தமிழர் உரிமை வலியுறுத்திய மோதி: இலங்கை தமிழ் அரசியல் தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்?
10 பிப்ரவரி 2020
இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை, நீதி வழங்க வேண்டும் என இந்தியா வந்துள்ள மகிந்த ராஜபக்ஷவிடம் வலியுறுத்தியதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் பிபிசி தமிழிடம் தமிழ் அரசியல் தலைவர்கள் தெரிவித்த கருத்துக்கள்.
`இந்தியா தனது நிலைப்பாட்டை மீள் பரிசீலனை செய்ய வேண்டும்`
இந்தியா தன்னுடைய நலனுக்காகவும் ஈழத்தமிழர் நலனுக்காகவும் இலங்கை தொடர்பில் இதுவரை எடுத்துவந்திருக்கும் தனது நிலைப்பாட்டை மீள் பரிசீலனை செய்யவேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார் .
“இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது இந்தியாவின் நலன்களை பாதுகாப்பதற்கு. ஆனால் இன்று இந்திய இலங்கை ஒப்பந்தம் இலங்கை அரசினால் முழுமையாக மீறப்பட்டு, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு நலன்கனை மீறி, சீனா போன்ற நாடுகள் இலங்கையில் வேரூன்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த அனுமதியை வழங்கியதே ராஜபக்ஷ அரசாங்கம்தான். இலங்கையை முற்று முழுதாக சீனாவிற்கு கடனாளி நாடாக மாற்றி அமைத்து இலங்கையில் இருக்கின்ற கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த சொத்துகளை சீனாவிற்கு விற்பனை செய்கின்ற நிலைமை காணப்படுகிறது.
இலங்கையில் இந்தியா ஆழமான இருப்பை உறுதிப்படுத்துவதற்கு அனுமதிக்காமல் தடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். எங்களைப் பொறுத்தவரையில் இந்தியா தன்னுடைய நலனுக்காகவும் ஈழத்தமிழர் நலனுக்காகவும் இதுவரை எடுத்துவந்திருக்கும் தனது நிலைப்பாட்டை மீள் பரிசீலனை செய்யவேண்டும்.
இந்தியா உலக வல்லரசாக மாறிவருகிற நிலையில் தன்னுடைய அயல் பிரதேசத்தில் தனக்கு சவால் விடும் வகையில் ஓர் அரசு இருப்பதை ஒருநாளும் ஏற்றுக்கொள்ளமுடியாது. அது ஒருநாளும் இந்தியாவின் நலன்களுக்கு உதவப்போவது இல்லை,
இந்திய இலங்கை ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டு 20 ஆண்டுகளுக்குப் பிறகு அதனை உதாசீனம் செய்து இன்று சீனாவிற்கு இலங்கைத் தீவில் பெரிய இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
ஈழத்தமிழர்களின் பிரச்சனை இந்தியாவின் நலன் சார்ந்த பிரச்சனையில் ஒரு முக்கியப் புள்ளி. அதை சரியாக விளங்கிகொண்டு இனியாவது இந்தியா ஆக்கபூர்வமான நிலைப்பாட்டை எடுத்து ஈழத்தமிழர்களின் அரசியல் நிலைப்பாட்டை ஏற்று அதற்கு முழுமையான அங்கீகாரம் கொடுத்து இந்தியாவின் நலன்களை அதனூடாக இலங்கை தீவில் பேணுவதற்கு முன்வரவேண்டும்.
கோட்டாபய ராஜபக்ஷ அண்மையில் இந்தியா சென்றபோது, 13ம் திருத்தத்தை நடைமுறைபடுத்தவேண்டும், மாகாண சபைக்கு முழுமையான அதிகாரம் வழங்க வேண்டும் என இந்தியா வலியுறுத்தியபோது அதை அவர் நிராகரித்துள்ளார். மகிந்த ராஜபக்ஷ கூட மிகத் தெளிவாக 13ம் திருத்தத்தை அமல்படுத்துவதில் சில பிரச்சனைகள் இருப்பதாகக் கூறியுள்ளார். இந்நிலையில் தொடர்ந்து 13ம் திருத்தத்தை இந்தியா வலியுறுத்துவதில் பயன் இல்லை.
ஏனெனில் தமிழ் மக்கள் கூட 13ம் திருத்தத்தை நிராகரித்துதான் வந்திருக்கின்றார்கள். தமிழ் மக்கள் கடந்த 70 வருடங்களுக்கு மேலாக சமஷ்டி தீர்வு மட்டும் தான் தமிழ் தேசத்தை இலங்கை தீவில் காப்பாற்றும் என்று கருதி வந்திருக்கிறார்கள்.
இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட 13வது திருத்தம் ஒரு ஒற்றையாட்சிக்குரிய அரசியலமைப்பு. ஒற்றையாட்சி அரசியலமைப்பு எந்தவொரு காரணத்தினாலும் தமிழ் மக்களை காப்பாற்ற போவதில்லை. மாறாக அது தொடர்ந்து தமிழ் மக்களை அழிக்கவே வழிவகுக்கும்.
- தமிழர்களுக்கு சம உரிமை: “ராஜபக்ஷவிடம் மோதியின் வலியுறுத்தல் ஒரு கண்துடைப்பு”
- இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு சம உரிமை, நீதி வேண்டும் – பிரதமர் மோதி வலியுறுத்தல்
இந்தியாவில் இருக்கும் பெரும்பான்மை மக்கள் அங்குள்ள பிற தேசிய இனங்களையும், தேசங்களையும் முழுமையாக அரவணைத்து ஒரு பன்முகப்படுத்தப்பட்ட அடையாளத்தை பேணும் நோக்கத்தோடு இந்தியன் என்ற கருத்துருவாக்கத்தை செய்துள்ளனர். ஆனால் இலங்கையில் அப்படி இல்லை.
இலங்கையில் ஸ்ரீலங்கன் என்பது முற்றுமுழுதாக சிங்கள பவுத்த அடையாளம். 75 சதவீதமான சனத்தொகை ஒரு இனத்தை சார்ந்த நிலையில் அந்த இனம் இலங்கை தீவில் வேறு எந்தவொரு தரப்பும் உரிமை கோரமுடியாது என்று சொல்கின்ற நிலைமையில் இங்கு இருக்கும் நிலைமை இந்தியா போன்று அல்ல என்று அவர் தெரிவித்தார்.
`இலங்கை பிரச்சனை தீரவில்லை என மோதி சுட்டிக் காட்டுவது நல்லது`
இலங்கை பிரச்சனை இன்னும் தீரவில்லை என இந்திய பிரதமர் இந்திய வெளிவிவகார அமைச்சர் போன்றோர் அடிக்கடி சுட்டிக் காட்டி வருகின்றமை வரவேற்கத்தக்கது என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமர், இந்திய வெளிவிவகார அமைச்சர்களை பொறுத்தவரையில் தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டும். அவர்களுக்கான அதிகாரங்கள் முழுமையாக வழங்கப்பட வேண்டும் போன்ற பல விடயங்களை அவர்கள் மீண்டும் மீண்டும் இலங்கையிடம் வலியுறுத்தியுள்ளார்கள்.
ஏற்கனவே இந்தியப் பிரதமரும் இந்திய வெளிவிவகார அமைச்சர் போன்றோரும் இந்த விடயங்களை தெளிவாக பல முறை அவர்களுக்கு வலியுறுத்தி வந்திருக்கிறார்கள் இருந்தபோதும் இலங்கை அரசு குறைந்த பட்சம் 13ம் திருத்தச் சட்டம் போன்றவற்றை அமல்படுத்துவதிலேயே பின்னால் நிற்கிறார்கள்.
இந்த சந்திப்புக்கு பிறகு, ராஜபக்ஷ ஹிந்து நாளிதழுக்கு தரும் பேட்டியை பார்க்கும்போது வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு முன்னோக்கிச் செல்வதை பற்றி வடக்கு மாகாணத்திற்கு ஒரு குழுவை அனுப்பி அதைப்பற்றி பேச இருப்பதாக பிரதமர் சொல்லியிருக்கிறார்.
ஆகவே முன்னோக்கிச் செல்வது என்பது அதிகாரங்களை அளிப்பதிலா அல்லது வேறு வழிகளிலா? என்ற கேள்விக்கு அவர் முழுமையாக பதில் வழங்கவில்லை
தமிழ் மக்கள் மிக நீண்ட ஒரு போராட்டத்தை நடத்தி இருக்கிறார்கள். பல லட்சக்கணக்கான உயிர்களை அதற்கு விலையாக கொடுத்து இருக்கிறார்கள். குறைந்தபட்சம் இந்த மண்ணில் சிங்கள மக்களுக்கு சமத்துவமாக வாழ வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.
ஆனால் இப்பொழுது இருக்கும் ஜனாதிபதியும், பிரதமரும் தாங்கள் சிங்கள மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் என்று ஒரு கருத்தையும் சிங்கள மக்கள் விரும்பாதவற்றை தாங்கள் கொடுக்க முடியாது என்று ஒரு கருத்தையும் தொடர்ச்சியாக சொல்லி வருகிறார்கள்.
இந்திய அரசு இந்திய இலங்கை ஒப்பந்த அடிப்படையில் தமிழ் மக்களது பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்திருக்கிறார்கள் என்றார்.
`கூட்டுறவு சமஷ்டியை அமல்படுத்துவதற்கான முயற்சிகளில் இந்தியா ஈடுபட வேண்டும்`
இந்திய பிரதமர் நரேந்திர மோதி இலங்கையில் கூட்டுறவு சமஷ்டி முறை ஏற்படுத்தவேண்டும் என உரையாற்றியிருந்தார். அந்த அடிப்படையில் கூட்டுறவு சமஷ்டியை அமல்படுத்துவதற்கான தீவிர முயற்சிகளில் இந்தியா ஈடுபட வேண்டும் என்பதுதான் ஈழத்தமிழர்களுடைய எதிர்பார்ப்பு என தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு இலங்கை ஜனாதிபதிகள்,பிரதமர்கள் செல்வதும் இணக்கத்தை தெரிவிப்பதும் ஒரு சில மணி நேரங்களில் அதை வாசல் கதவுகளில் வைத்து மறுதலிப்பு செய்வதும், இலங்கை திரும்பியதும் எமாற்றுவதுமாக நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
அந்த அடிப்படையில் 2008ம் ஆண்டு சுதந்திர தின உரையில் அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்னுடன் அமைச்சரவையில் இருக்கக்கூடிய டக்ளஸ் தேவானந்தா அவர்கள் விரும்புவது போல தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி விரும்புவது போல ஒரு மாநில சுயாட்சியை 13 சட்டத் திருத்தம் பிளஸ் கொடுப்பேன் என்று சொன்னவர் இன்று விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் 13 மைனஸ் என்ற நிலைக்கு சென்றிருக்கிறாரா என்ற கேள்வி எழுகிறது.
இந்தியா தொடர்ந்து 13வது திருத்தத்தை செயல்படுத்தும்படி கேட்டும்கூட அதையும் செய்ய மறுக்கின்றவர்களுக்கு பதிலடியாக தமிழ் மக்களுடைய சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் போராட்டத்திற்கு இந்தியா தன்னுடைய ஆதரவை தெரிவிப்பதன் மூலம் தான் இலங்கைத் தீவில் இந்தியாவிற்கான பாதுகாப்பு அரணை ஏற்படுத்த முடியும். அது ஈழத்தமிழர்கள் நல்லுறவில்தான் முடியும் என்பதை இந்தியா வெகுவிரைவில் நடைமுறை ரீதியில் உணரும்.
இந்திய பிரதமர் மோதி, இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ஷவுடனான சந்திப்பின் போது நீதிவேண்டும். நல்லிணக்கம் ஏற்படுத்த வேண்டும் என கூறுகிறார். ஐ.நா. சபையிடமே நீதியை பெற்றுக் கொடுப்போம் நல்லிணக்கத்தை செய்வோம் என்று சொன்னவர்கள், பிறகு அதேயே கிழித்துப் போட்டவர்கள்,
- இலங்கை சுதந்திர தினத்தில் தமிழில் தேசியகீதம் பாடவில்லை: தமிழ் எம்.பி.க்கள் சொல்வதென்ன?
- ‘இலங்கை தமிழர்களை பழிவாங்குகிறார் கோட்டாபய’ – இரா.சம்பந்தன்
இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுவிட்டு அதை நிறைவேற்ற மறுப்பவர்கள், சொன்னதை செய்வார்களா என்பது இந்திய பிரதமர் மோதிக்கு அவர்கள் நடவடிக்கைகள் மூலம் தெரிய வரும் என நாங்கள் நம்புகிறோம் என்றார் அவர்.
`தமிழர் இனப்பிரச்சினையில் இந்திய அரசு இதய சுத்தியுடன் செயல்படவேண்டும்`
தமிழர்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் இந்திய அரசு இதய சுத்தியுடன் செயல்படவேண்டும் என ஈழத்தமிழர் சுயாட்சிகழகத்தின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
இறுதி யுத்தம் முடிந்து பத்து வருடங்கள் கடந்தும் இனப்பிரச்சினைக்கான தீர்வாக ஒரு வரியை கூட எழுதாத இலங்கை அரசாங்கம் இனி எதனை பெற்றுதரப் போகிறது என்ற கேள்வி எழுகிறது.
விடுதலைப் புலிகளுடைய அழிவும் ஈழத் தமிழர்களுடைய போராட்டத்திற்கான முற்றுப்புள்ளி வைக்கும் செயல்திட்டமும் இந்திய அரசினுடைய ஒத்துழைப்புடன் தான் நிறைவேற்றப்பட்டன என்பது வரலாறு.
ஆனால் இன்று காலம் கடந்து இந்த நீதியை பெற்றுவிடுவோம் என்று பல உயிர்கள் மரணித்துவிட்ட நிலையில் இந்திய பிரதமரின் இலங்கைக்கான அழுத்தம் எந்த அளவில் சாத்தியப்படும் என்ற கேள்வியை எழுப்பி நிற்கின்றது.
இந்திய அரசு தன்னுடைய வெளிவிவகாரக் கொள்கையில் ஈழத்தமிழருக்கான வகிபாகம் என்ன என்பதை வரையறுத்து வெளிப்படுத்த வேண்டிய காலம் நெருங்கி உள்ளது. தன்னுடைய பூகோள நலன் சார்ந்த விடயத்தை மட்டும் முன்னெடுக்காது இந்தியா ஈழத் தமிழர்களுடைய உண்மையான உரிமைகள் தொடர்பாக வெளிப்படையாக தமிழர் தரப்புடன் பேச வேண்டிய காலம் நெருங்கி இருக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்
Leave a Reply
You must be logged in to post a comment.