சிறுதாவூரை வளைத்து உலையில் போட்ட ஜெயலலிதாவின் உயிர்த் தோழி சசிகலா

சிறுதாவூரை வளைத்து உலையில் போட்ட ஜெயலலிதாவின் உயிர்த் தோழி சசிகலா

நக்கீரன்

சிறுதாவூர் சிறிய ஊராக இருக்கலாம். ஆனால் அது தமிழக அரசியலில் “பெரிதாவூர்” ஆகப் பேசப்படுகிறது. சிறுதாவூர், சென்னை – மாமல்லபுரம் நெடுஞ்சாலையில் இருக்கிறது. இங்கே கண்ணுக்குக் குளிர்ச்சியான ஒரு பெரிய மாளிகை. இங்கேதான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவரது உயிர்த் தோழி சசிகலா இருவரும் சென்று ஓய்வெடுத்துக் கொள்வார்கள். அறிஞர் அண்ணா முதலமைச்சராக இருந்த காலத்தல் விவசாயத் தொழிலாளர்களைக் குடி அமர்த்தும் திட்டத்தின் கீழ் 1967 செப்தெம்பர் 15 இல் சிறுதாவ+ரில் ஒரு குடும்பத்துக்கு இரண்டரை ஏக்கர் நிலமும், பத்து செண்டு மனையும் வழங்கப்பட்டது. அதே செப்தெம்பர் 30 ஆம் நாள் துணை ஆட்சியர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு பயனாளிகளைத் தேர்வு செய்தது.

அவர்களுள் தலித் அல்லாத ஏழைகளும் இடம் பெற்றிருந்தனர். இப்படி ஒதுக்கப்பட்ட இடம் மழைக்காலத்தில் வெள்ளம் நிரம்புகிற தாழ்வான பகுதி என்பதாலும் வேளாண்மைக்கு ஏற்றதாக இல்லாததாலும் அதிகமான விலை மதிப்பு இல்லாத நிலையில் சில ஆண்டுகளில் இந்த நிலங்களைப் பெற்ற குடியிருப்பாளர்கள் பலர் பிறருக்கு விற்று விட்டனர் எனக் கூறப்படுகிறது. அதன் பின் அந்த நிலம் பலருக்கு கைமாறியது. சுபஸ்ரீ, ஜாகிர் குசேன், காஜா மொகிதீன், சேயத் அப்பாஸ, இளையராசா எனக் கைமாறி இறுதியில் பரணி Cottage Resorts உரிமையாளர்கள் அதனை விலைக்கு வாங்கினார்கள்.

சசிகலாவின் நெருங்கிய உறவினர்களான இளவரசி, சித்திரா. சுதாகரன் ஆகியோரே இந்த பரணி நிறுவனத்தின் உரிமையாளர்கள் ஆவர்.இப்போது திமுக ஆட்சிக்கு வந்ததும் தலித்மக்கள் தங்கள் நிலம் பிறரால் பிடுங்கப்பட்டு விட்டதாகவும் அந்த நிலம் சசிகலாவுக்குச் சொந்தம் எனச் சொல்லி தாங்கள் பயமுறுத்தப்பட்டதாகவும் முறைப்பாடு செய்தனர். நிலத்தைச் சுற்றிப் பேடப்பட்ட கம்பி வேலிகளையும் தூண்களையும் தலித் மக்களில் சிலர் அகற்றிவிட்டனர். தலித்மக்கள் சார்பாக மார்க்சிஸ்ட் கட்சி சென்னையில் பேரணி ஒன்றை நடத்தி முதல்வர் கருணாநிதியிடம் தலித்துக்களுக்கு சொந்தமான நிலத்தை மீட்டுத்தருமாறு கேட்டுக் கொண்டுள்ளது.இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸட் கட்சித் தலைவர் என். வரதராசன் தமிழக முதலுவர் கருணாநிதியை நேரில் சந்தித்து தலித் மக்களுக்குக் கொடுக்கப்பட்ட நிலத்தை சசிகலாவின் நெருங்கி உறவினர்கள் ஆன இளவரசி, சித்திரா, சுதாகரன் ஆகியோர் மோசடி செய்து வாங்கி இருப்பதற்கான ஆவணங்களைக் கையளித்தார். தலித் மக்களுக்கு 1967 ஆம் ஆண்டு கொடுக்கப்பட்ட நில அளவை எண்கள் ( Land survey numbedrs) சசிகலாவின நெருங்கிய உறவினர்கள் வாங்கிய நிலத்தின அளவை எண்களோடு ஒத்துப் போவதாக திரு. வரதராசன் தெரிவித்தார்.

