இலங்கையில் தமிழர்கள் வகுக்க வேண்டிய மாற்று வியூகம்!
தமிழ் பௌத்தம் பற்றிய விழிப்புணர்வைத் தமிழர்கள் விரைவாகப் பெறவேண்டிய சூழல் வந்திருக்கின்றது. குருந்தூர் மலையைச் சுற்றி எழும் சிங்கள பௌத்த ஆக்கிரமிப்பைத் தடுக்க தமிழர்கள் தமிழ் பௌத்தம் என்கிற ஆயுதத்தையும்சமநேரத்தில் கையிலெடுக்க வேண்டும்.
பௌத்தம் சிங்களவர்களுக்குரிய மதம் என்ற விசமம் பரப்புரை பல நூற்றாண்டுகளாக முன்னெடுக்கப்பட்டு வந்திருக்கின்றது. அதில் வெற்றியும் பெற்றிருக்கிறது. ஆனால் உண்மை அதுவல்ல.
பௌத்தின் பெரும் பங்கு தமிழர்களுக்குரியது
பௌத்தின் பெரும் பங்கு தமிழர்களுக்குரியது. முதன்முதலாக பௌத்த அறக் கருத்துக்களை பேரிலக்கியங்களிலும், சிற்றிலக்கியங்களிலும் வெளிப்படுத்தியவர்களே தமிழர்கள்தான். ஆனால் இன்று தமிழையும், தமிழர்களையும் ஆக்கிரமித்து அழிக்கும் நிலைக்கு இலங்கையில் பௌத்தம் மாற்றம் பெற்றிருக்கிறது. அந்த நிலையை அது எப்படி அடைந்தது?
பௌத்த ஒரு மதம் என்றே பலரும் நம்புகிறார்கள். உண்மையில் அதுவொரு வாழ்வியல் தத்துவம். போரழிவுகளாலும், சாதி, சமய சண்டைகளாலும், போட்டி பொறாமைகளாலும் பிளவுண்ட சமூகங்களுக்கு வாழ்வின் நிலையாமையைப் போதித்து நல்வழிப்படுத்துவதே பௌத்தம். அந்தத் தத்துவத்தினுள் அரசியல் கலக்கையில் அது மதமாகியது என்பதே யதார்த்தம்.
என்றைக்கு இந்தியா கடந்து பௌதத்தைப் பரப்புவது என்ற பயணம் தொடங்கியதோ, அன்றைக்கே அது அரசியலாகியது. அந்தந்த நாடுகளது இனங்களது அரசியலைக் கையிலெடுத்துக்கொண்டு பௌத்தம் தன்னை வளர்த்தது. அந்தப் பின்னணியில்தான் இலங்கையில் பௌத்தம் துப்பாக்கியைத் தூக்க, மியான்மர் பௌத்த வாள்களைத் தூக்கியது. இந்தப் பின்னணியில்தான் இலங்கையின் பௌத்தத்தையும் புரிந்துகொள்ளவேண்டிய தேவை இருக்கிறது.
பௌத்தத்தின் தொடக்க மொழி பாலியாக இருந்த போதிலும், தான் பரவும் இடங்களில் பிராந்திய மொழிகளுக்குள் தன்னை உள்ளடக்கிக்கொண்டது. அந்த வகையில் வட இந்தியாவிலிருந்து பௌத்தம் தென்னிந்தியாவிற்குப் பரவும் போது தென்னகத்தில் நன்கு வளர்ச்சியடைந்த நிலையில் தமிழ் காணப்பட்டது. அதனால் பௌத்தம் தமிழுக்குள்ளால் தன்னை இங்கே அறிமுகம் செய்தது.
தமிழுக்குள்ளால் தத்துவார்த்தத்தை வளர்த்த பௌத்தம்
தமிழுக்குள்ளாலேயே தன் தத்துவார்த்தத்தை வளர்த்தது. பெரும் அழிவுகளிலிருந்து தளிர்த்த செழுமைமிகு காலமாக அடையாளப்படுத்தப் படும் களப்பிரர் காலத்தில் பௌத்தத் தத்துவத்தை பின்னணியாகக் கொண்டு பல இலக்கியங்கள் தமிழச் சூழலில் எழுந்தன.
மணிமேகலை, சீவகசிந்தாமணி போன்றன இதற்கு சிறந்த எடுத்துக்காட்டுக்கள். இவ்வாறு பௌத்தம் தென்னிந்தியாவில் தமிழால் எழுச்சி பெற்றுக்கொண்டிருக்க, இந்து என்கிற அமைப்புசார்ந்த சமய எழுச்சி பல்லவர்களால் ஏற்படுத்தப்பட்டது.
தமிழகத்தில் இருந்த ஏனைய சமய மரபுகளையும் (முருக, கொற்றவை, ஐயானார் வழிபாடுகள்) தனக்குள் ஈர்த்து இந்து மதமாக எழுச்சிபெற்றது. இந்த எழுச்சிக்கு பௌத்த – அசீவக தத்துவங்களைப் பின்னணியாகக் கொண்ட அமைப்புக்கள் தடையாக இருந்தன.
எனவே அந்தத் தத்துவப் பின்னணி கொண்ட அமைப்புக்களை இல்லாதொழிக்கும் வேலையை இந்து மதம் மேற்கொண்டது. அரசவைகளை கைப்பற்றிக்கொண்ட பிராமணர்கள் அரசர்களுக்கு (புரோகிதர்கள்) ஆலோசகர்கள் ஆனார்கள். அவர்கள் சொன்னபடி மன்னர் செயற்பட்டார். எனவே தான் அரசவைகளில் இந்து மதத்திற்கு மாற்றான அமைப்புகள் அனல் – புனல் வாதங்களுக்கு அழைக்கப்பட்டன. அதாவது கடவுள் பற்றிய விவாதங்கள் இந்து மதவாதிகளுக்கும் ஏனைய நம்பிக்கையாளர்களுக்கும் இடையில் நடைபெறும்.
தம் கருத்தை நிரூபிக்கத் தவறுபவர்கள் அனலிலும், தனலிலும் இட்டு எரிக்கப்பட்டார்கள். இவ்வாறு பல்லாயிரம் பௌத்த – அசீவகத் துறவிகள் படுகொலையானார்கள். இந்தப் படுகொலைகளுக்கு அஞ்சியும், விரக்தியுற்றும் பெருந்தொகையான பௌத்த – அசீவகத் துறவிகள் புலம்பெயர்ந்தார்கள். அப்படி புறப்பட்டவர்களில் ஒருவர்தான் இலங்கையில் பௌத்தத் தத்துவத்தை வக்கிரமிக்க மதமாக மாற்றிய மகாநாம தேரர். இவரே இலங்கை பௌத்தத்தினதும், வரலாற்றினதும் அடிப்படையாகக் கொள்ளப்படும் மகாவம்சத்தைப் படைத்தவராவார்.
பௌத்தம் சாராத எத்தனை உயிர்களையும் கொல்லலாம். அதற்குப் புத்த பெருமானின் மோட்சமும், ஆசீர்வதிப்பும் உண்டென போதிப்பதே இந்நூல் ஆகும். ஆக, மகாநாம தேரரின் பிரதான நோக்கமாக இருந்தது, தம்மைப் படுகொலை செய்த தமிழையும், தமிழரையும் பலியெடுப்பதுதான். அந்தக் கொள்கையின் அடிப்படையிலேயே இலங்கையில் பௌத்தம் வளர்ந்து நிற்கிறது.
இலங்கைக்குள் நுழைந்த பௌத்தம்
பௌத்தம் இத்தீவில் பரவும்போது அதன் பரவுகை மொழியாக சிங்களம் இருக்கவில்லை. சிங்களம் என்கிற மொழி கி.பி 7 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னரே வழக்கிற்கு வந்தது. அப்படியாயின் இலங்கைக்குப் பௌத்தம் அறிமுகப்பட்ட மொழி, தமிழகத் தொடர்போடு பார்க்கையில் தமிழாகவே இருத்தல்வேண்டும்.
இலங்கைக்குப் பௌத்தம் உள்நுழைந்ததும் மகாவம்சத்தில் உத்தர எனவும், அந்நியர் தேசம் எனவும் குறிப்பிடப்படும் வடக்கு பகுதி ஊடாகத்தான். அதற்குப் பிரதான காரணம் தென்னகத்தில் பௌத்தம் எழுச்சியுற்ற பல்கலைக்கழகமாக இருந்த காஞ்சிபுரத்திலிருந்து மிக எட்டிய தூரத்தில் மாதோட்டம் (மன்னார்) மாதகல், நெடுந்தீவு, போன்ற இடங்கள் அமைந்திருக்கின்றமைதான். இந்த இயற்கை துறைகள் வாயிலாகவே இலங்கைத் தீவுக்குள் பௌத்தம் நுழைந்தது.
பௌத்த துறவிகள் பேசிய மொழிக்கும், வடக்கில் இந்தக் கரைகளில் வாழ்ந்த மக்கள் பேசிய மொழிக்கும் வித்தியாசங்களற்று இருந்தமையினால் இங்கு தரிப்பதிலும் அவர்களுக்குப் பெரிய சிக்கல்கள் இருக்கவில்லை. ஆனால் இயற்கை அதற்கு இடம்கொடுக்கவில்லை. பௌத்தம் போதிக்கும் இயற்கை வாழ்வு முறையான குகைகள், காட்டு காய் கறி பழங்கள் என்பன வடக்கின் அநேக பாகங்களில் இருக்கவில்லை. அத்துடன் சைவ மதத்தில் அதீத நம்பிக்கை கொண்டிருந்த இப்பிராந்திய மக்கள் பிற தத்துவங்களைக் கேட்கத் தயாராக இருக்கவில்லை.
தென்பகுதிக்கு நகர்ந்த பௌத்தம்
எனவே பௌத்தம் வடக்கில் செழித்தோங்க முடியாத நிலை உருவாக, அங்கிருந்து புறப்பட்ட பௌத்த துறவிகள் நாட்டின் தென் பக்கமாக நகர்ந்தனர்.
வன்னியில் அடர் வனங்கள் அமையப்பெற்ற இடங்களில் எங்கெல்லாம் குன்றுகள், மலைகள் காணப்படுகின்றனவோ அங்கெல்லாம் பௌத்த துறவிகள் தங்கிச் சென்றனர். அதற்கு அப்பகுதியில் எழுச்சிபெற்றிருந்த தமிழ் வணிகர்கள், குறுநில மன்னர்கள் குகைகளை செதுக்கி, பாதுகாப்பரண்களை அமைத்துக்கொடுத்தமைக்கான கல்வெட்டுச்சான்றுகள் வவுனியாவின் புளியங்குளம், வெடுக்குநாறிமலை ஆகியவற்றில் இன்றும் கிடைக்கின்றன. அவை ஆதித் தமிழ் பிராமியில் எழுதப்பட்டிருப்பதும், அவற்றில் தமிழர்களைக் குறிக்கும் பெயர்கள் இடம்பெற்றிருப்பதும், தமிழக குகைக் கல்வெட்டுக்களில் இருந்து துளியளவும் வித்தியாசப் பட்டிருப்பதும் பௌத்தம் தமிழுக்கு ஊடாகவே இத்தீவில் அறிமுகமாகியமைக்கு பெரும் எடுத்துக்காட்டாக இன்றும் இருக்கின்றன.
இந்தப் பிண்ணனியிலேயே, வட மாகாணத்தில் உள்ள மலைகளில், தொன்மையான அரசிருக்கைகளில் பௌத்தம்சார் தொல்லியல் எச்சங்கள் கிடைத்துவருகின்றன. உருத்திரபுரத்திலும், குருந்தூர் மலையிலும், வெடுக்குநாறி மலையிலும், செட்டிகுளத்திலும் கிடைப்பதெல்லாம் இவ்வகையில்தான் பௌத்த எச்சங்கள் இன்றும் கிடைக்கின்றன. எனவே அவற்றை சிங்கள பௌத்தத்தின் தொல்லியல் எச்சங்கள் எனப் பார்ப்பதும், அந்த நோக்கில் அவற்றை ஆய்வுக்குட்படுத்துவதும், மீளவும் சிங்கள பௌத்த நிலையமாக அவ்விடங்களைப் பிரகடனப்படுத்துவதும் புத்திசாலித்தனமான காரியங்கள் அல்ல.
பௌத்தம் தன்னை சிங்கள பௌத்தமாக எப்போது பிரகடனப்படுத்திக் கொண்டதெனில், அது அனுராதபுத்தில் அரசவை மதமாகத் தன்னை நிலைகொண்டபோதுதான். அரசனின் ஆலோசகர்களாகப் பௌத்த பிக்குகள் நியமனம் பெற்ற பின்னர், பெரும் இனத்துவேசத்துடன், சிங்களம் தவிர்ந்த ஏனையோரைப் பார்த்தது.
சிங்கள பௌத்தர்கள் தவிர ஏனையோரைக் கொலை செய்பவர்களுக்குப் பரலோகத்தில் புண்ணியமே கிடைக்கும் எனப் போதித்தது. இலங்கையில் இன ரீதியான பாகுபாட்டை ஆரம்பத்திலிருந்தே போதித்து வந்த பௌத்தம் அரசியல், பண்பாட்டுத் தளத்தில் ஏகவுரிமையைக் கோரி வந்திருக்கிறது. அதன் பரிணாம வளர்ச்சியே சிங்கள பௌத்த பெரும்பான்மைவாதமாக வளர்ந்திருக்கிறது. அந்த வளர்ச்சியே குருந்தூர் மலைவரைக்கும் வந்து நிற்கிறது. இந்த அசுரத்தனமான வளர்ச்சியே வரலாற்றை, தொல்லியலை பல்பரிணாமப் பார்வை கொண்டு பார்ப்பதைத் தடுக்கிறது. பௌத்த எச்சங்கள் எங்கு கிடைத்தாலும் அவை சிங்கள பௌத்தத்திற்கு மட்டும் உரியன என்ற முடிவுக்கு வரச்செய்கிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.