திராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா? படிக்கல்லா? -50

மாபெரும் இந்தி எதிர்ப்புப் போரில் வீர மரண மடைந்த மற்றொருவர் தாலமுத்து ஆவார். கும்ப கோணத்தைச் சேர்ந்த அவர் சிறைச் சாலையிலேயே 12.3.1939இல் வீர மரணம் அடைந்தார். அவருடைய இறுதி ஊர்வலத்தை விடுதலை ஏடு படம்பிடித்துக் காட்டியுள்ளது.

இந்தி எதிர்ப்பில் ஈடுபட்டு, சிறையில் இருந்த குடந்தை தோழர் தாலமுத்து நாடாரின், பிரேத ஊர்வலம் 13-3-1939 மாலை 5 மணிக்கு ஜெனரல் ஆஸ்பத் திரியிலிருந்து புறப்பட்டது. அலங்கரித்த பாடையில் தோழர் நாடார் கிடத்தப்பட்டிருந்தார். ஏராளமான மலர் மாலைகள் போடப்பட்டன. தொடக்கத்தில் சர்வாதிகாரி எஸ். சம்பந்தமும் மற்றும் மூவரும் பாடையைத் தூக்கி வந்தனர். தோழர் நாடாரின் வயதான பெற்றோர் களும், இளம் மனைவியும் சவத்தின்மீது விழுந்து புரண்டு அரற்றிய காட்சி கல்மனதையும் கரைத்து விட்டது. வந்திருந்த பல்லாயிரக்கணக்கான தாய்மார் களும், தோழர்களும் கண்ணீர்விட்டனர். 10000 பேர்கட்கு மேற்பட்ட மக்கள் கொண்ட மாபெரும் கறுப்புக் கொடிகளுடன் கூடிய பிரேத ஊர்வலம் தங்கசாலை வழியாக மெதுவாகப் புறப்பட்டு வந்தது. கறுப்புச் சட்டையணிந்த சிலர் முன்னே பாண்டு வாத்தியம் முழங்கிச் சென்றனர்.

ஊர்வலத்தின் இரண்டு பக்கங்களிலும் பல நூற்றுக் கணக்கான போலீஸ்களும், சார்ஜண்டுகளும், இன்ஸ் பெக்டர்களும், பந்தோபஸ்து செய்து வந்தனர். டிப்டி கமிஷனரும் வந்திருந்தார்.

ஊர்வலம்

ஊர்வலம் தங்கசாலை இந்து தியாலாஜிக்கல் பள்ளியின் முன் வந்ததும் மக்கள் அனைவரும் பள்ளியின் முன் நின்று, ‘இந்தி ஒழிக’, ‘காங்கிரஸ் ஆட்சி ஒழிக’, ‘தமிழ் வாழ்க’ என அரை மணிநேரம் கூச்சல் போட்டனர். தலைவர்கள் எவ்வளவு சொல்லி யும் மக்கள் கேட்கவில்லை. போலீசார் வேண்டுதலும் பயன்படவில்லை. இறுதியில் தலைவர் மிகவும் கேட்டுக்கொண்டு ஊர்வலத்தை அழைத்து வந்தனர்.

வழிநெடுகத் தோழர் நாடாரின் சவத்தின்மீது ஏராளமான மாலைகள் போடப்பட்டன. ஊர்வலம் தங்கசாலை சுமைதாங்கி வந்ததும், இருட்டிவிட்ட மையால் பின்னர் ஏராளமான காந்த விளக்குகளுடன் ஊர்வலம் சென்றது. வழிநெடுக ஒவ்வொரு வீட்டின் மெத்தையிலிருந்தும் ஆண்களும் பெண்களும் வருந்திக் கண்ணீர் சொரிந்தனர்.

இரவு 7.30 மணிக்குப் பிரேத ஊர்வலம் மூலக்கொத்தளம் சுடு காட்டிற்கு வந்து சேர்ந்தது. இந்திக்கு முதற்பலியான தோழர் இல. நடராஜன் சமாதியின் அருகி லேயே தோழர் நாடாருக்கும் குழிவெட்டப்பட்டிருந்தது. தோழர் தாலமுத்து நாடாரைப் புதைப் பதற்கு முன்பு அவர் உடலின் எதிரிலேயே ஒரு இரங்கற் கூட்டம் நடைபெற்றது. பெரியார் பெல்லாரி சிறையில் இருந்ததால் இந்த ஊர்வலத்தில் கலந்து கொள்ள இயல வில்லை.

இரங்கற் கூட்டம்

கூட்டத்திற்குத் தோழர் சி. பாசுதேவ், பி.ஏ., பி.எல்., எம்.சி. அவர்களைத் தலைமை வகிக்குமாறு தோழர் என்.வி. நடராஜன் கேட்டுக் கொண்டார். அக்காலை அவர் பேசியதாவது :

“இன்று இராயபுரத்தில் நடத்த வேண்டிய கூட்டத்தை இந்த ஈமக்காட்டில் நடத்துகிறோம். ஆச்சாரியார் ஆட்சி யில் தமிழர்கள் உயிருடன் வாழ்வது சந்தேகமாக இருக்கின்றது. அன்று ஒரு நடராஜனைச் சவக்குழியில் கிடத்தினோம். இன்று தோழர் தால முத்துவிற்குக் குழிவெட்டியுள்ளோம். இன்று தமிழர்கட்காக வெட்டப் படும் இதே குழிகள், வருங்காலத் தமிழர் ஆட்சியில் பார்ப்பனியத்திற்கும் வெட்டப்படும் என எச்சரிக்கின் றோம். இக்குழி காங்கிரசிற்கு வெட்டப்படும் குழியாகும். இன்றைய ஆட்சியின் கொடுமையால் தமிழர்கள் மாள வேண்டுமானால், வருங்கால ஆட்சியில் இதேபோலப் பார்ப்பனர்களும் மாளவேண்டியதே நியாயம். நமக்கு மனக்கொதிப்பு இருக்கின்றது. அதற்காக நாம் பலாத் காரத்திலிறங்க வேண்டாம். தமிழுக்காக ஒருவரல்ல, இருவர் உயிரை விட்டனர். இன்னும் இதற்காக ஆயிரக் கணக்கான தமிழர்கள் தங்கள் உயிர்களைவிடத் தயாராயிருக்கின்றனர்.”

தோழர் பாசுதேவ் தலைமை வகித்து ஆங்கிலத்தில் பேசியதைத் தோழர் த.பா. நித்தியானந்தம் மொழி பெயர்த்துக் கூறினார். அது வருமாறு :

“அகிம்சா ஆட்சியின்கீழ் இங்கு துக்கமான நிலையில் கூடியுள்ளோம். தோழர் தாலமுத்து நாடார் தமிழ் நாட்டிற்கு 2ஆவது பலியாக்கப்பட்டார். முன்பு இறந்த நடராஜனும், இவரும் மிகவும் வருந்தத்தக்க நிலை யிலேயே இறந்தனர். இவர் இறந்த சர்ட்டிபிகேட்டை டாக்டர்களிடமிருந்து பெறவே, கடைசி நிலையில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பப் பட்டிருக்கிறார் போலும். இவர் இறந்த செய்தி வெகுநேரம் கழித்தே குடந்தை யிலுள்ள பெற்றோர்கட்குத் தெரிவிக்கப் பட்டிருக்கிறது. இன்று வெகுநேரம் நம்மில் யாருக்கும் இச்செய்தி தெரியவில்லை. தோழர் நாடார் சிறையில் மிகவும் கொடுமைப்படுத்தப்பட்டிருக்கிறார். அவர் இரண்டு கைகளிலும் சந்தேகத் திற்கிடமாக 2 கட்டுகள் கட்டப்பட்டிருக் கின்றன. இச்சந்தேகத்தை நீக்க சர்க்கார் என்ன செய்யப் போகிறார்கள்? மாலை யில் நடந்த பெரிய ஊர்வலம் நமது கட்சியின் வளர்ச்சியையே எடுத்துக் காட்டுகின்றது.

இந்த நிலையில் திரிபுரச் செய்திகள் உங்கட்குத் தெரியும். தோழர் காந்தி அகிம்சையைப் பூஜித்துக் கொண்டே தோழர் சுபாஷைக் கொலை செய்கிறார்! ‘ஈரத்துணியைப் போட்டுக் கழுத்தையறுப்பதெ’ன்பது இதுதான் போலும். நாளை காலை சுபாஷ் காலமானார் என்னும் செய்தி வந்தால் அதைக்கேட்டு படேல் கும்பல் வெற்றிக் கொண்டாட்டம் நடத்தும். அக்கும்பல்களில் ஒருவரான தோழர் ஆச்சாரியார் ஆட்சியில் இத்தகைய மரணத்தைத் தவிர வேறு எதை எதிர்பார்க்கலாம்?

மூவர்ணக் கொடியின் தத்துவம் எங்கே?

காங்கிரஸ் ஆட்சியில் இத்தகைய மரணங்கள் நிகழும் கொடுமையினால், மூவர்ணக் கொடி அகிம்சையை அடிப்படையாகக் கொண்டதல்ல என்று விளங்கிவிட்டது. அக்கொடியை இங்குள்ள பதினாயிரக்கணக்கான மக்களும் வெறுக்கின்றனர். இங்குள்ள போலீஸ் அதி காரிகள் கொடியின்மீது நமக்குள்ள வெறுப்பை உணர்ந்து கொள்வார்கள். உணர்ந்தால் நாளை செவ்வாயன்று கார்ப்பொரேஷனில் அக்கொடியைப் பறக்கவிடக் கூடாதென 144 போடட்டும்.

நாம் ஒற்றுமையாக ஊக்க உணர்ச்சியுடன் வேலை செய்ய வேண்டும். பெரியார் நம்மிடையே இருப்பார். இறந்த இருவருக்கும், ஞாபகச் சின்னம் வைக்கப்படும். நாடாரின் பெற்றோருக்கும், மனைவிக்கும் நமது அனுதாபம். குடந்தை யிலுள்ள அவர்களின் உறவினர்களைவிட தோழர் தாலமுத்து நாடாரின் மீது மிகவும் அன்பு கொண்ட 10000-க்கணக்கானவர் முன்பு இன்று தோழர் நாடார் வைக்கப்படுகின்றார்.”

தோழர் கே.சி.சுப்பிரமணியம் செட்டியார் (பாரிஸ்டர்) பேசுகையில், பெற்றோர்கட்கு அனுதாபம் தெரிவித்து தஞ்சை ஜில்லாவாசியான தோழர் நாடார் தனது உயிரைக் கொடுத்ததை நினைக்க உண்மையிலேயே தஞ்சை ஜில்லா வாசியானதான் பெரிதும் பெருமிதம் அடைவதாகக் கூறினார்.

தோழர் சாமி அருணகிரிநாதர் பேசு கையில், பார்ப்பனிய ஆட்சி ஒழியும் வரை தமிழர்கள் முன்னேற முடியாதெனத் தெரிவித்தார்.

மனம் கலங்குகிறது

தோழர் சி.என். அண்ணாதுரை பேசியதாவது: “முன்பு தோழர் நடராஜன் அடக்கமான காலத்து, மீண்டும் இத் தகைய சம்பவம் தமிழர்கட்கு ஏற்படா தென நினைத்தேன். ஆனால், நாடார் திலகம் தோழர் தாலமுத்து இறந்ததைக் காண மனம் கலங்குகிறது. வழியில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் வருத்தம் தெரிவித்தனர். வடக்கே நருமதை ஆற்றங்கரையில் (திரிபுரியில்) தோழர் ஆச்சாரியார் ஆனந்த வெறியிலிருக்கும்போது இங்கு நாம் துக்கசா கரத்தில் இருக்கின்றோம். நமது உயிர் நம்மிடமில்லை. தமிழர் ஆட்சி இல்லாவிட்டால் என்ன தீமை வந்து விடும் என்கிற காங்கிரஸ் தமிழர்கள், இதைக் கவனிக்க வும். என்னைப் பொறுத்தவரை தோழர்கள் நடராஜன், தாலமுத்து மரணத்தை எனது அண்ணன், தம்பி இறந்தனர் எனவே கருதுகிறேன். முன்பு நான் சாக் கோட்டை மாநாட்டில் பேசும்போது நாடார் சகோதரர் களை தமிழர் அறப்போருக்கு வருமாறு வருந்தியழைத் தேன். அக்காலத்திலும் நீங்கள் அனுப்ப வேண்டும். ஆனால் அவர்களைத் திருப்பிக் கொடுப்பதாக உறுதி கூற முடியாதெனத் தெரிவித்தேன். அதேபோல அங்கிருந்து தோழர்கள் வந்தனர். தாலமுத்து இறந்தார். முன்பு இறந்த நடராஜன் மணமாகாதவர். ஆனால் தாலமுத்து மணமானவர்.

குடும்பத்தை ஒழுங்காக நடத்த இருந்த சமயத்தில் தாலமுத்து இறந்துவிட்டார். இன்று தாய், தந்தை, மனைவிக்குப் பிரேதமாகக் காட்சியளிக்கிறார். இச்சமயத்து ஆச்சாரியார் மார்தட்டி, கண்ணாடியைத் துடைத்துப் பேசுவார். ஏன்? தமிழன் ஆச்சாரியார் காலின் கீழிருக்கின்றான். அவர் நினைத்தால் பல தாலமுத்துக்கள் மயானம் வரமுடியும். ஏன்? ஆச்சாரியார் நினைத்தால் நீங்களும் நானும் இங்கு (மயானம்) வரவேண்டியதுதான். மிகவும் வெட்ககரமான நிலையில் தமிழர்கள் இருக்கிறோம். எதைச் செய்து, எதைச் சொல்லித் தமிழன் முன்னேறுவது – விடுதலை பெறுவது என்று தெரியவில்லை. 2 மணிகளை இழந்தோம். தமிழராட்சி ஏற்படும்போது இவ்விரு வீரர்களை அடிப்படையாகக் கொண்டே கட்டப்படும்.

இவர் மாண்டார். நாம் கண்ணீர் விட்டோம். இதைவிட்டு வெளியில் சென்றவுடன் நம் வேலையைப் பார்க்கச் சென்றுவிடக் கூடாது. வேண்டிய செய்ய வேண்டும். நாளை – ஆச்சாரியார், யாரோ நாடார், யார் பேச்சைக் கேட்டுக் கொண்டோ வந்தார்; மறியல் செய்தார்; இறந்தார் என்றுதான் சொல்லப் போகின்றார். காங்கிரசின் 3 ஆண்டு சத்யாக்கிரக காலத்து எந்தத் தொண்டனாவது இறந்தானா? எந்த ராட்சத சர்க்காராவது இக்கொடுமையைச் செய்ததா? அன்று சத்தியமூர்த்திக்கு சிறையில் உடல்நலமில்லை யெனக் கரடியாகக் கத்தினர். பாஷியம் அய்யங்காரைப் பற்றிப் பார்லிமெண்ட் வரை கேள்வி கேட்டனர். தோழர் தாலமுத்து இறந்தது நீண்ட நேரம் வரை யாருக்கும் தெரியாது.

எங்கள் நோக்கம்

இந்நிலையில், திரிபுரியில், எனது மாகாணத்தில் 62000 பேர் இந்தி படிக்கின்றனர் என்று பெருமை பேசுகிறார். ஆனால் 900 பேர் சிறை செய்யப்பட்டனர் என்றாவது ஆயிரக்கணக்கானவர் கூட்டத்தில் எனது ஆட்சியை வெறுக்கின்றனர் என்றாவது கூறினாரா? இனி இந்தி படிக்கும் மாணவர்-இருவர் உடலைத் தாண்டிக் கொண்டுதான் படிக்கச் செல்ல வேண்டும். தமிழன் உயிர் தமிழன் கையிலிருக்க வேண்டு மென்பதே எங்கள் நோக்கம். நம்மில் மாறுபட்ட தமிழரைத் திருப்ப வேண்டும்.

வருங்காலத்தில் பெரியாரை மத்தியில் வைத்து இறந்த 2 மணிகளையும் பக்கத்தில் வைத்து உருவம் எழுப்ப வேண்டும், ஏன்? பெரியார் வளரும் காலத்து, இந்த இரண்டு சமூகங்களும் அதாவது நாடார், ஆதித்திராவிடர் சமூகங்கள் தான் உதவி செய்து வந்திருக்கிறது.

அடுத்த வாரம் குடந்தை செல்லப்போகின்றேன். எனது நாடார் சகோதரர்கட்கு என்ன பதில் கூறுவதென்று தெரியவில்லை. தமிழர்கள் ஒற்றுமையாகச் சேர்ந்து தமிழராட்சியை ஏற்படுத்த முயற்சி செய்யுங்கள். இறந்த நாடார் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபம்.”

முஸ்லிம்கள் சார்பில் தோழர் அப்துல் அக்கீம் சாகிப் அனுதாபம் தெரிவித்தார்.

தோழர் வி.பி.எஸ். மணியர் அனைவரும் ஒற்று மையுடன் பாடுபட வேண்டினார்.

சர்வாதிகாரி எஸ். சம்பந்தம் பேசுகையில், இருவர் பலியானதைக் கண்டும் தமிழர்கட்கு சிறையைத் தவிர வெளியில் வேலையில்லை எனத் தெரிவித்தார்.

தோழர் எஸ். நடேச முதலியார் பேசுகையில், தென்னாப்பிரிக்கா சத்யாக்கிரகம் நாகப்பன், வள்ளியம்மை மரணத்தால் வெற்றியடைந்தது. நமதியக்கம் 2 மணிகளின் இறப்பால் வெற்றிய டையப் போகின்றதென்றார்.

தோழர் எம். தாமோதரம் நாயுடு இறுதியில் அனுதாபம் கூறினார்.

பின்னர் ஈமக்கடன்கள் முடிவுற்று இரவு 10 மணிக்கு முடிவுற்றது.

(“விடுதலை”15-3-1939)

தொடரும்

About editor 3120 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply