பஞ்சாங்கம் கிரகணத்தை துல்லியமாகக் கணிப்பதாகச் சொல்வது உண்மையா?

பஞ்சாங்கம் கிரகணத்தை துல்லியமாகக் கணிப்பதாகச் சொல்வது உண்மையா?

முனைவர்.த.வி.வெங்கடேஸ்வரன்

முதுநிலை விஞ்ஞானி, விஞ்ஞான் பிரசார் அமைப்பு

2 டிசம்பர் 2022

பஞ்சாங்கம் கிரகணத்தை துல்லியமாகக் கணிக்கிறதா?

பஞ்சாங்கம் குறித்து சமீப காலங்களில் பல விவாதங்களும் கருத்துகளும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

பஞ்சாங்கத்தைப் பார்த்துதான் இஸ்ரோ ராக்கெட் ஏவுகிறது என்று ராக்கெட்ரி மாதவன் முதல் கிரகண காலங்களை கணகச்சிதமாக நம் பஞ்சாங்கங்கள் கணிக்கின்றன என்று சமூக ஊடக பதிவுகள் வரை அதைப் புகழ்ந்து பேசுகின்றனர். இது உண்மையா?

முதலில் பஞ்சாங்கம் என்றால் என்ன?

அந்தக் காலத்து நாட்காட்டி தான் பஞ்சாங்கம். பஞ்ச – அங்கம், அதாவது வாரம், திதி, நட்சத்திரம், கர்ணம், யோகம் ஆகிய ஐந்து வானியல் நிலைகளைக் கொண்டுள்ள பட்டியல்.

பஞ்சாங்கத்தின் கணிப்புகள் துல்லியமானவையா என்பதைப் புரிந்துகொள்ள முயல்வதற்கு முன்பாக நாம் திதி என்பதைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும்.

நிலவிலிருந்து பூமியின் மையத்தை நோக்கி ஒரு கோடு. சூரியனில் இருந்து பூமியின் மையத்தை நோக்கி கோடு. இந்த இரண்டு கோட்டுக்கும் இடையில் இருக்கும் கோணத்தைத்தான் திதி என்கிறார்கள்.

பூமியைச் சந்திரன் சுற்றி வரும்போது, ஒரு நேரம் சூரியனோடு சேர்ந்து ஒருபுறத்திலேயே இருக்கும். அந்த நேரத்தில் கோணம் பூஜ்ஜியமாக இருக்கும். அதுதான் அமாவாசை. சூரியனும் சந்திரனும் பூமியின் இரண்ட பக்கமும் எதிரெதிர் புறமாக, 180 டிகிரி கோணத்தில் இருப்பது பௌர்ணமி.

இதில், நிலவு நிற்காமல் பூமியை 360 டிகிரி கோணத்தில் சுற்றி வரும்போது, ஒரு நாளைக்கு 12 டிகிரி என்ற கணக்கில் முப்பது திதிகளை வரையறை செய்கிறார்கள்.

பஞ்சாங்கம் - கிரகணம்
படக்குறிப்பு,ஒரு நாளைக்கு 12 டிகிரி என்ற கணக்கில் முப்பது திதிகளை வரையறை செய்கிறார்கள்.

கிரகணம் எப்படி ஏற்படுகிறது?

அமாவாசைக்குப் பிறகு சந்திரன் வளர்பிறையில் விலகிச் செல்லும் முதல் 12 டிகிரியை “சுக்ல பட்ச பிரதமை” திதி என்கிறார்கள். அதாவது வளர்பிறை காலத்தின் முதல் நாள்.

சுக்ல என்றால் பிரகாசம் என்று பொருள். பிரதமை என்றால் முதல் என்று பொருள். இதைப் போலவே கிருஷ்ண என்றால் கருமை எனப் பொருள். அதை வைத்தே பௌர்ணமிக்கு அடுத்து வரும் தேய்பிறை திதிகள் கிருஷ்ண பட்ச திதிகள் என்றழைக்கப்படுகின்றன.

சுக்ல பட்ச பிரதமை முடிந்த பிறகு, 12 முதல் 24 டிகிரி வரை இரண்டு எனப் பொருள் தரக்கூடிய சுக்ல பட்ச ‘துவிதியை’; 24 முதல் 36 டிகிரி வரை மூன்றாவது திதியான திருதியை என்று திதிகளின் பெயர்கள் நீள்கின்றன.

இப்படியே பஞ்சமி, சஷ்டி, சப்தமி, அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரையோதசி என அமைந்து இறுதியில் பதினைந்தாவது திதியான சதுர்த்தசி வரும்.

காணொளிக் குறிப்பு,பஞ்சாங்கம் சொல்வதன் படி தான் கிரகணம் நடைபெறுகிறதா?

பதினான்கு நாட்களுக்குப் பிறகு, 168 முதல் 180 டிகிரி வரை பௌர்ணமி வரும். 180 டிகிரியில் இருந்து விலகி 192 டிகிரி வரை நிலவு இருக்கும் காலம் கிருஷ்ண பட்ச பிரதமை.

அதாவது தேய்பிறையின் முதல் நாள். தேய்பிறை வரிசையிலும் அதே திதி பெயர்கள் தான். சுக்ல என்பதற்குப் பதிலாக கிருஷ்ண என்று மட்டும் மாறும். ஆக மொத்தம் முப்பது திதிகள். ஒவ்வொரு திதிக்கும் பன்னிரண்டு பாகை.

இப்போது, பூமிக்கும் சூரியனுக்கும் நடுவே, இரண்டுக்கும் நேர்க்கோட்டில் நிலவு இருப்பதாக வைத்துக் கொள்வோம். அந்த நிலையில் பூமியிலிருந்து பார்க்கும்போது, சூரியனை நிலா மறைத்திருக்கும்.

அப்படி சூரியனுக்கு நடுவே நிலா வந்து மறைக்கும்போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இதே பூஜ்ஜிய டிகிரியில் தான் அமாவாசை ஏற்படுகிறது. ஆக அமாவாசை நாளில்தான் சூரிய கிரகணம் ஏற்படும்.

சூரியனை நெருங்கி வரும் நிலவு, முதலில் சிறிதளவுக்கு அதை மறைக்கும். அதையே கிரகணத் துவக்கம் என்கிறோம்.

கிரகணம் - பஞ்சாங்கம்

சூரியனுக்கு நட்டநடுவில் நிலா வரும்போது, மறைப்பு அதிகபட்சமாக இருக்கும். பிறகு விலகிச் செல்லச் செல்ல, சிறிது சிறிதாக கிரகணம் விலகும்.

அதிகபட்சம் கிரகணம் நடைபெறும்போது தான் பூமி-நிலா-சூரியன் மூன்றுக்குமான கோணம் பூஜ்ஜியமாக இருக்க வேண்டும் என்பதே இதன் பொருள். இதன்படி, அமாவாசை முடியும் தருணம் தான் அதிகபட்ச கிரகணமாக இருக்க வேண்டும்.

அக்டோபர் 25 சூரிய கிரகணத்தின்போது என்ன நடந்தது?

சென்னையில் அமாவாசை திதி முடியும் காலம் மாலை 4:18 என்று வாக்கியப் பஞ்சாங்கம் கூறுகிறது. திருக்கணித பஞ்சாங்கம் மாலை 4:19 மணிக்கு நிகழ்வதாகக் கூறுகிறது. இவையிரண்டுமே பிழை. சென்னையில் உச்சபட்ச சூரிய கிரகணம் மாலை 5:42 மணிக்கு நிகழ்ந்தது.

பஞ்சாங்கம் - கிரகணம்

வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி 248 நாட்களுக்கு ஒருமுறை நிலவு தன் நிலையை வானில் மீண்டும் துல்லியமாக எட்டுவதாகச் சொல்லப்படுகிறது.

ஆனால் நவீன அறிவியலின்படி 23.78 மணிநேரத்திற்கு முன்னதாகவே அந்த இடத்திற்கு நிலா வந்துவிடும். பஞ்சாங்க கணிதம் உருவான இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பிழைகள் பெரிய பாதிப்பாக இருக்கவில்லை.

ஆனால், காலப்போக்கில் சிறுதுளி பெருவெள்ளம் போல இந்தச் சிறு பிசிறுகள் ஒன்று சேர்ந்து பெரும் பிழையாக மாறிவிட்டன.

இடைக்காலத்தில் ஏற்பட்ட சமூக இறுக்கத்தின் தொடர்ச்சியாக வாக்கியக் கரணம் போன்ற நூல்களை “கடவுள் அருளிச் செய்தது” எனக் கூறி பிழை திருத்தப்படவில்லை.

இதன் தொடர்ச்சியாக இன்று பஞ்சாங்க கணிப்புக்கும் வான் பொருட்களின் மெய்யான நிலைக்கும் பெரும் வேறுபாடு உள்ளது.

பஞ்சாங்கம் - கிரகணம்

சான்றாக, ஜனவரி 14ஆம் தேதியன்று உத்தராயணம் நிகழ்வதாகக் கொண்டாடி வருகிறோம். ஆனால், டிசம்பர் 21 அல்லது 22ஆம் தேதியிலேயே உத்தராயணம் நிகழ்ந்துவிடுகிறது.

தை முதல் தேதியை மகர சங்கராந்தி, அதாவது சூரியன் மகர ராசியில் புகுவதாக பஞ்சாங்கம் கூறுகிறது. ஆனால், தற்காலத்தில் தை முதல் தேதியன்று சூரியன் தனுசு ராசியில் உள்ளது. எனவே தை 1 மகர சங்கராந்தி எனக் கொண்டாடுவதும் பிழை தான்.

பிறகு எப்படி பஞ்சாங்கத்தில் கிரகணம் தொடங்கும், முடியும் நேரமெல்லாம் சரியாக உள்ளது?

கிரகணம் போன்ற வெறும் கண்களால் எளிதில் காணக்கூடிய நிகழ்வுகள் பிழையாக இருந்தால் ஊர் மக்கள் கேலி செய்வார்கள் அல்லவா! அதனால் பஞ்சாங்கத்தில் தங்கள் கணிப்புகளை ஒதுக்கி வைத்துவிட்டு, கொல்கத்தாவில் உள்ள அறிவியல் நிறுவனமான வான்பொருள் நிலை கணிப்பு மையம் (Positional Astronomy Centre) கணிக்கும் தரவுகளை அப்படியே தங்களுடைய பதிப்பில் பிரசுரம் செய்துவிடுகிறார்கள்.

தயாரிப்பு: க. சுபகுணம், பிபிசி தமிழ்

காணொளிக் குறிப்பு,ஏலியன்கள் இருக்கிறார்களா இல்லையா? எப்படி கண்டுபிடிப்பது?
About editor 3017 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply