ஆறாம் திருமுறை / Sixth Thirumurai
105. புனித குலம் பெறுமாறு புகலல்
puṉita kulam peṟumāṟu pukalal
- 1. சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே
சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலே
ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்
அலைந்தலைந்து வீணேநீர் அழிதல்அழ கலவே
நீதியிலே சன்மார்க்க நிலைதனிலே நிறுத்த
நிருத்தமிடும் தனித்தலைவர் ஒருத்தர்அவர் தாமே
வீதியிலே அருட்சோதி விளையாடல் புரிய
மேவுகின்ற தருணம்இது கூவுகின்றேன் உமையே. - 2. காடுவெட்டி நிலந்திருத்திக் காட்டெருவும் போட்டுக்
கரும்பைவிட்டுக் கடுவிரைத்துக் களிக்கின்ற உலகீர்
கூடுவிட்டுப் போயினபின் எதுபுரிவீர் எங்கே
குடியிருப்பீர் ஐயோநீர் குறித்தறியீர் இங்கே
பாடுபட்டீர்356 பயன்அறியீர் பாழ்க்கிறைத்துக் கழித்தீர்
பட்டதெலாம் போதும்இது பரமர்வரு தருணம்
ஈடுகட்டி வருவீரேல் இன்பம்மிகப் பெறுவீர்
எண்மைஉரைத் தேன்அலன்நான் உண்மையுரைத் தேனே. - 3. ஆற்றுவெள்ளம் வருவதன்முன் அணைபோட அறியீர்
அகங்காரப் பேய்பிடித்தீர் ஆடுதற்கே அறிவீர்
கூற்றுவருங் கால்அதனுக் கெதுபுரிவீர் ஐயோ
கூற்றுதைத்த சேவடியைப் போற்றவிரும் பீரே
வேற்றுரைத்து வினைபெருக்கி மெலிகின்ற உலகீர்
வீணுலகக் கொடுவழக்கை விட்டுவிட்டு வம்மின்
சாற்றுவக்க எனதுதனித் தந்தைவரு கின்ற
தருணம்இது சத்தியஞ்சிற் சத்தியைச்சார் வதற்கே. - 4. பொய்விளக்கப் புகுகின்றீர் போதுகழிக் கின்றீர்
புலைகொலைகள் புரிகின்றீர் கலகலஎன் கின்றீர்
கைவிளக்குப் பிடித்தொருபாழ்ங் கிணற்றில்விழு கின்ற
களியர்எனக் களிக்கின்றீர் கருத்திருந்தும் கருதீர்
ஐவிளக்கு மூப்புமர ணாதிகளை நினைத்தால்
அடிவயிற்றை முறுக்காதோ கொடியமுயற் றுலகீர்
மெய்விளக்க எனதுதந்தை வருகின்ற தருணம்
மேவியதீண் டடைவீரேல் ஆவிபெறு வீரே. - 5. எய்வகைசார்357 மதங்களிலே பொய்வகைச்சாத் திரங்கள்
எடுத்துரைத்தே எமதுதெய்வம் எமதுதெய்வம் என்று
கைவகையே கதறுகின்றீர் தெய்வம்ஒன்றென் றறியீர்
கரிபிடித்துக் கலகமிட்ட பெரியரினும் பெரியீர்
ஐவகைய பூதவுடம் பழிந்திடில்என் புரிவீர்
அழியுடம்பை அழியாமை ஆக்கும்வகை அறியீர்
உய்வகைஎன் தனித்தந்தை வருகின்ற தருணம்
உற்றதிவண் உற்றிடுவீர் பெற்றிடுவீர் உவப்பே. - 6. உடம்புவரு வகைஅறியீர் உயிர்வகையை அறியீர்
உடல்பருக்க உண்டுநிதம் உறங்குதற்கே அறிவீர்
மடம்புகுபேய் மனத்தாலே மயங்குகின்றீர் மனத்தை
வசப்படுத்தீர் வசப்படுத்தும் வழிதுறைகற் றறியீர்
இடம்பெறுபொய் வாழ்க்கையிலே இன்பதுன்பம் அடுத்தே
எண்ணிஎண்ணி இளைக்கின்றீர் ஏழைஉல கீரே
நடம்புரிஎன் தனித்தந்தை வருகின்ற தருணம்
நண்ணியது நண்ணுமினோ புண்ணியஞ்சார் வீரே. - 7. நரைமரண மூப்பறியா நல்லஉடம் பினரே
நற்குலத்தார் எனஅறியீர் நானிலத்தீர் நீவிர்
வரையில்உயர் குலம்என்றும் தாழ்ந்தகுலம் என்றும்
வகுக்கின்றீர் இருகுலமும் மாண்டிடக்காண் கின்றீர்
புரையுறுநும் குலங்கள்எலாம் புழுக்குலம்என் றறிந்தே
புத்தமுதம் உண்டோங்கும் புனிதகுலம் பெறவே
உரைபெறும்என் தனித்தந்தை வருகின்ற தருணம்
உற்றதிவண் உற்றிடுவீர் உண்மைஉரைத் தேனே. - 8. கனமுடையேம் கட்டுடையேம் என்றுநினைத் திங்கே
களித்திறுமாந் திருக்கின்றீர் ஒளிப்பிடமும் அறியீர்
சினமுடைய கூற்றுவரும் செய்திஅறி யீரோ
செத்தநும தினத்தாரைச் சிறிதும்நினை யீரோ
தினகரன்போல் சாகாத தேகமுடை யவரே
திருவுடையார் எனஅறிந்தே சேர்ந்திடுமின் ஈண்டே
மனமகிழ்ந்து கேட்கின்ற வரமெல்லாம் எனக்கே
வழங்குதற்கென் தனித்தந்தை வருதருணம் இதுவே. - 9. வையகத்தீர் வானகத்தீர் மற்றகத்தீர் நுமது
வாழ்க்கைஎலாம் வாழ்க்கைஎன மதித்துமயங் காதீர்
மையகத்தே உறுமரண வாதனையைத் தவிர்த்த
வாழ்க்கையதே வாழ்க்கைஎன மதித்ததனைப் பெறவே
மெய்அகத்தே விரும்பிஇங்கே வந்திடுமின் எனது
மெய்ப்பொருளாம் தனித்தந்தை இத்தருணந் தனிலே
செய்அகத்தே வளர்ஞான சித்திபுரந் தனிலே
சித்தாடல் புரிகின்றார் திண்ணம்இது தானே. - 10. கரணம்மிகக் களிப்புறவே கடல்உலகும் வானும்
கதிபதிஎன் றாளுகின்றீர் அதிபதியீர் நீவிர்
மரணபயம் தவிராதே வாழ்வதில்என் பயனோ
மயங்காதீர் உயங்காதீர் வந்திடுமின் ஈண்டே
திரணமும்ஓர் ஐந்தொழிலைச் செய்யஒளி வழங்கும்
சித்திபுரம் எனஓங்கும் உத்திரசிற் சபையில்
சரணம்எனக் களித்தெனையும் தானாக்க எனது
தனித்தந்தை வருகின்ற தருணம்இது தானே. - 356. பாடுபட்டுப் – ச. மு. க. பதிப்பு.
- 357. எவ்வகைசார் – முதற்பதிப்பு., பொ. சு. பதிப்பு.
- 358. முதற்பதிப்பிலும், பொ. சு. பதிப்பிலும் ‘கனமுடையேம்’ என்பது ஒன்பதாம்பாடலாகவும் ‘வையகத்தீர்’ என்பது எட்டாம் பாடலாகவும் உள்ளன.
புனித குலம் பெறுமாறு புகலல் // புனித குலம் பெறுமாறு புகலல்
- [6-105, 5566-5567]MSS–Saathiyilee MathangkaLilee.mp3Download
- [6-105, 5566]SDS–Saathiyilee MathangkaLilee.mp3Download
- [6-105, 5567]SDS–Kaatuvetti Nilanthiruththik.mp3Download
- [6-105, 5568-5569]MSS–AaRRuveLLam Varuvathanmun.mp3Download
- [6-105, 5568]SDS–AaRRuveLLam Varuvathanmun.mp3Download
- [6-105, 5569]SDS–PoyviLakkap PukukinRiir.mp3Download
- [6-105, 5570-5571]MSS–Eyvakaisaar357 MathangkaLilee.mp3Download
- [6-105, 5570]SDS–Eyvakaisaar357 MathangkaLilee.mp3Download
- [6-105, 5571]SDS–Utampuvaru VakaiaRiyiir.mp3Download
- [6-105, 5572-5573]MSS–NaraimaraNa MuuppaRiyaa.mp3Download
- [6-105, 5572]SDS–NaraimaraNa MuuppaRiyaa.mp3Download
- [6-105, 5573]SDS–Kanamutaiyeem Kattutaiyeem.mp3Download
- [6-105, 5574-5575]MSS–Vaiyakaththiir Vaanakaththiir.mp3Download
- [6-105, 5574]SDS–Vaiyakaththiir Vaanakaththiir.mp3Download
- [6-105, 5575]SDS–KaraNammikak KaLippuRavee.mp3Download
- https://www.thiruarutpa.org/thirumurai/v/T368/tm/punitha_kulam_perumaaru_pukalal
Leave a Reply
You must be logged in to post a comment.