கலைஞர் 100: கலைஞரும் தமிழ் திரைப்படங்களும்!

கலைஞர் 100: கலைஞரும் தமிழ் திரைப்படங்களும்!

சுபகுணராஜன், எழுத்தாளர்

Guest Contributor

கருணாநிதி - எம்.ஜி.ஆர்
  • தமிழ் சினிமாவின் அடையாளத்தை உருவாக்கிய மாபெரும் ஆளுமைகளில் கலைஞர் மு.கருணாநிதி முன்னவர் என்பதில் இரு வேறு கருத்துகளுக்கு இடமில்லை. தன்னுடைய 22-வது வயதில் கோவை ஜூபிடர் ஃபிலிம்ஸ் தயாரித்த, ‘ராஜகுமாரி’ திரைப்படத்தில் தனது எழுத்தோவியத்தைத் தீட்டத் தொடங்கியவர், 2011-ம் ஆண்டின் ‘பொன்னர் சங்கர்’ வரை தனது திரை எழுத்துப் பணியைத் தொடர்ந்தார். 1946-லிருந்து 2011 வரை அறுபத்தைந்து ஆண்டுகள் சுமார் முப்பத்தைந்து படங்களுக்குத் திரைக்கதை, வசனம் எழுதி வரலாறு படைத்தவர் கலைஞர். உலகத் திரைப்பட வரலாற்றில் ஓர் அரசியல் தலைவர் இத்தனை காலம் திரைத்துறையில் பங்களிப்புச் செய்ததற்கான இன்னொரு மாதிரியைக் காண்பது அரிது என்பதில் ஐயமில்லை.

தமிழ்த் திரைப்படங்களின் வசனங்களைத் தளம் மாற்றி, அதன் உச்சம் தொடவைத்தவர் அவர். பேச்சுநடையில் ஒரு ‘துள்ளு’ தமிழை அறிமுகம் செய்து, அதில் நவீன திராவிடக் கருத்துகளைச் செறிவாகப் பதியமிட்டவர். காதல் காட்சிகளானாலும், கருத்து மோதல் களமானாலும் அவரின் மொழிநடை ஈடு இணையற்றது. ‘ராஜகுமாரி’யிலேயே அவரது முத்திரை வரிகள் திராவிட சிந்தனை இழையோடப் பதிவாகியிருந்தன. மன்னரைத் துதிபாடும் ஏமாற்றுப் பேர்வழியான படைத்தலைவன் ஆலகாலனிடம், `மன்னர் ஆட்சி பற்றி மக்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள்?’ என்று கேட்க, ‘அரசே மக்கள் ராமராஜ்யம் நடக்கிறது என்று போற்றுகிறார்கள்’ என்கிறான். அந்தப் படம் மட்டுமல்ல, கலைஞரின் இறுதித் திரைப்படம் வரையில், அவரது வசனங்களில் முத்திரை பதித்தவற்றை பட்டியலிட பக்கங்கள் போதாது.

சிவாஜி - கருணாநிதி
சிவாஜி – கருணாநிதி

எல்லிஸ் ஆர் டங்கன், சேலம் மாடர்ன் தியேட்டர்ஸுக்காக இயக்கிய ‘மந்திரி குமாரி’ (1950) `Powerful Dialogue Picture’ என்ற ஒற்றைவரி விளம்பரத்துடன் மட்டுமே வெளிவந்தது. `பராசக்தி’ (1952) வசனங்கள் பலருக்கும் தெரிந்திருக்கும், ஆனால், கதைநாயகி விமலா (பண்டரிபாய்), கதாநாயகன் குணசேகரனுக்குக் (சிவாஜி கணேசன்) கடுமையான வார்த்தைகளால் அறிவுரை சொல்லும் காட்சி, தமிழ் சினிமாவின் பெண் பாத்திரம் ஒன்று இப்படியும் பேசலாமெனக் காட்டியது. விமலா, ‘நீ ஒரு சுயநலக்காரன். ஏன் உன் தங்கை கல்யாணியைப் பற்றி மட்டுமே பேசிப் புலம்புகிறாய். இந்த நாட்டில் அபலையாக எத்தனை கல்யாணிகள் இருக்கிறார்கள் தெரியுமா… அவர்களுக்காகவும் குரல் கொடு, போராடு!’ என அவனை அநீதிக்கெதிரான போராட்டத்துக்குக் கைபிடித்து அழைத்துச் செல்கிறாள். கலைஞரின் பெண் பாத்திரப் பேச்சுகளே தமிழ்த் திரைப்படங்கள் கண்ட புதுமைப் பெண்களின் மாதிரி எனலாம்.

கலைஞரின் மிகப்பெரிய பங்களிப்பு, தமிழ் சினிமா மற்றும் சமூகவெளியை நிரப்பியபடி தொடர்ந்துகொண்டிருக்கும் எம்.ஜி.ஆர்., சிவாஜி எனும் ‘இரட்டை’ நடிகப் பேராளுமைகளைக் கருவாக்கி, கட்டியெழுப்பி நிலைநிறுத்தியதே! எம்.ஜி.ராம்சந்தர்-ஆக முதன்முதலாக கதாநாயகனாக அறிமுகமான படமான ‘ராஜகுமாரி’யில் அவருக்கான முத்தான வசனங்களை எழுதியபோது உருவானது கலைஞர்–எம்.ஜி.ஆர் நட்பு. ‘மந்திரிகுமாரி’யில் அவருக்காக மாடர்ன் தியேட்டர்ஸ் உரிமையாளர் டி.ஆர்.சுந்தரத்திடம் பரிந்துரை செய்து, அந்த வசன காவியத்தில் அவரை நாயகனாக்கியது கலைஞரே. அது மட்டுமல்ல, எம்ஜிஆர் – ஜானகி இணைந்து நடித்து நின்றுபோன ‘மருதநாட்டு இளவரசி’ படத்தை முற்றிலுமாக மாற்றி எழுதி வெற்றிப் படமாக்கியதும் கலைஞரே!

கருணாநிதி - எம்.ஜி.ஆர்
கருணாநிதி – எம்.ஜி.ஆர்

எம்.ஜி.ராம்சந்தரை, எம்.ஜி.ராமச்சந்திரன் எனும் உச்ச நட்சத்திரமாக்கியது கலைஞரின் திரைக்கதை வசனத்தில் உருவான ‘மலைக்கள்ளன்’ திரைப்படமே. எம்.ஜி.ஆர் எனும் மக்கள் நலன் கருதும் எல்லோருக்கும் நல்லவனான பாத்திரம் உருப்பெற்று நிலைபெற்றது இந்தத் திரைப்படத்திலிருந்துதான். அதாவது பணக்காரர்களிடம் கொள்ளையடித்து, ‘ஏழைகளுக்கு வாரி வழங்கும் வள்ளல் பாத்திரம்.’ இதையே தனது சினிமா மற்றும் அரசியல் அடையாளமாக்கிக்கொண்டு வெற்றிகரமாக இயங்கினார் எம்.ஜி.ஆர்.

அதேபோல பின்னாளில் ‘சிவாஜி கணேசன்’ ஆன வி.சி.கணேசனுக்குத் தனது சரளமான அரசியல் வசனங்களால் ஒரே படத்தில், இன்னும் சொல்லப்போனால் ஒரே காட்சியில் உச்ச நட்சத்திரத் தகுதி பெற்றுத்தந்தவர் கலைஞர் அவர்களே. ஒரு தி.மு.க திரைப்படம் என திராவிட ஆய்வறிஞர் எம்.எஸ்.எஸ்.பாண்டியன் போன்றவர்களால் அடையாளப்படுத்தப்பட்ட ‘பராசக்தி’ திரைப்படம், உலக வரலாற்று அரசியல் படங்களின் பட்டியலில் இடம் பெற்றது. அதைத் தொடர்ந்து ‘பணம்’, ‘மனோகரா’, ‘ராஜாராணி’ படங்களால் அவரை உச்சத்தில் நிலைநிறுத்தியதும் கலைஞரின் வசனங்களே. அதிலும் குறிப்பாக, ‘மனோகரா’வின் அனல் தெறிக்கும் வசனங்கள் அவரைத் திரையுலகின் அரியணையில் அமர்த்தின.

தமிழ் சினிமாவுக்குள் சுயமரியாதை, சமூகநீதி, சாதி சமத்துவம், பெண்ணுரிமை எனும் கருத்துகளை வலுவாக நிறுவியதில் கலைஞரின் பங்கு மிகப் பெரிது. எந்தத் திரைப்பட வரலாறும் கலைஞரின் பங்களிப்பை மறந்துவிடவோ, மறுத்துவிடவோ முடியாது.

கலைஞர் என்றும் நிலைக்கும் திரை ஆளுமை!

https://www.vikatan.com/government-and-politics/politics/writer-subagunarajan-talks-about-karunanidhi

About editor 3192 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply