மகா வீரர் யார்? இந்திய விடுதலைப் போராட்டத்தில் அவரது போதனைகளின் பங்கு என்ன?

மகா வீரர் யார்? இந்திய விடுதலைப் போராட்டத்தில் அவரது போதனைகளின் பங்கு என்ன?

மகா வீரர் யார்?
படக்குறிப்பு,மகாவீரர் ஜெயந்தி இந்த ஆண்டு ஏப்ரல் 4ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.

3 ஏப்ரல் 2023

மகாவீர் ஜெயந்தி என்பது சமண மதத்தவரின் சிறப்பு விழா. இந்த ஜெயந்தி மகாவீரர் சுவாமிகளின் பிறந்தநாளாக கொண்டாடப்படுகிறது.

சமண மதத்தின் 24-ஆவது மற்றும் கடைசி தீர்த்தங்கரர் மகாவீர் சுவாமி. அவர் கிமு 599 ஆண்டில் பிறந்தார் என்று நம்பப்படுகிறது. அவரது தந்தை மன்னர் சித்தார்த்தர் மற்றும் தாய் ராணி திரிஷாலா. அவரது குழந்தை பருவ பெயர் வர்தமான்.

சமண மதம் எதை அடிப்படையாகக் கொண்டது?

இந்து மதத்தைப் போலவே சமண மதத்திற்கும் ஸ்தாபகர் இல்லை. சமணம், 24 தீர்த்தங்கரர்களின் வாழ்க்கை மற்றும் போதனைகளை அடிப்படையாகக் கொண்டது. தீர்த்தங்கரர் என்றால் மனித துன்பங்களும் வன்முறைகளும் நிறைந்த இவ்வுலக வாழ்க்கையைக் கடந்து ஆன்மீக விடுதலையின் உலகத்தை அடைந்த ஆத்மாக்கள் என்று பொருள். 24 வது தீர்த்தங்கரான மகாவீரர், சமணர்களுக்கு சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தவர்.

இந்த ஆன்மீக துறவிகளில் கடைசி தீர்த்தங்கரர் மகாவீரர் ஆவார். ஆனால், மற்றவர்களின் சரித்திரம் நிச்சயமற்றதாக இருக்கும் நிலையில் மகாவீரர் இந்த பூமியில் பிறந்தார் என்று உறுதியாகக் கூறலாம். இந்த அகிம்சை போதகர் க்ஷத்திரிய சாதியில் பிறந்தவர். இவர் கௌதம புத்தரின் சமகாலத்தவர்.

இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், மகாவீரரும் அதே மகத் பகுதியை (இன்றைய பிகார்) சேர்ந்தவர். கௌதம புத்தரும் இதே பகுதியை சேர்ந்தவர்தான்.

  • கௌதம புத்தரும் மகாவீரரும் ஒரே மாதிரியாக சிந்தித்தார்களா?

கௌதம புத்தர் மற்றும் மகாவீரர் இருவரும் பிராமணர்களால் ஊக்குவிக்கப்பட்ட, அந்த சகாப்தத்தின் வேத நம்பிக்கைகளின் மேலாதிக்கத்திற்கு எதிரான இயக்கங்களின் மிகவும் வலுவான பேச்சாளர்களாக இருந்தனர்.

மகாவீரரின் சீடர்கள் மறுபிறவி கோட்பாடு போன்ற சில வேத நம்பிக்கைகளை ஏற்றுக்கொண்டனர், ஆனால் கௌதம புத்தர் போலவே சாதி கட்டுப்பாடுகள், கடவுள்களின் மேலாதிக்கம் மற்றும் விலங்குகளை பலியிடும் நடைமுறை ஆகியவற்றைத் தவிர்த்தார்கள்.

மகாவீரரைப் பின்பற்றுபவர்களுக்கு, முக்தியின் பாதை என்பது துறத்தல் மற்றும் தியாகம். ஜீவாத்மாக்களின் பலி இதில் அடங்காது.

மகா வீரர் யார்?

மகாவீரரின் போதனைகள் என்ன?

மகாவீரர் சில பௌத்த நூல்களிலும் குறிப்பிடப்படுகிறார். ஆனால் இன்று அவரைப் பற்றி நாம் அறிந்த அனைத்தும் இரண்டு சமண நூல்களை அடிப்படையாகக் கொண்டவை. இதில் ஒன்று கல்பசூத்திரம். இந்த புத்தகம் மகாவீரருக்கு பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு எழுதப்பட்டது. இந்த புத்தகத்தில் மகாவீரர் ஒரு குழப்பமான, நிர்வாணமான, தனிமையான துறவியாக காட்டப்படுகிறார்.

மகாவீர் தனது 30வது வயதில் பயணம் செய்ய ஆரம்பித்ததாகவும், 42 வயது வரை பயணம் செய்ததாகவும் கூறப்படுகிறது.

கௌதம புத்தரைப் போல மகாவீரர் எந்த ஒரு நடுவழியையும் போதிக்கவில்லை. அசத்தியத்தையும் உடலுறவையும் கைவிடுங்கள், பேராசை மற்றும் உலக விஷயங்களில் பற்றுதலைக் கைவிடுங்கள், அனைத்து வகையான கொலைகள் மற்றும் வன்முறைகளையும் நிறுத்துங்கள் என்று மகாவீரர் தனது சீடர்களுக்கு போதித்தார்.

மகாவீர் எப்படி சந்நியாசி ஆனார்?

மகாவீரர் அறிவைத் தேடி தனது வீட்டை விட்டு வெளியேறி ஒரு பயங்கரமான வேதனையான செயலுடன் தனது பயணத்தைத் தொடங்கினார்.

கல்பசூத்திரத்தில் அசோக மரத்தடியில் நடந்த அந்த தருணத்தின் வர்ணனை உள்ளது. அங்கு அவர் தனது ஆபரணங்கள், மாலைகள் மற்றும் அழகான பொருட்களை தியாகம் செய்தார். வானத்தில் சந்திரனும் கிரக நட்சத்திரங்களும் இணைந்த சுப நேரத்தில், இரண்டரை நாட்கள் நீரில்லாத விரதத்திற்குப் பிறகு தெய்வீக ஆடைகளை அணிந்தார். அப்போது அவர் தனியாக இருந்தார். தலைமுடியை பிடுங்கி எறிந்து சந்நியாசியானார்.

பெளத்தர்கள் தலையை மழித்துகோள்ளும் அதே நேரம் சமண சீடர்கள் தங்கள் கைகளால் முடியைப் பறித்தெடுப்பார்கள். மகாத்மா காந்தி வரலாற்றில் மிகவும் சக்திவாய்ந்த பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை வீழ்த்துவதற்கு அகிம்சையைப் பயன்படுத்திய 20 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் மகாவீரரின் போதனைகள் மற்றும் சமண பாரம்பரியம் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றது. எல்லா உயிரினங்களுக்கும் சமண மதத்தில் அளிக்கப்பட்ட மரியாதையை காந்திஜி பெரிதும் மதித்தார்.

அவரது அகிம்சை தத்துவத்தின் மீது, லியோ டால்ஸ்டாய் உட்பட பலரின் தாக்கம் இருந்தது. ஆனால் மகாவீரரை அகிம்சையின் பாதுகாவலராக காந்திஜி கருதினார்.

மகாவீரர் சுவாமியின் போதனைகள் எங்கெல்லாம் பரவின?

மகாவீரரின் புனித போதனைகள் இந்தியா முழுவதும் பரவியது. குறிப்பாக மேற்கு இந்தியாவின் குஜராத், ராஜஸ்தான் மற்றும் தென்னிந்தியாவில், பலர் சமண மதத்தை ஏற்றுக்கொண்டனர்.

கர்நாடகாவில் உள்ள ஷ்ரவன் பெலகொலாவில் மிகவும் பிரபலமான சமண தீர்த்தங்கரரின் சிலை உள்ளது. பாகுபலி சோட்டி என்ற மலை உச்சியில் இருந்து செதுக்கப்பட்ட பிரமாண்ட சிலை அங்கு காணப்படுகிறது. சமண பாரம்பரியத்தின் படி, பாகுபலி அல்லது கோமட், முதல் தீர்த்தங்கரரின் மகன்.

17 மீட்டர் உயரமும், 8 மீட்டர் அகலமும் கொண்ட இந்த சிலை, ஒரே பாறையால் உருவாக்கப்பட்ட மனிதர்களால் செதுக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய, சிலை ஆகும்.

சமண சிலைகளின் எளிய வடிவம் தவத்தின் இறுதி நிலையைக் காட்டுகிறது. கடுமையான சமண நிரமிஷ் (இறைச்சி இல்லாத) உணவில், இறைச்சி மற்றும் முட்டைகளை உட்கொள்வது மட்டுமல்லாது கிழங்கு வகைகளும் தடைசெய்யப்பட்டுள்ளது. அவற்றை வேரோடு பிடுங்கும்போது அதைச்சுற்றியுள்ள தாவரங்கள் மற்றும் சிறிய விலங்குகள் பாதிக்கப்படலாம் என்பதற்காகவே இது நடைமுறை படுத்தப்பட்டுள்ளது.

மகளிர் பற்றிய கருத்து

பெண்கள் அறிவுப் பாதையிலும் விடுதலைப் பாதையிலும் நடக்க முடியுமா என்பதில் சமண சமூகத்தில் கருத்து வேறுபாடு உள்ளது. பெண்களை உலகின் மிகப்பெரிய சலனமாக மகாவீரர் கருதினார் என்று ஒரு சமண நூல் குறிப்பிடுகிறது. கடுமையான சமண மரபுகளின்படி பெண்கள் சந்நியாசிகளாக இருக்க முடியாது. ஏனெனில் அவர்களின் உடல்கள் கருமுட்டைகளை உருவாக்குகின்றன. அவை மாதவிடாய் ஓட்டத்தின் போது கொல்லப்படுகின்றன.

மகாவீரரின் காலத்திலேயே இந்த கடுமையான சமண பழக்கவழக்கங்களைப் பின்பற்றுவது கடினமாக இருந்தது. நவீன இந்தியாவில் இது இன்னும் கடினமாக உள்ளது. கடினமான பாதையின் காரணமாகவே இந்த மதம், பெளத்த மதத்தைப் போல இந்தியாவுக்கு வெளியே அவ்வளவாக பரவ முடியவில்லை.

சமண சமூகம் இன்று அதன் புத்திசாலித்தனம் மற்றும் வணிக நெறிமுறைகளுக்கு பெயர் பெற்றது. இன்று அது நாட்டின் பணக்கார சிறுபான்மை சமூகங்களில் ஒன்றாக உள்ளது.

(லண்டன் கிங்ஸ் கல்லூரியின் பேராசிரியர் சுனில் கில்னானியின் ஃபைலா உஜியாராவில் வெளியிடப்பட்ட ‘மஹாவீர் ஸ்வாமி: அகிம்சையின் பாதுகாவலர்’ என்ற அத்தியாயத்தை அடிப்படையாகக் கொண்டது.)

https://www.bbc.com/tamil/articles/cqqz43zzz9zo

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply