இன்றைய சூழ்நிலையில் சனாதிபதி கோட்டாபய இராசபக்ச பதவி விலகுவதே அவருக்கும் நல்லது நாட்டுக்கும் நல்லது!

இன்றைய சூழ்நிலையில் சனாதிபதி கோட்டாபய இராசபக்ச பதவி விலகுவதே அவருக்கும் நல்லது நாட்டுக்கும் நல்லது!

 நக்கீரன்

ஊருஞ் சதமல்ல, உற்றார் சதமல்ல, உற்றுப் பெற்ற
பேருஞ் சதமல்ல, பெண்டீர் சதமல்ல, பிள்ளைகளும்
சீருஞ் சதமல்ல, செல்வஞ் சதமல்ல,தேசத்திலே
யாருஞ் சதமல்ல, நின்தாள் சதங் கச்சியேகம்பனே
. (பட்டினத்தார் – கச்சி திருஏகம்பமாலை)

ஒரு மனிதனுக்கு அவன் பிறந்த ஊரோ, உற்றார் உறவினரோ, அவன் சம்பாதித்த பணமோ, பெயரோ, புகழோ, மனைவியோ, மக்களோ வேறு யாருமோ உதவிக்கு வரப் போவதில்லை. அதனால், காஞ்சிபுரத்தில் கோயில் கொண்டிருக்கும் ஏகாம்பரேஸ்வரர் திருவடியே நமக்கு உற்ற துணை என்பது பாடலின் பொருள்.

“எங்களை யாராலும் வீழ்த்த முடியாது, எங்களிடம் இரத கஜ துரக பதாதிகள் இருக்கின்றன, கூப்பிட்ட குரலுக்கு ஓடிவருவதற்கு அமைச்சர் பட்டாளம் இருக்கிறது. “எனக்கு நாடாளுமன்றத்தில் அறிதிப் பெரும்பான்மை இருக்கிறது.  நான் பிரதமர் பதவியிருந்து விலக மாட்டேன். சனாதிபதி என்னைப் பதவி விலகுமாறு கேட்கவும் மாட்டார்” என மார்தட்டிய மகிந்த இராசபச்ச இன்று பிரதமர் பதவியைத் துறந்து விட்டார்.  அதுமட்டுமல்ல உயிருக்குப் பயந்து திருகோணமலை கடற்படைத் தளத்தில் தஞ்சம் புகுந்துள்ளார்.

பிரதமர் மகிந்தா தனது பதவியை வேளை காலத்தோடு துறந்து மரியாதையோடு ஒதுங்கியிருக்கலாம். அதனை அவர் செய்யத் தவறிவிட்டார். அதனால் அவரால் வெளியில் தலைகாட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த வாரம்  மகிந்த இராசபக்ச சிறிலங்கா  பொதுசன பெரமுனையில் இருக்கும் ஆயிரத்துக்கும் அதிகமான தனது ஆதரவாளர்களை பல பேருந்துகள் மூலம் அம்பாந்தோட்டையில் இருந்து கொழும்புக்கு அழைத்திருந்தார். அவர்களில் புனர்வாழ்வு முகாமில் இருந்த சிறைச்சாலைக்  கைதிகளும் அடங்கும்.  அவர்களை வைத்து அலரிமாளிகையில் ஒரு கூட்டத்தை ஒழுங்கு செய்திருந்தார். அதில் நா.உறுப்பினர் யோன்ஸ்ரன் பெர்னாந்து மற்றும் சிலரும் மகிந்த இராசபச்சாவை ஆதரித்துப்  பேசினார்கள்.அவர் பதவி விலகக் கூடாது என ஆவேசமாகப் பேசினார்கள்.  அங்கு வி.புலிகளுக்கு எதிரான போரில் இடம்பெற்ற ஒளிப்படங்கள் ஒளிபரப்பப்பட்டன. தமிழ் விடுதலைப் புலிகள் பிரபாகரன் எப்படி அரச படைகளால் கொல்லப்பட்டார் போன்ற சிங்கள – பவுத்த பேரினவாதத்தின் போர் “வெற்றி” யைக் கொண்டாடும் வீடியோக்களும்  காட்டப்பட்டு அவர்கள் உசுப்பேற்றப்பட்டனர். 

கூட்டம் முடிந்த பின்னர் வந்தவர்களுக்கு உணவும் மதுவும் பணமும் வழங்கப்பட்டன. இவர்களே பிரதமர் மகிந்த வசிக்கும் அலரி மாளிகைக்கு முன் முகாமிட்டு மகிந்த இராசபக்சா  வீட்டுக்குப் போகுமாறு முழக்கம் எழுப்பிக் கொண்டிருந்த  போராட்டக்காரர்கள் மீது கொடூரமான தாக்குதலை மேற்கொண்டார்கள். அதில் 50 க்கும் மேலானோர் காயப்பட்டார்கள். அதன் பின் அருகிலுள்ள  காலிமுகத் திடத்தில்  கூடாரமிட்டிருந்த போராட்டக்காரர்களின் கூடாரங்களை கிழித்தெறிந்து   தாக்குதல் நடத்தப்பட்டது. அங்கு கட்டியிருந்த பதாதைகள், கொடிகள் கிழித்தெறியப்பட்டன. காவல்துறையினர் இராசபக்சாவின் “சண்டியர்களை” கட்டப்படுத்த எந்த முயற்சியும் மேற்கொள்ளாது வேடிக்கை பார்த்தனர். 

இதனைத் தொலைக்காட்சியில் கண்ட மக்கள் காலிமுகத்திடலுக்கு படையெடுத்து வந்து மகிந்த இராசபக்சவின் ஆதரவாளர்கள் மீது பதில் தாக்குதல் நடத்தினார்கள்.  அதுவரை முற்றிலும் அமைதியாக நடந்து வந்து பாலிமுகத் திடல் போர்க்களமானது. மகிந்தாவின் ஆதரவாளர்கள் பலரைப் பிடித்து கட்டிவைத்து மக்கள் அடித்தார்கள். அப்போதுதான் தாங்கள் தலைக்கு ரூபா 2,000 கொடுத்து  சொகுசு பேருந்துகளில் கொண்டு வரப்பட்டதாகச் சொன்னார்கள். அந்த சொகுசு பேருந்துகளில் பல எரியூட்டப்பட்டன.

அதனைத் தொடர்ந்து இராபக்ச குடும்பத்துக்குச் சொந்தமான  வீடுகள், உணவகங்கள் ஆவேசம் கொண்ட பொதுமக்களால் ஒரே இரவில் எரியூட்டப்பட்டன. மேலும் இராசபக்சா குடும்பத்துக்கு நெருக்கமானவர்கள் எனக் கருதப்பட்ட அமைச்சர்கள், ஆதரவாளர்களின் வீடுகள், விற்பனை நிலையங்கள் தாக்கி அழிக்கப்பட்டன. பதுக்கி வைத்திருந்த யூரியா மூட்டைகள், சமயல் எரிவாயு சிலின்டர்கள், நெல் மூட்டைகள் மக்களால் சூறையாடப்பட்டன.

மகிந்த இராசபக்சவை வீட்டுக்குப் போகுமாறு போராட்டக்காரர்கள் வீதியில் இறங்கிப் போராடியபோது அதனை அவர் அலட்சியம் செய்தார். “எனக்கு 50 ஆண்டுக்கு மேலான அரசியல் அனுபவமுண்டு. இதைப்போல் எனக்கு எதிரான  பல போராட்டங்களை பார்த்தவன் நான். இந்தப் பூச்சாண்டிகளுக்கு எல்லாம் நான் அடிபணிய மாட்டேன். நான் ஒரு தெருச் சண்டியன் (street fighter) எனக்கு எதிராகப் போராடுபவர்கள் எப்போதும் எனக்கு எதிரானவர்கள்’ என வீராப்போடு சொன்னார்.

ஐம்பது ஆண்டு காலம் அரசியலில் பழமும் தின்று கொட்டையும் போட்டவர் தனக்கும் தனது குடும்பத்துக்கும்  எதிராக மக்கள் கிளர்ந்து எழுந்து நடாத்தும் போராட்டத்தின் பரிமாணத்தை சரியாக எடைபோடத் தவறிவிட்டார். அது ஒரு வெகுமக்கள் போராட்டம் என்ற யதார்த்தத்தை புரிய மறுத்து விட்டார். இதனால் அமைதிப்  போராட்டம்  வன்முறைப் போராட்டமாக வெடித்தது. விளைவு இராசபக்சக்களுக்குச் சொந்தமான வீடுகள் எரிக்கப்பட்டன. அவரது சொந்த ஊரிபெரிய பட்ட உருவச் சிலையை மக்கள் கயிறு போட்டு இழுத்து விழுத்தினார்கள்.

இந்தக் காட்சி  2003 இல் இராக்கின் சர்வாதிகாரி சதாம் குசேனின் உருவச் சிலையை  இராக் நாட்டின் மக்கள் இழுத்து விழுத்திய காட்சியை நினைவுக்குக் கொண்டுவருகிறது.  மக்கள் இத்தோடு நின்றுவிட வில்லை.  மகிந்த இராசபக்ச மற்றும் கோட்டாபய இராசபக்ச குடும்பம் அதே டி.ஏ. இராசபக்சவுக்கு  அம்பாந்தோட்டையில் கட்டிய  அருங்காட்சியகம் எரியூட்டப்பட்டது.

இதனை எழுதிக் கொண்டிருக்கும் போது முன்னாள் பிரதமர் இரணில் விக்கிரமசிங்க மீண்டும் சனாதிபதி  கோட்டாபய இராசபக்ச அவர்களால்  பிரதமராகப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி வந்திருக்கிறது. இது எல்லோரும் ஏறி விழுந்த குதிரையில் சக்கிடுத்தார் ஏறிச் சறுக்கி விழுந்தார் என்ற பழமொழியை ஞாபகப்படுத்துகிறது. இரணில் பிரதமராக நியமிக்கப்படுவது இரு ஆறாவது தடவையாகும். ஆனால் ஒருமுறையாவது ஐந்து ஆண்டுகளை அவர் நிறைவு செய்யவில்லை. இராசியில்லாத பிரதமர்!

பிரதமர் பதவிக்குப் பலர் ஆசைப்பட்டார்கள்.  ஆனால் மாலை  எதிர்பாராத விதமாக விக்கிரமசிங்கவின் கழுத்தில் விழுந்துள்ளது. கோட்டாபய சனாதிபதியாக இருக்கும்வரை பிரதமர் பதவியை ஏற்க மாட்டேன் எனச்  சூளுரைத்த சஜித் பிரேமதாச கடைசி நேரத்தில் தான் பிரதமர் பதவியை ஏற்கத் தயார் என அறிவித்தார். ஆனால் அவருக்காக மூன்று நாட்கள் காத்திருந்த சனாதிபதி கோட்டாபய இராசபக்ச, தனிமரமாக நாடாளுமன்றத்தில் நிற்கும் இரணில் விக்கிரமசிங்கவுக்கு முடிசூட்டி விட்டார்.

இரணில்   விக்கிரமசிங்காவின் நியமனத்துக்கு இரண்டு முக்கிய மதத் தலைவர்கள்  சிவப்புக் கொடி காட்டிவிட்டார்கள். இரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவிக்கு நியமித்ததை ஏற்றுக்கொள்ள முடியாது என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

புதிய அமைச்சரவையின் பிரதமராக ரணில் விக்ரமசிங்கவை நியமிப்பதற்கு சனாதிபதி கோட்டாபய இராசபக்ச எடுத்ததாக கூறப்படும் முடிவு குறித்து பேராயர் இன்று கொழும்பில் செய்தியாளர்களிடம் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

“இரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தின் ஒரு பிரதிநிதி மட்டுமே. அவருக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை. அரசியலில் தோற்கடிக்கப்பட்ட மற்றும் மக்களால் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்ட ஒருவரை பிரதமராக நியமிப்பது  சட்டபூர்வமானது அல்ல” என்கிறார் பேராயர். அவரது  பதவியேற்பு விழாவை இரத்துச் செய்ய வேண்டும் என்கிறார். மேலும் அனைத்து மக்களின் நம்பிக்கையைப் பெறக்கூடிய ஒரு நபரை மக்கள் விரும்புகிறார்கள் என்றும்  பேராயர்  தெரிவித்துள்ளார்.

வணக்கத்திற்குரிய ஓமல்பே சோபித தேரர், பிரதம சங்கநாயக்க (தட்சண லங்காவ), அவர்களும் இரணில் விக்கிரமசிங்கவின் நியமனத்துக்கு எதிரான கருத்தை வெளியிட்டுள்ளார். “மகாநாயக்க தேரர்கள்  கட்சி சார்பற்ற நபரை  பரிந்துரைக்கின்றனர்.  தற்போதைய நெருக்கடியிலிருந்து எதிர்காலத்தில் நம்பிக்கையுடன் முன்னேறுவது அவசியம் என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறோம், அரசியல் அமைப்பில் முழுமையான மாற்றம் தேவை. அது தற்போதைய நாடாளுமன்றக் கட்சிகளின் தலைவர்கள் மூலம் நடக்க முடியாது. இந்த நாட்டின் அனைத்து குடிமக்களின்  நம்பிக்கையை வென்றெடுக்கக்கூடிய ஒரு பக்கச் சார்பற்ற ஒருவரால்  மட்டுமே  முடியும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

“மக்கள் ஆணையை இழந்துவிட்ட சனாதிபதியால் மக்கள் ஆணையே பெறாதவர் பிரதமராக நியமனம் செய்யப்பட்டது முற்று முழுதாக சனநாயக விரோதச் செயல்”  என ததேகூ இன் பேச்சாளரும் நா.உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் காட்டமாகக் கூறியுள்ளார்.

இரணில் விக்கிரமசிங்க தனிப்பட்ட முறையில் ஊழல்வாதியல்ல என்பது சரியே. அவர் ஒரு கனவான் என்பதும் ஏற்றுக் கொள்ளக் கூடியதே. ஆனால் அவர் ஒரு திறமைசாலி எனக் கூறமுடியயாது. இவர் பிரதமராக இருந்த போதுதான் அம்பாந்தோட்டை துறைமுகத்தை 1.1 பில்லியன் டொலர் கடனுக்கு ஈடாக 99 ஆண்டு குத்தகைக்கு சீனாவுக்கு எழுதிக் கொடுத்தவர். அப்போது இலங்கையின் வெளிநாட்டு நாணய இருப்பு அ.டொலர் 7.5 பில்லியானக இருந்தது. அவரது காலத்தில்தான் நா.உறுப்பினர்களுக்கு பல இலட்சம் டொலர் செலவில் 240 சொகுசு வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டது. இவரது ஆட்சியில்தான் (2018)  4,400 ஆக இருந்த உள்ளூராட்சி உறுப்பினர்களின் தொகை 8708 ஆக உயர்த்தப்பட்டது.  இலங்கை மத்திய வங்கி  27 பெப்ரவரி, 2015 இல்  நடத்திய பிணைமுறிவு விற்பனையில்  அ.டொலர் 11 மில்லியன் இழப்பு ஏற்பட்டது. அதனை மூடி மறைக்க இரணில் விக்கிரமசிங்க மெத்தப் பாடுபட்டார்.

எனவே  பாதாளத்துக்குள் போய்விட்ட இலங்கையின் பொருளாதாரத்தை, குறிப்பாக வெளிநாட்டு நாணய இருப்பை, புதிய பிரதமர் இரணில் விக்கிரமசிங்க தூக்கி நிறுத்த அவரிடம் மந்திரக் கோல் ஒன்று இருப்பதாக நம்புவது கடினமாக இருக்கிறது. மேற்குலக நாடுகள் மற்றும் இந்தியா அவரது நியமனத்தை வரவேற்றுள்ளன. ஆனால் ஒண்டாண்டியாகிவிட்ட இலங்கையைக் காப்பாற்ற  அந்த நாடுகள் முன்வர விரும்புவார்களா என்பது கேள்விக் குறியே.

இந்தச் சூழ்நிலையில் மத்தியின் வங்கி ஆளுநர் நாட்டின் வெளிநாட்டுக் கையிருப்பு அ.டொலர் 50 மில்லியனாக வரண்டுவிட்டது என முறைப்படுகிறார். அரசியல் உறுதித்தன்மையை சனாதிபதி கோட்டாபய உறுதிப்படுத்தா விட்டால் தனது பதவியைத் துறக்கப் போவதாக மிரட்டியுள்ளார்.

சனாதிபதி மாளிகைக்கு முன்னர் நடைபெறும்  “கோட்டாபய வீட்டுக்குப் போ” என்ற போராட்டம் தொடரலாம் எனப் புதிய பிரதமர் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார். இது நல்ல முடிவு. ஆனால் இப்படி மழையிலும் வெய்யிலிலும் ஒரு மாதத்துக்கும் மேலாகப் போராடும் இளைஞர்கள் யார், யார்? அவர்களது பின்புலம் என்ன?

இந்த இளைஞர்கள் சோசலீச முன்னணிக் கட்சியின் (Frontline Socialist Party) ) கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக் கழக  மாணவ அமைப்பினர் (IUSF) எனச் சொல்லப்படுகிறது. தொடர்ச்சியாக இரவு பகல் 24 மணி நேரமும் போராட்டம் கட்டுப்பாட்டோடு நடைபெறுவது அதனை உறுதிப்படுத்துகிறது. போராடும் இளைஞர்களின் முக்கிய கோரிக்கையான “கோட்டாபய வீட்டுக்குப் போ” என்ற கோரிக்கை நிறைவேறவில்லை. தனது அண்ணனைப்  பலிக்கிடாவாக கொடுத்துவிட்டு சனதிபதி கோட்டாபய இராசபக்ச தப்பித்துள்ளார். ஆனால் நிறைவேற்று அதிகாரம் படைத்த கோட்டபாய இராசபக்சாவை சனாதிபதி பதவியில் இருந்து  அகற்றாவிட்டால் காத்திரமான எந்த மாற்றமும் இடம்பெறப் போவதில்லை.

வருகிற மே 17 இல் சனாதிபதி கோட்டாபய  இராசபக்ச அவர்களுக்கு எதிராக ஒரு தீர்மானம் நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுக்கப்பட இருக்கிறது. ஆனால் அந்தத் தீர்மானம் நிறைவேறினாலும் அதற்குச்  சட்டவலு இல்லை என்கிறார்கள். சட்ட திருத்தம் 20 நீக்கப்பட்டாலே சட்ட வலுவுள்ள இன்னொரு சட்ட திருத்தத்தை நிறைவேற்றலாம்.

நான் சென்ற வாரம் குறிப்பிட்டிருந்தது போல இராசபக்ச குடும்பம் உலக வரலாற்றில் இருந்து பாடம் படிக்க மறுக்கிறது. இலங்கையில் வாழும் அனைத்துத் தரப்பினரும் – மருத்துவர்கள், ஆசிரியர்கள், மாணாக்கர்கள், மலையகத் தொழிலாளர்கள் – ஒரே குரலில் இராசபக்ச குடும்பம் வீட்டுக்குப் போகுமாறு போராடி வருகிறார்கள். இந்த யதார்த்தத்தை மகிந்த இராசபக்ச நேரத்தோடு புரிந்து கொள்ளாத காரணத்தினாலேயே தனது பிரதமர் பதவியை இழந்து அவமானப்பட நேர்ந்தது.

இன்றைய சூழ்நிலையில் சனாதிபதி கோட்டாபய இராசபக்ச வெட்கத்தைக் கைவிட்டு  பதவி விலகுவதே அவருக்கும் நல்லது நாட்டுக்கும் நல்லது.   அவர் பதவி விலகினால் தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வரும். காலிமுகத்  திடலில் இரவு பகல் பாராது போராடும் மாணவர்களும் வீட்டுக்குப் போவார்கள். இயல்பு நிலை திரும்பும். (கனடா உதயன் – 13//05/2022)

About editor 3162 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply