திருவள்ளுவரின் பெண்வழிச் செல்லுதலும் சில அய்யங்களும்!
இரா.சம்பந்தன்.
திருக்குறளிலே தொண்ணூற்றியோராவது அதிகாரமாக இருப்பது பெண்வழிச் சேறல் என்ற அதிகாரமாகும். மனித குலத்துக்கு நிறையச் செய்திகளைச் சொல்லும் இவ் அதிகாரம் பற்றி யாரும் பெரிதாக விவாதிப்பதில்லை. வள்ளுவர் என்ன சொல்கின்றார் அதற்கு உரையாசிரியர்கள் கொடுக்கும் விளக்கங்கள் சரியானவையா என்று யாரும் எண்ணிப் பார்த்ததாகவும் தெரியவில்லை.
இனிக் காமத்தான் வருவன நேரே பகையல்லவாயினும் ஆக்கம் சிதைத்தல் அழிவு தலைத்தருதல் என்னும் தொழில்களால் பகையோடு ஒத்தலின், பகைப்பாற்படுவனவாம்; ஆகலான், அவற்றைப் பகைப்பகுதியது இறுதிக்கண்கூறுவான் தொடங்கி ,முதற்கண் பெண்வழிச் சேறல் கூறுகின்றார். அதாவது தன்வழி ஒழுகற்பாலளாய இல்லாள் வழியே தான் ஒழுகுதல்.
இது பெண்வழிச் சேறல் என்ற அதிகாரத்துக்கு பரிமேலழகர் கொடுக்கும் வியாக்கியானம். இது தவறு. திருவள்ளுவர் பகை சம்மந்தமான விடயங்களுக்குப் பின்னே இவ்வதிகாரத்தை வைத்ததற்கு காரணம் உளவாளிகளாக பணியாற்றும் பெண்கள் மனைவிபோல நடித்து குடும்பமாக வாழுமிடத்தில் அந்தப் பெண் சொல்வதைக் கேட்டு நடத்தல் குற்றம் என்பதை எடுத்துக் காட்டுவதற்காகும்;.
திருவள்ளுவர் வாழ்க்கைத் துணைநலம் என்னும் அதிகாரத்திலே நல்ல மனைவி ஒருத்தியின் கடமைகள் எவையென்று வரையறுத்துக் கூறும் போது தன்னைக் காப்பாற்றிக் கொண்டு தன் கணவனையும் குறையின்றிப் பராமரித்து தான் பேசுகின்ற சொற்களிலே பாதிப்பு யாருக்கும் வராமல் பார்த்துக் கொண்டு அனைத்திலும் கவனமாக இருப்பவள் பெண் என்று சொல்லி விடுகின்றார்.
தற்காத்துத் தற்கொண்டான் பேணி தகைசார்ந்த
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.
(திருக்குறள் – வாழ்க்கைத் துணைநலம் – குறள் 56)
எனவே தன் சொல்லின் வழியே நடக்க வேண்டிய மனைவியின் வழியே தான் நடத்தல் என்று இவ்வதிகாரத்துக்கப் பொருள் உரைப்பது முன்னுக்குப் பின் வள்ளுவரை முரண்பட வைக்கும் செயலாகும். இந்த அதிகாரத்திலே இல்லாள் என்று வள்ளுவன் சுட்டுவது வாழ்க்கைத் துணை நலத்திலே காட்டிய ஒப்பற்ற மனைவியை அல்ல. மாறாக யுத்த அரசியல் ஆதாயத்துக்காக மனைவிபோல வாழ்ந்து விசயங்களைக் கறந்து எடுக்கும் நாடக மகளீரைப் பற்றித் தான் குறிப்பிடுகின்றார்.
இவர்களும் ஆதாயத்துக்காக விலைமாதர் போன்றே நடந்து கொள்வதால் இந்த அதிகாரத்துக்கு அடுத்ததாக விலைமாதர் பற்றிப் பேசுகின்ற வரைவில்; மகளிர் என்ற அதிகாரத்தை வைத்தார் திருவள்ளுவர். தமது உடல் சுகத்தை பணம் கொடுப்பார் யாவருக்கும் விற்பதன்றி அதற்கு தகுந்தோர் தகுதியற்றோர் வன்ற வரையறை இல்லாத மகளிர் என்று அதற்குப் பொருள்.
எனவே பெண்வழிச் சேறல் என்ற அதிகாரத்துக்கு பொய்யான நாடக மனைவிகள் வழியே நடத்தல் என்று குடும்பப் பெண்களை விலக்கி வைத்துவிட்டுப் பொருள் காண்பதே சாலச் சிறந்தததாகும். இந்த எண்ணத்தோடு பெண்வழிச் சேறலில் காணப்படுகின்ற குறள்களுக்கு உரைகாணச் செல்வோமாகில் பரிமேலழகர் முதற்கொண்டு கலைஞர் கருணாநிதி ஈறாக அனைவரும் சொல்லும் உரைகள் குப்பைத் தொட்டிக்குத்தான் போக நேரிடும்.
இனிப் பெண்வழிச் சேறலில் உள்ள முதல் குறளுக்குப் போகின்றோம்.
மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினை விழைவார்
வேண்டாப் பொருளும் அது.
இன்பம் காரணமாக தன் மனையாளை விழைந்து அவள் தன்மையராய் ஒழுகுவார் தமக்கு இன்துணையாய அறத்தினை எய்தார் இனிப் பொருள் செய்தலை முயல்வார் இடையீடென்று இகழும் பொருள் அவ்வின்பம் என்று பொருள் சொன்னார் பரிமேலழகர்.
கடமையுடன் கூடிய செயல்புரியக் கிளம்பியவர்கள் இல்லற சுகத்தைப் பெரிதெனக் கருதினால் சிறப்பான புகழைப் பெற மாட்டார்கள் இது கலைஞர் உரை
இவையெல்லாம் வள்ளுவனின் உள்ளத்தைப் புரிந்து கொள்ளாத பொய் உரைகள். உண்மையாக இந்தக் குறளுக்கு குறளின் போக்குப்படி உரை வகுக்க வேண்டும் என்றால் பகைவர்களின் வியூகங்களை சிதைக்கும் திட்டங்களைத் தீட்ட முற்படுவோர் மனைவிபோல இருந்து அதை அறிய முயல்வாளுக்கு அருகே உணவுக்காகவோ உறவுக்காகவோ அன்றி ஓய்வுக்காகவோ சென்றால் அந்தத் திட்டத்தால் பெரும் பயனை அடைய மாட்டார்கள். அது அவர்களுக்கு தேவையில்லாத வேலையும் ஆகும் என்றே உரை வகுக்க வேண்டும்.
பேணாது பெண் விழைவான் ஆக்கம் பெரியதோர்
நாணாக நாணும் தரும்.
தன் ஆண்மையை விட்டு தன் மனையாளது பெண்மையை விழைவான் எய்திநின்ற செல்வம் இவ்வுலகத்து ஆண்பாலார்க்கெல்லாம் பெரியதோர் நாண் உண்டாகத் தனக்கும் நாணுதலைக் கொடுக்கும் இது இந்தக் குறளுக்கு பரிமேலழகர் வலிந்து புகுத்திய தவறான உரை.
ஏற்றுக் கொண்ட கொள்கையை பேணிக் காத்திடாமல் பெண்ணை நாடி அவள் பின்னால் திரிபவனுடைய நிலை வெட்கித் தலைகுனிய வேண்டியதாகிவிடும் இது கலைஞரின் திருந்தா மனம் கண்ட பொருந்தா உரை.
இவர்கள் உரைகள் தவறு என்றால் சரியான உரை எப்படி அமையும். தான் வகுத்த திட்டத்தைப் பேணிக் காத்திடாமல் மனையில் இருக்கும் பெண்ணில் ஆசைப்பட்டு செல்பவன் மட்டுமல்ல அவனைச் சார்ந்தவர்களும் அவமானப்படக்கூடியதாக அத்திட்டம் தோல்வியுற்றுப் போகும் இப்படி ஒரு நேர் கோட்டில் தான் நாம் உரை சொல்ல வேண்டும். ஏனெனில் பகை சார்ந்து அதிகாரம் நிற்பதாலே உரையும் பகை சார்ந்து அமைதலே நன்றாகும்.
அடுத்து ஒரு குறள்
இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும்
நல்லாருள் நாணுத் தரும்.
ஒருவன் இல்லாள் மாட்டுத் தாழ்தற்கு ஏதுவாய அச்சம் அது இலராய நல்லாரிடைச் செல்லுங்கால் நாணுதலை அவனுக்கு எக்காலத்தும் கொடுக்கும் இது பரிமேலழகர். நற்குணமில்லாத மனைவியைத் திருத்த முனையாமல் அவளிடம் பணிந்து போகின்ற கணவன் நல்லோர் முன்னிலையில் நாணமுற்று நிற்கின்ற நிலைக்கு ஆளாக நேரிடும். இது கலைஞர் இவர்கள் உரை இந்தக் குறளுக்குப் பொருந்தாது என்று திரும்பத் திரும்ப நாம் சொல்லாமல் சரியான உரை எப்படி அமையுமென்று பார்ப்போம்.
அவளை யாரென்று உணராமல் வீட்டிலே இருப்பவளுக்கு விட்டுக் கொடுத்து அவளோடு நெருங்கி நடக்கின்ற ஒருவன் மனைவியிடத்திலே எச்சரிக்கையாக இருக்கும் நல்லவர்களின் சந்தேகத்துக்கு ஆளாகி அவமானமும் அதனால் வெட்கமும் அடைய நேரிடும்.
இந்த உரை இந்த அதிகாரத்தின் முதல் மூன்று குறள்களுக்கும் ஆனது. இது போல ஏனைய குறள்களுக்கும் உரைகாட்ட முடியும். ஆனால் கட்டுரையின் நீட்டம் கருதி ஏனைய குறள்களுக்குள் இந்த ஆய்வு செல்லவில்லை.
இல்வாழ்க்கை அடுத்து வாழ்க்கைத் துணைநலம் அடுத்துப் புதல்வரைப் பெறுதல் என்ற அதிகார ஒழுங்கோடு நல்ல மனைவி பற்றிய செய்திகளை முடித்துக் கொண்ட வள்ளுவர் திரும்பவும் பெண்வழிச் சேறல் என்று புது அதிகாரம் வகுத்து ஏன் தொடங்க வேண்டும் என்ற சந்தேகமும் அந்த அதிகாரத்தை பகைப் பொருட்களோடு ஏன் சேர்த்து வைக்க வேண்டும் என்ற சந்தேகமும் தான் முதலில் எம் மனத்தில் எழுதல் வேண்டும்.
அந்தச் சந்தேகம் எழும்போது வாழக்கை நலத்துக்கு துணையென்று வள்ளுவரால் போற்றி உரைக்கப்பட் வாழ்க்கைத் துணைநலம் என்று சொல்லப்படும் மனைவியின் நன்மைதரும் பேச்சைக் கேட்கக்கூடாது என்றோ அவள் காட்டும் வழியில் செல்லக் கூடாது என்றோ வள்ளுவர் இன்னொரு அதிகாரத்தில் மறுத்தால் அது நியாயமான செயலாகாது.
ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய் என்ற குறளிலே கூட பரிமேலழகர் பெண்ணியல்பால் தானாக அறியாமையின் கேட்ட தாய் எனவும் கூறினார் என்று பெண்களையும் வள்ளுவரையும் ஒருசேரச் சிறுமைப்படுத்தினார். பிறந்தவுடனே கண்டு மகிழ்ந்த தாய் சான்றோன் எனக் கேட்டு மகிழ்ந்தாள் என்ற சாதாரண உரையை அவர் காணவில்லை. அது போலவே பெண்வழிச் சேறலிலும் நடந்தது.
சிறை வைத்துப் பெண்ணின் நடத்தையைப் பாதுகாத்து என்ன பலன் கிடைக்கப்போகிறது. நான் நல்லவளாக இருப்பேன் என்று பெண்கள் நினைத்து வாழ்வது தானே சிறப்பு என்று புரட்சி முழக்கமிட்ட வள்ளுவரைக் கொண்டுபோய் ஆணாதிக்க வாதியாக சித்தரித்து இவர்களெல்லாம் உரையெழுதுவது திருக்குறளுக்குச் செய்யும் மிகப்பெரிய துரோகமாகும். (தகவல் 33 ஆவது ஆண்டு மலர் – 28-04-2024)
Leave a Reply
You must be logged in to post a comment.