இராசபக்ச குடும்பத்தில் விரிசலா?

இராசபக்ச குடும்பத்தில் விரிசலா?

கனடா நக்கீரன்

மூர்க்கனும் முதலையும் கொண்டது விடா என்பது பழமொழி. தனக்கு வேண்டும் பொருளை வென்று கொண்டபின், அதனை விடாது பற்றி நிற்பதில் முதலையும் மூர்க்கனும் ஒன்று என்பது இதன் பொருள்.

சனாதிபதி கோட்டாபய இராசபக்ச தனது பதவியைத் துறக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்துள்ளார். எனக்கு மக்கள் 5 ஆண்டுகள் ஆட்சியில் இருக்க ஆணை தந்திருக்கிறாகள் அந்தக் காலக்கெடு முடியு முன்னர் பதவியைத் துறக்க மாட்டேன் என அடம்பிடிக்கிறார். குறைந்த பட்சம் நாடாளுமன்றத்தில் உள்ள எல்லாக் கட்சிகளும் பதவி துறக்குமாறு கேட்டால் தான் பதவி துறக்க அணியமாக இருப்பதாக நிபந்தனை வைக்கிறார். ஆனால் காலிமுகத் திடலில் கடந்த 10 நாட்களாக இரவு பகல் என்று   பாராது  போராடி வரும் இளைஞர்கள் விடுவதாக இல்லை. 1+225 ம் வீட்டுக்குப் போக வேண்டும் என்கிறார்கள்.

‘கோட்டா வீட்டுக்குப் போ, கோட்டா ஒரு பயித்தியம், கோட்டா ஒரு திருடன், கொள்ளையடித்த எங்கள் பணத்தை திருப்பித் தா’  என உரத்துக் குரல் கொடுத்த வண்ணம் காலிமுகத் திடலில்  முகாமிட்டுள்ளார்கள்.

வி.புலிகளைப் புறம் கண்டு நாட்டைப்  பயங்கரவாத்தின் பிடியிலிருந்து காப்பாற்றியவர், முப்பது ஆண்டு காலக் கொடிய போரை முடிவுக்குக் கொண்டு வந்தவர் என்று புகழப்பட்ட கோட்டாபய இன்று பயித்தியக்காரன், திருடன்  எனத்  தூற்றப்படுகிறார். நொவெம்பர் 2019 இல் நடந்த  சனாதிபதி  தேர்தலில் 69 இலட்சம் (52.25 %) சிங்கள – பவுத்த மக்கள் அவருக்கு எதிராக மட்டுமல்ல முழு இராசபக்ச குடும்பத்துக்கும்  எதிராக அதே சிங்கள – பவுத்த மக்கள் வீதியில் இறங்கிப் போராடுகிறார்கள்.

கோட்டாபய தேர்தலில் போட்டியிட்ட நேரத்தில்  அவர் மீது  கொலை உட்பட  எண்பிக்கப்படாத பல குற்றச்சாட்டுக்கள் இருந்தன. வெள்ளைவான் கடத்தலுக்குப் பின்னால் இருந்த சூத்திரதாரி கோட்டபாய என்ற எண்ணம் இருக்கிறது. குறிப்பாக சன்டே லீடர் பிரதம ஆசிரியர்  லசந்தா விக்கிரமதுங்க, விளையாட்டு வீரர் வாசிம் தாயுதீன், ஊடகவியலாளர் எக்னேலிகொட போன்றவர்கள் கொலை செய்யப்பட்டதற்குப் பின்னல் அவர் இருந்தார் என்ற குற்றச்சாட்டு இருக்கிறது.

Members and supporters of the National People"s Power party stage a protest march against the current economic crisis in the capital Colombo, Sri Lanka, 19 April 2022.

போர் முடிவுக்கு வந்த மே 18 அன்று சரண் அடைந்த நூற்றுக்கும் அதிகமான வி.புலிகள் சத்தம் சந்தடி இல்லாமல் கொல்லப்பட்டார்கள். தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், சமாதான செயலகப் பணிப்பாளர் சீ.புலித்தேவன் தலைமையில்  வெள்ளைக் கொடியோடு  சரணடைந்த நூற்றுக் கணக்கான வி.புலிகள் சித்திரவதைக்குப் பின்னர்  கொல்லப்பட்டதற்கு கோட்டாபய பிறப்பித்த உத்தரவு காரணம் என தமிழர் தரப்பு நம்புகிறது.

பா.நடேசன் மற்றும் அவரோடு சரணடைந்த வி.புலிகள் கொல்லப்பட்ட பின்னர் இராணுவம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் கடைசிப் பயங்கரவாதிகளோடு நடந்த சண்டையில் அவர்கள் எல்லோரும் கொல்லப்பட்டார்கள் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது!

போரோடு எந்தவித தொடர்பும் இல்லாத தலைவர் பிரபாரனது 12 அகவை பாலச்சந்திரன் சுட்டுக் கொல்லப்பட்டது கோட்டாபய அவர்களது உத்தரவின் பேரில்தான் எனவும் தமிழர் தரப்பு நம்புகிறது.

கோட்டாபய இராசபக்ச மீது ஊழல் குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்பட்டு வருகிறது. அவரது தந்தையார் டி.ஏ. இராசபக்சவுக்கு ஒரு நினைவாலயம் அவர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த போது அரச வளங்களைப் பயன்படுத்திக் கட்டப்பட்டது. அதற்கான மதிப்பீடு ரூபா 33.9 மில்லியன். ஆனால் கட்டிடத்தில் செய்த பாரிய மாற்றங்கள் காரணமாக அதைக் கட்டி முடிக்க ரூபா 81.2 செலவிடப்பட்டது. ஆனால் மிகுதி ரூபா 47.9 மில்லியன் இன்றுவரை கட்டப்படவில்லை. 

இப்படியான இலட்சணங்களைக் கொண்ட ஒருவருக்கு எப்படி 59 இலட்சம் மக்கள் வாக்களித்தார்கள் என்பது வியப்பாக இருக்கிறது. அதைவிட வியப்பு சிங்கள அறிவுப்பழைப்பார்களும் அவருக்கு ஆதரவாக தேர்தல் களத்தில் இறங்கி வேலை செய்தது. தன். விமானத்தில் பறந்து வந்து கோட்டாபயவுக்கு வாக்களித்தவர்களும் இருக்கிறார்கள்.

இன்றைய பாரிய நிதி நெருக்கடி ஏற்படாமல் இருந்திருந்தால் கோட்டாபய மற்றும் மகிந்த இராசபக்சாக்களது குடும்ப இராச்சியம் தொடர்ந்து இருந்திருக்கும்.  நாட்டில் ஏற்பட்ட டீசல், எரிபொருள், சமையல் எரிவாய்வு, பால் மா, மருந்து, மின்சார வெட்டு போன்றவை வழக்கம்போல் கிடைத்திருந்தால் மக்கள் பேசாமல் இருந்திருப்பார்கள்.

வெளிநாட்டு நாணய இருப்புக் குறைந்த காரணமாகவே நாட்டில் அத்தியாவசியப் பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. அதனால் மக்கள் வீதியில் இறங்கி போராடிவருகிறார்கள். காய்ந்த வயிறில் இருந்துதான் புரட்சிகள் வெடிக்கின்றன என்பது இன்று எண்பிக்கப்பட்டுள்ளது.

இன்று இலங்கையின் வெளிநாட்டு நாணய கையிருப்பு சுமார் அ.டொலர்  2 மில்லியன் ஆக உள்ளது, அதேவேளை 2022 ஆம் ஆண்டில் மொத்தம்  அ.டொலர் சுமார் 4 பில்லியன் வெளிநாட்டுக் கடனைச் செலுத்த வேண்டியுள்ளது. 2023 மற்றும் 2028 இல் முதிர்ச்சியடையும் இரண்டு பத்திரங்களில் 30 நாள் சலுகைக் காலம் இருந்தாலும், அ.மெடாலர்  $78 மில்லியன் கூப்பன் செலுத்த வேண்டும். இதில் அ. டொலர் , 1 பில்லியன் டொலர் மதிப்புள்ள பத்திரங்கள் யூலை 2022 இல் முதிர்ச்சியடைகின்றன.

2005 ஆம் ஆண்டு முதல் இலங்கையின் வெளிநாட்டுக் கடன் செங்குத்தான உயர்வைக் கண்டுள்ளது. 2005 ஆம் ஆண்டில் அ.டொலர் 11.3 பில்லியன் ஆக இருந்த  வெளிநாட்டு நாணய கையிருப்பு 2010 ஆம் ஆண்டில் அ.டொலர் 21.7 பில்லியன்,  2015 ஆம் ஆண்டில்  அ.டொ 43.9 பில்லியன் ஆகவும், 2020 ஆம் ஆண்டில் கொவிட் தொற்றுநோய்களின் போது அ.டொலர் 56.3 பில்லியன் ஆகவும் உயர்ந்துள்ளது. ஏப்ரில் 2021 நிலவரப்படி, சீனா 10 விழுக்காடு  கடன்களைக் கொண்டுள்ளது, அதே நேரத்தில் இந்தியா 2 விழுக்காடு கடன் மட்டும் கொடுத்திருக்கிறது.

இலங்கை ரூபாவின் பெறுமதி யூரோவிற்கு எதிராக 31.5 %,  ஸ்ரேலிங் பவுண்ட் 31.1 %, யப்பானிய யென் 28.7 %,   சனவரி 1 முதல் மார்ச் 31 வரை வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இன்று ஒரு அ.டொலரின் பெறுமதி ருபா 334.6 ஆக இருக்கிறது. ஆனால் வெளிச்சந்தையில் அதன் பெறுமதி 370 ஆக இருக்கிறது. அதே போல ஒரு கனேடியன் டொலரின் பெறுமதி ரூபா 255 ஆகவும் அதன் சந்தைவிலை ரூபா 290 ஆக உயர்ந்துள்ளது.

அரசு செலவினங்களை ஈடுசெய்ய நாணயத்தை  திரில்லியன் கணக்கில் அடித்து அரச ஊழியர்களின் சம்பளத்தைக் அரசாங்கம் கொடுக்கிறது. இதனால் பணவீக்கம் (17%) ஏற்பட்டு பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. பெட்ரல் விலை (ஒக்ரோன் 92) ரூபா 338 ஆகவும் ஒக்ரோன் ரூபா 373 ஆகவும் டீசல் ரூபா 289 ஆகவும், ளுப்பர் டீசல் ரூபா 329 ஆகவும் விற்பனை ஆகிறது. ஒரு இறாத்தல் பாண் விலை ரூபா 140 ஆக உயர்ந்துள்ளது. போக்குவரத்து வண்டிகளின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.

இந்தப் பின்னணியில் அரசாங்கம் மோசமான பொருளாதார நெருக்கடி காரணமாகவும் சனாதிபதி கோட்டாபய அவர்கள் பதவி விலக வேண்டும் என்று கோரி நாடு முழுதும் நடக்கும் பரவலான போராட்டங்கள் காரணமாகவும்  அரசாங்கம் தனது அ.டொலர் 51 பில்லியன் வெளிநாட்டுக் கடன்கள் உட்பட  அனைத்து வெளிநாட்டுக் கடன்களையும் ஒத்திப் போடுவதாக 12 ஏப்ரில் மாதத்தில் தெரிவித்துள்ளது.

இதே நேரம் பன்னாட்டு நிதி நிறுவனத்திடம் எந்தக் கட்டத்திலும் போக மாட்டோம் என்று பிடிவாதம் பிடித்த அரசாங்கம் அதே நிறுவனத்திடம் அ.டொலர் 4 பில்லியன் கடன் கேட்டு ஒரு தூதுக் குழுவை கடந்த 18 ஏப்ரில் அன்று அமெரிக்காவுக்கு அனுப்பியுள்ளது.”இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் மக்கள், குறிப்பாக ஏழைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்கள் அனுபவிக்கும் கஷ்டங்கள் குறித்து சர்வதேச நாணய நிதியம் மிகவும் அக்கறை கொண்டுள்ளது” என்று அதன் பேச்சாளர் கூறியுள்ளார்.

ஆனால், பன்னாட்டு நிதி நிறுவன அதிகாரிகள் கடந்த மாதம் இலங்கையின் பொதுக் கடன் தாங்கமுடியாது ஒன்று என ஆண்டு  பொருளாதார மதிப்பாய்வில் தீர்மானித்துள்ளதாகவும், அவசரகால விரைவான நிதியளிப்பு கருவி (RFI) உட்பட எந்தவொரு கடனை வழங்குவதற்கு முன்னர் இலங்கை சில  நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். கடன் வாங்கும் நாடு வருமான வரியை அதிகரிக்க வேண்டும்  செலவைக் குறைக்க வேண்டும் என்பது வழக்கமான நிபந்தனைகள் ஆகும்.

பொருளாதார நெருக்கடி ஒருபுறம் இருக்க அரசியல் நெருக்கடியைக் குறைக்க பிரதமர் மகிந்த இராசபக்ச அரசியல் திருத்தம் 20 யை கைவிட்டு அரசியல் திருத்தம் 19 இல்  உள்ள சனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களை நீக்குமாறு கேட்கும்  திருத்தத்தை நாடாளுமன்றத்தில் முன்மொழிய இருக்கிறார். 

ஆனால் இந்த முயற்சி சனாதிபதி கோட்டாபய இராசபக்சவிற்கும் பிரதமர் மகிந்த இராசபக்சாவிற்கும் இடையில் ஒரு இழுபறி நிலையைத் தோற்றுவித்துள்ளதாகத் தெரிகிறது. அண்மைய அமைச்சரவை நியமனங்கள் மற்றும் அரச அமைச்சு நியமனங்கள் அனைத்தும் சனாதிபதி தனது விருப்பப்படி  மாத்திரம் மேற்கொள்ளப்பட்டதாகவும், பிரதமருடன் கலந்தாலோசிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. பதவிப் பிரமாண நிகழ்வுகளில் பிரதமர் கலந்து கொள்ளவில்லை என்பதை சிலர் சுட்டிக் காட்டுகிறார்கள்.

சில மூத்த அமைச்சர்களை,  அமைச்சரவையில் சேர்க்குமாறு பிரதமர் அழைப்பு விடுத்தார், ஆனால் சனாதிபதி இராசபக்ச இளைய மற்றும் புதிய அமைச்சரவையை  வலியுறுத்தினார், இது எதிர்ப்பாளர்களை அமைதிப்படுத்தி நாட்டை மீண்டும் பாதையில் கொண்டு வரும் என்று நம்பினார்.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இந்த வாரம் 19வது திருத்தத்தை பாராளுமன்றத்தில் முன்வைக்கும் என டெய்லி மிரர் அறியும் அதே வேளையில், ஷரத்துகளில் சில திருத்தங்களுடன் 19 ஆவது திருத்தத்தை விரைவில் பாராளுமன்றத்தில் பிரதமர் சமர்ப்பிக்க உள்ளார்.

Protesters bang drums and raise their arms during a march against Sri Lanka's president on 10 April in Colombo

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, 19 ஆவது திருத்தச் சட்டத்தை ஆதரிப்பதாகத் தெரிவித்துள்ளார்.  நெருக்கடிக்கு உடனடித் தீர்வு என்ன என்பது தொடர்பில் சர்வகட்சித் தலைவர்களுடன் இரண்டு நாள் கலந்துரையாடல் ஒன்றை நடத்துவதற்கு முன்மொழிந்துள்ளார்.

வியாழனும் வெள்ளியும் கட்சித் தலைவர்கள் கூடி முன்மொழிவுகள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாகவும், கோட்டாபய இராசபக்ச சனாதிபதி பதவியிலிருந்து விலக வேண்டும் என்பதும் அந்த  முன்மொழிவுகளில் ஒன்றாக இருக்கும் என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

ஒருமித்த கருத்து எட்டப்பட்டால், வெள்ளிக்கிழமைக்குள் முடிவு சபாநாயகரிடம் தெரிவிக்கப்பட்டு, பின்னர் அவர் சனாதிபதிக்கு தெரிவிப்பார். எனினும் சனாதிபதி பதவி விலகுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதற்கிடையில் தன்னோடு பேச வருமாறு பிரதமர் இராசபக்ச விடுத்த வேண்டுகோளை ஆர்ப்பாட்டக்காரர்கள் நிராகரித்துள்ளார்கள். அவர்களைப் பொறுத்தளவில் 1+225 நா.உறுப்பினர்களும் வீட்டுக்குப் போக வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளார்கள்.

காட்சிகள் அசுர வேகத்தில் மாறிக் கொண்டிருக்கின்றன. நாளை என்ன நடக்கும் என்பதை யாராலும் எதிவுகூற முடியாது இருக்கிறது. ஆனால் ஒன்றை மட்டும் கூறலாம்.  இதுவரை காலமும் நகமும் தசையும் போல, இரத்தமும் தசையுமாக  இருந்த இராசபச்ச குடும்பத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதா? என்ற கேள்வி எழுகிறது.

About editor 3016 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply