கடைச்சங்க காலம்
- தமிழர் வீரம்
“உயர் வீரஞ் செறிந்த தமிழ்நாடு”
“சிங்களம் புட்பகம் சாவக – மாதிய
தீவு பலவினுஞ் சென்றேறி – அங்கு
தங்கள் புலிக்கொடி மீன்கொடியும் – நின்று
சால்புறக் கண்டவர் தாய்நாடு”
“சீன மிசிரம் யவனரகம் – இன்னும்
தேசம் பலவும் புகழ்வீசிக் – கலை
ஞானம் படைத்தொழில் வாணிபம் – மிக
நன்று வளர்த்த தமிழ் நாடு” (பாரதியார்)
வரலாறுக்கு முற்பட்ட பண்டைக் காலத்திலேயே திராவிட மக்கள் இலேமூரியாவிலிருந்து வடக்கேயும், மேற்கேயும், கிழக்கேயுஞ் சென்று பல நாடுகளிற் குடியேறித் தமது ஆட்சியையும் நாகரிகத்தையும் பரப்பினர். சேரர் ஆட்சி இந்தியாவின் மேற்கில் இமயம் வரையும், சோழர் ஆட்சி இந்தியாவின் மத்திய பகுதியிலுங் கிழக்கிலும் இமயம் வரையும் பாண்டியர் ஆட்சி தெற்கே ஒளி நாடு வரையும் பரவியிருந்தன. மூவேந்தர் ஆட்சி தொல்காப்பியருக்கு மிக முற்பட்ட காலத்திலிருந்தே இருந்து வருவதனால் அவற்றை அநாதியாகவுள்ளவை என்பர்.
சங்கப் பாடல்கள் புகழ்ந்துரைக்கும் முதலாவது பேரரசன் நெடியோனாவான். இவன் நிலந்தரு திருவிற் பாண்டியன் எனவும், வடிவலம்ப நின்ற பாண்டியன் எனவும், சயமாகீர்த்தி எனவும் ஆதிமனு எனவும் குறிப்பிடப்படுகிறான். இவனின் தலைநகர் பஃறுளியாற்றங்கரையிலிருந்த தென் மதுரையாகும். பஃறுளியாறும் தென் மதுரையும் கடற்கோளினால் அழிந்தபின், இவன் இமயம்வரை வென்று தனது ஆட்சியைப் பரப்பினான் எனச் சிலப்பதிகாரங் கூறுகிறது.
“பஃறுளி யாற்றுடன் பனிமலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு
தென்திசை யாண்ட தென்னவன்”
இவன் கடல்கடந்த நாடுகளிலும் தனது ஆட்சியை நிறுவினான். நீர் விழவின் நெடியோன் எனுஞ் சிறப்புப் பெயர் பெற்றான்.
“முழுங்கும் முந்நீர் முழுவதும் வளைஇப்
பரந்து பட்ட வியன் ஞாலம்
தாளில் தந்து தம்புகழ் நிறீஇ
ஒருதாம் ஆகிய உரவோன்” எனக் குடபுலவியனாரும்
“செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீந்த
முந்நீர் வழலின் நெடியோன்
நன்னீர்ப் பஃறுளி மணல்” என நெட்டிமையாகும்
“வானியைந்த இருமுந்நீர்ப்
போ நிலைஇய இரும்பௌவத்துக்
கொடும்புணரி விலங்கு போழ
சீர் சான்ற உயர் நெல்லின்
ஊர் கொண்ட உயர் கொற்றவ!”
என மாங்குடி மருதனாரும் இம்மன்னனைப் புகழ்ந்து பாடினர். உயர் நெல்லின் என்பது சுமாத்திரா நாட்டிலுள்ள சாலியூராகும். யாவா, சுமாத்திரா, மலாயா முதலிய நாடுகளில் இம் மிகப் பழங்காலத்திலேயே தமிழர் இராச்சியங்கள் இருந்ததற்கும் தமிழ் மொழி வழங்கியதற்கும் வேறு பல சான்றுகளுமுள. சேர ம்னரிற் மிகப் பழையவனாகிய இமயவரம்பன் என்ற வானவரம்பனின் இராச்சியம் இமயம் வரையும் இருந்ததெனக் கூறப்படுகிறது. சோழர் பரம்பரையிற் சூரியச் சோழன், முசுகுந்தன் மனுநீதிகண்ட சோழன் என்போர் பழைய மன்னராவர். இவர்களுடைய வெற்றிகளையும் புகழையும் பல சங்க நூல்கள் குறிப்பிடுகின்றன.
கடைச்சங்க காலத்திலும் பல தமிழ் வேந்தரின் வடநாட்டு வெற்றிகளைச் சங்கப் பாடல்கள் கூறுகின்றன. சேர-சோழ-பாண்டியர் இமயத்திலே தமது கொடியைப் பொறித்தனர்.
“கயலெ ழுதிய விமய நெற்றியின்
அயலெ ழுதிய புலியும் வில்லும்”
“ஆரியர் அலறத் தாக்கிப் பேரிசை
தொன்று முதிர் வடவரை வணங்குவில் பொறித்து
வெஞ்சின வேந்தரைப் பணித்தோன்” (அகநானூறு)
மோரிய அரசனாகிய அசோகனைப் போரில் வென்றவன் சோழன் இளஞ்செட்சென்னியாவான். மோரியரின் தென்னாட்டுப் படையெடுப்பைத் தடுத்து நிறுத்தியவன் இவனே. கடைச்சங்க காலத்திலே வட இமயத்தில் தமிழ்த்தடம் பொறித்த சேர முதல்வன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனாகக் குறிப்பிடப்படுகிறான்.
“ஆரியர் துவன்றிய பேரிசை இமயம்
தென்னங் குமரியோ டாயிடை
மன்மீக் கூறுநர் மறம்தபக் கடத்தே” (பத்துப்பாட்டு)
பிற்காலத்திற் சேரன் செங்குட்டுவனின் வடநாட்டு வெற்றிகளை இளங்கோவடிகள் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:
“வடபே ரிமயத்து வான்றாகு சிறப்பிற்
கடவுட் பத்தினிக் கற்கால் கொண்டபின்
சினவேல் முன்பிற் செருவெங் கோலத்துக்
கனக விசயர்தங் கதிர்முடி யேற்றிச்
செறிகழல் வேந்தன் தென்றமி ழாற்றல்
அறியாது மலைந்த ஆரிய மன்னரைச்
செயிர்த்தொழில் முதியோன் செய்தொழில் பெருக
உயிர்த்தொகை உண்ட வொன்பதிற் றிரட்டியென்று
யாண்டும் மதியும் நாளுங் கடிகையும்
ஈண்டுநீர் ஞாலங் கூட்டி யெண்கொள்
வருபெருந் தானை மறக்கள மருங்கின்
ஒருபக லெல்லை உயிர்த்தொகை உண்ட
செங்குட் டுவன்றன் சினவேற் றானையொடு”
“வடவரைமேல் வாள் வேங்கை ஏற்றினன்
திக்கெட்டும் குடை நிழலிற் கொண்டளித்த
கொற்றவன் காண் அம்மானை”
சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்கு விழாவெடுத்தபோது அங்கு வந்திருந்த மன்னரைச் சிலப்பதிகாரங் கூறுகிறது:-
‘அருஞ்சிறை நீங்கிய ஆரிய மன்னரும்
பெருஞ்சிறைக் கோட்டம் பிரிந்த மன்னரும்
குடகக் கொங்கரும் மாளுவ வேந்தனும்
கடல்சூழ் இலங்கைக் கயவாகு வேந்தனும்”
கடைச்சங்க காலத்தில் வடதிசை வென்ற பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனாவான்:-
“வட ஆரியர் படை கடந்து
தென் தமிழ்நாடு ஒருங்கு காணப்
புழைநீர் கற்பின் தேவி தன்னுடன்
அரைசில் கட்டிலில் துஞ்சிய பாண்டியன்
நெடுஞ்செழியன்” (சிலப்பதிகாரம்)
கடைச் சங்ககாலச் சோழ மன்னரில் வடநாடு வென்று இமயத்திலே தனது சின்னத்தைப் பொறித்தவன் இரண்டாங் கரிகாலனாவான்.
கடைச்சங்க காலத்திலே தமிழ் மக்கள் – ஆண்களும் பெண்களும் பிள்ளைகளும் – வீரராக வாழ்ந்தனர். “வீரஞ் செறிந்த தமிழ் நாடு”. நோய் காரணமாகப் பிள்ளைகள் இறப்பினும் அல்லது இறந்து பிறப்பிலும், அவர்களை வீரர் செல்லும் உலகத்துக்குச் செல்கவென்று வாளால் வெட்டிப் பின்பு புதைப்பர். போரில் வீழ்ந்த வீரரைக் கல்லில் அமைத்து வழிபடுதல் அக்காலத்திற் பெரு வழக்காக இருந்தது. நடுகல் அமைத்து வழிபடும் முறைக்குத் தொல்காப்பியரே இலக்கணம் வகுத்தனர். வேந்தரின் படைகளையும் அரண்களையும் பற்றிச் சங்க நூல்கள் பல விடங்களிற் கூறுகின்றன. அரசர் பலவகைப்பட்ட படைகள் வைத்திருந்தனர்:- யானைப்படை, குதிரைப்படை, தேர்ப்படை, காலாட்படை, வேளைப்படை, மூலப்படை, விலைப்படை, விற்படை, வேற்படை, மற்படை, வாட்படை, படை மாட்சியை வள்ளுவர் இருபது குறள்களில் விளக்குகிறார்.
“விழுப்புண் படாத நா ளெல்லாம் வழுக்கினுள்
வைக்குந்தன் னாளை யெடுத்து.”
“உறினுயி ரஞ்சா மறவ ரிறைவன்
செறினுஞ் சீர் குன்ற லிலர்”
அரண்களின் அமைப்பையுஞ் சிறப்பையும் திருக்குறளிலும் சிலப்பதிகாரத்திலுங் காணலாம்.
“மணிநீரு மண்ணு மலையு மணி நிழற்
காடு முடைய தரண்.”
“உயர் வகலந் திண்மை யருமையிந் நான்கி
னமைவர ணென்றுரைக்கு நூல்.” (திருக்குறள்)
“மிணையுங் கிடங்கும் வளைவிற் பொறியும்
கருவிர லூகமும், கல்லுமிழ் கவணும்,
பரிவுறு வெந்நெயும் பாகடு குழிசியும்
காய்பொன் உலையும் கல்லிடு கூடையும்
தூண்டிலும் தொடக்கும் ஆண்டலை அடுப்பும்
கவையும் கழுவும் புதையும் புழையும்
ஐயவித் துலாமும் கையெயா ஊசியும்
சென்றெறி சிரலும் பன்றியும் பணையும்
எழுவுஞ் சீப்பும், முழுவிறற் கணையமும்
கோலும் குந்தமும் வேலும் பிறவும்” (சிலப்பதிகாரம்)
சங்க காலத் தமிழ் நாடு வீரத் தாய்மார் வாழ்ந்த திருநாடாக விளங்கிற்று. வீரத்தின் அறிகுறியாக ஆண்களும், பெண்களும். பிள்ளைகளும் புலிப்பற் கோர்த்து அணிந்தனர் புலிப் பல் தாலி கட்டினர். புலித்தோல் போர்த்தனர்.
“மறங்கொள் ளயப்புலி வாய்பிளந்து பெற்ற
மாலை வெண்பல் தாலி.”
இளந் தமிழ்ப் பெண்கள் அன்று வீரனை மணஞ் செய்யவே விரும்பினர். உத்தியாக மாப்பிள்ளை தேடி அலையவில்லை.
“திருநயத் தக்க பண்பினிவள் நலனே
பொருநர்க் கல்லது பிறர்க்கா காதே”
ஏறுகளை எதிர்த்துப் பொருது அடக்குவதற்கு, அஞ்சும் ஆயனை எந்த ஆய்ச்சியும் விரும்ப மாட்டாள்.
“கால்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும்
புல்லாளே ஆய மகள்”
“கொல்லேறு கொண்டான் இவள்கேள்வன் என்று ஊரார்
சொல்லும் சொல் கேளா அலைமாறி யாம்வரும்
செல்வம் எங் கேள்வன் தருமோ எங் கேளே.”
வீரப் பெண்களின் கடமையாது என்பதைப் பொன் முடியார் எனுஞ் சங்க காலப் பெண் புலவர் தெளிவாகக் காட்டுகிறார்.
“ஈன்று புறந்தருதல் என்றலைக் கடனே
சான்றோ னாக்குதல் தந்தைக்குக் கடனே
வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே
ஒளிறுவா ளருஞ்சமம் முருக்கிக்
களிறெறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே”
தகடூர் யாத்திரையிலுள்ள அரிய பாடலொன்று பின்வருவதாகும்.
“தருமமும் ஈதேயாம் தானமும் ஈதாம்
கருமமுங் காணுங்கால் ஈதாம் – செருமுனையிற்
கோள்வாண் மறவர் தலைதுமிப்ப என்மகன்
வாள்வாய் முயங்கப் பெறின்.”
முதல்நாட் போரில் ஒருத்தி தனது தமையனை இழந்தாள். இரண்டாம் நாட் போரிற் கணவனை இழந்தாள். எனினும், மூன்றாம் நாட்போருக்குத் தனது பால் மணம் மாறாச் சிறுவனை உவப்புடன் அனுப்புகிறாள்.
“மேனாள் உற்ற செருவிற்கிவள் தன்னை
யானை எறிந்து களத்தொழிந் தன்னே
நெருநல் உற்ற செருவிற்கிவள் கொழுநன்
பொருநரை விலங்கி ஆண்டுப்பட் டனனே
இன்றும் செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி
வேல்கைக் கொடுத்து வெளிது விரித்துடீஇ
பாறுமயிர்க் குடுமி எண்ணெய் நீவி
ஒருமக னல்லது இல்லோள்
செருமுக நோக்கிச் செல்கென விடுமே”
உன்மகன் எங்கே சென்றான் என்ற கேள்விக்கு ஒரு தமிழ்த்தாயின் விடை பின்வருவதாகும்:
“சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன்
யாண்டுள னோவென வினவதி என் மகன்
யாண்டுள னாயினும் அறியேன் ஓடும்
புலிசேர்ந்து போகிய நல்லளை போல
ஈன்ற வயிறோ விதுவே தோன்றுவன் மாதோ
போர்க்களந் தானே.”
இறந்த மகனின் உடலைப் போர்க்களத்திலே கண்டு உவப்பினால் ஒரு வீரத்தாயின் வாடிய முலைகள் பாலூறிச் சுரந்தனவெனப் புற நானூறு கூறுகிறது.
“இடைப்படை யழுவத்துச் சிதைந்துவே றாகிய
சிறப்புடைய யாளன் மாண்புகண் டருளி
வாடுமுலை யூறிச் சுரந்தன
ஓடாப் பூட்கை விடலை தாய்க்கே”
தன் மகன் போரிற் பின்வாங்கி ஓடினான் எனக் கேட்டு ஒரு தாய் சினங்கொண்டாள். அவள் அவ்வாறு செய்திருப்பின், அவனுக்குப் பாலூட்டிய முலையை அறுத்தெறிவேன் எனச் சபதஞ் செய்தாள்.
சிறுவன்
“பாடை யழித்து மாறுன னெற்று பலர்கூற
மண்டமர்க் குடைந்த னனாயின் னுண்டவென்
முலையறுத் திடுவேன் யானெனச் சினைஇக்
கொண்ட வாளோடு படுபிணம் பெயராச்
செங்களத் துழவோன் சிதைந்து வேறாகிய
படுமகன் கிடக்கை சாணூஉ
ஈன்ற ஞான்றினும் பெரிதுவந் தனளே”
சங்க காலத்துக்குப் பின்பும் தமிழர் வீரம் மறையவில்லை. பாண்டிய சோழப் பேரரசுகளைப்பற்றி அடுத்த அதிகாரத்திற் படிப்போம். இன்று தமிழர் ஆட்சி யெங்கே! நிலைமை மாறிவிட்டது.
“கால மென்பது கறங்கு போற் சுழன்று
மேலது கீழாய் கீழது மேலாய்
மாற்றிடுந் தோற்றம்”
எமது வரலாறு இலங்கை வேந்தன் சோகக்கதை போலாயிற்று.
“வாரணம் பொருதமார் பன், வரையினை எடுத்ததோ ளன்
பாரொடு விண்ணும் அஞ்சிப், பதைத்திட உரப்பும் நாவன்
தாரணி மவுலிபத் தும், சங்கரன் கொடுத்த வாளும்,
வீரமும் களத்தேபோட்டு, வெறுங்கையோடு இலங்கை புக்கான்
நாம் தமிழர் கண்ட அரசு
“அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
மான முடைய தரசு”
“முறை செய்து காப்பாற்று மன்னவன் மக்கட்
கிறையென்று வைக்கப் படும்” (திருக்குறள்)
அரசு சட்டமுறை அதிகாரத்தின் இருப்பிடம் எனவும், பலமே அதற்கு ஆதாரம் எனவும் மேனாட்டு மெய்ம்மையியலாளர் கூறுகின்றனர். அரசு மக்களின் இணக்கம் ஒத்துழைப்பு முதலியவற்றின் அடிப்படையில் உருவாகிறது எனவும், அஃதொரு சமூக ஒப்பந்தம் எனவும் உறூசோ கூறுகிறார். “பெரும்பாலான மக்கள் தமது சமூக நலனை மிகவுயர்ந்த படிக்கு ஏற்றுவதற்காக உதவும் அடையம் அரசு” எனப் புகழ்பெற்ற அரசியல் ஞானியாகிய கறோல் லாக்சி கூறுகிறார். தனியார் தமது பரஸ்பர நன்மைக்காக அமைத்த நிறுவனம் அரசென்பது இவர்களுடைய கருத்தாகும்.
வேறுசில மேனாட்டுக் கருத்துக்களாவன:-
“சாத்தியமான உயர்ந்த மட்டத்தில் மக்களின் தேவைகளைத் திருப்தி செய்வது அரசின் நோக்கம்.”
“பாதுகாப்பு, நீதி, சமூக நலன் எனும் மூன்றும் அரசின் முக்கிய குறிக்கோள்களாகும்” பேற்றிறன் றசன்.
“அரசு அறத்தை அடையும் வழியாகும்.” -கீகெல்
“சட்ட முறைப்படி அதிகாரஞ் செலுத்தும் தாபனமாக மக்கள் அரசை வழக்கமாகக் கருதுகின்றனர். மக்களின் பொது நன்மைக்காக அரசு அதிகாரஞ் செலுத்துகிறது.”
அரசு வன்கண் அதிகாரம் எனவும், பொருளாதார பலம் உடைய வர்க்கத்தினர் அரசியல் அதிகாரத்தையும் பெற்று ஏனைய மக்களைச் சுரண்டுவர் எனவும், அரசு அழிந்தாலன்றி மக்கள் சுதந்திரமாக வாழமுடியாது எனவும் மாக்சிய வாதிகள் கூறுகின்றனர். சாணக்கியர், மைக்கியாவல்லி ஆகியோர் எழுதிய பழைய நூல்களும் இக் கருத்துக்களையே வற்புறுத்துகின்றன.
மேனாட்டவர் பொருளாதார பலத்தின் அல்லது அதிகார பலத்தின் அடிப்படையில் அரசுக்கு இலக்கணங் கூறினர். தமிழர் கண்ட அரசுக்கு அறமே அடிப்படையாகும். அரசியல் என்பது உலகிடை மறவினை பரவாது அறவினை பரவுவதற்கு ஏற்படுத்தப்பட்ட ஓர் அமைப்பாகும். அறம் தறவி நடைபெறும் ஆட்சி அரசாகாது. இக்கருத்தைத் திருக்குறளில் மட்டுமன்றிப் பல சங்கப்பாடல்களிலுங் காணலாம்.
“அறம் துஞ்சும் செங்கோல்”
“அறம் புரிந்தன்ன செங்கோல் நாட்டம்”
“அறவோர் புகழ்ந்தஆய் கோலன்”
“அறநெறி முதற்றே அரசின் கொற்றம்”
அறத்தின் முன்னிலையிற் பெரும்பான்மை, சிறுபான்மை, சாதி, மதம், குலம், எனது மக்கள், உனது மக்கள் என்ற பேதங்களில்லை. தமக்கொரு நீதி பிறர்க்கொரு நீதியில்லை. யாவருஞ் சமம்.
“நான்குடன் மாண்ட தாயினும்
அறநெறி முதற்றே அரசின் கொற்றம்
அதனால், தமரெனக் கோல் கோடாது
பிறரெனக் குணங் கொல்லாது”
அரசன் உலகபாலகனாய் நின்று மக்களையும் அறத்தையும் காப்பாற்றுவதினால், தமிழ் மக்கள் அவனை இறைவனுக்குச் சமமாகக் கருதினர்.
“திருவுடை மன்னரைக் காணிற் றிருமாலைக் கண்டேனே’
“நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்”
“முறை செய்து காப்பாற்றும் மன்னவன்
மக்கட்கு இறையென்று வைக்கப்படும்”
அரசனைக் காவலன் என்பர் காவலன் என்ற சொல்லின் பொருளைத் திருத்தொண்டர் புராணம் இயற்றிய சேக்கிழார் பெருமான் தெளிவுற விளக்கினார்.
“மாநிலங் காவலன் ஆவான் மன்னுயிர் காக்குங்கால்
தானதனுக் கிடையூறு தன்னால், தன் பரிசனத்தால்
ஊனமிகு பகைத்திறத்தால் கள்வரால் உயிர் தம்மால்
ஆனபயம் ஐந்தும் தீர்த்து அறங்காப்பான் அல்லனோ”
அரசன் அறத்தினின்று தவறினாற், செங்கோல் கோடினால், அந்த அரசனேயன்றி நாடும் அழியும். அநீதிகள், கொடுமைகள் செய்த பல வல்லரசுகளின் அழிவை வரலாற்றிற் படிக்கிறோம். அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவதே சிலம்பின் கதையாகும்.
“அரசியல் பிழைத்தோர்க் கறம்கூற் றாவதூஉம்
உரைசால் பத்தினிக் குயர்ந்தோ ரேத்தலும்
ஊழ்வினை உகுத்துவந் தூட்டும் என்பதூம்
சிலப்பதி காரம் என்னும் பெயரால்
நாட்டுதும் யாம்ஓர் பாட்டுடைச் செய்யுளென”
இக்கருத்தை வள்ளுவரும் வலியுறுத்துகிறார்.
“அல்லற்பட்டாற்றா தழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை”
“முறைகோடி மன்னவன் செய்யி னுறைகோடி
யொல்லாது வானம் பெயல்.”
“ஆபயன் குன்று மறு தொழிலோர் நூன் மறப்பர்
காவலன் காவா னெனின்.”
சீத்தலைச்சாத்தனார் மணிமேகலையில்:-
“கோன்நிலை திரிந்திடின் கோள்நிலை திரியும்
கோள்நிலை திரிந்திடின் மாரிவறம் கூரும்
மாரிவறம் கூரின் மன்னுயிர் இல்லை”
நாட்டின் நீதி எவ்வாறு செலுத்தப்பட வேண்டும் என்பதை மனுநீதி கண்ட சோழன் கதை கூறுகிறது. ஒரு பசுவின் முறையீட்டைக் கேட்டு தன் மகனையே கொன்றான்.
“வாயிற் கடைமணி நடுநா நடுங்க
ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுட
தான்தன் அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்
பெரும் பெயர்புகார் என்பதியே”
“ஒரு மைந்தன் தன்குலத்துக் குள்ளான் என்பது உணரான்
தருமந்தன் வழிச்செல்கை கடனென்று தன்மைந்தன்
மருதந்தன் தேராழி உறஊர்த்தான் மனுவேந்தன்
அருமந்த அரசாட்சி அரிதோ மற்றெளி தோதான்”
பிற்காலத்திற் கவிச்சக்கரவர்த்தி கம்பர் இத் தமிழ் இலட்சியத்தை மிகவும் தெளிவாக விளக்குகிறார். மக்களுக்கு அரசன் உயிரேயன்றி உடம்புமாவான் என்கிறார்.
“வயிரவாள் பூணஅணி மடங்கல் மொய்ப்பினான்
உயிர்எலாம் தன்னுயிர் ஒப்ப ஓம்பலால்
செயிர்இலா உலகனில் சென்று நின்றுவாழ்
உயிர்எலாம் உறைவதோர் உடம்பும் ஆயினான்”
அரசன் எப்படிப்பட்டவனாக இருக்க வேண்டும் என்பதையும் கம்பர் கூறுகிறார்.
“தாய் ஒக்கும் அன்பில்: தவம் ஒக்கும் நயம் பயப்பில்
சேய் ஒக்கும் முன்னின்று ஒரு செல்கதி உய்க்கும் நீரால்
நோய் ஒக்கும் என்னின மருந்து ஒக்கும் நுணங்கு கேள்வி
ஆயப் புகுங்கால் அறிவொக்கும் எவர்க்கும் அன்னான்.”
முடியரசாயினும் சரி குடியரசாயினும் சரி, அறத்தினின்று தவறும் அரசு கொடுங்கோலாகாது. அரசியல் அமைப்பு உமிக்குச் சமனாகும். அதன் ஒழுக்கம் அல்லது நடத்தை அரிசிக்குச் சமமாகும். அரிசியை விட்டு இன்று நாம் உமிக்குச் சண்டை போடுகிறோம்.
சனநாயகத்தை மெச்சுவது இன்று வழக்கமாகிவிட்டது. ஆனாற் சனநாயகத்தில் இன்று நடைபெறும் அதர்மங்களையும், அநீதிகளையும், நசுக்கல்களையும், அடக்குமுறைகளையும், சுரண்டல்களையும், சுயநலப் போராட்டங்களையும், மரபுக்குழுக் கலவரங்களையும், வர்க்கப் போராட்டங்களையும் நாம் கவனிப்பதில்லை. ஒன்பது வாக்குக்கெதிராகப் பத்து வாக்கென்றால் அதர்மம் தர்மமாகுமா? அநீதி, நீதியாகுமா? எந்த நாயகம் என்றாலென்ன, அறமும் நீதியும் முக்கியமானவை.
தொல்காப்பியர் காலத்துக்கு முற்பட்டே தொடங்கிய மூவேந்தர் ஆட்சிகள் சங்க காலத்திலும் தொடர்ந்து இருந்தன. இம் மூவரும் பேரரசர்களாவர். பெருங்கோ, மாவேந்தர் எனப்பட்டனர். கி.பி. 1ம், 2ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த சேர, சோழ, பாண்டிய அரசர்கள் பின்வருவோராவர்.
சேரர்: இமயவரம்பன் நெடுஞ் சேரலாதன், சேரன் செங்குட்டுவன், மந்தரம் சேரலிரும்பொறை.
சோழர்: முதலாம் கரிகாலன், இரண்டாம் கரிகாலன், இளஞ்சேட் சென்னி, நலங்கிள்ளி, நெடுகிள்ளி, கிள்ளிவளவன், கோப்பெருஞ் சோழன், பெருநற்கிள்ளி.
பாண்டியர்:- முதுகுடுமிப் பெருவழுதி ஆரியப்படை கடந்த நெடுஞ் செழியன், வெற்றிவேற் செழியன், தலையங் கானத்துச் செருவென்ற நெடுங்செழியன்.
பேரரசருக்குக் கீழ்ச் சிற்றரசர் இருந்தனர். இச் சிற்றரசருக்குக் கீழும் சிற்றரசர் இருந்தனர். சிற்றரசர் மன்னர் எனப்பட்டனர். சங்க காலத்திலும் சங்கத்துக்குப் பிற்பட்ட காலத்திலும் இச்சிற்றரசர்களை அண்டியே பெரும்பாலும் புலவர் வாழ்ந்தனர். சங்கநூல்கள் குறு நில மன்னர் பலரைக் குறிப்பிடுகின்றன. வேளிர், மோகூர், பழையன், மாரன் நன்னன், வேண்மான், வில்லவன், கோதை, ஓய்மாநாடன், நல்லியக் கோடன், நிதியன், வேள், ஆய், வேள்பேகன், வேள்எவ்வி, வேள்பாரி, நன்னன், வேல்மான் முதலியோர் வேளீர்ச் சிற்றரசர்களிற் சிலராவர். மேலும் கோசர், எயினர், கட்டியர், கருநாடர் முதலியோரும் தத்தமக்கெனத் தனிச் சிற்றரசுகள் நிறுவியிருந்தனர்.
தலைநகரிற் பேரரசருக்குத் துணையாக ஐம்பெருங்குழுவும் எண் பேராயமும் இருந்தன. ஐம்பெருங்குழு:- அமைச்சர், புரோகிதர், படைத்தலைவர், தூதர், ஒற்றர், எண்பேராயம்:- கணக்காயர், கருமவிதிகள், கனகச்சுற்றம், கடைக்காப்பாளர், நகர் மாந்தர், படைத்தலைவர், யானை மறவர், இவுளிமறவர்.
உண்மையில் ஆட்சி சிற்றரசர் கையிலும் நாட்டவை, ஊரவைகளின் கையிலும் இருந்தன. பேரரசரின் நேர் ஆட்சி நகர எல்லைகளுக்குட் பட்டதாகும். சிற்றரசர் பேரரசருக்குத் திறை கட்டி ஆண்டனர். அவைகளின் அங்கத்தவர் மக்களினால் தெரிவு செய்யப்பட்டனர். யார் யார் தேர்தலுக்குத் தகுதியற்றவர் என்பதையும் தேர்தல் முறைகளையும் சங்கநூல்கள் கூறுகின்றன. மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு அதிகாரம் கிராம மட்டம் வரையும் பன்முகப்படுத்தப்பட வேண்டுமென இன்று நாம் கற்பனை செய்கிறோம். ஆனாற் சங்ககாலத் தமிழகத்தில் இப்படிப்பட்ட ஆட்சி முறையே இருந்தது. இன்று போல அதிகாரம் மையமாக்கப்பட்ட சிலராட்சி இருக்கவில்லை.
பண்டு தொட்டு ஆங்கிலேயர் ஆட்சி வரையும் இந்தியாவில் நிலவிய ஆட்சிமுறை இடைக்கால ஐரோப்பிய நிலப்பிரபுத்துவ முறை போன்றதாகும். தென்னிந்தியாவில் மூன்று பேரரசர் இருந்தனர். சேர சோழபாண்டியர், வட இந்தியாவில் முதலாவது பேரரசு மகதப் பேரரசாகும். இவர்களுக்குக் கீழ் பல்லாயிரஞ் சிற்றரசர் இருந்தனர். சிற்றரசர் பேரரசருக்குத் திறைகட்டினர். பேரரசர் பலங்குன்றிய காலத்திற் சிற்றரசர் திறைகட்ட மறுத்தனர். பேரரசர்களுக்கும் சிற்றரசர்களுக்கும் இடையிற் பல போர்கள் நடந்தன. ஒரு சிற்றரசனைப் பேரரசன் வென்றால் அச்சிற்றரசன் மறுபடியும் திறைகட்ட வேண்டி நேரிடும் திறைபெறும் உரிமைக்கே பேரரசர் போரிட்டனர். சிற்றரசரின் நாட்டைக் கவர்ந்து அதை நேரே ஆளப் பேரரசர் எத்தனிக்கவில்லை. பேரரசர்களும் தமக்கிடையிற் போரிட்டனர். ஒரு பேரரசனை மற்றொரு பேரரசன் வென்றால், முந்திய பேரரசனின் கீழிருந்த சிற்றரசர்களிற் பலர் பிந்திய பேரரசனுக்குத் திறை கட்ட வேண்டி நேரிடும். இப்போர்களினால் மக்களின் வாழ்க்கை எவ்வகையிலும் பாதிக்கப்படவில்லை. போரில் யார் வெல்லினுந் தோற்கினும், நாட்டாட்சி சிற்றரசனினதும் ஊரவைகளினதுங் கையில் இருந்தது. மரபு முறைப்படி அரசரும் ஊரவைகளும் ஆட்சி செய்தனர். கடைச்சங்க காலத்துக்குப் பின்பு பேரரசர் சிற்றரசராவதும் சிற்றரசர் பேரரசராவதும் வழக்கமாயிற்று. எனினும் ஆட்சிமுறையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.
நீதி வழங்குவதற்கு அறங் கூறு அவையங்கள் இருந்தன. இவை நீதி தவறினாற் கண்ணீர் சொரிந்து அழும் பாவையொன்று புகார் நகரில் இருந்ததென இளங்கோவடிகள் கூறுகிறார்.
“அரசுகோல் கோடுனும் அறங்கூ றவையத்து
உரைநூல் கோடி ஒருதிறம் பற்றினும்
நாவொடு நவிலாது நவைநீ ருகுத்துப்
பாவைநின் றழுஉம் பாவை மன்றமும்.”
சோழருக்குரிய உறையூரில் அறங்கூறு அவையத்தில் நீதியும் தர்மமும் எப்பொழுதும் நிலவிற்றென ஒரு புலவர் பாடுகிறார்.
“மறங்கெழு சோழர் உறந்தை அவையத்து
அறம் நின்று நிலையிற் றாகலின் அதனால்
முறைமைநின் புகழும் அன்றே.”
- கல்வியும் பண்பாடும்
“கல்வி சிறந்த தமிழ்நாடு – புகழ்
கம்பன் பிறந்த தமிழ்நாடு – நல்ல
பல்வித மாயின் சாத்திரத்தின் – மணம்
பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு.”
இது வீண் புழுகன்று. அன்று தமிழராகிய நாம் கல்வியிற் சிறந்த விளங்கினோம். இன்றுஞ் சிறந்த விளங்குகிறோம். எல்லாவற்றையும் இன்று நாம் இழந்துவிட்டபோதிலும், கலைமகளின் கடாட்சத்தை இழந்துவிடவில்லை. எமது கல்விச் சிறப்பைக் காட்டக் கள்ளப் புள்ளிகள் வேண்டியதில்லை. கல்வியும் ஞானமும் பாடசாலை களையும் ஏட்டுப்படிப்பையும் பொறுத்தவல்ல. பரம்பரையான ஒழுக்கமும் பண்பாடும் குடும்பச் சூழ்நிலையும் இவற்றுக்குக் காரணமாகும்.
கடைச்சங்க காலத்திற் பெண்புலவர் பலர் இருந்தனர். ஆண்களும் பெண்களும் சரி சமமாகக் கல்வியிற் சிறந்து விளங்கினர். நாம் கல்விக்கு அளிக்கும் மதிப்பைச் செல்வத்துக்கோ பதவிக்கோ அளிப்பதில்லை.
“கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினுங் கற்கை நன்றே.”
தமிழ் நாட்டரசர் கல்விக்குப் பேராதரவு அளித்தனர்
“உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே.”
என்பது பாண்டிய மன்னன் ஒருவன் வாக்காகும்.
“ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்
மூத்தோன் வருக வென்னா தவருள்
அறிவுடை யோனாறு அரசுஞ் செல்லும்.”
என்பது சங்கப் பாடல்களில் ஒன்றாகும்.
வள்ளுவர் கல்வியின் சிறப்பைப் பத்துக் குறள்களிலும் கல்லாமையின் இழிவைப் பத்துக் குறள்களிலும் விளக்குகிறார்:
“கேடில் விழுச் செல்வங் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றையவை.”
“ஒருமைக்கட் டான்கற்ற கல்வி யொருவற்
கெழுமையு மேமாப் புடைத்து.”
“அறிவுடையார் எல்லாம் உடையர் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர்.”
“விலங்கொடு மக்க ளனைய ரிலங்குநூல்
கற்றாரோ டேனை யவர்.”
சங்ககாலப் புலவர்களின் பெயர், ஊர், குலம் முதலியனவற்றை நோக்கும்போது, அவர்கள் பல இனத்தவராகவும் குலத்தவராகவும், பேரூர்களில் மட்டுமன்றிச் சிற்றூர்களில் வாழ்ந்தவராகவுங் காணப்படுகின்றனர். பலர் நாகரினத்தைச் சேர்ந்தவராவர். சங்ககாலத் தமிழ் நாட்டிற் பரந்த கல்விமுறை இருந்ததுமன்றி அது உயர்ந்த மட்டத்திலும் இருந்திருக்க வேண்டும்.
எவ்வளவு செல்வமும் அதிகாரமும் இருப்பினும், பண்பாடில்லா விட்டால் மக்களின் வாழ்க்கை சிறப்படையாது.
“பண்பெனப் படுவது பாடறிந் தொழுகல்” (நெய்தற்கலி)
“பண்புடையார் பட்டுண்டு உலகம்” (திருக்குறள்)
“பெயக்கண்டும் நஞ்சுண்ட மைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டுபவர்.” (திருக்குறள்)
ஒழுக்கம் உயர் குலம். தமிழர் விரிந்த மனப்பான்மையும் அன்பும் அறனுமுடைய வாழ்க்கை நடத்தினர்.
“யாதும் ஊரே யாவருங் கேளிர்
தீதும் நன்றும் பிறர் தர வாரா
நோதலுந் தணிதலு மவற்றோ ரன்ன
சாதலும் புதுவ தன்றே வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்று மிலமே மின்னொடு
வானந் தண்டுளி தலைஇ யானாது
கல்பொரு திரங்கு மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோ லாருயிர்
முறைவழிப் படூஉ மென்பது திறவோர்
காட்சியிற் றெளிந்தன மாகலின் மாட்சியிற்
பெரியோரை வியத்தலு மிலமே
சிறியோரை யிகழ்த லதனினு மிலமே” (புறநானூறு)
இக்காலத்திற் சமவுடைமையாளர் பொதுநல நோக்கத்தை வலியுறுத்துகின்றனர். அன்று ஒரு சங்கப் புலவர்:-
“உண்டால் அம்மஇவ் வுலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவ தாயினும் இனிதெனத்
தமியர் உண்டலும் இவரே முனிவிலர்
துஞ்சலும் இலர்பிறர் அஞ்சுவதஞ்சிப்
புகழெனின் உயிருங் கொடுக்குவர் பழியெனின்
உலகுடன் பெறினுங் கொள்ளலர் அயர்விலர்
அன்ன மாட்சி யனைய ராகித்
தமக்கென முயலா நோன்றாட்
பிறர்க்கென முயலுநர் உண்மை யானே.”
(கடலுள் பாய்ந்த இரும் பெருவழுதி)
அரசியலில் மட்டுமன்றித் தமது வாழ்க்கையிலும் அறத்தைக் கண்டவர் தமிழர். அறத்தின் வழி நின்று பொருளை ஈட்டித் தமக்கும் பிறருக்கும் பயன்படுவழியிற் செலவழித்து இன்பத்தை அடைவதே வாழ்க்கையின் நோக்கமெனக் கொண்டனர்.
“சிறப்புடை மரபின் பொருளும் இன்பமும்
அறத்து வழிப்படூஉத் தோற்றம் போல”
“இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு
அன்போடு புணர்ந்த ஐந்திணை.”
குடும்ப வாழ்க்கையை இல்லறம் என்றனர். இல்லறம் நல்லறமென வாழ்ந்தனர்.
“அறனெனப் பட்டதே யில்வாழ்க்கை யஃதும்
பிறன்பழிப்ப தில்லாயி னன்று.”
“அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.”
இல்லறத்தின் சிறப்புப் பண்புகளை வள்ளுவர் 240 குறள்களில் விளக்குகிறார்.
ஒரு சமூகத்திலுள்ள பெண்களின் நடத்தை அச்சமூகத்தின் பண்பாட்டைக் காட்டும்.
“மங்கல மென்ப மனையாட்சி மற்றத
ன்கல நன் மக்கட் பேறு.”
“மனைத்தக்க மாண்புடைய ளாகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.”
“பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னுந்
திண்மையுண் டாகப் பெறின்.”
பெண்களின் குணங்களாவன:-
“அச்சமும் நாணும் மடனும் முந்துறுத்த
நிச்சமும் பெண்பாற் குரிய என்ப.”
“செறிவும் நிறைவும் செம்மையும் செப்பும்
அறிவும் அருமையும் பெண் பாலன.”
“உடம்போடு உயிரிடையென்ன மற்றன்ன
மடந்தையோடு எம்மிடை நட்பு.”
“யாயும் ஞாயும் யாரா கியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ்வழி யறிதும்?
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.”
விருந்தோம்பல் இல்வாழ்வோர் கடமையாகப் பல விடங்களிற் குறிப்பிடப்படுகிறது.
“இருந்தோம்பி இல் வாழ்வ தெல்லாம்
விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு”
கணவனைப் பிரிந்திருந்த போது தான் இழந்தவற்றைக் கூறிக் கண்ணகி பின்வருமாறு வருந்தினாள்.
“அறவோர்க்கு அளித்தலும் அந்தணர் ஒம்பலும்
துறவோர் கெதிர்த்தலும் தொல்லோர் சிறப்பின்
விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை”
தமிழர் எக்காலத்திலும் பிள்ளைகளைச் செல்வமாகக் கருதினர்.
“படைப்புப்பல படைத்துப் பலரோடு உண்ணும்
உடைப்பெருஞ் செல்வர் ஆயினும் இடைப்படக்
குறுகுறு நடந்து சிறுகை நீட்டி
இட்டும், தொட்டும், கல்வியும், நுழந்தும்
நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்
மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
பயக்குறை இல்லைத் தாம்வாழும் நாளே.”
(பாண்டியன் அறிவுடை நம்பி)
“அமிழ்தினு மாற்ற வினிதேதம் மக்கள்
சிறுகை யளாவிய கூழ்.”
“குழலினி துயாழினி தென்பதும் மக்கள்
மழலைச் சொற் கேளா தவர்.” (திருக்குறள்)
செல்வத்தின் பயன் ஈதலாகும். கொடையைச் சங்கப்புலவர் புகழ்ந்து பாடினர். அதே போல இரத்தலின் இழிவையுங் கூறினர். அறத்தைக் கடமையாகச் செய்தனரன்றி இக்காலத்திலே போலப் பயன் கருதிச் செய்யவில்லை.
“இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும்
அறவிலை வணிகன் ஆய்அலன்.”
முல்லைக் கொடிக்குப் பாரி தன் தேரைக் கொடுத்தான்.
எல்லா மக்களும் இன்புற்றிருக்க வேண்டுமெனத் தமிழ் மக்கள் எண்ணினர். தனியொருவனுக்கு உணவில்லை யென்ற நிலையைத் தாங்க முடியாததென மருதன் இள நாகனார் எனுஞ் சங்கப் புலவர் பாடினார்.
“ஒரு நாள் ஒரு பொழு தொருவன் ஊணொழியப் பார்க்கும்
நேர் நிறை நில்லா தென்றுமென் மனனே”
இக் கருத்தையே பிற்காலத்திற் பாரதியாரும்.
“தனியொருவனுக்கு உணவில்லை யென்றாற்
சகத்தினை அழித்திடுவோம்” எனக் கூறினார்.
தமிழர் சமயம்
தொல்காப்பியர் காலத்திலும் சிந்துவெளிக் காலத்திலும் தமிழர் சமயம் பற்றி முன்பு கூறினோம். சமய உணர்ச்சி தமிழர் சமுதாயத்தில் அநாதியாகவே தோன்றி இன்று வரையும் நீடித்து நிலைத்திருக்கிறது. இறைவன் ஒருவன் உளன். அவன் பேர், ஊர், குணங்குறியில்லாதவன், மனம் வாக்குக்கு எட்டாதவன். உயிர்கள் பிறந்திறந்து துன்புறுகின்றன. மறுபிறப்புண்டு. அறம் கொல்லாமை, புலால் உண்ணாமை. இச் சைவக் கொள்கைகளும் ஆசாரங்களும் தொல்காப்பியர் காலத்திலிருந்தே தமிழர் சமுதாயத்தில் இருந்து வருகின்றன என மறைமலையடிகள் கூறுகிறார். இச் சைவ சமயத்தின் அடிப்படைக் கொள்கைகளைப் பல சங்கப் பாடல்களிற் காணலாம். பிற்காலத்தில் தேவாரதிருவாசகத்திலும், திருமந்திரத்திலும், சைவ சித்தாந்த சாத்திரங்களிலும் இக் கொள்கைகள் தெளிவாக விளக்கப்பட்டன. முப் பொருளுண்மையைப் பின்வருஞ் செய்யுள் சுருக்கமாகக் கூறுகிறது.
“சான்றவ ராய்திடத் தக்க வாம் பொருள்
மூன்றுள மறையெல்லாம் மொழிய நின்றன
ஆன்றநோர் தொல்பதி யாருயிர்த் தொகை
வான்றிதழ் தளையென வகுப்ப ரன்னவே” (கந்தபுராணம்)
“சைவ சித்தாந்தமாவது தென்னிந்தியாவிற்கே சிறப்பாக உரிய சமயமாகும். தென்னிந்தியாவிலே வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட இச் சமயம் தமிழ் மக்கள் நெஞ்சத்தில் இன்னும் நிறைந்து விளங்குகிறது.”
ஆனாற் தொல்காப்பியர் காலத்திலும் கடைச் சங்க காலத்திலும் எல்லாத் தமிழ் மக்களும் இச் சைவ மதத்தைப் பின்பற்றினர் என்பது ஐயமாகும். பலவின மக்கள் பலவகைப்பட்ட வழிபாடுகளும் கொள்கைகளும் உடையவராக இருந்தனர். நிலத்திற்கேற்ப வழிபாடுகள் வித்தியாசப்பட்டன. சங்க காலத்திற் பல தெய்வ வழிபாடுகளும் சிறு தெய்வ வழிபாடுகளும் தோன்றிவிட்டன. புகார் நகரிலுள்ள கோயில்களை இளங்கோவடிகள் இந்திரவிழாவூரெடுத்த காதையிற் குறிப்பிடுகிறார்.
“பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்
அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும்
வாள்வளை மேனி வாலியோன் கோயிலும்
நீல மேனி நெடியோன் கோயிலும்
மாலை வெண்குடை மன்னவன் கோயிலும்
மாமுது முதல்வன் வாய்மையின் வாழாஅ
நான் மறை மரபின் தீ முறை யொருபால்
நால் வகைத் தேவரும் மூவறு கணங்களும்
பால் வகை தெரிந்த பகுதித் தோற்றத்து
வேறு வேறு கடவுளர் சாறுசிறந் தொருபால்
அறவோர் பள்ளியும் அறனோம் படையும்”
ஊர்காண் காதையில் மதுரையிலுள்ள கோயில்களைக் குறிப்பிடுகிறார்.
“நுதல் விழி நாட்டத் திறை யோன்கோயிலும்
உவணச் சேவ லுயர்ந்தோன் கோயிலும்
மேழிவல னுயர்ந்த வெள்ளை நகரமும்
கோழிச் சேவற் கொடியோன் கோட்டமும்,
அறத்துறை விளங்கிய அறவோர் பள்ளியும்”
சிவன் திருமால் கோயில்கள் மட்டுமன்றிப் பல வகைப்பட்ட கோட்டங்களும் இருந்தன:- அமரர் கோட்டம், பல தேவர் கோட்டம், வெள்யானைக் கோட்டம், சூரியன் கோட்டம், நிலாக் கோட்டம், ஊர்க் கோட்டம், வேல் கோட்டம், சாத்தான் கோட்டம், காமதேவன் கோட்டம், குறிஞ்சி, முல்லை, நெய்தல் நிலங்களுக்கே விசேடமான வழிபாடுகளும் தெய்வங்களும் இருந்தன.
சங்க காலத்தில் வணங்கப்பட்ட தெய்வங்களாவன:- சிவன், திருமால், முருகன், இந்திரன், பலதேவன், பிரமன்.
சிறு தெய்வங்களாவன:- தேவி, கொற்றவை, காளி, கிருட்டணன், வருணன், திருமகள், நீர்த் தெய்வம், ஞாயிறு, திங்கள், பதினெண் கணத் தேவர்கள். பாம்பு வணக்கமும் இறந்த வீரருக்குக் கல் நட்டு விழாவெடுத்து வணக்கஞ் செய்வதும் அக்கால வழக்கங்களாகும். பெண் தெய்வ வழிபாடு வரலாற்றிற்கு முற்பட்ட காலந்தொட்டு திராவிடர் வாழ்ந்த எல்லா நாடுகளிலும் முற்பட்ட காலந்தொட்டு திராவிடர் வாழ்ந்த எல்லா நாடுகளிலும் இருந்து வந்தது. மக்கள் பல பெயர்களினாற் பெண் தெய்வத்தை வழிபட்டனர். சங்க காலத்திற்க கொற்றவை வணக்கம் மறவரிடையிற் பெரு வழக்காக இருந்தது. மறவர் கொற்றவைக்குப் பலி கொடுத்து வழிபாடு செய்தனர்.
“சிலம்பும் சுழலும் புலம்பும் சீறடி
வலம் படு கொற்றத்து வாய்வாட் கொற்றவை”
வேலன் வெறியாட்டு, குரவை, நுணங்கு முதலிய வழிபாட்டு முறைகளும் குறிஞ்சி நில மக்களிடையில் இருந்தன.
பலவகைப்பட்ட பழக்க வழக்கங்களுஞ் சங்க நூல்களிற் குறிப்பிடப்படுகின்றன. சாதிக் கட்டுப்பாடுகள், நல்லநாட் கெட்ட நாட் பார்த்தல், சகுனம் பார்த்தல், குறி சொல்லல், சோதிடம் பார்த்தல், பலி கொடுத்தல், புலால் உண்ணல், கள்ளுண்ணல், சூதாடல், பரத்தையோடு வாழ்தல். இப்பழக்க வழக்கங்கள் பொதுவாக இருக்காவிடினுஞ், சிற்சில குலங்குடிகளில் இருந்தன. உடல் கட்டையேறும் வழக்கமுங் குறிப்பிடப்படுகிறது.
வட நாட்டு வேள்விகளும் சடங்குகளும் சங்க காலத் தமிழ் நாட்டிற் புகுந்து விட்டன.
“எண்ணாணப் பல வேட்டும்
மண்ணாணப் புகழ் பரப்பியும்”
“அறுதொழில் அந்தணர் அறம்பிரித் தெடுத்த
தீயொடு விளங்கும் நாடன்”
பிராமணீயமும் புராணக் கதைகளும் தோன்றிவிட்டன. புத்த சமண சமயக் கொள்கைகளும் எங்கணும் பரவிவிட்டன. பல புத்த சமண நூல்கள் சங்க காலத்திலும் பிற்காலத்திலும் தோன்றின. பெயர் பெற்ற புத்த நூல் சீத்தலைச் சாத்தனாரின் மணிமேகலையாகும். உருவ வழிபாடு எங்கணும் இருந்தது.
தமிழ் நாட்டில் அக்காலத்தில் வழங்கிய பல மதக் கோட்பாடுகளைச் சாத்தனார் குறிப்பிடுகிறார். அளவை வாதம், சைவ வாதம், பிரம வாதம், வைணவ வாதம், வேத வாதம், நிகண்ட வாதம், ஆசீவக வாதம், சாங்கிய வாதம், வைசேடிக வாதம், பூத வாதம், புத்தம், எனினும், அன்றும் இன்றும் சமயத் துறையிற் சமரசங்கண்டவர் தமிழராவர். சங்க காலத்தில் தமிழிற் சமண புத்த பேரிலக்கியங்கள் தோன்றின. பிற்காலத்திற் கிறிஸ்த்துவ மகம்மதியப் பேரிலக்கியங்கள் தமிழில் தோன்றின.
- திருக்குறள் வள்ளுவரும்
கடைச் சங்க காலத்தைப் பற்றிக் கூறும்போது திருக்குறளைப் பற்றிக் கூறாதுவிட முடியாது. இது கடைச்சங்க நூல், கி.பி. முதலாம் நூற்றாண்டு நூல், வள்ளுவரைப் பற்றி பல கட்டுக்கதைகள் உள. இவையாவும் நம்ப முடியாதவை. பிற்காலத்தில் எழுந்த கற்பனைகள். தமிழ் மொழியிலுள்ள நூல்களில் தலை சிறந்து நிற்பது திருக்குறளாகும். எம்மமச் சார்போ வகுப்புச் சார்போ இல்லாத நூல். இக்காரணம் பற்றிப் பொதுமறை எனப்படும். பொய்யாமொழி, தெய்வநூல், பொதுமறை, தமிழ் மறை என இந்நூலுக்குப் பெயர்களுள. திருக்குறள் உலகிலுள்ள பல மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டிருக்கிறது. போப் முதலிய மேனாட்டறிஞர் யாவரையும் மிகக் கவர்ந்த தமிழ் நூல்கள் திருக்குறளும் திருவாசகமுமாகும். எக்காலத்துக்கும் பொருத்தமான உண்மைகளைக் கூறுகிறது.
‘திருக்குறள் போன்ற விழுமிய மெய்யறிவுச் சால்புரைத் திரட்டை உலகிலுள்ள வேறெம் மொழியிலாவது காணவியலாது.’
-சுவெயிற்சர்
திருக்குறளை அரசியல், பொருளாதாரம், வாழ்க்கையியல், ஒழுக்க நெறியியல், சமூகவியல், குடும்பவியல், மெய்ஞ்ஞானம் எனும் பல கோணங்களிலிருந்தும் பார்க்கலாம். எல்லாப் பொருள்களும் திருக்குறளில் உள.
“எல்லாப் பொருளும் இதன்பா லுளஇதன்பால்
இல்லாத எப்பொருளு மில்லையாற் – சொல்லாற்
பரந்தபா வாலென் பயன்வள் ளுவனார்
சுரந்தபா வையத் துணை”
அரசியல் நூல் என்ற அளவில் திருக்குறளை சாணக்கியரின் அர்த்த சாத்திரத்துடன் அல்லது கறொல்ட் லாக்சியின் கொள்கைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தாற் குறளின் சிறப்புப் புலனாகும். நீதி நூல் என்ற அளவிற் குறளை மனுதர்ம சாத்திரத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
“வள்ளுவர் செய் திருக்குறளை மறுவறநன் குணர்ந்தோர்கள்
உள்ளுவரோ மநுவாதி ஒருகுலத்துக் கொருநீதி”
திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப் பால் எனும் முப்பாலும் கூறுகிறது. எல்லாத் துறைகளிலும் அறத்தின் அடிப்படையில் நடத்தையை விளக்குகிறது. 133 அதிகாரங்களும் 1330 குறள்களும் உடையது.
1 அறத்துப்பால் அதிகாரம் குறள்கள்
பாயிரவியல் 04 40
இல்லறவியல் 20 200
துறவறவியல் 13 130
ஊழியல் 01 10
- பொருட்பால்
அரசியல் 25 250
அங்கவியல் 32 320
ஒழிபியல் 13 130 - காமத்துப்பால்
களவியல் 07 70
கற்பியல் 18 180
133 1330
பாயிரவியலிற் கடவுள் வாழ்த்துடன் தொடங்குகிறது.
“அகர முதல வெழுத் தெல்லா மாதி
பகவன் முதற்றே யுலகு”
திருக்குறளுக்குப் பிற்காலத்தில் உரைசெய்தோர்: தருமர், மணக்குடவர், தாமத்தர், நச்சர், பரிமேலழகர், பரிதி, திருமலையர், மல்லர், காளிங்கர், பரிப் பெருமான் முதலியோராவர்.
திருக்குறளின், நுண் பொருளை விளக்குவது எனது நோக்கமன்று. பெரும்பாலான தமிழ் மக்கள் திருக்குறளைக் கற்றிருப்பர். குறளைப் பற்றிப் புலவர் பாடிய பாக்களிற் சிலவற்றை இங்கு குறிப்பிடுவோம்.
“யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்
வள்ளுவர் போல் இளங்கோவைப் போல்
பூமி தனில் யாங்கணுமே பிறந்ததில்லை”
“வள்ளுவன் தன்னை உலகினுக் கேதந்து
வான்புகழ் கொண்ட தமிழ் நாடு” (பாரதியார்)
“கடுகைத் துழைத் தேழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள்.” -(இடைக்காடனார்)
“என்றும் புலரா தியானர்நாட் செல்லுகினும்
நன்றலர்ந்து தேன்பிலிற்று நீர்மையதாய்க் குன்றாத்
செந்தளிர்க் கற்பகத்தின் தெய்வத் திருமலர்போல்
மன்புலவன் வள்ளுவன் வாய்ச் சொல்” (இறையனார்)
“மாலுங் குறளாய் வளர்ந்திரண்டு மாண்டியான்
ஞால முழுதும் நயந்தளந்தான் – வாலறிவின்
வள்ளுவருந் தங்குறள்வெண் பாவடி யால் வையத்தார்
உள்ளுவவெல் லாமளந்தா ரோர்ந்து” (பாணர்)
“நான் மறையின் மெய்ப் பொருளை முப் பொருளா
நானமுகத் தோன்றான் மறைந்து வள்ளுவனாய்த் தந்துரைத்த நூன்முறையை வந்திக்க சென்னிவாய் வாழ்த்துக நன்னெஞ் சஞ்
சிந்திக்க கேட்க செவி” – (உக்கிரப் பெருவழுதியார்)
“ஒன்றே பொருளெனின் வேறென்ப வேறெனின்
அன்றென்ப ஆறு சமயத்தார் – நன்றென
எப்பா லவரும் இயைபவே வள்ளுவனார்
முப்பான் மொழிந்த மொழி” (கல்லாடர்)
“மும்மயலயம் முந்நாடும் முந்நதியும் முப்பதியும்
மும் முரசும் முத்தமிழும் முக்கொடியும் – மும்மாவுந்
தாமுடைய மன்னர் தடமுடி மேற் றாரன் றோ
பாமுறை தேர் வள்ளுவர் முப்பால்” –
(சீத்தலைச் சாத்தனார்)
“சாற்றிய பல்கலையுந் தப்பா அருமறையும்
போற்றி யுரைத்த பொருளெல்லாந் – தோற்றவே
முப்பான் மொழிந்த முதற்பா வலரொப்பார்
எப்பா வலரினு மில்” – (ஆசிரியர் நல்லத்துவனார்)
“சிந்தைக் கினிய செவிக் கினிய வாய்க்கினிய
வந்த இருவினைக்கு மாமருந்து – முந்திய
நன்னெறி நாமறிய நாப்புலமை வள்ளுவனார்
பன்னிய இன்குறள் வெண்பா”
“பூவிற்குத் தாமரையே பொன்னுக்குச் சாம்புனதம்
பாவிற்கு வள்ளுவர் வெண்பா”
“அறன் அறிந்தேம்@ ஆன்ற பொருள் அறிந்தேம் இன்பின்
திறன் அறிந்தோம்@ வீடு தெளிந்தேம் – மறன் எறிந்த
வாளார் நெடுதாற! வள்ளுவனார் தம் வாயால்
கேளா தனவெல்லாம் கேட்டு” (பூதனார்)
“தௌ;ளு தமிழ் நடை
சின்னஞ் சிறிய இரண்டடிகள்
அள்ளு தொறுஞ் சுவை
உள்ளுந் தொறும் உணர்வாகும் வண்ணம்
கொள்ளும் அறம் பொருள்
இன்பம் அனைத்தும் கொடுத்த திரு
வள்ளுவ னைப் பெற்ற
தாற் பெற்ற தேபுகழ் வையகமே” (பாரதிதாசன்)
Leave a Reply
You must be logged in to post a comment.