அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை நிரந்தர எதிகளும் இல்லை

அரசியலில் நிரந்தர நண்பர்களும் எதிரிகளும் இல்லை

 நக்கீரன்

கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிச்சுக் கொண்டு கொடுக்குமாம். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் சனாதிபதி இரணில் விக்கிரமசிங்க அவர்களைப் பொறுத்தளவில் வியாழன் பட்டையிலும் வெள்ளி துலாவிலும் இருக்கின்றன.

கடந்த மே 22 அன்று இரணில் பிரதமராக,  சனாதிபதி கோட்டாபய இராசபக்ச அவர்களால் நாட்டின் 26 ஆவது பிரதமராக நியமிக்கப்பட்டார். இப்போது எண்ணி இரண்டு மாதம் கழித்து நாடாளுமன்றத்தால் நாட்டின் 8 ஆவது  சனாதிபதியாக யூலை 20 அன்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Sri Lanka's newly elected president Ranil Wickremesinghe sworn into office  - News Tinger | Latest News Updates

இவ்வளவிற்கும் அவரது ஐக்கிய தேசியக் கட்சி கடந்த ஓகஸ்ட் 05,  2020 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் வேரோடும் வேரொடு மண்ணோடும் கல்லி எறியப்பட்டது. ஒரு இருக்கையை ஆவது அந்தக் கட்சி பெற முடியவில்லை. மொத்தம் 106 நா.உறுப்பினர்களோடு களம் இறங்கிய ஐக்கிய தேசியக் கட்சி தேசிய மட்டத்தில் 249,435 (2.15 விழுக்காடு) வாக்குகளைப் பெற்று ஐந்தாவது இடத்துக்குத் தள்ளப்பட்டது. தேசியப்பட்டியல் மூலம் ஒரு இருக்கை மட்டும் கிடைத்தது.

கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட  இரணில் விக்கிரமசிங்க படுதோல்வி அடைந்தார். ஐக்கிய தேசியக் கட்சிக்கு வெறுமனே 30,875 (2.81 விழுக்காடு) வாக்குகளே கிடைத்தன. இரணில் மட்டுமல்ல ஐதேக இன் முக்கிய தலைவர்களான  இரவி கருணநாயக்க (நிதி அமைச்சர்) திலங்க சுமதிபால  போன்றோர் தோல்லி அடைந்தனர்.   2015 இல் நடந்த தேர்தலில் இரணில் விக்கிரமசிங்க 500,506 விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றிவாகை சூடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய தேசியக் கட்சியின் படு தோல்விக்கு அந்தக் கட்சியில் ஏற்பட்ட பிளவுதான் காரணம். சஜித் பிரேமதாச தலைமையில் வெளியேறிய பல இரண்டாம் கட்டத் தலைவர்கள் புதிதாக ஐக்கிய மக்கள் சக்தி என்ற கட்சியைப் பதிவு செய்து தேர்தலைச் சந்தித்தார்கள்.  அந்தக் கட்சி  2,771,984  (23.90 விழுக்காடு ) வாக்குகளைப் பெற்று 54 இருக்கைககளைக் கைப்பற்றியது.

இரணில் விக்கிரமசிங்க அரசியலில் பழமும் தின்று கொட்டையும் போட்டவர்.   அவர்  நாட்டின் வரலாற்றில் அதிக தடவைகள் பிரதமராக பதவியேற்றுள்ளார். ஆறு தடவைகள் (மே 1993, டிசெம்பர் 2001, ஜனவரி 2015, ஓகஸ்ட் 2015, டிசெம்பர் 2018 மற்றும் மே 2022) பிரதமராக இருந்தும் அவர் ஒருமுறை தன்னும் தனது பதவிக்காலத்தை நிறைவு செய்யவில்லை.  டட்லி  சேனாநாயக்க மற்றும் சிறிமாவோ பண்டாரநாயக்க ஆகியோர்  மூன்றுமுறை மட்டுமே பிரதமராக இருந்திருக்கிறார்கள்.

பிரித்தானியர்களிடம் இருந்து இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர் 1949 இல் பிறந்த விக்கிரமசிங்க, தனது பல்கலைக்கழக நாட்களில் இருந்து ஐதேக இன்  இளைஞர் அணியில்  பணியாற்றி 1977 இல் 28 அகவையில் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது இலங்கையின் இளைய அமைச்சராக இருந்த அவர்,  அவரது மாமனார் சனாதிபதி ஜெயவர்த்தனவின் கீழ் வெளியுறவு துணை  அமைச்சராகப் பதவி வகித்தார்.

பின்னர் அவர் இளைஞர் அலுவல்கள்  வேலைவாய்ப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார். கல்வி அமைச்சராகவும் இருந்துள்ளார்.  பின்னர் 1989 இல், சனாதிபதி பிரேமதாசவின் கீழ் அவைத் தலைவராக நியமிக்கப்பட்டார். தொழில், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.

1991 ஆம் ஆண்டு  ஐதேக க்குள் காமினி திசநாயக்க மற்றும்  அத்துலமுதலி ஒரு பக்கமும் மறுபக்கம்  இரணசிங்க  பிரேமதாச  இடையில்  உட்கட்சி மோதல் ஏற்பட்ட போது இரணில் கட்சித் தலைவர் பிரேமாதாசாவை ஆதரித்தார்.

சனாதிபதி தேர்தலில் இரணில் விக்கிரமசிங்கவுக்கு 134 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. இது மொத்தம் 225 உறுப்பினர்களில் 60 விழுக்காடாகும்.  இதனை யாரும் எதிர்பார்க்கவில்லை. கடந்த தேர்தலில் போட்டியிட்ட பொதுசன பெரமுன 145 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது.  தேர்தலுக்குப் பின்னர் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த 4 நாடாளுமன்ற உறுப்பினர்கள், ரிசாட் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த 3 உறுப்பினர்கள் ஆளும் கட்சியோடு சேர்ந்து கொண்டார்கள். இதன் காரணமா 20 ஆவது சட்ட திருத்தம் 155 வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. 

இதன் பின்னர் பொதுசன பெருமனவில்  உடைவுகள் ஏற்பட்டன. சிறிலங்கா சுதந்திரக்கட்சி (15 உறுப்பினர்கள்) விமல் வீரவன்ச மற்றும் தயா கமன்பில போன்றோர் (10 உறுப்பினர்கள்) பொதுசன பெருமுனவில்  இருந்து விலகினார்கள். பின்னர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து 2 பேரும் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து இரண்டு பேரும் பொதுசன பெரமுனவுக்குத் தாவினார்கள்.  அமைச்சர் ஜிஎல் பீரிஸ், சனாதிபதி வேட்பாளர் டலஸ் அழகப்பெரும இருவரும் இரணிலுக்கு வாக்களிக்கவில்லை. அப்படிப்பார்த்தால்  122 வாக்குகளே விக்கிரமசிங்க அவர்களுக்கு விழுந்திருக்க வேண்டும். 134 வாக்குகள் எங்கிருந்து வந்தது?

வழக்கம் போல முஸ்லிம் நா.உறுப்பினர்கள் இரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு வாக்களித்துள்ளார்கள். சுதந்திரக் கட்சி நா.உறுப்பினர்கள் சிலர் மாறி வாக்களித்துள்ளார்கள் என அந்தக் கட்சியின் பொதுச் செயலாளரே தெரிவித்துள்ளார்.

1 நபர் மற்றும் , ’டலஸைக் களமிறக்கியவர்கள் தாங்களே என்கிறார் மஹிந்தர் நாம் டலஸை போட்டியிடச் செய் தோம். நாமும் வாக்களித்தோம். ஆனால் அவர் தோல்வியடைந்து விட்டார் என முன்னாள் பிரதமர் மஹிந்தராஜபக்ஷதெரிவித்துள்ளார். அதிக வாக்குகள் கிடைத்தமை யால் ரணில் விக்கிரமசிங்க வெற்றிப் பெற்றார். எதிர்காலத்தில் 68’ எனச்சொல்லும் உரை இன் படமாக இருக்கக்கூடும்

மகிந்த இராசபக்ச செய்தியாளர்களிடம் பேசும் போது  “நாங்கள் டலஸ் அழகப்பெருமாவை போட்டியிடச் செய்தோம்.  நாமும் வாக்களித்தோம். ஆனால் தோல்வி அடைந்துவிட்டார்” எனக் குறிப்பிட்டார்.  அழகப்பெருமாவுக்கு வாக்களித்தது உண்மையானால் அவர் ஆதரித்ததாகச் சொல்லும் அழகப்பெருமா எப்படித் தோற்றுப் போனார்? இது சனாதிபதி தேர்தல் நேர்மையாக நடைபெறவில்லை என்பதைக் காட்டுகிறது.

சனாதிபதி தேர்தலை அடுத்து ஒரு சர்வகட்சி அமைச்சரவை உருவாக்கப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டது. அது சாத்தியப்படுமா  என்பது தெரியவில்லை. ஏற்கனவே பொதுசன பெரமுனவைச் சார்ந்த  தினேஷ் குணவர்த்தன அடுத்த பிரதமர் என அறிவிக்கப்பட்டுள்ளது.  முன்னைய அமைச்சர்கள் மீண்டும் அமைச்சர்களாக நியமிக்கப்பட உள்ளார்கள்.

கடந்த மே மாதக் கடைசியில் பிரதமர் இரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகத்தினால் கொழும்பு காலி முகத்திடலில் உள்ள ‘கோட்டகோகம’ போராட்டத்  தளத்தில் போராட்டக்காரர்களுக்கான இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இரு கட்சிகளுக்கும் இடையிலான தொடர்பாடல் சாதனமாக சிறப்பு  இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஐதேக யின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்திருந்தார். அரசாங்கத்திற்கு எதிரான போராட்டக்காரர்கள் தமது சிக்கல்களை முன்வைக்கவும், தமது முன்மொழிவுகளை பிரதமரிடம் சமர்ப்பிக்கவும் இந்த இணையத்தளம் உதவும் என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

கோட்டகோகம எதிர்ப்பாளர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்து ஆராய பிரதமரால் நியமிக்கப்பட்ட விஜேவர்தன, போராட்டக்காரர்கள் இப்போது pmoffice.gov.lk ஊடாக தொடர்பு கொள்ள முடியும் என்றும் கூறினார்.

“நடைமுறை மற்றும் ஆக்கபூர்வமான முன்மொழிவுகளை முன்வைப்பவர்கள் பிரதமர் இரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாட அனுமதிக்கப்படுவார்கள். நான் போராட்டக்காரர்களுடன் இணைந்து அவர்களின் கோரிக்கைகளை வென்றெடுக்க முடியும் என்று நம்புகிறேன்”என்று அவர் மேலும் கூறினார்.

சனாதிபதியின் பதவி விலகல், பிரதமரின் பதவி விலகல் மற்றும் அரச முறைமை மாற்றத்தை வலியுறுத்தி அரசாங்கத்திற்கு எதிராக ‘கொட்டகோகம’வில் கடந்த 104 நாட்களுக்கும் மேலாக காலிமுகத் திடல் போராளிகளும், பல்கலைக் கழக மாணவர்களும்,  பொதுமக்களும் நாடு தழுவிய  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால் இரணில் விக்கிரமசிங்க சனாதிபதியாக பதவி ஏற்ற பின்னர் அவரது பேச்சில் சுருதி மாறிக் காணப்படுகிறது. யாரைப் போராளிகள் என வருணித்தாரோ அவர்களை இப்போது “பாசிஸ்ட்டுகள்” “கிளர்ச்சின்காரர்கள்” எனத் திட்டத் தொடங்கியுள்ளார்

தனது குறுகிய பதவிக் காலத்தில், சனாதிபதியின் அதிகாரங்களைக் குறைக்கவும், நாடாளுமன்றத்தைப் பலப்படுத்தவும் அரசியலமைப்பை மாற்றுவதற்கான நடவடிக்கைகளை தொடங்கவுள்ளதாக விக்கிரமசிங்க தொலைக்காட்சி அறிக்கை ஒன்றில் தெரிவித்தார். மேலும், சட்டம் ஒழுங்கை மீட்டெடுக்கப் போவதாகவும், கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகச்  சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் அவர் சூளுரைத்துள்ளார்.

மே 13 புதன்கிழமை இரவு நாடாளுமன்றத்திற்கு அருகில் இடம்பெற்ற மோதல்களில் பல இராணுவத்தினர் காயமடைந்ததாகக் கூறப்படும்போது, உண்மையான எதிர்ப்பாளர்கள் அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடமாட்டார்கள் என்று விக்கிரமசிங்க கூறுகிறார். “எதிர்ப்பாளர்களுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பெரிய வித்தியாசம் உள்ளது. கிளர்ச்சியாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்,” என்கிறார்.

கடந்த மே மாதம் விக்கிரமசிங்க அவர்களைப் பிரதமராக நியமித்தது கோட்டாபய இராசபக்சவை பதவி விலக வேண்டும் என்ற  அழுத்தத்தை குறைப்பதற்கு என்று  எதிர்ப்பாளர்கள் கருதுகிறார்கள்.  விக்கிரமசிங்க பதவி விலகு மட்டும் தங்கள் போராட்டம் தொடரும் என போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.

சனாதிபதி இரணில்  விக்கிரமசிங்க ஒன்றை மட்டும் மறந்துவிடக் கூடாது. யாரைப் பார்த்து “பாசிஸ்டுகள்” “கிளர்ச்சிக்காரர்கள்” என்று வசை பாடுகிறாரோ அவர்களது இடைவிடாத போராட்டம் காரணமாகவே அவர் இன்று சனாதிபதியாக மகுடம் சூட்டப்பட்டுள்ளார். இதனை அவர் மறக்கக் கூடாது.

இதற்கிடையில் வருகிற ஓகஸ்ட் மாதத்தில் நாடு திரும்பப் போவதாக சிங்கப்பூரில் இருந்து கோட்டாபய அறிவித்துள்ளார். சிங்கப்பூர் அரசு அவருக்கு 14 நாட்களுக்கு  மட்டும் விசா கொடுத்துள்ளது. இதுவரை எந்த நாடும்  அவருக்குக் கொடுக்க முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  அவர் இப்போது சாதாரண குடிமகன். ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை நிறைவேற்றிய தீமானத்துக்கு அமைய அவர் கால் பதிக்கும் நாடு அவரைக்  கைது செய்யலாம்.

2009 ஆம் ஆண்டு முடிவடைந்த இலங்கையின் நீண்ட உள்நாட்டுப் போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களை சேகரித்து பாதுகாக்க ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் தலைவர் Michelle Bachelet அதிகாரம் பெற்றுள்ளார். சந்தேக நபர்களை வெளிநாடுகளில் விசாரணை செய்ய வேண்டும் என்றும் சபையின் தீர்மானம் வலியுறுத்தியுள்ளது.

கோட்டாபய இராபக்சவுக்கு விசா வழங்க அமெரிக்கா மறுத்திருப்பதற்கு   பன்னாட்டு சர்வதேச அதிகார வரம்புச் சட்டம் காரணமா? என இலங்கையில் உள்ள சனாதிபதி சட்டத்தரணி ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். (https://island.lk/universal-jurisdiction-manohara-asks-whether-us-visa-refusal-aimed-at-gotabayas-arrest/)

சில மாதங்களுக்கு முன்னர் வரை இரணில் விக்ரமசிங்கவைத் துரோகி என்று முத்திரை குத்திய ஸ்ரீலங்கா பொதுசன பெரமுன நா.உறுப்பினர்கள்  தற்போது அவர் பின்னால் அணி திரண்டுள்ளனர் என இராமண்ணா பவுத்த பீடத்தின் பிரதம சங்கநாயக்க (தட்சிண லங்காவ) ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக எதையும் செய்வார்கள் எனவும், மக்களின் வேட்கைகளை அவர்கள் சிறிதும் கருதுவதில்லை எனவும் தேரர் கூறியுள்ளார்.

“மகிந்த இராசபக்ச முதல் பின்வரிசை உறுப்பினர்கள் வரை அனைத்துப் பொதுசன பெரமுன உறுப்பினர்களும் விக்கிரமசிங்கவை துரோகி எனக் குற்றம் சாட்டினார்கள்.  இப்போது அவருக்காக  தோட்டாக்களை விழுங்க அணியமாகிவிட்டனர். எனவே, விக்கிரமசிங்கவுக்கு எதிராக அவர்கள் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் பொய்யானதாக இருக்கலாம்” என்றும் தேரர் கூறினார்.

அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை நிரந்தர எதிகளும் இல்லை என்பதையே இரணில் விக்கிரமசிங்கா சனாதிபதியாகத்  தெரிவு செய்யப்பட்டது  காட்டுகிறது! (கனடா உதயன் – யூலை 22-07-2022)

About editor 3188 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply