வெற்றிவேற்கை

வெற்றிவேற்கை

வெற்றிவேற்கை என்னும் இந்நூல் முதலில் ‘நறுந்தொகை’ என்றே அழைக்கப்பட்டது. நல்ல பாடல்களின் தொகுப்பு என்பது இதன் பொருள் ஆகும்.இந்த நூலின் பயனைத் தெரிவிக்கும் பாடல் ‘வெற்றிவேற்கை‘ என்று தொடங்குகிறது. ஆத்திசூடி, கொன்றைவேந்தன், வாக்குண்டாம் முதலிய அறநூல்கள் செய்யுளின் முதல் சொல்லால் அழைக்கப் படுவதைப் போல் இந்த நூலும் ‘வெற்றிவேற்கை’ என்று அழைக்கப் படுகிறது.

வெற்றி வேற்கை வீரராமன்
கொற்கை ஆளி, குலசேகரன், புகல்
நல்தமிழ் தெரிந்த நறுந்தொகை தன்னால்
குற்றம் களைவோர் குறைவிலா தவரே
(வெற்றிவேற்கை)

(ஆளி = ஆட்சி செய்பவன், களைவோர் = போக்குவோர், புகல் = உரைத்த)

என்னும் நூல்பயன் பாடலில் இடம் பெற்றுள்ள ‘வெற்றிவேற்கை’ என்பதே நூலின் தலைப்பு ஆகிவிட்டது. இங்கே வெற்றி வேற்கை என்பது அதிவீரராம பாண்டியனுக்கு அடைமொழியாக வந்துள்ளது. வெற்றிதரும் வேலைக் கையில் ஏந்திய வீரராமன் என்பது இதன் பொருள். இந்தப் பாடலின் மூலம், அதிவீரராம பாண்டியன் கொற்கையை ஆட்சி செய்தவன் என்பதையும் குலசேகரன் என்னும் சிறப்புப் பெயர் பெற்றவன் என்பதையும் அறிந்து கொள்ள முடியும்

4.1.1 கடவுள் வாழ்த்து


வெற்றி வேற்கையின் கடவுள் வாழ்த்தில் விநாயகக் கடவுள் போற்றப்பட்டுள்ளார்.

பிரணவப் பொருளாம் பெருந்தகை ஐங்கரன்
சரண அற்புத மலர் தலைக்கு அணிவோமே


என்னும் கடவுள் வாழ்த்தில் விநாயகப் பெருமான் ஐங்கரன் என்று குறிப்பிடப்பட்டுள்ளார். ஐங்கரன் என்பது ஐந்து கரங்களைக் கொண்டவன் என்பதை உணர்த்தும். விநாயகன் வலப்பக்கத்தில் இரண்டு கைகளையும் இடப்பக்கத்தில் இரண்டு கைகளையும் முன்பக்கத்தில் தும்பிக்கையையும் கொண்டவன். இவ்வாறு ஐந்து கரம் கொண்டுள்ளதால் ஐங்கரன் என்று அழைக்கப்பட்டுள்ளான். பிரணவ மந்திரத்தின் பொருளாக ஐங்கரன் விளங்குகிறான் என்பதையும் இந்தக் கடவுள் வாழ்த்துப் பாடல் தெரிவிக்கிறது.

4.1.2 கல்வியும் கல்லாமையும்

உலகில் உள்ள எல்லாப் பொருள்களையும் விட, கல்வியே சிறந்தது. கல்வியின் சிறப்பை உணர்த்தும் பல தொடர்களை வெற்றி வேற்கை தெரிவித்துள்ளது.கல்வி கற்றவர்கள் பிறரால் மதிக்கப்படுவார்கள். கல்வி கல்லாதவர்கள் அவ்வாறு மதிக்கப்படுவதில்லை. கல்வி கல்லாதவர்கள் செல்வத்தில் எவ்வளவு உயர்ந்தவர்களாக இருந்தாலும் உலகம் அவர்களை ஒரு பொருட்டாகக் கருதுவதில்லை என்பதை வெற்றி வேற்கை தெரிவித்துள்ளது.

• கசடு அற மொழிதல்
கல்வி பெருமையுடையது; கற்றவர்கள் மதிக்கப்படுவார்கள் என்பதில் எள் அளவும் ஐயம் இல்லை. ஆனால், ஒருவன் கல்வி அறிவு பெற்றவன் என்பதை எதன் மூலம் அறிய முடியும்? அதற்கு அதிவீரராம பாண்டியன் ஒரு வழியைக் காட்டியுள்ளார்.

கல்விக்கு அழகு கசடுஅற மொழிதல்(வெற்றிவேற்கை : 2)

(கசடு = குற்றம், அற = நீங்க)ஒருவன் குற்றம் இல்லாத சொற்களைத் தெளிவாகப் பேசுவதிலிருந்தே அவன் கல்வி கற்றவன் என்பதை அறிந்து கொள்ளமுடியும் என்று இந்த அடி தெரிவிக்கிறது.• கற்கை நன்றே!கல்வி கற்பது ஒன்றே ஒரு மனிதனின் வாழ்க்கைக்கு நன்மையைத் தரும். கல்வி மட்டும்தான் நன்மையைத் தரும் என்றால் அந்தக் கல்வியை எந்த வகையிலாவது பெற வேண்டும் அல்லவா? கல்வி கற்பதற்குப் பொருள் தேவைப்படுகிறது. அந்தப் பொருள் இல்லாதவர்கள் அதற்குத் தேவையான பொருளை முயன்று திரட்ட வேண்டும். முயற்சி செய்தும் பொருள் திரட்ட இயலவில்லை என்றால் அவர்களால் கல்வி கற்க இயலாது அல்லவா? அவர்கள் கல்வி கற்க வேண்டாமா? இதற்கு வெற்றிவேற்கை என்ன சொல்கிறது என்று பார்ப்போமா?

கற்கை நன்றே; கற்கை நன்றே;
பிச்சை புகினும் கற்கை நன்றே
(35)

என்னும் வரிகள், இதற்கு விளக்கம் தருகின்றன.ஒருவன் செல்வம் இல்லாதவனாக மிகவும் ஏழ்மை நிலையை அடைந்து பிச்சை எடுக்கும் நிலை ஏற்பட்டாலும், அந்த நிலையிலும் கல்வி கற்க வேண்டும் என்பதை இந்த வரிகள் உணர்த்துகின்றன.

கற்றவரே உயர்ந்தோர்

நமது சமுதாயத்தில் குலத்தால் உயர்வு, தாழ்வு பார்க்கும் இழிநிலை இருக்கிறது. குலத்தை நான்காகப் பிரித்து வைத்துள்ளார்கள். அவை, அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்பவை. இந்த நான்கு குலத்திலும் அந்தணரை உயர்ந்தோர் என்றும், அடுத்த நிலையில் அரசர்கள் என்றும், அதற்கும் அடுத்த நிலையில் வணிகர்கள் என்றும், கடைநிலையில் வேளாளர்கள் என்றும் தரப்படுத்தியிருக்கிறார்கள்.இந்தத் தர வரிசையில் முதலில் இருக்கும் அந்தணர் குலத்தைச் சேர்ந்த ஒருவன் கல்வி அறிவு பெறவில்லை என்றால் அவனும் கீழ்க்குலத்தைச் சேர்ந்தவனாகவே கருதப்படுவான் என்று வெற்றிவேற்கை கூறுகிறது.

நாற்பால் குலத்தின் மேற்பால் ஒருவன்
கற்றிலன் ஆயின் கீழ் இருப்பவனே
(37)

இந்தத் தொடரின் மூலம் அதிவீரராமபாண்டிய மன்னனின் காலத்தில் வருணப் பிரிவு இருந்ததை அறிய முடிகிறது. இந்த வருணப் பிரிவால் உயர்வு தாழ்வு இருந்ததையும் அறிய முடிகிறது. எனினும், கல்வி கற்றவர்களின் உயர்வை வெளிப்படுத்தும் வகையில் கடைநிலையில் இருப்பவர்களும் கற்றவர்களாக இருந்தால் முதல்நிலையில் வைத்துப் போற்றப்படுவார்கள் என்பதையும் பின்வரும் தொடர் வெளிப்படுத்துகிறது.

எக்குடிப் பிறப்பினும் யாவரே ஆயினும்
அக்குடியில் கற்றோரை ‘மேல்வருக‘ என்பர்
(38)

மேற்கூறிய நால்வருணத்தில் எந்தக் குடியில் யாராக இருந்தாலும், கற்றவராக இருந்தால் அவரை அறிஞர்கள் வரவேற்பார்கள். இந்த இரு தொடர்களும் வருணப்பிரிவைத் தெரிவிக்கின்றன. என்றாலும், கற்றோருக்கு வருணப் பிரிவு இல்லை என்பதைத் தெரிவித்து, கல்வியின் சிறப்பைத் தெரிவிக்கின்றன.

• கல்லாமை
கல்வி அறிவு இல்லாதவன் எதற்கும் பயன்அற்றவன். அவன் தனது குலத்தின் பெருமையைக் கற்றவர்களிடம் பேசுவதால் அவனுக்குப் பெருமை வந்து சேராது. இதை உணராமல் கல்லாத ஒருவன் தனது குலப்பெருமையைப் பேசினால் அவன் ‘பதர்’ ஆகக் கருதப்படுவான் என்பதை,

கல்லா ஒருவன் குலநலம் பேசுதல்
நெல்லினுள் பிறந்த பதர் ஆகும்மே
(36)

என்னும் தொடர் தெரிவிக்கிறது.நெல்லின் உள்ளே அரிசி இருந்தால் அதை நெல்மணி அல்லது நெல் என்று கூறுவோம். அரிசி இல்லாமல் உமியால் மட்டும் மூடப்பட்டு இருக்கும் நெல்லைப் பதர் என்று கூறுவார்கள். அரிசி இல்லாமல் வெறும் உமிமட்டும் இருக்கும் பதர், உணவுக்குப் பயன்படாது. அதைப்போல, கல்வி அறிவு இல்லாதவனும் பயன்படமாட்டான் என்பது இத்தொடரின் பொருள். இவ்வாறு கல்வியறிவு இல்லாமல் பிறருக்குப் பயன்படாமல் இருப்பவன், கற்றவர்களிடம் தன் குலத்தை உயர்த்திப் பேசுவது நெல் போன்றே காட்சி தரும் பதருக்கு இணையானது என்று அதிவீரராம பாண்டியன் கூறியுள்ளார்.

4.1.3 உதவியும் உதவாமையும்
மனிதர்கள் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து வாழவேண்டும். உதவியின் சிறப்பை ஒளவையார் மூதுரையில் தெரிவித்துள்ளார்.உதவி செய்வதற்கு மிகுதியான பொருள் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. பொருள் குறைவாக இருந்தாலும் நிறைந்த மனம் இருந்தால் போதும் என்பதை வெற்றிவேற்கை அறிவித்துள்ளது.

தெள்ளிய ஆலின் சிறுபழத்து ஒருவிதை
தெள்நீர்க் கயத்துச் சிறுமீன் சினையிலும்
நுண்ணிதே ஆயினும், அண்ணல் யானை
அணிதேர், புரவி, ஆள் பெரும்படையொடு
மன்னர்க்கு இருக்க நிழல் ஆகும்மே
(17)

என்பதே அப்பாடல் ஆகும். இந்தப் பாடலில் உதவியின் சிறப்பு வெளிப்படையாகச் சொல்லப்படவில்லை. உதவியின் சிறப்பை விளக்கும் ஓர் உவமை மட்டுமே சொல்லப்பட்டுள்ளது. அந்த உவமையைக் கண்முன் காட்சியாக விரியும் வகையில் தெளிவாக விளக்கியுள்ளார் அதிவீரராம பாண்டியன்.நன்கு வளர்ந்த ஆலமரத்தில் ஆலம்பழங்கள் கனிந்து இருக்கும். அவற்றின் உள்ளே சிறிய விதைகள் இருக்கும். அந்த விதைகள் சிறிய மீனின் முட்டையை விடவும் அளவில் சிறிதாக இருக்கும். ஆனால் அந்த விதை மரமாக வளர்ந்து பெரிய ஆலமரமாக நிற்கும்.அந்த ஆலமரத்தின் நிழலில் யானைப்படை, தேர்ப்படை, குதிரைப்படை, காலாட் படை என்னும் நால்வகைப் படையைக் கொண்ட மன்னனும் தங்க முடியும். அதைப்போல, குறைந்த அளவு செல்வம் கொண்டவர்களாக இருந்தாலும் மனம் இருந்தால் பிறருக்கு உதவ முடியும்.

• செல்வரின் கடமை

செல்வம் இருப்பவர்கள் அச்செல்வத்தின் மூலம் பிறருக்கு உதவ வேண்டும். அதை அவர்கள் தங்கள் கடமையாகக் கருதிச் செயல்படவேண்டும். இதை வெற்றிவேற்கை பின்வரும் தொடர் வாயிலாகத் தெரிவித்துள்ளது.

இரந்தோர்க்கு ஈவதும் உடையோர் கடனே(58)

ஒருவர் இரந்து உண்ணும் நிலைக்கு வருகிறார் என்றால் அவர் தமது மதிப்புநிலையைத் துறந்து வருகிறார் என்பதை அறிந்து கொள்ள முடியும்.தமது மதிப்பை இழந்து ஒருவர் இரக்கின்ற நிலைக்கு வருகிறார் என்றால் அவரது வறுமைக் கொடுமையை உணர்ந்து செல்வம் இருக்கின்றவர்கள் உதவவேண்டும். அது, செல்வம் இருப்பவர்களின் கடமையும் ஆகும்.

• உதவாமை

செல்வம் குறைவாக இருந்தாலும் நல்ல மனம் கொண்டவர்கள் பிறருக்கு உதவி செய்யும் இயல்புடன் இருப்பதை முன்பே நாம் கண்டோம். மிகுதியாகச் செல்வம் கொண்டவர்களும் பிறருக்கு உதவாதவர்களாக இருப்பதைப் பின்வரும் பாடல் தெரிவிக்கிறது.

தேம்படு பனையின் திரள்பழத்து ஒருவிதை
வான்உற ஓங்கி, வளம்பெற வளரினும்
ஒருவர்க்கு இருக்க நிழல் ஆகாதே
(16)

பனைமரத்தின் பழம் திரண்டு பெரியதாக இருக்கும். அதன் விதையும் பெரிதாக இருக்கும் அந்த விதையிலிருந்து வளரும் பனைமரமும் வானளாவ ஓங்கி வளரும். பனைமரம் உயரமாக வளர்ந்தாலும் அதன் நிழலில் ஒருவர் கூடத் தங்க இயலாது. இந்தப் பனைமரத்தைப் போல, செல்வம் மிகுதியாக உடையவராக இருந்தாலும், பிறருக்கு உதவும் மனப்பான்மை இல்லாதவர்கள் உதவி செய்ய மாட்டார்கள்.பிறருக்கு உதவுவதற்கும் உதவாமல் இருப்பதற்கும் செல்வம் தேவை தான் என்றாலும் அது மட்டுமே அடிப்படை ஆகாது. ஏனெனில் பிறருக்கு உதவும் மனம் வேண்டும் என்னும் கருத்தை வெற்றிவேற்கை தெளிவாக உணர்த்தியுள்ளது.

4.1.4 நல்லவரும் தீயவரும்

பிறருக்கு நன்மை செய்கிறவர்களை நல்லவர்கள் என்கிறோம்; தீமை செய்கிறவர்களைத் தீயவர்கள் என்கிறோம். நன்மை செய்கின்ற மனத்தை இயல்பாகக் கொண்டவர்கள் எக்காரணத்தாலும் பிறருக்குத் தீமை செய்ய மாட்டார்கள் இந்த நல்லவர்களின் இயல்பை விளக்குவதற்கு ஐந்து தொடர்களை வெற்றிவேற்கை வழங்கியுள்ளது.

அடினும் ஆவின்பால் தன்சுவை குன்றாது
சுடினும் செம்பொன் தன்ஒளி கெடாது
அரைக்கினும் சந்தனம் தன்மணம் அறாது
புகைக்கினும் கார்அகில் பொல்லாங்கு கமழாது
கலக்கினும் தண்கடல் சேறு ஆகாது
(23-27)

(அடினும் = காய்ச்சினாலும், கார் அகில் = கறுத்த அகில் கட்டை, பொல்லாங்கு = தீய மணம்)இந்த ஐந்து தொடர்களிலும் ஐந்து பொருள்கள் குறிக்கப் பட்டுள்ளன. அவை ஆவின்பால், செம்பொன், சந்தனம், அகில், கடல் ஆகியவை ஆகும். இவை ஐந்தின் நிலைத்த தன்மைகளை நல்லவர்களின் நல்ல குணத்திற்குச் சான்றாக வெற்றிவேற்கை கூறியுள்ளது.
அடுப்பில் வைத்துக் காய்ச்சுவதால் பசும் பாலின் சுவை குறையாது.நெருப்பில் போட்டுச் சுடுவதால் பொன்னின் ஒளி இல்லாமல் போகாது.கல்லில் வைத்து அரைப்பதால் சந்தனத்தின் மணம் போகாது.நெருப்பில் போட்டு அகில் கட்டையைப் புகைத்தால் கெட்ட மணம் வராது.கலக்குவதால் கடல்நீர் சேற்று நீராக மாறாது.இந்த ஐந்து பொருள்களும் அவற்றின் இயல்பான தன்மையில் மாறாதது போல் நல்லவர்களும் தங்கள் நல்ல குணத்திலிருந்து மாறமாட்டார்கள்.

• தீயவர்கள்
தீயவர்களுக்கு எவ்வளவு நல்ல நெறிகளைக் கூறினாலும் அவர்கள் திருந்துவதில்லை. அவர்களின் இயல்பான தீய குணமே வெளிப்படும். இதை வெற்றிவேற்கையின் இரண்டு தொடர்கள் விளக்குகின்றன.

அடினும் பால்பெய்து, கைப்பு அறாது, பேய்ச்
சுரைக்காய்
(28)


(கைப்பு = கசப்பு, அறாது = நீங்காது)
என்பது ஒருதொடர். இதனை,‘பால் பெய்து அடினும், பேய்ச்சுரைக்காய் கைப்பு அறாது’

என்று படித்துப் பொருள் கொள்ள வேண்டும்.பேய்ச்சுரைக்காய் கசப்புச் சுவை கொண்ட காய். இது கடற்கரைகளில் வளரும். இந்தப் பேய்ச்சுரைக்காயை எவ்வளவுதான் பால் விட்டுச் சமைத்தாலும் அதிலுள்ள கசப்புச் சுவை மாறாது. அதைப்போல, தீயவர்களிடம் எவ்வளவு நல்ல கருத்துகளை எடுத்துக் கூறினாலும் அவர்கள் தீய செயல்களையே செய்வார்கள்.

ஊட்டினும் பல்விரை, உள்ளி கமழாதே(29)

(விரை = நறுமணம்) என்பது மற்றொரு தொடர்.உள்ளி என்பது வெங்காயத்தின் வேறு பெயர். இந்த வெங்காயத்துடன் எவ்வளவு மணப்பொருள்களைக் கலந்தாலும் அதன் இயல்பான வெங்காய வாசம் மாறாது. அதைப் போல, தீயவர்கள் நல்லவர்களுடன் சேர்ந்து இருந்தாலும் அவர்களின் தீய குணம் போகாது.

4.1.5 உயர்வும் தாழ்வும்
கடலில் உருவாகும் அலைகள் எழுவதும் வீழ்வதும் போல் வாழ்க்கையில் உயர்வும் தாழ்வும் நிகழ்வது இயல்பு. செல்வ நிலையில் உயர்ந்து இருப்பவர், தொடர்ந்து உயர்ந்தே இருப்பார் என்று சொல்ல இயலாது. அவரே தமது நிலையில் தாழ்ந்தும் போகலாம்.

• நிலை உயர்வு
பொருள் எதுவும் இல்லாமல் ஏழையாக இருக்கும் ஒருவர் பொருள் உடையவராக மாறவும் வாய்ப்பு உண்டு. ஏனெனில் செல்வம் நிலையற்ற தன்மை கொண்டது.இதைத் திருவள்ளுவர்,

பொருள் அற்றார் பூப்பர் ஒருகால்(248)
பூப்பர் = பொருள் உடையவர் ஆவார்)
என்று குறிப்பிட்டுள்ளார். பொருள் இல்லாதவர் மன்னனாகக் கூட முடியும் என்பதை அதிவீரராம பாண்டியன்,

அறத்திடு பிச்சை கூவி இரப்போர்
அரசோடு இருந்து அரசாளினும் ஆளுவர்
(52)

என்று பாடியுள்ளார்.வீடு வீடாகச் சென்று பிச்சை கேட்டு வாழ்கின்ற இரவலன்கூட அரசனுடன் சேர்ந்து, ஒருநாள் அரசனாகி நாட்டை ஆள்வதற்கும் வாய்ப்பு ஏற்படும் என்பது இதன் பொருள். இது ஒரு தனி மனிதனின் நிலை உயர்வைக் காட்டுகிறது.

பெற்றமும் கழுதையும் மேய்ந்த அப்பாழ்
பொன்தொடி மகளிரும் மைந்தரும் கூடி
நெல்பொலி நெடுநகர் ஆயினும் ஆகும்
(55)

(பெற்றம் = எருது, தொடி= வளையல்)

என்னும் பாடலில் பாழான நிலம், பெரிய நகரமாக நிலைமையில் உயர்வதற்கும் வாய்ப்பு உண்டு என்று வெற்றிவேற்கை கூறியுள்ளது.வயல்வெளி இல்லாத மேட்டு நிலத்தில் மாடுகளும் கழுதைகளும் மேயும். அப்படிப்பட்ட மேட்டு நிலம் கூட ஒரு நாள், ஆண்களும் பெண்களும் மகிழ்ந்து வாழும் பெரிய நகரமாக மாறும். அதைப்போல நிலைமையில் தாழ்ந்தவரும் உயர்ந்தவராக மாறுவார். எனவே, யாரையும் இகழ்ச்சியுடன் பார்க்கக்கூடாது என்பதை இவ்வடிகளின் உதவியால் புரிந்து கொள்ள முடியும்.

• நிலை தாழ்வு
எல்லா வகையான செல்வங்களையும் பெற்று இன்பமாக வாழ்கின்ற ஒருவர், இன்று போல் என்றும் இன்பமாகவே வாழ்வார் என்று யாரும் எதிர்பார்க்க இயலாது. எதிர்பார்க்காத மாற்றங்கள் நிகழ்வது உண்டு. அந்த எதிர்பாராத தாழ்வுகளை ஐந்து பாடல்களில் வெற்றிவேற்கை தெரிவித்துள்ளது.

குடைநிழல் இருந்து, குஞ்சரம் ஊர்ந்தோர்
நடைமெலிந்து, ஓர்ஊர் நண்ணினும் நண்ணுவர்
(50)

(குஞ்சரம் = யானை, நண்ணுவர் = அடைவர்)வெண்கொற்றக் குடையின் கீழிருந்து ஆட்சி செய்யும் மன்னர் யானைமேல் ஊர்வலம் செல்லும் உயர்ந்த நிலையில் இருப்பவர். அந்த உயர்ந்த நிலையில் இருக்கும் மன்னரும் தமது நிலையில் தாழ்ந்து, அந்த ஊரில் வாழ இயலாது வேறு ஓர் ஊருக்குச் செல்லவேண்டிய நிலை ஏற்படும் என்பதை இந்த வரிகள் தெரிவிக்கின்றன.சிலப்பதிகாரத்தில் காவியத்தலைவனாக இருப்பவன் கோவலன். காவியத் தலைவி கண்ணகி. சோழமன்னனுக்கு இணையாகப் பூம்புகாரில் வாழ்ந்து வந்தவன் கோவலன். அவனும் தனது நிலையில் மாறி, பாண்டிய நாட்டிற்குச் சென்று தொழில் செய்து பிழைக்க வேண்டிய நிலைக்குத் தாழ்ந்து விடுகிறான். எனவே, எப்போதும் உயர்ந்த நிலையிலேயே இருப்போம் என்று எண்ணக்கூடாது என்பதை இதன்மூலம் அறிந்து கொள்ளலாம்.மன்னனாக வாழ்ந்தவன் தனது நாட்டை இழந்து வேறு நாட்டிற்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுவிடுகிறது. புகழும் செல்வமும் உடையவர்கள் அன்ன சத்திரத்துக்குப் போய் உண்டு வாழக்கூடிய வறுமை நிலையை அடைந்தாலும் அடைவார்கள். இதை

சிறப்பும் செல்வமும் பெருமையும் உடையோர்
அறக்கூழ்ச் சாலை அடையினும் அடைவர்
(51)
என்னும் பாடல் தெரிவிக்கிறது.

குன்று அத்தனை இருநிதியைப் படைத்தோர்
அன்றைப் பகலே அழியினும் அழிவர்
(53)
(இருநிதி = பெருஞ்செல்வம்)

என்னும் பாடலில், மலையளவு பெருஞ்செல்வம் உடையவராக இருந்தாலும் ஒரே நாளில் அந்தப் பெருஞ்செல்வத்தை இழக்க வேண்டிய நிலைக்கு ஆளாகவும் வாய்ப்பு உண்டு என்பது விளக்கப்பட்டுள்ளது.

எழுநிலை மாடம் கால்சாய்ந்து உக்கு
கழுதை மேய்பாழ் ஆயினும் ஆகும்
(54)

(உக்கு = அழிந்து)பல அடுக்குகளைக் கொண்ட மாடி வீடுகூட, தூண் சாய்ந்து கழுதை மேயும் மேடாகவும் மாறிவிடும் என்பது இதன் பொருள்.
இந்த நிலையாமைக் கருத்துகளை ஆசிரியர் ஏன் வலியுறுத்த வேண்டும்? செல்வம் நிலையற்றது என்பதை உணர்ந்து அனைவரும் சோம்பியிருக்க வேண்டும் என்று சொல்கிறாரா? இல்லை, செல்வமும் புகழும் சேரும் பொழுதும், விலகும் பொழுதும் நாம் நிலை தடுமாறிவிடக் கூடும் என்பதால் இவை ஓர் எச்சரிக்கையாக அமைகின்றன. செல்வம் சேரும் பொழுது ஆணவம் வந்து விடக் கூடாது, அது விலகும் பொழுது துன்பத்தினால் மீளாத்துயரில் ஆழ்ந்து விடக்கூடாது என்பதே ஆசிரியர் கருத்து.

இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
துன்பம் உறுதல் இலன்
(குறள்:629)
என்ற குறளின் கருத்துக்குச் சார்புடைய கருத்தாகும் இது.

4.1.6 பெரியோர் நட்பும் சிறியோர் நட்பும்
நண்பர்கள் இருவர் தங்களுக்குள் அன்புடன் வாழ்வதை நட்பு என்கிறோம். நண்பர்கள் இருவரும் நல்லவர்கள் என்றால் அவர்களின் நட்பு நிலைத்து நிற்கும். அவர்கள் இருவரும் தீயவர்கள் என்றால் அவர்களின் நட்பு நிலைத்து நிற்காது.நல்லவர்களின் நட்பானது பிறைநிலவு வளர்வதைப் போல் வளரும். தீயவர்களின் நட்பானது, முழுநிலவு தேய்வதைப் போல் தேயும் என்று திருக்குறள் கூறுவதை அறிவோம். வெற்றிவேற்கையும்,

ஒருநாள் பழகினும் பெரியோர் கேண்மை
இருநிலம் பிளக்க வேர் வீழ்க்கும்மே
(34)

(கேண்மை = நட்பு) என்று பெரியோர் நட்பின் சிறப்பைக் கூறுகிறது.‘இருநிலம்’ என்பதன் பொருள் என்ன? ஏற்கனவே ‘இருநிதி’ என்ற சொல்லைப் படித்தீர்கள் அல்லவா! ‘நிதி’ என்றால் செல்வம், ‘இருநிதி’ என்றால் ‘பெருஞ்செல்வம்’ அதுபோல் ‘இருநிலம்’ என்பது …… ஆம்! ‘பெரிய நிலம்’ என்பது தான் அதன் பொருள்!பெரியவர்கள் ஒருவரிடம் ஒருநாள் மட்டுமே பழகினாலும் ஆழ்ந்த நட்புடையவர்களாக இருப்பார்கள். மரத்தின் வேரானது பெரிய நிலத்தைப் பிளந்து போய், மரத்தைக் கீழே விழாமல் தாங்குவது போல் அவர்களின் நட்பு உறுதி உடையதாக இருக்கும். ஆனால், அறிவற்றவரின் நட்பு எவ்வளவு நாள் பழகினாலும் நிலைக்காமல் போய் விடும். இதை,

நூறுஆண்டு பழகினும் மூர்க்கர் கேண்மை
நீர்க்குள் பாசிபோல் வேர் கொள்ளாதே
(33)

என்னும் வெற்றிவேற்கைப் பாடல் தெரிவிக்கிறது.நீர் நிலையில் காணப்படும் தாவரங்களில் ஒன்று பாசி என்பது. இது எவ்வளவு காலம் நீரில் கிடந்தாலும் இதன் வேரானது நீர் நிலையின் அடிப்பகுதிக்குச் சென்று நிலத்தில் பதிவது இல்லை. அதைப்போல அறிவற்றவர்கள் எவ்வளவு காலம் நட்புக் கொண்டாலும் அந்த நட்பு நிலைத்து இருப்பது இல்லை என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.

4.1.7 சொல்திறமும் திறமின்மையும்

சொல்லைச் சரியாகப் பயன்படுத்துவது என்பது தனித்திறமை. அவ்வாறு சரியாகச் சொல்லைத் தேர்வு செய்து பயன்படுத்துகிறவர்களின் பேச்சைப் பலர் விரும்பிக் கேட்பார்கள். சொல்லைத் தேர்வு செய்து பயன்படுத்துவதைப் பின்வரும் திருக்குறள் விளக்குகிறது.

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை வெல்லும்சொல் இன்மை அறிந்து(645)

ஒருவன் ஒரு கருத்தை வலியுறுத்திப் பேசும் போது பிறரால் அக்கருத்தை மறுத்துப் பேச இயலாத அளவிற்குச் சொல்லைத் தேர்வு செய்து பயன்படுத்த வேண்டும் என்பது இதன் பொருள். அவ்வாறு பேசும் போது சொல்ல விரும்பும் கருத்துகளை வரிசைப்படுத்தித் தெளிவாகச் சொல்பவர்களின் கருத்தை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள்.

• சொல்திறம்

தனது சொல்லாற்றலால் ஒருவன் எந்தச் செயலையும் நிலைநாட்ட முடியும் என்பதை வெற்றிவேற்கை பின்வரும் பாடல் மூலம் அறிவித்துள்ளது.

பொய்யுடை ஒருவன் சொல்வன்மையினால்
மெய் போலும்மே; மெய்போலும்மே
(73)

பொய்யைப் பேசுகிற ஒருவனும் சொல்லைத் திறமாகக் கையாளுபவனாக இருந்தால் அவன் தனது பேச்சுத்திறத்தால் பொய்யையும் மெய்யாகக் காட்டி விடுவான் என்பதே இதன் பொருள். இதன் மூலம் சொல்திறம் கொண்டவர்களால் எதையும் பேச்சில் வெற்றி கொள்ள முடியும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

• சொல்திறம் இன்மை


சொல்ல விரும்பும் கருத்துகளை ஒருவனால் சரியாக எடுத்துச்சொல்ல இயலவில்லை என்றால் அவனால் எந்தக் கருத்தையும் நிலை நாட்ட இயலாது. அவன் உண்மையைச் சொன்னாலும் பொய்யாகவே கருதுவார்கள்.

மெய்யுடை ஒருவன் சொல மாட்டாமையால்
பொய் போலும்மே; பொய் போலும்மே
(74)

என்னும் வெற்றிவேற்கைப் பாடல் சொல்திறம் இன்மையைத் தெரிவிக்கிறது. உண்மையைப் பேசவிரும்பும் ஒருவனால் கருத்துகளைச் சரியாக எடுத்துக்கூற இயலாவிட்டால் அவனது உண்மையான சொற்களும் பொய்யாகவே கருதப்படும். எனவே, ஒருவன் சொல்திறம் பெற்றவனாக இருக்க வேண்டும் என்பதை அறியலாம்.

தன் மதிப்பீடு : வினாக்கள் – I
1.வெற்றிவேற்கையின் வேறு பெயர் யாது?[விடை]2.ஒருவன் கல்வி கற்றவன் என்பதை எதன் மூலம் அறிய முடியும்?[விடை]3.செல்வம் உடையவர்களின் கடமை யாது?[விடை]4.யாருடைய நட்பு நிலைத்து இருக்கும்?
யாருடைய நட்பு நிலைத்து இருக்காது?[விடை]
வெற்றி வேற்கை | தமிழ் இணையக் கல்விக்கழகம் TAMIL VIRTUAL ACADEMY (tamilvu.org)
About editor 3045 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply