திருக்குறளில் வாழ்க்கை
Dec 11, 2021
“திருக்குறள் ஒரு முழுநூல், வாழ்க்கையின் அனைத்துப் பகுதிகளையும் தழுவி வளர்க்கும் வாழ்க்கை நூல், அறநூல், அரசியல் சாத்திர நூல், அரசியல் உண்மைகளைச் சதுரப்பாட்டுடன் காட்டும் பெருநூல், மெய்யுணர்வினை நல்கும் ஞான நூல், மனித வளர்ச்சியின் பருவந்தோறும் துணை நின்று வழிநடத்தும் வாழ்வு நூல், உலகப் பொது நூல்” என்று திருக்குறளின் மேன்மையை எடுத்துரைக்கிறார் சமுதாய மாமுனிவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார். திருக்குறள் வாழ்க்கை நூலாகும். வாழ்ந்த காலத்திற்கும், வாழும் காலத்திறகும் எதிர்காலத்திற்கும் தேவையான கருத்துகளை தந்து செம்மை வழி வாழ்க்கையை நடத்தச் சொல்லும் நன்னூல் திருக்குறள் ஆகும். இந்நூலில் தனிமனித வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை, சமுதாய வாழ்க்கை, அற வாழ்க்கை, மற வாழ்க்கை, வணிக வாழ்க்கை, அறிவுலக வாழ்க்கை, மெய்யறிவு வாழ்க்கை போன்ற பலநிலைப் பட்ட வாழ்க்கை முறைகள் பற்றிய அறிவுரைகள், வரையறைகள், கருத்துரைகள் வழங்கப்பெற்றுள்ளன.
வாழ்க்கை என்பதற்கு அகரமுதலி வாழ்க்கை, வாழ்தல், வாழ்நாள், இல்வாழ்க்கை, மனைவி, நல்வாழ்வு நிலை, செல்வநிலை, ஊர், மருத நிலத்தூர் என்று பல பொருள்களைக் காட்டுகின்றது அகரமுதலி. இவற்றில் வாழ்க்கை என்பதற்கு வாழ்தல், நல்வாழ்வு நிலை என்ற பொருள்களை இங்குப் பொருத்தமானவைகளாகும்.
திருக்குறள் என்பது வாழ்வியல் நூல். அந்நூலுள் நல்வாழ்வு நிலைக்கான அறிவுரைகள் எக்காலத்திற்கும் ஏற்ற நிலையில் வழங்கப்பெற்றுள்ளன என்பது தெளிவு. திருக்குறளில் வாழ்க்கை பற்றிய பல கோணங்கள் விவரிக்கப்பெற்றிருந்தாலும் திருவள்ளுவர் நேரடியாக வாழ்க்கை என்ற சொல்லைப் பயன்படுத்தி அதனை முன்னிறுத்திச் சொல்லவரும் பொருள்களை உற்றுநோக்குவதாக இக்கட்டுரை அமைகிறது.
திருவள்ளுவர் தம் திருக்குறள்களில் நேரடியாக வாழ்க்கை என்ற சொல்லைப் பயன்படுத்தி அதன்வழி வாழ்க்கையை வாழவேண்டியதற்கான நெறிமுறைகளை வகுத்துக் காட்டியுள்ளார். திருவள்ளுவர் சுட்டியவாழ்க்கை பற்றிய சிந்தனைகள் உலக மக்கள் நலம் பெறுவதற்கான சிந்தனைகள் ஆகும். வள்ளுவர் காட்டும் வாழ்க்கை குறித்தான வரையறைகள் வழி நல் வாழ்க்கை, தீயவாழ்க்கை என்ற இருவகைகளைக் காணமுடிகின்றது. நல் வாழ்க்கை என்பது அறம் சார்ந்த வாழ்க்கையாகும். தீய வாழ்க்கை என்பது மறம் சார்ந்த வாழ்க்கை முறையாகும். அறம் சார்ந்த வாழ்க்கை முறைக்கு அறமே குறிக்கோள். மறம் சார்ந்த வாழ்க்கை முறை என்பது அறத்தின் மறுதலையானது ஆகும். அறத்தோடு முரண்பாடு உடையது ஆகும். அறத்து முரணான தீய வாழ்க்கை முறையைத் தவிர்க்க வள்ளுவர் பல்வேறு வழிகளைக் காட்டுகிறார். வாழ்க்கை என்ற சொல்லைத் தன் குறள்களில் நேரடியாகப் பயன்படுத்தி அக்குறள்வழி வாழ்க்கையின் அடிப்படைகளை உணர்த்த முயல்கிறார் திருவள்ளுவர்.
நல்வாழ்க்கை
வள்ளுவர் காட்டும் நல்வாழ்க்கை அறத்தின் வழியில் வாழ்ந்து, பொருள் ஈட்டி, அப்பொருளை மற்றவர்களுக்கு வழங்கி வாழும் வாழ்க்கையே நல்வாழ்க்கை ஆகின்றது. இந்த ஒரு பண்பினைப் பெற்றுவி;ட்டால் போதுமானது மனிதர்கள் நல்ல மனிதர்களாக வாழ்ந்துவிட முடியும். இதில் தவறிய மனிதர்கள் எக்காலத்தும் நல்ல மனிதர்களாக வாழ்ந்திட இயலாது.
பழிஅஞ்சிப் பாத்து ஊனுடைய வாழ்க்கை
வாழ்க்கை என்பதற்கான இலக்கணத்தை
“பழிஅஞ்சிப் பாத்து ஊணுடைத்தாயின் வாழ்க்கை
வழியஞ்சல் எஞ்ஞான்றும் இல்” (44)
என்ற குறளின்வழி காட்டுகிறார் வள்ளுவர். பழிக்கு அஞ்சி வாழ்தலே சிறந்த வாழ்க்கையாகும். பிறர் பழிக்கா வண்ணம் தன்னுடைய வாழ்க்கை அறம் சார்ந்து பொருள் ஈட்டும் வாழ்க்கையே சிறந்த வாழ்க்கையாகும். அவ்வாறு சேர்த்த பொருளை மற்றவர்களுக்கு பகுத்து உண்ணும் அளவிற்கு அளித்து உண்ணும் வாழ்க்கையே சிறந்த வாழ்க்கையாகும். இவ்வாறு வாழ்பவன் வழி உலகம் நிற்கும்.
இவ்வாறு இல்லாமல் பழியோடு வரும் செல்வம் நிலைக்காது. அவ்வாறு செல்வம் சேர்த்தாலும் அதனை பகுத்து உண்ணா நிலையில் பயன்படாமல் சென்றுவிடும். இவ்வாறு வாழ்தல் சிறந்த வாழ்க்கையாகாது. எனவே மனித வாழ்வில் அறம் சார்ந்து வாழ்ந்து மற்றவர்களுக்கு தன்செல்வத்தை, உணவைப் பகிர்ந்தளித்து வாழும் வாழ்க்கை முறையே சிறந்த வாழ்க்கை முறையாகும். இவ்வாழ்க்கை வாழ்பவரை உலகம் முன்னவராகக் கொண்டுப் பின்பற்றி வாழும்.
வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பகுத்து மற்றவர்களுடன் உண்ணும் வாழ்க்கை முறையானது திங்களுக்கு ஒருமுறை வருடத்திற்கு ஓர் முறை என்று அமையாமல் நாள்தோறும் பகுத்து உண்ணும் நல்வாழ்க்கை முறை என்றைக்கும் செல்வம் குறையாத நிலையில் வளர்ந்து வரும் வாழ்க்கை முறையைப் பெற்றிருக்கும்.
வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று (83)
என்ற நிலையில் நாள்தோறும் விருந்தோடு உண்ணும் உணவு முறையானது, செல்வத்தை; மிகுவிக்கும் வாழ்க்கை முறையுமாகும் என்கிறார் வள்ளுவர்.
தீய வாழ்க்கை
நல்லதன் பக்கம் சார்வோர் குறைவானவராகவே இருக்க அல்லதன் பக்கம் சார்வோர் வள்ளுவர் காலத்திலும் அதிக அளவில் இருந்துள்ளனர். இவர்களைத் திருத்தவே வள்ளுவர் திருக்குறளை எழுதி இருக்கவேண்டும். தீய வாழ்க்கை வாழ்ந்துவிடாமல் இருக்க பலவற்றை ஒதுக்க வேண்டி உள்ளது. அவ்வகையில் தீய வாழ்க்கை என்ற நிலையில் ஒழிக்கவேண்டியனவற்றை வள்ளுவர் பலவாகக் காட்டி நிற்கிறார். உயிரையும் உடம்பையும் நீக்கும் தீ வாழ்க்கை.
உயிருடன் உடம்பு நீக்கியார் என்ப செயிர் உடம்பின்
செல்லாத் தீவாழ்க்கை யவர். (330)
உயிர்களைக் கொல்லாமல் வாழும் வாழ்க்கை சிறந்த வாழ்க்கையாகும். ஆனால் சிலர் உயிர்களை அவற்றின் உடம்பில் இருந்து நீக்கி வாழ்ந்துவருகின்றனர். அவர்களின் வாழ்க்கை தீய வாழ்க்கையாகும். உயிர்களைக் காத்து வாழும் வாழ்க்கையே சிறந்த வாழ்க்கையாகும். இவ்வகையில் உயிர்க்கொலை தவிர்ந்த வாழ்க்கை உடையவர்கள் உலகில் சிறந்த வாழ்வைப் பெற்றவர்கள் என்று குறிப்பிடுகிறார் வள்ளுவர்.
வருமுன்னர் காவாதான் வாழ்க்கை
உலக மக்கள் அனைவருக்கும் தனக்கு எதனால் கேடு ஏற்படும் என்று தெரிந்தே வாழ்கின்றனர். இவ்விவற்றால் தீமை வரும் என்று தெரிந்த நிலையில் அவ்வவற்றைத் தன்னிடம் வந்து சேராமல் காத்துக் கொள்ள முன்னேற்பாடு செய்து கொள்ளும் வாழ்க்கை இனிதாக அமையும். அவ்வாறு எதிர் வருவதை அறியாமல் வாழ்பவனின் வாழ்க்கை நெருப்பின் முன்னர் வைத்த எரி பொருளை ஒத்ததாக அமையும். இதனை
வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும் (435)
என்று எடுத்துரைக்கிறார் வள்ளுவர்.
அளவறிந்து வாழாதான் வாழ்க்கை
தம் வாழ்வின் எல்லை அறிந்து இவ்வளவே தன்னின் எல்லை என அறிந்து அதற்கேற்ப அவ்வெல்லைக்குள்ளேயே வாழும் வாழ்க்கை உடையவன் சிறந்த வாழ்க்கை வாழ்பவன் ஆகிறான்.
அளவு அறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகி, தோன்றக் கெடும் (479)
என்ற குறள் இதனை உணர்த்துகிறது. அளவு அறந்து வாழும் வாழ்வே சிறந்த வாழ்வாகும். தன்னிடம் உள்ள பொருள், அதிகாரம் ஆகியவற்றின் அளவறிந்து ஒருவன் வாழ்தல் வேண்டும். இவற்றின் எல்லைகளை அறியாமல் வாழ்பவன் வாழ்க்கை இருப்பது பேல இருக்கும், ஆனால் மறைந்துவிடும் என்று வள்ளுவர் அறிவுறுத்துகிறார்.
அளவளாவு இல்லாதான் வாழ்க்கை
எவற்றையும் அளவறிந்து செய்தல் வேண்டும். அளவில்லாமல் அனைத்தையும் செலவிடும் வாழ்க்கை சரியான வாழ்க்கையாகாது. அவ்வாழ்க்கை கரையில்லாத குளம் போன்றதாகும் என்கிறார் வள்ளுவர். கரையில்லாத குளத்தில் நீர் தங்குவது கிடையாது. ஆகவே வாழும் வாழ்வில் பொருளைச் சேர்க்க வேண்டுமானால் அளவறிந்து செலவு செய்தல் வேண்டும் என்ற கருத்தை முன்வைக்கிறார் வள்ளுவர். அளவில்லாமல் செலவு செய்தால் பொருள் சேராது என்பது அறிந்து கொள்ளப்பட வேண்டிய செய்தியாகும்.
அளவளாவு இல்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடு இன்றி நீர் நிறைந்தற்று. (523)
இகல் இனிது என்பவன் வாழ்க்கை
வாழ்க்கை என்பது இனிதானது. இனிதானவர்களுடன் பழகி இனிதே செய்வதே வாழ்வின் இனிமையாகும். ஆனால் சிலர் மாறுபட்டு வாழ்வதே வாழ்க்கை என்று வாழ்ந்துவருகிறார்கள். முரண்பட்டு வாழ்தலே வாழ்க்கை என்று வாழ்பவர்தம் வாழ்க்கை, தவறும் வாழ்க்கையாகும். அதுமட்டுமில்லாமல் முற்றிலும் அழிந்துபோகும் வாழ்க்கை என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார். முரண்படா வாழ்க்கை வாழ்தலே இனிதானதாகும்.
இகலின் மிகல் இனிது என்பவன் வாழ்க்கை,
தவலும் கெடலும் நணித்து (856)
என்று வள்ளுவர் காட்டும் வழி சமுதாயத்துடன் இணங்கி வாழும் வாழ்க்கையே சிறந்த வாழ்க்கை என்பதைச் சுட்டிக்காட்டுகின்றது.
உடன்பாடு இல்லாதவர் வாழ்க்கை
தன்னோடு உடன்பட்டு வாழ்வோருடன் வாழும் வாழ்க்கை சிறப்பானதாகும். முரண்பட்டு வாழ்வோருடன் வாழும் வாழ்க்கையானது கொடுமையானது ஆகும். பாம்புடன் ஒரே குடிலுள் ஒரு மனிதன் வாழும் வாழ்க்கை போன்றது உடன்பாடு இல்லாதவருடன் வாழும் வாழ்க்கை என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார். இல்வாழ்க்கையிலும் இதே நிலைதான். பொதுவாழ்க்கையிலும் இதே நிலைதான்.
உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போடு உடனுறைந் தற்று (890)
என்ற குறள் காட்டும் நெறியானது உலக வாழ்க்கையின் உன்னதத்தை உணர்த்துவதாகும்.
வகை மாண்ட வாழ்க்கை
சிறப்பான வாழ்க்கை என்பது பெரியோரைப் பேணி அவர் சொல்படி வாழும் வாழ்க்கையாகும் பெரியாரைப் பிழையாமல் வாழும் வாழ்க்கை சிறப்பானதாகும். நிறைய பொருளும், வளமான வாழ்க்கையும் நிலைக்க வேண்டுமானால் தகைமை உடைய தக்காரிடத்தில் அன்புடன் வாழ்தல் வேண்டும். அவ்வாறு இல்லாமல் சான்றோர் தம் கோபத்தினை அதிகரிக்கும் வண்ணம் வாழும் வாழ்க்கையானது சிறப்பான வாழ்க்கையாக அமையாது.
வகைமாண்ட வாழ்க்கையும் வான் பொருளும் என்னாம்
தகைமாண்ட தக்கார் செறின் (897)
என்ற திருக்குறள் பெரியோரைப் பேணி வாழும் வாழ்வின் சிறப்பினை எடுத்துரைக்கிறது.
ஊன் ஓம்பும் வாழ்க்கை
மானத்துடன் வாழும்வாழ்க்கையே சிறந்த வாழ்க்கையாகும். மானத்தை விடுத்து வெறும் உடம்பை வளர்ந்து வாழும் வாழ்க்கை சிறப்பான வாழ்க்கையாகாது. ஒருவனுடைய பெருந்தகைமையால் அவனுக்கு வந்த புகழ் அழியும்நிலையில் வெறும் உடம்பை மட்டுமே பேணி வாழும் வாழ்க்கையால் பயன் இருக்காது. மானம் காத்து வாழும் வாழ்க்கையே சாவாமைக்கு மருந்து ஆகும்
மருந்தோ மற்று ஊன் ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
பீடழிய வந்தவிடத்து (968)
என்ற வள்ளவர் கூற்று மானத்துடன் வாழும் பெருந்தகைமை வாழ்க்கையே சாவாமைக்கு மருந்து என்று குறிக்கிறது.
இவ்வகையில் வாழ்க்கை என்ற சொல்லைப் பயன்படுத்தித் தன் குறட்பாக்களில் வாழ்க்கை பற்றிய சிந்தனைகளை அள்ளித் தந்துள்ளார் திருவள்ளுவர். அறத்தின் வழியாகப் பொருளைச் சேர்த்து மற்றவர்களுடன் பகிர்ந்து உண்ணும் வாழ்க்கையே சிறந்த நல்ல வாழ்க்கையாகும். மேலும் உயிர்களைக் கொலை செய்யாமல் வாழ்தல், வருமுன்னர் காத்து வாழும் வாழ்க்கை, அளவறிந்து வாழும் வாழ்க்கை, முரண்பாடு இல்லாமல் இயைந்து வாழும் வாழ்க்கை, மானத்துடன் வாழும் வாழ்க்கை போன்றன நல்வாழ்க்கையின் இலக்கணங்கள் ஆகின்றன. இவற்றில் மாறுபட்டு நடக்கும் வாழ்க்கை தீவாழ்க்கையாகின்றது.
சான்றாதாரங்கள்
1. தவத்திரு குன்றக்குடி அடிகளார், திருக்குறள் உரை, ப.3
2. சண்முகம் பிள்ளை, அகரமுதலி
முனைவர் மு.பழனியப்பன்
http://siragu.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/#:~:text=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%2C%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%2C%20%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%2C%20%E0%AE%85%E0%AE%B1,%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%2C%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%2C%20%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A9.
Leave a Reply
You must be logged in to post a comment.