பெரியார் பார்வையில் இந்து-கிறிஸ்துவம்-இஸ்லாம்
நமது நாட்டிலுள்ள கலைவாணர்கள் அனைவரும் இந்து மதத்தின் மாட்சிமையைப் பற்றி உரையாடாமலிருப்பதில்லை. “உலகத்தில் உள்ள மதங்கள் அனைத்திலும் பழைமையானது இந்துமதம்; கடவுள் என்பவராலேயே இம்மதம் இயற்றப்பட்டது. இதில் உள்ள தத்துவங்களும், கொள்கைகளும், கலைகளும் வேறு எந்த மதத்திலும் இல்லை. உலகத்திற்கெல்லாம் தத்துவ ஞானத்தை அளித்தது இம்மதமேயாகும். ஆதலால், இம்மதத்தைப் போற்றி வளர்த்தலே இந்தியர்களின் கட்டுப்பாடாகும். உயரிய பழம் செல்வநிதியாக இருக்கின்ற இந்து மதத்தைப் போற்றாவிட்டால் இந்தியர்களின் பெருமை குன்றிவிடும்” என்று வாயளவில் பேசிக் கொண்டு வருகிறார்கள்.
சுவாமி விவேகானந்தர் போன்றவர்கள் மேல் நாடுகளில் சுற்றுப்பிரயாணம் செய்த காலங்களிலும், இந்து மதத்தின் பெருமையைப் பற்றிப் பேசியிருக்கின்றார்கள். ஆனால், இன்று பழக்கத்தில், இந்துமதமானது அதில் உள்ள மக்களுக்கு – அதைத் தழுவியிருக்கும் மாந்தர்களுக்கு என்ன நன்மையை அளிக்கின்றது என்பது பற்றிச் சிறிது ஆராய்ந்து பார்ப்போம். இதை அறிவதற்கு முன் நமது நாட்டில் சிறந்து விளங்குகின்ற மற்ற மதங்கள், அவற்றைப் பின்பற்றும் மக்களுக்கு என்ன செய்கின்றன என்பது பற்றி சிறிது தெரிந்து கொள்வதும் இன்றியமையாததாகும். இச்செய்திகளை அறிந்த பின்னர் இந்து மதம் இந்துக்களுக்குச் செய்து வரும் நன்மையையும் அறிந்து இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்தால் சுயமரியாதை இயக்கத்தினர் இந்துமதத்தைக் குறை கூறுவதன் உண்மை நன்றாக விளங்கக்கூடும்.
முதலில் “முஸ்லிம் மார்க்கத்தை”க் கவனிப்போம். இம் மார்க்கத்தில் வெளிப் பார்வைக்கு எவ்வளவோ ஊழல்கள் காணப்படலாம். இந்து மதத்தைப் போலவே, புரோகிதர்களால் இடைக்காலத்தில் உண்டாக்கப்பட்ட பற்பல சடங்குகளும், அறியாமையை உண்டாக்கும் பழக்க வழக்கங்களும், பொருளற்ற செயல்களும் நடைபெற்று வரலாம். அவற்றையெல்லாம் விட்டு விட்டு முதன்மையான கொள்கைகளை மட்டிலும் உற்று நோக்குவோம்.
முதலில், “முஸ்லிம்” தோழர்கள் நம்மைப் போல், தங்களுக்குள்ளேயே மிகுந்த ஜாதிவேற்றுமை பாராட்டிக் கொள்வதில்லை. நாம் நம்மைச் சேர்ந்த இந்துக்களிலேயே பலரை தெருவில் நடக்க விடாமலும், கோயில்களுக்குள் நுழைய விடாமலும், குளம், கிணறுகளில் தண்ணீர் முகக்க விடாமலும், பள்ளிக் கூடங்களில் கல்வி பயில விடாமலும் தடுப்பது போல, அவர்கள் எந்த “முஸ்லிம்” சகோதரரையும் தடுப்பதில்லை. “முஸ்லிம்” என்று சொல்லக்கூடியவர்கள் எவராயிருப்பினும் அவர்களுடன் உடன் பிறந்தார் போல நடந்து கொள்ளுகின்றனர். அவர்களுடைய “மசூதி”களில் சிறிதும் வேறுபாடு இல்லாமல் அரசனும், பக்கிரியும் ஒன்றாக மண்டியிட்டு வணங்குகின்றனர்.
அன்றியும், அவர்களுடைய பெண்களுக்கும், ஆண்மக்களைப் போலவே எல்லா உரிமைகளையும் தாராளமாக அம்மதம் வழங்கியிருக்கின்றது. விதவா விவாகம் புரிந்து கொள்ளலாம்; விவாக விடுதலை செய்து கொள்ளலாம்; ஆண்மக்களைப் போலவே பெண்மக்களுக்கும் சொத்துரிமை உண்டு.
குடிப்பழக்கம் என்பது எள்ளளவும் அவர்களிடம் இல்லை. அதை மதம் மிகவம் வன்மையாகக் கண்டித்து ஒதுக்குகின்றது. அன்றியும், நம்மைப் போன்று “விக்கிரக ஆராதனம்” செய்யாத காரணத்தால் குடிப்பழக்கம் ஏற்படுவதற்கே இடமில்லாமலும் ஒழித்து விட்டது என்றே கூறலாம்.
மேற்கூறிய சிறந்த கொள்கைகள் இன்றும் “இஸ்லாம் மார்க்க”த்தில் நிலை பெற்று இருக்கும் காரணத்தால், அதைப் பின்பற்றும் மக்கள் வரவர வளர்ச்சியடைந்தும், செல்வத்திற் சிறந்தும் உயர்ச்சியடைந்து வருகின்றனர்.
அடுத்தபடியில் இந்தியாவில் சிறப்பாகப் பரவி இருக்கும் கிறிஸ்தவ மதத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதுவும் மக்களுடைய வறுமையைப் போக்குவதிலும், மக்களுக்குக் கல்விப் பதிவையூட்டுவதிலும், மருத்துவ உதவியளிப்பதிலும் சிறந்து நிற்கின்றது என்பதில் அய்யமில்லை. அந்த மதத்தைப் பின்பற்றும் மக்களும் நாளுக்கு நாள் ஒற்றுமையடைந்து கல்வியறிவிற் சிறந்து, மக்கள் கூட்டத்தில் பெருகி முன்னேறி வருகின்றனர்.
கிறிஸ்தவ மதமும், மனித சகோதரத்துவத்தைப் போதிக்கின்றது. தற்பொழுது இந்தியாவில் உள்ள கிறிஸ்தவர்கள் இந்துக்களின் சார்பு காரணமாக வகுப்பு வேற்றுமை பாராட்டக் கூடியவர்களாயிருந்தாலும் வகுப்பு வேற்றுமைக்கு அவர்கள் மதத்தில் ஆதாரமேயில்லை. கிறிஸ்தவ மதத்தில் ஆண்களைப் போலப் பெண்களுக்கும் எல்லா உரிமையும் உண்டு. சொத்துரிமையுண்டு. விதவா விவாகம் உண்டு. ஒருவன் ஒருத்தியைத் தான் மணம் புரிந்து கொள்ளலாம். மற்ற நாடுகளில் விவாக விடுதலையுண்டு. இந்தியாவில் மட்டிலும் இல்லை. ஆகவே, இம்மதம் அதைப் பின்பற்றும் மக்களுக்கு நன்மை செய்து வருவதை அறியலாம்.
ஆனால், இந்து மதம் அதைப் பின்பற்றும் மக்களுக்கு என்ன செய்து வருகின்றது? என்று ஆராய்ந்து பாருங்கள்! இந்து மதத்தில் தொடக்கத்தில் அமைக்கப்பட்ட நாலு சாதி இன்ற நாலாயிரம் சாதிகளாக ஆகி இருக்கின்றன. இந்தக் காரணத்தினால் இன்று இந்துக்கள் என்பவர்கள் ஒருவரோடு ஒருவர் உடன்பிறப்புத் தன்மை பாராட்ட முடியாதவர்களாகவும், ஒருவரிடம் ஒருவர் அன்போ இரக்கமோ காட்டமுடியாதவர்களாகவும் இருந்து வருகின்றனர்.
இந்து மதத்தைச் சார்ந்த மக்களில் நூற்றுக்குத் தொண்ணூறு பேர் ஏழை மக்கள். அவர்களுக்கு இருக்க இடமில்லை; உண்ண உணவில்லை; படிக்க வசதியில்லை; வேலை செய்து பிழைக்க உதவியில்லை. இந்த நிலையை நினைத்துப் பார்க்கும் எவரும் இரத்தக் கண்ணீர் சிந்தாமலிருக்க முடியாது. இந்தியாவிலேயே, பழைமையான “தெய்வீக”மான இந்துமதத்திலேயே பிறந்த மக்கள் இந்நாட்டில் அரை வயிற்று உணவுக்கும் இடமில்லாமல் கடல் கடந்து வேற்று நாடுகளில் குடியேறுகின்றனர்.
இன்று, சிலோனில் தோட்டங்களில் கூலி வேலை செய்து துன்புறும் மக்கள் யாவர்? மலேயா நாட்டில் ரப்பர் தோட்டங்களில் வேலை செய்யச் சென்று இரத்தத்தைச் சிந்திவிட்டு வெற்றுடலோடும், வெறுங்கையோடும் ஒவ்வொரு வாரத்திலும் ஆயிரக்கணக்காக வேலையில்லாமல் இந்தியாவுக்குத் திரும்பும் மக்கள் யார்? இன்று தென்னாப்பிரிக்காவில் வெள்ளையர்களால் பலவகையிலும் அவமானப்படுத்தப்படும் மக்கள் யார்? கெனியாவில் சென்று உடலோம்பும் பொருட்டு மானமிழந்து துன்புறும் மக்கள் யார்? என்று ஆராய்ந்து பார்த்தால் இவ்வுண்மை விளங்கும்.
இவ்வாறு இந்தியாவை விட்டு அயல்நாடு புகுந்து துன்புறும் மக்கள், முஸ்லிம் சகோதரர்கள் அல்லர். கிறிஸ்தவ சகோதரர்களும், முஸ்லிம் சகோதரர்களும் அயல்நாடுகளுக்குச் செல்லாமல் இல்லை. அவர்களும் அயல் நாடுகளுக்கு மிகுதியாகக் குடியேறுகிறார்கள்.
ஆனால், அவர்களுக்கும், நமது இந்துக்களுக்கும் ஒரு வேற்றுமையுண்டு. அயல்நாடு செல்லும் முஸ்லிம்கள் பெரும்பாலும் வாணிகத்தை மேற்கொண்டு செல்லுகிறார்களேயொழிய இந்துக்களைப் போல வெறுங் கூலியாட்களாகச் செல்வதில்லை. அங்குள்ள முஸ்லிம்களும் இங்கிருந்து செல்லும் முஸ்லிம்களை ஆதரித்து உதவிபுரிகிறார்கள். ஏனெனில், அவர்கள் மார்க்கம் அவர்களுக்குள் ஒற்றுமையும் சகோதரத்துவத்தையும் உண்டாக்கியிருக்கிறதன்றோ?
இதைப் போலவே கிறிஸ்தவர்களும் அயல்நாடுகளுக்குச் சென்றால் அரசாங்க வேலையின் பேரிலோ அல்லது வேறு கவுரவமான தொழிலின் பேரிலோ தான் செல்லுகிறார்கள். ஆகையால், அயல்நாடுகளுக்குச் செல்லும் கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் இந்துக்களைப் போலத் துன்புறுவதில்லை; மானமிழப்பதில்லை; பெருமையுடன் வாழ்ந்து செல்வத்துடன் தாய்நாடு திரும்புகின்றனர்.
இந்துக்களோ, கூலிகளாகச் சென்று, துன்ப வாழ்க்கை வாழ்ந்து வெறுங்கையோடு திரும்புகின்றனர். அயல் நாட்டில் இந்துக்கள் பொருளீட்டாமல் இல்லை; பொருளீட்டுகின்றார்கள். ஆனால், அப்பொருள் பாழும் இந்துமதத்தால் செலவழிகிறது. பிழைக்கச் சென்ற இடங்களிலும் இந்துமதச் சாமிகள் குடி புகுந்து விடுகின்றன. அவற்றிற்கு இந்துக்கள் தாம் சம்பாதிக்கும் பொருள்களைப் பண்டிகைகளின் பேராலும், திருவிழாக்களின் பேராலும் செலவழிக்க வேண்டியிருக்கின்றன. இக்காரணத்தால் இவர்களிடம் பொருள் மிஞ்சுவதில்லை.
உதாரணமாக, இப்பொழுது தென்னாப்பிரிக்காவில் வாழும் இந்துக்கள் பொருளாதார நிலையில் மற்ற நாடுகளில் வாழும் இந்துக்களைக் காட்டிலும் மிகவும் சிறந்து விளங்குகிறார்கள் என்று கூறலாம். இதற்குக் காரணம் அவர்களிடம் இந்துமதம் மிகுதியாகப் புகாமலிருப்பதேயாகும். அவர்களுக்கு இந்து மதத்தின் கோட்பாடுகளும், அதில் ஏற்பட்டிருக்கும் எண்ணற்ற பண்டிகைகளைப் பற்றியும், நமது நாட்டு மக்களுக்குத் தெரியும் அளவு தெரியாது. ஆதலால், அவர்கள் செல்வம் வீணாகாமல் மீதப்படுகிறது என்று சொல்லலாம்.
எல்லா மதங்களும், மக்களுக்குள் மூட நம்பிக்கையையும், பிடிவாதத்தன்மையையும், பொருளற்ற செயல்ளையும் போதிக்கின்றன; மக்களின் அறிவு வளர்ச்சியைத் தடுக்கின்றன. உலக ஒற்றுமைக்கு எதிராக இருக்கின்றன; ஆகையால், எல்லா மதங்களும் அழிந்து தீரவேண்டும் என்பது நமது உள்ளக் கிடங்கையானாலும், முதலில், உடனே இந்துமதம் அழிந்து தீரவேண்டும் என்று கூறுகின்றோம்.
மற்ற மதங்கள், அதாவது கிறிஸ்தவம் முதலானவை, உலக சமாதானத்திற்கு எதிராக இருந்தாலும், தமது சொந்த மக்களுக்கு இந்து மதத்தைப் போல் அவ்வளவு கொடுமையைச் செய்வதில்லை என்பதை மேலே கூறிய செய்திகளால் உணரலாம்.
அன்றியும், “இந்து மதத்தில் கை வைக்கக்கூடாது” என்று கூறும் “பக்தர்”களைச் சில கேள்விகள் கேட்கிறோம். அவற்றிற்கு விடையளித்து விட்டுப் பிறகு நாம் கூறுவது தவறு என்று காட்டினால் மிகவும் வணக்கத்துடன் ஏற்றுக் கொள்ளுகிறோம்.
எத்தனை காலமாக நாம் இந்துமதத்தைப் பின்பற்றி வருகின்றோம்? இந்து மதத்திற்காக இதுவரையிலும் எத்தனை கோடி ருபாய்கள் செலவு செய்திருக்கிறோம்? இப்பொழுதும் ஒவ்வோராண்டும் எவ்வளவு ருபாய் செலவு செய்து கொண்டு வருகின்றோம். இருபத்து மூன்று கோடி இந்துக்களுக்கு முப்பத்து மூன்று கோடி தேவர்கள் தெய்வமாக இருக்கின்றார்களே, இவர்களெல்லாம் ஏன் இந்துக்களின் கஷ்டங்களை நீக்க முன்வரக்கூடாது?
இந்தியாவில் மிகப் பெரும்பாலான மக்களாயிருக்கும் இந்துக்கள் ஒற்றுமையாயிருந்தால், வேற்று நாட்டினர் இப்பொழுது இந்தியாவைப் பிடித்து அரசாள முடியுமா? இவ்வித ஒற்றுமை இந்துக்களுக்குள் ஏற்படாமல் போனதற்குக் காரணம் இந்துமதத்தில் உள்ள சாதி வேற்றுமையல்லவா? இந்துக்கள் நாளுக்கு நாள் வறுமையில் மூழ்குவதற்குக் காரணம் அவர்கள் வருந்தி ஈட்டும் செல்வத்தைப் பண்டிகைகள் கொண்டாடுவதும், கோயில்களுக்குச் செலவிடுவதும், நன்மை தீமைக்கான பல சடங்குகளில் செலவழிப்பதும் அல்லவா?
அன்றியும், இந்துமதம் என்றால் என்ன என்று சொல்ல முடியுமா? இந்து மதத்திற்கு ஆதாரம் என்ன? என்று கேட்டால் வேதம் என்று சொல்லுவீர்களானாலும், அந்த வேதத்தை நீங்கள் படித்திருக்கிறீர்களா? பிராமணரைத் தவிர மற்றவர்களுக்கு அந்த வேதத்தைப் படிக்கவாவது உரிமையுண்டா? முஸ்லிம் மத வேதமாகிய “குரானை” இன்னார் தான் படிக்கலாம்; இன்னார் படிக்கக் கூடாது என்று அம் மதத்தில் இருக்கிறதா? எல்லா முஸ்லிம்களுக்கும் அவர்களுடைய வேதத்தைப் படிக்க உரிமையிருக்கிறதே! அதுபோல, இந்து மதத்தில் ஏன் இல்லை? கிறிஸ்தவ வேதமாகிய “பைபிளை”ப் படிக்காத கிறிஸ்தவர்கள் உண்டா? எல்லாக் கிறிஸ்தவர்களும் தாராளமாகப் படிக்கிறார்களே.
ஆனால், இந்துமதத்தில் ஏன் பார்ப்பனர்கள் மாத்திரம் வேதங்களைப் படிக்கலாம்; மற்றவர்கள் படிக்கவும் கூடாது; படிப்பதைக் கேட்கவும் கூடாது; படித்தால் நாவையறுக்க வேண்டும்; படித்ததைக் கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும் என்று ஏன் கட்டளையிடப்பட்டிருக்கிறது? இதனால் இந்து மதம் என்பது பார்ப்பன மதம் அவர்கள் வயிற்றுப் பிழைப்பிற்காக ஏற்பட்ட மதம் என்பது தெரியவில்லையா? என்று தான் கேட்கிறோம். இக்கேள்விகள் நியாயமான கேள்விகளா? அல்லவா? என்று ஆராயுங்கள்! இவற்றிற்குத் தக்க விடை கூறியபின் சுயமரியாதைக்காரர்களுடன் சண்டைக்கு வாருங்கள்!
——————–“குடிஅரசு”வில் வெளிவந்த தந்தை பெரியார் அவர்கள் கட்டுரை. “குடிஅரசு” – 04-09-1932.
https://thamizhoviya.blogspot.com/2009/10/blog-post_808.html
Leave a Reply
You must be logged in to post a comment.