இலங்கைத் தமிழர்களுக்கு சம்பந்தன் சுமையாகி விட்டாரா?
எழுதியவர் வசந்தி நேசராசன்

15 ஓகஸ்ட் 2021 அன்று இலங்கையின் Sunday Times இன் அரசியல் பத்தி, திரு இரா.சம்பந்தன் சகாப்தத்திற்குப் பிறகு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு என்ன எதிர்காலம் காத்திருக்கிறது என்பதைப் பிரதிபலித்துக் காட்டியது.
இரா.சம்பந்தன் வாரிசுத் திட்டமிடல் குறித்து சிந்திக்காத காரணத்தினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (ததேகூ) சிதைவடையக் கூடும் என்றும், கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கும் இப்போது இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான உட்கட்சி மோதல்கள் அத்தகைய சிதைவுக்கு வழிவகுக்கும் என்றும் அவர்கள் ஊகிக்கின்றனர்.
அவர்கள் எழுதியதிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், எஞ்சியுள்ள பங்காளிக் கட்சிகளான தமிழீழ விடுதலைக் கழகம் (ரெலோ), தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்), மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சி (இதஅக) ஆகியன பெரும்பாலான விடயங்களில் சுயாதீனமாகவும் தனித்தனியாகவும் செயற்படத் தொடங்கியுள்ளன. அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இல்லை என்ற அடிப்படையில் அவர்களின் கணிப்புகள் நிறைவேறியதாகத் தெரிகிறது. எனினும், திரு. சம்பந்தன் இன்னமும் ததேகூ இன் தலைவராகவே இருக்கின்றார்.
2021 ஆம் ஆண்டில், திரு. சம்பந்தனுக்கு அகவை 88 ஆக இருந்தது. இப்போது அவருக்கு 90 அகவை. 2024 ஆம் ஆண்டு பெப்ரவரி 5 ஆம் தேதி தனது 91 வது பிறந்தநாளை நெருங்கிக் கொண்டிருக்கிறார். நாடாளுமன்றத்தில் பதவி வகிக்கும் மிக வயதான உறுப்பினராக திரு. சம்பந்தன் இருந்து வருகிறார்.
வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு ஆகியவை அவரது சொந்தத் தொகுதியை நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் திறனைப் பாதித்துள்ளன. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் திரட்டப்பட்ட தரவுகளின்படி, தற்போதைய நாடாளுமன்றத்தின் 288 நாட்களில் 39 நாட்கள் மட்டுமே சம்பந்தன் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார். அரசிதழ் பதிவுகளின்படி, இந்த 39 நாட்கள் வருகையின் போது அவர் கவலைக்குரிய எந்த சிக்கல்கள் பற்றியும் (நாடாளுமன்றத்தில்)பேசவில்லை.
திரு சம்பந்தன், அவரது அகவை,, வருகையின்மை மற்றும் தான் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டிய, மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தாத ஒருவருக்காகச் செலவிடப்பட்ட வரிப்பணத்தின் அளவு ஆகியவை பற்றி இலங்கையில் உள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ‘அனைத்துத் தவறான இடங்களிலும் ஊழலைத் தேடுதல்’ என்ற தலைப்பில் விவாதிக்கப்பட்டது. அண்மையில், தமிழரசுக்கட்சியின் பேச்சாளரும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு எம்.ஏ.சுமந்திரனிடம், வெறும் 13 விழுக்காடு அமர்வுகளில் கலந்து கொண்ட வயதான நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்காக 40 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை செலவழிப்பது மற்றுமொரு வகையான ஊழலா எனக் கேட்கப்பட்டது.
ஊழல் தொடர்பான கேள்விக்கு பதிலளிப்பதை சாமர்த்தியமாகத் தவிர்த்த திரு சுமந்திரன், உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்புக் காரணமாக சம்பந்தனால் நாடாளுமன்றத்திற்குப் போகமுடியவில்லை என்பது தனது கட்சிக்கும் தனிப்பட்ட முறையில் தனக்கும் மிகுந்த கவலையாக இருந்து வருவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு தமிழரசுக்கட்சியின் மூத்த உறுப்பினர்கள், தான் உட்பட, சம்பந்தனைச் சந்தித்துத் தமது கவலைகளைப் பகிர்ந்து கொண்டதுடன், அவர் நாடாளுமன்றத்திலிருந்து ஓய்வு பெற வேண்டும் எனக் கேட்டதாகவும் சொன்னார். எமது கெட்ட காலம் திரு சம்பந்தன் அவ்வாறு செய்ய மறுத்து விட்டார், 2020 தேர்தலில் திருகோணமலை மக்கள் தன்னைத் தேர்ந்தெடுத்தபோது, அவரது உடல்நிலையை அறிந்திருந்ததாகவும், வேட்பாளர் பட்டியலில் அவரை முதலிட வேட்பாளராகத் தேர்ந்தெடுத்ததாகவும் விளக்கமளித்தார். எனவே, அவருக்குப் பதவி விலகவோ அல்லது ஓய்வு பெறவோ எந்த நோக்கமும் அவரிடம் இல்லை.

திரு சம்பந்தனின் இந்தச் சர்ச்சைக்குரிய முடிவு, அதாவது தனது வாக்காளர்களின் சிக்கல்கள் மற்றும் கவலைகளை நாடாளுமன்றத்தில் பிரிதிநிதித்துவப் படுத்தாமல் இருப்பது, தமிழர்கள் மத்தியில் மட்டுமல்ல, பரந்துபட்ட இலங்கை மக்கள் மத்தியிலும் அவரது மதிப்பைக் குறைக்க வாய்ப்புள்ளது.
2015-2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றக் காலப்பகுதியில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது அவருக்கு வழங்கப்பட்ட வீட்டில் சம்பந்தனும் அவரது குடும்பத்தினரும் இன்னும் இருக்கின்றனர் என்பதும் அனைவராலும் நன்கு அறியப்பட்ட உண்மை. அரசாங்க விடுதிகளில் அதிக காலம் தங்கியிருப்பதன் மூலம், எதிர்க்கட்சித் தலைவர் போன்ற மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்புரிமைகள் மற்றும் ஆதரவு முறைமையை இரா.சம்பந்தன் பல வழிகளில் தவறாகப் பயன்படுதுகிறார். கட்டணங்கள் மற்றும் வீட்டின் பராமரிப்புக்கு ஒவ்வொரு ஆண்டும் பல இலட்சம் ரூபாய் வரி செலுத்தும் மக்களது வரிப்பணம் வீணாகிறது. எதிர்க்கட்சித் தலைவராக அவர் பதவி வகித்தபோது அவருக்குக் கொடுக்கப்பட்ட இரண்டு கார்கள் இப்போதும் அவரது மற்றும் அவரது குடும்பத்தினரின் பயன்பாட்டிற்காகப் பயன்படுதப்படுகின்றன என்று இந்த விவகாரத்தை அறிந்த அரசு அதிகாரிகள் கூறுகின்றனர்.
திரு. சம்பந்தன் 2020 பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று தனது கட்சியின் மத்திய குழு மற்றும் தனது தொகுதி மாவட்ட அலுவலக உறுப்பினர்களிடம் தொடக்கத்திலேயே தெரிவித்திருந்தார். அவரைப் போட்டியிடுமாறு உறுப்பினர்கள் வற்புறுத்தியதால், அவர் இரண்டு நிபந்தனைகளின் கீழ் போட்டிபோட ஒப்புக்கொண்டார். ஒன்று, அவர் ஓர் ஆண்டு மட்டுமே பதவியில் இருப்பார். பின்னர், தனது கட்சியைச் சேர்ந்த இளையவர் ஒருவர் பதவியேற்க வழிவிட்டுப் பதவி விலகுவார். இரண்டாவதாக வாக்குப் பங்கைப் பொறுத்து வேட்புமனு பட்டியலில் திருகோணமலையைச் சேர்ந்த ஒருவரை முதன்மை வேட்பாளராக நிறுத்த வேண்டும். இரு நிபந்தனைகளும் இதுவரை நிறைவு செய்யப்படவில்லை. கடந்த தேர்தலில் ஒரேயொரு நியமன நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை மட்டுமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பெற்றது. அதைத் திருகோணமலைக்குக் கொடுக்காமல் (பிரதிநித்துவம் இல்லாத) அம்பாறையைச் சேர்ந்த ஒரு உறுப்பினருக்கு வழங்கப்பட்டது. திரு சம்பந்தன் தன்னைவிட அகவையில் குறைந்த ஒரு இளையவர் மீதிப் பதவிக்காலத்தை நிறைவு செய்ய வேண்டுமுகமாகத் தனது பதவியை விலக்கிக் கொள்வேன் என்று கொடுத்த வாக்குறுதியில் இருந்து அவரே பின்வாங்கியுள்ளார்.

திரு சம்பந்தனின் பொறுப்பற்ற தன்மை மற்றும் மோசமான மதிப்பீடு வெளிப்பட்டது எப்போது என்றால் அவர் தனது தனிப்பட்ட காரணங்களுக்காக, டிசெம்பர் 2021 இல் தில்லியில் இந்தியப் பிரதமரை சந்திக்க ததேகூ நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட தேதியை தள்ளிவைக்குமாறு இந்திய அரசாங்கத்திடம் கேட்டார். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன, இன்னும் அந்தச் சந்திப்பு நடைபெறவில்லை. அந்த சந்திப்பு நடந்திருந்தால், தமிழ் மக்களுக்கு என்ன நடந்திருக்கும் என்று யாருக்குத் தெரியும்?
திரு இரா.சம்பந்தன் தலைவராக இருந்த காலத்தில்தான் இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆகிய இரு கட்சிகளும் கட்சிகளாகவும், திரு சி.வி.விக்னேஸ்வரன் தனிநபராகவும் கூட்டமைப்பிலிருந்து வெளியேறினர்.
நாடாளுமன்ற வாக்கெடுப்பின் மூலம் தற்போதைய சனாதிபதியை நியமிப்பதற்கான இரகசிய வாக்கெடுப்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற வகையில், டலஸ் அழகப்பெருமாவை ஆதரிப்பதாகக் கூட்டாக அறிவித்த போதிலும், பங்காளிக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அப்போதைய பிரதமர் இரணில் விக்கிரமசிங்கவுக்கு வாக்களித்ததாக சொல்லப்பட்டது. ஓகஸ்ட் 3, 2022 அன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான தொடக்கச் சந்திப்பின் போது, “உங்களில் சிலர் எனக்கு வாக்களித்ததை நான் அறிவேன்” என்று இரணில் ஒப்புக்கொண்டார்.
ததேகூ க்குள் உள்ள குழப்பம் அன்றிலிருந்து இன்னும் அதிகமாகப் பொதுவெளியில் காட்சிக்கு வந்துள்ளது.
ரெலோ, புளொட் (தற்போதைய சனநாயக ததேகூ யைச் சேர்ந்தவர்கள்) மற்றும் இபிஆர்எல்எவ் (2015 தேர்தல்கள் வரை ததேகூ யின் ஒரு பகுதியாக இருந்தவர்கள்) மற்றும் தமிழ்த் தேசியக் கட்சி (TNP) ஆகியவை சனநாயக ததேமகூ என்ற தலைப்பைக் கொண்ட ஒரு கட்சியை உருவாக்கி, அதிகாரப்பூர்வ ததேகூ இல் இருந்து முறையாக விலகின. இந்த நடவடிக்கை இதஅக ஐ தனித்து நிற்க வைத்தது.
ஒரு பதிவு செய்யப்பட்ட கட்சியாக ததேகூ மேலும் சென்று, இன்னும் நடைபெறாத உள்ளாட்சித் தேர்தல்களுக்கு முறையான வேட்புமனுக்களைச் சமர்ப்பித்தது. அவர்கள் செய்தித்தாள்களில் அறிக்கைகளை வெளியிட்டனர். மற்றும் ததேகூ என நேர்காணல்களை எதிர்கொண்டனர்.
அந்த நேர்காணல்களில் ஒன்றில், ரெலோவின் தலைவர் திரு செல்வம் அடைக்கலநாதன், ததேகூ என்று அழைக்கப்படும் ஒரு குழு இனி இல்லை என்று கூறினார். திரு. சம்பந்தன் தன்னைத் ததேகூ தலைவர் என்று அழைக்க முடியாது, விரும்பினால் அவர் இதஅக இன் தலைவர் என்று குறிப்பிடலாம் என்றார்..
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ பேச்சாளராக இருந்த திரு சுமந்திரன், தற்போது அவரைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் அல்ல என்றும் (திரு அடைக்கலநாதன்) குறிப்பிடுகிறார்.
அண்மையில், புலம்பெயர் தமிழ்த் தலைவர் ஒருவர், “தமிழர்ளின் உரிமைகளையும் தவறுகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு, விடுதலைப் புலிகளின் தலைவர் என்ற முறையில் பிரபாகரன், சமத்துவத்திற்கான தமிழர் போராட்டத்தை ஒரு தொலைநோக்குப் பார்வையாளராக இருந்து வழிநடத்தினார். மேலும் சமத்துவத்திற்கான தமிழர்களின் போராட்டத்தை அனைத்துலக நிகழ்ச்சி நிரலில் வைத்ததே அவர்தான்” என்று கூறினார். சம்பந்தனின் தலைமைத்துவத்தை ஒப்பிட்டுப் பேசிய அவர், “சம்பந்தனுக்கு வசீகரமோ தொலைநோக்குப் பார்வையோ இல்லை, பெரும்பான்மை மக்களின் ஆதரவை ஒருபோதும் திரட்ட முடியவில்லை. ஆயுதப் போர் முடிவுக்கு வந்ததில் இருந்து கடந்த 14 ஆண்டுகளில் சம்பந்தனின் தலைமைப் பண்பானது மிகவும் பிற்போக்குத்தனமானது, எமது எதிரிகளுக்கு எதிரான செயல் வேகத்தை ஒருபோதும் கொண்டிருக்கவில்லை. ஒரு காலத்தில், ஒப்பீட்டளவில் வெற்றிகரமான அரசியல் கூட்டணியாக, நாடாளுமன்றத்தில் 20 க்கும் மேற்பட்ட இடங்களைக் கொண்டிருந்த ஒரு அரசியல் கூட்டணி, காலப்போக்கில் 10 ஆகக் குறைந்து, இறுதியில் தலைமையின்மை காரணமாக அதன் அழிவைக் கண்டது.
ததேகூ ஒன்றாக வைத்திருப்பது திரு சம்பந்தனுக்கு எளிதான காரியமாக இருக்கவில்லை. மீதமுள்ள மூன்று கூட்டணிக் கட்சிகளில், இரண்டு முன்னாள் போராளிகளால் வழிநடத்தப்படுகின்றன, அவர்கள் இன்னும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டுப் புலனாய்வு அமைப்புகளின் ஊதியப் பட்டியலில் இருப்பதாக நம்பப்படுகிறது. தமிழரசுக்கட்சியின் தலைவர் தனது ஓய்வுபெறும் வயதை எப்போதோ கடந்துள்ள நிலையில், இளைஞர்களையும் பெண்களையும் தலைமைத்துவத்தில் உள்ளடக்கி அந்தக் கட்சியை மறுசீரமைக்கப்பட வேண்டும்.
திரு சம்பந்தன் உள்ளூர் மற்றும் அனைத்துல மட்டத்தில் பலரிடமிருந்து கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்கிறார். எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில், திரு சம்பந்தன் பரந்த உள்ளூர் சமூகங்கள் மற்றும் அனைத்துல மட்டத்தில் பலரிடமிருந்து கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்கிறார். எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில, அனைத்து சமூகங்களையும் பாதிக்கும் எந்தவொரு முக்கிய தேசியப் சிக்கல்களையும் அவர் தீர்க்கவோ மற்றம் /அல்லது செல்வாக்குச் செலுத்தவோ இல்லை. நல்லாட்சி அரசாங்கத்தின் போது, அப்போதைய ஆளும் கூட்டணிக்கு அவர் இரண்டாம் நிலையை நிரப்பும் பாத்திரத்தை வகித்ததாக மக்கள் குற்றம் சாட்டினர்.
கூட்டணியை உருவாக்கத் திரைக்குப் பின்னால் இருந்த ஒரு உந்து சக்தியாக விளங்கிய திரு இரா.சம்பந்தனால் நல்லாட்சி அரசாங்கத்திடம் இருந்து தமிழர்களின் கோரிக்கைகளுக்குத் தீர்வைப் பிடுங்கி எடுக்க முடியவில்லை.
பின்னோக்கிப் பார்த்தால், சம்பந்தன் தனது கட்சியின் இலக்குகளை அடைவதற்காக, அதிக உறுதியுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிப்பதன் மூலம் அரசாங்கத்தை முன்கூட்டியே வீழ்த்துவதாக அச்சுறுத்தியிருக்க வேண்டும். இதனை திரு சம்பந்தன் இன்று உணர்ந்திருக்கலாம். மாறாக, அவரது உயிர்ப்பற்ற அணுகுமுறை இறுதியில் தமிழ் மக்களுக்கு எதையும் பெற்றுத் தரவில்லை. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, மூலோபாயம் மற்றும் தந்திரோபாயத்தின் பற்றாக்குறை வெளிப்படையாகத் தெரிந்தது. 2020 தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமிழ் மக்கள் கடுமையாகத் தண்டித்தனர்.
திரு சம்பந்தன் மற்றவர்களின் இயல்பை எடைபோடுவதில் மிகவும் சக்கட்டை என்று சிலர் கூறுகின்றனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் நிலவிய கடும் எதிர்ப்புக்கு மத்தியில் வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் பதவிக்கு முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனை நியமித்தது அவரது தெரிவாகும். இது மாகாண சபைக்கு மட்டுமன்றி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நற்பெயருக்கும், சமூகத்திற்கு உள்ளும் வெளியிலும் ஒரு அழிவுகரமான தேர்வாக அமைந்தது.
2015ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் எதிரணிக்கு ஆதரவாகப் பகிரங்கமாக அறிக்கைகளை வெளியிட்ட பின்னரும் திரு விக்னேஸ்வரனைப் பதவி நீக்கம் செய்ய மறுத்ததன் மூலம் கட்சிக்குள் ஒழுக்கத்தை நிலைநாட்டத் தீர்க்கமான நடவடிக்கை எடுக்க முடியாத அவரது இயலாமை அப்பட்டமாக வெளிப்பட்டது. இது வாக்காளர்களின் பார்வையில் ததேகூ பை பலவீனப்படுத்தியுள்ளது.
குறிப்பாக 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னர் இலங்கையில் உள்ள தமிழர் சிக்கல்கள் தொடர்பில் பரிவு காட்டுவதற்காக அனைத்துலக சமூகத்தின் மீது பாரியளவில் செல்வாக்குச் செலுத்த முடிந்த போதிலும், அவரால் அடிமட்ட தமிழ் மக்களை கூட்டமைப்பின் பின்னால் அணிதிரட்ட முடியவில்லை. கடந்த 2004ஆம் ஆண்டு முதல் ததேகூ நாடாளுமன்றத்தில் 22 இருக்கைகளை ஏற்ற இறக்கங்களுடன் வென்ற போதிலும், தற்போதைய நாடாளுமன்றத்தில் 10 இருக்கைகளை மாத்திரமே பெற்றுக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
சம்பந்தனின் தலைமையின் கீழ், தமிழ் சமூகத்தின் பொருளாதார மேம்பாடு மற்றும் நிலைத்தன்மைக்கு உதவக்கூடிய திட்டங்களில், குறிப்பாக இந்திய அரசாங்கம் நிதி உதவிகளை வழங்க முன்வந்தபோதும் ததேகூ அதில் கவனம் செலுத்தத் தவறிவிட்டது. இது வடக்குக் கிழக்கில் உள்ள தேசியக் கட்சிகளின் வாக்கு விழுக்காட்டின் இழப்பிற்கும் வழிவகுத்தது.
சில அரசியல் நோக்கர்கள் தற்போதைய தலைமை, பழைய தலைமை, தீவிர அரசியலில் இருந்து விலகி, பெண்கள் உள்ளிட்ட இளைய தலைமுறையினரை தாமதமின்றி விரைவில் பொறுப்பேற்க ஊக்குவிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று கூறுகின்றனர்.
அறகாலய (Aragalaya) இயக்கம் பரந்தளவில் ஆட்சி முறைமை மாற்றத்திற்கு அழைப்பு விடுத்தது போலவே, வடக்கு மற்றம் கிழக்குத் தமிழர்களும் தமிழர் அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டியிருக்கும்.
*வசந்தி நேசராசன், முன்னாள் மருத்துவ நிபுணர், இலங்கையின் திருகோணமலையில் பிறந்து வளர்ந்தவர்.
(ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையின் மூலத்தை https://www.colombotelegraph.com/index.php/has-sampanthan-become-a-liability-for-tamils-in-sri-lanka/ என்ற இணையதள முகவரியில் படிக்கலாம். தமிழாக்கம் நக்கீரன்)
Leave a Reply
You must be logged in to post a comment.