பிடல் கஸ்ரோவின் ஊழி முடிவுக்கு வந்துவிட்டதா?

பிடல் கஸ்ரோவின் ஊழி முடிவுக்கு வந்துவிட்டதா?

நக்கீரன்

கடந்த 48 ஆண்டுகளாக அமெரிக்க ஆட்சித் தலைவர்களின் தூக்கத்தைக் கெடுத்து வரும் பிடல் காஸ்ட்ரோ முதல் முறையாக நோய்வாய்ப்பட்டு படுக்கையில் விழுந்துள்ளார்.

சிறு குடலில் குருதிப் பெருக்கினால் துன்பப்பட்ட காஸ்ட்ரோ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை வைத்தியம் செய்யப்பட்டது. அவர் தேறிவருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அரச அடிப்படையில் அறிக்கை எதுவும் விடுக்கப் படவில்லை.

மருத்துவமனைக்குப் போகுமுன்னர் தனது ஆட்சி அதிகாரம் அனைத்தையும் தனது இளவல் ராவுல் காஸ்ட்ரோவிடம் ஒப்படைந்திருந்தார்.

பிடல் காஸ்ட்ரோ பல சாதனைகளைப் படைத்துள்ளார். அவர்தான் உலகின் நீண்டகால அரசுத் தலைவர் என்ற பெயரை எடுத்தவர். 1959 ஆம் ஆண்டு சனவரி 1 நாள் கியூபாவில் நடந்த புரட்சியைத் தொடர்ந்து ஆட்சி அதிகாரம் அவர் கையில்தான் இருந்து வந்தது.

சிஅய்ஏ உளவு நிறுவனம் மேற்கொண்ட கொலை முயற்சியில் இருந்து தப்பி இருக்கும் ஒரே ஆட்சித் தலைவர் பிடல் காஸ்ட்ரோ ஒருவர்தான். 638 க்கும் மேலான தடவை சிஅய்ஏ அவரைக் கொலை செய்த முயற்சி செய்தது. ஆனால் வெற்றிபெற முடியவில்லை.

இன்று உலகில் எஞ்சியுள்ள பொதுவுடமை நாடுகளில் கியூபாவும் ஒன்று. ஏனையவை வடகொரியாவும் சீனக் குடியரசும் ஆகும். சீனாவைப் பொறுத்தளவில் அரசியல் மட்டத்தில்தான் அது ஒரு பொதுவுடமை நாடு. பொருளாதார மட்டத்தில் அதுவொரு பச்சை முதலாளித்துவ நாடாகும்.

கியூபா எப்படிப்பட்ட நாடு? அல்லது தீவு?

அழகான பொருள்கள் எல்லாம் கண்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியைக் கொடுக்கின்றன. பாடும் குயில்கள், ஓடும் ஆறுகள், பேசும் கிளிகள், கொட்டும் அருவிகள், பூத்துக் குலுங்கும் மலர்கள், தலை சாய்ந்து கிடக்கும் நெற்கதிர்கள், இதமாக வீசும் தென்றல் போன்றவை கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாக இருக்கின்றன.

மகாகவி பாரதியார் தாம் பாடிய குயில் பாட்டில் மங்கை ஒருத்தியின் மேனி நலத்தினையும் வெட்டினையும் கட்டினையும் தேனில் இனியாள் திருத்த நிலையினையும் மற்றவர்க்கு சொல்ல வசமாமோ? எனக் கேட்டு விட்டு கற்றவர்க்குச் சொல்கிறார்-

கவிதைக் கனி பிழிந்த சாற்றினிலே,
பண்கூத் தெனுமிவற்றின் சாரமெல்லாம் ஏற்றி
அதனோடே இன்னமுதைத் தான் கலந்து
காதல் வெயிலிலே காயவைத்த கட்டியினால்
மாதவளின் மேனி வகுத்தான் பிரமனென்பேன்……………………………

பாரதியார் கியூபா தீவைப் பார்தததில்லை. அந்த வாய்ப்பு அவருக்குக் கிட்டவில்லை. கிட்டியிருந்தால் நல்லதோர் கவிதை ஒன்றைக் கட்டி இருப்பார். கியூபா தீவு அவ்வளவு கொள்ளை அழகு. அதன் இதமான காலநிலை, சுற்றிலும் நீலக்கடல், பால்போல் விரிந்து கிடக்கும் கடற்கரை, சல சல என ஓடும் ஆறுகள் ஆகியவை அந்தத் தீவை பூலோக சொர்க்கமாக மாற்றிக் காட்டுகிறது. நான் நேரில் பார்த்த உண்மை இது.

கியூபாவின் வரலாறு பற்றி ஒரு பருந்துப் பார்வை பார்க்கலாம்.

1492 – கிறிஸ்தோபர் கொலம்பஸ் கியூபாவைக் கண்டு பிடித்து அது இசுப்பானிய அரசருக்கு சொந்தமானது என்று உரிமை கோரினார். அதன் பின் 400 ஆண்டுகள் இசுப்பானியா கியூபாவை ஆட்சி செய்தது.

1868 -1878 – கியூபன் புரட்சிப் படை இசுப்பானிய ஆட்சியை எதிர்த்து 10 ஆண்டுகள் போரிட்டது. இசுப்பானிய அரசியல் சீர்திருத்தங்களைக் கொண்டுவர ஒத்துக் கொண்டது.

1895 – கியூபன்ஸ் மறுபடியும் இசுப்பானியாவுக்கு எதிராக இரண்டாவது சுதந்திரப் போரை தொடங்கினார்கள்.1898 – அமெரிக்கா கியூபாவோடு சேர்ந்து கொண்டு இசுப்பானியாவை தோற்கடித்தது. இசுப்பானியா கியூபா மீதான ஆட்சியுரிமைக் கைவிட்டது.1898 – 1902 கியூபாவில் அமெரிக்க இராணுவ ஆட்சி.

1902 – கியூபா குடியரசாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. Toms Estrada Palma என்பவர் அதன் முதல் ஆட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1903 – ஒரு உடன்படிக்கை மூலம் அமெரிக்கா Guantanamo வளைகுடாவை நிரந்தரமாகக் குத்தகைக்கு எடுத்துக் கொண்டது.

1933 – Fulgencio Batista Zaldivar (“Batista”) புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றினார். 1959 – பிலடல் காஸ்ரோ தலைமையில் புரடசி;ப்படை பஸ்ரியாவை கவிழ்து விட்டு ஆட்சியைக் கைப்பற்றியது. 1961 – பிடல் காஸ்ட்ரோ கியூபாவை ஒரு பொதுவுடமை நாடாகப் பிரகடனப்படுத்தினார். இதே ஆண்டு அமெரிக்க சிஅய்ஏ உளவு நிறுவனம் கியூபா எதிர்ப்பாளர்களது உதவியுடன் கியூபாவைக் கைப்பற்ற முயற்சி எடுத்தது. ஆனால் அது படு தோல்வியில் முடிந்தது.

1962 – கியூபா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடையைக் கொண்டுவந்தது. இதன்படி அமெரிக்க குடிமகன் எவரும் கியூபாவோடு வாணிகம் செய்யவும் அந்த நாட்டுக்குப் பயணம் செய்யவும் தடை விதிக்கப்பட்டது. இதே ஆண்டுதான் கியூபாவிற்கு ஏவுகணைகளைக் கொண்டு சென்ற சோவியத் கப்பல்கள் அமெரிக்காவினால் நடுக்கடலில் வழிமறிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையில் ஒரு அணுவாயுதப் போர் மூளுவது தவிர்க்கப்பட்டது.

1976 – கியூபா புதிய அரசியல் யாப்பை எழுதிக் கொண்டது. அதன்படி கியூபா கம்யூனிஸ்ட் கட்சியே நாட்டின் முதன்மையான அதிகார மையம் எனப் பிரகடனப்படுத்தப்பட்டது. 1980 – கியூபாவை விட்டு 125,000 கியூபன்ஸ் அமெரிக்காவிற்கு படகுகளில் ஏறித் தப்பி ஓட்டம்.

1991 – சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டது. கியூபாவுக்குக் கிடைத்து வந்த பொருளாதார உதவி நிறுத்தப்படுகிறது. பொருளாதாரம் சீர்குலைந்தது.

1993 – கியூபா பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்கிறது. அதன்படி தனியாட்கள் வாணிகம் நடத்த அனுமதிக்கப் பட்டார்கள்.

1994 – மீண்டும் கியூபன்ஸ் நாட்டை விட்டு வெளியேறி அமெரிக்காவில் அரசியல் தஞ்சம் அடைகிறார்கள். இதனைத் தொடர்ந்து ஆண்டு தோறும் 20,000 கியூபன்சை அமெரிக்க நாட்டுக்குள் அனுமதிக்கும் உடன்பாடு ஒன்று இரண்டு நாடுகளுக்கும் இடையில் எழுதப்பட்டது.

1998 – போப்பாண்டவர் இரண்டாவது சின்னப்பர் கியூபாவுக்கு வரலாற்று முக்கியம் வாய்ந்த பயணம் ஒன்றை மேற்கொண்டார். அறுபதுகளில் மத சுதந்திரம் கியூபாவில் தடை செய்யப்பட்டது.

இன்றைய கியூபா பற்றி சில தரவுகளைப் பார்ப்போம்.மக்கள் தொகை – 113,46,670 (2005 ஆம் ஆண்டு மதிப்பீடு) (இலங்கை 190 இலட்சம்)

இனங்கள் – கலப்பினம் – 51 விழுக்காடு (Mulatto 51%)
– வெள்ளையர் – 37 விழுக்காடு
– கருப்பர் – 11 விழுக்காடு
– சீனர் – 1 விழுக்காடு

நிலப்பரப்பு – 110,922 சதுர கிமீ ( 43,000 சதுர கல் ) இலங்கை 65,610 சதுர கிமீ (25,332 சதுர கல்)

அரச மொழி – இசுப்பானீயா

படித்தவர்கள் – 98 விழுக்காடு

மருத்துவர்கள் – 65,000 (200 பேருக்கு ஒரு மருத்துவர்)

தலைநகரம் – ஹவானா

சமயம் – கத்தோலிக்கம் (85 விழுக்காடு)

தேசிய வருமானம் தலைக்கு – 1260 அ. டொலர்கள் (இலங்கை 750 அ.டொலர்கள்)

சராசரி அகவை – 76.21 ஆண்டு

கியூபா மக்கள் தொகையில் 10 இல் ஏழு பேர் 1959 புரட்சிக்கு பின்னர் பிறந்தவர்கள். ஒரு துன்பியல் செய்தி. கியூபா தீவின் பூர்வீக குடிகள் இன்று இல்லை. அந்தத் தீவைக் கண்டு பிடித்த இசுப்பானியர் ஒருவர் மிஞ்சாமல் அவர்களைக் கொன்று ஒழித்து விட்டார்கள்! அந்தத் துன்பியலை இன்னொரு தருணத்தில் சொல்லுவேன்.

காஸ்ரோவின் ஊழி முடிவுக்கு வந்துவிட்டதா? ஆம் என்பதே இதற்குப் பதில் ஆகும். எண்பது வயதை எட்டிவிட்ட காஸ்ட்ரோவின் உடல் நலம் பழைய நிலைக்குத் திரும்பினாலும் ஆட்சி மீது அவர் வைத்திருந்த பிடி திரும்ப வாய்ப்பில்லை.

பொதுவாக ஒரு கட்சி ஆட்சியுள்ள நாடுகளில் அதன் தலைவர் மறைய நேர்ந்தால் பாரிய அரசியல் – பொருளாதார மாற்றங்கள் ஏற்படுவது இயல்பாகும்.

சோவியத் ஒன்றியத்தின் சர்வாதிகாரி ஸ்டாலின் மறைவுக்குப் பின்னர் ஸ்டாலின் பலத்த கண்டனத்துக்கு உள்ளானார். தனது அரசியல் எதிரிகளை கேட்டுக் கேள்வியின்றி தீர்த்துக் கட்டியவர் என்ற குற்றச் சாட்டுக்கள் அவர் மீது வீசப்பட்டன.

மாசே துங்கின் கதையும் அதுதான். அவரது மறைவுக்குப் பின்னர் சீனாவின் பொருளாதாரக் கொள்கை தலை கீழ் மாற்றம் கண்டது. அவரால் ஓதுக்கி வைக்கப்பட்டிருந்த கட்சித் தலைவர்கள் மாசே துங்கின் ஆதரவாளர்களை தூக்கி எறிந்து விட்டு ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டார்கள்.

இதே போல் யூகோசிலாவிய சோசலீச குடியரசின் ஆட்சித் தலைவர் ரிட்ரோ மறைந்த பின்னர் அந்த நாடு சிதறத் தொடங்கியது.

கியூபாவில் தனிக்கட்சி ஆட்சி நடைபெறுவதால் அங்கு அரை நூற்றாண்டு காலமாக மக்களின் உண்மையான நாடித் துடிப்பைக் கணிக்கும் வாய்ப்பில்லாது போய்விட்டது. பேச்சுச் சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம் இல்லை.

சுதந்திரமான ஊடகங்கள் இல்லை. மனிதவுரிமை பேணப்படுவதில்லை. காஸ்ட்ரோவின் கம்யூனிச ஆட்சிக்கு வெளிப்படையான எதிர்ப்பு இல்லை. உள்ளுர இருக்கலாம். ஆனால் முறையான தேர்தலைக் கண்டிராத நாட்டில் எதிர்ப்பு இருக்கிறதா இல்லையா என்பதைக் கண்டறிவது கடினம்.
காஸ்ட்ரோவின் கம்யூனிச ஆட்சியை விரும்பாதவர்கள் அந்த நாட்டை விட்டு ஓடி விட்டார்கள். அவர்கள் எல்லோரும் இப்போது புளரிடா, மியாமி, நியூ யோர்க், இலினோய் மற்றும் கலிபோர்னியா போன்ற நகரங்களில் வாழ்கிறார்கள்.

கியூபாவில் இருந்து ஓடி வருபவர்களுக்கு அமெரிக்கா அண்மைக் காலம் வரை மறு கேள்வி கேட்காது குடியுரிமை வழங்கி வந்தது.

அமெரிக்காவில் இப்போது பத்து இலக்கம் கியூபன்ஸ் வாழ்கிறார்கள். இதனால் புளரிடா மாநிலத்தில் உள்ள பல தொகுதிகளில் வேட்பாளர்களின் வெற்றி தோல்வியை கியூபானியர் தீர்மானிக்கிறார்கள்!

மிக அண்மையில் (2005) Forbes என்ற அமெரிக்க சஞ்சிகை காஸ்ட்ரோ உலகளாவிய கோடீசுவரர்களது பட்டியலில் 7 ஆவது இடத்தில் இருக்கிறார் எனச் செய்தி வெளியிட்டது. அவரது சொத்தின் பெறுமதி 900 மில்லியன் அமெரிக்க டொலர் என அது மதிப்பிட்டது. அதாவது 11 ஆவது இடத்தில் வைக்கப்பட்ட பிரித்தானியா அரசி இரண்டாவது எலிசபெத்தின் சொத்தின் பெறுமதியை விட இரண்டு மடங்கு. இந்தச் செய்தியில் உண்மை இல்லை.
பிடல் காஸ்ட்ரோ மிக எளிய வாழ்க்கை வாழ்கிறார். சாதாரண இராணுவ உடையை அணிகிறார். அவரது பெரிய ‘கட் அவுட்’ டுகளை அல்லது சிலைகளை கியூபாவில் எங்குமே பார்க்க முடியாது. சுற்றுலா அங்காடிகளில் சிறிய புகைப் படங்கள் மட்டும் விற்கப்படுகின்றன.

ஒரே ஒரு தலைவரது பெரிய படங்கள் சிலைகள் மட்டும் முக்கிய சதுக்கங்களில் காணப்படுகின்றன. அவர் யார் என்பது உங்களுக்குத் தெரியும். கியூபா புரட்சியின் போது காஸ்ட்ரோவின் வலது கையாக விளங்கியவர். புரட்சிக்குப் பின்னர் பதவி எதுவும் வேண்டாம் என்று சொல்லிவிட்டு பொல்வியா சென்று அங்கு ஆட்சியைக் கவிழ்க்கப் போராடி இறந்த சே குவாரா. இதனால் காஸ்ரோவை விட சே குவாராவே புரட்சியாளர்களது மானசீக குருவாக விளங்குகிறார்.

புரட்சிக்குப் பிந்திய கியூபாவின் பொருளாதாரம் நொடிந்து போய் உள்ளது. மக்களின் உணவு உடை உறைவிடம் போன்ற அடிப்படைத் தேவைகள் பெருமளவு நிறைவு செய்யப்பட்டாலும் கியூபா ஒரு ஏழை நாடாகவே இருக்கிறது. நேரில் கியூபாவைப் பார்த்தவர்களுக்கு இந்த உண்மை புலப்படும்.

நாற்பத்து எட்டு ஆண்டுகள் கழிந்தும் கியூபா நாட்டு மக்களது வாழ்க்கைத் தரம் உயர்த்தப்படவில்லை என்பது ஒரு சோக வரலாறுதான்.

கியூபாவில் தனி மனித மாத வருமானம் 40 பேசோ தொடக்கம் 400 பேசோ வரை இருக்கிறது. 27 பேசோ ஒரு அமெரிக்க டொலர் என்ற விழுக்காட்டில் 400 பேசோ வருமானம் 15 அமெரிக்க டொலரைவிடக் குறைவாகவே இருக்கும். ஒரு மருத்துவரது சம்பளமும் இதுதான்.

கியூபாவுக்கு சுற்றுலா போகிறவர்கள் ஒரு ஹோட்டல் ஊழியருக்கு ஒரு அமெரிக்க டொலரை அன்பளிப்பாகக் கொடுத்தால் அது அவரது 4 நாள் சம்பளத்துக்கு சமமாக இருக்கும்.சுற்றுலாத்துறைக்குப் பெயர் போன கியூபாவில் ஹோட்டல் ஊழியர்கள் ஒரு மருத்துவர் உழைப்பதை விடக் கூடுதலாக சம்பாதிக்கிறார்கள். பெரும்பாலும் கம்யூனிஸ்ட் கட்சி விசுவாசிகளே இப்படியான வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள்.

அமெரிக்காவின் பொருளாதாரத் தடை கியூபாவின் பொருளாதரத்தைப் பாதித்துள்ளது என்பது உண்மைதான். இந்தத் தடையால் அந்நிய முதலீடு வரண்டு போனது. அதனல் தொழில்துறை பாதிக்கப்பட்டது. ஆனால் வேளாண்மைத் துறையில் கூட கியூபா பாரிய முன்னேற்றத்தை எட்டவில்லை.ஒரு சோசலீச நாட்டில் எல்லோரும் சமம் எல்லோரும் ஓரு நிறை என்பது வறுமையைப் பங்கிட உதவுகிறதே ஒழிய செல்வத்தைப் பங்கிட உதவுவதில்லை.

ஒரு நாடு முன்னேற வேண்டும் என்றால் பொருள் உற்பத்தையைப் பெருக்க வேண்டும். அப்படிச் செய்தால்தான் பெரிய அப்பத்தை மக்களுக்குப் பங்கிடலாம். ஆனால் இது சோசலீச பொருளாதாரத்தில் நடைபெறுவது இல்லை. எல்லோருக்கும் எல்லாம் என்ற முழக்கம் எவரும் எதற்கும் பொறுப்பில்லை என்றாகி விடுகிறது.

ஒருவன் கூட்டுப் பண்ணையில் காட்டுகிற அக்கறைக்கும் தன் சொந்தக் காணியை உழுது விதைத்து அதன் பலன் முழுவதையும் தனக்கே வைத்துக் கொள்ளக் காட்டுகிற முயற்சிக்கும் நிறைய வேற்றுமை இருக்கிறது. இது மனித சுபாவம். அதனை அரசியல் – பொருளாதாரத் தத்துவங்கள் மாற்ற முடியாது.

காஸ்ட்ரோவின் மறைவுக்குப் பின்னர் கியூபாவில் பெரிய அரசியல் மாற்றம் ஏற்படாவிட்டாலும் பொருளாதார மாற்றங்கள் இடம்பெறும் என நிச்சயம் சொல்லலாம்.

ராவுல் காஸ்ட்ரோ தாராள பொருளாதார கொள்கைகளில் நம்பிக்கை உடையவர் எனச் சொல்லப்படுகிறது. எனவே காஸ்ட்ரோவிற்குப் பிறகு இடம்பெறப் போகும் மாற்றங்கள் இடம் பெறலாம். ராவுல் காஸ்ரோ மறைந்த பின்னர்தான் அரசியல் மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.

கியூபாவில் இடம் பெற்றுள்ள கம்யூனிஸ்ட் ஆட்சியைக் கவிழ்க்கும் அமெரிக்காவின் திட்டம் இன்னும் கைவிடப்படவில்லை.(WEDNESDAY, AUGUST 09, 2006)

About editor 3116 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply