பேரறிவாளன்: எந்த அடிப்படையில் விடுதலை?

பேரறிவாளன்: எந்த அடிப்படையில் விடுதலை?
  • ஜோ மகேஸ்வரன்
  • பிபிசி தமிழ்
உச்சநீதிமன்றம்
படக்குறிப்பு,உச்சநீதிமன்றம்

இந்திய உச்ச நீதிமன்றத்தில் பேரறிவாளனை விடுதலை செய்து இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் முக்கிய நகர்வுகளை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் தேதி சென்னைக்கு அருகில் உள்ள ஸ்ரீ பெரும்புதூரில் தற்கொலைப்படை குண்டுதாரி ஒருவரால் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் 1991ம் ஆண்டு ஜூன் 11ம் தேதி சிபிஐயால் பேரறிவாளன் கைது செய்யப்பட்டார்.

கடந்த 1998ம் ஆண்டு பேரறிவாளன் உள்ளிட்ட 26 பேருக்கு மரண தண்டனை விதித்து தடா நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதன் மேல் முறையீட்டில், கடந்த 1999ம் ஆண்டு சாந்தன், முருகன், நளினி, பேரறிவாளன் உள்ளிட்டோருக்கு தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது.

2000 ஏப்ரல் 26 தேதி நளினியின் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

பின் கடந்த 2014ம் ஆண்டு சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக உச்சநீதிமன்றம் குறைத்தது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் உள்ள ஏழு பேர் விடுதலை தொடர்பாக தமிழ்நாட்டில் பல்வேறு அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து, அமைச்சரவை முடிவின்படி ஏழு பேரையும் விடுதலை செய்வதாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அப்போதைய தமிழ்நாடு அரசு 2014ம் ஆண்டு அறிவித்தது,

இதற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தை நாடியது. மத்திய புலனாய்வுத் துறை (சி.பி.ஐ) விசாரித்த வழக்கு என்பதால், இந்த விவகாரத்தில் தாங்கள்தான் முடிவெடுக்க முடியுமென மத்திய அரசு தெரிவித்தது.

இதையடுத்து கடந்த 2016ம் ஆண்டு, தன்னை விடுதலை செய்யக்கோரி பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில், கடந்த 31 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்த பேரறிவாளனுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல். நாகேஸ்வரராவ், பி.ஆர். கவாய் அடங்கிய அமர்வு, கடந்த மார்ச் 9ஆம் தேதி பிணை வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து பேரறிவாளன் பிணையில் விடுதலையானார்.

வழக்கில் முக்கிய வாதங்கள்

தொடர்ந்து இந்த வழக்கு நீதிபதிகள் எல். நாகேஸ்வரராவ், பி.ஆர். கவாய் அடங்கிய அமர்வு முன்பு கடந்த ஏப்ரல் 27ம் தேதி விசாரணைக்கு வந்த போது, “யார் விடுதலை செய்ய வேண்டும் என்ற குழப்பத்திற்கிடையில் அவர் (பேரறிவாளன்) ஏன் சிக்கிக் கொள்ள வேண்டும்? நாங்களே (உச்ச நீதிமன்றம்) ஏன் விடுதலை செய்யக்கூடாது?” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நட்ராஜ், “அமைச்சரவையின் தீர்மானத்தை குடியரசு தலைவருக்கு ஆளுநர் அனுப்பியுள்ளார். இதுகுறித்து விரைவில் முடிவெடுக்கப்படும்,” என தெரிவித்தார்.

இதையடுத்து, ஆளுநர், மத்திய அரசை நோக்கி பல்வேறு கேள்விகளை முன் வைத்து, வழக்கு விசாரணையை மே 4ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். ஒருவார காலத்தில் பேரறிவாளன் விடுதலை குறித்து தெளிவான முடிவை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதே வேளை, இவ்விவகாரத்தில் யார் முடிவெடுக்க வேண்டும் என்பது குறித்த விளக்கத்தை சமர்ப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கும் உத்தரவிட்டனர்.

சட்டத்திற்கு மேல் யாருமில்லை

இதையடுத்து, கடந்த 4ம் தேதி நடைபெற்ற விசாரணையில், மத்திய அரசு வழக்குரைஞரிடம் பல்வேறு கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர். குறிப்பாக, ”விடுதலை செய்யும் அமைச்சரவை முடிவை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது ஏன்?,” என்று கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து, ”30 வருடங்கள் முடிந்து விட்டன. பேரறிவாளன் நன்நடத்தையில் பிரச்னை இல்லை. அவரை விடுதலை செய்வதில் என்ன பிரச்னை உள்ளது? நீங்கள் முடிவெடுக்கவில்லை என்றால்,நீதிமன்றம் விடுதலை செய்யும் என ஏற்கனவே தெரிவித்துள்ளோம்.” என்றனர்.

மேலும் ‘குடியரசுத் தலைவரோ, ஆளுநரோ, என்ன அதிகாரம் இருந்தாலும், அரசியல் சாசனத்தை மீறி யாரும் செயல்பட முடியாது. அரசியலைப்பு, சட்டத்திற்கு மேல் ஒருவரும் கிடையாது. குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநருக்கு எங்களால் உத்தரவிட முடியாது. ஆனால் இந்த வழக்கில் அரசியல்சாசன அடிப்படையில் தீர்ப்பை வழங்க முடியும்,” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், “அமைச்சரவையின் முடிவுக்கு எதிராக ஒரு முடிவை எடுத்து, அதை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பியுள்ளார். இது அரசியல்சாசனத்திற்கு முற்றிலும் எதிரானது. இதை மத்திய அரசு ஏன் ஆதரிக்கிறது? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். வழக்கின் விசாரணையை மீண்டும் ஒரு வார காலத்திற்கு ஒத்தி வைத்தனர்.

கடந்த 11ம் தேதி இறுதி விசாரணை

இதையடுத்து தமிழ்நாடு அமைச்சரவை முடிவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பிய ஆவணம் உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், கவாய் அமர்வு முன்பு கடந்த 11ம் தேதி இறுதி விசாரணை நடைபெற்றது.

அப்போது, ‘விடுதலை குறித்து முடிவு எடுப்பதில் ஆளுநர் பல ஆண்டுகள் தாமதப்படுத்தியுள்ளார். இது குறித்து என்ன சொல்கிறீர்கள்? அமைச்சரவை முடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறதா? ஆளுநர் தொடர்புடைய வழக்கில் நீங்கள் ஏன் ஆஜராகிறீர்கள் ?’ என்பன உள்ளிட்ட கேள்விகளை மத்திய அரசு தரப்பு வழக்குரைஞரிடம் கேட்டனர்.

மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் நட்ராஜ், ‘மத்திய புலனாய்வு அமைப்புகள் விசாரணை நடத்திய வழக்குகளில் கருணை அல்லது நிவாரணம் அளிக்க மத்திய அரசுக்குத்தான் அதிகாரம் உள்ளது. ஆகையால், ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார். ஆளுநரின் முடிவு சரியானதுதான்.’ என்று விளக்கமளித்தார்.

தமிழ்நாடு அரசு தரப்பு வழக்குரைஞர் ராகேஷ் திரிவேதி கூறுகையில், “மாநில அரசுக்கு உள்ள அதிகாரத்தின்படிதான் விடுதலை செய்யும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், தேவையின்றி குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளனர். இது, அரசியல் சாசனப்படி தவறானது.’ என்றார்.

மேலும், ‘இது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 302ன் கீழ் வருகிறது. கொலை வழக்கின் கீழ் முடிவு செய்ய மத்திய, மாநில இரு அரசுகளுக்கும் அதிகாரம் உள்ளது. ஆனால், மத்திய அரசுக்குத்தான் முக்கியத்துவம் முன்னுரிமை.’ என்று மத்திய அரசு வழக்குரைஞர் கூறினார்.

இதை தமிழ்நாடு அரசு தரப்பு வழக்குரைஞர் மறுத்தார். தமிழ்நாட்டில் நடைபெற்றால், விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என்கிற வாதத்தை முன்வைத்தார்.

ஆனால், இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வரும் வழக்குகள் சட்டம், ஒழுங்கு சார்ந்த வழக்குகள். இதில், மாநில அரசுக்குத்தான் முக்கியத்துவம் உள்ளது.’ என்று நீதிபதிகள் தெரிவித்தனர். அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்தது. இதையடுத்து எழுத்துப்பூர்வமான வாதங்களை சமர்ப்பிக்க அவகாசம் அளித்து, தீர்ப்பை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைத்தனர்.

தீர்ப்பின் விபரம்

இந்நிலையில், இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், கவாய் அமர்வு இன்று (மே 18ம் தேதி) தீர்ப்பு அளித்துள்ளது. இதில், இந்திய அரசியலமைப்புச் சட்டம் 142வது ஷரத்தின் கீழ் உச்சநீதிமன்றத்திற்கு உள்ள சிறப்பு அதிகாரத்தின் கீழ் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தொடக்கத்தில் இருந்தே இந்த வழக்கில் விடுதலை செய்ய வேண்டியதற்கான ஆணித்தரமான வாதங்களை தொடர்ந்து முன் வைத்தோம். ஆகையால், பேரறிவாளன் விடுதலை செய்யப்படுவார் என்கிற நம்பிக்கை இருந்ததாக பேரறிவாளன் தரப்பு வழக்குரைஞர் சே.பிரபு தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு வாதம் ஏற்கப்படவில்லை
வழக்குரைஞர் சே.பிரபு
படக்குறிப்பு,வழக்குரைஞர் சே.பிரபு

இது குறித்து அவர் பிபிசி தமிழிடம் சே.பிரபு கூறுகையில், ” இரண்டு முக்கிய அம்சங்களின் அடிப்படையில் இந்த தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக அரசியலமைப்புச் சட்டம் 142வது ஷரத்தின் கீழ் உச்சநீதிமன்றத்தின் சிறப்பு அதிகாரத்தின் கீழ் பேரறிவாளனை இந்த வழக்கில் இருந்து முழுவதுமாக விடுதலை செய்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அமைச்சரவை முடிவை ஆளுநர் ஏற்காமல், கிடப்பில் போட்டு, குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது, இரண்டரை ஆண்டுகள் காலதாமப்படுத்தியுள்ளது தவறு என்றும் கூறப்பட்டுள்ளது. சிபிஐ விசாரித்த வழக்கில் மத்திய அரசுதான் முடிவு எடுக்க முடியும் என்கிற மத்திய அரசின் வாதத்தையும் ஏற்கவில்லை.

142வது ஷரத்து சொல்வது என்ன?

இது மட்டுமின்றி 31 ஆண்டுகள் சிறைவாசம், சிறையில் அவருடைய நன்னடத்தை, பட்டப்படிப்பு உள்ளிட்டவற்றையும் கவனத்தில் கொண்டு, இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஷரத்து 142ன் கீழ் உச்சநீதிமன்றத்திற்கு உள்ள அதிகாரத்தின் கீழ் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஏனெனில் ஏற்கனவே காலதாமதப்படுத்திய ஆளுநருக்கும் இதை மீண்டும் அனுப்புவதை விட உச்சநீதிமன்றமே இந்த தீர்ப்பை அளித்துள்ளது.

நீதிமன்றம், அரசியல் உள்ளிட்ட எந்த வகையிலும் மனுதாரருக்கு நீதிபரிபாலனம் தடைபடக் கூடாது. ஒருவருக்கு அநீதி இழைக்கப்பட்டதாக உச்சநீதிமன்றம் நம்பியதால், இந்த பிரிவு பயன்படுத்தப்பட்டுள்ளது. அரிதிலும் அரிதாக இந்த பிரிவின் கீழ் உச்சநீதிமன்றம் இது போன்ற தீர்ப்பை வழங்கும். இதற்கு முன்னுதாரணங்களும் இருக்கின்றன.” என்றார்.

இந்த வழக்கில் மேலும் சில முக்கிய அம்சங்களையும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். குறிப்பாக, ‘மாநில அமைச்சரவையின் முடிவை ஆளுநர் நிறுத்தி வைக்க அதிகாரம் இல்லை. முடிவு எடுக்காமல், குடியரசுத் தலைவருக்கு அனுப்பிருக்க தேவையில்லை. இதனால், தேவையற்ற கால தாமதம் செய்துள்ளார்.

விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளனர்.’ என்றார்.

மற்றவர்களின் விடுதலை எப்போது?

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை தொடர்ந்து எழுந்து வரும் நிலையில் தற்போது பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டுள்ளார். மற்ற 6 பேரின் நிலை குறித்து கேட்டதற்கு,

‘மற்ற 6 பேரின் விடுதலையும் இந்த வழக்கின் தீர்ப்பிலேயே உள்ளது. விடுதலை குறித்து ஆளுநரின் முடிவை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. ஆகையால், அமைச்சரவை முடிவு சரி என்பதும், அதற்கு இப்போதும் அதிகாரம் உள்ளது என்றும் உறுதியாகியுள்ளது. ஆகையால், தமிழ்நாடு அரசு சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து, ஒரு முடிவு எடுப்பார்கள் என்று நம்புகிறோம்.’ என்கிறார் வழக்குரைஞர் பிரபு.

About editor 3082 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply