1977 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்: 5/6 பெரும்பான்மை பெற்ற ஜே.ஆரும் அமிர்தலிங்கமும்
என்.கே. அஷோக்பரன் LLB (Hons)
2016 ஓகஸ்ட் 22
தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி – 54)
புதிய அரசியலமைப்பு ஒன்றுக்கான மக்களாணை
ஐக்கிய தேசியக் கட்சி தனது 1977 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் விஞ்ஞாபனத்தில் ‘ஒரு சோசலிஸ ஜனநாயக சமூகத்தை உருவாக்கும் இலக்கின் நிமித்தமாக புதியதொரு அரசியலமைப்பொன்றை உருவாக்கவும் ஏற்றுக்கொள்ளவும் நடைமுறைப்படுத்தவும்’ மக்களாணையை வேண்டியது. மக்களால் நேரடியாகத் தெரிவு செய்யப்படும் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையானது அறிமுகப்படுத்தப்படும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்ததுடன், அரசாங்கத்தின் அமைப்புமுறை பற்றியும் விளக்கப்பட்டிருந்தது. அத்தோடு புதிய அரசியலமைப்பின் ஊடாக அடிப்படை உரிமைகள் உறுதிப்படுத்தப்படும் எனவும், ஒவ்வொரு குடிமகனினதும், அவர் சிறுபான்மையோ, பெரும்பான்மையோ, எந்த மதத்தை, இனத்தை, சாதியைச் சேர்ந்தவராக இருப்பினும், அவரது அடிப்படை மனித உரிமைகள் உறுதிப்படுத்தப்படும் எனவும், ஊடக சுதந்திரமும் நீதித்துறையின் சுதந்திரமும் உறுதிப்படுத்தப்படுவதோடு அவை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்படும் எனவும் ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. தனது சர்வவல்லமை படைத்த ‘இளவரசன்’ (மாக்கியாவலியின் இளவரசன்) கனவிற்கு ஜே.ஆர், மக்கள் அங்கீகாரம் பெற முனைந்தார். இதனை ‘தர்மிஷ்ட’ (தர்மத்தின்பாலான) அரசாங்கம் என்ற முகமூடிக்குள் மறைத்து மக்கள் முன் சமர்ப்பித்தார். பிரசாரத்தின் இறுதிக்கட்டத்தில் தமது வெற்றி தொடர்பில் ஜே.ஆர் உறுதியான நம்பிக்கையுடையவராக இருந்தார். பிரசாரக் கூட்டமொன்றில் உரையாற்றும்போது, ‘திருமதி பண்டாரநாயக்கவை நாம் இத்தேர்தலில் கட்டாயம் தோற்கடிப்போம். 100 க்கு 90 ஆசனங்களைக் கைப்பற்றி ஐக்கிய தேசிய கட்சி தனிக்கட்சி பெரும்பான்மையோடு ஆட்சியமைக்கும்’ எனச் சூளுரைத்தார்.
பலத்துடன் களமிறங்கிய தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி
1977 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் வடக்கு-கிழக்கில் பலமான எதிர்பார்ப்புடன் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி களமிறங்கியிருந்தது. சா.ஜே.வே.செல்வநாயகம் காலமாகியதன் பின்னர், அவரது தொகுதியான காங்கேசன்துறைத் தொகுதியில் போட்டியிடுவது யார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவராகப் பொறுப்பேற்றிருந்த அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் 1970 ஆம் ஆண்டுத் தேர்தலில் தனது சொந்தத் தொகுதியான வட்டுக்கோட்டைத் தொகுதியில் தோல்வி கண்டிருந்தார். ஆனால் 1977 இல் காணப்பட்ட தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் எழுச்சி மிகு சூழலில் அவரால் வட்டுக்கோட்டைத் தொகுதியில் இலகுவாக வெற்றியீட்டக்கூடிய வாய்ப்பு இருந்தது. ஆனால் மறைந்த சா.ஜே.வே.செல்வநாயகம் வகித்த தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைமைப் பதவியை ஏற்றுக்கொண்ட அ.அமிர்தலிங்கம், மறைந்த சா.ஜே.வே.செல்வநாயகத்தின் தொகுதியான காங்கேசன்துறை தொகுதியில் போட்டியிட முடிவெடுத்தார்.
1970 ஆம் ஆண்டு தேர்தலில் உடுப்பிட்டித் தொகுதியில் தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட கே.ஜெயக்கொடி என்ற முன்னாள் மாவட்ட நீதிபதியிடம் தோல்விகண்டிருந்த ‘உடுப்பிட்டிச் சிங்கம்’ மு.சிவசிதம்பரம் 1977 ஆம் ஆண்டுத் தேர்தலில் நல்லூர்த் தொகுதியில் களமிறங்கினார். உடுப்பிட்டி தொகுதியில் ரீ.ராசலிங்கம் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி சார்பாக களமிறங்கினார். 1970 தேர்தலில் மு.சிவசிதம்பரத்தின் தோல்விக்கு முக்கிய காரணங்களுள் ஒன்றாக சாதிரீதியில் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் இடதுசார்புக் கட்சிக்கு வாக்களித்தமையே என்று டீ.பீ.எஸ். ஜெயராஜ், மு.சிவசிதம்பரம் பற்றிய தன்னுடைய கட்டுரையொன்றில் குறிப்பிடுகிறார். ஆகவே, 1977 ஆம் ஆண்டுத் தேர்தலில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த ஒருவர் உடுப்பிட்டி தொகுதியில் போட்டியிடுவதுதான் பொருத்தமானது எனக் கருதிய மு.சிவசிதம்பரம், நல்லூர் தொகுதியில் ஸ்ரீPலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் இம்முறை களமிறங்கிய அருளம்பலத்தை எதிர்த்துக் களமிறங்கினார்.
யாழ்ப்பாணத் தொகுதியில் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி சார்பில் எஸ்.யோகேஸ்வரன் என்ற சட்டத்தரணி களமிறக்கப்பட்டார். காங்கேசன்துறை சா.ஜே.வே. செல்வநாயகத்தின் தொகுதியாக இருந்தது போல, யாழ்ப்பாண தொகுதி ஜீ.ஜீ.பொன்னம்பலத்தினுடையதாக இருந்தது. ஜீ.ஜீ.யின் மறைவை அடுத்து அவரது மகனான குமார் பொன்னம்பலம் என்றறியப்பட்ட ஜீ.ஜீ.பொன்னம்பலம் ஜீனியர் யாழ்ப்பாணத் தொகுதியில் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி சார்பில் போட்டியிட விரும்பினார். இந்த வாய்ப்பு அவருக்கு மறுக்கப்பட்டது. இதற்கு உட்கூட்டணிப்பூசல் காரணமாக இருக்கலாம் என்று கூறப்பட்டது. குமார் பொன்னம்பலம் என்ற கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முதுமாணிப்பட்டம் பெற்ற சட்டத்தரணி, தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி தலைமைப்பதவிக்கு எதிர்காலத்தில் போட்டியாகிவிடக் கூடுமோ என்ற அச்சம், கூட்டணியில் பெரும்பான்மையாக இருந்த ‘தமிழரசுக் கட்சிக்காரருக்கு’ இருந்திருக்கலாம். இந்தக் கூட்டணி அமைந்ததன் முக்கிய நோக்கமே தமிழ்க் காங்கிரஸ் – தமிழரசுக் கட்சி என்ற இருபிரிவு அரசியலை விடுத்து, தமிழ் மக்களின் நன்மை கருதி ஒன்றிணைதலாகும். ஆனால் கூட்டணிக்குள் உட்பூசல் உருவாகியமையானது, அந்த ஆரோக்கியமான இலக்கைச் சிதைப்பதாகவே அமைந்தது. தனக்கான யாழ்ப்பாணத் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியினால் நிராகரிக்கப்பட்டதன் பின், சுயேட்சை வேட்பாளராக யாழ்ப்பாணத் தொகுதியில் போட்டியிட குமார் பொன்னம்பலம் தீர்மானித்தார். அதேவேளை தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியிலிருந்து சிறிமாவோ அரசாங்கத்தை ஆதரித்ததாக விலக்கப்பட்ட சி.எக்ஸ்.மாட்டீனும் யாழ்ப்பாணத் தொகுதியில் போட்டியிட்டார்.
கிளிநொச்சித் தொகுதியில் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி சார்பாக வீ.ஆனந்தசங்கரி, ஸ்ரீPலங்கா சுதந்திரக் கட்சி சார்பாக போட்டியிட்ட அமைச்சர் சீ.குமாரசூரியரை எதிர்த்துக் களமிறங்கினார். சிறிமாவின் தமிழ் அரசியலுக்கான நம்பிக்கை நட்சத்திரமாக வளர்க்கப்பட்டவர் சீ.குமாரசூரியர்.
கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்புத் தொகுதி இரட்டை அங்கத்தவர் தொகுதியாக இருந்தது. இந்தத் தொகுதியில் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி சார்பில் சீ.ராஜதுரையும், தமிழரசுக் கட்சி சார்பில் காசி ஆனந்தனும் களமிறக்கப்பட்டனர். இரட்டை அங்கத்தவர் தொகுதியாதலால் இரண்டு ஆசனங்களைக் குறிவைத்து இருவர் களத்தில் இறக்கப்பட்டிருந்தனர். ஆனால் தனக்குப் போட்டியாக இன்னொருவரையும் தேர்தல் களத்தில் இறக்கியிருந்ததை சீ.ராஜதுரை விரும்பவில்லை. இதேவேளையில் கிழக்கு மாகாணத்தில் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி சார்பாக மூதூர் தொகுதியில் எஸ்.எம்.மக்கீனும், சம்மாந்துறை தொகுதியில் எச்.எல்.எம்.ஹஸ்ஸீமும், கல்முனைத் தொகுதியில் ஏ.எம்.சம்சுதீனும் களமிறங்கினர். திருகோணமலைத் தொகுதியில் இராஜவரோதயம் சம்பந்தன் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி சார்பில் களமிறங்கினார்.
வடக்கு – தெற்கு முரண்பாடு
‘தனிநாட்டுக்கான’ மக்களாணையை வேண்டி தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி களமிறங்கியிருந்தது. இலங்கையின் வடக்கு-கிழக்கு தமிழர் பிரதேசங்களில் தேர்தல் பிரசாரங்களின் தன்மையும் ஏனைய பிரதேசங்களில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரங்களின் தன்மையும் முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது. இதற்குக் காரணம், இந்த மக்களின் பிரச்சினைகளின் முக்கியத்துவம் அடிப்படையில் வேறுபட்டிருந்தது. தெற்கிலே மூடிய பொருளாதார முறைக்கெதிரான, அடக்குமுறை, ஜனநாயக விரோதக் குடும்ப ஆட்சி மற்றும் வல்லாட்சிக்கு எதிரான பிரசாரங்கள் மக்கள் மத்தியில் ஐக்கிய தேசிய கட்சியினால் கொண்டு செல்லப்பட்டன. வடக்கு-கிழக்கு தமிழர் பிரதேசங்களில், தமிழ் மக்களுக்கு இனி இருக்கும் ஒரே வழி ‘தனிநாடு’ தான் என்ற பிரசாரம் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியினால் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது. தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் இறுதிப்பகுதியில் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது: ‘சுயநிர்ணய உரிமை என்ற அடிப்படையில் தமிழ்த்தேசம் ஒரு முடிவை எடுக்க வேண்டும். அத்தகைய முடிவை சிங்கள அரசாங்கத்துக்கும் முழு உலகத்துக்கும் பறைசாற்றுவதற்கான வழி தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கு வாக்களித்தலாகும். இவ்வாறு வாக்குகளின் மூலம் தெரிவுசெய்யப்படும் தமிழ்பேசும் பிரதிநிதிகள் இலங்கையின் தேசிய அரசுப் பேரவையில் (நாடாளுமன்றத்தில்) உறுப்பினர்களாக இருப்பதோடு, தமிழீழத்தின் தேசிய அரசுப் பேரவையினதும் அங்கத்தவர்களாக இருப்பார்கள். இந்தத் தமிழீழ தேசிய அரசுப் பேரவையானது தமிழீழ அரசின் அரசியலமைப்பை உருவாக்குவதோடு அதனை அமைதி வழியில் அல்லது நேரடிப் போராட்ட நடவடிக்கையினூடாக நடைமுறைக்குக் கொண்டுவரும்’.
வடக்கைப் பொறுத்தவரை தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி பெரும் எழுச்சியைக் கண்டது. ஆனால், கிழக்கு மாகாணத்தின் பல்லினத் தன்மை வடக்கைப் போல இலகுவானதொரு சவாலாக தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கு இருக்கவில்லை.
பொதுத்தேர்தலும் முடிவுகளும்
1977 ஜூலை 21 ஆம் திகதி பொத்துவில் தொகுதியைத் தவிர்ந்த ஏனைய தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. ஒரு வேட்பாளர் மரணமடைந்த காரணத்தினால் பொத்துவில் தொகுதிக்கான தேர்தல் செப்டம்பர் 12 அன்று நடத்தப்பட்டது. வாக்குப்பதிவு அதிகளவில் – 86.7மூ இடம்பெற்றிருந்தது. இது மாற்றத்தை மக்கள் வேண்டியதற்கான அறிகுறியாகவே இருந்தது. மொத்த வாக்குகளில் 50.9மூ வாக்குகளை ஐக்கிய தேசிய கட்சி பெற்றுக் கொண்டதுடன், மொத்த ஆசனங்களில் 82மூ ஆசனங்களைக் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்தது. மொத்தமுள்ள 168 ஆசனங்களில் 140 ஆசனங்களைக் கைப்பற்றி ஜே.ஆரின் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி சுதந்திர இலங்கையில் ஒரு தனிக் கட்சி பெற்ற அதிகூடிய 5/6 பெரும்பான்மையைப் பெற்றுக்கொண்டது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வெறும் எட்டு ஆசனங்களைப் பெற்று படுதோல்வியைச் சந்தித்தது. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஓர் ஆசனத்தைப் பெற்றுக்கொண்டது. சுயேட்சை வேட்பாளரொருவர் ஓர் ஆசனத்தைப் பெற்றுக்கொண்டார். தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி 18 ஆசனங்களை வெற்றிகொண்டு, நாடாளுமன்றத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக இடம்பெற்றது. இதன் விளைவாக சுதந்திர இலங்கையில் ஒரு தமிழர் எதிர்க்கட்சித் தலைவராகும் வாய்ப்பு தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்துக்கு வாய்த்தது.
கொழும்பு மாவட்டத்தை பொறுத்தவரையில், கொழும்பு மத்தி மூன்றங்கத்தவர் தொகுதியில் ஜாபிர் காதர் மற்றும் ஹலீம் இஷாக் ஆகியோர் வெற்றிபெற்றதைத் தவிர ஏனைய சகல தொகுதிகளிலும் யானைச் சின்னத்தில் போட்டியிட்ட ஐக்கிய தேசிய கட்சியினர் வெற்றியீட்டியிருந்தனர். இவர்களுள் ஜே.ஆர். ஜெயவர்த்தன கொழும்பு மேற்குத் தொகுதியிலும் ரணசிங்ஹ பிரேமதாஸ கொழும்பு மத்தி தொகுதியிலும் லலித் அத்துலத்முதலி ரத்மலானை தொகுதியிலும் வெற்றியீட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. கம்பஹா மாவட்டத்தின் களனி தொகுதியில் சிறில் மத்தியூவும் பியகம தொகுதியில் ரணில் விக்ரமசிங்ஹவும் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் வெற்றியீட்டியிருந்தனர். நுவரெலிய – மஸ்கெலிய மூன்றங்கத்தவர் தொகுதியில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிட்ட காமினி திசாநாயக்க வெற்றி பெற்றிருந்தார். அத்தோடு அதே தொகுதியில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சௌமியமூர்த்தி தொண்டமானும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிட்ட அநுர பண்டாரநாயக்கவும் வெற்றிபெற்றிருந்தனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி படுதோல்வி அடைந்த நிலையிலும் தனது சொந்தத் தொகுதியான அத்தனகல்ல தொகுதியில் சிறிமாவோ பண்டாரநாயக்க வெற்றியீட்டியிருந்தார். கம்பஹா தொகுதியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிட்ட எஸ்.டீ.பண்டாரநாயக்க வெற்றியீட்டியிருந்தார். தொம்பே தொகுதியில் போட்டியிட்டிருந்த பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க ஏறத்தாழ 2,500 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்திருந்தார்.
வடமாகாணத்தைப் பொறுத்தவரை தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி சகல தொகுதிகளிலும் வெற்றியீட்டியிருந்தது. நல்லூர் தொகுதியில் 89.42% வாக்குகள் பெற்று ‘உடுப்பிட்டிச் சிங்கம்’ மு.சிவசிதம்பரம் மாபெரும் வெற்றிபெற்றிருந்தார். காங்கேசன்துறைத் தொகுதியில் அ.அமிர்தலிங்கம் 85.41% வாக்குகளைப்பெற்று பெருவெற்றியீட்டியிருந்தார். மானிப்பாய் தொகுதியில் வி.தர்மலிங்கம் 83.99% வாக்குகளைப் பெற்று பெருவெற்றியீட்டியிருந்தார். யாழ்ப்பாணத் தொகுதியில் கடும் போட்டிக்கு மத்தியில் யோகேஸ்வரன் 56.6மூ வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றிருந்தார். அவரை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிட்டிருந்த குமார் பொன்னம்பலம் 34.7% வாக்குகளைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. திருகோணமலையில் கடும் போட்டிக்கு மத்தியில் இரா.சம்பந்தன் 51.76% வாக்குகள் பெற்று வெற்றியீட்டியிருந்தார். இருஅங்கத்தவர் தொகுதியான மட்டக்களப்பில் போட்டியிட்ட சீ.ராஜதுரை கடுமையான போட்டிக்கு மத்தியில் 24.7% வாக்குகள் பெற்று வெற்றியீட்டியிருந்தார். அதே தொகுதியில் போட்டியிட்ட காசி ஆனந்தன் 20.8% வாக்குகள் பெற்று மூன்றாவதாகவே வந்தார். தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி சார்பில் கிழக்கில் போட்டியிட்ட முஸ்லிம் வேட்பாளர்கள் யாவரும் தோல்வி கண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இருவேறு பிரசாரங்களை முன்னெடுத்திருந்த ஐக்கிய தேசிய கட்சியும் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியும் தாம் போட்டியிட்ட இடங்களில் பெருவெற்றியடைந்திருந்தன. இது இந்நாட்டின் இனப்பிளவு நிலையை தெளிவாக எடுத்துக் காட்டியதுடன், பிரிவினைக்கான தமிழ் மக்களின் அங்கீகாரமாகவும் அமைந்தது. இருகட்சிகளுக்கும் தாம் மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டிய கடப்பாடு இருந்தது.
(அடுத்த வாரம் தொடரும்)
Leave a Reply
You must be logged in to post a comment.