சோழர்களின் வருகையே, இலங்கையின் இன்றைய தமிழ் – சிங்கள முரண்பாட்டுக்கு காரணமா?
கட்டுரை தகவல்
- எழுதியவர்,ரஞ்சன் அருண் பிரசாத்
- பதவி,பிபிசி தமிழுக்காக
- 6 ஏப்ரல் 2023
சோழர்கள் இலங்கையை கைப்பற்றிய பின்னர் இலங்கை தமிழர்களுக்கு ஏற்பட்ட மாற்றங்கள் என்னென்ன? தமிழ் – சிங்கள முரண்பாட்டுக்கு அதுதான் காரணமா?
வட இலங்கையை வென்ற ராஜராஜ சோழன்
இலங்கையின் வடப் பகுதி ஊடாக, கி.பி 993ஆம் ஆண்டு முதலாம் ராஜராஜ சோழன், நாட்டிற்குள் படையெடுத்து வந்து, இலங்கையின் வடப் பகுதியை கைப்பற்றினார்.
ராஜராஜ சோழனின் வெற்றியானது, வட இலங்கையின் வெற்றியாகவே கருதப்படுவதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ராஜராஜ சோழனை தொடர்ந்து, இலங்கைக்கு வருகைத் தந்தார் ராஜேந்திர சோழன்.
1012ம் ஆண்டு ராஜேந்திர சோழன், முழு இலங்கையையும் வெற்றிக் கொண்டு, இலங்கையை சோழர்களின் 9வது நிர்வாக மண்டலமாக தஞ்சையுடன் இணைத்துக்கொண்டுள்ளார்.
சோழர்களின் ஆட்சிக் காலத்தில் இலங்கை மும்முடிச் சோழ மண்டலம் என்றே அழைக்கப்பட்டுள்ளது. அதாவது சோழர் ஆட்சிக்குட்பட்ட இலங்கையின் பகுதி மும்முடிச் சோழ மண்டலம் எனப் பெயரிடப்பட்டு, தலைநகரான பொலன்னறுவையும் ஜனநாதமங்கலம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஆயினும் இலங்கையின் தென்பகுதியான ருகுணு இராச்சியம் 24 வருடங்கள் ஜந்தாம் மகிந்த மன்னன் தலைமையில் சோழர் இடையூறு இன்றி ஆட்சி நடத்தி வந்தது.
அதன்பின்னர், வள நாடு, நாடு, கூற்றம், அகரம், பீடாகை என பல்வேறு சிறு நிர்வாக பிரிவுகளை கொண்டிருந்ததாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வரலாற்று துறை சிரேஷ்ட பேராசிரியர் பரமு புஸ்பரட்ணம் தெரிவிக்கின்றார்.
திருகோணமலை, ஐந்து வள நாடுகளாக பிரிக்கப்பட்டு சோழர்களினால் ஆட்சி செய்யப்பட்டுள்ளது.
வட இலங்கையில் மாதோட்டம், அருண்மொழிதேவ வள நாடு என்ற பெயரிலே ஆட்சி செய்யப்பட்டது.
சோழர்கள் இலங்கைக்கு வருகைத் தந்த சமயத்தில், இலங்கையின் தலைநகரமாக அநுராதபுரம் விளங்கியது.
எனினும், சோழர்கள் இலங்கையை கைப்பற்றியதன் பின்னர், பொலன்னறுவையை தமது தலைநகரமாக அறிவித்தனர்.
சோழர்களினால் தற்போதைய பொலன்னறுவை, ஜனநாதமங்களம் என்ற பெயரில் அழைக்கப்பட்டதாக பேராசிரியர் பரமு புஸ்பரட்ணம் குறிப்பிடுகின்றார்.
இதன்படி, சோழர்களின் ஆட்சிக் காலத்தில் ஜனநாதமங்களம், தலைநகராக அறிவிக்கப்பட்டு, ஆட்சி தொடர்ந்துள்ளது.
இலங்கையில் சோழர் காலம்
சோழர்களின் ஆட்சியில் நிர்வாகம், தமிழ் மொழியில் இருந்துள்ளதுடன், இந்து மதம் அரச மதமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால், சோழர்களின் அரசியல், பண்பாட்டு, ராணுவ நடவடிக்கைகள் பொலன்னறுவையை விடவும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலேயே அதிகளவில் ஆதிக்கம் செலுத்தியுள்ளதாக அவர் கூறுகின்றார்.
பொலன்னறுவைக்கு அடுத்தப்படியாக, உப தலைநகர் என்ற அந்தஸ்த்தை திருகோணமலை பெற்றுக்கொண்டுள்ளமைக்கான சான்றுகள் காணப்படுகின்றன.
திருகோணமலையை சோழர்கள் உப தலைநகரமாக பிரகடனப்படுத்த, பிரதான காரணங்கள் இருந்துள்ளன.
குறிப்பாக தென் இலங்கையிலிருந்து ஏற்படக்கூடிய படையெடுப்புக்களை சோழர்களினால் கட்டுப்படுத்தக்கூடியதாக இருந்துள்ளது என பேராசிரியர் குறிப்பிடுகின்றார்.
சோழர்களின் கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மிகவும் தீவிரமாக இருந்துள்ளது.
- சோழர்களின் ஆட்சி: இலங்கையின் தமிழர் பகுதிகள் எவ்வாறு இருந்தன?2 ஏப்ரல் 2023
- இலங்கையின் தொல்லியல் சிறப்புமிக்க ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் உடைப்பு – அரசாங்கம் என்ன சொல்கிறது?29 மார்ச் 2023
- கீரிமலை சிவன் ஆலயம் உடைக்கப்பட்டு, இலங்கை ஜனாதிபதி மாளிகை கட்டப்பட்டுள்ளதா?12 மார்ச் 2023
”சோழர்களின் கடல்சார் கொள்கை, கடல்சார் வர்த்தக நடவடிக்கையில் மேற்கே இஸ்லாமியரை கட்டுப்படுத்துவதும், கிழக்கே தென் கிழக்காசிய நாடுகளை கட்டுப்படுத்துவதற்கும் இலங்கை மிக முக்கியமானதொரு கேந்திர நிலையமாக காணப்பட்டதனால், அதற்கு திருகோணமலை, ஊர்காவற்துறை ஒரு முக்கிய தளங்களாக இருந்துள்ளது. அவர்களுடைய கல்வெட்டுக்களில் திருகோணமலை, ஊர்காவற்துறை ஆகியன முக்கிய இடங்களாக சொல்லப்படுகின்றன,” என பேராசிரியர் பரமு புஸ்பரட்ணம் குறிப்பிடுகின்றார்.
இவ்வாறே, கி.பி 993ம் ஆண்டு முதல் 1070ம் ஆண்டு வரையான காலம் சோழர்களின் ஆதிக்கத்தில் இலங்கை இருந்துள்ளது.
”முதல் முறையாக இலங்கையை ஒரு அந்நிய அரச வம்சம் கைப்பற்றி, ஆட்சி செய்தது என்று சொன்னால், சோழர்களின் ஆட்சியிலேயே அதனை காண முடிகின்றது என்று சொல்லலாம்,” என அவர் கூறுகின்றார்.
Leave a Reply
You must be logged in to post a comment.