பொன்னியின் செல்வன்: ஆதித்த கரிகாலன் கொலையின் பின்னணியில் இருந்தது யார்? உண்மை வரலாறு

பொன்னியின் செல்வன்: ஆதித்த கரிகாலன் கொலையின் பின்னணியில் இருந்தது யார்? உண்மை வரலாறு

  • முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பிபிசி தமிழ்

7 அக்டோபர் 2022

ஆதித்த கரிகாலன் கொலை

பிற்கால சோழர் சரித்திரத்தில் மிகத் திருப்புமுனையான சம்பவமாகவும் இதுவரை தீராத புதிர்களில் ஒன்றாகவும் ஆதித்த கரிகாலனின் கொலை சம்பவம் விளங்குகிறது. இந்தக் கொலை எப்படி நடந்தது? கொலையைச் செய்தவர்கள் நீண்ட நாட்களுக்குத் தண்டிக்கப்படாதது ஏன்?

விஜயாலயச் சோழனில் துவங்கும் பிற்காலச் சோழ வம்சத்தில் வந்த இரண்டாம் பராந்தகச் சோழன் எனப்படும் சுந்தர சோழனின் மூத்த மகன்தான் ஆதித்த கரிகாலன். சுந்தர சோழனுக்கு பராந்தகன் தேவியம்மன், வானவன் மாதேவி என இரண்டு மனைவிகள் இருந்தனர். அதில் வானவன் மாதேவி என்ற மனைவிக்கும் சுந்தர சோழனுக்கும் மூன்று குழந்தைகள் பிறந்தன. முதலாவதாக ஆதித்த கரிகாலனும் இரண்டாவதாக குந்தவையும் மூன்றாவதாக அருள்மொழியும் பிறந்தனர்.

சோழ நாட்டு வரிசைப்படி பார்த்தால், சுந்தர சோழன் பட்டத்திற்கு உரியவர் அல்ல. கண்டராதித்த சோழர் இறக்கும்போது அவருடைய மகனான மதுராந்தக உத்தம சோழர் சிறுவனாக இருந்ததால், அவருடைய தம்பியான அரிஞ்சய சோழர் பட்டத்திற்கு வந்தார். அவரும் உடனே இறந்ததால், அவருடைய மகனான சுந்தரசோழர் ஆட்சிக்கு வந்தார். சுந்தர சோழரின் ஆட்சிக் காலம் முடிவதற்குள்ளாகவே கண்டராதித்தரின் மகன் மதுராந்தக உத்தம சோழருக்கு, தான் ஆட்சி செய்ய வேண்டும் என்ற விருப்பம் ஏற்பட்டிருந்தது.

சுந்தர சோழனின் மூத்த மகனான ஆதித்த கரிகாலன் சிறுவயதிலேயே வீரத்துடன் விளங்கினான். பாண்டிய நாட்டின் மன்னனான வீர பாண்டியனைப் போரில் வென்றான் என்பதை ஆனைமங்கலச் செப்பேடுகள் தெரிவிக்கின்றன.

“இளைஞனான ஆதித்தியன் மனுகுலத்தின் ஒளி போன்றவன் மதங்கொண்ட யானைகளோடு சிங்கக் குட்டி விளையாடுவது போன்று வீரபாண்டியனுடன் இவன் போர் செய்தான்,” என்கிறது ஆனைமங்கலச் செப்பேடு.

இதையடுத்து கி.பி 966இல் ஆதித்த கரிகாலனுக்கு இளவரசுப் பட்டம் கட்டப்பட்டது. ஆனால், இளவரசுப் பட்டம் சூட்டப்பட்டு மூன்று ஆண்டுகளிலேயே, அதாவது கி.பி. 969இல் அவன் கொல்லப்பட்டான். இந்த சோகம் தாங்காமல் அடுத்த சில மாதங்களிலேயே ஆதித்த கரிகாலனின் தந்தையான சுந்தர சோழன் உயிரிழந்தார்.

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலில் நிகழும் மிக முக்கியமான இரு சம்பவங்களில் ஒன்று, கடம்பூர் அரண்மனையில் நடக்கும் சதி. மற்றொன்று கடம்பூர் அரண்மனையில் நடக்கும் ஆதித்த கரிகாலனின் கொலை.

நாவலைப் பொறுத்தவரை, ஆதித்த கரிகாலனை பெரிய பழுவேட்டரையரே கொன்றதாக அவரே ஒப்புக்கொள்கிறார். மறைந்திருந்து நந்தினியைக் கொல்வதற்காக எரிந்த கத்தி, ஆதித்த கரிகாலன் மேல் பட்டு அவன் இறந்து விட்டதாக அவர் கூறுகிறார். இதற்குப் பிராயச்சித்தமாக தன்னைத்தானே கத்தியால் குத்திக்கொண்டு அவர் இறக்கிறார்.

ஆதித்த கரிகாலன் கொலை

ஆனால், நாவல் துவங்கியதிலிருந்து, ரவிதாஸன், சோமன் சாம்பவன், பரமேஸ்வரன் ஆகிய பாத்திரங்கள் சோழ வம்சத்தை அழிக்க முயற்சி செய்வதாகக் காட்டப்படுகிறது. இவர்கள், பாண்டிய நாட்டு ‘ஆபத்துதவிகள்’ என்றும் வீர பாண்டியனை ஆதித்த கரிகாலன் கொன்றதால், அதற்குப் பழிவாங்க முயற்சிப்பதாகவும் கல்கி காட்டுகிறார்.

ஆனால், ஆதித்த கரிகாலன் கொலை குறித்து வரலாறு காட்டும் செய்திகள் வேறு விதத்தில் இருக்கின்றன. இந்தக் கொலையைப் பற்றி முதலில் எப்படித் தெரியவந்தது என்று பார்க்கலாம்.

கடலூர் மாவட்டம் காட்டு மன்னார்குடிக்கு அருகில் உள்ள உடையார்குடியில் அனந்தீஸ்வரம் என்ற சிவன் கோவில் இருக்கிறது. இந்த சிவன் கோவில் கருவறையின் மேற்குப் புறத்தில் ஒரு சாசனம் காணப்படுகிறது.

ராஜராஜ சோழன் ஆட்சிக்கு வந்த இரண்டாவது ஆண்டில் பொறிக்கப்பட்ட இந்த சாசனம், ஆதித்த கரிகாலன் கொலையை அடுத்து கொலை தொடர்புடையவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்களை, விற்பனை செய்ய அனுமதி அளிக்கிறது.

“பாண்டியனைத் தலைகொண்ட கரிகால சோழனைக் கொன்று துரோகிகளான சோமன்… றம்பி ரவிதாசனான பஞ்சவன் பிரம்மாதிராஜனும் இவன் றம்பி பரமேஸ்வரன் ஆன இருமுடிச் சோழ பிரம்மாதிராஜனும் இவர்கள் உடப்பிறந்த மலையனூரானும் இவர்கள் தம்பிமாரும் இவர்கள் மக்களிடும் இவர் பிரமாணிமார் பெற்றாளும் இ……..ராமத்தம் பேரப்பன் மாரிடும் இவர்கள் மக்களிடம் இவர்களுக்குப் பிள்ளை குடுத்த மாமன்மாரிடும் தாயோடுடப் பிறந்த மாமன் மாமன்மாரிடும் இவர்கள் உடபிறந்த பெண்களை வேட்டாரினவும் இவர்கள் மக்களை வேட்டாரினவும் ஆக இவ்வனைவர் (முடமை)யும் நம் ஆணைக்குரியவாறு கொட்டயூர் பிரம்ம ஸ்ரீராஜனும் புள்ளமங்கலத்து சந்திரசேகர பட்டனையும் பெறத்தந்தோம்” என்கிறது இந்தக் கல்வெட்டின் ஒரு பகுதி.

ஆதித்த கரிகாலன் கொலை

இந்தக் கல்வெட்டிலிருந்து சோமன், அவனுடைய தம்பி ரவிதாசன் பஞ்சவன் பிரம்மாதிராஜன், அவன் தம்பி பரமேஸ்வரன் இருமுடிச் சோழ பிரம்மாதிராஜன் ஆகியோர் ஆதித்த கரிகாலனைக் கொன்ற துரோகிகளாக அடையாளம் காட்டப்படுகின்றனர்.

சோமன், அவனுடைய தம்பி ரவிதாசன், அவனுடைய தம்பி பரமேஸ்வரன் ஆகிய மூவரும் யார்? இவர்கள் எதற்காக இந்தக் கொலையைச் செய்தனர் என்பது அடுத்த கேள்விகள். இதில் பஞ்சவன் பிரம்மாதிராஜன் என்பது பாண்டிய நாட்டு அந்தண அதிகாரிகளுக்குக் கொடுக்கப்படும் பட்டத்தைக் குறிக்கிறது. இருமுடிச் சோழ பிரம்மாதிராஜன் என்பது சோழ நாட்டு அந்தண அதிகாரிகளுக்குக் கொடுக்கப்படும் பட்டத்தைக் குறிக்கிறது. ஆகவே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரில் ஒருவர் பாண்டிய நாட்டிலும் மற்றொருவர் சோழ நாட்டிலும் அதிகாரிகளாக இருந்திருக்கின்றனர்.

Presentational grey line
Presentational grey line

இவர்கள் யாருக்காக இந்தக் கொலைகளைச் செய்தனர்? வீர பாண்டியனின் மரணத்திற்குப் பழிவாங்க இந்தக் கொலை செய்யப்பட்டது என்பது ஒரு கூற்று. தான் பதவிக்கு வர வேண்டுமென்பதால் உத்தம சோழனே பட்டத்து இளவரசனான ஆதித்த கரிகாலனைக் கொலை செய்ய சதி செய்தான் என்பது இன்னொரு கூற்று. ராஜராஜ சோழனும் குந்தவையும் இந்தக் கொலைக்குப் பின்னணியில் இருந்தார்கள் என்பதும் சிலரின் கருத்தாக இருக்கிறது.

“சோழர்கள்” நூலை எழுதிய கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி, ஆதித்த கரிகாலனின் கொலைசெய்யப்பட்டதன் பின்னணியில் அவனுடைய ஒன்றுவிட்ட சித்தப்பனான உத்தமசோழனே இருந்திருக்க வேண்டும் என்கிறார்.

“உத்தம சோழனுக்கு இந்தக் கொலையில் தொடர்பில்லை என்று கூறுவதற்கில்லை. உத்தம சோழனுக்கு அரியணை ஏற வேண்டுமென்ற ஆசை இருந்தது. தன்‌ ஒன்றுவிட்ட சகோதரனும்‌, அவன்‌ மக்களும்‌ அரியணையைத்‌ தன்னிடமிருந்து பறித்துக் கொண்டதாகக்‌ கருதினான்‌. தனக்கு ஆதரவாக ஆட்களைத்‌ திரட்டி இரண்டாம்‌ ஆதித்தனைக்‌ கொன்று, தன்னை இளவரசனாக்குமாறு, சுந்தர சோழனை வற்புறுத்தினான்‌. வேறு வழியின்றி சுந்தர சோழன் இதற்கு இசைந்தான்” என தனது சோழர்கள் நூலில் குறிப்பிடுகிறார் கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி.

ஆதித்த கரிகாலன்

ஆனால், பிற்காலச் சோழர்கள் நூலை எழுதிய தி.வை. சதாசிவ பண்டாரத்தார், இந்தக் கருத்தை ஏற்கவில்லை. “ராஜராஜ சோழன் தன் சிறிய தந்தையாகிய உத்தம சோழனுக்கு நாட்டை புரிவதில் விருப்பமுள்ளவரையில் தான் அதனை மனதால்கூட விரும்புவதில்லை எனத் தன் குடிகளிடம் கூறினான் என்பது திருவாலங்காட்டுச் செப்பேடுகளால் அறியக் கிடைக்கிறது. உத்தமசோழன் இளவரசனாயிருந்தவனைக் கொல்லும்படி செய்து, தான் பட்டம் பெற முயன்றிருந்தால் அவனுக்குக் குடிகள் ஆதரவும் அரசியல் அதிகாரிகள் கூட்டுறவும் என்றும் கிடைத்திருக்க மாட்டா.

மேலும் உத்தம சோழன் ஆட்சியில் ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்களுக்குத் தண்டனை விதிக்கப்படாமல் ராஜராஜசோழன் ஆட்சியின் இரண்டாம் ஆண்டிலே விதிக்கப்பட்டிருந்ததால் அக்கொலை நிகழ்ச்சியில் உத்தம சோழனுக்கும் தொடர்பு இருந்திருத்தல் வேண்டும் என்பது ஒரு சிலர் கொள்கை. கொலை புரிந்தோரில் ஒருவனுக்கும் அவனைச் சார்ந்தோருக்கும் கிடைத்த தண்டனை ராஜராஜன் ஆட்சியில் நிறைவேற்றப்பட்டமை உடையார் குடி கல்வெட்டால் அறியப்படுகிறது. மறைவில் நிகழ்ந்த அக்கொலையில் தொடர்புடையவர் யாவர் என்பதை ஆராய்ந்து பார்த்து அனைவருக்கும் தண்டனை விதிப்பதற்குள், சில ஆண்டுகள் கழிந்திருக்கலாம். அதற்குள் உத்தம சோழன் ஆட்சி முடிந்திருக்கலாம். இதனால் எஞ்சியோருக்கு ராஜராஜ சோழன் ஆட்சியில் தண்டனை விதிக்கும்படி நேர்ந்தது இயல்பே. அதற்காக, அந்தக் கொலை பற்றி ஒருவருக்கும் உத்தம சோழன் தண்டனை விதிக்கவில்லை என்று எத்தகைய ஆதாரமும் இன்றி எவ்வாறு கூற முடியும்?” எனக் கேள்வி எழுப்புகிறார் சதாசிவ பண்டாரத்தார்.

1971ஆம் ஆண்டு வெளிவந்த சென்னை விவாகானந்தா கல்லூரி மலரில் ஆர்.வி. சீனிவாசன் என்பவர் எழுதிய இராஜராஜ சோழன் பற்றிய கட்டுரை ஒன்றில், ஆதித்த கரிகாலன் கொலையின் பின்புலத்தில் செயல்பட்டவர்கள் அருண்மொழியும் அவனது தமக்கை குந்தவையும்தான் என்று கூறியிருப்பதை குடவாயில் பாலசுப்பிரமணியம் வேறொரு கட்டுரை ஒன்றில் சுட்டிக்காட்டுகிறார்.

ஆதித்த கரிகாலன் கொலை

“உடையார்குடிக் கல்வெட்டு ஒரு மீள்பார்வை” என்ற அந்தக் கட்டுரையில், ஆதித்த கரிகாலன் தொடர்பாக பல்வேறு முடிவுகளை முன்வைக்கிறார் குடவாயில் பாலசுப்பிரமணியம். “ஆதித்த கரிகாலனின் கொலைக்குரிய திட்டம் பாண்டிய நாட்டிலேயே உருவானது என்பது திண்ணம். எசாலத்தில் வெளிப்பட்ட முதலாம் இராஜேந்திர சோழனின் செப்பேட்டுத் தொகுதியில் ஆதித்த கரிகாலன் பாண்டியனின் தலையைக் கொய்து, ஒரு கழியில் சொருகி, தஞ்சாவூர் அரண்மனை வாயிலில் நட்டு வைத்தான் என்று கூறுகிறது. போர்த் தர்மத்தையும் மீறி ஆதித்த கரிகாலன் செய்த அடாத செயலுக்குப் பழி தீர்க்கும் வகையில்தான் இக்கொலை நிகழ்ந்துள்ளது” என்கிறார் அவர்.

மேலும், “மதுராந்தக உத்தம சோழனின் ஆட்சிமுறை, அவன்பால் ராஜராஜசோழன் கொண்ட பெருமதிப்பு, தன் புதல்வன் இராஜேந்திர சோழனுக்கு மதுராந்தகன் எனப் பெயர் சூட்டி அழைத்தது, செம்பியன் மாதேவியார் இராஜராஜ சோழன்பால் பேரன்பு கொண்டு அவனுடன் வாழ்ந்தது ஆகிய வரலாற்று நிகழ்வுகளின் சான்றாதாரங்களை ஆழ்ந்தும் கூர்ந்தும் நோக்கினால், அவன் மீது கொலைப் பழி சுமத்துவது எவ்வகையிலும் ஏற்புடையதாகாது என்கிறார்.

மேலும், உடையார்குடிக் கல்வெட்டை மட்டும் எடுத்துக் கொண்டு ஆதித்த கரிகாலன் கொலை தொடர்பான எல்லா முடிவுகளுக்கும் வர முடியாது என்றும் தன் கட்டுரையில் குறிப்பிடுகிறார் பாலசுப்பிரமணியன். “உடையார்குடி கல்வெட்டுச் சாசனம் என்பது ஆதித்த கரிகாலனைக் கொலை செய்தவர்கள் யாவர் என்பதை ஒரு வரியில் கூறும் ஒரு கல்வெட்டேயன்றி அக்கொலை பற்றிய பிற செய்திகளையோ அல்லது அவர்களுக்கு கொடுக்கப் பெற்ற தண்டனை பற்றியோ விவரிக்கும் சாசனமாகாது” என்கிறார் அவர்.

பொன்னியின் செல்வன்: ஆதித்த கரிகாலன் கொலையின் பின்னணியில் இருந்தது யார்? உண்மை வரலாறு – BBC News தமிழ்

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply