகிறார் என்ற பிம்பம் அந்த நாட்டு இராஜதந்திரிகள் மத்தியில்  இருக்கிறது.

இதன் காரணமாகவே முதலமைச்சர் விக்னேஸ்வரனின் தீவிர தமி்ழ்த் தேசியத்தை ஒரு நாடு தன்னும் ஆதரிக்கவில்லை. அதே போல் எந்த வெளிநாட்டு இராஜதந்திரியும்  அவரது தீவிர தேசியவாதத்தை ஆதரிக்கவில்லை.   எப்படி நாகதஅ எந்த நாட்டோடும் எந்த இராஜதந்திரியோடும்  தீவிர தமிழீழ  தேசியம் பற்றிப் பேசமுடியாது இருக்கிறதோ அதேபோல விக்னேஸ்வரனது தீவிர தேசியவாதம் பற்றி எந்த நாடோடும்  அல்லது இராஜதந்திரியோடும்  அவரோடு பேச அணியமாக இல்லை.    நாகதஅ  இன் பிரதமர்   நியூயோர்க்கில் இருக்கிறார். ஆனால் அவரால்  பக்கத்தில் உள்ள அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தோடு கூட பேச முடியாது.  அமெரிக்காவை விட்டு அவர் வெளியே செல்ல முடியாமல் இருக்கிறது. கனடாவுக்குள் நுழைய முடியாது இருக்கிறது. கூரை ஏறி கோழி பிடிக்க முடியாத குருக்கள் எப்படி வைகுண்டத்துக்கு வழிகாட்ட முடியும்?  தான்தோன்றித்தனமாகவும் சர்வாதிகாரப் போக்கோடும் நடந்து கொள்ளும் முதலமைச்சரது முதுகை நாகதஅ சொறிந்து கொள்வது வேலிக்கு ஓணான் சாட்சி சொல்வது போன்றது.  

(3)  மாகாணசபையின் ஊடாகச் செய்யப்பட வேண்டிய மேம்பாட்டு வேலைகள் திறம்பட நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டு மாகாணசபை செயற்பட ஆரம்பித்த காலத்திலிருந்தே இருந்து வருகிறது. இதற்கு பல்வேறுவகையான காரணங்களைக் கூற முடியும். சிங்கள அரச கட்டமைப்பின் இறுக்கமான பிடிக்குள் மாகாணசபை இருப்பதும் இதற்கு ஒரு முக்கியமான காரணமாகும்.

பதில்: “மாகாணசபையின் ஊடாகச் செய்யப்பட வேண்டிய மேம்பாட்டு வேலைகள் திறம்பட நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டு மாகாணசபை செயற்பட ஆரம்பித்த காலத்திலிருந்தே இருந்து வருகிறது” என்பது சரி. அதற்குக் காரணம் முதலமைச்சர் விக்னேஸ்வரன். அப்படிப்பட்ட வினைத் திறனற்ற முதலமைச்சரை நீக்குவது நல்லதா? கெட்டதா? மக்களுக்கு நன்மையா? தீமையா? தொழில் தெரியாத தொழிலாளி தனது ஆயுதங்கள் கூடாது எனக் கூறுவது போல “சிங்கள அரச கட்டமைப்பின் இறுக்கமான பிடிக்குள் மாகாணசபை இருப்பதும் இதற்கு ஒரு முக்கியமான காரணமாகும்” என்பது கட்டுக்கதை. இராணுவ  ஆளுநர் பதவியில் இருந்த போது இந்தக் குற்றச்சாட்டில் உண்மை இருந்திருக்கலாம். ஆனால் சிவிலியன் ஆளுநர்கள் எப்போது என்னவிதத்தில் என்ன வடிவில் முதலமைச்சருக்கு முட்டுக்கட்டை போட்டார்கள் என்று சொல்ல முடியுமா? 

(4)  வடக்கு மாகாணசபையின் அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்ட ஊழல், அதிகாரத் துஸ்பிரயோகம் போன்ற குற்றச்சாட்டுகள் குறித்து முதலமைச்சரால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு அறிக்கை தொடர்பாக முதலமைச்சர் எடுத்த நடவடிக்கைளின் விளைவாகவே இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம்  தமிழரசுக்கட்சியினால் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது.

பதில்: இது கடைந்தெடுத்த பொய். இப்படிச் சொல்வதற்கு நாகதஅ  இன் பிரதமர் வெட்கப்பட வேண்டும்.  அமைச்சர் ஐங்கரநேசன் மீது எழுந்த ஊழல் குற்றச்சாட்டை விசாரிக்க வேண்டும் என்று குரல் கொடுத்தவர்கள் தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள்தான். இப்போதும் இரண்டு அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என்பதை முழுமையாக தமிழரசுக் கட்சி ஆதரிக்கிறது. ஆனால் முதலமைச்சர் நியமித்த ஆணைக்குழு  நல்வாழ்வு அமைச்சர் சத்தியலிங்கம், மீன்வளத்துறை அமைச்சர் டெனீஸ்வரன் இருவரும் குற்றமற்றவர்கள் என்று தீர்ப்பு அளித்த பின்னரும் அவர்கள்பற்றி மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்றும் அதுவரை அவர்கள் விடுப்பில் போக வேண்டும் என்று முதலமைச்சர் கட்டளையிடுவதில் என்ன நியாயமிருக்கிறது? மறுவிசாரணையைக் கூடத்   தமிழரசுக் கட்சி மறுதலிக்கவில்லை. அதனை ஆதரிக்கிறது. ஆனால்  அவர்கள் இருவரும் விடுப்பில் போக வேண்டும் என்பதை மட்டும் தமிழரசுக் கட்சி எதிர்க்கிறது. முதல் விசாரணைக் குழுவை நியமித்த போது ஏன் நான்கு அமைச்சர்களையும் விடுப்பில் போகுமாறு கேட்கப்படவில்லை? சட்டம் படித்த நாகதஅ இன் பிரதமருக்கு இது ஏன் புரியாமல் இருக்கிறது? ஒரு முதலமைச்சர் என்பவர்  மாகாணசபையின் நலன் கருதி, வாக்களித்த மக்களின் நலன் கருதி எல்லா அமைச்சர்களையும் அரவணைத்துப் போக வேண்டும். முரண்பாடுகளை அமைச்சரவையில் பேசித்  தீர்வு காண வேண்டும். அதை விடுத்து  “நந்தவனத்தில் ஓர்  ஆண்டி அவர் நாலாறு மாதமாய் குயவனை வேண்டி கொண்டு வந்தான் ஒரு தோண்டி – மெத்தக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி” என்ற தோரணையில் முதலமைச்சர் நடந்து கொள்வதை நாகதஅ ம்  கண்ணை மூடிக் கொண்டு ஆதரிப்பது வெட்கக்கேடு. இப்போது கூட விசாரணை தொடரட்டும் ஆனால் அமைச்சர்கள்  விடுப்பில் போகக் கூடாது என்ற கோரிக்கைகயை முதலமைச்சர் ஏற்றுக் கொண்டால் சிக்கல் தீர்ந்துவிடும். பின்னர் ஏன் முதலமைச்சர் இந்த சின்னக் கோரிக்கையை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்?  தான் என்ற அகங்காரம் (ego) அவரைத் தடுக்கிறதா? 

(5)  நடந்த நிகழ்வுகளை உற்று நோக்கும்போது முதலமைச்சரின் நடவடிக்கைகள் தொடர்பாக கட்சிக்குள் எழுந்த அதிருப்திகளைப் பயன்படுத்தி முதலமைச்சர் விக்னேஸ்வரனை முதலமைச்சர் பதவில் இருந்து அகற்றும் ஒரு சூழ்ச்சி இடம் பெறுவதாகவே எமக்குத் தெரிகிறது. இச் சூழ்ச்சி மாகாணசபையின் இயங்குதிறன் காரணமாக வகுக்கப்பட்டதல்ல என்பதும் முதலமைச்சர் என்ற நிலையில் இருந்து அவர் வெளிப்படுத்தும் தமிழ் மக்களின் உரிமைகள் சார்ந்த குரலை நசுக்கி விடும் நோக்கத்திலேயே நிகழ்கிறது என்பதுவும் புரிகிறது. இச் சூழ்ச்சியின் பின்னால் சிங்கள பௌத்த பேரினவாதமும் சில வெளிநாட்டு சக்திகளும் இருப்பதாகவே நாம் கருதுகிறோம். இச் சூழ்ச்சிக்கு எம்மவர்கள் சிலரும் துணைபோகும் நிலை வேதனைக்குரியது.

பதில்: காக்கைக்கு கனவிலும் மலம் தின்னும் நினைப்புத்தானாம். இதில் சூழ்ச்சி எதுவும் கிடையாது. முதலமைச்சர்  விசாரணைக் குழுவின் முடிவை ஏற்க மறுத்து  இரண்டு அமைச்சர்களுக்கு எதிராக மறுவிசாரணை நடைபெறும் என்றும் அதுவரை அவர்கள் விடுப்பில் போக வேண்டும் என்று பேசியதன் விளைவாகவே அதே நாள் அதே இரவு அவருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை 21 உறுப்பினர்கள்  ஆளுநரிடம்   கொடுத்தார்கள். அவரது சர்வாதிகாரப் போக்கினால்  மனம் நொந்து போய்விட்ட உறுப்பினர்களில் எதிர்வினை இது. சூழ்ச்சி செய்வதாயிருந்தால் அது கிழமை அல்லது மாதக்கணக்கில் நடந்திருக்கும்.  

(6)  முதலமைச்சர் விக்னேஸ்வரன் தமிழ் மக்களின் உரிமைக்குரலின் ஒரு முக்கியமான பிரதிநிதி. இவர் முதலமைச்சர் பதவியில் இருந்து வெளிப்படுத்தும் கருத்துகளுக்கு அனைத்துலக அரங்கில் ஒரு பெறுமதி உண்டு. இதனால் முதலமைச்சர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை மீளப் பெறுமாறு இத் தீர்மானத்துக்கு ஆதரவு வழங்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தேர்தலில் நின்று வெற்றி பெற்ற வடக்கு மாகாண சபை உறுப்பினர்களைக் கோருகிறோம்.

பதில்:  சர்வாதிகாரத்தோடு,  தான்தோன்றித்தனமாக எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற  தோரணையில் நடந்து கொள்ளும் முதலமைச்சருக்கு  குற்றம் அற்றவர்கள் என்று ஆணைக்குழு தீர்ப்பளித்த இரண்டு அமைச்சர்கள் மீது விசாரணை தொடரலாம் ஆனால் அவர்கள் விடுப்பில் போக வேண்டிய அவசியம் இல்லை என்று பிரதமர் உருத்திரகுமாரன் முதலமைச்சருக்கு ஏன் வேண்டுகோள் விடவில்லை? மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன் குடமா? தமிழரசுக் கட்சிக்கு மட்டும் உபதேசம் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு இல்லையா? தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை பற்றி உரத்துப் பேசுபவர்கள் யோக்கியர்கள் மற்றவர்கள் அயோகியர்களா?   இது எந்த ஊர் நியாயம்? நீதிமுறை?

(7)  இதனைச் செய்யத் தவறும் பட்சத்தில்; தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தில் தவறான பக்கத்தில் நின்றதாகப் பதிவுசெய்யப்பட்டு வரலாற்றில் குற்றவாளிக் கூண்டில் நீங்கள் நிறுத்தப்படுவீர்கள் என்பதனை முன்னெச்சரிக்கையுணர்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

பதில்: இது பிரதமரின் அதிகப் பிரசங்கித்தனம். மொட்டைத் தலைச்சி தலையைச் சிலிப்புக்காட்டுவது போன்றது.  காகம் திட்டி மாடு சாவதில்லை. முதலில் பாரபட்சமின்றி, பக்கசார்பின்றி பிரதமர் சிந்திக்க வேண்டும். அறிக்கை விட வேண்டும். தீவிர தமிழ்த் தேசியம் பேசுகிறவர்கள்  எல்லாம் உலக உத்தமர்கள் என்று நினைப்பது முட்டாள்த்தனம். அதுமட்டுமல்ல 68 ஆண்டுகால  வரலாற்றைக் கொண்ட தமிழரசுக் கட்சிக்கு நேற்றுப் பெய்த மழையில் இன்று முளைத்த  நாகதஅ  தேசியம் பற்றி,  தாயகம் பற்றி, தன்னாட்சி  உரிமை பற்றி பாடம் எடுக்கக் கூடாது. அந்த  தகுதி அதற்கு நிச்சயம் இல்லை.

இன்று இலங்கைத் தமிழர்களின் சிக்கல் ஐநாமஉ பேரவையில் பேசு பொருளாக இருக்கிறததென்றால் அதற்குக் காரணம்  ஐயா சம்பந்தனும் அவரது தமிழரசுக் கட்சியும்தான். ஐயா சம்பந்தனின் அரசியல் சாணக்கியம் காரணமாகவே இன்று அமெரிக்கா, இந்தியா, ஐக்கிய இராச்சியம், ஐரோப்பிய ஒன்றியம், கனடா உட்பட 47 நாடுகள் எங்கள் பக்கம் நிற்கின்றன. இது ஒரு பெரிய சாதனை. 

தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை பற்றிப்  பேசிக் கொண்டிருக்கிற நாகதஅ சரி, முதலமைச்சர் சரி எந்த நாடாவது திரும்பிப் பார்க்கிறதா? அதற்கு அந்த நாடுகள் அணியமாகயில்லை.  எனவே நாகதஅ  ஓர் அறிக்கையை விடுமுன் அதுபற்றி பலமுறை ஆற அமர யோசித்து விட்டு விட  வேண்டும்.  தமிழரசுக் கட்சி நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை ஒரு தோழமை உணர்வோடுதான் பார்த்து வருகிறது. அதனைக் கெடுக்க வேண்டாம்.

நக்கீரன் 

இவ்வாறு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் ருத்ரகுமாரன் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply