இலங்கையின்  தேரவாத பவுத்தம்  என்பது சிங்கள பவுத்தமே!

இலங்கையின்  தேரவாத பவுத்தம்  என்பது சிங்கள பவுத்தமே!

நக்கீரன்

அண்மைக் காலமாக சனாதிபதி இரணில் விக்கிரமசிங்க அவர்களின் ஆட்சிக்கு எதிராக பொதுமக்களும் தொழிற் சங்கங்களும் நடாத்தும் போராட்டங்கள் உச்ச கட்டத்தை அடைந்துள்ளன. அரசு போராட்டங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கினாலும் எதிர்ப்புப் போராட்டங்கள் தொடர்ந்தவண்ணம் உள்ளது. இதில் ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால் பவுத்த பீடாதிபதிகள், பவுத்த தேரர்கள், பவுத்த மாணவர்கள் பெருமளவில் இந்தப் போராட்டங்களில் கலந்து கொள்கிறார்கள். இலங்கை ஒரு பவுத்த – சிங்கள நாடு, இந்த நாடு சிங்கள – பவுத்தர்களுக்கு மட்டுமே உரிய நாடு என பச்சை இனவாதம் பேசுகிறார்கள்.

கடந்த பெப்ரவரி 23 ஆம் நாள் கல்வி அமைச்சுக்குள் பலவந்தமாகப் புகுந்த  பவுத்த – பாளி பல்கலைக் கழக மாணவர்கள் அங்கு காணப்பட்ட பொருட்களை அடித்து நொருக்கி நாசம் செய்தார்கள். பொலிசார் கல்வி அமைச்சின் மீது படையெடுத்ததுடன், தமது வழக்கமான பாணியில் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை கலைத்து வெளியேற்றியது. வெளியே ஓடிய , போராட்டக்காரர்கள் மீது நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன.  மஞ்சள் நிற ஆடைகளை அணிந்த பவுத்த மாணவர்கள் இரும்புப் படலைமீது ஏறிக் கீழே குதித்து ஓடியதை தொலைக்காட்சியில் பார்த்த போது சற்று அதிர்ச்சியாக இருந்தது. அதைவிட அதிர்ச்சி  ஒரு பவுத்த மாணவர் தனது மேலங்கியை இழந்துவிட்டுத்  தலைதெறிக்க ஓடிய காட்சி ஆகும். 

மியான்மரில் இராணுவ ஆட்சிக்கு எதிராகவும், தலைவர் ஆங் சாங் சூகி சிறையில் அடைக்கப்பட்டதற்கு எதிராகவும்  பவுத்த தேரர்கள்  நடத்திய போராட்டங்கள்  அமைதியாக நடத்தப்பட்டன. ஊர்வலங்களின் போது தேரர்கள் கட்டுப்பாட்டோடு  சாலையோரங்களில் அமைதியாக நடந்து சென்றனர். அவர்கள் கூச்சல் போடவில்லை,  கைகளில் பதாகைகள் இல்லை. மஞ்சள் அங்கிக்கு மரியாதை கொடுத்தார்கள்.

இலங்கையில் பவுத்த தேரர்களை தேர்தல் அரசியலுக்கு இழுத்து வந்த ‘பெருமை’  எஸ்.டபுள்யு.ஆர்.டி  பண்டாரநாயக்க அவர்களையே சாரும். 1956 இல் ஆட்சியைப் பிடிக்க “சிங்களம் மட்டும்” ஆட்சிமொழி,  பவுத்த மதத்தை  “புனர்வாழ்வு மற்றும் மறுசீரமைப்பு” செய்து சமூகத்தில் அதற்கு முக்கியத்துவம் அளிப்பது,  சிங்கள தேசிய அடையாளத்தை வளர்ப்பது போன்ற சிங்கள – பவுத்த  பேரினவாதத்தை ஒரு அரசியல் கட்சி முதன் முறையாகப் பயன்படுத்தியது.  மேலும் 1956 இல் நடந்த தேர்தலில் பண்டார நாயக்காவின் சிறிலங்கா சுதந்திரக் கட்சி தனது வெற்றிக்கு  பவுத்த தேரர்கள், ஆயுர்வேத வைத்தியர்கள் மற்றும் ஆசிரியர்கள் (Sanga, Veda and Guru)  அணி திரட்டப்பட்டார்கள்.  இதில் உள்ள கசப்பான நகைச்சுவை என்னவென்றால், பண்டாரநாயக்காவின் கொலையாளி சோமராம தேரர் இந்த மூவரையும் பிரதிநிதித்துவப்படுத்தினார்.  சோமராம தேரர் ஒரு பிக்கு, ஆயுர்வேத மருத்துவர் மற்றும் ஆயுர்வேத கல்லூரியில் விரிவுரையாளர்.

மிகவும் எதிர்மறையான முக்கியத்துவம் என்னவென்றால், தப்பியோடிய இளம் தேரர்கள் காவல்துறையினரோடு கைகலப்பில் ஈடுபட்டார்கள்.   பிபிசி போன்ற சர்வதேச ஊடகங்கள்  இந்தக் காட்சிகளைத் தங்கள் செய்தி ஒளிபரப்புகளில் காட்டத் தவறவில்லை. இவர்களால்  புத்தரின் துறவு வாழ்க்கை முறையை விடாமுயற்சியுடன் பின்பற்றும் உண்மையான தேரர்களுக்கும் களங்கம் ஏற்பட்டது. 

சங்கத்தினருக்கு புத்தர் விடுத்த முக்கிய செய்திகள் என்ன? குசினாராவில் (Kusinara)  அவர் இறக்கும் தறுவாயில் இருந்தபோது மீண்டும் மீண்டும் சொல்லப்பட்ட முதல் மற்றும் கடைசிச் செய்தி தேரர்கள் விடாமுயற்சியுடன் தங்கள் சொந்த விடுதலையைத் தேட வேண்டும் என்பதாகும்.  புத்தரின் வாழ்க்கை பற்றி எழுதிய நூலில் தேரர் வென் நானமொழி அங்கிருந்த விநய விதிகளைப் பின்பற்றி வரும் பவுத்த தேரர்களிடம் புத்தர்  பின்வருமாறு பேசியதாகக் கூறுகிறார்.முகலாயப்பேரரசை மராட்டிய சிவாஜி எதிர்த்தால் அது வீரம், சிங்களப் பேரினவாதத்தை  தமிழன் பிரபாகரன் எதிர்த்தால் அது பயங்கர வாதம், இந்த கோமிய ...

 “வாருங்கள் பிக்குகளே, தம்மம் நன்கு அறிவிக்கப்பட்டுள்ளது; துன்பத்தை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவருவதற்காக புனித வாழ்க்கையை வழி நடத்துங்கள். தேரர்களே நான் மனிதனாக இருந்தாலும் சரி அல்லது  தெய்வீகனாக இருந்தாலும் சரி, நான்  அனைத்து தளைகளிலிருந்தும்  விடுபட்டுவிட்டேன்.   இப்பொழுதே சென்று பலரின் நலனுக்காகவும்,  உலகின் நலனுக்காகவும், தெய்வங்களின் நலனுக்காகவும், மனிதர்களின் மகிழ்ச்சிக்காகவும் அலைந்து திரியுங்கள். உலகத்தின் மீது இரக்கம் கொண்டு தேவர்கள் மற்றும் மனிதர்களின் நன்மைக்காகவும், நலனக்காகவும், மகிழ்ச்சிக்காகவும்,  தொடக்கத்தில் நல்லது, நடுவில் நல்லது, இறுதியில் நல்லது என்று தம்மத்தைக் கற்றுக் கொடுங்கள்.”

துரதிட்டவசமாக மாணவ தேரர்கள் மட்டுமல்ல  புத்தரின் போதனைகளைப் பின்பற்றாத மூத்த தேரர்களும் உள்ளனர். பவுத்த தேரர்கள் புத்தருடைய  அறிவுரைகளைப் பின்பற்ற வேண்டும். அதாவது, சம்சார வாழ்விலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள விடா முயற்சியில் ஈடுபடுவதும், அறிய விரும்புவர்களுக்கு  தம்மத்தைப் பரப்புவதும் ஆகும். அரசியலில் ஈடுபடுவது பற்றியோ அல்லது ஆட்சியாளர்களுக்கு  அறிவுரை வழங்குவது பற்றியோ அவர் எதுவும் கூறவில்லை. துறவிகள் பற்றில்லாத ஒரு தூய்மையான வாழ்க்கையை வாழ வேண்டும்.  தேரர்கள் பற்று இல்லாத, தன்முனைப்பு இல்லாத  ஆசைகள் இல்லாத,  பாமரமக்களின்  “ஆன்மீக நண்பர்”  (“கல்யாண மித்ரர்”) களாக தூய்மையான வாழ்க்கையை நடத்த வேண்டும். குறிப்பாக  அவர்கள் பாமர மக்களை விமோசனப் பாதைக்கு அழைத்துச் செல்லும் ஆன்மீக நண்பர்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“ஆன்மீக நண்பர்” என்பதை “உண்மை, நல்லொழுக்கம், நேர்மை அல்லது நன்மை பயப்பவை” என்று மொழிபெயர்க்கலாம்.  மேலும் மித்ரா என்பது மைத்ரியின் மூல வார்த்தையாகும், அதாவது இரக்கம் அல்லது கருணை. 

உலக வாழ்க்கையைத் துறந்து புத்தபெருமானுடன் அலைந்து அவருடைய போதனை களைக் கேட்கும் தேரர்களின் குழுதான் சங்கம் ஆக உருவானது. இதனை இலங்கை யிலுள்ள மகா சங்கத்தினர் புரிந்துகொள்ள  வேண்டும். ஒரு நல்ல பவுத்த  வாழ்க்கை யை எவ்வாறு வாழ வேண்டும் என்பதற்கான உத்வேகத்தையும் வழிகாட்டு தலையும் வழங்குவதே சங்கத்தின் நோக்கமாக இருக்க வேண்டும் புத்தரின்  மரணத்திற்குப் பிறகு, அவரது சீடர்கள் ஒரு சமூகமாக  இடம் விட்டு இடம் அலைந்து, பிச்சை எடுத்து வாழ்ந்தனர்.  

சங்கம், உலகில் புத்த தர்மத்தை நிலை நாட்டுவதற்காக  தொடங்கப்பட்டது. சங்கம் மக்களை அறிவொளிக்கான பாதையில் நடப்பதற்கு ஒரு முன்மாதிரியாகத் திகழ வேண்டும். பவுத்த தேரர்கள்  பற்று, வெறுப்பு, அறியாமை, பெருமை மற்றும் பொறாமை  ஆகியவற்றிலிருந்து விடுபட வேண்டும். ஆனால் இலங்கையில் இவை பின்பற்றப் படுவதில்லை.  எல்லாம் நேர்மாறாகக் காணப்படுகிறது. மகா சங்கத்தினரே தன் முனைப்புடன் செயல்படுகின்றனர். தன்முனைப்போடு  நடந்து கொள்கின்றனர். அவர்கள் “நான்” என்ற வார்த்தையை விட்டுவிடவில்லை.

எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க அவர்களைப் பயன்படுத்திக் கொண்டிருந்த போது, அவர்கள் அவரைப்  புறக்கணித்திருக்க வேண்டும்.

இன்று ஆட்சியாளர்கள் பவுத்த பிக்குகளுக்கு சொகுசு வாகனங்களை வழங்கியுள்ளனர். அவர்களுக்கு அரசியல் நிகழ்வுகளில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இது  நாட்டின் அரசியல் அமைப்பில் மகா சங்கத்தினர்  தலையிட இடமளித்தது. அரசு எப்படி அமைய வேண்டும், எந்த வடிவத்தில்  அமைய வேண்டும் என்பதிலும் தலையிட வழிவகுத்துள்ளது.

“மக்கள் ஆன்மீகத்தை மேம்படுத்த உதவுவதே துறவிகளின் பங்கு ஆகும். கடந்த பத்து ஆண்டுகளில் பவுத்த தேரர்களின் அரசியல் ஈடுபாடு அதிகமாகிவிட்டது, நான் நினைக்கிறேன். மக்கள் இப்போது அவர்களை மதத் தலைவர்களாகப் பார்க்க வில்லை”என்று இலங்கையின் மத்திய மலைநாட்டில் உள்ள கண்டியில் வாழும்  வணக்கத்திற்குரிய  தேரர் மகாயாயே வினீதா கூறுகிறார்.

புத்தரின் கோட்பாடு மிகவும் எளிமையானது. தர்க்கரீதியானது. பகுத்தறிவோடு ஒத்துப் போவது. ஆனால் காலப் போக்கில் புத்தரின் பெயரில் அது ஒரு மதமாக உருவெடுத்து விட்டது. புத்தர் கடவுளாக்கப்பட்டு விட்டார். மேலும்,  இந்து மதத்தில் காணப்படும் சடங்குகள், சம்பிரதாயங்கள், வழிபாடுகள் பவுத்தத்திலும் புகுந்துவிட்டன. இலங்கையில் உள்ள பவுத்த தேரர்கள் உருவ வழிபாடு, பூசை செய்தல், பிரித் ஓதுதல், நூல் கட்டுதல், பிரசாதம் அளித்தல் போன்றவற்றில் ஈடுபடுகிறார்கள். 

புத்தர் இந்து மதத்தின் அடிப்படைக் கோட்பாடுகளான ஆத்மா, பிரமம், ஒரு படைப் பாளிக் கடவுள் ஆகியவற்றை நிராகரித்தார்.  கர்மா, தர்மம், மோட்சம் மற்றும் மறுபிறவி ஆகியவற்றை நிராகரித்தார்.  இந்து மதத்தில் காணப்படும் மந்திரங்கள்,  யாகங்கள்,  சாதி அமைப்பு ஆகியவற்றை நிராகரித்தார்.

மனிதர்களது நாளாந்த வாழ்வின் சிக்கல்களுக்கு நடைமுறை சாத்தியமுள்ள தீர்வுகளை பவுத்தம் போதிக்கிறது. மனக்குழப்பம், நடைமுறைக்கு சாத்தியமற்ற மனப்போக்கால் துன்பம் விளைதல், பெருவிருப்பு, மனப்பிறழ்வு போன்றவற்றின் மூலாதாரம் என்ன என்பதை பவுத்தம் கண்டறிந்துள்ளது. தியானம் செய்வதால் முறையற்ற சிந்தனையை மாற்ற முடியும்.  அன்பு, நேர்மறையான முயற்சியால், பிறர் மெச்சும்வகையில் மனதை மாற்றி, நாளாந்த வாழ்க்கையை புரட்டிப்போடமுடியும்.

புத்தர் கண்ட நான்கு வாய்மைகள் பவுத்த  சமயத்தின் அடிப்படை கோட்பாடாகும். புத்தர்  6  ஆண்டுகளாக மேற்கொண்ட தேடுதலின் முடிவில் அவர் உணர்ந்த இறுதி உண்மைகள் ஆகும்.

(1) துன்பம் (துக்கம்). மனிதர்களால் துன்பத்தைத் தவிர்க்க முடியாது. பிறப்பு, நோய், முதுமை, இறப்பு ஆகியவை மனிதருக்குத் துன்பத்தைத் தருபவை. பசி, பகை, கொலை, வெகுளி, இழப்பு, மயக்கம் போன்றவையும் துன்பம் தருபவையே.
(2) துன்ப காரணம். துன்பத்துக்கான காரணம் ஆசை அல்லது பற்று.
(3) துன்ப நீக்கம். ஆசையை விட்டுவிடுவதுவே துன்பத்தை நீக்கும் முறைமை.
(4) துன்பம் நீக்கும் வழி. எட்டு நெறிகள்: எட்டு நெறிகளும் துக்கத்தைப் போக்க உதவும் வழிமுறைகள் ஆகும்.

புத்தர்

பாலிமொழியில் இவை துக்கம், துக்க காரணம், துக்க நிவாரணம், துக்க நிவாரண மார்க்கம் என அழைக்கப்படுகிறது. துன்பத்தைப் போக்கி வீடு பேறாகிய நிர்வாண மோட்சத்தையடைவதற்குரிய வழியாது எனில், அட்டாங்க மார்க்கம் என்னும் எட்டு வித ஒழுக்கத்தை மேற்கொண்டு ஒழுகுவதாகும். அஷ்டாங்க மார்க்கமாவன:

1. நற்காட்சி (ஸ்மயக் திருஷ்டி)
2. நல்லூற்றம், அஃதாவது நற்கருத்து (ஸம்யக் சங்கல்பம்)
3. நல்வாய்மை (ஸம்யக் வாக்கு)
4. நற்செய்கை (ஸம்யக் கர்மம்)
5. நல்வாழ்க்கை (ஸம்யக் ஆஜிவம்)
6. நல்லூக்கம், அஃதாவது நன்முயற்சி (ஸம்யக் வியாயாமம்)
7. நற்கடைப்பிடி (ஸம்யக் ஸ்மிருதி)
8. நல்லமைதி (ஸம்யக் சமாதி)

இந்த அஷ்டாங்க மார்க்கத்தில் சீலம் (ஒழுக்கம்), சமாதி (தியானம்), பஞ்ஞா (ஞானம்) என்னும் மூன்றும் அடங்கும்.

பிற சமயங்கள் போலவே பவுத்த சமயத்திலும் பல கட்டுக்கதைகள், இடைச்செருக் கல்கள், சமய அனுட்டானங்கள், பிறமத கலாச்சாரக் கூறுகள் போன்றவற்றை தன்னகத்தே இணைத்துக் கொண்டு விட்டது. புத்தர் பரிநிர்வாணம் அடைந்து 3 மாதங்கள் சென்ற பின்னர் பவுத்த தேரர்கள் மகதநாட்டின் தலைநகரமான  இராஜ கிரகத்தில் கூடினார்கள். அங்கு புத்தரின் அறிவுரைகளை திருப்பி ஒப்புவித்து  ஒழுங்கு அமைத்தார்கள். அவற்றுக்கு தம்ம (அபிதம்ம) கூடை மற்றும் விநய கூடை எனப் பெயரிட்டார்கள்.  முன்னது பவுத்த கோட்பாடு பற்றியும் பின்னது தேரர்கள் அனுட்டிக்க வேண்டிய விதிகள் பற்றியும் சொல்லுகினன்றன. பின்னர்  தம்ம கூடையில் இருந்து சூத்திர கூடை  பிரித்து எடுக்கப்பட்டது.

முதிய மற்றும் இளைய தேரர்களிடையே  ஏற்பட்ட கருத்துப் பிணக்குகளை தீர்த்து வைக்க இரண்டாம் பவுத்த சங்கம், கிமு 334 இல் கூட்டப்பட்டது. பிணக்குகள் தீர்க்கப்படாததால் பவுத்த சங்கம் தேரவாதம் (முதியோர்பள்ளி) மற்றும் மகாயானம் (பெரும் வாகனம்) எனப் பிளவுபட்டன. நீண்ட காலமாக புத்தரின் போதனைகள் எழுதா மறையாகவே இருந்து வந்தன. இலங்கையை ஆண்ட வாலகம்பன் (கிபி 28 – 17) ஆட்சியிலேயே திரிபிடகம் எழுத்துரு பெற்றது.

இலங்கையில் காணப்படும் பவுத்தம் தேரவாதப் பிரிவு  என்று அழைக்கப்பட்டாலும் அதனை சிங்கள பவுத்தம் என அழைக்கும் வழக்கம் நிலைத்துவிட்டது. (Uthayan news – March 10, 2023)

About editor 2996 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply