பிரதமர் மோடி கொடுத்த வாக்குறுதிகள் காற்றோடு காற்றாகக் கரைந்துவிட்டன!
நக்கீரன்
மற்றவர்களை குறைகூறுவதற்கும் குற்றம் சாட்டுவதற்கும் பலர் இருக்கிறார்கள். அவை மிகவும் சுலபமானது. ஆனால் வினை செய்வதற்கு மட்டும் யாரும் இல்லை அல்லது மிகச் சொற்பமானவர்களே இருக்கிறார்கள்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 55 ஆவது கூட்டத்தொடரின் போது ஐ.நா. மனித உரிமைகளுக்கான ஆணையாளர் வோல்கர் டர்க், இலங்கைபற்றி ஒரு வாய்மொழி அறிக்கையை மட்டும் சமர்ப்பித்துள்ளார். அடுத்து செப்தெம்பர், 2024 இல் நடைபெறும் கூட்டத் தொடர்பிலேயே இலங்கை பற்றிய தீர்மானத்தை அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் முன்வைப்பார்கள்.
//உலகத் தமிழர் பேரவை மற்றும் கனேடிய தமிழ் காங்கிரஸ் உட்பட பல அமைப்புகளின் உண்மை முகம் வெளிப்பட்டு அவர்கள் இப்போது ‘தமிழர் அதிகம் வாழும் வடக்கு – கிழக்கு பகுதியில் இருந்து ஆயுதப்படையினரை அகற்ற வேண்டாம்’ என்று கூறும் பவுத்த மத குருக்களுடன் இணைந்து மக்களைத் தெளிவுபடுத்தும் பயிற்சிப் பட்டறைகளை நடத்தி வருகின்றனர்.//
இது நாற்காலியில் இருந்து கொண்டு அரசியல் செய்யும் மருத்துவர் வல்லிபுரநாதன் அவர்களது குற்றச்சாட்டு. “உலகத் தமிழர் பேரவை மற்றும் கனடிய தமிழர் பேரவையும் காங்கிரஸ் உட்பட பல அமைப்புகளின் உண்மை முகம் வெளிப்பட்டு அவர்கள் இப்போது “தமிழர் அதிகம் வாழும் வடக்கு – கிழக்கு பகுதியில் இருந்து ஆயுதப்படையினரை அகற்ற வேண்டாம் என்று கூறும் பவுத்த மத குருக்களுடன் இணைந்து மக்களைத் தெளிவுபடுத்தும் பயிற்சிப் பட்டறைகளை நடத்தி வருகின்றனர்” என்பது தவறான குற்றச்சாட்டு.
உலகத்தமிழர் பேரவையும் கனடிய தமிழர் பேரவையும் ‘கிழக்குப் பகுதியில் இருந்து ஆயுதப்படையினரை அகற்ற வேண்டாம்’ என்று கூறும் பவுத்த மத குருமார்களுடன் அல்ல, சிறந்த இலங்கைக்கான பவுத்த சங்கத்தை சார்ந்த பவுத்த தேரர்களோடு சேர்ந்துதான் பயிற்சிப் பட்டறை நடைபெறுகிறது. ஒட்டுமொத்த பவுத்த தேரர்களும் இனவாதிகள் என நினைப்பது தவறு.
தமிழ்த் தேசிய இனச் சிக்கலுக்கு தீர்வு காண வேண்டும் என்றால் தென் இலங்கை அரசியல்வாதிகள், சிவில் சமூகங்கள், பவுத்தமத பீடாதிபதிகள் போன்ற தரப்புகளுடன்தான் பேசவேண்டும். அரசியலில் அ, ஆ தெரிந்தவர்களுக்கு இது நன்கு விளங்கும். மருத்துவர் வல்லிபுரநாதனுக்கு மட்டும் தெரியாமல் இருக்கிறது.
மேற்குலக நாடுகள் சரி, இந்தியா சரி, ஈழத்தமிழர் சார்பாக இலங்கை அரசோடு பேசப் போவதில்லை. தமிழர்கள்தான் தென்னிலங்கையோடு பேச வேண்டும். வேறு வழியில்லை. நாங்கள் நம்பியிருந்த இந்தியா கூட இன்று கைவிரித்து விட்டது. “எங்களால் இலங்கை அரசை வற்புறுத்தத்தான் முடியும். நீங்கள்தான் ஒற்றைமையாக இருந்து இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்” என கடந்த மாதம் தன்னைச் சந்தித்த தமிழ் அரசியல் தலைவர்களுக்கு இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா சொல்லியிருக்கிறார். உண்மையில், சுற்றி வளைக்காமல் இந்தியாவின் நிலைப்பாட்டை வெளிப்படையாகச் சொன்ன இந்தியத் தூதுவரைக் கட்டாயம் பாராட்டத்தான் வேண்டும்.
மீண்டும் பெப்ரவரி 16, 2024 அன்று யாழ்ப்பாணத்தில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த இந்திய தூதுவர் “பொருளாதாரச் சிக்கல் தீர்ந்தால் அரசியல் சிக்கலும் தீர்ந்துவிடும்”என்று சொல்லி யிருக்கிறார். பொருளாதாரச் சிக்கல் எப்போது தீரும்? அதை அவர் சொல்லவில்லை.
மார்ச் 14, 2015 அன்று இந்திய நிதியுதவியுடன் யாழ்ப்பாண கலாச்சார மையத்திற்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பேசிய பிரதமர் மோடி “ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அமைதி, ஒற்றுமை மற்றும் நல்லெண்ணம் அவசியம்” எனக் குறிப்பிட்டார். மேலும் ஒரு நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு “கூட்டுறவு கூட்டாட்சி” அவசியம் என்று இலங்கை நாடாளுமன்றத்தில் தான் முன்னர் கூறியதை நினைவு கூர்ந்தார்.
At the ceremony to lay the foundation stone of the India-funded Jaffna Cultural Centre, Modi said that Peace, Unity and Goodwill are essential for a country’s development, and recalled that he told the Lankan parliament that “cooperative federalism” is necessary for the all round development of a country.) (https://www.newindianexpress.com/world/2015/Mar/14/modi-bonds-with-lankan-tamils-with-aplomb-728578.htm)
08 பெப்ரவரி, 2021 அன்று இலங்கை பிரதமர் மகிந்த இராசபக்ச, அவரது அமைச்சரவை சகாக்கள், அதிகாரிகள் என பத்துப் பேர் அடங்கிய உயர் நிலைக் குழு ஒன்று நான்கு நாள் அரசு முறைப் பயணமாக இந்தியாவுக்கு சென்றிருந்தது. அப்போது “இலங்கையில் உள்ள தமிழர்களுக்குச் சம உரிமை அளித்து அவர்கள் அமைதியாக வாழ வழிவகை செய்திட வேண்டும்” என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிரதமர் இராசபக்சவிடம் வலியுறுத்தி இருந்தார். தமிழர்களுக்கு உரிய நீதி மற்றும் மரியாதை வழங்கப்பட வேண்டும். இலங்கை தமிழ் மக்களின் இந்த எதிர்பார்ப்புகளை இலங்கை அரசு உணரும் என நான் நம்புகிறேன்” என்றும் பிரதமர் மோதி குறிப்பிட்டார். (https://www.bbc.com/tamil/india-51425962)
மீண்டும் 21 பெப்ரவரி 2021 அன்று சென்னையில் பல்வேறு புதிய திட்டங்களைத் தொடக்கி வைத்துப் பேசிய பிரதமர் மோடி “ஒன்றுபட்ட இலங்கையில் சமத்துவம், நீதி, அமைதி மற்றும் கண்ணியத்துடன் வாழ்வதற்கான இலங்கைத் தமிழ் சமூகம் உட்பட சமூகத்தின் அனைத்துப் பிரிவினரின் வேட்கைக்கும் இடமளிக்கும் எதிர்காலத்தை உருவாக்குவதற்கான உங்கள் முயற்சிகளில் நாங்கள் [இலங்கை] உடன் நிற்கிறோம்.) ஈழத் தமிழர்கள் சமத்துவம், சமநீதி, அமைதி, கண்ணியத்துடன் வாழ மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்” என்றார்.
“We stand with [Sri Lanka] in your efforts to build a future that accommodates the aspirations of all sections of society, including the Sri Lankan Tamil community, for a life of equality, justice, peace and dignity in a united Sri Lanka.” ( Read more at: https://tamil.oneindia.com/news/chennai/centre-ensures-tamils-in-srilanka-live-with-equality-justice-peace-and-dignity-pm-modi-411979.html)
பெப்ரவரி 10, 2024 இல் கம்பன் விழாவில் கலந்து கொள்ள யாழ்ப்பாணம் சென்ற தமிழ்நாடு பாஜக இன் மாநிலத் தலைவர் அண்ணாமலை ” இலங்கைத் தமிழர்களை மோடி நெஞ்சத்தில் சுமந்து கொண்டிருக்கிறார்” என உறுதிபடக் கூறினார். இந்தப் புகழாரம் இலங்கைத் தமிழர்களை மகிழ்விக்கச் சொல்லப்பட்டதாகும். பிரதமர் மோடி தமிழ்நாட்டில் நடைபெறும் கூட்டங்களில் தமிழில் “வணக்கம்” சொல்வதும் திருக்குறளை மேற்கோள் காட்டிப் பேசுவது பாஜ கட்சியை தமிழ்நாட்டு வாக்காளரிடம் விற்பனை செய்யப் போடப்படும் வேடம் மட்டுமே.
இந்தியாவில் கூட மோடியின் பாஜக ஆட்சிக்கும் ஸ்டாலினின் திமுக ஆட்சிக்கும் அண்மைக் காலமாக தேர்தல் அரசியல் மற்றும் சித்தாந்தப் போர் மும்மரமாக நடந்து கொண்டிருக்கிறது. இரண்டு வாரத்தில் பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு 4 முறை வந்து போய்விட்டார். ஒன்றிய அரசின் மேம்பாட்டுத் திட்டங்களைத் தொடக்கி வைக்க அவர் வருகை தந்தாலும், உண்மையான நோக்கம் இந்தியாவின் 18 ஆவது மக்களவைக்கான தேர்தல் தொடர்பானது. இந்தத் தேர்தல் ஏப்ரல் அல்லது 2024 மாதங்களில் நடைபெறயிருக்கிறது.
தில்லி அரசு திட்டமிட்டு தமிழ்நாடு அரசை வஞ்சிக்கிறது என்ற எதிர்ப்புக் குரல், தமிழ்நாடு மாநில பாஜகட்சி நீங்கலாக, தமிழ்நாடு முழுதும் எதிரொலிக்கிறது. சென்ற ஆண்டு தமிழ்நாட்டில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளப் பெருக்குக் காரணமாக பலத்த இழப்பு ஏற்பட்டது. குறிப்பாக தமிழ்நாட்டு வேளாண்மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். இந்த இழப்புக்களைக் காரணம் காட்டி தமிழ்நாடு அரசு ரூபா 37 ஆயிரம் கோடி நிவாரண நிதியுதவியைத் மோடி அரசிடம் கேட்டது. ஆனால் மோடி அரசு தமிழ்நாட்டுக்கு ஒரு ரூபா கூடத் தரமுடியாது என்று கையை விரித்துவிட்டது.
மோடியின் ஆட்சியில் தமிழர்கள் மதிக்கப்படுவதில்லை. திமுக அரசையும் அதன் ஆதரவாளர்களையும் மோடி எதிரிகாயகவே நினைக்கிறார். இதன் நீட்சியாக இலங்கைத் தமிழர்களையும் மோடி அரசு மதிப்பதில்லை. 1987 இல் எழுதப்பட்ட இலங்கை – இந்திய உடன்பாட்டை நடைமுறைப்படுத்த காங்கிரஸ் அரசு போலவே மோடி அரசும் அக்கறை காட்டவில்லை. இலங்கைத் தமிழர்கள் என்ன நடந்தாலும் இந்தியாவோடு நட்புப் பாராட்டுவார்கள் அவர்களுக்கு வேறு தேர்வில்லை என மோடி அரசு நினைக்கிறது. ஒரு கலாசார மண்டபம், யாழ்ப்பாணப் பன்னாட்டு விமான நிலையம், நாகபட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவை போன்றவற்றைச் செய்து கொடுத்தால் போதும் என மோடி அரசு நினைக்கிறது.
இன்று மோடியின் நெருங்கிய நண்பர் அதானி இலங்கையில் பல நூறு மில்லியன் பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களில் முதலீடு செய்துள்ளார். தமிழர் நலனைவிட அதானியின் முதலீடுகளை பாதுகாப்பதில் மோடி அதிக அக்கறை கொண்டுள்ளார்.
“ஒன்றுபட்ட இலங்கையில் சமத்துவம், நீதி, அமைதி மற்றும் கண்ணியத்துடன் வாழ்வதற்கான இலங்கைத் தமிழ் சமூகம் உட்பட சமூகத்தின் அனைத்து பிரிவினரின் வேட்கைக்கும் இடமளிக்கும் எதிர்காலத்தை உருவாக்குவதற்கான உங்கள் முயற்சிகளில் நாங்கள் [இலங்கை] உடன் நிற்கிறோம்.” என்ற பிரதமர் மோடியின் உறுதி மொழியை இலங்கைத் தமிழர்கள் நம்ப அணியமாக இல்லை. இலங்கைக்கான இந்திய தூதுவர் சொன்ன செய்தியே இந்தியாவின் நிலைப்பாடாகும். பிரதமர் மோடி எம்மை மகிழ்விக்க மீண்டும் மீண்டும் பசப்பு வார்த்தைகளைப் பேசுகிறார்.
இலங்கை தமிழர்கள் சமத்துவம், சமநீதி, அமைதி, கண்ணியத்துடன் வாழ நடவடிக்கை எடுப்போம் என பிரதமர் மோடி கொடுத்த வாக்குறுதிகள் காற்றோடு காற்றாகப் கரைந்துவிட்டன. இப்படிச் சொல்வதால் நாம் இந்தியாவைப் பகைக்க வேண்டும் என்பதில்லை. ஆனால் இந்தியாவோடான உறவு பற்றி நாம் மீளாய்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இதுதான் இன்றைய அரசியல் யதார்த்தமாகும். (கனடா உதயன் 08-03-2024)
Leave a Reply
You must be logged in to post a comment.