பெண்மை நலம் போற்றுவீர் நானிலம் தழைக்கச் செய்வீர்.

சிரேஷ்ட ஊடகவியலாளர் அன்னலட்சுமி இராஜதுரை)

மார்ச் 8 ஆம் திகதியாகிய இன்றைய தினம், உலகெங்கும் சர்வதேச பெண்கள் தினமாகச் கொண்டாடப்படுகிறது. அரசியல், பொருளாதாரம், சமூகம், கல்வி, மருத்துவம் போன்ற துறைகளில் தன்னம்பிக்கையுடன் தளராது நின்று போராடிச் சாதனை படைத்த பெண்களைப் பாராட்டி ஊக்கப்படுத்தும் ஓர் நாளாக இதனைக் கொண்டாடுவதுடன், பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், மற்றும் அவர்களது இருப்புக் குறித்துச் சிந்தித்து, மக்கள் மத்தியில் ஒரு பொதுவான விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், இந்நாளின் முக்கியத்துவமாக அமையும். எனினும், பலர் அதன் ஆழ்ந்த நோக்கத்தை மறந்து, அன்னையர் தினம் போலவோ அன்றி காதலர் தினம் போன்றோ வெறும் பெண்களை கௌரவிக்கும் ஒரு கொண்டாட்டமாக மட்டும் கருதிவிடின், சமத்துவம், சகோதரத்துவம், சகவாழ்வு என்ற அதன் உயர் நோக்குகள் எட்டப்படாமலே மறைந்துபோகக் கூடும்.

சர்வதேசப் பெண்கள் தினம், உலகப் பெண்களின் அயராத போராட்டத்தின் விளைவாக, ஐ.நா.வினால் பிரகடனப்படுத்தப்பட்ட ஒன்றாகும். சமூகத்தில் அடக்கி ஒடுக்கப்பட்டவர்களாக, இரண்டாம் தர பிரஜைகளாக உரிமைகளற்று, அடிமைகளாய் வாழ்ந்திருந்தவேளை, தமது நிலையை உணர்ந்தவர்களாக சம உரிமை, வாக்குரிமை வேலைக்கேற்ற வேதனம் போன்றவற்றைக் கோரி, உலகப் பெண்கள் போராட்டங்களை நடத்தினார்கள். அவற்றுற் சில வருமாறு,

அமெரிக்காவில் சோஷலிசக் கட்சியின் பிரகடனத்தையடுத்து 1909 ஆம் ஆண்டில் வேலைக்கேற்ற சம்பளம், வாக்கு உரிமை கோரி முதலாவது தேசிய பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது.

1910 ஆம் ஆண்டு ஜேர்மனியில் சோஷலிச ஜனநாயகக் கட்சியின் தலைவர் கிளேரா கெட்கின், கொப்பனாகனில் நடத்தப்பட்ட சர்வதேச உழைக்கும் பெண்கள் மகாநாட்டில் சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்பட வேண்டும் என ஆலோசனை வழங்கினார். இந்த ஆலோசனைக்கு ஏகோபித்த ஆதரவு கிடைத்தது.

1911 ஆம் ஆண்டு ஆஸ்திரியா, டென்மார்க், ஜேர்மனி, சுவிட்ஸர்லாந்து ஆகிய நாடுகளில் மார்ச் 19 ஆம் திகதி சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது. பெண்களுக்கான வேலை உரிமை, வாக்குரிமை, அரச நிர்வாக பதவிகளை வகிக்கும் உரிமை, ஆண் – பெண் பாகுபாடு நீக்கப்படல் ஆகியவை கோரப்பட்டன.

சமீபகாலத்தில் பெண்களது உரிமைகளைப் பாதுகாக்க பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டபோதும் மொத்த உலக சனத்தொகையான 1.3 பில்லியன் பேரில், மிகப் பெரும்பான்மையான பெண்கள் வறுமையின் கோரப்பிடிக்குள் சிக்கியிருக்கிறார்கள் என்பதும், சமமான வேலைக்கு, ஆண்களிலும் பார்க்கப் பெண்கள் 30 இல் இருந்து 40 சதவீதம் குறைவாகவே வேதனம் பெறுகிறார்கள் என்பதும், உலகெங்கிலும் வன்செயல்கள், பாலியல் பலாத்காரம் மற்றும் வீட்டு வன்முறைகள் காரணமாக கணிசமானதொகைப் பெண்கள், அங்கவீனமானவர்களாகவும், மரணத்தைத் தழுவுபவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதும் ஆய்வுகள் மூலமாக வெளிவந்த தகவல்களாகும்.

பிற்காலத்தில் பல மாநாடுகள், கூட்டங்கள், கருத்தரங்குகள் ஆகியன இது தொடர்பாக, அவ்வப்போது நடைபெற்றதைத் தொடர்ந்து, மார்ச் 8 ஆம் திகதி சர்வதேச பெண்கள் தினமாக அனுஷ்டிக்கப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து உலக நாடெங்கிலும் பெண்கள் சார்பாக விடுக்கப்பட்டு வந்த கோரிக்கையின் பயணாக, சர்வதேசப் பெண்கள் ஆண்டொன்றைப் பிரகடனப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையின் மூலம், பெண்களது பிரச்சினைகளை உலகத்தின் கவனத்தில் கொண்டுவரும் நோக்கில் ஐ.நா.1975 இல் நடவடிக்கை எடுத்தது. அத்துடன் அது அதே ஆண்டு மெக்ஸிக்கோ நகரில் முதலாவது பெண்கள் மகாநாட்டினை நடத்தியது.

Be the first to comment

Leave a Reply