திருக்குறளும் தந்தை பெரியாரும்

திருக்குறளும் தந்தை பெரியாரும்

க.பஞ்சாங்கம், புதுச்சேரி-8.

January 20, 2014 

19-ஆம் நூற்றாண்டில் இரண்டாம் தமிழ் மறுமலர்ச்சி இயக்கம் வெடித்துக் கிளம்புவதற்குக் கிறித்துவப் பாதிரிமார்கள், காலனிய நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகள், ஆங்கிலக் கல்விமுறை, அக்கல்வியைக் கற்றுத் தேர்ந்த உள்நாட்டு அறிஞர்கள், பழைய ஏடுகளைப் பதிப்பித்த பெருமக்கள், அவர்கள் பதிப்பித்த நூல்கள், அரசியல் தலைவர்கள், சமயத் தலைவர்கள், எழுத்தாளர்கள், தனித்தமிழ் இயக்கம், சுயமரியாதை இயக்கம், திராவிட அரசியல் கருத்தாக்கம், இந்திய தேசிய இயக்கம், காந்தியம், புதிதாக வந்து சேர்ந்த பத்திரிக்கை ஊடகம், அச்சகத் தொழில், சாதிய எழுச்சிகள் முதலிய பல்வேறு சக்திகள் அதனதன் நோக்கில் பன்முகமாகப் பங்களிப்பு செய்துள்ளன. இவற்றுள் சுயமரியதை இயக்கமும் (1926) பின்னால் இது நீதிக்கட்சியோடு இணைந்து உருவான திராவிட இயக்கமும் (1944) குறிப்பிடத்தக்க வினைகளை ஆழமாகப் தமிழ்ப்பரப்பில் நிகழ்த்திக் காட்டியுள்ளன.

இவ்வாறு இவர்கள் வினைபுரிவதற்குப் பெரிதும் களமாக அமைந்தவை அன்றைக்குப் புதிதாக ஏடுகளிலிருந்து அச்சாக்கம் பெற்ற பழம்பெரும் தமிழ் இலக்கண இலக்கிய நூல்களே ஆகும்; அவற்றுக்குள்ளும் தொல்காப்பியம், சங்க இலக்கியம், திருக்குறள், சிலப்பதிகாரம் ஆகிய நூல்கள் இன்றியமையாத இடத்தைப் பெறுகின்றன் தமிழில், தமிழ்ப் பண்பாட்டில் மனித சமூகம் கற்றுக் கொள்ள என்ன இருக்கிறது என்று அன்று நிலவிய இழிநிலை மேற்கண்ட நூல்களின் வருகையால் அறவே துடைத்தெடுக்கப்பட்டது; இந்நூல்களைக் குறித்த புனைவுசார் உரையாடல்கள் பல்கிப் பெருகிய சூழலில்தான் தமிழ் மறுமலர்ச்சி வேகம் உற்றது. அந்நூல்களில் ஒன்றான திருக்குறள் குறித்து, 20-ஆம் நூற்றாண்டுத் தமிழ் மனப்பரப்பில் ஆழமான செல்வாக்கினைச் செலுத்திய தந்தை பெரியாரின் மொழியாடல் எவ்வாறு இருந்தது என்பதை இந்தக் கட்டுரையில் சுருக்கமாகக் காணலாம்.

காட்டுமிராண்டித்தமிழ் என்று தமிழிலக்கியங்களைக் கடுமையாகச் சாடியவர் பெரியார்; உங்கள் தமிழ் சாதியைக் கற்பிக்கும் தமிழ், உங்கள் தமிழ் ஆரியத்தைச் சுமக்கும் தமி;ழ்; உங்கள் தமிழ் கடவுளையே பாடும் தமிழ்; உங்கள் தமிழ் புராணக் குப்பைகள் நிறைந்த தமிழ்; மூடநம்பிக்கைகளைக் கொண்டாடும் தமிழ் என்று பொருள்படப் பேசியவர் பெரியார்; இராவணனாகியத் தமிழனை அரக்கனென இழிவுபடுத்தும் இராமாயணத்தை எரித்தவர் பெரியார்; தமிழறிஞர்கள் பலராலும் (அப்பாத்துரை, சாமி சிதம்பரனார்) தமிழ்ப் பண்பாட்டுப் பெருமையின் சின்னமாகப் போற்றப்பட்ட சிலப்பதிகாரத்தையே ‘ஆரியக் கற்பனை’ என்றும், ‘எரிக்க வேண்டும்’ என்றும் எழுதிய வாசுதேவ ஆச்சாரியார், சுப்பிரமணிய ஆச்சாரியார் ஆகியோரின் கட்டுரைகளைத் தனது ‘விடுதலையில்’ வெளியிட்டவர்; அதுமட்டுமல்ல தானும் சிலப்பதிகாரத்தை ஆரியத்தைப் பரப்பும் ஒரு நூலாகவே கருதியவர்; பெண்ணடிமைத்தனத்தைக் கற்பிக்கும் காவியம் என்று விமர்சித்தவர். அத்தகைய பெரியார் திருக்குறளை எவ்வாறு அணுகியுள்ளார் என்பது மிகவும் ஆர்வம் தரத்தக்க ஒரு செய்தியாகும்.

பெரியார் பேசுகிறார்! இவ்வாறு:-

நம் பண்டைத் திராவிடர் மக்களிடையே இரண்டு பெரியார்களைக் குறிப்பிட வேண்டுமானால் ஆண்களில் திருவள்ளுவரையும் பெண்களில் அவ்வையாரையும் நாம் சிறந்த அறிவாளியாகக் குறிப்பிட முடியும்.
(திருக்குறளும் பெரியாரும் (தொ), ப.5)

பெரியாரின் இந்தக் கூற்றில் அவருடைய ஆண்-பெண் சமத்துவக் கோட்பாடும் புலனாகிறது. இதேபோல் திருக்குறள் மாநாட்டில் பேசும் போது திருக்குறளைக் குறித்து தன்னுடைய ஆரிய எதிர்ப்பு நோக்கிற்கு ஏற்ப இவ்வாறு கருத்துரைக்கிறார்.

ஆரியரல்லாத இந்நாட்டு மக்கள் அனைவர்க்கும், சிறப்பாக
இந்நாட்டுப் பழங்குடிப் பெருமக்களின் திராவிடர்கள்
அனைவர்க்கும் வள்ளுவர் அருளிய திருக்குறள் ஒரு பெரிய
செல்வமேயாகும். நமது பெருமைக்கும், நெறிக்கும், நாகரிகத்துக்கும், வாழ்க்கை முறைக்கும் எடுத்துக்காட்டாக அதில் பல விவரங்களை நாம் காணலாம். திருக்குறளின் பேரால் திராவிட மக்களின் பெருமையை, திராவிட அல்லாத மக்களுக்கும் உணரச் செய்ய முடிகிறது. (மேலது, பக. 1-2)

பெரியாரின் திருக்குறள் குறித்த பார்வை அடிப்படையில் அவருடைய ஆரியம்ஓதிராவிடம் என்கின்ற இணைமுரண் சிந்தனையிலிருந்தே உருப்பெற்றுள்ளது. அதனால்தான் ஆரிய தர்மமாகிய மனுதர்மத்தை ஒழித்துக் கட்டுவதற்காகவே வள்ளுவர் திருக்குறளை எழுதியதாக அவர் கருதுகிறார்.

திருக்குறள் ஆரிய தர்மத்தை-மனுதர்மத்தை-அடியோடு கண்டிப்பதற்காகவே ஏற்பட்ட நூல் என்பதையும் நீங்கள் உணர வேண்டும். அதுவும் மக்களுக்கு வெறும் தர்மங்களை மட்டும் உபதேசிக்க எழுதப்பட்ட நூல் என்று என்னால் கொள்ள முடியவில்லை. மக்கள் நல்வாழ்க்கைக்குக் கேடாக வந்து சேர்ந்த ஆரிய அதர்மத்தை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டு ஒரு மறுப்பு நூலாகவே திருக்குறள் எழுதப்பட்டதாகவே என்னால் கருத முடிகிறது. திருக்குறள் ஆரியக் கொள்கைகளை மறுக்க அவைகளை மடியச் செய்ய அக்கொள்கைகளில் இருந்து மக்களைத் திருப்ப எழுதப்பட்ட நூல் என்றுதான் நான் கருதுகிறேன். (மேலது, பக் 5-6)

இவ்வாறு கருதுகிற பெரியார் மனுதர்மம் கற்பிக்கின்ற நால்வருண பாகுபாட்டையும் திருக்குறள் மறுத்து எழுதுவதாகப் பதிவு செய்கிறார்.

மனுதர்மம்-வருணாச்சிரம தர்மத்தை வற்புறுத்தி மக்களில் நான்கு ஜாதிகள்-பிராமணன், கூத்திரியன், வைசியன், சூத்திரன் உண்டு என்று உபதேசிக்கிறது. திருக்குறள்-மக்கள் அனைவரும் ஒரே இனந்தான் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்கிறது.
(மேலது, ப.6)

என்று ஒப்பி;ட்டு விளக்குகிறார். இவ்வாறு பல இடங்களில் மனுதர்மத்தை எதிர்த்து எழுதி மனிதர்களிடையே சமத்துவத்தைக் கற்பித்த மனிதாபிமானம் மிக்க நூல் திருக்குறள் என்பதை வலியுறுத்திக் கொண்டே போகிறார். ஆரியத்துக்கு எதிராகப் புத்தர் செய்த வேலையைத்தான் திருக்குறளும் செய்திருக்கிறது என்று மிகப்பெரிய வரலாற்றுப் போராட்டத்தோடு திருக்குறளை இணைக்கிறார். ஆரியத்திற்கு எதிரான இதன் தன்மையினாலேயே மக்களிடையே இதைப் பெருமதிப்பு பெறமுடியாமல் ஆரியர்கள் செய்துவிட்டனர் என்றும் பெரியார் கருதுகிறார். (மேலது, பக் 11-12)

ஆரியத்திற்குச் சார்பாகப் பரிமேலழகர் எழுதியுள்ள உரைக் குறிப்புக்களைப் பெரியார் மறுத்து எழுதும் போதும் ஆரிய எதிர்ப்பு அணுகுமுறையே வெளிப்படுகிறது. இது குறித்து இவ்வாறு எழுதுகிறார்.

உதாரணமாக திருக்குறளுக்கு உரை எழுதப் புகுந்த பரிமேலழகர் திருக்குறளில் ‘அறம்’ என்று இருந்தால் அதற்கு ‘மனுதர்மம்’ என்றுதான் பொருட்படுத்தி உரை எழுதியிருக்கின்றார். அதையறிந்து சில பண்டிதர்கள் இன்றும் அவ்வுரையைப் பெருமைப்படுத்தி வருவது வருந்ததக்கது. நல்ல பண்டிதர்களைக் கொண்டு திருக்குறள் கருத்துக்களை அமைத்து நல்ல பாடப் புத்தகங்களை எழுதி அதைப்படிக்கச் செய்தால் இனறுள்ள பல கஷ்டங்கள் நமக்கிருக்காது. பல கஷ்டங்கள் நீங்கும் என்பதோடு நமக்கு பல பலன்களும் ஏற்படும். திருக்குறளில் ஒரு அரசன், ஒரு விவசாயி, ஒரு வியாபாரி, ஒரு துறவி, ஒரு பொதுநலத் தொண்டர், ஒரு மந்திரி, ஒரு காதலன், ஒரு காதலி, ஒரு தலைவன், ஒரு தலைவி சகலருக்கும் அறிவுரை வழங்கப்பட்டிருக்கிறது. அவற்றில் ஒன்றில்கூட மூடநம்பிக்கை புகுத்தப்பட்டிருக்கவில்லை. இந்தக் காலத்தில் மக்களின் தாட்சன்யத்திற்காகக்கூட ஆசிரியர் எதையும் கண்டிக்காமல் விட்டுவிடவில்லை.(மேலது ப.12)

ழூ பெரியாருக்குத் திருக்குறள் மிகவும் அணுக்கமான ஒன்றாக ஆகியதற்கு மிக இன்றியமையாத ஒரு காரணம் வள்ளுவர் மதம் கடந்து சிந்திப்பவராகவும் எந்த ஒரு கடவுளையும் பாடாதவராகவும் விளங்குகிறார் என்று அவர் கருதியதால்தான். தன் வாழ்நாள் முழுமையையும் கடவுள் மறுப்புக் கொள்கைக்காக அர்ப்பணம் செய்த பெரியாருக்குத் திருக்குறளின் இந்த அணுகுமுறை பெரிதும் ஆர்வம் தரத்தக்க ஒன்றாக இருந்ததில் வியப்பொன்றுமில்லை. திருக்குறளில் இடம்பெற்றுள்ள கடவுள் வாழ்த்தைக் குறித்து பெரியார் தன்னுடைய கருத்தை இவ்வாறு முன்வைக்கிறார்.

சிலர் கூறுகின்றனர் ‘குறளில் முதல் அத்தியாயத்தில், இருக்கும் கடவுள் வாழ்த்துப் பாக்கள் இடைச்செருகல் என்று, சிலர் அப்படியெல்லாம் இல்லை, கடவுள் வாழ்த்து வள்ளுவர் பாடியதுதான்’ என்று கூறுகின்றனர். நம்மைப் பொறுத்த வரையில் கடவுள் வாழ்த்துப் பாக்கள் வள்ளுவரே பாடியதாக வைத்துக் கொண்டாலும் ஒன்றும் கெட்டுப் போய்விடவில்லை. இன்றைக்கு நமக்கு இருக்கின்ற கடவுள்களைப் போன்ற கடவுளுக்கா வள்ளுவர் வாழ்த்து கூறினார்? இல்லை கடவுள் வாழ்த்துக் கூறப்படும் பத்துப்பாட்டிலும் ஒரு பாட்டிலாவது வள்ளுவர், ‘கடவுள்’ என்ற சொல்லைக் கையாளவில்லை. திராவிட மக்களுக்கு ‘எல்லாம் வல்ல’ ‘எங்கும் நிறைந்த’ என்பதாகக் கடவுளை குறிக்க ‘கடவுள் என்ற சொல்லைத் தவிர வேறு சொல் கிடையவே கிடையாது.

கடவுள் வாழ்த்து என்பது கேலிக்குரியது. மிகவும் தவறான சங்கதியாகும். ‘சர்வ வல்லமையும்’ படைத்த நம்மையெல்லாம் காக்கும் கடவுளுக்கு ‘கடவுள் வாழ்த்து’ என்று நாம் போய் வாழ்த்துக் கூறுவதா? வள்ளுவரை நாம் மாபெரும் அறிவாளி என்று கூறுகின்றோம். அதற்குத் தக்க ஆதாரம் உள்ளது. அவர் போய் கடவுள் வாழ்த்துப் பாடல் வாசிப்பாரா? வள்ளுவர் கடவுள் வாழ்த்துப் பாடி இருப்பது எல்லாம் ஒவ்வொரு நற்குணங்களை வைத்து, அப்படி நடக்க வேண்டும் என்பதற்காகவே பத்துப்பாட்டிலும் பத்து விதமான குணங்களைக் கூறுகின்றார்.

பத்துப்பாட்டிலும் நற்குணங்களைப் போதித்து உள்ளார் என்றால் என்ன பொருள்? மனிதன் எப்படி இருக்க வேண்டும் என்பதைக் காட்டுவதற்காகத்தான் பத்துப் பாடல்களிலும் நற்குணக் கருத்துக்களை வைத்து வள்ளுவர் கடவுள் வாழ்த்து கூறியிருக்கின்றார் (பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள், ப.1262)

இதே அடிப்படையில் ஒவ்வொரு குறளுக்கும் விளக்கம் அளிக்கிறார்.

ழூ தந்தை பெரியார் தமிழ்ச் சமூகத்தில் மண்டிக்கிடந்த மூடநம்பிக்கைகளுக்கு எதிராக மூர்க்கமாகச் சமர்புரிந்தவராவார்; எனவே திருக்குறளில் இடம் பெற்றுள்ள ‘ஊழ்’ பற்றிய நம்பிக்கை குறித்தும் அவர் தன்னுடைய கொள்கைக்கு ஏற்பத் தன் கால அறிவியல் சமூகம் வழங்கிய பகுத்தறிவு என்னும் பகலொளி கொண்டு ஆழமான விளக்கத்தை முன்வைக்கிறார்; பரிமேலழகர்,

“ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான்முந் துறும்”

என்ற குறளுக்கு, ஊழே வலிமைமிக்கது; அதுவே எல்லாவற்றிலும் முன்னிற்கும் என விளக்குவர்; மனிதனின் புரிதலுக்கு அப்பாற் வெளியே இருந்து இயக்கும் பேராற்றலாகப் புனைவர்; ஆனால் தந்தை பெரியார், இவ்வாறு எழுதுகிறார்:-

விதி என்பதை வள்ளுவர் நன்றாக விளக்கிக் காட்டியுள்ளார். உனது அறிவைக் கொண்டு உன் முயற்சியின் படி நட! மக்களுக்கு நன்மை செய்! அறத்தை வளர்க்க! என்று கூறியுள்ளாரே தவிர உன் விதிப்படி-கடவுள் இஷ்டப்படி நீ நட! என்பதாக எந்த இடத்திலும் கூறவே இல்லை. குறளில் ‘ஊழ்’ என்ற தலைப்புக்குப் பொருள் கூறவந்த புலவர்கள், அவரின் கருத்துக்கு மாறுபாடாகவே கூறியிருக்கிறார்கள். மனிதனுடைய சரீர அமைப்பின் பயனாய் ஏற்படும் சில தனிப்பட்ட குணங்களுக்குத் தான் ஊழ் என்ற பெயரை அவர் கொடுத்து இருக்கின்றார். ஊழ் என்பது பிறவிக் குணம், இயற்கைக் குணம், மனித சுபாவத்தின் தனிப்பட்ட குணம் என்கின்ற கருத்துக்களேயாகும். (திருக்குறளும் பெரியாரும், ப.35)

மேலும் மற்றொரு இடத்திலும் இதை விரிவாக விளக்குகிறார்:-

இரண்டு பேர் உடன்பிறந்த அண்ணன் தம்பி. ஒருவன் சாதாரண காரியங்களுக்குக்கூடச் சிரிப்பான். ஒருவர் பெரிய ஆச்சிரியமான காரியங்களுக்குக்கூடச் சிரிப்பதில்லை. ஒருவன் பனிக்கட்டியில் கால் வைத்தால் ஜலதோஷம், ஒருவனுக்கு ஒன்றுமே ஆகாது. ஒருவனுக்கு 60-ல் கண்பார்வை கெடும், ஒருவனுக்கு 40-ல் பார்வை கெடும். இரண்டு பேரும் உடன்பிறந்த சகோதரனாக இருந்து ஏன் இந்தப் பாகுபாடு… உடற் அமைப்புதான் காரணமே ஒழிய கடவுளும் இல்லை, போன ஜென்ம பாவமும் இல்லை… மனிதனுடைய உடம்பில் உள்ள சில மாறுபாடுகளே, அவனது சில தனிப்பட்ட குணங்களுக்குக் காரணமாகிறதேயன்றி, புறம்பான விதியோ? கடவுளோ? காரணம் அல்ல… இவ்விதப் பிறவிக் குணங்களில் சிலவற்றைத் திருத்தலாம். ஆனால் பெரும்பாலானவற்றைத் திருத்த முடியாது. அவற்றைத்தான் ‘ஊழ்’ என்றும், ஊழ் முந்தும் என்றும் வள்ளுவர் குறிப்பிடுகின்றார். ஆகவே இவ்வித இயற்கைக் குணங்களைக் கர்மம், முற்பிறவியின் பயன் என்பதெல்லாம் மதவாதிகளுடைய வீண் கற்பனைகளேயாகும். (மேலது, ப.59)

தன்னுடைய வாதத்திற்கு வள்ளுவரின்

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்

என்ற குறளையும்

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்

என்ற குறளையும் துணையாக அழைத்துக் கொள்ளுகிறார்.

ழூ பெரியார் இவ்வாறு வள்ளுவரைக் கொண்டாடினாலும் தனது சமகால இயக்க வாழ்விற்கு ஏற்றக் கருத்தாக்கங்களுக்கு எதிராகக் காணக்கிடக்கும் திருக்குறள் சிந்தனைகளையும் சுட்டிக்காட்டத் தவறவில்லை; வள்ளுவரை எல்லாம் அறிந்த தெய்வப் புலவராகத் தூக்கி வைத்துக் கொண்டாடும் கண்மூடித் தனங்களுக்கு அவர் இடம் கொடுக்கவில்லை.

இன்றுள்ள மனிதத் தன்மைக்கு மேற்பட்ட தெய்வத் தன்மை என்பதாக ஒரு தன்மை மக்களுக்கு இருந்திருக்கிறதென்பதையே என்னால் ஒப்புக்கொள்ள முடியாததால் நான் திருக்குறள் ஆசிரியர்க்கு அத்தகைய தெய்வத்தன்மையைக் கொடுக்க முடியவில்லை. (மேலது, ப.3)

என்பது பெரியார் கூற்று. தொடர்ந்து தனது பகுத்தறிவுப் பார்வையை இப்படிப் பதிவு செய்கிறார்:-

மாமிச உணவு உண்பதை வள்ளுவர் மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறார். கொல்லாமையின் உயர்வு குறித்து வெகுவாக எழுதியுள்ளார். குறளிலேயே அப்படிச் சொல்லப்பட்டு உள்ளதே என்பதற்காக நான் மாமிச உணவு உட்கொள்ளாமல் இருக்க முடியுமா? நான் குறள்தான் ஆதாரம் என்று சொல்லவில்லை. குறளில் இருந்து மக்களுக்கு வேண்டியதை ஏற்றுக்கொள்ளுங்கள். தேவையில்லாததைத் தள்ளிவிடுங்கள் என்றுதான் சொல்கிறேன். குறளில் ஏதோ சில குறைகள் இருக்கலாம்; இருக்க முடியும். ஏனென்றால் அது 1950 மாடல் அல்ல. திருவள்ளுவர் திரிகாலம் உணர்ந்த ஞானியென்றோ நாம் கொள்ளவில்லை. 2000 வருடத்திற்கு முன்பு ஒருவர் எவ்வளவு அறிவாளியாக இருந்தாலும் எலக்ட்ரிக் லைட், ஒலி பெருக்கி, மோட்டார் முதலியவைகளைக் கண்டிருப்பானா? மதவாதிகள் வேண்டுமானால், ‘எல்லாக் காலத்தையும் முக்காலத்தையும் உணர்ந்த மகான் இவர்’ என்று பலரை விளம்பரப்படுத்தலாம். ஆனால், அது பகுத்தறிவுக்கு ஒவ்வாது. திருவள்ளுவர் மகான் என்றோ அவதார புருஷன் என்றோ ஒத்துக்கொள்ள மாட்டேன். திருவள்ளுவர் நல்ல அறிவாளி, ஆராய்ச்சிக்காரர். மக்களிடம் பரவி இருந்த மூட எண்ணங்களோடு போராடிய அறிஞர் என்ற அளவில்தான் வள்ளுவரை ஏற்றுக்கொள்ள முடியும். 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வள்ளுவர் சொன்னவை எல்லாம் அப்படியே இன்றைக்கு ஏற்றதாக இருக்க முடியுமா? இன்றைய நிலைக்கு நான் பேசும் கொள்கை சரி; என் திட்டங்கள் சரி. எனக்குப் பிறகும் இன்னும் 100, 200, 1000 வருடங்களுக்குப் பிறகும் என் கொள்கைகள்-நான் வகுத்த திட்டங்கள் கொஞ்சம்கூட மாற்றப்படாமல் அப்படியே இருக்க வேண்டும் என்பது என்ன நியாயம்? (மேலது, பக் 15-16)

பெரியாரின் இத்தகைய பகுத்தறிவுப் பார்வைதான் பெண்களைக் குறித்த வள்ளுவரின் கருத்தாக்கம் பற்றிய அணுகுமுறையில் வெளிப்படுகிறது; ஆண்-பெண் அதிகார உறவில், பெரிய மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில் பெண்ணுரிமை, பெண்கல்வி குறித்தெல்லாம் இயக்கப+ர்வமாக இயங்கியவர் பெரியார் என்பதால் திருக்குறளில் ஆண்-பெண் சமத்துவம் இல்லை எனக் கருதுகிறார்.

வள்ளுவரின் நிலைமை சற்று மயக்கத்தையே தருவதாக உள்ளது. குறளில் வாழ்க்கைத்துணை நலம், பெண் வழிச்சேறல் என்பதைப் பற்றிச் சொல்லவந்த வள்ளுவர் சில தனி இடங்களிலும், பெண்கள் விஷயத்திலும் மிக்க அடிமைத்தன்மை புகுத்தபட்டதாகவே எண்ணத்தோன்றுகிறது. (மேலது, ப.45)

மேலும்,

‘தெய்வந் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை’

என்ற குறள் குறித்து இவ்வாறு எழுதுகிறார்:-

தெய்வத்தைத் தொழாமல் தன் கொழுநனாகிய தலைவனைத் தொழுகின்றவள்-மழையைப் பெய்யென்றால் பெய்யும் என்றும் தன்னைக் கொண்டவன் என்றும்-இம்மாதிரியான பல அடிமைக் கருத்துக்களைக் கொண்ட வாசகங்கள் காணப்படுகின்றன. இவ்விஷயத்தில் மாறுபட்ட அபிப்ராயம் கொள்வோர் வாழ்க்கைத்துணை நலம், பெண்வழிச்சேறல் என்ற இந்த இரண்டு அத்தியாயமும் குற்றமற்றவை என்று யார் வந்து எவ்வளவு தூரம் எடுத்து வாதிட்டாலும் கடைசியாக வள்ளுவர் ஓர் ஆணாக இருந்திராமல் பெண்ணாக இருந்து குறளை எழுதியிருப்பாரே ஆனால் இந்த மாதரிக் கருத்துக்களைக் காட்டியிருப்பாரா என்பதையாவது கவனிக்கும்படி வேண்டிக் கொள்கிறேன். (மேலது,ப.46)

இதுபோலவே,

‘பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மை யுண்டாகப் பெறின்;’

என்ற கற்பு குறித்த வள்ளுவரின் பார்வையையும் இப்படி மதிப்பிடுகிறார்:-

கற்பு என்பதற்குப் பதிவிரதம் என்று எழுதிவிட்டதன் பலனாலும், பெண்களைவிட ஆண்கள் செல்வம், வருவாய், உடல்வலிமை கொண்டவர்களாக ஆக்கப்பட்டு விட்டதாலும், பெண்கள் அடிமையாவதற்கும் புருஷர்கள் மூர்க்கர்களாகிக் கற்பு என்பது தங்களுக்கு இல்லை என்று நினைப்பதற்கும் அனுகூலம் ஏற்பட்டதே தவிர வேறில்லை. (மேலது, ப.47)

இறுதியாக வள்ளுவர் பிறப்பைக் குறித்தும் நிலவுகின்ற கதைகளையும் ஆரியச் சூழ்ச்சியின் வடிவமாகவே காண்கிறார்:-

இராமாயணத்தில் வரும் கதாநாயகன் இராமனைக் கடவுளாக பாவித்த ஆரியர்கள், திருவள்ளுவரைப் பற்றிய புகழினைப் பொறுக்காது அவரைப் பற்றிய கதையைக் கட்டிவிட்டார்கள். அதாவது அவரின் பிறப்பு ஓர் இழிவு என்று கூறிவந்தனர். வள்ளுவரின் தாயை ஒரு விபச்சாரியாகக் கற்பனை செய்துவிட்டனர். (மேலது, ப.21)

இவ்வாறு தந்தை பெரியாரின் பார்வையும் மொழியாடலும் தமிழ் மறுமலர்ச்சி காலத்திற்கேற்றத் தன் மேம்பாட்டுக் கருத்தாக்கத்தைத் திருக்குறள் மூலமாக வடிவமைக்கப் பெரிதும் பயன்பட்டுள்ளன என அறியமுடிகிறது.

பயன்பட்ட நூல்கள்

1. ஆனைமுத்து.வே, ஈ.வே.ரா.சிந்தனைகள், சிந்தனையாளர் கழகம் வெளியீடு, திருச்சி.

2. திருக்குறளும் பெரியாரும் (தொ) பெரியார் சுயமரியாதை பிரசார நிறுவன வெளியீடு,

About editor 3017 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply