சனாதிபதி கோட்டாபய இராசபக்சாவை வீட்டுக்கு அனுப்புவது தலையிடிக்குத் தலையணையை மாற்றுவது போன்றது!
நக்கீரன்
சாத்தான் வேதம் ஓதுகிறது என்பார்கள். ஜெனிவாவில் யூன் 13, 2022 அன்று நடைபெற்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 50 ஆவது அமர்வில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் உரையாற்றினார்.
பேராசிரியர் காமினி இலக்ஷ்மன் பீரிஸ் தற்போதைய அமைச்சரவையில் மிகவும் புத்திசாலித்தனமான உறுப்பினர் ஆவர். இன்றைய நாடாளுமன்றம் பெரும்பாலும் தண்டனை பெற்ற குற்றவாளிகள் மற்றும் ஒழுக்கக் குறைவானர்களால் நிரப்பப்பட்டுள்ளது. ஆனால் அமைச்சர் பீரீஸ் இலங்கைக் குடியரசின் வரலாற்றில் அமைச்சரவைப் பதவியை வகிக்கும் மெத்தப்படித்த, சிறந்த கல்வியறிவு பெற்ற ஒரு சிலரில் இவரும் ஒருவர் ஆவர். நாற்பது அகவைக்குள் ஒக்ஸ்போர்டுக்கு றோட்ஸ் அறிஞர் (Rhodes scholar to Oxford)இ கொழும்பு பல்கலைக் கழகத்தின் சட்டத் துறைத் தலைவர்.
ஆனால் அரசியலில் அமைச்சர் பீரீஸ் ஒரு பச்சோந்தி என அவரது அரசியல் எதிரிகள் கருதுகிறார்கள். அவருக்கு அமைச்சர் பதவிதான் முக்கியம். அமைச்சர் பதவி கொடுத்தால் போதும் ஆட்சிக்குப் போற்றி பாடுவார். பதவி இல்லை என்றால் தூற்றிப் பேசுவார். 2015 இல் சிறிசேன – இரணில் விக்கிரமசிங்க அணி தேர்தலில் வெற்றிபெற்று நல்லாட்சி அமைச்சரவை அமைத்தபோது அதில் சேர்ந்து அமைச்சர் பதவி பெற பெருமுயற்சி எடுத்தார். நல்லாட்சி அரசு அவரைக் கண்டுகொள்ளவில்லை. உடனே எதிர்க்கட்சியில் சேர்ந்து கொண்டார். சிறிலங்கா பொதுசன பெரமுன முன்னணியின் உருவாக்குவதில் அமைச்சர் பேராசிரியர் பீரீஸ் அவர்கட்குக் கணிசமான பங்குண்டு.
கடந்த வாரம் வெளிவிவகார அமைச்சர் பீரீஸ் ஜெனிவாவுக்குச் சென்றிருந்தபோது அவரது குணாம்சங்கள் அப்பட்டமாகத் தெரிந்தன. ஐரோப்பிய நகரத்திற்கு மேற்கொண்ட பயணத்தில், இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக நாட்டின் மனித உரிமைகள் பற்றிய அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் சொத்தை வாதத்தை பேரவையில் முன்வைத்தார்.
இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் பீரிஸ், முன்னைய சந்திப்பின் பின்னர், இலங்கை பல முக்கிய துறைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளதாகத் தெரிவித்தார்.
“இந்தப் பேரவையின் கடைசி அமர்வுக்குப் பிறகு, மார்ச் முதல் யூன் 2022 வரை, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் 13 ஆவது பிரிவின் கீழ் நிறுவப்பட்ட ஆலோசனைக் குழுவின் பரிந்துரையின் பேரில், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த 22 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்” என்றார்.
ஐநா மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது அமர்வில் வலியுறுத்தப்பட்ட விடயங்களில் பின்வரும் விடயங்கள் பற்றித் தனது உரையில் குறிப்பிட்டார்.
2012 ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகளின் ஒழுங்குமுறை எண் 1 இன் கீழ் நியமிக்கப்பட்ட தனிநபர்கள், குழுக்கள் மற்றும் நிறுவனங்களின் பட்டியல் மதிப்பாய்வு செய்யப்படுகிறது. தற்போது 318 தனிநபர்கள் மற்றும் 04 அமைப்புக்கள் பட்டியலில் இருந்து நீக்க முன்மொழியப்பட்டுள்ளது. இது ஒரு தொடர் நடவடிக்கை ஆகும். தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம் (ONUR) நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதில் அதன் ஆணையைத் தொடர்கிறது.
நிலையான வளர்ச்சி இலக்குகளைப் (SDGs) பொறுத்தவரை, நிலையான வளர்ச்சி இலக்கு 16 (SDG16) உட்பட இலங்கை கணிசமான முன்னேற்றத்தை அடைந்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான அபிவிருத்தி அறிக்கை 2021 இலங்கையை 87வது இடத்தில் (165 நாடுகளில் SL இன் உலகளாவிய தரவரிசை 7 நிலைகளால் அதிகரித்துள்ளது) வைத்துள்ளது மற்றும் நாட்டிற்கு ஒட்டுமொத்த தரவரிசை 68.1 வழங்கப்பட்டுள்ளது, இது பிராந்திய சராசரியை விட அதிகமாக உள்ளது.
காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் (OMP) அதன் சரிபார்ப்பு செயல்முறையின் ஒரு பகுதியாக விசாரணைக் குழுவிற்கு அழைக்கப்பட்ட 83%க்கும் அதிகமான நபர்களை சந்தித்துள்ளது.
இழப்பீடுகளுக்கான அலுவலகம் (OR) தற்போதைய பொருளாதாரத் தடைகள் மத்தியிலும், ஆண்டுக்கான இழப்பீடு வழங்குவதற்காக அதன் தொடக்க ஒதுக்கீடான ரூ.759 மில்லியனுடன் கூடுதலாக ரூபா 53 மில்லியன் ஒதுக்கப்பட்டது.
மோதலின் முடிவில் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட 92% க்கும் அதிகமான தனியார் நிலங்கள் முறையான உரிமையாளர்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளன. கடைசியாக எஞ்சியுள்ள 8,090 இடம் பெயர்ந்தவர்களை மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
உயிர்த்தெழுந்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக, சட்டமா அதிபர் உயர் நீதிமன்றங்களுக்கு பல குற்றப்பத்திரிகைகளை அனுப்பியுள்ளதோடு, அது தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
புலம்பெயர் சமூகத்துடனும், எமது நாட்டின் நல்வாழ்வுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் சிவில் சமூக அமைப்புகளுடனும் ஈடுபடுவதற்கு இலங்கை திறந்த மனதோடு உள்ளது.
அமைச்சர் பீரீஸ் அவர்களின் உரையைப் படிப்பவர்களுக்கு “பேச்சுப் பல்லக்கு தம்பி கால்நடை” என்ற பழமொழி நினைவுக்கு வரும். இதில் இரண்டு விடயங்கள் தமிழ்மக்கள் தொடர்பானது.
முதலாவது, புலம்பெயர்ந்த தமிழர்கள் மற்றும் அமைப்புக்கள் சம்பந்தப்பட்டது. தற்போது 318 தனிநபர்கள் மற்றும் 04 அமைப்புக்கள் பயங்கரவாதப் பட்டியலில் இருந்து நீக்க முன்மொழியப்பட்டுள்ளது என்பதாகும்.
இலங்கை அரசாங்கம் 2014 ஆம் ஆண்டு 424 தனிநபர்களையும் 16 அமைப்புகளையும் “பயங்கரவாத அமைப்புகள்” பட்டியலில் பட்டியலிட்டது. 2015 நல்லாட்சி ஆட்சியில் 259 தனி நபர்களும் 8 அமைப்புக்களும் அந்தப் பட்டியலில் இருந்து அகற்றப்பட்டது. 2021 இல் சனாதிபதி கோட்டாபய இராசபக்ச மீண்டும் 389 தனிநபர்களையும் 7 அமைப்புக்களையும் பயங்கரவாதப்பட்டியலில் சேர்த்தார். ஆக இன்றைய நிலையில் 236 தனி நபர்களும் 9 அமைப்புக்களும் தொடர்ந்து பயங்கரவாதப் பட்டியலில் இருக்கின்றன.
இந்தப் பயங்கரவாதப் பட்டியலில் எஞ்சி இருக்கும் தனிநபர்கள் மற்றும் அமைப்புக்களின் பெயர்களை அரசு முற்றாக நீக்க வேண்டும். இல்லையேல் அரசு எதிர்பார்க்கும் முதலீடுகளைப் புலம்பெயர் தமிழர்கள் செய்யமாட்டார்கள்.
இரண்டாவது, மோதலின் முடிவில் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட 92% க்கும் அதிகமான தனியார் நிலங்கள் முறையான உரிமையாளர்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளன. கடைசியாக எஞ்சியுள்ள 8,090 இடம் பெயர்ந்தவர்களை மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்தப் பொய் கந்தபுராணத்தின் கடைசிப் பக்கத்தில் கூட இல்லை. உண்மை என்னவென்றால் 28,990 ஏக்கர் (37.85 விழுக்காடு) நிலம் இன்னும் விடுவிக்கப் படவில்லை. அதிலும் இந்த அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் மிகச் சொற்ப காணியே விடுவிக்கப்பட்டுள்ளது. கீழ்க்கண்ட அட்டவணை 1 போர் முடிந்த மே 18, 2009 இல் இருந்து சனவரி 2019 ஆம் ஆண்டுவரை முப்படைகள் பிடித்து வைத்திருந்த மற்றம் விடுவிக்கப்பட்ட காணிகள் பற்றிய தரவுகளைத் தருகிறது.
மே 2009 தொடக்கம் சனவரி 2019 வரை விடுவித்த, விடுவிக்கப்படாத காணிகளின் விபரம்
அட்டவணை 1
காலம் | அரச காணி ஏக்கர் | தனியார் காணி ஏக்கர் | மொத்தம் ஏக்கர் |
மே 2009 இல் முப்டைகள் வசம் இருந்த காணி | 88,722 | 29,531 | 1,18,253 |
மே 2009 – சனவரி 2015 விடுவிக்கப்பட்ட காணி | 21,581 | 20,078 | 41,659 |
விழுக்காடு | 24.30 | 67.99 | 35.20 |
மே2009 – சனவரி 2015 வரை விடுவிக்கப்படாத காணிகள் | 67,141 | 9,453 | 76,594 |
சனவரி 2015 – சனவரி 2019 விடுவிக்கப்பட்ட காணிகள் | 41,677 | 5,927 | 47,604 |
விழுக்காடு | 62.07 | 62.70 | 62.15 |
சனவரி 2019 பின்னர் விடுபடாத காணிகள் | 25,464 | 3,526 | 28,990 |
விழுக்காடு | 37.93 | 37.30 | 37.85 |
வெளிவிவகார அமைச்சர் கூறியது போல் 8% நிலத்தை அல்ல 37.85 % (28,990 ஏக்கர்) நிலத்தை முப்படையினர் இன்னும் தங்கள் பிடியில் வைத்துள்ளனர்.
மரக்கறித் தட்டுப்பாட்டை நீக்க அரசாங்கம் பொதுமக்களை வீட்டுத் தோட்டத்தை மேற்கொள்ளுமாறு கேட்கிறது. தரிசு நிலத்தைப் பயன்படுத்தலாம் எனவும் யோசனை கூறுகிறது. அதே சமயம் தமிழ்மக்களுக்குச் சொந்தமான காணியை இராணுவம் ஆண்டுக் கணக்கில் பிடித்து வைத்திருக்கிறது. வலிகாமம் வடக்கில் 6,381.5 ஏக்கர் காணியில் தோராயமாக 3,500 ஏக்கர் காணி நல்லாட்சி காலத்தில் விடுவிக்கப்பட்டது. மிகுதி 2,881.15 ஏக்கர் நிலம் இன்னமும் விடுவிக்கப்படவில்லை. இந்தக் காணிகள் வளம் கொழிக்கும் செழிப்பான தோட்டக் காணிகள்.
காணிகளை விடுவிக்காதது மட்டுமல்ல வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல இந்தக் காணிகளில் இராணுவம் தோட்டம் செய்கிறது. தங்கள் பயன்பாட்டுக்கு எடுத்துக் கொண்டு மிஞ்சிய விளைபொருளைச் சந்தையில் தமிழ்மக்களுக்கே விற்று இலாபம் ஈட்டுகிறது!
வலி வடக்கு மக்கள் 15 யூன் 1990 இல் இராணுவம் மேற்கொண்ட படை யெடுப்புக் காரணமாக இடம் பெயர்ந்தார்கள். இன்று அவர்கள் தங்கள் சொந்த வீடுவாசல்களுக்கு போகலாம் என்ற எதிர்பார்ப்புப் பொய்த்து 32 ஆண்டுகள் ஓடிவிட்டன. தாங்கள் விட்ட கண்ணீரும் போட்ட சாபமும்தான் சிறிலங்காவின் பொருளாதாரத்தை அதல பாதாளத்தில் தள்ளியுள்ளது என இந்த மக்கள் சொல்கிறார்கள். இடப்பெயர்வை நினைவுகொள்ளும்
விதத்தில் ஒரு ஆர்ப்பாட்டப் பேரணியை (https://newuthayan.com/877-11/) நடத்தினார்கள்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்னும் 6511 குடும்பங்கள், 23178 நபர்கள் அடையாள முகாம்களில் மற்றும்/அல்லது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் (https://colombogazette.com/2021/11/06/doors-remain-shut-for-over-6000-families/) வாழ்கின்றனர்.
இனச் சிக்கலுக்கு ஒரு நியாயமான, நீதியான தீர்வைக் கண்டால் மட்டுமே தலைகுப்புற விழுந்து கிடக்கும் நாட்டை மீள் கட்டி எழுப்பலாம். அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு காணாமல் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண முடியாது. ஆனால் இந்த யதார்த்தத்தை சிங்கள – பவுத்த பேரினவாதம் உணர மறுக்கிறது. நிறைவேற்று சனாதிபதி முறைமையை நீக்கினால் நாடு இணைப்பாட்சி நாடாக மாறிவிடும் என முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர நாடாளுமன்றத்தில் காட்டமாகப் பேசியுள்ளார்.
சனாதிபதி கோட்டாபய இராசபக்ச வீட்டுக்குப் போக வேண்டும் என்று கடந்த இரண்டு மாதத்துக்கும் மேலாக மழையிலும் வெய்யிலிலும் போராடும் தென்னிலங்கை முற்போக்கு இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் தீவிரமாகப் போராடுகிறார்கள். இதனை நாம் வரவேற்கிறோம். ஆனால் சனாதிபதி போட்டாபய இராசபக்ச வீட்டுக்குப் போனாலும் அவருடைய இடத்துக்கு அவரைப் போன்ற ஒருவர்தான் வருவார். இன்றைய அரசியல் அமைப்பில் மாற்றம் வராது. அது தலையிடிக்குத் தலையணையை மாற்றுவது போன்றது. (CanadaUthayan June 24, 2022)
Leave a Reply
You must be logged in to post a comment.