அரிட்டாபட்டி: தமிழ்நாட்டின் முதல் பல்லுயிர் பாரம்பரிய தலத்தின் 2,000 ஆண்டு கால வரலாற்று பதிவுகள்
எழுதியவர்,விக்னேஷ் அ
பிபிசி தமிழ்
மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்துக்கு உள்பட்ட அரிட்டாபட்டி மற்றும் மதுரை கிழக்கு வட்டத்துக்கு உள்பட்ட மீனாட்சிபுரம் ஆகிய கிராமங்களில் இருக்கும் 193.215 ஹெக்டேர் பரப்பளவுள்ள பகுதிகளை பல்லுயிர் பாரம்பரிய தலமாக தமிழ்நாடு அரசு நவம்பர் 22ஆம் தேதி அறிவித்துள்ளது.
இதுவே தமிழ்நாட்டின் முதல் பல்லுயிர் பாரம்பரிய தலம் ஆகும். ஏழு சிறிய குன்றுகள் இந்தத் தலத்துக்குள் அடங்குகின்றன.
பல்லுயிர் பெருக்கம் நிறைந்துள்ளதுடன் வரலாற்று முக்கியத்துவமும் உள்ள அரிட்டாபட்டி பகுதியில் உள்ள மலைக்குன்றுகள் 250 பறவை இனங்களுக்கு வாழ்விடமாக உள்ளன. தனித்துவம் மிக்க இந்த மலைப்பரப்பு 72 ஏரிகள், 200 இயற்கை நீரூற்றுக் குளங்கள், மற்றும் மூன்று தடுப்பணைகளுக்கு நீராதாரமாக விளங்குகிறது.
பல பெருங்கற்கால அமைப்புகள் உள்ள இப்பகுதியில், 2,200 ஆண்டுகள் பழமையான தமிழி எழுத்துக் கல்வெட்டுகள், சமணர் படுக்கைகள் மற்றும் குடைவரை கோவில்கள் ஆகியவையும் உள்ளன என்று தமிழ்நாடு அரசின் அரசாணை கூறுகிறது.
ஆத்திகம் முதல் நாத்திகம் வரை: கொள்கைகள் ஒன்றாகப் பயணிக்கும் தமிழகம் 20 ஆகஸ்ட் 2020
தமிழ் ஏன் உலகச் செம்மொழிகளில் ஒன்று? அதன் சிறப்பும் தொன்மையும் என்ன? #தமிழர்_பெருமை2 நவம்பர் 2022
காசி தமிழ் சங்கமம்: தமிழ்நாட்டுக்கும் காசிக்கும் இருக்கும் தொடர்பு குறித்து இலக்கியங்கள் சொல்வது என்ன? 20 நவம்பர் 2022
அரிட்டாபட்டிக்கும் இலங்கைக்கும் தொடர்பு உள்ளதா?
‘பௌத்தமும் தமிழும்’, ‘சமணமும் தமிழும்’ உள்ளிட்ட தமிழின் குறிப்பிடத்தகுந்த வரலாற்று நூல்களை எழுதியவர் மயிலை சீனி. வேங்கடசாமி. இவர் எழுதிய ‘பௌத்தமும் தமிழும்’ நூலில் அரிட்டாபட்டி குறித்து குறிப்பிட்டுள்ளார்.
”பாண்டிய நாட்டில் மதுரை ஜில்லாவில் சில குகைகள் காணப்படுகின்றன. இக்குகைகளில் பிக்குகள் படுத்து உறங்குவதற்கான பாறையில் செதுக்கி அமைக்கப்பட்ட படுக்கைகளும் அப்படுக்கையின் கீழ் சில எழுத்துகளும் காணப்படுகின்றன. இக்கற்படுக்கைகளின் அமைப்பு முதலியவை இலங்கை தீவில் பௌத்த துறவிகள் தங்குவதற்காக பண்டைக் காலத்தில் அமைக்கப்பட்ட குகையில் உள்ள படுக்கைகள் முதலியவற்றின் அமைப்பை ஒத்திருக்கின்றன.
பௌத்த துறவிகள் ஊருக்குள் வசிக்கக் கூடாது என்பது அம்மதக் கொள்கையாதலால் அவர்கள் வசிப்பதற்காக மலைப் பாறைகளில் குகைகள் அமைப்பது பண்டைக் காலத்து வழக்கம்.
இலங்கையிலும் பாண்டி நாட்டிலும் காணப்படும் இந்தக் குகைகளின் அமைப்பைக் கொண்டு இவை பௌத்த துறவிகள் தங்குவதற்காக அமைக்கப்பட்டவை என்றும் இப்பாண்டி நாட்டு குகைகளில் காணப்படும் எழுத்துகளைக் கொண்டு இவை கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் ஆராய்ச்சி வல்லவர் கூறுகின்றனர். இவ்வாறு காணப்படும் பாண்டி நாட்டு குகைகளில் ஒன்று அரிட்டாபட்டி எனும் கிராமத்துக்கு அருகில் இருக்கின்றது,” என்று அந்நூலில் சீனி. வேங்கடசாமி எழுதியுள்ளார்.
அரிட்டாபட்டி என்ற பெயர் எப்படி வந்தது?
”அரிட்டாபட்டி என்னும் பெயர் பௌத்த மதத்தை பரப்ப மகேந்திரருக்கு உதவியாய் இருந்த அரிட்டர் எனும் பிக்குவை நினைவூட்டுகிறது. இந்த அரிட்டர் எனும் பௌத்த முனிவர் இங்குள்ள குகையில் தமது சீடருடன் வாழ்ந்து இருக்கக்கூடும் என்றும், ஆனது பற்றியே குகைக்கருகில் உள்ள சிற்றூர் அரிட்டாபட்டி என்று வழங்கலாயிற்று என்றும் கூறுவர். மகாவம்சம் என்னும் நூல் மகா அரிட்டர் என்பவர் மகிந்தருடன் சேர்ந்து பௌத்த மதத்தை பரப்பினார் என்று சொல்வதை பாண்டிய நாட்டில் உள்ள ‘அரிட்டாபட்டி’ எனும் பெயரும் அங்குள்ள குகைகளும் வலியுறுத்துகின்றன,” என்றும் அவர் தமது நூலில் குறிப்பிட்டுள்ளார்.
”இந்த மகிந்தர் (மகேந்திரர்) என்பவர் அசோகச் சக்ரவர்த்தியின் மகனார் என்று இலங்கை நூல்கள் கூறுகின்றன. இந்தியாவில் உள்ள நூல்கள் அசோக மன்னருடைய தம்பியார் என்று கூறுகின்றன. மகனார் ஆயினும் ஆகுக; தம்பியார் ஆயினும் ஆகுக. இவர் அசோக மன்னருடைய உறவினர் என்பது மட்டும் உறுதி,” என்றும் அரிட்டாபட்டி பற்றிய தகவல்கள் உள்ள பக்கத்தில் அடிக்குறிப்பாக எழுதியுள்ளார் சீனி. வேங்கடசாமி.
ஆனால், அரிட்டாபட்டியில் கிடைத்த தொல்லியல் ஆதாரங்கள் எதுவும் இந்தக் கூற்றுடன் ஒத்துப்போகவில்லை. அப்படியானால் அரிட்டாபட்டியில் தழைத்தது பௌத்தமா சமணமா என்பதை அறிய மேற்கொண்டு படியுங்கள்.
பௌத்தர் படுக்கைகளா, சமணர் படுக்கைகளா?
இந்த நூலில் அரிட்டாபட்டி குன்றுகளில் உள்ள படுக்கைகள் பௌத்த துறவிகள் தங்குவதற்காக அமைக்கப்பட்டவை என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், சமீபத்தில் வெளியிடப்பட்ட தமிழ்நாடு அரசின் அரசாணை உள்பட பல ஆவணங்களில் இவை ‘சமணர் படுக்கைகள்’ என்றே குறிப்பிடப்படுகின்றன. அப்படியானால் அரிட்டாபட்டியில் இருப்பவை பௌத்தர் படுக்கைகளா, சமணர் படுக்கைகளா?
‘பௌத்தமும் தமிழும்’ நூலை எழுதிய சீனி. வேங்கடசாமி அரிட்டாபட்டிக்கு நேரில் வந்து பார்வையிட்டு மேற்கண்டவாறு நூலில் எழுதினாரா என்று தெரியவில்லை என்று கூறும் தொல்லியல் அறிஞர் சொ. சாந்தலிங்கம், கி.மு. 3ஆம் நூற்றாண்டு தொடங்கி கி.பி 17ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தைச் சேர்ந்த தொல்லியல் ஆதாரங்கள் அரிட்டாபட்டியில் சமணம் மற்றும் சைவம் செழித்து இருந்ததையே காட்டுகின்றன என்கிறார்.
1971இல் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கல்வெட்டு ‘நெல்வெலி செழியன் அதினன் ஒலியன் கொடுப்பித்த நல்முலாகை’ (திருநெல்வேலியைச் சேர்ந்த செழியன் அதினன் ஒலியன் கொடுப்பித்த குகை) என்றும் , 2004இல் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று ‘இலஞ்சி இளம்பேராதன் கொடுப்பித்த நல்முலாகை’ (இலஞ்சியைச் சேர்ந்த இளம்பேராதன் கொடுப்பித்த நல்முலாகை) என்றும் குறிப்பிடுகின்றன. இவை இரண்டுமே இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. இவை இரண்டுமே அரிட்டாபட்டியில் உள்ள குகைகள் சமணர் படுக்கைகள் என்பதை நிரூபிக்கும் வகையில் உள்ளன என்கிறார் சாந்தலிங்கம்.
”திருப்பினையன் மலை
பொற்கோட்டு காரணத்தார் பேரால்
அச்சணந்தி செய்வித்த திருமேனி
பாதிரிக்குடியார் ரட்சை”
என்று குறிப்பிடும் 10ஆம் நூற்றாண்டு வட்டெழுத்து கல்வெட்டு ஒன்று அரிட்டாபட்டி மலைப்பாறையில் உள்ள கல் சிற்பத்தின் கீழ் உள்ளது.
அச்சணந்தி முனிவர் 9ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சமணத் துறவி. இவர் மதுரையைச் சுற்றி சமணம் இருந்த இடங்களுக்குச் சென்று அந்த மதத்தை மறுசீரமைப்பு செய்து மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர். பாதிரிக்குடி என்பது அரிட்டாபட்டியின் பழைய பெயர் என்கிறார் சாந்தலிங்கம்.
- மலேசியாவுக்கு மருது சகோதரர்களின் வாரிசு நாடு கடத்தப்பட்ட வரலாறு – அதிர்ச்சிக்குறிப்புகள்6 நவம்பர் 2022
- தமிழர்கள் இந்துக்கள் இல்லையா? – பொன்னியின் செல்வன் படத்தால் உண்டான விவாதம்8 அக்டோபர் 2022
- திருவள்ளுவரின் உருவம் உருவானது எப்படி – விரிவான தகவல்26 ஆகஸ்ட் 2022
அரிட்டாபட்டியில் உள்ள வயல்வெளிகளில் ஒரு சிவன் கோவில் 13ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருந்தது. அதன் அடித்தளம் மட்டுமே இப்போது உள்ளது. அதில் விக்கிரம பாண்டியன் காலத்து கல்வெட்டு உள்ளது. ‘விக்கிரம பாண்டியன் பெருந்தெரு’ என்று அது குறிப்பிடப்பட்டுள்ளது. ‘பெருந்தெரு’ என்பது ஒரு சந்தைப்பகுதி. சமணம் செழித்த இடங்களிலெல்லாம் வணிகர்கள் இருப்பார்கள். அதனால் அப்பகுதி ஒரு பெருந்தெருவாகச் செயல்பட்டது என்று பார்க்கலாம் என்கிறார் சாந்தலிங்கம்.
‘அரிட்டநேமி’ என்று ஒரு சமண முனிவர் இருந்தார். அவர் மகாபாரத கண்ணனுக்கு உடன்பிறந்தவர் என்று சொல்லப்படுவதுண்டு. எனவே அவர் கி.மு காலத்தைச் சேர்ந்தவர் என்று கொள்ளலாம். அவர் வாழ்ந்ததால் இந்த ஊருக்கு ‘அரிட்டாபட்டி’ என்ற பெயர் வந்திருக்கலாம் என்று கூறும் தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அதற்கான தொல்லியல் ஆதாரங்களை சமீபத்தில் தங்கள் பாண்டிய நாட்டு வரலாற்று மையத்தின் குழுவினர் கண்டுபிடித்ததாகக் கூறுகிறார்.
‘அரிட்டநேமி படாரர் எனும் சமணத் துறவி 30-40 நாட்கள் சல்லேகனை விரதம் இருந்து உயிர் நீத்தார்’ என்ற தகவலைச் சொல்லும் கல்வெட்டு திருப்பரங்குன்றத்தில் கிடைத்துள்ளது. இது முதுமையடைந்த காலத்தில் யாருக்கும் இன்னல் தராமல் இருக்க விரும்பும், சமணர்களின் வழக்கம்.
‘பதுநாள் நோற்ற அரிட்டநேமி படாரர் மிசிதிகை இது’ எனும் கிரந்த கல்வெட்டு திருப்பரங்குன்றத்தில் உள்ளது. இவரின் பெயரையொட்டிகூட பாதிரிக்குடி எனும் ஊருக்கு அரிட்டாபட்டி என்ற பெயர் வந்திருக்கலாம் என்று சாந்தலிங்கம் தெரிவித்தார்.
8ஆம் நூற்றாண்டு சிவன் கோவில்
அரிட்டாபட்டி குன்றில் சமணப் படுக்கைகள் மட்டுமல்லாது ஒரு குடைவரை சிவன் கோவிலும் உள்ளது. குடைவரை கோவில் என்பது ஏற்கனவே இருக்கும் பாறையைக் குடைந்து உருவாக்கப்பட்ட கோவிலாகும். இக்கோவிலின் உள்ளே சிவ லிங்கமும், வெளியே லகுலீசர் சிற்பமும், தூரத்தில் சிவன் சிலை ஒன்றும் விநாயகர் சிலை ஒன்றும் உள்ளன. இது எட்டாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது. மனித உருவில், சைவத் துறவியாக சிவன் வந்ததே லகுலீசர் எனப்படுகிறது. இது தமிழ்நாட்டில் மிகவும் அரிதானது. இதை யார் உருவாக்கினார்கள் என்று தெரியாது. ஆனால் இந்தக் கோவில் வடிவமைப்பை வைத்து அது எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது. இதேபோல அரிட்டாபட்டி வயல்வெளியில் உள்ள 13ஆம் நூற்றாண்டு சிவன் கோவிலும் சைவ மதம் அந்தப் பகுதியில் தழைத்திருந்ததன் சான்றாக உள்ளது.
அரிட்டாபட்டி மலை மீது ஒலித்த முரசு
அரிட்டாபட்டி குறித்து இன்னொரு முக்கிய வரலாறும் உண்டு என சாந்தலிங்கம் பிபிசி தமிழிடம் பகிர்ந்துகொண்டார்.
17ஆம் நூற்றாண்டில் திருமலை நாயக்கர் அரிட்டாபட்டி மீது புழுதி பறக்க படையெடுத்து வந்தபோது, மலைக்குன்றின் மீது நின்றிருந்த ஒருவர் முரசறைந்து எச்சரித்ததால், அவ்வூர் மக்கள் தங்கள் உடைமைகள் மற்றும் கால்நடைகளை பிடித்துக்கொண்டு தப்பித்துவிடுகின்றனர்.
இதற்கான காரணத்தை அறிந்த திருமலை நாயக்கர், அடுத்த முறை படையெடுத்து வந்தபோது எச்சரிக்கை விடுத்த நபர் மேலே இருக்கும் முரசு மீது ஏறிய ஏணியை எடுக்குமாறு தமது படையினருக்கு உத்தரவிடுகிறார்.
அதனால் கீழே இறங்க முடியாத அந்த நபர் பட்டினியால் இறந்துவிடுகிறார். அந்த குடும்பத்தினர் தாங்கள் வருவாய் இழந்ததாக திருமலை நாயக்க மன்னரிடம் முறையிடுகின்றனர். இதனால் பிறப்பு, திருமணம், இறப்பு போன்ற நல்லது – கெட்டது நடந்த வீடுகளில் சென்று அக்குடும்பத்தினர் பணம் வாங்கிக்கொள்ள அனுமதியளிக்கும் செப்புப் பட்டயம் ஒன்றை வழங்கினார் என்பதற்கான வரலாற்று ஆதாரங்களும் உள்ளன.
கி.மு 3ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 17ஆம் நூற்றாண்டு வரையிலான தொடர்ச்சியான, ஆவணப்படுத்தப்பட்ட வரலாறு உள்ள அரிட்டாபட்டி பகுதி தற்போது தமிழ்நாட்டின் முதல் பல்லுயிர் பாரம்பரிய தலம் ஆகியுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.