அல்லாவின் பார்வையில் பெண்கள்: 5. ஆணாதிக்கம்

அல்லாவின் பார்வையில் பெண்கள்: 5. ஆணாதிக்கம்

பொதுவாக அனைத்து மதங்களுமே ஆணாதிக்கப் பார்வை கொண்டவைகள் தாம். இஸ்லாத்திற்கு இதில் விலக்கு ஒன்றுமில்லை. ஆனால் இதற்கு நேரெதிராக இஸ்லாம் பெண்களுக்கு பல்விதமான உரிமைகள் வழங்கியிருப்பதாக பரப்பித் திரிகிறார்கள். இதில் பொருள் இல்லாமலும் இல்லை. ஏனைய பிற மதங்களை விட காலத்தால் பிந்திய மதம் என்பதால் ஒப்பீட்டு முறையில் சற்று மேலோங்கிய தோற்றம் கிடைத்திருக்கிறது என்பதை மறுக்கவியலாது. ஆனால் உள்ளீட்டில் அனைத்து பிற்போக்குத் தனங்களையும் உள்ளடக்கிக் கொண்டிருக்கும் ஆணாதிக்க மதம் என்பதையும் மறுக்கவியலாது.

பெண்ணை ஆண் அடக்குவது ஆணாதிக்கம் எனும் தட்டையான புரிதலே பொதுவாக நிலவுகிறது. ஆனால் ஆணாதிக்கம் என்பது இன்னும் ஆழமானது. ஆணுக்கு ஆதரவாக பெண் மீது செலுத்தப்படும் அடக்குமுறைகளும், ஒழுக்கங்களும், சமூகக் கட்டுப்பாடுகளும், நடைமுறை சார்ந்து செய்யப்படும் திணிப்புகளும், பெண்ணின விடுதலைக்கு எதிராக செய்யப்படும் ஆணின அடக்குமுறைகள், கற்புநெறிகள் என அனைத்தையும் உள்ளடக்கியது தான் ஆணாதிக்கம். இந்த வகையில் ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் ஆணாதிக்கவாதிகளாக இருக்கிறார்கள்.  ஆனால் குடும்பத்தில் கணவனுக்கு கீழாக மனைவி இருப்பதையே ஆணாதிக்கம் என எண்ணிக் கொண்டு இஸ்லாம் பெண்களுக்கும் உரிமை வழங்கியிருக்கிறது என்று பசப்புகிறார்கள்.  இஸ்லாத்தின் ஒட்டுமொத்த பார்வை பெண்ணை ஆணின் பதுமையாகவே பாவிக்கிறது. இதை விளக்க அதன் சில வசனங்களை வகை மாதிரியாக எடுத்துக் கொள்ளலாம்.

ஓர் ஆணின் சாட்சிக்கு ஈடாக இரண்டு பெண்களின் சாட்சிகள் குரான் 2:282

 ஆணுக்கு கட்டுப்பட்டு நடப்பவளே நல்லொழுக்கமுடையவள். கணவனை மதிக்காத மனைவியை படுக்கையை விட்டு விலக்கி, அடித்து கட்டுப்படுத்தலாம் குரான் 4:34

 கணவன் உறவுக்கு அழைத்து மனைவி மறுத்தால் அவள் விடியும் வரை சபிக்கப்பட்டவளாகிறாள். புஹாரி 3237

 குடும்பத்தில் பிரிவு ஏற்பட்டால் குழந்தைகள் மீது மனைவிக்கு எந்த உரிமையும் இல்லை. பால் கொடுத்தால் கூட அதற்கு விலை கொடுக்க வேண்டும். குரான் 2:233

 தங்கம், வெள்ளி, குதிரைகள், நிலம், கால்நடைகள்,ஆன் குழந்தைகள் போல் பெண்களும் ஆண்களுக்கு வாழ்வியல் சுகம் தரும் பொருட்கள் குரான் 3:14

இவைகள் குரானில் காணக் கிடைக்கும் வசனங்கள். இது போல் இன்னும் ஏராளம் கொட்டிக் கிடக்கின்றன.  ஹதீஸ்களைத் தோண்டினாலோ மிக மட்டமாக, பெண்ணை ஓர் உயிரினமாகக் கூட மதிக்காத வண்ணம் இருக்கின்றன. ஆனால் அவைகளை ஏற்றுக் கொள்ளப்பட்டவைகள், இட்டுக் கட்டப்பட்டவைகள் எனும் குழப்பமான இருட்டுச் சகதிக்குள் மூழ்கடிக்கப்பட்டிருக்கின்றன.

முதல் வசனத்தில் சாட்சிப் பொறுப்புக்கு ஆண்களையே முதன்மையாக கொள்ளப்பட்டிருக்கிறது. இரண்டு ஆண்கள் சாட்சிக்கு கிடைக்கவில்லையாயின் ஓர் ஆணும் இரண்டு பெண்களுமாக கொள்ளலாம் என்கிறது. அப்போதும் இரண்டு ஆண்கள் கிடைக்கவில்லையாயின் நான்கு பெண்களுக்கு சாட்சி கூறும் தகுதி வந்துவிடாது. ஒரு மாற்று ஏற்பாடாக ஓர் ஆணுக்கு பதிலாக இரண்டு பெண்கள் என  ஏற்கப்பட்டிருக்கிறது. அதிலும் ஏன் இரண்டு பெண்கள் என்பதற்கு ஒரு காரணத்தையும் குரான் கூறியிருக்கிறது. ஒருத்தி தவறினாலும் மற்றொருவள் நினைவு படுத்துவாளாம். ஏன் ஆண்கள் தவறவே மாட்டார்களா? அது தான் குரானின் மனோநிலை, ஆணும் பெண்ணும் சமமாக மாட்டார்கள்.

மனைவியை அடிக்கலாம் எனும் அனுமதி குறித்து மதவாதிகள் வளைத்து வளைத்து உபநிடதங்கள் எழுதித் தள்ளியிருக்கிறார்கள். இல்லறத்தை இனிதே நடத்திச் செல்வதற்கான ஏற்பாடு என்பதில் தொடங்கி பெண்களுக்கான பாதுகாப்பு என்பது முடிய விதவிதமான வண்ணங்களில் விளக்கங்கள் மலிந்து கிடக்கின்றன. ஆனால் எப்படி விளக்கமளித்தாலும் இதன் பொருள் ஆணுக்கு கீழாக பெண்ணை இருத்தி வைப்பது என்பதைத்தவிர வேறொன்றுமில்லை. தான் இன்னொரு திருமணம் செய்ய மனைவி தடை விதிக்கிறாள் என்று ஐயமெழுப்பும் ஓர் ஆணுக்கு உன் மனைவியை அடித்து விட்டு திருமணம் செய்து கொள் என ஆலோசனை வழங்கும் ஹதீஸ்கள் இருக்கின்றன. மட்டுமல்லாது மனைவியை எப்படி அடிப்பது என்பதற்கும் முகத்தில் அடிக்கக் கூடாது, காயம் ஏற்படும்படி அடிக்கக் கூடாது வழிமுறைகள் வழங்கியிருக்கிறது. இதை எப்படி எடுத்துக் கொள்வது? இஸ்லாம் ஆணையும் பெண்ணையும் சமமாக நடத்துகிறது என்றா?

கணவன் உறவுக்கு அழைத்து மனைவி மறுக்கக் கூடாது என்பதை மேலோட்டமாக பார்த்தால் வெகு யதார்த்தமாக தெரியலாம். ஆனால், இஸ்லாம் ஆணுக்கு வழங்கியிருக்கும் கலவிச் சுதந்திரத்தையும் கணக்கில் கொண்டு பார்த்தால் தான் இதன் முழுமையான பொருளாக பெண் ஆணுக்கான காமப் பதுமை என்பது விரியும்.  ஆண் நான்கு திருமணம் வரை செய்து கொள்ள அனுமதிக்கப் பட்டவன், மட்டுமல்லாது அடிமைப் பெண்கள் இருந்தால் அவர்களை எண்ணிக்கை வரம்பின்றி கையாளவும் சட்டரீதியாக அங்கீகாரம் பெற்றவன். பெண்ணோ ஒரு திருமணத்திற்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டவள். அதாவது ஒரு மனைவி மறுத்தாலும் ஆணுக்கு கல்வி இன்பம் தடையின்றி கிடைப்பதற்கான ஏற்பாடு இருக்கிறது. மனைவி அதற்காக காத்துக் கிடப்பவளாகிறாள். இந்த நிலையில் யார் அழைத்து யார் மறுக்கக் கூடாது எனும் விதி வந்திருக்க வேண்டும்? மாறாக அல்லா பெண்ணை சபிக்க உத்தரவிட்டிருக்கிறார். என்றால் அவரின் பார்வை பெண் ஆண்களுக்கான காமப் பதுமை என்பதாக இருக்கிறது என்பதல்லவா உண்மை.

ஒரு குழந்தையை ஈன்றெடுப்பதில் சமூக வயமாகவும் அறிவியல் வயமாகவும் பெண்ணின் பங்களிப்பே முதன்மையானது. ஆனால் இஸ்லாத்தில் பெண்களுக்கு குழந்தையிடன் எந்த உரிமையும் இல்லை. கணவன் மனைவி ஒன்றியிருக்கும் போது பிரச்சனைக்கு இடமில்லை, இங்கு அவர்களின் குழந்தையாக இருப்பது, அவர்களுக்குள் கருத்து வேற்றுமை தோன்றி பிரியும் நிலை வந்தால் ஆணின் உடமையாகி விடுகிறது. அதன் பிறகு அக்குழந்தை பால் குடிக்கும் பருவத்தில் இருந்தால் தாயிடம் பாலருந்துவதற்கு தகுந்த கூலியை வழங்கி விடுமாறு குரான் ஆணுக்கு உத்திரவிடுகிறது. இதையும் குரான் பெண்ணை பெருமைப்படுத்துவதாக சில மதவாதிகள் இறும்பூறெய்துகிறார்கள். ஆனால் இதை விட பெண்ணை, தாய்மையை வேறு யாரலும் கேவலப்படுத்திவிட முடியாது.

இந்த வசனம் ஆண்களை அல்லாவின் பாதையிலிருந்து திசைதிருப்பும் அதாவது நரகத்தில் கொண்டு சேர்க்கும் பொருட்கள் சிலவற்றை பட்டியலிடுகிறது. அந்தப் பட்டியலில் பெண்ணும் இருக்கிறாள், ஆண் குழந்தையும் இருக்கிறது. அதேநேரம் ஆண்குழந்தையையும், பெண்களையும் பட்டியலில் வைத்துவிட்டு மனிதர்களுக்கு என்று பொதுவாக பசப்புகிறது குரான். தங்கம், வெள்ளி, கால்நடைகள் குதிரை போன்ற சொத்துகளின் ஈர்ப்பு ஆணை அல்லா கூறும் நேரான(!) வழியிலிருந்து திசை திருப்பி நரகத்தின் பக்கம் கொண்டு சேர்த்து விடுகிறது என்பது இந்த வசனத்தில் அல்லாவின் அங்கலாய்ப்பு. இந்த பட்டியலில் தான் பெண்களும் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். இவ்வளவு தான் அல்லா பெண்களுக்கு அளிக்கும் மதிப்பு. இதை ஆணாதிக்கம் என்பதல்லாது வேறு என்னவாக மதிப்பிடுவது?

இஸ்லாம் தான் ஆணாதிக்கத்தை தோற்றுவித்தது என்பது இதன் உட்பொருளல்ல. இன்று மட்டுமல்ல இஸ்லாம் தோன்றிய காலத்திலும் அதற்கு முன்னரும் சமூகம் ஆணாதிக்க சமூகமாகவே இருந்து வந்திருக்கிறது. அந்த ஆணாதிக்க சமூகத்தை இஸ்லாமும் அங்கீகரித்திருக்கிறது. சொத்து, விவாகரத்து போன்றவைகளும் இஸ்லாத்துக்கு முன்பிருந்தே சமூகத்தின் நிரவலில் இருந்திருந்தாலும் இஸ்லாம்தான் அதை முதலில் கொண்டுவந்தது என்று முஸ்லீம்கள் வம்படியாய் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஆணாதிக்கம் குறித்தும் அதே பார்வையைக் கொள்வார்களா? அல்லது குரானை யாத்தது முகம்மது இல்லை அல்லாதான் என்றால் அல்லாவின் பார்வை ஆணாதிக்கமாக இருப்பதால் இஸ்லாம் தான் ஆணாதிக்கத்தை வடிவமைத்தது என்பதை ஒப்புவார்களா?

இத்தொடரின் முந்தைய பகுதிகள்

39. அல்லாவின் பார்வையில் பெண்கள் 4. மஹ்ர் மணக்கொடை

38. அல்லாவின் பார்வையில் பெண்கள் 3. விவாகரத்து

37. அல்லாவின் பார்வையில் பெண்கள் 2. சொத்துரிமை

36. அல்லாவின் பார்வையில் பெண்கள் 1. புர்கா

35. மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 4

34. மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 3

33. மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 2

32. மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 1

31. ஸம் ஸம் நீரூற்றும் குரானும்

30. விண்வெளியைக் கடந்த முதல் மனிதர் முகம்மதின் மிஹ்ராஜ்

29. மீனின் வயிற்றில் மனிதனைப் பாதுகாத்த அல்லா

28. குரான் குறிப்பிடும் பேசும் உயிரினங்கள் இருப்பது சாத்தியமா?

27. தடயமில்லாத அல்லாவின் அத்தாட்சிகள்

26. குரானில் மிதக்கும் சின்னச் சின்னப் பிழைகள்

25. நிலவை உடைத்து ஒட்டிய அல்லா

24. ஆதிமனிதன் மொழியறிந்தவனா? அல்லாவின் பதில் என்ன?

23. கால வெளியில் சிக்கிக்கொண்ட அல்லா

22. குரானின் காலப்பிழைகள்

21. குரான் குறிப்பிடும் நட்சத்திரங்கள்: மனிதப் பார்வையா? இறைப் பார்வையா?

20. மக்காவின் பாதுகாப்பு: குரானின் அறிவிப்புகள் உண்மையா?

19. சூரத்துல் கஹ்புக்கும் புத்தருக்கும் என்ன தொடர்பு?

18. நூஹின் கப்பல் நிறைய புராணப் புழுகுகள்

17. பிர் அவ்னின் உடல் எனும் கட்டுக்கதை

16. கருவறை குறித்த அல்லாவின் கதையாடல்கள்

15. விந்து குறித்த குரானின் விந்தைகள்

14. பாலும் தேனும் அல்லாவின் வேதத்தின் பாடுகள்

13. கோள்களும் அதன் விசையும் அல்லாவின் தேற்றங்கள்

12. விண்வெளி குறித்த அல்லாவின் பண்வெளிகள்.

11. குரானின் மலையியல் மயக்கங்கள்

10. கடல்கள் பற்றிய அல்லாவின் புனைகதைகள்

9. பூமி உருண்டை என யார் சொன்னது, அல்லாவா? மனிதனா?

8. பிரபஞ்சமும் அதை கட்டுப்பட அழைத்த குரானும்

7. குரான் கூறுவது அறிவியலாகுமா?

6. ஹதீஸ்களும் அதன் பிரச்சனைகளும்.

5. குரானின் பாதுகாப்பில் விழுந்த கேள்விக்குறிகள்.

4. மெய்யாகவே குரான் பாதுகாக்கப்பட்டது தானா?

3. குரானின் சவாலுக்கு பதில்

2. அல்லாவின் ஆற்றலிலுள்ள இடர்பாடுகள்

1. இஸ்லாம். பிறப்பும் இருப்பும்: ஓர் எளிய அறிமுகம்

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே….

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply