பளை – கச்சாய் வெளிப்பகுதியில் காவல்றை மீது ஆயுததாரிகள் துப்பாக்கிப் பிரயோகம்
ந.லோகதயாளன்
பளை கச்சாய் வெளிப்பகுதியில் வெள்ளிக் கிழமை அதிகாலையில் பொலிசார் மீது ஆயுததாரிகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட செய்தியில் உண்மை உண்டா என்பதே தற்போது அனைவரின் முணுமுணுப்பாகவுள்ளது. ஏனெனில் காலத்திற்கு காலம் இவ்வாறான நாடகங்களை திட்டமிடுவதில் இலங்கைப் படையினர் கைதேர்ந்தவர்கள் என்பது வெளிப்படையான உண்மை ஏ9 வீதியின் அருகில் உள்ள புகையிரதக் கடவை என்பது வீதியில் இருந்து 4 அடி உயரம் கொண்டதாகவே காணப்படுகின்றது. தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸ் தரப்பு கூறுகின்ற இடம் அதனையும் தாண்டி 15 மீற்றருக்கும் அப்பால் உள்ளது. இங்கே மொத்தமாக பொலிசாரின் காருக்கும் தாக்குதல்தாரி நின்றதாக கூறப்படும் இடத்திற்கும் சுமார் 25 மீற்றர் இடைவெளிகள் மட்டுமே உள்ளது.
தாக்குதல்தாரியோ ஏ.கே ரகத் துப்பாக்கியே பயன்படுத்தியிருக்கின்றார் எனப் பொலிசார் கூறுகின்றனர். அதற்குச் சாட்சியாக ஓர் இத்துப்போன துப்பாக்கியின் மேல் பாகம் சிலேற் தாக்குதல்தாரி நின்று தாக்குதல் நடாத்திய இடத்தில் இருந்து மீட்டதாகவும் கூறுகின்றனர். அத்துடன் பொலிசாரும் பதில் தாக்குதல் மேற்கொண்டபோதிலும் தாக்குதலை மேற்கொண்டவர் தப்பி ஓடி விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த பிரதேசத்தில் பொலிசாரும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டு அதிகாலைவேளையில் அக் கிராமம் முழுமையாக சுற்றிவளைக்கப்பட்டது. குறித்த பிரதேசம் சல்லடை போட்டு தேடுதல் இடம்பெற்றது. இருப்பினும் எவரும் கைது செய்யப்படவும் இல்லை எந்தப் பொருட்களும் கைப்பற்றப்படவும் இல்லை.
அடிப்படையில் இதனை ஓர் மூன்றாம் தரப்பு செய்தமைக்கான எந்தச் சான்றும் காணப்படவில்லை. அதாவது குறித்த ஆயுததாரி மறைந்திருந்து தாக்குதல் நடாத்தியதாக கூறப்படும் இடத்தில் இருந்து கல்லை எறிந்தாலே படக்கூடிய இடைவெளியே காணப்படும் நிலையில் துப்பாக்கியினால்சுடப்பட்டு பொலிசாருக்குத்தான் படாதபோதும் குறைந்த பட்சம் காரிற்காவது படாமல் போனமை இங்கே முதலாவது சந்தேகத்தினை ஏற்படுத்துகின்றது.
தாக்குதல்தாரி இருந்ததாகக் கூறும் பற்றைக்குள் ஒருவர் மறைந்திருக்கும் பட்சத்தில் பகல்வேளையிலேயே இனம்கானமுடியாது அந்த நிலையில் 12 மணியை தாண்டிய நடுநிசியில் இந்தப் பொலிசார் அவரை எவ்வாறு உறுதிப்படுத்திக்கொண்டனர். காரில் இருந்த 3 பொலிசாரிடமும் துப்பாக்கி இருந்தும் அவர்கள் பதில் தாக்குதல் மேற்கொண்டநிலையில் அவற்றில் இருந்து தாக்குதல்தாரி எவ்வாறு தப்பினார்?
தாக்குதல்தாரி குறுக்கு வீதியின் ஊடாக தப்பியோடியதாக கூறும் பொலிசார் தம்மிடம் இருந்த காரைப்பயன்படுத்தி ஏன் தாக்குதல்தாரியை துரத்திப்பிடிக்க முயலவில்லை.
இவற்றிற்கும் அப்பால் பொலிசார் தாக்குதல் நடாத்திய இடத்தில் தடயப்பொருட்களாக காட்டப்படும் இலக்கங்களான 1,2,3 களில் துப்பாக்கி வெற்றுக்கோதுகளா எனப்பார்வையிட்டபோது அதில் இலக்கம் 1ம் 3மே வெற்றுத்தோட்டா இலக்கம் 2 ஆனது வெடிக்காத தோட்டாவாகவே கானப்படுகின்றன். அவ்வாறு காணப்படும் தோட்டா கைத்துப்பாக்கி ஒன்றின் தோட்டாவினை விடவும் பெரிதாகவே காணப்படுகின்றது. அல்லது பொலிசார் பயன்படுத்தும் ஏ.கே.ரகத் துப்பாக்கியின் தோட்டாவினை விடவும் சற்று சிறிதாகவே கானப்படுகின்றது. அவ்வாறானால். அந்த துப்பாக்கி எது என்கின்ற கேள்விக்கு விடைதேடவேண்டியுள்ளது.
இவற்றின் அடிப்படையில் உண்மையில் இங்கே என்ன நடந்திருக்கும் என ஊடகவியலாளர்களினால் ஊகிக்க முடியும். ஏனெனில் ஓர் சாதாரண வாகன விபத்து ஒன்று இடம்பெற்று அதில் படைத்தரப்பு அல்லது தென்னிலங்கையர் தொடர்பு படுகின்றனர் என்றாலே உடனடியாக அப்பகுதிக்குள் ஊடகவியலாளர்களை உட்செல்ல இன்றுவரை தடைபோடும் படைத்தரப்பு குறித்த சம்பவத்தின்போது அங்கு சென்ற எந்த ஊடகவியலாளர்களிற்கும் ஓர் தடையோ அல்லது கட்டுப்பாடுகளோ விதிக்கவில்லை. மாறாக புகைப்படங்களிற்கு முகங்களைக் காட்டவும் தவறவில்லை. அவ்வாறானால் இங்கே இடம்பெற்றது என்ன என்கின்ற பெரும் கேள்விக்குப் பதிலளிக்க வேண்டிய தரப்புக்களே மௌனம் கலைத்தாக வேண்டும் .
இது படையினரது இருப்பிற்கான வழியை தேடும் முயற்சியா? அல்லது மீண்டும் ஒரு கைது வேட்டைக்கான அத்திவாரமா என்பதே தற்போது தமிழ் மக்களிடம் உள்ள ஐயம்.இவற்றில் எதுவுமே இல்லையானால் இது நிச்சயமாக பொலிசாரின் இலாபமீட்டலுக்கான எத்தனமாக இருக்குமோ என்றும் சந்தேகிக்க வேண்டியுள்ளது.
அதைவிடுத்து இது ஓர் திட்டமிட்ட படையினர் மீதான தாக்குதல் வடிவமாக இருக்கவே வாய்ப்புக்கள் இல்லை என்பதே நோக்கர்களின் அனுமானிப்பு. எது எவ்வாறாயினும் இது பாதுகாப்பு தரப்பினருக்கு எதிரான ஒரு பெரிய தாக்குதலுக்கான முயற்சியாக இருக்க முடியாதுஎன்பதே யதார்த்தம்.
.
Leave a Reply
You must be logged in to post a comment.