திராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா? படிக்கல்லா? – 16

காஞ்சிபுரம் இந்தி எதிர்ப்பு மாநாடு

இராசாசி இந்தியைக் கட்டாயப் பாடமாக்கி உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பே, இந்தி எதிர்ப்பு உணர்வுகள் வலிமை பெற்றன. சுயமரியாதை இயக்கம், நீதிக்கட்சி ஆகியவை ஆங்காங்கே பல பொதுக்கூட்டங்களையும், மாநாடுகளையும் நடத்தி வந்தன.

காஞ்சிபுரத்தில் நீதிக்கட்சியின் சார்பில் மிகப்பெரிய அளவில் இந்தி எதிர்ப்பு மாநாடு நடத்தப்பட்டது. 27.2.1938 அன்று காஞ்சிபுரம் கண்ணன் டாக்கீசில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பாளர் மாநாட்டிற்கு, முன் னாள் அமைச்சரும் நீதிக்கட்சியின் துணைத் தலைவரு மான சர். கே.வி. ரெட்டிநாயுடு தலைமை வகித்தார். நீதிக்கசியின் மற்றுமொரு துணைத் தலைவர் சர்.எம். கிருஷ்ணன்நாயர் மாநாட்டைத் தொடங்கிவைத்தார்.

நீதிக்கட்சியைச் சார்ந்த பல ஜமீன்தார்களும், கட்சிப் பொறுப்பாளர்களும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். கே.ஏ. தங்கவேலு முதலியாரும், கே.எம். பாலசுப்பிரமணியமும் செயலாளர்களாக இருந்து இந்த மாநாடு சிறப்புற நடைபெற வழிவகுத்தனர். மாநாட்டு வரவேற்புக் குழுவினருக்குக் கட்டணம் ரூ.2.00; பிரதிநிதிக் கட்டணம் 0-8-0; பார்வையாளர் கட்டணம் 0-4-0 வீதம் வசூலிக்கப்பட்டது.

இந்த மாநாட்டில் தலைமையுரையாற்றிய சர். கே.வி. ரெட்டி நாயுடு, “இந்த மாநாட்டிற்குத் தலைமை வகிக்கக் கேட்டுக் கொள்வதன் மூலம் இந்தப் பிரச் சனை தமிழர்களைப் பாதிக்கக் கூடியதோடு, இந்த மாகாணத் தில் உள்ள நான்கு பாஷா பிர தேசங்களையும் பாதிப்பது என் பதை அரசாள்வோர் அறியட்டும் என எண்ணுகிறீர்கள் என நம்புகிறேன். அது முற் றிலும் உண்மையேயாகும். இவ்விஷயத்தில் உங் களுடன் ஒத்த கருத்துடைய பல ஆந்திரர்கள் இருக் கிறார்களென உறுதி கூறுகிறேன். திராவிட இரத்தம் ஓடும் ஒருவனாவது, இந்த வேண்டாத இந்தி பாஷை ஏற்கெனவே பாரத்தைச் சுமந்துள்ள நமது சிறுவர் களிடமும் சாந்தத்தோடு இருக்கும் நம் வீட்டினுள்ளும் புகுத்தப்படுவதைச் சகித்துக் கொண்டிருக்கமாட்டான்.

சர்க்கார் (காங்கிரஸ் சர்க்கார்) கொண்டுவரும் இத்திட்டத்தை எந்தக் காரணங்களுக்காக எதிர்க்கிறோம் என்பதை மிகத் திறமையாக, தோழர் எஸ். சோம சுந்தரபாரதியார் அவர்கள், முதன் மந்திரி கனம் இராச கோபாலாச்சாரியாருக்கு எழுதிய பகிரங்க கடிதத்தில் விளக்கிக் கூறியிருக்கிறார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராக உள்ள அவர், கலை பல கற்றவர். ஆகவே இவ்விஷயத்தில் திடமான அபிப்பிராயங் கூற, அவர் தகுதி வாய்ந்தவர். இந்தத் திட்டம் நிறைவேற்றப்படுமானால், பிரஜா உரிமை பாதிக்கப் படுவதோடு, தமிழின் தனிப்பெருமைக் குன்றும்; திராவிட நாகரிகம் சிதையும் என்பதை அவர் விளக்கிக் காட்டியுள்ளார். “திராவிடர்களாகிய நமக்கு ஆங்கிலம் எப்படி அன்னிய பாஷையோ அப்படியே இந்தியும் அன்னிய பாஷைதான். அதிலும் இந்தி பாஷை பழைய பாஷையுமல்ல, பூரண வளர்ச்சி அடைந்தது மல்ல.

“எனக்குத் தெரிந்தவரை இந்தி பாஷை 13ஆம் நூற்றாண்டில்தான் தோன்றியது. ஆனால் தமிழ் இந்தியாவின் ஆதிபாஷை, தமிழ் இலக்கணமாம் தொல்காப்பியம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்டது. தொல்காப்பியம் ஒரு இலக்கண நூல். ஒரு பாஷை, நல்லவளர்ச்சி அடைந்த பிறகுதான் அதற்கு இலக்கண நூல் தேவையாக இருக்கும். ஆகவே இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன்னாலேயே தமிழ்மொழி ஒரு உன்னத வளர்ச்சியைப் பெற்றிருந் தது என்பது விளங்கும்.”

“பொது மொழி தேவையா?” என்ற ஒரு வினாவை எழுப்பி, அது தேவையற்றது என்பதற்கு உதாரண மாக, கனடா, ஆப்பிரிக்கா, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளின் அரசியல் சட்டங்களைப் படித்துக்கட்டி, பல மொழிகள் ஆட்சிமொழிகளாக அங்கு உள்ளதை எடுத்துக்காட்டினார். ஒரே ஒரு மொழி பொது மொழி யாக இருக்க வேண்டி அவசியமில்லை என்பதையும் சர். கே.வி. ரெட்டி நாயுடு தமது தலைமையுரையில் எடுத்துரைத்தார். மாநாட்டைத் தொடக்கி வைத்த சர். எம். கிருஷ்ணன்நாயர், இந்தி படித்தால் வடநாட்டில் வேலைகிடைக்கும் என்ற காங்கிரசாரின் பொய்வாதத் தை 1937ஆம் ஆண்டு லார்டு லோதியன் தலைமை யில் சர். தேஜ்பகதூர் சாப்ரு அவர்கள் வாசித்த “இந்தியா விலே கல்வியும் வேலையில்லாத் திண்டாட்டமும்” என்ற சொற்பொழிவில், ஐக்கிய மாகாணத்தில் வேலை யில்லாத் திட்டம் உள்ளதை சாப்ரு ஏராளமான சாட்சி யங்களுடன் நிரூபித்துள்ளதை இவர் எடுத்துக்காட்டினார்.

“என்றும் அழியாப் பெரும்புகழ் படைத்த குறள், சிலப்பதிகாரம் போன்ற தமிழ் இலக்கியங்களை, தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவரேயன்றி வேறு எவரே எழுதுவர்! நமது தாய்மொழிகளாகிய தமிழ் முதலிய திராவிட மொழிகளை, காத்து, வளர்த்து, பரிபாலிப்பது, நமது கடமையாகும். ஆங்கிலத்திலுள்ள கலைகளை, சிறப்பாக விஞ்ஞான நூல்களைத் தமிழிலே மொழிபெயர்த்தால், நமது தாய்மொழி வளர்ச்சிக்கு, ஆக்கமும், வளர்ச்சியும் தேடுதற்குச் சாலச்சிறந்ததொரு மாhக்கமாகும். இம்மாகாண மொழிக்கு ஆக்கந்தேட, திரவிய சகாயம் முதலிய உதவிகளைச் செய்ய வேண்டி யது, சென்னை சர்க்காரின் கடமையாகும். வீணுக்குப் பணத்தையும், பலத்தையும், இந்தியைக் கட்டாயப் பாடமாக்குதல் போன்ற திட்டங்களுக்காக விரையமாக் காமல், திராவிட மொழி வளர்ச்சிக்காகப் பண்டிதர் களுக்குப் பண உதவி செய்து, திராவிட மொழி வளர்ச் சிக்குச் சென்னை சர்க்கார் உதவி அளித்தால் நாட்டிற்கு நிரந்தரமான நன்மை அளித்தவராவர்.

அய்க்கிய மாகாணத்திலே, முதல் மூன்று பாரங் களிலே, தமிழைக் கட்டாயப் பாடமாக்க வேண்டு மெனத் திட்டம் வகுத்தால், அந்த மாகாணத்து மந்திரி களும், மக்களும் எப்படி அதை “வரவேற்பார்கள்” என் பதை நாம் சிந்தித்துப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.

“அப்படி இருந்தும், சென்னை மாகாண மந்திரி களே, இந்தியை நமது பள்ளிக்கூடங்களில், நமது சிறு பிள்ளைகளுக்குக் கட்டாயமாக்கத் துணிந்து நிற்பதைக் காண்கிறோம். இது ஒரு பெரும் துர்அதிர்ஷ்டவசமான சம்பவமாகும். இதிலிருந்து நாம் மீளுவோமாக” இவ் வாறு எம் கிருஷ்ணன் நாயர் தம் தொடக்க உரையில் கூறியுள்ளார் (குடிஅரசு, பிப்பிரவரி 27, 1938).

1938 ஏப்ரலில் இராசாசி கட்டாய இந்தியை 125 உயர்நிலைப்பள்ளிகளில் முதல் மூன்று பாரங்களுக்குக் கட்டாயப்பாடம் என்று ஆணையிட்டார். 1938 மே மாதம் 8ஆம் நாள் “குடிஅரசு” இதழில் “இந்தி வந்து விட்டது இனி என்ன? ஒரு கை பார்க்க வேண்டியது தான்” என்ற தலைப்பில் ஒரு சீரிய தலையங்கம் எழுதப்பட்டது. அத்தலையங்கத்தின் ஒரு பகுதி :“தமிழ் மக்களை இன்று பார்ப்பனர்களும் கவர்னர் பிரபுவும் மதிக்காமல் அலட்சியமாய்க் கருதி இழிவு படுத்தி வருவதற்குக் காரணம் தமிழ் மக்களில் எவரும் இதுவரை தனக்கு மானமோ, வீரமோ இருப்பதாகக் காட்டிக் கொள்ளவே இல்லை. தமிழனுக்குள் ஒற்றுமை இல்லை; தமிழனுக்குப் பொதுநல உணர்ச்சி இல்லை; தமிழன் ஒரு வேளை கூழுக்கு மானத்தை விற்பான்; தமிழன் கூலிக்கு மாரடிக்க அருகனே ஒழிய, தலைப் பதவிக்கு அருகனல்ல. எதையும் விற்றுத் தனது தனி வாழ்வுக்கு வழிதேடுவான் என்று பார்ப்பனரும், பிற நாட்டு மக்களும் கருதுமபடியாகவே பெரும்பாலோர் நடந்து வருகிறார்கள்; நடந்தும் வந்திருக்கிறார்கள்.

தமிழ் மக்களுக்குப் பூர்வகாலந்தொட்டு வேத புராணவை சரித்திரக் காலந்தொட்டு எதிரியாய் – பிறவிரியாய் இருந்து தமிழ் மக்களைத் தாழ்த்தி, அழுத்தி இழிவுபடுத்தி வரும் பார்ப்பனருக்கு அடிமை யாய், ஒற்றனாய், காட்டிக்கொடுத்து ஈன வயிறு வளர்க் கும் இழிகுணம் இல்லாத தமிழ் மக்கள் எத்தனை பேர்கள் இருக்கிறார்கள் என்று கணக்கிட முடியுமா?

கனம் ஆச்சாரியார் பார்ப்பனராய் இருந்தாலும், இந்தியை ஒரு தமிழ் மகனை – அதுவும் இந்நாட்டுப் பழங்குடி பெருங்குடி மக்கள் சமூகத்தைச் சேர்ந்த – குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் வேளாள வகுப்பைச் சேர்ந்த ஒரு தனித்தமிழ் மகனாகும் தோழர் டாக்டர் சுப்பராயனைக் கொண்டு, அவர் கையில் ஒரு கூரிய வேலினைக் கொடுத்தல்லவா தமிழ் மக்களின் கண்களைக் குத்தும்படிக் கட்டளையிடுகிறார்.

ஆகவே தமிழ் மக்களின் பழம்பெருமைகளும், பாட்டிக் கதைகளும் எவ்வளவு மேன்மையாக இருந்த போதிலும், தமிழ் மக்களின் இன்றைய நிலைமை பூர்வபெருமைக்கேற்றதாக இல்லை. தமிழ் மக்கள் பார்ப்பனக் கொடுமையிலிருந்து அதிலே சாகத் தப்பு வதற்குத் தகுதியான நிலையிலும் இல்லை என்பதற் காகவே இவற்றை எடுத்துக்காட்டுகிறோம்.

இதனால் எந்தத் தமிழ் மகனும் பயந்துவிட வேண்டியதில்லை. அதற்குப் பதிலாக இந்தியைத் தடுப் பதற்கு நாம் செய்யப்போகும் காரியங்களைத் திட்டப் படுத்துவதற்குமுன், நம் நிலைமையை நன்றாக உணர்ந்து, அதற்கு ஏற்றபடி அதாவது மாற்றான் வலியையும் நம் வலிமையையும் அளவு கண்டு மேலே சிந்திக்க வேண்டும் என்பதை வலியுறுத்த இவற்றைக் குறிப்பிட்டோமே ஒழிய, நம்மை நாமே இழிவுபடுத்திக் கொள்ளவல்ல…”

இனி நாம் செய்யவேண்டியது என்ன?

உண்மை தமிழ் இரத்தம் அதாவது சிறிதும் கலப்பற்ற சுத்தத் தமிழ் இரத்தம் ஓடும் வாலிபர்களே. இந்தி எதிர்ப்பு இயக்கத்துக்கு வேண்டும்.

எப்படிப்பட்ட பார்ப்பனத் தந்திரத்துக்கும் இணங்க முடியாத பெரியவர்களே நமக்கு வேண்டும்.

பார்ப்பனத் தயவு இல்லாது வாழமுடியாது என்கின்ற தமிழ் மகன் முடிபுனைந்த மன்னனாயிருந்தாலும் அவனிடம் காசுபெறலாமே ஒழிய, அவனது நிழலும் இம்முயற்சியில் ஈடுபட இடம்கொடுக்கக் கூடாது.

இரண்டிலொன்று – அதாவது இந்தி பலாத்காரத்தை ஒழித்தாலொழிய தனது சொந்த வாழ்வைக் கவனிப்பதில்லை என்கிற முடிவுக்காரர்கள் மாத்திரமே எதிர்ப்பு முயற்சி நிர்வாகத்தில் அங்கத்தினராய் இருக்க வேண்டும்.

அடுத்தப்படியாகப் பொருளாதார விஷயத்தில் போது மான பொருள் உதவி கிடைக்கலாம் என்றாலும், ஒரு சமயம் கிடைக்காமல் போய் விட்டாலும் கிடைத்ததைக் கொண்டு, கிடைக்காவிட்டால் பிச்சை எடுத்தாவது பசியை ஆற்றிக் கொண்டு உழைப்பதற்கு உறுதி செய்து கொண்டவர்களே செயலில் கலந்து கொள்ள வேண்டும்.

ஏற்படுத்திக்கொள்ளும் திட்டங்களுக்குக் கட்டுப்பட்டு ஒரு கைமுறையாய்ப் பின்பற்றி ஒழுங்காகவும், ஒழுக்கமாகவும் நடந்துவருவதாக ஒவ்வொரு இளை ஞனும் உறுதி செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகேதான் இம்மாபெரும் முயற்சிக்கு ஏதாவது திட்டம் வகுப்பது பயன்படத்தக்கதாகும்.”

(தொடரும்)

About editor 3188 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply