திருமலை பற்றி எரிகிறது சம்பந்தன் ஐயா கொழும்பில் பிடில் வாசிக்கிறார்!

திருமலை பற்றி எரிகிறது சம்பந்தன் ஐயா கொழும்பில் பிடில் வாசிக்கிறார்!

நக்கீரன்
 

கொழும்பில் இருந்து இயங்கும்  நியூஸ் 1 (News1st) என்ற செய்தித் தொலைக்காட்சியில் ஒவ்வொரு புதன்கிழமையும் நடைபெறும் நிகழ்ச்சியின் பெயர் தேசத்தை எதிர்கொள்ளுங்கள் (FACE THE NATION)  என்பதாகும்.  அந்த வாரத்தில் ஊடகங்களில் பெரிதாக அலசப்படும் முக்கிய பேசுபொருளில் அந்தந்த துறைசார்ந்த அறிவாளிகளை அழைத்து விவாதம் நடைபெறும். அந்த நிகழ்ச்சியின்  தொகுப்பாளர் (Anchor)  பெயர் ஷமீர் ரசூல்தீன் (Shameer Rasooldeen). பெரும்பாலும் விவாதங்கள் பக்க சார்பில்லாமல் இருக்கும்.

இந்த  நியூஸ் ஃபர்ஸ்ட் (News1st) என்பது கப்பிட்டல்  மகாராஜா (Capital Maharajah Organization Ltd)  என்ற நிறுவனத்திற்குச்  சொந்தமான ஒரு இலங்கைச்  செய்தி நிறுவனமாகும். நியூஸ் 1 முதன்மையான செய்திகளை ஒளிபரப்புகிறது, மூன்று தொலைக்காட்சி சனல்களில் சிராசா டிவி, சக்தி டிவி, டிவி 1 (Sirasa TV, Shakthi TV, TV 1,) அய்ந்து வானொலி சேனல்கள் சிராசா எஃப்எம், யெஸ் எஃப்எம், சக்தி ஃஎவ்எம், வய் FM மற்றும் லெஜண்ட்ஸ் எஃப்எம் (Sirasa FM, Yes FM, Shakthi FM, Y FM and Legends FM), சிங்களம், ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் மூன்று வலைத்தளங்கள் மற்றும் சமூக ஊடக தளங்கள் (யூரியூப், முகநூல்,  ட்விட்டர்).

Sampanthan Laments Lack Of Political Will To Enact New Constitution ...

கடந்த ஒக்தோபர் 18, 2023  அன்று   அந்தத் தொலைக்காட்சியில் நடந்த  விவாதத்தின் தலைப்பு “Looking for corruption in all the wrong places” (“அனைத்து தவறான இடங்களிலும் ஊழலைத் தேடுகிறோம்”) என்பதாகும். அதில்  எரான் விக்கிரமரத்தின (நா.உ – ஐமச)  Dr. ஹரினி அமரசூரிய (நா.உ –  தேசிய மக்கள் சக்தி) எம்.ஏ. சுமந்திரன் (நா.உ- ததேகூ) சட்டத்தரணி ஷிரால் லக்திலக (மூத்த துணைத் தலைவர் ஐக்கிய குடியரசு முன்னணி) ஆகியோர்  விவாதித்தில் கலந்து  கொண்டனர். 

விவாதத்தின்  இறுதிக் கட்டத்தில்  அந்தத் தொலைக்காட்சியின் பார்வையாளர் ஒருவர் மின்னணு மூலம்  எழுப்பிய  கேள்வியின் அடிப்படையில்  செய்தித் தொகுப்பாளர் ஷமீர் ரசூல்தீன், சுமந்திரனைப் பார்த்து “இந்தக் கேள்வி சுமந்திரனுக்கு  எங்கள் பார்வையாளர்களில் ஒருவரிடமிருந்து  வந்தது” எனக் கூறி அந்தக் கேள்வியைக் கேட்டார். அந்தக்  கேள்விக்கு சுமந்திரன் சுருக்கமாகப் பதில் அளித்தார். தனது பதிலில் “இது ஒருவகை ஊழல் இல்லையா?”  என்ற கேள்விக்குப் பதில் அளிப்பதைத் தவிர்த்துவிட்டார்.  சுமந்திரன் அளித்த பதிலைத் தொலைக்காட்சியில் பார்க்காதவர்களும் அரைகுறையாக  செய்தித்தாள்களில் வாசித்தவர்களும் “சம்பந்தன் பதவி விலக வேண்டும்  எனச் சுமந்திரன் அதிரடி” எனத்  தங்கள் கருத்தை வெளியிட்டுள்ளார்கள்.

“சுமந்திரன் பதவி விலக வேண்டுமா வேண்டாமா என்பது பற்றிச்  சம்பந்தன்  அய்யாதான்  முடிவெடுக்க வேண்டும், தமிழ் அரசுக் கட்சியோ அல்லது மற்றவர்கடீளா அது பற்றிப் பேசக் கூடாது” என்று சொலிகிறவர்களும் இருக்கிறார்கள்.

இது தொடர்பாகக்  கருத்து வெளியிட்ட நா.உ விக்னேஸ்வரன் “சம்பந்தன் தமிழரின் அடையாளம்! அவர் பதவி விலகத் தேவையில்லை,  அவரைக் கட்டாயப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. சம்பந்தனின் நாடாளுமன்றக் காலம் 2025 வரை இருக்கிறது”  என்றார். அடேங்கப்பா!  சம்பந்தன் அய்யா மீது விக்னேஸ்வரனுக்கு பாசம் பொங்கி வழிகிறது. அவரது அருமை பெருமை தெரிகிறது.  ஆனால் இதே விக்னேஸ்வரன்தான் தமிழரசுக் கட்சியை உடைத்தவர். புதிய கட்சியைத் தொடக்கியவர். அவரது கையைப் பிடித்து அரசியலுக்கு இழுத்து வந்து வடமாகாண சபையின் முதலமைச்சராக மகிடம் சூட்டி அழகு பார்த்த சம்பந்தன் அய்யாவுக்கு “உனக்குப் பேப்பே! உனது அப்பனுக்கும் பேப்பே” என்ற சொன்னவன் மாதிரி  “வட மாகாண சபைக்கு நடந்த தேர்தலில் எனக்கு 132,255 விருப்பு வாக்குகள் கிடைத்தது. இது எனது சொந்தச் செல்வாக்குக் காரணமாகக் கிடைத்த  வாக்குகள். தமிழ் அரசுக் கட்சியால் கிடைத்த வாக்குகள் அல்ல” என மார் தட்டினார்.

2020 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் திருகோணமலைத் தேர்தல் தொகுதியில் அவரது தமிழ் மக்கள் முன்னணி  போட்டியிட்டது. விக்னேஸ்வரன் திருகோணமலை சென்று தனது கட்சி வேட்பாளருக்கு ஆதரவாகப் பரப்புரை செய்தார். “சம்பந்தனுக்கு வயதாகிவிட்டது. அவர் அரசியலில் இருந்து  ஓய்வு எடுக்க வேண்டும்.  அவர் தேர்தலில் போட்டியிடக் கூடாது,  போட்டியிலிருந்து விலக வேண்டும்” என்று மேடைகளில் முழங்கினார். இப்படி உண்ட வீட்டுக்கு இரண்டகம் செயதவர், ஏறிய ஏணியை உதைத்துத் தள்ளியவர் சாத்தான் வேதம் ஓதுவது போலப் பேசி நடிக்கிறார். சம்பந்தன் தமிழர்களின் அடையாளம் என்கிறார்! 2014 இல் தன்னைக் கட்சியின் தலைவராக நியமிக்குமாறு கேட்டார்.

Mr. Sampanthan or Mr.Sumanthiran of TNA Must Join the Cabinet and ...
2015 இல் நடந்த பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தோற்கடிக்க ‘வீட்டை விட்டு வெளியே வந்து வாக்களியுங்கள்” என்று  அன்றைய முதலமைச்சர் விக்னேஸ்வரன்தான் இரட்டை அர்த்தத்துடன் கொழும்பில் இருந்து  ஒரு  அறிக்கை விட்டார். இந்த அறிக்கையே  விக்னேஸ்வரனுக்கும்  தமிழரசுக் கட்சிக்கும் இடையில் விரிசல் இருப்பது வெளியுலகத்துக்குத்  தெரியவந்தது. .  இப்போது “சம்பந்தன் தமிழரின் அடையாளம்! அவர் பதவி விலகத் தேவையில்லை” எனக் குடம் குடமாக நீலிக்கண்ணீர் வடிக்கிறார். தெருவிலே போன சனியனை சம்பந்தன் ஐயா  விலைக்கு வாங்கிக் கொண்டு  வந்து நடுவீட்டுக்குள் வைத்ததால் வந்த வினை இது.

இன்னொருவர் கொழும்பு தமிழ் அரசுக் கட்சியின் ஆயுட்காலத் தலைவர் சனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா. இவர் ஓய்வுநேர நாற்காலி அரசியல்வாதி. நாய்க்குக் கல்லெறி எங்கே பட்டாலும் காலைத்தான் தூக்குமாம். சுமந்திரன் எது செய்தாலும் செய்யாவிட்டாலும் முதல் கல்லை வீசுபவர் இவரே. 2020 இல் நடந்த தேர்தலில் தொலைக்காட்சி, ஊடகவியலாளர் மநாடு எனக் கூட்டி அவர் இருக்கும் தமிழ் அரசுக் கட்சி வேட்பாளர் சுமந்திரன்  மீது வசைபாடியவர். சேறு அள்ளிப் பூசியவர். அதனைக் கட்சியின் தலைவர் சேனாதிராசா  கண்டு கொள்ளவில்லை என்பது இன்னொரு சோகம்.

தவராசா   “அரசியல் ரீதியில் இரா.சம்பந்தனை ஓரங்கட்டிவிட்டு கட்சியின் மொத்தக் கட்டுப்பாட்டையும் தனது பிடிக்குள் கொண்டுவர எம்.ஏ.சுமந்திரன் சூழ்ச்சி செய்கிறார்! நீங்கள் வளர்த்த கடா உங்கள் மீது பாய்ந்துவிட்டது. ஆப்பிரஹாம் சுமந்திரன் அவர்களின் தன்னிச்சையான முடிவுகளால் தமிழ்த் தேசியம் தேய்ந்து கட்சிக்கு ஏற்படுகின்ற பாதிப்புகளைத் தவிர்ப்பதற்காக கடந்த காலத்தில் நான் உங்களுக்கு பல கடிதங்களை எழுதியிருந்தேன். ஆனால் துரதிட்ட வசமாக நீங்கள் அவரின் மீது எவ்வித ஒழுக்காற்று நடவடிக்கையும் எடுக்காமையின் விளைவுகளைத்தான் இப்போது பகிரங்கமாக காணக் கிடைக்கின்றது.” எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருக்கு அவசர அவசரமாக கடந்த ஒக்தோபர் 20 அன்று கடிதம் எழுதிவிட்டு அதனை ஊடகங்களுக்கும் அனுப்பியுள்ளார். மெத்தப் படித்த சனாதிபதி சட்டத்ரணி தவராசா அவர்களுக்கு சம்பந்தன் அய்யாவால் சுமந்திரன் மீது எந்த ஒழுக்காறு நடவடிக்கையையும் எடுக்க முடியாது.  சம்பந்தன் அய்யா தமிழ் அரசுக் கட்சியில் எந்தப் பதவியிலும் இல்லை. அந்தக் கட்சி அவர் கட்டுப்பாட்டிலும் இல்லை. பின் எப்படி சுமந்திரனால்   சம்பந்தன் அய்யாவை ஓரங்கட்ட முடியும்? மறுபுறம் சம்பந்தன் அய்யா எப்படி   கட்சியின் துணைத் தலைவர் ஆகயிருக்கும் சுமந்திரன் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முடியும்? யதார்த்தம் என்னவென்றால் கட்சிக் கட்டுப்பாட்டை தொடர்ந்து மீறிவரும் தவராசா மீதுதான் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்!

இப்படி சுமந்திரன் மீது வசைபாடுபவர்கள் அந்தத் தொலைக்காட்சியில் சம்பந்தன் அய்யா தொடர்பாக ஒரு  பார்வையாளர்  கேட் ட கேள்விக்கு “Some of us in the party about a year ago when we spoke to him and asked him to step down” (“ஓராண்டுக்கு முன்பு கட்சியில் இருந்த சிலர் அவரிடம் பேசி அவரைப் பதவி விலகச் சொன்னோம்”)  என்ற பதிலை  வசதியாக மறந்து விட்டு “சுமந்திரன் சம்பந்தனைப் பதவி விலகக் கேட்கிறார், வளர்த்த  கிடா மார்பில் பாய்கிறது!” என ஒரே குரலில் ஒப்பாரி வைக்கிறார்கள்.  சுமந்திரன் “கட்சியில் இருந்த சிலர் அவரிடம் பேசி அவரைப் பதவி விலகச் சொன்னோம்” எனப் பன்மையில் விடையளித்தார். “நான் பதவி விலகச் சொன்னேன்” என அவர் சொல்லவே இல்லை. ஆனால் அவர் பதவி விலக வேண்டும் என்பது தனது விருப்பம் என்றும் சொன்னார்.

சம்பந்தன் அய்யாவை பதவி விலகக் கேட்பது என்ற தீர்மானம் கடந்த  24 செப்தெம்பர், 2022 இல் வவுனியாவில் கூடிய தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுவில் நிறைவேற்றப்பட்டது. அதே  மத்திய குழுக் கூட்டத்துக்கு வந்திருந்த திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த கட்சி உறுப்பினர்கள் பல்வேறு விடயங்களைச் சுட்டிக் காட்டினார்கள்.  திருகோணமலையில் தற்போது தமிழர் பிரதேசங்களும், தமிழர் வழிபாட்டு இடங்களும் திட்டமிட்டு பவுத்த மயமாக்கப்படும் நிலையில், அங்கு செயற்றிறன் மிக்க மக்கள் பிரதிநிதி ஒருவர் தேவை என்று அவர்கள் குறிப்பிட்டார்கள்.

அண்மையில் திருகோணேஸ்வரர் ஆலயத்தின் காணிகளைக் கையகப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகளை முன்வைத்த அவர்கள், சம்பவ இடத்துக்குச் சென்று நிலைமைகளை ஆராய்ந்து நடவடிக்கைகளை எடுப்பதற்குரிய உடல் நலத்துடன் கூடிய நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் இல்லை என்பதையும் சுட்டிக்காட்டினார்கர்.

இந்த நிலைமையால் திட்டமிட்ட சிங்கள – பவுத்த ஆக்கிரமிப்பை எதிர்த்து நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாதுள்ளது என்றும் அவர்கள் தெரிவித்தனர். மூப்புக் காரணமாக உடல் நிலை தளர்வடைந்துள்ள இரா.சம்பந்தன், நாடாளுமன்ற அமர்வுகளில் சீராகக் கலந்துகொள்வதும் நடைமுறைச் சாத்தியமற்றதாகவுள்ளது எனக் கூறினர்.

இதுவரை நடந்த நாடாளுமன்ற அமர்வுகளில் அவர் சிலவற்றிலேயே கலந்துகொண்டுள்ளார். அதனால் மாவட்டத்தின் பிரச்சினைகள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் பேசுவதற்காக சந்தர்ப்பங்களும் குறைந்துள்ளன என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இவை தொடர்பாகக் ஆராந்த மத்திய குழு, இரா.சம்பந்தனிடம் பதவி விலகுவது தொடர்பாகக் அவருடன் கலந்துரையாடி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக குழுவொன்றை  நியமித்தது. அதன் உறுப்பினர்கள் பின்வருமாறு:

வடக்கு மாகாண சபை முன்னாள் அமைச்சர் ப.சத்தியலிங்கம்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நா. உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்,

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராசா,

வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம். (https://ibctamil.com/article/sambandhan-left-political-1663724715_)

இதனை அடுத்து இந்தக் குழு கட்சியின்  மத்திய குழுவில் எடுத்த முடிவின் அடிப்படையில், கட்சித் தலைவர் சேனாதிராசாவும் கட்சியின் உப தலைவர் சுமந்திரன் இருவரும்  சம்பந்தன் அய்யாவை  அவரது கொழும்பு இல்லத்தில் சந்தித்து அவரது உடல்நிலையை காரணம் காட்டி அவர் பதவி விலக வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். ஆனால்  “எனக்கு வாக்களிதபோது திருகோணமலை வாக்காளர்களுக்கு எனது உடல்நிலை பற்றித் தெரியும். தெரிந்துதான் வேட்பாளர் பட்டியலில் முதல் இடத்தில் இருந்த எனக்கு வாக்களித்து தெரிவு செய்தார்கள்.  எனவே  தன்னை விலகுமாறு கட்சி கேட்க முடியாது”  எனக் கூறிவிட்டார்.

இதுதான் நடந்தது. ஆனால் ஊடகங்கள் மனம்போன போக்கில் “வளர்த்த கிடாய் மார்பில் பாய்ந்தது” , “சம்பந்தனை ஓரங்கட்டி தலைமை யை பிடிக்க சூழ்ச்சி செய்யும் சுமந்திரன்!” என கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் சிலர் விமர்சனம் செய்தார்கள். கட்சித் தலைமையை பிடிப்பதற்கு சுமந்திரன் ஏன் சம்பந்தன் அய்யாவை  ஓரங்கட்ட சூழ்ச்சி செய்ய வேண்டும்? தமிழ் அரசுக் கட்சியின் தலைமைப் பதவிக்கும் சம்பந்தன் அய்யா அவர்களுக்கும் என்ன சம்பந்தம்? மறுபுறம்  கட்சியின் தலமைப் பதவியைப் பிடிக்க சம்பந்தன் அய்யாவை பகைக்காமல் தன் பக்கம் வைத்திருப்பதுதானே புத்திசாலித்தனம்? அவருக்கு அனுகூலம்? மேலும் தமிழ் அரசுக் கட்சியின் தலைமைப் பதவிக்கு சுமற்திரன்  போட்டியிட முன்வந்தால் அதில் என்ன பிழை இருக்கிறது? அதென்ன பஞ்சமா பாதகமான  செயலா?

சுமந்திரன் அவர்களுக்குத் தலைமைப் பதவிக்கு வருவதற்கான எல்லாத் தகுதிகளும்  குணங்களும் அவரிடம் இருக்கிறது. பூகோள அரசியல், சட்ட அறிவு, மும்மொழிப் புலமை, கடினமான உழைப்பு, நேர்மை எல்லாம் அவரிடம் இருக்கின்றன. எது எப்படியிருந்தாலும் தமிழ் அரசுக் கட்சியின் தலைமைப் பதவிக்கு யாரைத் தெரிவு செய்வது என்பது அந்தக் கட்சியின் உறுப்பினர்கள் தீர்மானிப்பார்கள். மற்றவர்கள் தங்கள் தூக்கத்தைக் கெடுத்துக் கொள்ளக் கூடாது. 

உண்மை என்னவென்றால்   சுமந்திரன் எதைச் சொன்னாலும் என்ன செய்தாலும் அதில் நொட்டை சொல்ல, குற்றம் பிடிக்க, சேறு பூச கட்சிக்குள்ளேயும் வெளியேயும் சிலர் நாயாய் பேயாய் அலைகிறார்கள்! அவர் மீது பாய்ந்து பிராண்டுகிறார்கள்! ஆனால்  எதையும் ஒளிவு மறைவின்றி  அறம் சார்ந்து நேர்படப்  பேசுவது அவரது பாணி. அவருக்கு உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசும் வித்தை  தெரியாது. அவர் ஒரு வித்தியாசமான அரசியல்வாதி.  தமிழ்மக்களின் நலங்கள்தான் அவருக்கு முக்கியம். தனிப்பட்டவர்களது நலங்கள் முக்கியம் இல்லை. அதனால் சிலரது கோபத்துக்கும் தாபத்துக்கும் ஆளாக வேண்டியிருக்கிறார். ஆனால் அது பற்றி அவர் கவலைப்படுவதில்லை. அரசியலில் சிலர் கல்லெறிவார்கள். சிலர் மாலை போடுவார்கள். இரண்டையும் ஒன்றாகப் பார்க்கிறார்.

கடந்த ஒக்தோபர் 18,2023 அன்று FACE THE NATION  தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒரு பார்வையாளர் சம்பந்தர் அய்யா  மின்னணு மூலம் “நாடாளுமன்றம் 288 நாட்கள் கூடியுள்ள நிலையில், இரா.சம்பந்தன் 39 நாட்கள் மாத்திரமே முன்தோன்றி  இருந்தார், அதாவது 13.6%.  அவருக்கு வழங்கப்பட்ட மொத்த தொகை உரூபாய் 4 மில்லியன்.  தொலைபேசி, அலுவலகம் மற்றும் போக்குவரத்துப் போன்ற  கொடுப்பனவுகளுக்கு மாதமொன்றுக்கு உரூபா 419,000.  இது வரி செலுத்துவோரின் பணம். இது மற்றொரு வகை ஊழல். அது சரியா? என சுமந்திரனைப் பார்த்துக் கேட்டார். அதற்கு சுமந்திரன் அளித்த பதிலை அடுத்த வாரம் பார்ப்போம். ( தொடரும்)   (கன்டா உதயன்)

——————————————————————————————————————

திருமலை பற்றி எரிகிறது சம்பந்தன் ஐயா கொழும்பில் பிடில் வாசிக்கிறார்!

நக்கீரன்
(2)

சென்றவாரத் தொடர்ச்சி——————————

தேசத்தை எதிர்கொள்வோம் (FACE THE NATION)  என்ற தொலைக்காட்சி கலந்துரையாடல் நிகழ்ச்சியின் நெறியாளர் ஷமீர் ரசூல்தீன்(Shameer Rasooldeen) அதன்  இறுதிக் கட்டத்தில் விவாதத்தில் பங்குபற்றியவர்களிடம், பார்வையாளர்கள் ஊழல் தொடர்பாக நடந்த  கலந்துரையாடல் பற்றி எதாவது கேள்வி கேட்க விரும்பினால்  அதனைத் தனக்கு அனுப்பி வைக்கலாம் என அறிவித்தார்.  WhatsApp ஊடாக  பார்வையாளர் ஒருவர்  நெறியாளருக்கு ஆங்கிலத்தில்  ஊழல்பற்றி ஒரு கேள்வியை அனுப்பி வைத்திருந்தார்.    அது தொடர்பான கேள்வியும் அதற்கான சுமந்திரனின்  பதிலும்  தமிழ்மொழி பெயர்ப்போடு கீழே கொடுக்கப்படுகிறது.

Image result for Sampanthan, Senathirajah sumanthiran

Shameer Rasooldeen: I said earlier on, some questions you may like and some questions you may disagree with, but this one is for you (Sumanthiran) from one of our viewers. She is quoting a tweet that was released four hours ago on this subject. It says how come out of 288 days the current parliament has sat so far, R. Sampanthan was present only for 39 days, that is 13.6%. The total payment made to him  4 million (rupees). For telephone, office, and transport allowances  Rs. 419,000 per month. This is taxpayers’ money, corruption of another kind.  Isn’t? (Obviously this information was obtained under the Right to Information Act)

ஷமீர் ரசூல்தீன்: நீங்கள் விரும்பக்கூடிய சில கேள்விகள் மற்றும் உங்களுக்கு உடன்படாத சில கேள்விகள் குறித்து நான் முன்பே சொல்லியிருக்கிறேன்.  இந்தக் கேள்வி  சுமந்திரனுக்காக எங்கள் பார்வையாளர்  ஒருவரிடமிருந்து  வந்த கேள்வி.  இது (ஊழல்)  தொடர்பாக நான்கு மணி நேரத்திற்கு முன்பு வெளியிடப்பட்ட ஒரு டுவீட்டை அவர் மேற்கோள் காட்டியுள்ளார்.நாடாளுமன்றம் இதுவரை 288 நாட்கள் கூடியுள்ள நிலையில், இரா.சம்பந்தன் 39 நாட்கள் மாத்திரமே கலந்து கொண்டுள்ளார், அதாவது 13.6%.  அவருக்கு வழங்கப்பட்ட மொத்தத் தொகை உரூபாய் 4 மில்லியன் (40 இலட்சம்).  தொலைபேசி, அலுவலகம் மற்றும் போக்குவரத்துப் போன்ற  கொடுப்பனவுகளுக்கு மாதம் உரூபா 419,000.  இது வரி செலுத்துவோரின் பணம். இது மற்றொரு வகையான ஊழல் இல்லையா? (இது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ்ப் பெறப்பட்டது என்பது வெளிப்படையானது)

Sumanthiran: Well, this has concerned us particularly from the time he  was unable to, actually attend parliament regularly and I say it publicly for the person you quote. Some of us in the party about a year ago when we spoke to him and asked him to step down. He has refused to do that on the basis that in the 2020 elections when the people elected him accepting the list, as first in the list in the district, they knew his health condition very well. And then they elected him and so he still remains. I wanted him …..(interruption by the host)

சுமந்திரன்: நல்லது,  அவரால் (சம்பந்தன் ஐயா) நாடாளுமன்றத்திற்குத் தவறாமல் கலந்து கொள்ள முடியாத காலத்தில் இருந்து இந்த விடயம் எங்களைக்  கவலையடையச் செய்துள்ளது, குறிப்பாக  நீங்கள் மேற்கோள் காட்டும் நபருக்கு  நான் பகிரங்கமாகச் சொல்கிறேன்.  ஓராண்டுக்கு முன்பு கட்சியில் இருந்த சிலர் அவரிடம் பேசி அவரைப் பதவி விலகச் சொன்னோம். 2020 தேர்தலில் மக்கள் அவரைத் தேர்வு செய்தபோது, மாவட்ட (வேட்பாளர்)  பட்டியலில் அவரது பெயர் முதலாவதாக இருந்தது.  அவரது உடல்நிலையை மக்கள் நன்றாக அறிந்திருந்தனர். இதன் அடிப்படையில் அவர் அவ்வாறு செய்ய மறுத்துவிட்டார். பின்னர் அவர்கள் அவரைத் தேர்ந்தெடுத்தனர், எனவே அவர் இன்னும் (நாடாளுமன்ற உறுப்பினராக) இருக்கிறார். நான் அவரிடம்  கேட்ட போது …. (தொகுப்பாளரின் குறுக்கீடு)

சம்பந்தனை பதவியிலிருந்து நீக்க தமிழரசுக் கட்சியின் மத்திய குழு தீர்மானம் | Srilanka Tamil Remove Sambandhan Political

Shamir Rasooldeen: Is there a rift in the party?

ஷமீர் ரசூல்தீன்: கட்சியில் விரிசல் ஏற்பட்டுள்ளதா?

Sumanthiran – No, No we asked him because of his ill health and inability to serve his constituency particularly, but I must say that even when he was put up as a candidate for the Trincomalee district we did not expect him to serve that district in particular, but rather sort of large Tamil concerns as his work, and in some ways, he was able to do, but unable to do now a lot of it. My personal view is he should have stepped down and we will do something about that soon.

சுமந்திரன்:  இல்லை, இல்லை, அவரது உடல்நிலை மற்றும் அவரது தொகுதிக்குக்  குறிப்பாக சேவை செய்ய இயலாமை காரணமாக நாங்கள் அவரைக் கேட்டோம். ஆனால் அவர் திருகோணமலை மாவட்டத்திற்கான வேட்பாளராக நிறுத்தப்பட்டபோது கூட அவர் அந்த மாவட்டத்திற் மட்டும்  குறிப்பாக சேவை செய்வார் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை, மாறாக அவரது பணி தமிழர் முகம்கொடுக்கும் பெரிய கவலைகள் பற்றியது.  சில பணிகளை அவரால் செய்ய முடிந்தது, ஆனால் இப்போது அவரால் நிறையச் செய்ய முடியவில்லை. அவர் பதவி விலகியிருக்க வேண்டும், அது குறித்து விரைவில் ஏதாவது செய்வோம். இது எனது தனிப்பட்ட கருத்து.(https://english.newsfirst.lk/2023/10/19/face-the-nation-looking-for-corruption-in-all-the-wrong-places)

ஊழல் தொடர்பான கேள்விக்குப்  பதிலளிப்பதைச்  சாமர்த்தியமாக மடைமாற்றிய  திரு சுமந்திரன், உடல் நலக்குறைவு  காரணமாக சம்பந்தனால் நாடாளுமன்றத்திற்குப் போகமுடியவில்லை என்பது தனது கட்சிக்கும் தனிப்பட்ட முறையில் தனக்கும் மிகுந்த கவலையாக இருந்து வருவதாகத் தெரிவித்தார்.

ஆனால்  ஏற்கனவே குறிப்பிட்டது போல சில ஊடகங்களும் பத்தி எழுத்தாளர்களும் சம்பந்தன் ஐயாவைச்  சுமந்திரன் பதவி விலகக் கேட்கிறார். கட்சிக்கு உள்ளே பேசவேண்டிய விடயத்தை பொதுவெளியில் பேசுகிறார், வளர்த்த கடா மார்பில் பாய்கிறது  என எழுதித்தள்ளின.

சுமந்திரனது விளக்கம்,  தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயல்குழு  வவுனியாவில் செப்தெம்பர் 18, 2022 இல் கூடியபோது எடுத்த தீர்மானத்தின் அடிப்படையில்தான் என்ற உண்மை திட்டமிட்டு  அல்லது அறியாமை காரணமாக  இருட்டடிப்புச் செய்யப்பட்டு விட்டது.

இதில் வேடிக்கை என்னவென்றால் வவுனியாவில் கூடிய மத்திய செயல்குழுக் கூட்டத்தில்  சம்பந்தன் ஐயாவைப் பதவி விலகுமாறு கேட்பது என்றும் அதற்காக அவர் உட்பட   ஒரு குழு அமைத்தது பற்றி திரு சேனாதிராசா அவர்களுக்கு நினைவில்லாமல் இருக்கிறது. அந்தக் குழு சம்பந்தன் ஐயாவை கொழும்பில் சந்தித்தபோது  “2020 தேர்தலில் மக்கள் என்னைத்  தேர்வு செய்தபோது, மாவட்ட (வேட்பாளர்) பட்டியலில் எனது பெயர் முதலாவதாக இருந்தது. எனது உடல்நிலையை மக்கள் நன்றாக அறிந்திருந்தனர். தெரிந்துதான் எனக்கு வாக்களித்தனர்.  திருகோணமலை தமிழ்மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட என்னை கட்சியின் மத்திய செயல்குழு பதவி விலகுமாற கேட்க முடியாது” எனக் கூறி அவர் பதவி விலக மறுத்து விட்டார். இது கட்சித் தலைவருக்குத் தெரியாமல் இருக்கிறது. இதனால் சம்பந்தன் ஐயா பதவி விலக வேண்டும்  என  இப்போதுதான் சுமந்திரன்  கோரிக்கை  விடுவதாகவும் அதுவும் தன்னிச்சையாகக் விடுவதாகவும் கட்சித் தலைவர் நினைப்பது போல் தெரிகிறது.

சம்பந்தன் ஐயாவின் பதவி விலகல்  தொடர்பாக  கட்சித் தலைவர் திரு சேனாதிராசா அவருடன் தொலைபேசியில்  உரையாடிய போது “என்னைப்  பதவி விலகச்  சொல்வதற்கு சுமந்திரன் யார்?” என சம்பந்தன் எதிர்க்  கேள்வி எழுப்பியதாகவும் எதுவானாலும்,  தன்னைக் கொழும்பில் வந்து சந்திக்குமாறு கேட்டதாகவும் தெரிவித்தார்.  எனவே விரைவில் கொழும்பு சென்று  சம்பந்தன் ஐயாவை நேரடியாகச் சந்தித்து இது தொடர்பாகக்  கலந்துரையாட இருப்பதாக திரு சேனாதிராசா தெரிவித்தார்

இந்த நேரடிச் சந்திப்பு திரு மாவை சேனாதிராசா மற்றும் இரா.சம்பந்தன் ஆகியோருக்கு இடையில்  கொழும்பில் இடம்பெற்றது. அப்போது திரு சுமந்திரன் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பாக இரா.சம்பந்தன் தம்முடன் கருத்துக்களை பரிமாறிக் கொண்டதாக மாவை சேனாதிராசா தெரிவித்தார். ஆனால் அதன் விபரத்தை வெளியிட அவர் மறுத்துவிட்டார். நொவெம்பர் மாதம் 5 ஆம் நாள் வவுனியாவில் நடைபெறயிருக்கும்  மத்திய செயல்குழுக் கூட்டத்தில் இது தொடர்பாக கலந்துரையாடப்படும் என்று மட்டும் கூறினார்.

வவுனியாவில் கூடிய மத்தியக் செயல்குழுக்கூட்டத்தில் இந்த விடயம் ஆராயப்பட்டது. அதில் கலந்து கொண்ட திரு சுமந்திரன்  “அனைத்துத் தவறான இடங்களிலும் ஊழலைத் தேடுகிறோம்” என்ற தொனிப் பொருளில்  தேசத்தை எதிர்கொள்வோம் என்ற தொலைக்காட்சியில் இடம்பெற்ற   கலந்துரையாடலில் திரு சம்பந்தன் ஐயா பற்றி எழுப்பப் பட்ட கேள்விக்கு தான் கொடுத்த பதில் தொடர்பாக விளக்கம் அளித்தார்.

தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் வவுனியாவில் நடந்த போது கட்சியின் தேசிய மாநாடு பற்றிய விடயத்தை விட இரா. சம்பந்தன் அய்யா பதவி விலக வேண்டும் என்பது பற்றி திரு சுமந்திரன் கொடுத்த விளக்கந்தான் முக்கிய இடத்தைப் பிடித்துக் கொண்டது.

மத்திய செயல்குழு கூட்டத்தின் போது வவுனியாவை சேர்ந்த உறுப்பினர் ஒருவர், இரா. சம்பந்தன் பதவி விலக வேண்டும் என்பது தொடர்பில் சுமந்திரன் தெரிவித்த கருத்துகள் குறித்து அவர் விளக்க வேண்டும் என்று கோரினார். தலைவர் அனுமதி வழங்கினால் அந்தக் கேள்விக்கான பதிலை  விரிவாக வழங்குவேன் என சுமந்திரன்  தெரிவித்தார்.  தலைவர்  மாவை சேனாதிராசாவும் அதற்கான விளக்கத்தை வழங்கத்தானே வேண்டும் என்றார். இதனை அடுத்து சுமந்திரன் நீண்ட விளக்கம் ஒன்றை வழங்கினார்.

அதற்கு முன்னதாக ஒரு காணொளியையும் அவர் அங்கு கூட்டத்தில் இருந்தவர்களுக்குப் போட்டுக் காட்டினார். அது கட்சியின் கொழும்பு மாவட்ட கிளைத் தலைவர் சட்டத்தரணி தவராசா நடத்திய செய்தியாளர் சந்திப்பு தொடர்பான காணொளி. அதில் சம்பந்தர் இறக்கும் வரைக்கும் பதவியில் இருக்க ஆசைப்படுகிறார் என்பது உள்ளிட்ட பல்வேறு விமர்சனங்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன. அதனைக் காண்பித்த சுமந்திரன், இப்படி எமது கட்சியை சேர்ந்தவர்களே தலைவரை பற்றி அவதூறாகப் பேசிய போது இந்த செயல்குழு எந்த ஒரு கேள்வியையும் எழுப்பவில்லை என்பதைச் சுட்டிக்காட்டினார். மேலும், அவர் வழங்கிய விளக்கம் வருமாறு:

2010 ஆம் ஆண்டுக்கு முன்னதாக என்னை அரசியலில் ஈடுபடுமாறு இரண்டு தடவைகள் சம்பந்தனும் சேனாதிராசாவும் வலிந்து அழைத்த போதும் அதனை நிராகரித்த நிலையில் மீண்டும் 2010 ஆம் ஆண்டு தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்புரிமை வழங்கி அரசியலுக்கு அந்த இருவருமே என்னை அழைத்து வந்தனர். அதன் பின்னர் 2015 ஆம் ஆண்டு தேர்தல் அரசியலுக்கான களத்தையும் அவர்களே ஏற்படுத்தினார்கள். (தொடரும்)


திருமலை பற்றி எரிகிறது சம்பந்தன் ஐயா கொழும்பில் பிடில் வாசிக்கிறார்!

நக்கீரன்
(3)

சென்றவாரத் தொடர்ச்சி——————————

தொடர்ந்து சம்பந்தன் தேர்தல் அரசியலுக்கு விடை கொடுக்கும் தீர்மானத்தை எடுத்தார். அதே நேரம் சேனாதிராசாவும் வடக்கு முதலமைச்சர் பதவிக்கு போட்டியிடப் போவதாக அறிவித்தார். அச்சமயத்தில் 2020 பெப்ரவரி 26 ஆம் திகதியன்று சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பின் போது சம்பந்தன், சேனாதிராசாவின் முடிவுகளை மையப்படுத்தி என்னால் தொடர்ச்சியாக அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட முடியாது, எனவே அரசியல் செயற்பாடுகளில் இருந்து வெளியேறுகிறேன் என்ற எனது முடிவை அறிவித்தேன். எனினும், சம்பந்தனும் சேனாதிராசாவும் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. நீர் தான் இனி எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறித்தான் என்னைத் தொடர்ந்தும் அரசியலில் இருக்க சம்மதிக்க வைத்தார்கள்.

அதன் பின்னர், சம்பந்தனின் முடிவை அறிவிக்கும் கூட்டம் ஒன்று திருகோணமலையில் நடத்தப்பட்டது. அதன் போது சம்பந்தன் தனது முடிவை அறிவித்த போதும், திருகோணமலை மக்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் சம்பந்தன் தனது முடிவை மறுபரிசீலனை செய்தார். இதன்போது இரண்டு நிபந்தனை விதித்தார். அவற்றில் முதலாவது கட்சியின் தேசிய பட்டியலில் முதலாவது உறுப்பினர் பதவியை குகதாசனுக்கு வழங்குவது என்றும், இரண்டாவதாகத் தான் ஒரு வருடத்திற்கு மட்டுமே நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிப்பேன் என்பதும் ஆகும். அதற்கு மேல் தனது உடல்நிலை இடமளிக்காது என்றும் குறிப்பிட்டார். கட்சி அவரது நிபந்தனைகளை ஏற்றுக் கொண்ட பின்னரே அவர் தேர்தலில் போட்டியிட முன்வந்தார்.

அதன் பின்னர் வவுனியாவில் செப்தெம்பர் 24, 2022 இல் நடைபெற்ற மத்திய செயற்குழு கூட்டத்தில் திருகோணமலை விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட்ட போது சம்பந்தனின் நிபந்தனை சம்பந்தமான விடயம் பேசுபொருள் ஆகியது. அச்சமயத்தில் மத்தியகுழு குறித்த விடயம் சம்பந்தமாக சம்பந்தனுடன் நேரில் பேசுவது எனத் தீர்மானித்தது. திரு சேனாதிராசாவும் நானும் நேரில் சென்று விடயங்களை பகிர்ந்த போது சம்பந்தன், மக்கள் தனது நிலைமைகளை அறிந்தே தன்னை தெரிவு செய்தனர் என சுட்டிக்காட்டிப் பதவியில் இருந்து விலகும் தீர்மானத்தை மறுதலித்தார்.

இந்த நிலையில்தான் தொலைக்காட்சி ஒன்றின் ஆங்கில மொழியிலான கலந்துரையாடல் ஒன்றுக்கு நான் அழைக்கப்பட்டேன். அந்தக் கலந்துரையாடல் ஆனது “பிழையான இடங்களில் ஊழல்களை தேடுகின்றோமா?” என்ற தலைப்பில் நடைபெற்றது. இதன்போது தான் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களின் பிரகாரம் வினா தொடுக்கப்பட்டது. அந்த வினாவுக்கு பதிலளிக்கும் போது தான் நான் அவரின் பதவி விலகலை குறிப்பிட்டேன்.

அதுவொரு இக்கட்டான வினா ஆகும். உண்மையில் நாடாளுமன்றுக்கு 39 நாட்கள் மட்டுமே வருகை தந்தமைக்கு ஆகவும் திருகோணமலையில் இருந்து வருகை தருவதாக போக்குவரத்து கட்டணங்கள் வழங்கப்படுகின்றது தொடர்பிலும் கரிசனை கொள்ளப்பட்டிருந்தால் மக்கள் வரிப்பணம் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்று தான் நான் ஒத்துக்கொண்டிருக்க வேண்டும். ஆனால், நான் அந்த விடயங்களை தவிர்த்து பதவி விலகல் விடயத்தை வெளிப்படுத்தினேன். இது எனது தனிப்பட்ட நிலைப்பாடு ஆகும் என்றும் குறிப்பிட்டேன்.

இந்தக் கருத்துகளால் என்னை சாடுபவர்கள், விமர்சிப்பவர்கள் இருக்கையில் சம்பந்தனின் நற்பெயரை நான் பாதுகாத்து உள்ளேன். தற்போது வளர்த்த கடா மார்பில் பாய்கிறது என்று விமர்சிப்பவர்கள் தாமாக வலிந்து ஊடகவியலாளர் மாநாட்டை யாழில் கூட்டி சம்பந்தன் தனது அந்திம காலம் வரையில் பதவியில் இருக்க விரும்புகிறார். அதனால்தான் கட்சி சீரழிகிறது என்று பொதுவெளியில் கூறியுள்ளார்கள் என்பதையும் இங்கு சுட்டிக்காட்டுகிறேன் என்றார்.

இந்த நேரத்தில் இடைமறித்த நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், குறித்த வினாவை தவிர்ப்பதற்கு உங்களுக்கு தெரிவொன்று இருக்கையில், நீங்கள் ஏன் பதிலளிக்க முனைந்தீர்கள்? என்ற வினாவை எழுப்பினார். அதற்குப் பதிலளித்த சுமந்திரன், குறித்த நிகழ்ச்சியை நீங்கள் ஆரம்பத்தில் இருந்து பார்த்தீர்கள் என்றால், தேசிய கட்சிகள் இரண்டின் ஊழல்கள் தொடர்பாக நான் அதிகமாக விமர்சனங்களை முன் வைத்திருந்தேன்.

அதன்போது எமது கட்சியை மையப்படுத்தி வினா தொடுக்கப்பட்ட போது அதற்குப் பதிலளிக்காது விட்டால், கிட்டத்தட்ட குற்றச்சாட்டுகளை ஏற்றுக் கொண்டதாக மாறிவிடும். அத்துடன் ஊழலுக்கு எதிரான எனது கருத்துக்கள் தொடர்பான நம்பகத்தன்மையும் கேள்விக்குள்ளாகும். எனவே தான் அதற்குப் பதிலளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

அதேவேளையில், தற்போதுகூட நான் சம்பந்தன் அய்யா என்னை அரசியலுக்கு அழைத்து வந்தவர் – ஆதரவாக வழிகாட்டியாக இருந்தவர் என்பதை கூறும் அதே நேரம், அவருடைய நற்பெயரை பாதுகாப்பதாக இருந்தால் பதவியில் இருந்து விலகுவதுடன் கொழும்பில் வசிக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்குச் சொந்தமான வீட்டை மீண்டும் கையளிக்க வேண்டும். அத்தோடு சம்பந்தன் பதவி விலகுவது ஆனது, நாடாளுமன்ற மற்றும் தேசிய மட்ட செயற்பாடுகளுக்கும், திருகோணமலை மாவட்டத்திற்கும் நன்மைகளையே அளிக்கும். மேலும், அவர் தமிழ் மக்களின் தலைவர் என்ற அந்தஸ்துடன் தொடர்ந்தும் நற்பெயருடன் இருப்பார் என்று கூறினார். இதுதான் திரு சுமந்திரன் கடந்த நொவெம்பர் மாதம் 02 ஆம் நாள் வவுனியாவில் கூடிய இதஅக இன் மத்திய குழுக் கூட்டத்தில் கொடத்த தன்னிலை விளக்கமாகும்.

இதஅக இன் மத்திய குழு மட்டும் சம்பந்தன் ஐயா உடல்நலக்குறைவு காரணமாக தனது நாடாளுமன்றக் கடமைகளை மட்டுமல்ல, திருகோணமலைத் தொகுதி தமிழ்மக்களது சிக்கல்களையும், குறிப்பாக காணி அபகரிப்பு தொடர்பான சிக்கல்களை, அவரால் தீர்த்து வைக்க முடியவில்லை  சொல்லவில்லை.

முன்னர் குறிப்பிட்டவாறு சம்பந்தன் ஐயாவை பதவி விலகக் கட்சி கேட்கவில்லை, சுமந்திரன்தான்  கேட்கிறார் எனச் சில ஊடகங்கள்  மட்டுமல்ல சில ஆய்வாளர்களும் அவர் கூறியதைத் திரித்துக் கூறுகின்றனர்.    “சம்பந்தன் பதவி விலக வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து” என்பதை மட்டும் தலைப்புச் செய்தியாகப் போட்டு விட்டு,  “ஓராண்டுக்கு முன்பு கட்சியில் இருந்த சிலர் அவரிடம் பேசி அவரைப் பதவி விலகச் சொன்னோம் ” என்ற பகுதியை  இருட்டடிப்புச் செய்து விட்டன.  

தமிழரசுக் கட்சியின் பங்காளிக் கட்சித் தலைவர்கள் மத்தியிலும் சம்பந்தன் ஐயா தனது உடல் பலவீனம் காரணமாக ததேகூ இன் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்ற கலகக் குரல் எழுப்பப்பட்டது. அப்படிக் குரல் எழுப்பியவர்களில் ஒருவர் வன்னி மாவட்ட நா. உறுப்பினர்  வினோராதலிங்கம்.  கடந்த ஆண்டு  – ததேகூ இல் இருந்து பிரிந்து போகு முன்னர் – அவர் சில உண்மைகளை போட்டுடைத்தார். ததேகூ பற்றிய ஆதங்களை வெளியிட்டார்.  “மாற்றான் வீட்டு மல்லிகையும் மணக்கும்” என்பதற்கு இணங்க அவரது பேச்சில் இருந்து முக்கிய பகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வயது மூப்பு காரணமாக ஏற்படும் உடல்நலக் குறைவால் சம்பந்தன், கடந்த சில ஆண்டுகளாகப் பாதிக்கப்பட்டு இருக்கிறார். அவரால் உதவியாளர்கள் இன்றி எந்தக் காரியத்தையும் ஆற்ற முடியாத நிலை தொடர்கிறது. அவர் முக்கிய கலந்துரையாடல்கள், சந்திப்புகளில் கூட, என்ன பேசுகிறார் என்பதை மற்றவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக சுமந்திரன் தேவைப்படுகிறார். தந்தை செல்வா உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த போது, அமிர்தலிங்கம் எப்படி செல்வாவின் குரலாக நோக்கப்பட்டாரோ, அதுபோலத்தான் சம்பந்தனின் குரலாக இன்றைக்கு சுமந்திரன் அடையாளப்படுத்தப்படுகின்றார்.

இவ்வாறான நிலை நீடிப்பதை, கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் விரும்பவில்லை. அதனால், சம்பந்தனை, கூட்டமைப்பின் தலைமைத்துவத்தில் இருந்து விலக வேண்டும் என்று தொடர்ச்சியாகக் கோரி வருகின்றன. அத்தோடு, கூட்டமைப்புக்கு கூட்டுத்தலைமை உருவாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றன.
கூட்டமைப்பின் தலைவராகவும் பாராளுமன்றக் குழுவின் தலைவராகவும் இருக்கும் சம்பந்தன், தற்போதைய பாராளுமன்றத்தின் அமர்வுகளில் சொற்ப நாள்கள் மாத்திரமே கலந்து கொண்டிருக்கின்றார். அவர், வைத்திய விடுப்பு என்கிற பெயரில், அமர்வுகளில் கலந்து கொள்வதைத் தவிர்த்து வருகிறார். அதனால் ஏற்படும் பாராளுமன்றக் குழுத் தலைவர் என்கிற வெற்றிடத்தையும் சுமந்திரன் பிரதியீடு செய்து வருகிறார். இதனால், தமிழரசுக் கட்சிக்குள்ளும் கூட்டமைப்பின் ஏனைய பங்காளிக் கட்சிகளுக்குள்ளும் குழப்பம் நீடிக்கின்றது.

முக்கிய அரசியல் முடிவுகள், கிட்டத்தட்ட சுமந்திரனின் கைகளுக்குள் சென்று சேர்ந்துவிட்டதான நிலை உருவாகியிருக்கிறது. ஏனெனில், ஏற்கெனவே தந்தை செல்வாவின் இறுதிக் காலங்களில், அமிர்தலிங்கம் தன்னுடைய அரசியல் முடிவுகளை எல்லாம் செல்வாவின் பெயரால் முன்மொழிந்தார் என்பது, தமிழ்த் தேசிய அரசியலில் நீடிக்கும் உணர்நிலை. அப்படியான நிலை, இன்னொரு சந்தர்ப்பத்தில் தொடர்வதை யாரும் விரும்ப மாட்டார். அதனால், சம்பந்தனின் பதவி விலகல் அல்லது அரசியலில் இருந்து ஓய்வுபெற வேண்டிய நிலை என்பது தவிர்க்க முடியாததாகி விட்டது.

இவற்றையெல்லாம் விட முக்கியமான விடயம், திருகோணமலையில் தற்போது அரங்கேறி வரும் தமிழ் பாரம்பரிய நில ஆக்கிரமிப்பை களத்தில் இருந்து எதிர்ப்பதற்கும், செயற்றிறனுடன் இயங்குவதற்கும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் அவசியம் காணப்படுகின்றது. சம்பந்தனால் செயற்பட முடியாத நிலையில், அவர் தன்னுடைய இடத்தை, தனக்கு அடுத்த நிலையில் உள்ளவரிடம் விட்டுக் கொடுப்பதுதான் அவர் தமிழ்ச் சமூகத்துக்கு செய்யும் நல்ல காரியமாகும்.

வவுனியாவில் இடம்பெற்ற தமிழரசுக் கட்சி கூட்டத்தில், திருகோணமலையில் இருந்து செயற்பாட்டாளர் குழுவொன்று, சம்பந்தனின் பதவி விலகல் தொடர்பில் தீர்க்கமான முடிவு எடுக்கப்பட வேண்டும் என்று வாதிட்டு இருக்கின்றது. அந்தச் செயற்பாட்டாளர்கள், திருகோணமலையில் தமிழரசுக் கட்சியை புனரமைப்புச் செய்த குகதாசனால் அழைத்துச் செல்லப்பட்டவர்கள் என்பது செய்தி.

சம்பந்தன் பதவி விலகினால், அந்த இடத்துக்கு குகதாசன் வருவார். அவரும் இளையவர் அல்ல; அவ்வளவு வேகமாகச் செயற்படக் கூடியவர் என்று கருத முடியாது. ஆனாலும், இருந்தும் இல்லாமல் இருப்பதற்கு, களத்தில் செயற்படுவதற்கான ஒருவராக குகதாசனின் இடத்தை ஏற்றுக் கொள்ள முடியும்.

தமிழ்த் தேசிய அரசியல் என்பது, தொடர் செயற்பாடு மற்றும் இராஜதந்திர அணுகுமுறை என்கிற கட்டங்களில் இருந்து அணுப்பட வேண்டியது. அதனால், களத்தில் இயங்குபவர்கள் ஓய்வின்றி உழைத்தாக வேண்டும். அதற்கு வயது மூப்பு, உடல்நலக் குறைவு போன்ற தொல்லைகள் இல்லாதவர்களின் வருகை அவசியமானது. அதுதான், மக்களையும் தமிழ்த் தேசிய அரசியலில் தொடர்ச்சியாக இணைத்துக் கொண்டிருக்கும்.

மாறாக, வீடுகளில் ஓய்வெடுக்க வேண்டியவர்கள், கட்சிகளையும் பதவிகளையும் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தால், தமிழ்த் தேசிய அரசியல், சாய்வு நாற்காலிகளில் சாய்ந்திருக்க தொடங்கிவிடும். கூட்டமைப்புக்குள், குறிப்பாக தமிழரசுக் கட்சிக்குள் ஓய்வுபெற வேண்டிய மூத்தவர்கள் பலர், இளையவர்களுக்கு இடம் வழங்காமல், நந்திகளாக இடைமறித்து நிற்கிறார்கள்.

கடந்த பொதுத் தேர்தலின் போது, மூத்தவர்கள் ஒதுங்கிக் கொண்டு இளையவர்களுக்கு வழிவிடவேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. அந்தக் கோரிக்கைகளின் போக்கில், திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடாது, அந்த இடத்தில் குகதாசனை முன்னிறுத்தும் முடிவுக்கு சம்பந்தன் வந்திருந்தார். அவர், தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றம் வருவாக கூறினார்.

ஆனால், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவோ, சம்பந்தன் போட்டியிடாது விட்டால் தானும் போட்டியிட முடியாது போகும்; அதனால், எப்படியாவது சம்பந்தனை போட்டியிட வைத்துவிட வேண்டும் என்று குறியாக இருந்தார். அதில் அவர் வெற்றியும் பெற்றார். ஆனால், அவரால் தேர்தலில் வெற்றியடைய முடியவில்லை என்பது வேறு கதை! (தொடரும்)

——————————————————————————————————————-


 

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply