மதம் என்னும் பேய் பிடியாது இருக்க வேண்டும்!

மதம் என்னும் பேய் பிடியாது இருக்க வேண்டும்!

புவிமைந்தன்

மதம் என்பது உணர்வற்ற மக்களின் உணர்வாக இருக்கிறது. இதயமற்ற உலகின் இதயமாக இருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் வேதனைப் பெருமூச்சுதான் மதம். அதே சமயத்தில் அந்த வேதனைக்கும் எதிராகவும் இருக்கிறது. மதம் மக்களுக்கு அபின்…

– காரல் மார்க்ஸ்

கடந்த மாதம் சென்னையில் நடந்த இந்து மத ஆன்மீக மற்றும் சேவைக் கண்காட்சியை ஒட்டி நண்பர் ஒருவர் அதை ஓஹோவென்று மிகவும் பாராட்டித் தனது கருத்தை இணையதளம் ஒன்றில் பதிவு செய்து இருந்தார். இந்து மதத்தை ஒரு மதமாகக் கருதுவது தவறு என்றும், அது ஒரு வாழ்க்கை முறை என்றும், இந்தியாவில் கம்யூனிஸ்ட்டுகள் சமூக உணர்வை ஊட்டத் தவறி விட்டார்கள் என்றும், மதங்கள்தான் இந்தியாவில் சமூக மாற்றத்தையும், சோசலிசத்தையும் கொண்டு வரும் என்றும் அதில் எழுதி இருந்தார். அவர் கருதுவது போல இந்து மதமோ அல்லது மற்ற மதங்களோ இந்தியாவில் சமூக மாற்றத்தைக் கொண்டு வந்து விடுமா? மக்களுடைய துயரங்களைத் துடைத்துவிடுமா?

இந்து மதம் ஒரு வாழ்க்கை முறை என நண்பர் குறிப்பிட்டுள்ளார். இந்து மதம் மட்டுமல்ல, எல்லா மதங்களுமே ஒரு வாழ்க்கை முறையைப் போதிக்கின்றன. மதங்கள் என்பது ஆன்மிகத்தோடு மட்டும் தொடர்பு கொண்டவையல்ல; அவை ஆதிகாலம் தொட்டே பண்பாட்டோடும், அரசியலோடும், பொருளாதாரத்தோடும் தொடர்பு கொண்டவை. அவை நிலவுகின்ற அல்லது தான் நிறுவ விரும்புகின்ற பொருளாதாரத் தையும், அரசியலையும் ஏற்றுக்கொள்ளும் வகையில் மக்களின் மனதை இணங்க வைக்கக் கூடிய பண்பாட்டு பாத்திரத்தை ஆற்றி வந்துள்ளன; இன்றும் ஆற்றி வருகின்றன. அதனால்தான் அவை நிலவுகின்ற அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டில் எந்த விதமான மாற்றம் வந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளாமல் கடுமையாக எதிர்க்கின்றன.
 
மதங்கள் நிலவுகின்ற ஏற்றத்தாழ்வு கொண்ட, சுரண்டல் சமூக அமைப்பை நியாயப் படுத்தும் சித்தாந்தப் பணியை ஆற்றி வருகின்றன. அந்த அமைப்பைக் கட்டிக் காக்கும் பண்பாட்டுப் பணியை ஆற்றி வருகின்றன. அவை சமூகப் பிரச்சினைகளைத் தனி மனிதப் பிரச்சினைகளாகக் குறுக்குகின்றன. ஏழ்மை, வறுமை, சாதிகள், வேலை யில்லாத் திண்டாட்டம், ஏற்றத்தாழ்வு அனைத்துக்கும் காரணங்களாக ஒருவரின் பிறந்த நேரம், முற்பிறவியில் செய்த பாவம், புண்ணியம் என்பவற்றைக் கற்பித்து அப் பிரச்சினை களுக்கு அடிப்படையாக இருக்கும் உண்மையான சமூகக் காரணங்களை மக்கள் பார்க்கவிடாமல் தடுக்கின்றன. அதனால் மக்களை தங்களுடைய பிரச்சினைகளுக்கான காரணங்களைத் தனது பிறப்பில் தேட வைக்கின்றன; நிலவும் சமூக அமைப்பைக் காப்பாற்றி வருகின்றன.

இயற்கையின் விளைபொருள் மனிதன். படிமுறை வளர்ச்சி மூலம் இயற்கையிலிருந்து தோன்றியவன் மனிதன். இயற்கையின் பிரிக்க முடியாத அங்கம் மனிதன். இயற்கையே அவனது அனைத்துத் தேவைகளையும் நிறைவு செய்கிறது. இயற்கையின் மீது செயல் புரிந்து, அதைத் தனக்கானதாக மாற்றி அதிலிருந்து தனது வாழ்வுக்குத் தேவையான அனைத்துப் பொருள்களையும் பெற்றுக் கொள்கிறான். உலகில் உள்ள அனைத்து செல்வங்களுக்கும் அடிப்படை இயற்கையும் உழைப்பும்தான். இயற்கைப் பொருள்களான மூலப்பொருள்கள் மீது செயல்படும் மனித உழைப்பே உலகில் இன்று உள்ள அனைத்து வளங்களுக்கும், அறிவியல் உட்பட அனைத்து முன்னேற்றங்களுக்கும் காரணமாகும்.

இந்தப் புவிக் கோளத்தில் தனியுடைமை ஏற்பட்டபோது, இயற்கையின் மீது தனியுடைமை ஆதிக்கம் ஏற்பட்டபோது உழைப்பு அந்நியமாக்கப்பட்டது. உழைப்பின் விளைபொருளிலிருந்து உழைப்பாளி அந்நியமாக்கப்பட்டான். அவனுடைய வாழ்வாதாரங்களிலிருந்து அவன் அந்நியமாக்கப்பட்டான். அவனால் படைக்கப்பட்ட பொருளே அவன் மீது ஆதிக்கம் செலுத்தியது. உழைப்பாளி பஞ்சை பராரி ஆக்கப்பட்டான். செல்வம் ஒரு பக்கம், ஏழ்மையும், வறுமையும், துயரங்களும் இன்னொரு பக்கம் எனச் சமூக ஏற்றத்தாழ்வுகள் பெருகின. அவற்றை நியாயப்படுத்தவும், மக்களை ஏற்றுக்கொள்ள வைக்கவும் ஆதிக்க சக்திகளுக்கு மதங்கள் தேவைப்பட்டன.

மனிதத் துயரங்களுக்கு ஆறுதல் அளிக்கக்கூடியவையாக, நம்பிக்கை இழந்த இதயங்களுக்கும், உடைந்து போன உள்ளங்களுக்கும் நம்பிக்கை அளிக்கக் கூடியவையாக மதங்களும், கடவுளும் சில நேரங்களில் விளங்கினாலும் அவை தற்காலிகமானவையே. வலியை உணராமல் இருக்கத் தரப்படும் மயக்க மருந்துகள் போன்றவைகளே. அவை நமக்கு நிரந்தரத் தீர்வை வழங்கமாட்டா. அவை வழங்குவதாகக் கூறும் ஆன்மீக நிறைவுகள் போலியானவை.

இயற்கையிலிருந்தும், உழைப்பிலிருந்தும் அந்நியமாக்கப்பட்டதால் ஏற்பட்ட மனிதத் துயரங்களுக்குத் தீர்வு அந்த அந்நியமாதலை ஒழிப்பதுதான்; தனியுடமையை அடிப்படையாகக் கொண்ட சமூக அமைப்பை ஒழிப்பதுதான். அது வர்க்கமற்ற, கூட்டு வாழ்க்கை கொண்ட கம்யூனிச சமூகத்தில்தான் சாத்தியம். ஆனால் அத்தகைய ஒரு சமூகத்தை அடைய மதங்கள் தடையாக இருக்குமே தவிர உதவியாக இருக்க மாட்டா. அதைத்தான் இதுவரையிலான சமூக வரலாறு வலியுறுத்துகிறது.

மக்களின் நலன்களில் அக்கறை கொண்ட மத நம்பிக்கைவாதிகள் சிலர் விடுதலைக்கு ஆதரவாக மக்களைத் திரட்டும் வகையில் மதங்களுக்கு விளக்கம் கொடுத்தாலும் அவர்களைப் போன்றவர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவே. ஆதிக்க நிலையில் உள்ளவர்கள் மதங்களை மக்களுக்கு எதிராகவே பயன்படுத்தி வந்துள்ளதைத் தான் வரலாறு நமக்குக் காட்டுகிறது. சமூக வளர்ச்சியின் தேவைக்கு ஏற்ப சில சீர்திருத்தங்களை மதத்தில் கொண்டு வர நினைத்தவர்கள் கூட கடுமையான எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. தமிழ் நாட்டில் வள்ளலாரையும், கேரளத்தில் நாராயண குருவையும் இதற்கான எடுத்துக் காட்டுகளாகக் காணலாம்.
 
அன்பே சிவம் என்று பேசிய சைவர்கள்தான் எண்ணாயிரம் சமணர்களைக் கழுவில் ஏற்றிக் கொன்றதாகப் பண்டையத் தமிழக வரலாறு கூறுகிறது.

அடிமைகளின் விடுதலைக்குக் குரல் கொடுத்த யூதத் தச்சனின் மகன் ஏசுவால் உருவாக்கப்பட்ட கிருத்துவ மதமும், அமைதி மார்க்கம் என அழைக்கப்பட்ட இஸ்லாமும்தான் பிற்காலத்தில் போர்களை நடத்தி பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவிக்கக் காரணமாக அமைந்தன.

மேலும் கிருத்துவ மதம்தான் ஆசிய, ஆப்ரிக்க, அமெரிக்கக் கண்டங்களில் ஐரோப்பிய நாடுகளின் காலனிய ஆதிக்கத்திற்கும், அமெரிக்காவின் பூர்வீக குடியான செவ்விந்தியர்கள் அழிப்புக்கும் பக்க பலமாக இருந்து வந்துள்ளது. அடிமைகளின் மதமாகத் தோன்றிய, அடிமைகளின் விடுதலைக்குக் குரல் கொடுத்த கிருத்துவம் ஆப்பிரிக்க-அமெரிக்கர்கள் என்ற அடிமைச் சமூகத்தை உருவாக்கச் சித்தாந்தப் பணியாற்றியது.

அகிம்சை பேசிய புத்தனால் உருவாக்கப்பட்ட புத்த மதம் இன்று இலங்கையில் தமிழீழ மக்களைக் கொன்று குவிக்க பக்க பலமாக இருந்து வருவதைப் பார்க்கிறோம்.

வர்ணாசிரமத்தின் பெயராலும், சாதிகளின் பெயராலும் இங்கு இந்து மதம் இழைத்து வரும் அறவே மனிதப் பண்பற்ற கொடுமைகளை நமது சமூகம் தொடர்ந்து அனுபவித்து வருவதைப் பார்க்கிறோம். சாதிகளின் அடிப்படையில் அமைந்த நிலமான்ய உற்பத்தி முறையைக் கட்டிக் காப்பாற்றி வருவதில் அதன் பங்கை நாம் நன்கு அறிவோம்.

இவை எல்லாம் மதங்கள் மனித சமூகத்தின் கூட்டு வாழ்க்கைக்கு எவ்வளவு விரோதிகளாக உள்ளன என்பதற்கான சில எடுத்துக்காட்டுகள்தான்.

மேலும் குறிப்பிடப்பட்ட இந்து ஆன்மீக மற்றும் சேவைக் கண்காட்சியில் கலந்து கொண்டோரின் பட்டியல்களைப் பார்த்தாலே போதும், அது எவ்வளவு தூரம் சேவை என்ற பெயரில் ஆதிக்க சாதிய சக்திகளின் ஆதிக்கத்திற்கான பிரச்சாரமாக அமைந்துள்ளது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

மேலும், அந்த கண்காட்சியைத் துவக்கி வைத்தவர் அத்வானி. தனது ரத யாத்திரை களின் மூலம் இந்து மத வெறியை மூட்டி இரத்த ஆறு ஓடச்செய்து அதன் மூலம் ஆட்சிக் கட்டிலேறிய கூட்டத்தின் தலைவர் அவர்.

இவை எல்லாம் எவ்வளவு தூரம் மதமும் அரசியல் ஆதிக்கமும் பின்னிப் பிணைந்து உள்ளன என்பதை விளக்குகின்றன. ஆன்மிகம் என்ற பெயரில் அவை மக்களை மயக்கித் தங்கள் நோக்கங்களுக்குப் பயன்படுத்திக் கொள்கின்றன என்பதைக் காட்டு கின்றன. இவற்றைப் புரிந்து கொள்ளும்போது நாமும் மதத்தின் மாயைகளிலிருந்து விடுபடலாம்.

https://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/23334-2013-03-22-15-19-47

About VELUPPILLAI 3347 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply