சம்பந்தன் எம்.பி பதவியைத் துறக்க வேண்டும்! அடுத்து வரும் காலத்தில் நடவடிக்கை: சுமந்திரன் பகிரங்கம்
K. S. Raj
இலங்கை தமிழரசு கட்சியின் சிரேஷ்ட தலைவரும், திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் அவருடைய முதுமையினால் செயற்பாட்டு அரசியலில் பங்களிப்பு செய்யமுடியாதிருப்பதன் காரணமாக அவர் தனது பதவியை துறக்க வேண்டுமென அந்த கட்சியின் பேச்சாளரும், யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பகிரங்கமாக கோரியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சியொன்றில் கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்றபோதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“288 நாடாளுமன்ற நாட்களில் வெறுமனே 39 நாட்களில் தான் நாடாளுமன்றத்துக்கு இரா.சம்பந்தன் வருகை தந்திருக்கின்றார் என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக பெறப்பட்டுள்ள தகவல்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
சம்பந்தனின் முதுமை
அதனடிப்படையில், அவருடைய வருகை வீதம் 13.6சதவீதமாக உள்ளது. அவ்வாறான நிலையில் அவருக்கு நாடாளுமன்ற சம்பளமாக 4 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
எரிபொருள், தொலைபேசி மற்றும் போக்குவரத்து உள்ளிட்டவற்றுக்காக 4இலட்சத்து 19ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
சம்பந்தனின் முதுமை காரணமாக அவர் தொடர்ச்சியாக நாடாளுமன்றத்துக்கு வருகை தரமுடியாதிருக்கின்றமை தொடர்பில் நாங்கள் கரிசனைகளைக் கொண்டிருக்கின்றோம்.
விசேடமாக நான் அந்த விடயத்தில் கரிசனைகளைக் கொண்டிருக்கின்றேன். அந்தவகையில் நான் ஒருவிடயத்தினை இந்தச் சந்தர்ப்பத்தில் பகிரங்கமாக தெரிவிக்க விரும்புகின்றேன்.
சில ஆண்டுகளுக்கு முன்னதாக அவரால் நாடாளுமன்றத்துக்கு சமூகமளிக்க முடியாத நிலைமைகள் ஏற்பட ஆரம்பித்த சந்தர்ப்பத்தில் நான் சம்பந்தனிடத்திலேயே நேரடியாக பதவி விலகுமாறு கோரினேன்.
நாடாளுமன்றத் தேர்தல்
அதன்போது சம்பந்தன் அதனை நிராகரித்திருந்தார். அத்துடன், அவர் அதற்கான காரணத்தினையும் தெளிவு படுத்தினார்.
2020ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது திருகோணமலை மக்கள் தன்னை அந்த மாவட்டத்தின் முதலாம் நபராக தெரிவு செய்திருக்கின்றார்கள்.
அவர்கள் தனது உடல்நிலைமைகளை அறிந்தே தெரிவு செய்திருக்கின்றார்கள் என்று குறிப்பிட்டார். அதனை சம்பந்தன் மீண்டும் நினைவு படுத்தினார்.
எனினும், திருகோணமலை மக்களை பிரதிநிதித்துவம் செய்து செயற்படத்தப்பட வேண்டிய பல விடயங்கள் உள்ளன. பிறிதொரு பிரதிநிதியை நாங்கள் நியமித்தாலும் அவர் முழுமையான செயற்பாடுகளை ஆற்றுவரா என்பது பற்றிய பல கரிசனைகள் உள்ளன.
எவ்வாறாயினும், சம்பந்தன் தனது முதுமை நிலைமை காரணமாக அவரால் செயற்பாட்டு ரீதியான விடயங்களை முன்னெடுக்க முடியாதுள்ளது. ஆகவே, அவர் பதவியைத் துறக்க வேண்டும் என்பது தான் எனது தனிப்பட்ட கருத்தாகவுள்ளது. அடுத்துவரும் காலத்தில் அதுதொடர்பான சில நடவடிக்கைளை எடுப்போம் ”என தெரிவித்துள்ளார்.
திருகோணமலை தமிழ் மக்கள் எதிர் கொள்ளும் நெருக்கடிகள்:
•திருகோணமலை மாவட்டம் குச்சவெளி பிரதேசசபைக்குட்பட்ட தமிழர் வாழும் கிராமங்களில் (குச்சவெளி, கும்புருப்பிட்டி, புல்மோட்டை, திரியாய்…._ 22 விகாரைகள் கட்டப்பட்டு வருகிறது. இந்த விகாரைகளுக்கு மொத்தம் 2908. 50 ஏக்கர் தொல்பொருள் திணைக்களகத்தால் அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்டுள்ளது. 2908.50 ஏக்கரைவிட மேலும் பல ஆயிரம் ஏக்கர் காணிகள் தரப்பட வேண்டும் என்று பவுத்த பிக்குகள் அடம்பிடிக்கிறார்கள்.
• இந்த நில ஆக்கிரமிப்பில் ஒரு சில பவுத்த பிக்குகள் ஈடுபட்டுள்ளார்கள்.
• இதற்கு மேலதிகமாக கிரிஹந்து சேயா என அழைக்கப்படும் திரியாய் பவுத்த விகாரைக்காக 3065 ஏக்கர் காணிகளை ஒதுக்கீடு செய்து அளவீடு செய்யுமாறு 22 ஏப்ரலில் சனாதிபதிசெயலகத்திலிருந்து குச்சவெளி பிரதேச செயலகத்திற்கு கடிதம் ஒன்று கிடைத்துள்ளது.
திரியாய் மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள்:
• 3065 ஏக்கர் பரப்பளவு கொண்ட திரியாய் கிராமத்தின் அனைத்து குடியிருப்பு மற்றும் விவசாயப் பகுதிகளையும் உள்ளடக்கியது. கிராம மக்கள் வசிக்கவும், பிழைப்பு நடத்தவும் இடமில்லை.
• திரியாய் கிராமத்தில் மேலும் 392 ஏக்கர் காணியை தொல்பொருள் திணைக்களம் பல்வேறு இடங்களில் உரிமை கோரியுள்ளது.
• திரியாய் கிராமத்தில் மூன்று புதிய பவுத்த விகாரைகளும் ஒரு பழைய பவுத்த விகாரையும் அமைக்கப்பட்டு அவற்றுக்கு மொத்தமாக 809 ஏக்கர் ஒதுக்கப்பட்டுள்ளது.
• அரிசிமலை பிக்கு நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
• வனத்துறையால் கையகப்படுத்தப்படாத பகுதிகளில் கூட, விவசாயிகள் தங்கள் நிலங்களை சுத்தம் செய்து விவசாயத்திற்கு தயார் செய்ய அனுமதி பெறுவதை வனத்துறை அதிகாரிகள் சவாலாக்கி வருகின்றனர். ஒருபுறம் உணவு உற்பத்தியை அதிகரிக்க அரசாங்கம் விரும்புகிறது. மறுபுறம் வனத்துறை அதனைத் தடுக்கிறது.
திரியாய் கிராம விவசாயிகள் 150 ஆண்டுகளுக்கும் மேலாக தமது காணியில் விவசாயம் செய்து வருகின்ற போதிலும் தொல்பொருள் திணைக்களத்தினரும் சுமார் 1000 ஏக்கர் வயல்நிலத்தில் எல்லைக் கற்களை வைத்து விவசாயம் செய்ய வேண்டாம் என விவசாயிகள் அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.
திரியாய் கிராமத்தில் 2712 ஏக்கர் நிலப்பரப்பிற்கு வனத்துறை உரிமை கோரியுள்ளது. விவசாயிகள் தங்கள் நிலங்களுக்குச் சென்று விவசாயம் செய்ய அனுமதிப்பதில்லை.
இந்தக் காணி அபகரிப்பைத் தடுத்து நிறுத்த சம்பந்தன் ஐயா அவர்களால் முடியாது இருக்கிறது. சம்பந்தன் ஐயா தனது சார்பாக திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக் கூட்டங்கள் உட்பட ஏனைய கருமங்களைப் பார்க்க இராசநாயகம் என்பவரை நியமித்துள்ளார். இது உடையார் தனக்குப் பதிலாக திருமணம், இழவு வீட்டுக்குப் பொல்லை அனுப்பிவைத்த கதையாக இருக்கிறது.
மேலை நாடுகளில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தனது குடும்பத்தில் தனது மனைவிக்கோ பிள்ளைக்கோ உடல்நலக் குறைவு காரணமாக தனது நாடாளுமன்றக் கடமைகளை சரிவரச் செய்வது கடினம் எனக் கண்டால் உடனே தனது பதவியை இராசினமா செய்து விடுகிறார். திருகோணமலை தமிழ் மக்களது நலன்களைப் பேண ஒரு முழுநேர நாடாளுமன்றப் பிரதிநிதி கட்டாயம் தேவை.
தனி மனிதர்களது நலங்களை விட தொகுதி மக்களின் – வாக்காளர்களின் நலங்கள் நூறுமடங்கு உயர்வானது. பூனைக்கு யார் மணிகட்டுவது எனப் பலரும் கையறு நிலையில் இருந்த போது நா.உறுப்பினர் சுமந்திரன் அந்தப் பணியைச் செய்ய முன்வந்திருப்பதற்கு எனது பாராட்டுக்கள். பொது வாழ்வில் ஈடுபடுபவர்களுக்கு வாய்மை, நேர்மை, வெளிப்படத்தன்மை அவசியம்.
நீண்ட காலமாக (1977 முதல்)சம்பந்தன் ஐயா தமிழ்மக்களுக்கு அரும்பெரும் சேவை ஆற்றியுள்ளார். அரசியல் அரங்கில் அவரது ஆளுமையை மறுப்பதற்கில்லை. ஆனால் இப்போது அவரது உடல் நிலை அதற்கு இடம் கொடுப்பதாக இல்லை. எனவே இந்த நெருக்கடியான கால கட்டத்தில் அவர் நல்ல முடிவை துணிச்சலாக எடுப்பார் எனப் பலர் எதிர்பார்க்கிறார்கள். (வேலுப்பிள்ளை தங்கவேலு)
Leave a Reply
You must be logged in to post a comment.