சங்க இலக்கியத்தில் பகுத்தறிவுச் சிந்தனைகள் !

சங்க இலக்கியத்தில் பகுத்தறிவுச் சிந்தனைகள் !

சங்க இலக்கியம் தமிழர்களின் பண்பாட்டை அறிந்து கொள்ள உதவும் காலக்கண்ணாடி.

தொல்காப்பிய பொருளதிகாரத்திலிருந்து எடுத்துக்கொண்டால் கிமு 8 ஆம் நூற்றாண்டிலிருந்து கடைச்சங்கத்தின் இறுதிக்காலமான கி.பி 5 ஆம் நூற்றாண்டு வரை உள்ள காலத்தில் வாழ்ந்த தமிழர்களின் பண்பாடு மற்றும் வாழ்வியலை அறிந்து கொள்ள முடியும்.

சங்க இலக்கியம் முதற்சங்கம், இடைச்சங்சங்கம் , கடைச்சங்கம் என்று பிரிக்கப்பட்டிருப்பதாலும், அவற்றுக்கான கால இடைவெளி மிகப்பெரிது என்பதாலும் ஒரு சங்க இலக்கியப்பாடலைக் காணும் போது காலம் அறிதல் மிக முக்கியம்.

தற்போது கிடைக்கும் கடைச்சங்க கால இலக்கியங்கள் ஆரியரின் வருகைக்கு அன்மையில் படைக்கப் பெற்றிருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இதன் காரணமாக ஆரியர் நாகரீகமும், தமிழர் நாகரீகமும் கலந்துப் படைக்கப் பெற்ற இலக்கியங்களாகக் கடைச்சங்க இலக்கியங்கள் விளங்குகின்றன.

‘பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம்’ என்ற தொல்காப்பிய நூற்பா ஆரிய, திராவிட கலப்பிற்கான சூழல் தொல்காப்பிய காலத்திலேயே நிலவியிருந்தது என்பதைச் சொல்லும்.

‘தமிழ்மொழி ஆரியர் வருகைக்கு முன்னரே நல்ல வளம் பெற்றிருந்தது… வடபுல ஆரியர், சங்ககால இறுதியினின்று ஐந்தாறு நூற்றாண்டுகளுக்கு முன்னர்தான் தமிழகம் வந்தனர்போல் தெரிகிறது’ என்ற கருத்தும் ஆரிய திராவிடக் கலப்பின் காலச்சூழலை உணர்த்துவதாக உள்ளது. சங்க இலக்கியங்களில் ஆரியர் தாக்கம் காரணமாக வேத சார்பும், தமிழர் தாக்கம் காரணமாக தமிழ் மரபு சார்ந்த செய்திகளும் இடம்பெற்றிருந்தன. வேதம், புராணம் சார்பான அறிவுக்கு ஒவ்வாத செய்திகளை விலக்கிய சங்க இலக்கியப் பாடல்களில் பகுத்தறிவுச் சிந்தனைகளைக் காணமுடிகின்றது.

குறிப்பாக சங்க இலக்கியத் தொகுப்புகளுக்கு கடவுள் வாழ்த்து பாடிய முறைமை ஆரியச்சார்பு உடைய செய்திகளை அதிகமாகக் கொண்டுள்ளது. நாம் இங்கு புரிந்து கொள்ள வேண்டியது சங்க இலக்கியமான பத்துப் பாடும், எட்டுத் தொகையும் தொகை நூல்கள். அவற்றுக்குப் பாடப்பட்ட கடவுள் வாழ்த்துப் பாடல்கள் பிற்காலத்தில் இவை தொகுக்கப்படும் போது சேர்க்கப்பட்டவை!

நாத்திகம் சங்க இலக்கியத்தில் உண்டா எனப் பார்க்கும் முன்னர் நாத்திகம் என்றால் என்னவென்று பார்க்க வேண்டும். பொதுவாக நாத்திகம் என்பது கடவுள் மறுப்பு என்று சொல்லப்பட்டாலும் பல்வேறு இடங்களில் அது பல்வேறு பொருளைச் சுட்டி வந்துள்ளது.

“நாத்திக வேத நிந்திக” எவன் வேதத்தை நிந்தனை செய்கிறானோ அவனே நாத்திகன் என்றுதான் மனு கூறுகிறது. கடவுளை மறுத்தாலும் பரவாயில்லை. வேதத்தை மறுக்கக் கூடாது.

அதே போல வைதிகம் , அவைதிகம் என்று இருக்கிறது. ‘அ’ சம்ஸ்கிருதத்தில் எதிர்மறை முன்னொட்டு. ஒரு சொல்லின் முன் ‘அ’ சேர்த்தால் அதன் எதிர்மறைப் பொருள் வந்துவிடும். எ.கா. சுத்தம் – அ + சுத்தம் ; தர்மம் – அ + தர்மம் ; ஏகன் – அ +நேகன் ; அது போலவே வைதிகம் என்றால் வேதங்கள் மற்றும் அவற்றின் பக்கவிளைவுகளான உப நிடதங்கள். அவைதிகம் என்பதற்கு வைதிகம் அல்லாதது என்று பொருள்.

தத்துவ ஆய்வறிஞர் தேவிபிரசாத் சட்டோ பாத்யாயா “இந்திய நாத்திகம்” என்ற நூலில் அவைதிக அல்லது நாத்திக தத்துவங்கள் அமைப்பியல் நியதிகளை வரையறுத்தன.

அண்டத்தின் இயற்கை விதியின் ஆட்சியை மதித்தன. செயற்கையாக முன் வைக்கப்பட்ட கடவுள், இயற்கை கடந்த ஆற்றல் இன்ன பிறவற்றை அவை ஏற்க மறுத்தன என்கிறார்.

நாத்திகம் குறித்த தந்தைபெரியாரின் கருத்தும் இதுவே. “இன்றைய தினம் நாத்திகன் என்ற பதத்திற்குக் கடவுளை இல்லையென்பவன் என்றாக்கிவிட்டார்கள்” தர்க்கரீதியில் புத்தியை உபயோகப்படுத்தி விஷயத்தை ஆராய்ச்சி செய்கிறவன் எவனாக இருந்தாலும் அவன் நாத்திகன்தான் என்கிறார் பெரியார்.

சங்க இலக்கியங்களும் அப்பிடியே இயற்கையோடு ஒன்றியவை. சங்க இலக்கியத்தின் அடிப்படையான முதல், கரு, உரி பொருட்கள் என்பவைகளில் எதுவுமே செயற்கையானவை இல்லை. இயற்கையோடு ஒன்றியவை மற்றும் வாழ்வியலோடு ஒன்றியவையே.

உலகத்தின் தோற்றம்

எந்த மதத்தை எடுத்துக் கொண்டாலும் உலகம் கடவுளால் படைக்கப்பட்டதே. வேத புராணங்களோ, மத நூல்களோ அவை எழுதப்பட்ட காலத்தில் உலகின் தோற்றம் பற்றி என்ன தெளிவு இருந்ததோ அதையே கற்பனை கலந்து எழுதி வைத்தார்கள்.

இந்துக்களின் புராண வரலாற்றில் கூறுவதாவது: பரப்பிரம்மமான கடவுள் தமது ஏதோ ஒரு எண்ணத்தால் முதலில் ஒரு ஜலக் கோளத்தை சிருஷ்டித்தார். அந்த ஜலக்கோள மத்தியில் அவர் ஒரு விதையை விதைத்தார். அவ்விதை காலப்போக்கில் ஒரு பொன்முட்டையாக மாறிற்று. அம்முட்டையில் சிருஷ்டி கர்த்தாவான பிரம்மன் உருவெடுத்து இவ்வுலகை சிருஷ்டித்தார்.

பைபிள் கதையும் இதே மாதிரித்தான். முதல் நாள் இரவு, பகலைப் படைத்த இறைவன் இரண்டாம் நாள் உலகத்தைப் படைத்தான். பின்னர் ஆறாம் நாள் மனிதனைப் படைத்துவிட்டு ஏழாம் நாள் ஓய்வெடுத்தார்.

குரானின் கதையில் வரும் இறைவன் இன்னும் கொஞ்சம் நேரம் எடுத்துக் கொண்டு பொறுமையாக உலகைப் படைக்கிறான். பூமியைப் படைக்க 2 நாட்கள் (41:9), ஏழு வானங்களைப் படைக்க 2 நாட்கள் (41:12), இன்னும் 2 நாட்களில் பூமியில் மலை, காடுகள், ஆறு, கடல்கள் போன்றவற்றைச் சேர்த்து மொத்தம் 6 நாட்களில் உலகைப் படைத்ததாக குரான் கூறுகிறது.

இது போலவே ஒவ்வொரு மதமும் உலகைத் தங்கள் கடவுள் படைத்ததாகவே சொல்கிறது. அறிவியல் முன் இது எதுவுமே செல்லாது ; நிற்காது ; உலகின் மொத்த படி மலர்ச்சியும் ஆறே நாட்களில் நடக்க முடியாது.

தொல்காப்பியம் என்ன சொல்கிறது ?

“நிலம் தீ நீர் வளி விசும்பொடு ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம்”

மிக எளிமையான பாடல். தொல்காப்பியம் மரபியல் பகுதியில் வருகிறது. உலகம் என்பது நிலம், நெருப்பு, நீர், காற்று, வானம் ஆகியவை ஒன்றோடொன்று பிரிக்க முடியாமல் சேர்ந்து உருவாகுவதே உலகம் ! இங்கு இறைவனோ , ஆதி மூலவனோ ஒரே இரவில் மந்திரம் சொல்லி ஒரே நாளில் உலகம் படைக்கப்பட்டதாக சொல்லப் படவில்லை.

இதை நாம் பெரு வெடிப்புக் கொள்கையின் அருகில் வைத்துப் பார்க்க முடியும். பெரு வெடிப்புக் கொள்கையின்படி அண்டவெளியில் உள்ள பொருள்கள் அனைத்தும் 12 முதல்14 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் மிக அதிகமான அடர்த்தியுடன் கூடிய, சிறிய அளவினதான, தீப்பிழம்பாக இருந்திருக்கிறது. இத் தீப்பிழம்பானது விரிவடையத் தொடங்கி ஒரு பெரு வெடிப்பாக வெடித்த கணமே காலமும் வெளியும் தோன்றியது. அதற்குப் பின் ஏறக்குறைய 30 கோடி ஆண்டுகளுக்குப் பின்னே சூரிய மண்டலமும் கோள்களும் தோன்றின.

அப்பிடியானால் தொல்காப்பியம் பெரு வெடிப்புக் கொள்கையைப் பேசுகிறதா? நிச்சயம் இல்லை. தொல்காப்பிய காலத்தில் இருந்த தமிழர்கள் அதீத மதப் பற்றுடன்/கடவுள் நம்பிக்கையுடன் இருந்திருந்தால் தொல்காப்பியர் அதைப் படம் பிடித்துக் காட்டியிருப்பார். அன்றைய நம்பிக்கையின் படி உலகம் கடவுளால் படைக்கப்பட்டது என்று எழுதி வைத்திருக்க கூடும். ஆனால் தொல்காப்பியர் உலகம் இயற்கையாய் , இயற்கைப் பொருட்களால் உருவானது என்று சொல்கிறார்.

இதே கருத்தைக் கொண்ட பல சங்க இலக்கிய பாடல்களையும் நாம் காண முடியும். உதாரணம் : முரஞ்சியூர் முடிநாகனார் பாடிய புறநானூறு பாடல் 2.

மேலுலகம்

செவ்வாய் கோளுக்கு ராக்கெட் விடும் இந்தக் காலத்தில் கூட, ஆகாயத்தில் பரலோகம் இருக்கிறது. சொர்க்கம் இருக்கிறது. முப்பத்து முக்கோடி தேவர்கள் இருக்கிறார்கள். தேவேந்திரனும் முப்பெருங்கடவுளரும் தேவியரும் இருக்கிறார்கள் என்றெல்லாம் நம்பக் கூடியவர்கள் இருக்கிறார்கள். இதற்கு யார் காரணம் ? வேத, இதிகாச புராணங்களும், மத நூல்களுமே. ஆனால் விண்வெளியில் அதெலாம் இல்லை , பூமியிலிருந்து கொஞ்சம் மேலே போனாலே காற்றும் இல்லை, புவி ஈர்ப்பும் விசையும் இல்லை வெறும் சூனிய வெளிதான் என அடித்துக் கூறுகிறார் “ உறையூர் முதுகண்ணன் சாத்தனார்”. புறநானூறு பாடல் 30.

“செஞ்ஞாயிற்றுச் செலவும்
அஞ்ஞாயிற்றுப் பரிப்பும்
பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்
வளிதிரிதரு திசையும்…………..”

ஞாயிறு எனும் சூரியனின்பயணம், அதனைச் சூழ்ந்தமண்டலம், (பிறகோள்கள்) காற்றின்திசை, காற்றே இல்லாத ஆகாயம் என்று வரும் பாடலைப் பார்த்தால் சங்க காலத் தமிழர்களின் பகுத்தறிவு தெரிய வரும். ஆகாயத்தில் காற்றே இல்லை அப்புறம் எங்க கடவுளர்களும், தேவர்களும்??

வைதீக கடவுள்கள்

வைதீக மதம் இயற்கை நிகழ்வுகளுக்குக் கூட ஒரு கடவுளைக் கற்பித்து வைத்திருந்தது. சூரியன், சந்திரன், அக்கினி, மழை, காற்று என எல்லா இயற்கை நிகழ்விற்கும் ஒரு கடவுள் இருக்கிறார். சங்க இலக்கியத்தில் அதெல்லாம் இல்லை ;

தொல்காப்பியம் காட்டும் திணைக் கடவுள்கள் நான்கே நான்குதான்.

மாயோன் (முல்லை ),
சேயோன் (குறிஞ்சி),
இந்திரன் (மருதம்),
வருணன் (நெய்தல்).

வைதீக சார்புடைய பார்ப்பன உரையாசியர்கள் இந்தப் பாடலுக்கு உரை எழுதும் போது இந்த நால்வரையும் வைதீக கடவுள்கள் என்று எழுதி வைத்தனர். ஆனால் தொல்காப்பியர் காலத்தில் அப்பிடி இல்லை ; மாயோனும், சேயோனும் முல்லை , குறிஞ்சி நிலத்தில் இருந்த ஆதி குடி தலைவர்கள். மக்களுக்காக உயிரைத் தியாகம் செய்தவர்கள், அங்கேயே நடு கல்லாகிப் போனவர்கள். முல்லை & குறிஞ்சியில் இருந்தது மூத்தோர் வழிபாடு. நாகரீகம் வளர்ந்து மருதம் வந்த போது அரசன் வந்து விட்டான். அரசன் மாறிக் கொண்டே இருப்பான். எனவே அரசனுக்குப் பொதுப் பெயரான இந்திரன் மருத நிலத் தலைவன். வேதத்தில் வரும் இந்திரன் இல்லை இவன். அதே போலத்தான் நெய்தல் நிலா வருணன். நெய்தல் = கடலும் கடல் சார்ந்த இடமும். அங்கே காற்றுத்தான் தெய்வம். நெய்தல் நிலத்திற்கு காற்றே (வருள்+ணன் )தலைவன். வேறு எந்தத் தெய்வங்களும் தொல்காப்பியத்தில் இல்லை.

பின்னர் நடு கல் வழிபாடு, சிறு தெய்வ வழிபாடு, பெருந் தெய்வ வழிபாடு என மாறும் போதுதான் சேயோன் முருகன் ஆகிறான் ; மாயோன் திருமால் ஆகிறான் ; அவர்களையும் பார்ப்பனீயம் ஸ்கந்தன்/சுப்பிரமணியன் , விஷ்ணு என முழுங்கியது. இது வேறு கதை ; நாம் சொல்ல வருவது தொல்காப்பி யத்தில் இன்று இருக்கும் சிறு/பெரு தெய்வங்கள் ஏதுமில்லை என்பதே !

மழைக்கு ஓர்கடவுளைக் படைத்தது வைதீகம். மழை என்பது இயற்கையின் கொடை அதனைப் பெறும்போது பாதுகாத்து வைத்துக்கொள்ள மனிதர்களான நாம் முயற்சிசெய்ய வேண்டும். திட்டமிட வேண்டும். ஆனால் வருண பகவானுக்கு மழைவேண்டி யாகம் வளர்க்கும் அவலத்தை இன்றும் நாம் காண்கிறோம்.

ஆனால் சங்ககாலப் புலவரான குடபுலவியனார்.

“நீர் இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டிகொடுத்தோர் உயிர் கொடுத்தோரே
உண்டி முதற்றே உணவின் பிண்டம்”

(புறநானூறு – 18)

என்ற உணவின் இன்றியமையாமையை எடுத்துரைக்கிறார். மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான், அதாவது இயற்கையில் கிடைத்ததை உண்டு வாய்ப்பு கிடைத்தவரை வாழ்ந்த காலத்திலிருந்து மாறி, உணவு உற்பத்தி சேமிப்பு என்ற கால கட்டத்திற்கு வந்துசேர்ந்த காலம் சங்ககாலம் என்பதை அறியமுடிகிறது. உணவு உற்பத்திற்கு உயர் தேவையாக இருப்பது தண்ணீர். அந்தத் தண்ணீரைப் பாதுகாப்பது மன்னனின் கடமை என்று அறிவுறுத்துகிறார் புலவர். அந்த நீர் வேண்டி யாகம் செய்யச் சொல்லவில்லை.

மறுமை

இவ்வுலகில் வாழும் வரை கடவுளை நம்பித் தொழுது வந்தால் மறுமையில் நன்மை கிடைக்கும் ; சொர்க்கம் என்ற இடத்தில் கையில் மதுக் கின்னத்தோடு அழகிய பெண்கள் இருப்பப்பார்கள் என்றெல்லாம் மதங்கள் சொல்கின்றன. இது இன்று வரை நம்பப்படுகிறது. இப்படிப்பட்ட எண்ணத்தை சங்ககாலப் புலவர் ஒரு மறுக்பிறர் என்பது வியப்பான செய்தியே. உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் என்ற புலவர் பாடிய புறநானூறு 134-ஆவது பாடல்:

இம்மை செய்தது மறுமைக்கு ஆம்எனும்
அறவிலை வணிகன் ஆஅய் அல்லன்
பிறரும் சான்றோர் சென்ற நெறிஎன
ஆங்குப் பட்டன்று அவன்கை வண்மையே

– (புறநானூறு பா. 134)

ஆய் அண்டிரனின் கைவண்மை மறுமை நோக்கிச் செய்யப்பட்ட அறமன்று என்றும் அப்படி மறுமை நோக்கிச் செய்யப்படும் ஈகை அறம் அறத்தை விலைகூறி விற்கும் வணிகத்தை ஒத்தது என்றும் முடமோசியார் பாடுகிறார். உனக்கு மறுமையில் சொர்க்கம் கிடைக்கும் என்று நம்பி நீ செய்யும் செயல்கள் எதுவும் அறமாகாது என்பது எத்தனை பெரிய பகுத்தறிவுச் சிந்தனை !!

சரி அகப்பாடலுக்கு வருவோம். குறிஞ்சி நிலத் தேய்வம் முருகன் என்று ஒரு பக்கம் கூறினாலும் மறு பக்கம் அந்த முருகனின் பெயரால் நடக்கும் மூடச் சடங்குகளைப் பெண்களே எதிர்த்ததாகப் புலவர்கள் பதிவு செய்திருப்பது நாத்திக மரபுகளை அவர்கள் உள்வாங்கியிருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது,

சங்க காலத்தில் காதலில் இருக்கும் பெண்கள் (களவு) தலைவனைச் சந்திக்க இயலா சூழல்களில், அவனையே நினைத்து, காதலை வீட்டிலும் சொல்ல முடியாமல் உடல்நலத்தில் நலிவு ஏற்படுவதாக நிறையப் பாடல்கள் உண்டு. அப்படி இருக்கும் பெண்களுக்கு வெறியாட்டு நடத்தப் பட்டதாக இலக்கியங்கள் கூறுகின்றன. இதற்கு வேலன் என்ற பூசாரி வருவான் இவன் மீது முருகக் கடவுள் இறங்கிவந்து பெண்ணுக்கு பேய் ஓட்டுவதாகக் கருதப்பட்டது. இதற்கு நெல்லினைப் பரப்பிவைத்து அதிலே ஒருகுட்டி ஆட்டினை நிறுத்தி வைத்திருப்பார்கள். பின்னர் வேலன் என்ற அந்த பூசாரி மீது முருகன் ஏற அவன் குட்டி ஆட்டினை அறுத்து அதிலிருந்த வெளிப்படும் இரத்தத்தை எடுத்துப் பெண்ணின் நெற்றியில் தடவுவான் இப்படிச் செய்வதால் பெண்ணிட மிருந்து பேய் அகன்று ஓடி விடும் என்பது (மூட) நம்பிக்கை.

சங்க இலக்கியத்தில் தோழி என்ற பாத்திரம் உண்டு. தலைவியின் கூடவே இருக்கும் உற்ற நண்பி, தலைவியின் காதல் பற்றி அறிந்தவள். அந்த தோழி இந்த வேலன் வெறி யாட்டைக் கிண்டல் செய்வது போல வரும் பல பாடல்களை நாம் காணலாம். வேம்பற்றூர்க் கண்ணன் கூத்தனார் எழுதிய அந்தப் பாடல் :

முருகு அயர்ந்து வந்த முதுவாய் வேல!
சினவல் ஓம்புமதி! வினவுவது உடையேன்!
பல் வேறு உருவில் சில் அவிழ் மடையொடு
சிறு மறி கொன்று, இவள் நறு நுதல் நீவி
வணங்கினை கொடுத்தியாயின், அணங்கிய
விண் தோய் மா மலைச் சிலம்பன்
ஒண் தார் அகலமும் உண்ணுமோ பலியே? –
(குறுந்தொகை – 362)

நான் கேட்கின்றேன் என்று கோபித்துக் கொள்ளாதே. முருகனுக்குப் பலி கொடுப்பதாகச் சொல்லி ஆட்டுக் குட்டியைக் கொன்று அந்த இரத்தத்தைத் தலைவியின் நெற்றியில் தடவுகிறீர்களே இந்த பலியிடுதலை குறிஞ்சி நிலத் தலைவனான சிலம்பனின் மார்பு உண்ணுமோ? என்று தோழி கேட்கிறாள்.

தலைவனைக் கூடி வந்து தலைவிக்கு மணம் முடிப்பதை விட்டு விட்டு இப்பிடி முருகனுக்கு பலி கொடுத்து என்ன பயன்? தலைவியின் துன்பத்துக்குக் காரணமான தலைவனுக்கு இந்த பலி போய்ச் சேருமா? என்று கேட்கிறாள் தோழி !

கபிலரும் ஐங்குறுநூறு (249) பாடலில் இதே மாதிரி ஒரு காட்சியைப் படம் பிடித்துக் காட்டுகிறார்.

பெய்ம்மணல் வரைப்பின் கழங்கு படுத்து அன்னைக்கு
முருகென மொழியும் வேலன், மற்று அவன்
வாழிய, இலங்கும் அருவிச்
சூர்மலை நாடனை அறியாதோனே.”

புதிதாகப் பெய்த மணலில் கழங்குக் காய்களை வைத்துச் சடங்குகள் செய்து, தாயிடம் “உன் மகளின் நோய் முருகனால் ஏற்பட்டது” என்று கூறுகின்றான் வேலன். அவன் வாழ்க. சிறப்பான அருவிகளை உடைய அச்சம் தரும் மலைகளையு டைய நாடவனான உன் காதலனை வேலன் அறியவில்லை.

சங்க கால முருகன் இன்றைய சம்ஸ்கிருத முருகன் போல மயில் ஏறி உலகம் முழுக்கச் சுற்றி வந்தவன் இல்லை. பக்கத்து ஊரில் இருக்கும் தலைவனையே அவனுக்குத் தெரியவில்லை என்பதுதான் தோழி சொல்லும் சேதி.

சாதி வேறுபாடற்ற சமுதாயம்:

மக்களில் உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்ற வேறுபாடு கிடையாது. அனைவரும் ஒரே சமநிலையினர். சாதியால், செல்வத்தால், அதிகாரத்தால் மேம்பட்டவர்கள் எவரும் இல்லை என்ற அடிப்படைக் கருத்து பெரியார் உணர்த்திய பகுத்தறிவு கருத்தாகும்.

இக்கருத்தின் முன்னோடி இலக்கியமாகச் சங்க இலக்கியம் திகழ்கின்றது.

“அந்தணர், அரசர், அளவர், இடையர், இயவர், உப்பு வணிகர், உழவர், எயிற்றியர், கடம்பர், கடை சியர், கம்மியர், களமர், கிணைஞர், கிணைமகள், குறவர், குறத்தியர், குறும்பர், கூத்தர், கொல்லர், கோசர், தச்சர், துடியர், தேர்ப்பாகன், நுளையர், பரதவர், பறையர், பாடினி, பாணர், பாணிச்சி, புலையர், பூண்செய் கொல்லர், பூவிலைப் பெண்டு, பொதுவிலை மகளிர், பொருநர், கடையர், மழவர், மறத்தியர், மறவர், மோரியர், யவணர், யாழ்ப் புலவர், யானைப்பாகர், யானை வேட்டுவர், வட வடுகர், வணிகர், வலைஞர், விலைப்பெண்டிர், வேடர்” போன்ற பல தொழில் பிரிவினர் சங்க காலத்தில் இருந்ததாக உ.வே. சாமிநாதர் குறிப்பிடுகின்றார். இருப்பினும் இத்தொழில்பிரிவினர்களையும் சமத்தன்மை உடையவராகக் கருதும் எண்ணமும் சங்கப்பாடல்களில் இருந்துள்ளன.

தெண்கடல் வளாகம் பொதுமை யின்றி
வெண்குடை நிழற்றிய வொருமை யோர்க்கும்
நடுநாள் யாமத்தும் பகலுந் துஞ்சான்
கடுமாப் பார்க்குங் கல்லா வொருவற்கும்
உண்பது நாழி யுடுப்பவை யிரண்டே
பிறவு மெல்லா மோரொக் கும்மே
செல்வத்துப் பயனே யீதல்
துய்ப்பே மெனினே தப்புந பலவே
.

– (புறநானூறு பாடல் எண்189)

அரசன் என்றாலும் வேடன் என்றாலும் இருவருக்கும் உண்பது -நாழி அளவு உணவு, உடுப்பவை – இரண்டு பகுதி ஆடைகள். மற்றவை எல்லாம் ஒன்றே – என்று சமத்துவம் பாடுகின்றது இந்த பாடல்.

வேத மறுப்பு & பார்ப்பன எதிர்ப்பு

இடைச் சங்க காலத்தில் தமிழகத்தில் பார்ப்பனர்கள் வந்து விட்டதாகவே தோன்றுகிறது. சங்க இலக்கியப் பாடல்களும் அதையே காட்டுகின்றன. வேத மரபு அறிவுக்கு இடம் கொடாது. புராணக் கற்பனை கதைகள் மூலம் அறிவை மழுங்கச் செய்யவே பார்க்கும். வேத மரபுகளை மறுக்கும் பல பாடல்களை சங்க இலக்கியத்தில் காண முடியும்.

ஆரியர்கள் தமிழகத்தில் புகுந்து வேதத்துக்கு மாறுபட்ட கருத்துடையவர் களின் வளர்ச்சியைத் தடுக்க வேண்டும் என பார்ப்பனர் செயல்பட்டதை புறநாநூறு 166 காட்டுகிறது.

பூஞ்சாற்றூர் பார்ப்பான் கவுணியன் விண்ணந்தாயன் என்பவனை புலவர் ஆவூர் மூலங்கிழார் பாடிய பாடலில், அவன் பழைய வேதங்களுக்கு எதிரான கருத்துக்களை உடைய புத்தர் போன்றோரின் வளர்ச்சியைத் தடுக்க யாகம் செய்தவர்களின் மரபில் வந்தவன் என்று கூறுகிறார்.

“நன்று ஆய்ந்த நீள் நிமிர் சடை
முது முதல்வன் வாய் போகாது,
ஒன்று புரிந்த ஈர் இரண்டின்,
ஆறு உணர்ந்த ஒரு முது நூல்
இகல் கண்டோர் மிகல் சாய்மார்,”
– (புறம் 166)

பரிபாடலில் உள்ள செவ்வேள் பற்றிய பாடல் ஒன்றில் வேதங்கள் மற்றும் ஆரிய மரபில் இல்லாத பல சிறப்பம்சங்கள் தமிழ் மரபில் உள்ளது என்கிறது.

“நான்மறை விரித்து, நல் இசை விளக்கும்
வாய்மொழிப் புலவீர்! கேண்மின், சிறந்தது;
காதற் காமம், காமத்துச் சிறந்தது;

ஆங்காங்கே சில இடங்களில் ஊருக்குள் புதிதாக வந்திருக்கும் பார்ப்பனர்களின் உருவத்தை வைத்து கேலி செய்யுமாறு வரும் பாடல்களும் உள்ளது.

“அன்னாய் வாழி வேண்டன்னை நம்மூர்ப்
பார்ப்பனக் குறுமகன் போலத் தாமுங்
குடுமித் தலைய மன்ற
நெடுமலைநாடன் ஊர்ந்த மாவே” –

(ஐங்குறுநூறு பாடல் எண். 202)

என்ற பாடல் அந்தணச்சிறுவனின் குடுமியைப் போல குதிரையின் முடியும் இருந்தது என்று குறிப்பிட்டிருப்பது பார்ப்பனர்களுக்கு சங்கச் சமுதாயத்தில் தரப் பெற்றிருந்த இடத்தை உணர்த்தும்.

தலைவியைப் பிரிந்து தவிக்கும் தலைவனிடம் ஒரு பார்ப்பான் வேதத்தைப் படி உன் மனதுக்கு சாந்தி உண்டாகும் என்று கூற, அதற்கு தலைவன் அந்த எழுத்தில்லா வேதத்தில் என் தலைவியுடன் சேர்வதற்கு ஏதேனும் மந்திரம் இருந்தால் சொல் ; இல்லாவிட்டால் பேசாமல் கிளம்பு என்று சொல்லும் குறுந்தொகை பாடலும் உண்டு.

“பார்ப்பன மகனே! பார்ப்பன மகனே!
செம் பூ முருக்கின் நல் நார் களைந்து
தண்டொடு பிடித்த தாழ்கமண்டலத்துப்
படிவ உண்டிப் பார்ப்பன மகனே!
எழுதாக் கற்பின் நின் சொலுள்ளும்
பிறிந்தோர்ப் புணர்க்கும் பண்பின்
மருந்தும் உண்டோ! மயலோ இதுவே”

– (குறுந்தொகைப் 156)

இந்தப் பாடல் பார்ப்பன எதிர்ப்பு, வேத மறுப்பு மட்டுமில்லாமல் இன்னொரு முக்கியமான செய்தியையும் சொல்கிறது. குறுந்தொகை போன்ற வளமான தமிழ் இலக்கியம் வந்து விட்ட சூழலிலும் கூட சமஸ்கிருதம் வெறும் பேச்சு மொழியாக மட்டுமே எழுதாக் கிளவியாகவே இருந்ததை இப்பாடல் காட்டுகிறது. சம்ஸ்கிருதத்தைக் காட்டிலும் காலத்தாலும், மொழி வளத்தாலும் தமிழே சிறந்தது , மூத்தது என்று காட்டும் மிகச் சிறந்த பாடல் இது.

இன்றுள்ள கோவில்களில் இருப்பது போல அபிஷேகம், மந்திரம் ஓதும் கடவுள்கள் எதுவும் சங்க காலத்தில் இல்லை என்று கூறும் இந்தப் பாடலோடு இக்கட்டுரையை முடிப்பதே பொருத்தமாய் இருக்கும். இயற்கைக்கு மாறான இறைக் கொள்கை முதல், இடைச்சங்கத் காலத்தில் இல்லவே இல்லை என்ற கருத்துக்கு வலுச் சேர்க்கும் அந்தப் பாடல்.

“கல்லே பரவின் அல்லது
நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே!”

நெல்-அரிசியைக் கொட்டி “நைவேத்யம்” செய்யும் கடவுள், எங்களுக்கு இல்லை ! சம்ஸ்கிருத , வேத, பார்ப்பனீய மரபுகளுக்கு சங்க கால தமிழர்கள் எதிராகவே இருந்தார்கள் என்பதற்கும் அவர்களின் கடவுள் மறுப்பு, பகுத்தறிவு சிந்தனையை உலகுக்கு காட்ட சங்க இலக்கியங்கள் உதவுகிறது.

#APSCAmerica

(நன்றி: Jose Kissinger)

About editor 2990 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply