பௌத்த சமயத்தின் சாதி எதிர்ப்பு முதல் நூல் வஜ்ஜிர சூசி
ஆசிரியர் பெ.சு. மணி
பிராமணீய மேலாண்மையைக் கொண்ட சாதி அமைப்புகளையும், அவற்றின் வாதங்களையும் ஆன்மிக – சமய அடிப்படையில் மறுக்கும் வாதங்களின் வரலாற்றில் பௌத்த சமயத்திற்கு முதலிடம் உள்ளது.
பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திரர் எனும் நால்வருணப் பாகுபாட்டின் உயர்வு – தாழ்வு நோக்குகளைப் பௌத்தம் ஏற்க மறுத்தது. கங்கை, யமுனை, அசீரவதி, சரயு, மகி முதலான நதிகள் பெருங்கடலில் கலந்ததும் தம்முடைய பழைய இயற்பெயர்களை இழந்து விடுகின்றன. பெருங்கடல் என்ற பெயர் மட்டுமே எஞ்சுகின்றது.
இவ்வாறே பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்போர் புத்தரின் அருளுரைகளை ஏற்றுக் கடைப்பிடிக் கும்பொழுது, அந்த நால்வகை வருணப் பெயர்கள் மறைகின்றன. புத்தரின் சீடர் கள் என்ற பெயரே நிலை கொள்கிறது இவ்வாறு ஹெர்மன் ஓல்டன் பெர்க் எனும் அறிஞர் தமது புத்தர் எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
சுத்த மெய்ஞ்ஞானச் சுடர், சின்மயமானதோர் தேவன் என்று மகாகவி பாரதியாரால் துதிக்கப் பெற்ற புத்த பகவான், நால்வருணப் பாகு பாட்டில் உயர்ந்தவர் _- தாழ்த்தவர் என்பதில்லை என்று வலியுறுத்தியவர். அவருடைய புனிதப் போதனைகளின் தொகுப்பான தம்மபதம் 423 சூத்திரங்களைக் கொண்டது. 26 வர்க்கங் களைக் கொண்டது. இறுதி வர்க்கத் தின் பெயர் ப்ராஹ் மணவக்கோ என்று பாலி மொழியில் கூறப்படும் பிராமண வர்க்கமாகும்.
41 சூத்திரங்களைக் கொண்ட பிராமண வர்க்கத்தில், பிராமணன் யார்? என்பது விளக்கப்பட்டுள்ளது. 14வது சூத்திரத்தில் குலப் பிறப்பாலோ, பிராமணத் தாய் வயிற்றில் பிறந்ததாலோ, நான் பிராமணன் என்று கூற மாட்டேன். அவர் செல்வ வாழ்வு உள்ளவராய் இருந்தால் அவரை அய்யன் என்று அழைக்கலாம். (பாலி மொழியில் போ என்ற சொல்லிற்கு அய்யன் என்பது பொருள்). பொருட் பற்றுக்களை விட்டவர் யாரோ, ஆசையை விட்ட வர் யாரோ அவரைப் பிராமணன் என்று அழைக்கிறேன் என்று கூறப் பெற்றுள்ளது.
மெய்யறிவு பெற்று நிருவாணத் தகுதி கொண்டவரே பிராமணன். பூரண ஞானம் பெற்ற முனிவனும், அறியத் தக்க எல்லாவற்றையும் அறிந்தவரையும் நான் பிராமணன் என்பேன் என்று புத்த பகவான் பிராமண வர்க்கப் பண்புகளை முடித்து வைக்கின்றார்.
நால் வருணப் பாகுபாட்டின்மீதான விமர்சனத்தை மட்டும் மையப்படுத்தி அசுவ கோஷா எனும் பௌத்த சமயக் கவிஞர், நாடகாசிரியர் வஜ்ர சூசி எனும் பெயரில் படைத்த நூலே பௌத்த சமயத்தின் முதல் சாதி எதிர்ப்பு நூலா கும். இந்நூல் சம்சுகிருத மொழியில் எழுதப்பட்ட சிறு நூலாகும். அசுவ கோஷா கி.பி. முதல் நூற்றாண்டிற்குரியவர். மகாயானம் எனும் பௌத்த சமயப் பிரிவைச் சார்ந்தவர். புத்தர் சரித்திரம் எனும் அருமையான சம்சுகிருதக் குறுங்காப்பியத்தைப் படைத்த பேரறிஞர்.
108 உபநிடதங்களில் ஒன்றான வஜ்ரஸுசி எனும் மற்றொரு நூலும் உள்ளது. சூசி உபநிடதத்திற்கு உரை எழுதி யுள்ள அமரர் அண்ணா என். சுப்பிர மணிய அய்யர் (1895_1992) நூற்பெயர்க் காரணத்தைப் பின்வருமாறு கூறியுள்ளார்.
இது ஸாமவேதத்தைச் சார்ந்தது. வஜ்ர ஸூசிகா என்றால் வயிர ஊசி. கடினமான தாதுப் பொருள்களில் துவாரம் செய்து நுழைவது வஜ்ர ஊசி. வஜ்ரஸூசி உபநிடதத்தின் இரண் டாவது மந்திரம், பின்வருவது:
பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என்று நான்கு வர்ணங்கள். அவற்றுள் பிராமணர் முக்கியமானவர் என்ற வேதத்தின் கருத்தையொட்டி ஸ்மிருதிகளும் கூறும். அதைப் பற்றி ஆராய வேண்டும். பிராமணன் என்றால் யார்? ஜீவனா, தேகமா, ஜாதியா, ஞானமா, கர்மமா, தர்மமா?
மகாகவி பாரதியார் இந்த உபநிட தத்தை விமர்சனம் செய்து பிராமணன் யார்? ஓர் உபநிஷத்தின் கருத்து எனும் கட்டுரை எழுதியுள்ளார். இவ்வுபநிஷதம் பிராமணன் யார்? என்பதைக் குறித்து மிகவும் நேர்த்தியாக விவரித்திருக்கின்றது. நான் பிராமணன், நீ சூத்திரன் என்று சண்டை போடும் குணமுடையவர்களுக் கெல்லாம் இவ்வேத நூல் தக்க மருந்தாகும். நாட்டிலே இவ்விஷயமான விவாதங்களும் போராட்டங்களும் அதிகரிக்கின்றன. இத்தருணத்தில் நமது வேதம் இவ்விவகாரத்தைப் பற்றி என்ன அபிப்பிராயம் கொடுக்கிறது என்பது ஆராயத்தக்க பொருளாகும் என்று பார தியார் கூறி, உபநிஷத்தின் சாராம்சத்தைத் தமிழாக்கம் செய்துள்ளார்.
முற்கூறிய ஆறு நோக்குகளில் பிராமணன் வரைவிலக்கணம் அமையாது. நற்பண்புகள், மெய்ஞான அறிவு முத லானவை பெறுபவனே பிராமணன் ஆவான் என்பது உபநிடத வஜ்ரஸூசி யின் சாரமாகும். இதில் ஒன்பது மந்திரங்கள் உள்ளன.
அசுவ கோஷாவின் வஜ்ர சூசி, உபநிடதம் வஜ்ர ஸூசியைக் காட்டிலும் விரிவானது.
19ஆம் நூற்றாண்டில் சாதி எதிர்ப் புச் சிந்தனையாளர்கள், போராளிகளை அசுவகோஷாவின் வஜ்ர சூசி கவர்ந் துள்ளது.
மராட்டிய மாநிலத்தில் அசுவகோ ஷாவின் நூல் மத்ய கால சில மராட்டிய பக்த கவிகளால் மராட்டிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள் ளது. மராட்டிய மாநிலத்தில் பிரா மணரல்லாத இயக்கத்திற்கு மூல ஒற்றாகத் திகழும் ஜாதி பேத விவேக சாரம் எனும் நூல் அசுவகோஷாவின் நூலின் தாக்கத்தைப் பெற்றுள்ளதாகக் கூறுவர். இந்நூலை எழுதியவர், துகாராம் சத்ய பாட்வல் (1839-_1896) என்பவர், மராட்டிய மாநில பிரா மணரல்லாதார் இயக்கத்தை உருவாக் கிய மகாத்மா பூலே (1827_1890), ஜாதி பேத விவேகசாரம் நூலின் மறுபதிப்பைக் கொண்டு வந்தார். அசுவ கோஷாவின் வஜ்ரசூசியின் மராட்டிய மொழிபெயர்ப்பு வெளியீட்டிற்கும் ஏற்பாடு செய்தார். பௌத்தம், பகுத்தறிவு, தலித் விடுதலை, பிராமணீய மேலாண்மை எதிர்ப்பு ஆகியனவற்றை இணைத்துப் போராடிய முதல் போராளியான பண்டிதர் க. அயோத்திதாசர் (1845-_1914), தமது தமிழன் இதழில் வஜ்ர சூசியைத் தமிழாக்கம் செய்து வெளியிட்டார். அவர் மறைவிற்குப் பிறகு தனி வெளியீடாக வந்தது. இந்நூலின் விளம்பர வரிகளில் ஒன்று, பின்வருவது: இவற்றில் நியாய வாயிலாக ஜாதிகளின் கொடுமையை எடுத்துக்காட்டுவதை இந்நூல் வாசிப்போர் நன்கறிந்து கொள்ளலாம்.
அயோத்தியதாசர் 1898இல் சென்னை இராயப்பேட்டையில் தென் இந்திய சாக்கைய பவுத்த சங்கத்தை நிறுவினார். இந்த அமைப்பின் கோலார் தங்கவயல் கிளை, கோலார் தங்கவயல் சாம்பியன் நீப்ஸ் ஸ்ரீசித் தார்த்த புத்தக சாலை வஜ்ர சூசியின் தமிழாக்கத்தை வெளியிட்டது. 1921_இல் வெளிவந்த மூன்றாம் பதிப்பு எமது பார்வைக்குக் கிடைத்தது. இதன் விலை ஓரணா, வஜ்ர ஊசி அல்லது மாணிக்க ஊசி என்னும் ஜாதி கண்டனம் எனும் பெயரில் வெளி வந்தது. அஸ்வ கோஷா போதிசத்வர் அவர்களால் சமஸ்கிருத பாஷையில் செய்யப்பட்டு தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது எனும் குறிப்பும் நூலின் தலைப்பை யொட்டித் தரப் பட்டுள்ளது.
ஓர் தர்மப் பிரியன் என்பவரின் பெயரில் சென்னை 1899 ஜூன் 12ஆம் தேதியில் எழுதப்பட்ட முகவுரை மூன்றாம் பதிப்பில் வெளியிடப்பட்டுள் ளது. இதன் இறுதிப் பகுதி, பின் வருமாறு:
ஆதி காலத்திய பிராமண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திர ரென்னும் நான்கு ஜாதியார் தற்காலம் நாலா யிரத்துக்கு அதிகமாகப் பிரிந்து ஒற்றுமை, தேசாபிமானம், சகோதர வாஞ்சை இவைகளின்றி, மேல் மகன், கீழ்மகன் என்னும் வைராக்கியத்தை மேற்கொண்டு அறியாமையாகிய அந்தகாரத்தில் மூழ்கிக் கிடப்பதால், நம் பரத கண்டத்திய சகோதரர்கள் யாவரும் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்னும் அகங்காரத்தை ஒழித்து மனிதர் சகலரும் ஒரே ஜாதியார் என்று எண்ணி ஞானம், அருள்,கிருபை, பரோபகாரம், ஜீவகாருண்ணியம் சகோதரவாஞ்சை முதலிய சற்குணங்கள் – இந்த வஜ்ஜிர சூசியை வாசிப்பவர்கள் இதில் சொல்லியிருக்கும் ஞாயங்களை கவனித்து, உலகிலுள்ள மனிதர்கள் யாவரும் ஒரே ஜாதியரென்று தெளிந்து பேதமையில் மூழ்கியிருக்கும் சகோ தரர்களைத் தாழ்ந்தவர்களென்று இகழாமல் அவர்களுக்கு வேண்டிய ஞான அருளைப் புரிந்து கை கொடுத்துக் கரை சேர்ப்பார்களாக
அஸ்வகோஷாவாகிய நான் மஞ்சு கோஷாவாகிய என் குருவை வணங்கி, சுருதியுக்தி அனுபவத்தோடு கூடிய வஜ்ர சூசி -_ மாணிக்க ஊசி என்று பொருள்படும் நூலை, எழுத ஆரம்பிக் கின்றேன் என்று நூலைத் தொடங்கி யுள்ளார். அசுவகோஷா, மஞ்சுகோஷா புத்தபகவானின் பெயராகும்.
ஓ பிராமணர்களே! என விளித்து இருபத்தாறு விளக்கங்களை வினா – _ விடை உத்தியில் எழுதியுள்ளார். அசுவகோஷா.
முதல் இரு வினாக்கள், பின்வருவன 1) ஓ பிராமணர்காள்! உங்களுடைய வேதங்களும், ஸ்மிருதிகளும் இன்னும் தர்மஅர்த்த காம விஷயங்களைப் பற்றிப் பேசும் நூல்களும், நியாயமான வைகளென்றும், அவைகளைக் கண்டித்துப் பேசுதல் பிசகென்றும், வைத்துக் கொள்வோம். ஆனால், அந்நூல்களைக் கொண்டு பிராமணன் மற்ற ஜாதியாரை விட, உயர்ந்தவ னென்று சாதிக்க முடியாதென்றால் என் செய்வீர்?
2) முதலாவது பிராமணத்துவமென்றால் என்ன? அது ஜீவனா? பிறப்பா? தேகமா? ஜென்மமா? அல்லது வேதத்தின் தேர்ச்சியா?
உபநிடத வஜ்ரஸூசியைப் போலவே பிராமணத்துவம் முற்கூறிய ஐந்து நோக்குகளில் அமைவதில்லை என்று அசுவ கோஷாவின் வஜ்ரசூசியும் விளக்கியுள்ளது. பிறப்பு, ஜீவன், தேகம், ஞானம், ஆசாரம், கர்மம் இவை ஒருவனை பிராமணனாகச் செய்ய முடி யாதென்று நான் தீர்மானிக்கின்றேன் என்றார் அசுவகோஷா. இதில் குறிப் பிடத்தக்கதொரு அம்சம் என்னவென்றால், அசுவ கோஷா வேதவாக்கி யங்கள், வியாசபாரதம், மநு சாஸ்திரம் முதலான பண்டைய சாத்திரங்களில் இருந்து மேற்கோள்களை தமது கொள்கைகளுக்கு ஆதரவாகப் பொருத் திக் காட்டியுள்ளார். சில சான்றுகள் வருவன:
பிராமணத்துவம் பிறப்பால் அதாவது பிராமண தாய், தகப்பன் மார்களிடம் பிறப்பதால், உண்டாவ தென்பீராகில் யாவருக்கும் தெரிந்த ஸ்மிருதி வாக்கியங்களுக்கு விரோத மாகும் (ப.4)
ஜீவன் பிராமணத்துவமாகாதென்பது -_ மகா பாரதத்திலிருந்து ஸ்தாபிக்கலாம் (ப.3).
பிராமணத்தனம் நல்லோர்களுடைய ஒழுக்கமே தவிர, ஜாதி குலகோத் திரத்தை அடுத்ததல்ல என்பது பெறப்பட்டது. பக்தியால் அநேக சூத்திரர்கள் பிராமணர்கள் ஆனதாக மனுசாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது
பிராமண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திரர்களுக்கு உண்டாயிருக்கும் வித்தியாசங்கள், அவரவர்கள் செய்யும் தொழிலின் பேதங்களாலும் கிரிய பேதங்களாலும் உண்டானதொழிய வேறல்ல. இதற்குச் சாட்சியம் வேண்டு மானால் பாண்டு புத்திரனாகிய யுதிஷ் டிரனுக்கும் வைசம் பாயன முனிவருக் கும் நடந்த சம்பாஷணையைப் பாரும்
நான்கு வருணமென்னும் சித்தாந்தம் சுத்த தப்பு. எல்லா மனிதரும் ஒரே ஜாதியே என்று அசுவ கோஷாவின் வஜ்ர சூசி மேலும் பல்வேறு சான்று களால் சாற்றியுள்ளது.
வஜ்ர சூசி எழுதப்பட்டதற்கான காரணம் பின்வருமாறு இறுதியில் குறிப்பிடப் பெற்றுள்ளது.
ஓ சிநேகிதர்களே! மௌடீகப் பிராமணர்களும் மற்றுமுள்ளோரும் விஷயங்களைத் தெரிந்து சன்மார்க்கத்தில் நடப்பதற்காக இந்த வஜ்ரசூசி எழுதப்பட்டது. இதைக் கவனிப்போர் கவனிக்கட்டும். கவனிக்காதவர்கள் அதன் பயனை அனுபவிக்கட்டும்.
புத்த பகவானின் தம்மபதம், உபநிடத வஜ்ரஸூசி. அசுவகோஷாவின் வஜ்ர சூசிமுதலானவை தனி மனித சமூக நல்லொழுக்கத்தையும் உயர்ந்த ஆன்மிக _ பதிநிர்வாண நிலையையும் வலியுறுத்தும் நோக்கில் நால்வருணப் பாகுபாட்டின் அதன் ஏற்றத் தாழ்வை நிராகரிக்கின்றன.
நால்வருணப் பாகுபாடும், சாதிப் பிரிவுகளும் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் வரை வஜ்ரசூசிகளின் எதிர்ப் புக் குரல்கள் ஒலித்துக் கொண்டே யிருக்கும்.
வடிவங்கள் மாறலாம், போர் முறைகள் மாறலாம், போர் முனைகள் மாறலாம், ஆனால் இலக்கு மாறக் கூடாது.
(நன்றி: ஓம் சக்தி ஜூலை 2008)
Read more: http://viduthalai.in/page4/73068.html#ixzz2pOKC2vye
January 4, 2014
Leave a Reply
You must be logged in to post a comment.