பாரதியார் கட்டுரைகள்
தத்துவம் – யாரைத் தொழுவது? |
பல தேவராக வணங்காமல் ஒரே மூர்த்தியாகத் தெய்வத்தைஉபாஸனை செய்வதற்கும் இந்து மதம் இடங்கொடுக்கிறது. இவ்வித உபாஸனை சித்தத்தை எளிதிலே ஒருமுகப்படுத்தும். பக்திக்கு இதுவே சுலபமான வழி. ஆதலால், வீர சைவன், வீர வைஷ்ணவன் இவர்களுடைய உபாஸனை வேத விரோதமில்லை. இதர தெய்வங்களை விஷயந் தெரியாமல் பழித்தால், அதுதான் வேத விரோதம். வட ஹிந்துஸ்தானத்தில் சில இடங்களில் ராமன் கக்ஷி, கிருஷ்ணன் கக்ஷி என இரண்டு பகுதிகளாகப் பிரிந்து சிலர் பரஸ்பரம் பகையைச் செலுத்துகிறார்கள். இஃதெல்லாம் மடமையின் லக்ஷணம்.பிரமாவுக்குக் கோவில் அரசமரத்தடியில் பிள்ளையார் கோவிலாக ஊர்தோறும் ஏற்பட்டிருக்கிறது. சிவனுக்கும் பார்வதிக்கும் விவாகம் நடந்தபோது, முதலாவது கணபதிக்குப் பூஜை “நடந்ததாக வேதம் சொல்லுகிறது. வேதத்தில் அக்னியை இரண்டு ரூபமாக்கி, ஒரு ரூபம் குமாரனாகவும் தேவசேனாதிபதியாகவும், மற்றொரு ரூபம் தேவகுரு வாகவும் சொல்லப்படுகிறது. அக்னியை ருத்ரனுடைய பிள்ளை என்று வேதம் சொல்லுகிறது. அக்னியே ருத்ரனென்றும் சொல்லப்படுகிறது. தேவகுரு, அமிர்த வாக்கையுடைய பிரஹ்மணஸ்பதி, கணநாதன். அவனையே ஹிந்துக்கள் ஸகல பூஜைகளிலும், ஸகல கர்மங்களிலும், முதலாவது வணங்குகிறார்கள். வேதபுராணங்களில் சொல்லப்படும் மூர்த்திகளெல்லாம் ஒரே பரமாத்மாவின் கலைகளென்பதை ஹிந்துக்கள் எப்போதும் மறக்கக் கூடாது.”ஒக்கத்தொழு கிற்றிராயின், கலியுகம் ஒன்றுமில்லை”என்று நம்மாழ்வார் சொல்கிறார். ஹிந்துக்கள் தங்களுடைய வேதப் பொருளை நன்றாகத் தெரிந்து கொண்டு கூடித் தொழுவார்களானால், கலியுகம் நீங்கிப் போய்விடும். |
https://www.tamilvu.org/ta/library-lA450-html-lA450cnt-115102#top
Leave a Reply
You must be logged in to post a comment.