எடுத்துக்காட்டாக நில அளவு எண் 378/2 தொடக்கத்தில் எழுமலை என்பவருக்குக் கொடுக்கப்பட்டது. அதே நிலம் பரணி Cottage Resorts மாற்றப்பட்டது. .இதே போல் சின்னப்பன் என்பவரது நில அளவு எண் 374/2 அதே நிறுவனத்துக்கு மாற்றப்பட்டது. இவ்வாறு மற்றவர்களது நிலங்களும் அவர்களது இசைவு இன்றி பரணி நிறுவனத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இப்படி சட்டத்துக்கு முரணான நில மாற்றங்களை செய்ய மறுத்த தாசில்தார்கள் பணி மாற்றம் செய்யப்படடு அவர்களது இடத்துக்கு முதல்வரோடு ஒத்துப் போகக் கூடியவர்கள் அமர்த்தப்பட்டார்கள். எடுத்துக் காட்டாக தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் தியாகராசன் 11 நாள்களுக்கு மட்டும் சென்னைக்கு வரவழைக்கப்பட்டு நிலம் மாற்றம் செய்யப்பட்டது. முதல்வர் கருணாநிதி இந்தச் சிக்கல் குறித்து ஆராய்ந்து அறிக்கை தருமாறு ஒய்வு பெற்ற நீதியரசர் ஒருவரை நியமித்துள்ளார். அறிக்கை கொடுக்க ஒரு மாத கால கெடு கொடுக்கப்பட்டுள்ளது. சிறுதாவூர் நிலச் சிக்கலை புதிய தமிழகம் கட்சித் தலைவர் மருத்துவர் கிருஷ்ணசாமியும் கையில்; எடுத்து பறிபோன தலித் மக்களின் நிலத்தை மீட்டெடுக்கப் போவதாக சூளுரைத்துள்ளார்.முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பங்களா, பஞ்சமி நிலத்தில்தான் வளைக்கப்பட்டிருக்கிறது என்ற குற்றச்சாட்டுகள் வீசப்படுவதைப் பயன்படுத்தி அரசியலில் கொஞ்சக் காலம் காணாமல் போயிருந்த மருத்துவர் கிருஷ்ணசாமி வெளிச்சத்துக்கு மீண்டும் வர இதுதான் சாட்டு என்று சிறுதாவூருக்குள் நுழைந்துள்ளார்.

கடந்த யூலை 18 ஆம் நாளன்று சிறுதாவ+ருக்கு தீடீரென அதிரடியாகச் சென்ற கிருஷ்ணசாமி அந்த இடத்தைப் பார்வையிட்டார். ஜெயலலிதாவின் பங்களாவையொட்டி இருந்த இடத்தில் நுழைந்த கிருஷ்ணசாமி பங்களாவை நெருங்கிப் போய்ப் பார்த்தார். கூடவே சென்ற செய்தியாளர்களும் இதுதான் நல்ல வாய்ப்பு என்று இதுவரையில் நெருங்கமுடியாமல் இருந்த சிறுதாவ+ர் பங்களாவை படம் பிடித்துத் தள்ளினர்.

“சசிகலா பெயரைச் சொல்லித்தான் எங்கள் நிலங்களை ஆக்கிரமித்துக் கொண்டார்கள். அந்த நிலத்தைத் திரும்பப் பெறும்வரை ஓய மாட்டோம்” என அங்கிருந்தவர்கள் முழகக்கம் இட்டார்கள். இதைக் கேட்டுவிட்டு ‘நிலத்தை மீட்டெடுப்பதில் நாங்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம் நீங்கள் உறுதியாக இருப்பீர்களா?” என்று கேட்டார் கிருஷ்ணசாமி “உயிரே போனாலும் நாங்கள் கடைசி வரையில் போராடுவோம்” என்றதும் மருத்துவர் கிருஷ்ணசாமி நெகிழ்ந்து போனார்.

அதிமுகவினர் “திமுகதான் தலித் அமைப்புக்களை தூண்டி விட்டுப் பின்னால் நின்று வேடிக்கை பார்ப்பதாகக் குற்றம் சாட்டுகின்றனர். ஜெயலலிதா தலித்துகளுக்கு எதிரானவர் என்ற படிமத்தை உருவாக்கி விரைவில் நடக்க இருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் அரசியல் ஆதாயம் பெற முயற்சிக்கிறார்கள் ……. அதற்காகத்தான் கிருஷ்ணசாமியைப் பயன்படுத்துகிறார்கள்” என்று பேசுகிறார்கள். தலித் மக்களின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சிறுத்தைகள் அமைப்புப் பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன் சிறுதாவூர் சென்று குறிப்பிட்ட தலித் மக்களைச் சந்தித்து பேசியுள்ளார். அதன் பின் அவர் விட்ட அறிக்கையில் தலித் மக்களின் நிலம் ஆக்கிரமிக்கப்படவில்லை என்றும் அந்த நிலத்துக்கும் ஜெயலலிதாவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று தெரிவித்திருக்கிறார்.

இந்தச் சிக்கலை வைத்து ஜெயலலிதாவை அரசியல் பழிவாங்க திமுக அரசு முயற்சிப்பதாகவும் திருமாவளவன் குற்றச் சாட்டியுள்ளார். அதிமுக கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான மதிகவும் இந்தச் சிக்கல் தொடர்பாக களம் இறங்கியுள்ளது. சிறுதாவ+ர் நிலம் தொடர்பாக ஜெயலலிதாவுக்கு தொடர்பில்லை என மதிமுக பொது செயலாளர் வைகோ கூறியுள்ளார். இதுகுறித்து ஜெயா தொலைக்காட்சியில் அவர் அளித்த செவ்வியில் சிறுதாவ+ரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தங்குவதற்கு பயன்படுத்துகின்ற வீடு தலித் மக்களுக்கு 1967 ஆம் ஆண்டு அரசு ஒதுக்கிய நிலங்களை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டது என்று முழுக்க முழுக்க பொய்யான முறைப்பாடு எழுப்பப்பட்டு உள்ளது. இந்தச் சிக்கல் குறித்து உண்மை நிலையை சிறுதாவ+ர் மக்களிடம் நேரில் விசாரித்து அறிய மறுமலர்ச்சி திமுக சார்பில் துணைப் செயலாளர் மல்லை சத்யா தலைமையில் ஒரு குழுவினர் சிறுதாவூர் சென்றனர்.ஊர் மக்கள் ஒட்டு மொத்தமாகச் சொன்ன செய்திகளில் இருந்தும், திரட்டப்பட்ட வருவாய்த்துறை ஆவணங்களில் இருந்தும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தங்குவதற்குப் பயன்படுத்தும் வீடு, சுற்று அடைப்புக்கு உள்பட்ட இடமும், தலித் மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் சிறிது அளவும் அமையவில்லை என்பது தெரிகிறது.

இப்படி ஒதுக்கப்பட்ட இடம் மழைக்காலத்தில் வெள்ளம் நிரம்புகிற தாழ்வான பகுதி என்பதாலும் சாகுபடிக்கு ஏற்றதாக இல்லாததாலும் அதிகமான விலை மதிப்பு இல்லாத நிலையில் சில ஆண்டுகளில் இந்த நிலங்களை பிறருக்கு விற்று விட்டனர்.பலருக்கு நிலம் கை மாறிய நிலையில் 2005 இல் பரணி Cottage Resorts உரிமையாளர்கள் விலைக்கு வாங்கி உள்ளனர். ஆனால் இல்லாத ஒன்றை இருப்பதாக காட்டவும், நடக்காத ஒன்றை நடந்ததாகச் சொல்லவும் திட்டமிட்டு, ஒரு கோரிக்கையை தரச் செய்து உயர்நீதீமன்ற முன்னாள் நீதிபதி விசாரணை ஆணையத்தை முதல்வர் அவசர அவசரமாக சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார். அண்ணா அறிவாலயமும், முரசொலி அலுவலகக் கட்டடமும் தலித்களின் நிலங்களை ஆக்கிரமித்துத் தான் கட்டப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு உள்ளது இது தொடர்பாகவும் விசாரணை நடத்த கருணாநிதி முன் வருவாரா?” என்றார் வைகோ.

வைகோ ஒருவரைப் போற்ற நினைத்தால் அளவுகடந்து போற்றுவார். அவ்வாறே தூற்ற நினைத்தாலும் சூடான சொற்களைத் தேர்ந்தெடுத்து கடுமையாகத் தூற்றுவார். இது அவரது இயல்பு.பொடா சிறையில் இருந்த போதும் அதில் இருந்து வெளிவந்த பின்னரும் வைகோ ஜெயலலிதாவை சரிமாரியாக அருச்சித்தார். சூனியக்காரி, ஊர்ப்பிடாரி, பாசிஸ்ட் என்றெல்லாம் அருச்சனை செய்தார். அதிமுக வோடு கூட்டணி வைத்த பின்னர் அதே ஜெயலலிதாவை புரட்சித்தலைவி, யோன் ஒவ் ஆர்க், ஜான்சி இராணி என்றெல்லாம் உச்சிமேல் வைத்துப் போற்றுகிறார். தேர்தலின் போது வைகோ “புரட்சித் தலைவியின் ஆட்சி பொற்கால ஆட்சி” என்று புகழ்மாலை சூட்டிpய போது எல்லோரும் வியப்பால் வாயடைத்துப் போனார்கள்.திமுக சார்பாக 18 ஆண்டு காலம் மேல்சபை உறுப்பினராக இருந்த வைகோவிற்கு “அண்ணா அறிவாலயமும், முரசொலி அலுவலகக் கட்டடமும் தலித்களின் நிலங்களை ஆக்கிரமித்து தான் கட்டப்பட்டுள்ளது” என்ற உண்மை பொய் எப்படித் தெரியாமல் போனது என்பது விளங்கவில்லை.

வேறு கட்சிக்காரன் கேட்கலாம். வைகோ எப்படிக் கேட்கலாம்? சிறுதாவூர் பங்களாவின் சொந்தக்காரர் யார்? அதற்கும் ஜெயலலிதா – சசிகலா இருவருக்கும் என்ன தொடர்ப்பு? என்று முதலவர் கருணாநிதி கேட்டார். “சிறுதாவூர் பங்களா எனக்கோ சசிகலாவுக்கோ சொந்தமில்லை. அதில் வாடகைக்குத்தான் இருக்கிறோம்” என ஜெயலலிதா பதில் இறுத்தார். உண்மை என்னவென்றால் சசிகலாவின் நெருங்கிய உறவினர்கள்தான் பல கோடி பெறுமதியான அந்த நிலத்துக்கும் பங்களாவிற்கும் சொந்தக்காரர்கள். ஜெயலலிதா முதல்வராக இருந்த போது சிறுதாவூர் பங்களா இருந்த இடம் வந்ததும் பேருந்து நடத்தினர் “அம்மா இடம் வந்தாச்ச இறங்குங்கோ” என்று குரல் கொடுப்பாராம். அப்படிக் குரல் கொடுக்க மறந்த அல்லது மறுத்த நடத்துனர்கள் பணி மாற்றப்பட்டார்கள்!ஜெயலலிதா முதல்வராக இருந்த போது சென்னை – மாமல்லபுரம் நெடுஞ்சாலை பல கோடி செலவழித்து செப்பனிடப்பட்டது. அதற்கு இந்தப் பங்களாதான் காரணியாகும்.இப்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மேலும் ஒரு தலையிடி வந்துள்ளது.

பிறந்த நாளை ஒட்டி இரண்டு கோடி ரூபாய் அளவுக்கு பரிசுகள் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது சி.பிஅய். சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
உடந்தையாக இருந்ததாக முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், அழகு திருநாவுக்கரசு ஆகியோர் மீதும் குற்றப்பத்திரிகையை சி.பி.அய.; தாக்கல் செய்துள்ளது.

அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா கடந்த 1990 – 96 ஆம் ஆண்டுகளில் முதல்வராக பதவி வகுத்தார். 1992 ஆம் ஆண்டில் அவரது பிறந்த நாளையொட்டி ஏராளமான பரிசுப் பொருட்கள் அளிக்கப்பட்டன. வெளிநாட்டில் இருந்து 89 டிடிக்கள் வந்தன. அவற்றின் மதிப்பு ரூ 2 கோடி 12 உரூபா ஆகும். இந்த 89 டி.டி.,க்களும் 57 பெயர்களில் அனுப்பப்பட்டு இருந்தன. இவை சென்னை கனரா வங்கியில் ஜெயலலிதா பெயரில் வரவு வைக்கப்பட்டது. அலுவல் ரீதியான பரிவர்த்தனை செய்துள்ள நபர்களிடம் இருந்து இந்த பரிசுத் தொகையை முதல்வர் ஜெயலலிதா பெற்றிருப்பதால் ஊழல் தடுப்புச் சட்டப்பிரிவு 11ன் கீழ் அவர் குற்றம் புரிந்துள்ளார் என்று கருதப்பட்டது.

தமிழகத்தில் 1996 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தபோது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. வருமான வரித் துறையின் இயக்கநர் (புலன் விசாரணை) பெயரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது பின்னர் மாநில அரசின் வேண்டுகோளின்படி இந்த வழக்கு விசாரணை சி.பி.அய்க்கு மாற்றப்பட்டது. சென்னையில் உள்ள சி.பி.அய்யின் ஊழல் தடுப்பு பிரிவின் சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஜெயலலிதா விவகாரத்தில் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் 13(1)(இ) பிரிவின் கீழ் தவறுகள் நடந்துள்ளதா என்பது குறித்து சி.பி.அய்யினர் விசாரணை நடத்தினர். குறிப்பாக வெளிநாட்டில் இருந்து வந்த மூன்று லட்சம் டாலர் குறித்து தீவிரமாக விசாரிக்கப்பட்டது. ஊழல் தடுப்பு சட்டப் பிரிவு 11 இன் படி ஜெயலலிதா குற்றம் புரிந்திருப்பதாக விசாரணையில் தெரிய வந்தது.

நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டிருந்த இந்த வழக்கில், குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யலாம் என சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில்தான் சிபிஅய்க்கு அனுமதி அளித்தது.

அன்றைய காலகட்டத்தில் செங்கோட்டையன், அழகு திருநாவுக்கரசு ஆகியோர் அமைச்சர்களாக இருந்துள்ளனர். இவர்கள் இருவரும் டிடி.க்கள் எடுக்க பணம் கொடுப்பதில் பின்னணியில் இருந்துள்ளனர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. டிடிக்களை ஜெயலலிதா ஏற்றுக் கொள்வதற்கு இவர்கள் இருவரும் முன்னாள் முதல்வர் ஜெயலிதா மீது வழக்குத் தொடர தமிழக சபாநாயகரின் அனுமதியை சி.பி.அய் கேட்டது. ஜெயலலிதா தற்போது எம்எல.ஏ வாக இருப்பதால் அவர் மீது சட்டப்ப+ர்வ நடவடிக்கை எடுக்க அவைத்தலைவரின் அனுமதி வெற வேண்டும். ஜெயலலிதா மீது சட்டப்ப+ர்வ நடவடிக்கை எடுக்க சபாநாயகர் ஆவுடையப்பன் அனுமதி வழங்கியுள்ளார்.

நேற்று சி.பி.அய். சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி மீனாட்சி சுந்தரத்திடம் ஜெயலலிதா, செங்கோட்டையன், அழகு திருநாவுக்கரசு ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. குற்றப்பத்தரிரிகையில் 149 சாட்சிகள் இடம் பெற்றுள்ளனர். 285 ஆவணங்களும் குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ளது. மொத்தம் 2,000 பக்கங்கள் அடங்கியதாக குற்றப்பத்திரிகை உள்ளது. குற்றப்பத்திரிகையை சரிபார்த்து விட்டு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜெயலலிதா உட்பட மூவருக்கும் ஆணை அனுப்பப்பட்டு குற்றப்பத்திரிகையின் படிகள் வழங்கப்படும்.

திராவிடர் இயக்கத்தின் மூலாதாரக் கொள்கைகளுடன் எந்தத் தொடர்பும் இல்லாத ஜெயலலிதாவை எண்பதுகளில் அரசியலுக்குக் கொண்டு வந்ததன் மூலம் மறைந்த எம்ஜிஆர் திராவிட இயக்கத்திற்கு மிகப் பெரிய வரலாற்றுத் தவறைச் செய்தார்.
திராவிடர் இயக்கத்தின் சமூகநீதி இயக்கத்துடனோ – அல்லது சுயமரியாதை இயக்கத்துடனோ – அல்லது தமிழ் இயக்கத்துடனோ – ஒட்டோ உறவோ இல்லாத ஜெயலலிதா – திராவிடர் இயக்கம் எந்த மேல் வருணத்தின் ஆதிக்கத்தை எதிர்த்துத் துவக்கப்பட்டதோ, அந்த வருணத்தைச் சேர்ந்த ஒரு திரைப்பட நடிகை எம்.ஜி.ஆருடன் ஏற்படுத்திக் கொண்ட ‘நெருக்கத்தை” வைத்தே அதிமுக வின் பொதுச் செயலாளராகி இரண்டு தடவை ஆட்சியும் நடத்திவிட்டார்!

நல்லகாலமாக சென்ற தேர்தலில் அதிமுக தோற்கடிக்கப்பட்டு விட்டது. வி.புலிகளின் கடும் எதிர்ப்பாளரான ஜெயலலிதா தற்செயலாக வென்று வந்திருந்தால் தமிழ்த் தேசியத்துக்கு அது மிகப் பெரிய பின்னடைவாக இருந்திருக்கும்.

AUGUST 01, 2006

About editor 3045 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply