மநு தர்மம்

சமூகத்தை ஆட்டிப் படைத்த மனுதர்மம்!

தோழர் அருணன் எழுதிய ‘தமிழகத்தில் – சமூக சீர்திருத்தம்

இரு நூற்றாண்டு வரலாறு’ நூலிலிருந்து

வைசியர்கள் சூத்திரர்கள் சண்டாளர்கள் ஆகியோர் இடங்கை, வலங்கை  என  இரு பெரும் பிரிவுகளாகப் மோதினர்

புராதன பொதுவுடமைச் சமுதாயமானது தனது உள் பலவீனத்தால் சிதைந்தபோது உலகில் அடிமைச் சமுதாய அமைப்பு எழுந்தது. இந்தியாவிலும் எழுந்தது. இங்கே வர்ணாஸ்ரமம் என்கிற வடிவத்தில் அது எழுந்தது. மனிதர்களை பிராமணர், ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என்று பிறப்பின் அடிப்படையில் நால் வருணங்களாகப் பிரிக்கிற அந்த அமைப்பில் சூத்திரர்களின் நிலை கிட்டத்தட்ட அடிமை நிலை யாகவே இருந்தது என்றால், இந்த நால் வருணத்திற்கு அப்பாற்பட்ட சண்டாளர்கள் என்பவர்களின் நிலையோ அடிமை நிலையேதான்.

கிட்டத்தட்ட ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவானது என்று கூறப்படுகிற “மனு ஸ்மிருதி” என்கிற மனு நீதி இப்படிக் கூறுகிறது –

1. “சூத்திரர்களுக்கு கடவுள் விடுத்துள்ள ஒரே வேலை பிராமணர், ஷத்திரியர், வைசியர் ஆகிய மூன்று பிரிவினருக்கும் பணிவோடு ஊழியம் செய்வதே.” ( I 91)

2. “ஒரு சண்டாளனை, வீட்டு விலக்காகியுள்ள ஒரு பெண்ணை, சாதிப்பிரஷ்டம் செய்யப்பட்ட ஒருவனை, (சமீபத்தில்) பிரசவமாகியுள்ள ஒரு பெண்ணை, ஒரு பிரேதத்தை, பிரேதத்தைத் தொட்ட ஒருவனை யதேச்சையாகத் தொட நேர்ந்துவிட்டால் குளிப்பதன் மூலம் மீண்டும் ஒருவன் தனது பரிசுத்தத்தைப் பெறுவான்.” (V 85)

சூத்திரர்கள் கிட்டத்தட்ட அடிமை நிலையில் என்றால் சண்டாளர்கள் பிரேதத்துடன் இணையாக வைக்கப்பட்டிருந்ததைக் காணலாம். உண்மையில் தமிழகத்தில் அடிமை முறை என்பது 19 ஆம் நூற்றாண்டு வரை தொடர்ந்தது. “19 ஆம் நூற்றாண் டின் ஆரம்ப ஆண்டுகள் வரை விவசாய அடிமை முறையை ஆதரிப்பதாகவே பிரிட்டிஷ் அரசின் அணுகுமுறை இருந்தது. உதாரணமாக, வருவாய் வாரியத்திற்கு தஞ்சாவூர் கலெக்டர்எழுதிய ஒரு கடிதத்தில் ஓடிப் போன அடிமைகள் மீண்டும் அவர்களது எஜமானர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டுமென்றும், மற்றொரு எஜமானரால் சட்ட பூர்வமற்ற முறையில் வைத்துக் கொள்ளப்பட்ட ஓர் அடிமையை அவரின் ஒரிஜனல் எஜமானர் மீட்டுக் கொள்ள அனுமதிக்க வேண்டுமென்றும் குறிப்பிட் டிருந்தார். தங்களின் எஜமானர்களுக்காக அடிமைகள் அவசியம் வேலை பார்த்தேயாக வேண்டுமென கட்டாயப்படுத்தும் அதிகாரம் காவல் துறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட வேண்டு மென்றுகூட அவர் பரிந்துரை செய்தார்.

ஓடிப்போன அடிமைகளைப் பிடித்துக் கொடுப்பதில் இந்தக் காலத்தில் கலெக்டர்கள் ஒருவருக்கொருவர் ஒத்துழைத்துக் கொண்டனர். உதாரணமாக, திருச்சி கலெக்டர் தனது மாவட்டத்திலிருந்து ஓடிப்போன 15 பள்ளர்களை திருப்பி அனுப்புமாறு சேலம் கலெக்டரைக் கேட்டுக் கொண்டு கடிதம் எழுதினார். தஞ்சாவூரிலிருந்த பிரிட்டிஷ் பிரதிநிதிக்கும் இது போன்ற கடிதம் எழுதினார். 1830 இல் திருச்சி கலெக்டர் என்.எஸ்.கேமரோன் தனது மாவட் டத்தைச் சார்ந்த ஒரு “பிராமண” நிலப்பிரபுவிடமிருந்து ஓடிப்போன 10 பள்ளர்களைத் திருப்பி அனுப்புமாறு சேலம் கலெக்டருக்கு கடிதம் எழுதினார்” என்று கூறுகிறார் வரலாற்றுப் பேராசிரியர் சி.பரமார்த்தலிங்கம்.

அடிமை நிலையில் இருத்தப்பட்டிருந்த சண்டாளர்கள் எனப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 1843 ஆம் ஆண்டின் அடிமை ஒழிப்புச் சட்டம் V மற்றும் 1861 ஆம் ஆண்டின் இண்டியன் பீனல்கோடு சட்டம் XL V ஆகியவற்றின் மூலம் சட்டப்பூர்வ விடுதலை கிடைத்தது என்றாலும், நடைமுறையில் அவர்களுக்கு விடுதலை கிட்ட வில்லை. சமூக ரீதியில் அவர்கள் தொடர்ந்து அடிமைகளாகவே நடத்தப்பட்டனர். 1871 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கை இவ்வாறு கூறியது – “பரம்பரை அடிமை முறை எனும் நுகத்தடியிலிருந்து அதனால் எழுந்த சட்டபூர்வ தொல்லைகளிலிருந்து ஒரு சமூகம் என்ற முறையில் அவர்களை (அடிமைகளை) பிரிட்டிஷ் நிர்வாகம் விடுதலை செய்திருந்தாலும் சமூக அடுக்கில் அவர்கள் இன்னும் படுபாதாளத்திலேயே இருந்தனர். பொது பிரயாணிகள் படகுகளில் ஒரு பறையர் தனது முகத்தை காண்பித்துவிட முடியாது. அரசுப் பள்ளிகள் மற்றும் பொது மக்கள் நிதி உதவியோடு நடக்கிற பள்ளிகளிலும் இதே நிலைதான்.”

மனுதர்மமானது செல்லரித்த ஏடுகளிலே இருந்த மந்திரமல்ல; இந்த நாட்டில் நடைமுறையிலே இருந்த சட்ட, விதி. இதனை இந்த அறிக்கை தெளிவாக நிரூபிக்கிறது.

18-ம் நூற்றாண்டின் இறுதியில் அபேதுபே (abbe Dubois)  என்கிற பிரெஞ்சுக்காரர் இந்தியாவிற்கு வந்தார். இங்கே – குறிப்பாக தென்னிந்தியாவில் – சுமார் 30 ஆண்டுகள் தங்கியிருந்து இந்த மக்களின் பழக்க வழக்கங்களை ஆராய்ந்தார். இதன் விளைவாக “இந்திய மக்கள்” என்கிற நூலினை பிரெஞ்சு மொழி யில் 1806 இல் எழுதி முடித்தார். இது ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு 1820 இல் வெளி வந்தது. அன்றைய “தமிழ் கூறும் நல்லுலகம்” எப்படி இருந்தது என்பதை மேலும் நன்கு அறிந்து கொள்ள இந்த நூலிலிருந்து சில பகுதிகள் இங்கே தரப்படுகின்றன:

1. “நான்கு பிரதான பிரிவுகளில் சூத்திரர்களே அதாவது விவசாயிகளே எண்ணிக்கையில் அதிகமாக இருந்தனர். பறையர்களையும் சேர்த்துப் பார்த்தால் இந்திய மக்கள் தொகையில் இவர்கள் குறைந்தபட்சம் ஆறில் ஐந்து பங்கு இருப்பர்.

2. “நிறைய உபசாதிகளைக் கொண்ட பகுதியாக தமிழ் பேசும் பகுதி எனக்குப்பட்டது. அவ்வளவு உபசாதிகளை தக்காணத்தில்கூட நான் பார்க்க வில்லை. மைசூரிலும் மலபார் கடற்கரைப் பகுதியிலும்கூட இல்லை.”

3.     “முதல் சட்ட நிபுணர்களால் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்ட இந்துக்களில் உயர்ந்த இடத்தை வகித்தவர்கள் பிராமணர்களே. அடுத்து ராஜாக்கள். யார் உயர்ந்தவர்கள் என்பதில் விவ சாயிகளான சூத்திரர்களுக்கும், வியாபாரிகளாகிய வைஸ்யர்களுக்கும் இடையே போட்டி இருந்தது.”

4.  “இந்து சாதிகளில் பெரும்பாலானவை இடங் கைப் பிரிவிலோ அல்லது வலங்கைப் பிரிவிலோ அடக்கம். இடங்கைப் பிரிவில் அனைத்து வைஸ்யர்களும் பாஞ்சாலர் எனப்பட்ட ஐந்து கைவினைஞர் சாதிகளும் மற்றும் சூத்திரர்களில் மிகவும் கீழ்நிலைப்பட்டவர்களும் இருந்தனர். இதில் சக்கிலியர் எனப்பட்ட சாதிகளிலேயே மிகக் கீழாகக் கருதப்பட்ட சாதியும் இருந்தது.  வலங்கைப் பிரிவில் சூத்திரர்களில் உயர்ந்த பிரிவினர் இருந்தனர். பறையர்கள் இவர்களின் வலுவான முன்னணிப் படையாக விளங்கினர்.  அவர்களுக்கு ‘வலங்கை மாந்தர்’ எனும் பட்டப் பெயர் இருந்ததிலிருந்தே இதனைப் புரிந்து கொள்ளலாம். இந்த இரு பிரிவுகளுக்கிடையே கடும் பகைமை இருந்து வந்தது. இரு பிரிவு களுக்கிடையே ஏற்படும் மோதல் பெரும் அச்சத்தையும், கடுமையான துன்பத்தையும் உருவாக்கி வந்தது.

“பிராமணர்கள்”, “ஷத்திரி யர்கள் மற்றும் சூத்திரர்”களில் பல பிரிவுகள் நடுநிலையாளர்களாகக் கருதப்பட்டனர். இரண்டு கைப்பிரிவினர்களுக்கும் விதிக்கப்பட் டிருந்த அனைத்து உரிமைகளையும் அந்தஸ்து களையும் இவர்கள் அனுபவித்தனர். அதே நேரத்தில் இவர்கள் இந்த இரண்டு கைப்பிரிவுகள் எதிலும் சேராதிருந்தனர். இரண்டு கைப்பிரிவு களுக்கு மிடையே கடும்மோதல் எழுந்த போது மத்தியஸ்தம் செய்து வைக்க இந்த நடுநிலை சாதியினர் அழைக்கப்பட்டனர்.”

5.   “நான் கண்ணாரக் கண்ட ஒரு காட்சியை விவரிக்கிறேன். பறையர்களுக்கும், சக்கிலியர் களுக்குமிடையே ஏற்பட்ட மோதலினால் அந்த மாவட்டம் முழுவதிலுமே பெரும் பதட்டமும், பயங்கரமும் நிலவியது. மராட்டிய இராணுவம் படையெடுத்து வருவதுபோல பயந்துகொண்டு மக்கள் தத்தம் கிராமங்களை விட்டு வெளியேறினர்.. மோதலுக்குக் காரணம் என்னவென்றால், திருவிழா ஒன்றில் சக்கிலியர் ஒருவர் தனது தலைப்பாகையில் சிவப்புப் பூ வைத்திருந்தார் என்பதே. அந்த நிறப் பூவை வைத்துக் கொள்ள அவர்களுக்கு உரிமை இல்லை என்பதுதான் பறையர்களின் வாதம்.”

பிரெஞ்சுக் காலனியாக இருந்த புதுச்சேரியில் 18-ம் நூற்றாண்டில் துபாஷியாக (மொழிப் பெயர்ப்பாளராக) பணியாற்றிய ஆனந்தரங்கப் பிள்ளை எழுதி வைத்துச் சென்றுள்ள நாட்குறிப்பு களிலும் இந்த இடங்கை- வலங்கை மோதல் பற்றிச் சொல்லப்பட்டுள்ளது.

மொத்தத் தமிழ் மக்களும் சாதிவாரியாகப் பிரிக்கப்பட்டிருந்தது மட்டுமல்ல, முதல் இரண்டு வருணத்தவரே சகல அந்தஸ்துகளையும், அதிகாரங் களையும் உடையவர்களாக இருந்தனர் என்பது மட்டுமல்ல, வைசியர்கள் – சூத்திரர்கள் – சண் டாளர்கள் ஆகியோர் இடங்கை, வலங்கை என இரு பெரும் பிரிவுகளாகப் பிளவுபட்டு மோதிக் கொண் டிருந்தனர். அப்படி இருக்கும்படி செய்யப்பட் டிருந்தனர். அதில் குளிர்காயும் மத்தியஸ்தர்களாக முதல் இரண்டு வருணத்தவர் இருந்தனர்.

பிரமிட் வடிவிலான இந்த வர்ணாஸ்ரம அமைப்பைக் குலைக்க முனைவோர்க்கு கடும் தண்டனை தருகிறது மனுநீதி.

1. “ஒரு புரோகிதரின் மனைவியுடன்கள்ள உறவு கொண்ட அடிமைக்குத் தண்டனை மரணம்” (VIII 359)

2. “உறவினர் பாதுகாப்பில் இருக்கும் இரு பிறப்பாளர் வகுப்பைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் தாழ்ந்த வர்ணத்தான் கள்ள உறவு கொண்டிருந்தால் அவனுக்குத் தண்டனை அவன் மர்ம உறுப்பை அறுக்க வேண்டியது; (உறவினர்) பாதுகாப்பில் இல்லாத ஒரு பெண்ணுடன் அவன் உறவு கொண்டிருந்தால் அதற்குத் தண்டனை அவன் உறுப்புக்களையெல்லாம் வெட்டுவதோடு அவன் சொத்தையும் பறிமுதல் செய்ய வேண்டும்.” (VIII 374)

வர்ணங்களின் பரம்பரைத் தூய்மையைப் பாதுகாப்பதற்காக வகுக்கப்பட்ட இந்த தண்டனைகள் கற்பனைக் கதையல்ல; அல்லது ஒரு வெறியனின் வெறும் விருப்பங்களுமல்ல. அவையே வாழ்க்கைச் சட்டங்கள். சிற்சில மாறுதல்களுடன் மனுநீதியே 19-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் வாழக்கை நியதியாக இங்கே இருந்திருக்கிறது. இன்னும் ஆதாரம் தருகிறார் அபே துபே –

1.“ஒரு பறையர் தனது சொந்த சாதியை மறைத்து பிராமணர்களோடோ அல்லது சூத்திரர் களோடோ பழகினால், அவர்களோடு சேர்ந்து உணவு உண்டால், அவர்களது உணவைத் தொட்டால் அவரது உயிர் பறிபோகக் கூடிய ஆபத்து உண்டு. விஷயம் தெரிய வந்தால் அந்த இடத்திலேயே கொலை செய்யப்படுவார். ஆனால், இப்படிக் கொலை செய்வது என்பது நிதானமான விசாரணைக்குப் பிறகு தரப்படுகிற தண்டனை என்றில்லாமல் பொதுவாக உயர்சாதி உணர்விலிருந்து அந்த நேரத்தில் வெளிப்பட்ட வெறியினால் செய்யப்படுகிற செயலாக இருக்கும். யூதர்களின் வரலாற்றிலும் இத்தகைய சில உதாரணங்கள் உண்டு. சில சாதிகளில் சில விஷயங்களுக்கு இப்படிப்பட்ட மரண தண்டனை உண்டு என்றாலும் அது அபூர்வ மாகத்தான் பின்பற்றப்படும். மாறாக அவமானப் படுத்தப்படும் தண்டனைகளே அதிகம் தரப்படும். உதாரணமாக, பெண்களின் தலைகளை மொட்டையடித்தல் போன்றவை. சில நேரங்களில் குற்றவாளிகளின் தலைகளில் மண் வாளிவைக்கப்பட்டு பல மணி நேரம் சாதித் தலைவரின் முன்னால் நிறுத்தப்படுவர். சில நேரங்களில் கழுதை மீது உட்கார வைக்கப்பட்டு அதன் வாலோடு குற்றவாளியின் முகம் கட்டப் படும். சில நேரங்களில் முகத்தில் சாணியைப் பூசி விடுவார்கள்.  பூணூல் அணிய உரிமை உள்ள சாதியினர் என்றால் அவரின் பூணூலை அறுத்து விடுவார்கள். சில நேரங்களில் சாதிப் பிரஷ்டம் செய்வார்கள் அல்லது அவமானப்படுத்துதலைக் குறிக்கும் முத்திரை பதிப்பார்கள்.”

2. அனைத்து வகை தண்டனைகளிலும் ஓர் இந்துவுக்கு மிக மோசமான தண்டனையாக இருப்பது சாதிப் பிரஷ்டமே… இந்த பரிதாபத்திற்குரிய பிறவி தனது சக ஜீவராசிகளுடன் எவ்விதத் தொடர்பும் கொள்ள முடியாது. இந்த உலகத்தைப் பொறுத்தவரை அவன் செத்தவனே. அவன் மனித சமுதாயத்திலேயே இல்லை. தனது சாதியை இழப்பதன் மூலம் ஓர் இந்து தனது நண்பர்களை, சொந்தங்களை, பல நேரங்களில் மனைவியையும், குழந்தையையும்கூட இழக்கின்றன். இவனின் துயரத்தில் பங்கு கொள்வதைவிட இவனை இழக்கவே அவர்கள் தயாராவார்கள். இவனோடு யாரும் உண்ண மாட்டார்கள். இவனுக்கு ஒரு சொட்டு தண்ணீர்கூடத் தர மாட்டார்கள். இவனின் பெண்களுக்கு திருமணம் நடக்காது. மகன்களுக்கு மணமகள்கள் கிடைக்க மாட்டார்கள். அவன்எங்கே போனாலும் சாதி கெட்டவன் என்று தூற்றப்படுவான். எந்த இடத்தில் செத்தானோ அங்கேயே அவனது பிணம் அழுகி நாற வேண்டியதுதான்.”

3. “தனது சொந்த சாதியை இழந்தவன் அதனினும் கீழ்ப்பட்ட சாதியாக மாறினால் அவனது துன்பம் குறைவாக இருக்கும். ஆனால் அதற்கு வழி இல்லை. சாதி கெட்ட “பிராமண”னுக்கு சூத்திரன் கூடப் பெண் தரமாட்டான். தனது சொந்த சாதியில் மீண்டும் சேர்ப்பிக்கப்படாவிட்டால் மிக இழிந்த சாதியாகிய பறையர்களுடன் அல்லது அவர்களுக்கு சமமானவர்களுடன் அவன் கலக்க வேண்டியதுதான்.”

தாங்கள் போட்ட வேலி தங்களுக்கே விலங்காகப் போய் அதிலிருந்து மீள முடியாமல் தமிழ்ச் சமுதாயம் தத்தளித்தக் கொண்டிருந்திருக்கிறது. பல நூறு ஆண்டுகளாக இந்த நிலை. அவனுக்கு மொழி, இனம் என்பதைவிட சாதியே சமூக அடையாளமாக இருந்திருக்கிறது. மந்தையாக வாழும் குணமுள்ளவன்தான் மனிதன். இங்கே அந்த மந்தை என்பது சாதி வட்டத்தைத் தாண்டவில்லை. சாதி எனும் கூண்டே தனது பாதுகாப்பு வளையம் என அவன் நினைத்திருந்தான். உண்மையில் அது முழுச் சமுதாயத்தையும் கிணற்றுத் தவளையாக ஆக்கியிருந்தது. அதிலும் கீழ் சாதிக்காரர்களை சுயமரியாதையற்றவர்களாக ஆக்கியிருந்தது.

https://www.facebook.com/v3.0/plugins/share_button.php?app_id=&channel=https%3A%2F%2Fstaticxx.facebook.com%2Fx%2Fconnect%2Fxd_arbiter%2F%3Fversion%3D46%23cb%3Df1e4f156b025a6%26domain%3Dwww.keetru.com%26is_canvas%3Dfalse%26origin%3Dhttps%253A%252F%252Fwww.keetru.com%252Ff2d2b8b6eafa994%26relation%3Dparent.parent&container_width=0&href=https%3A%2F%2Fwww.keetru.com%2Findex.php%2Fhomepage%2F2009-10-07-11-18-55%2F2012-sp-1536208281%2F20918-2012-08-24-09-50-40&layout=button&locale=ta_IN&sdk=joey&size=small

https://platform.twitter.com/widgets/tweet_button.644279d1635fd969e87af94a98bd232b.ta.html#dnt=true&id=twitter-widget-0&lang=ta&original_referer=https%3A%2F%2Fwww.keetru.com%2Findex.php%2Fhomepage%2F2009-10-07-11-18-55%2F2012-sp-1536208281%2F20918-2012-08-24-09-50-

Whatsapp

About editor 3087 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply